சிணுங்கல்களை சகிப்போம்! வருத்தங்களை தவிர்ப்போம்!

பெண்ணின் நடையில் நெளிவு இருப்பது போல அவளின் குணத்திலும் நெளிவுகள் பல இருக்கும். 


காலநிலை  அவ்வப்போது மாறுவது போல அவளின் குணங்களிலும் மாறுதல் நிகழும். 


காலங்களில் வெயிலும் உண்டு, குளிரும் உண்டு, மழையும் உண்டு, வசந்தமும் உண்டு. 


சாலை என்றால் அதில் சில வளைவுகளும், மேடு பள்ளமும் இருக்கத்தான் செய்யும். 


இப்படி நம் அன்றாட வாழ்க்கையில் எதுவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லாவற்றிலும் சில சில சிறிய பெரிய மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. அந்த மாற்றங்களை நாம் அனுசரித்து, வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.


கவலையில் அழுகை, மகிழ்ச்சியில் சிரிப்பு, வலியில் வேதனை இப்படியாக எல்லாம் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும்.


வாழ்க்கை என்பது பேக்கரியில் செய்யப்படுகிற கேக் அல்ல. ஒரே மாதிரியாக, இனிப்பாகவே எல்லாம் இருப்பதற்கு. அல்லது பேக்டரியில் செய்யப்படுகிற சிரிப்பு பொம்மை அல்ல, நாம் சிரித்து கொண்டே இருப்பதற்கு.


நாம் உணர்வும் உணர்ச்சிகளும் உள்ள மனிதப் பிறவிகள். நமக்குள் ஓர் உலகமே இருக்கிறது.


ஆகவே, குடும்ப வாழ்க்கை என்றால் சில குழப்பங்களும் இருக்கும். மகிழ்ச்சிகள் இருப்பது போல் சில கவலைகளும் இருக்கும். இன்பங்கள் இருப்பது போல் சில வலிகளும் இருக்கும். கணவனிடம் சில முரட்டு குணங்களும், கோபமும் சில பிடிவாதங்களும், சில குளறுபடிகளும் இருக்கலாம்.


பெண்ணிடம் சில சிணுங்கல்களும், சில தவறான புரிதல்களும் சில அவசர முடிவுகளும் இருக்கலாம். ஆணை விட பெண் அதிக உணர்ச்சிவசப்படுபவள், ஒன்று அவள் சீக்கிரம் கோபப்படுவாள். தாமதமாக அதிலிருந்து விடுபடுவாள். அல்லது தாமதமாக கோபப்பட்டுவிட்டு மிக தாமதமாகவே அந்த கோபத்திலிருந்து வெளியே வருவாள். ஒரு சிலர் இதிலிருந்து விதிவிளக்காக இருக்கலாம்.


குறையில்லாத மனிதன் இல்லை. தவறுகள் செய்யாதவர்கள் வானவர்கள் மட்டுமே. இறைவன் படைத்த ஆண் பெண் படைப்பில் அவரவர் உடல் அமைப்புக்கும், குணங்களுக்கும் தொடர்பு உண்டு. 


பெண்ணை பற்றி வேதமும் தூதரும் கூறியவை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. அதாவது பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். (1) ஆகவே அவளில் வளைவு இருப்பதுடந்தான் நாம் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க முடியும். வில் வலைந்திருந்தால்தான் அதிலிருந்து வேட்டையை நோக்கி அம்பெறிய முடியும். அப்படித்தான் பெண் வளைந்திருந்தால்தான் அவள் பெண். அவள் ஆணுக்கு சுகத்தை இன்பத்தை மகிழ்ச்சியை ஆனந்தத்தை அன்பை பாசத்தை பிரியத்தை கொடுக்க முடியும். ஆணும் பெண்ணும் மனித இனம் என்றாலும் இருவரும் இருவேறு பாலினம். இருவருக்குள் இருக்கும் உணர்வுகள் எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் ஒன்றாக இருக்க முடியாது. சில ஒத்து போனாலும் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.


ஆணுக்கு பொறுப்புகளும், சுமைகளும், கடமைகளும் அதிகம். பெண்ணுக்கு பொறுப்புகளும், கடமைகளும் குறைவாக இருப்பினும் குடும்பத்தின் உள் விவகாரங்களை அவள்தான் கவனிக்க வேண்டும்.


சில சமயம் உள் விவகாரங்களை கவனிப்பது வெளிவிவகாரங்களை கவனிப்பதை விட மிக கடினமும் சிரமமும் சவால்கள் நிறைந்ததுமாக இருக்கும். கடலுக்கு மேல் இருக்கிற அலைகளை விட அதற்குள் இருக்கிற எரி மலை மிக ஆபத்தானது என்பது எல்லாருக்கும் தெரியும். பூமிக்கு மேல் இருக்கும் மலைகளை விட அதன் கீழ் இருக்கும் மலைகளின் வேர்கள் மிக ஆழமானது, வலிமையானது.

அப்படித்தான் உள் விவகாரங்களை கவனிப்பது. ஆகவே, அது ஒரு சாதாரண காரியமல்ல.


இருவரும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையோ, அற்ப காரணங்களையோ கவனத்தில் கொள்ளாமல் தங்கள் பெற்றோரையும் குடும்பத்தையும் உறவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கணவனுக்கு வெளி வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்களில், வர்த்தக தொடர்பில் இப்படி ஏதாவது அவனுக்கு சிக்கல்கள் இருக்கலாம். அதனால் அவனுக்குள் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த மன அழுத்தங்களிலிருந்து வணக்கவழிபாடுகள், திக்ருகள், துஆக்கள், நல்லோரின் அறிவுரைகளை செவியுறுதல் போன்ற நற்காரியங்கள் மூலம் வெளியே வர முயற்சிக்க வேண்டும். இவற்றை தவிர மற்ற எல்லா முயற்சிகளும் மன அழுத்தத்தை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது; பிரச்சனைகளை கூட்டுமே தவிர குறைக்காது.


அல்லாஹ்வின் நினைவைக் கொண்டு உள்ளங்கள் அமைதி பெறும் என்று அல்லாஹ் கூறுகிறான். (2)


குர்ஆன் ஓதுவதும் அதில் சிந்திப்பதும் மனதிற்கு மிகப் பெரிய நிம்மதியும் அமைதியும் இருப்பதாக நபிமொழி கூறுகிறது. (3)


மஸ்ஜிதில் தொழுவதும் முடிந்தளவு பகலில் அங்கு அதிக நேரம் இருப்பதும் ஒரு தொழுகைக்கு பின்னர் இன்னொரு தொழுகையை எதிர்பார்த்து முன்கூட்டியே மஸ்ஜிதுக்கு செல்வதும் நமக்கு மிக அதிகமாக மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் மன வலிமையையும் கொடுக்கும். காரணம் இந்த அமல்கள் மூலம் நாம் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக, அவனுக்கு மிக பிரியமானவர்களாக ஆகிவிடுகிறோம். அதுபோன்று அறிஞர்களின் ஆலோசனைகளை விட்டும் அவர்களின் அறிவுரைகளை விட்டும் ஒருபோதும் நாம் தூரமாகிவிடக் கூடாது. நமது மனோ இச்சையின்படி, நமது கோப உணர்வுகள்படி அவசர முடிவு எடுக்க கூடாது.


சரி, இப்போது பெண்ணுடைய பிரச்சனைக்கு வருவோம்.


ஒரு பெண் படைப்பால் பலவீனமானவள் என்பதை நாம் அறிவோம். அவள் சிறுபிராயத்திலிருந்தே தன் தாய் தந்தை உடன் பிறந்தோரின் அன்பில் பாசத்தில் வளார்ந்தவள். அவள் பூமியில் விழுந்த பின்னர் முதன் முதலில் பார்த்த ஆண் அவளின் தந்தைதான். அவளை தூக்கி கொஞ்சி, கேட்டதை எல்லாம் அதற்கு அதிகமாக வாங்கி கொடுத்து வளர்த்தவர் அவளின் தந்தை. தான் ஏழையாக இருப்பினும் தன் மகளை ஓர் இளவரசியாக வளர்க்க முயற்சி செய்பவர் அவளின் தந்தை. வீட்டில் அண்ணன் தம்பி இருந்தால், மாமா, சாச்சா இருந்தால் இப்படி எல்லா உறவு ஆண்களாலும் அன்பாலும் பாசத்தாலும் பிரியத்தாலும் தாலாட்டப்பட்டவள் பெண். இப்படித்தான் பெண்கள் பெரும்பாலும் வளர்க்கப்படுகிறார்கள்.


ஆகவே, கணவனும் சரி, கணவனின் வீட்டாரும் சரி, தங்கள் வீட்டுக்கு வருகிற மணமகளை தங்கள் வீட்டின் வேலையாளாக, எடுபிடி கையாளாக பார்க்காமல், குறை கூறுவதற்கே மஹர் கொடுத்து ஈஜாப் கபூல் செய்து அழைத்து வரப்பட்டவள் என்று கருதாமல், இவளை வீட்டில் வைப்பதும் இவளுக்கு சோறுபோடுவதும் இவளை அவ்வப்போது குத்தி பேசி கேலி கிண்டல் செய்து நாம் மகிழ்வதற்காக என்று நினைக்க வேண்டாம்.


மருமகள், மனைவி வீட்டு வேலைகளை செய்வாள், ஆனால், அவள் வேலைக்காரி அல்ல.


மருமகள், மனைவி மாமா மாமியை கவனிப்பாள்,. ஆனால் அவள் எடுபிடி கையாள் அல்ல.


கணவனுக்கு அவள் பணிவிடைகள் செய்வாள், அதில் நேரம் காலம் பார்க்க மாட்டாள். ஆனால், அவள் அடிமை இல்லை. அவள் ஓர் இராணி, அவள் ஓர் இளவரசி, அவள் ஓர் இல்லத்தரசி, அவள் ஒரு மனையாள், இப்படியாக உயர்வான பல பட்டங்களுக்கு உரிய சமூக அந்தஸ்த்துள்ள, கண்ணியமும் மதிப்பும் உள்ளவள். அவள் மனைவி என்ற பெயரில் இருந்தாலும் சரி, மருமகள் என்ற பெயரில் இருந்தாலும் சரி அவள் புகுந்த வீட்டில் சம உரிமை உள்ளவள், கணவனின் வீட்டின் மேய்ப்பாளர், பொறுப்பாளர், அரசி ஆவாள். மாமனார் மாமியாருக்கு மருமகள் அதாவது தங்களுக்கு பிறக்காத ஒரு மகள், தங்களுக்கு பிறந்த மகளுக்கு வீட்டில் என்ன உரிமையும் கண்ணியமும் இருக்கிறதோ அதே உரிமையும் கண்ணியமும் மருமகளுக்கும் இருப்பதை மாமனார் மாமியார் உறுதி செய்ய வேண்டும். தங்கள் மகளை நடத்துவதுபோல் மருமகளை நடத்த வேண்டும். அவளுக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் கொடுக்க வேண்டும். அவளுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவள் மீது செலவு செய்வதில் கருமித்தனம் காட்டக் கூடாது. அன்பையும் பாசத்தையும் நெருக்கத்தையும் அவளிடம் காட்ட வேண்டும். அவளின் உணர்வுகளை காயப்படுத்துவதோ, அவளின் மனதை புண்படுத்துவதோ அவளுக்கு தொந்தரவு தருவதோ அவளை குத்தி பேசி அவமானப்படுத்துவதோ அவளின் குடும்பத்தை இழிவுப்படுத்துவதோ அவளின் உரிமைகளை பறிப்பதோ அநியாயக்கார அரசன் அடிமைகளை நடத்துவது போன்று அவளை மோசமாக நடத்துவதோ மிகப் பெரிய பாவமாகும், இழிவான குணமாகும், கேவலமான பண்பாகும்.


பல குடும்பங்கள் தங்கள் வீட்டுக்கு வந்த பெண்களோடு – மனைவியோடு – மருமகளோடு, நாத்தனாவோடு – இப்படி நடந்துகொள்வது இந்த சமுதாயத்தில் அதிகமாகி விட்டது. இது மிக வேதனையான, கவலைக்குரிய விஷயமாகும். அல்லாஹ் பாதுகாப்பானாக! 


ஒரு மணமகளுக்கு புகுந்த வீட்டில் பிறந்த வீட்டில் இருந்த சூழ் நிலைக்கு கொஞ்சம் மாற்றமான அல்லது முழுதும் மாற்றமான சூழ் நிலை இருக்கலாம்.


ஒரு பெண்ணுக்கு அவளது தாய் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். பெண் தனது தாயிடமிருந்து அவளிடமுள்ள நல்ல குணங்களையும் உயர்ந்த பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பெண் சமூகவாதியாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மீது பற்றுள்ளவளாக இருக்க வேண்டும். அவள் புகுந்த வீட்டை தான் பிறந்த வீட்டை போல பார்க்க வேண்டும். தனது தாயை தனது தந்தையை மதிப்பதுபோல, பேணிபாதுகாப்பது போலவே தனது மாமனார் மாமியாரை மதிக்க வேண்டும், பேணி பாதுகாக்க வேண்டும். வேர் இல்லாமல் மரம் இல்லை, மரம் இல்லாமல் கனி இல்லை. கணவன் மரம் என்றால், தனக்கும் தனது கணவனுக்கு பிறக்கும் பிள்ளைகள் கனிகள் என்றால் மாமனாரும் மாமியாரும் வேர் ஆவார்கள். குடும்பத்திற்கு எல்லாரும் அவசியம். ஆகவே, பெண் அனைவரையும் அவரவர் குணாதிசயங்களோடு ஏற்றுகொள்ள வேண்டும். தனது தாய் தந்தையின் கோபத்தையும் கண்டிப்பையும் ஏற்றுக்கொள்வது போன்று தனது மாமனார் மாமியாரின் கோபதாபங்களையும் கண்டிப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அவர்களை அனுசரித்து கொள்ள வேண்டும். 


கணவனோடு எப்போதும் இணக்கமாக இனிமையாக மென்மையாக பாசமாக இருக்க வேண்டும். அவனை வெறுக்கவோ, புறக்கணிக்கவோ, ஒதுக்கவோ கூடாது. கோபத்தையும் சிணுங்கல்களையும்  இரவுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும். நீ என் மீது மகிழ்ச்சி அடையாமல் நான் தூங்க மாட்டேன் என்று இறங்கி வந்து விட வேண்டும். இப்படித்தான் நபிமொழி உனக்கு அறிவுரை கூறுகிறது. உனது நபியை விட உனக்கு நன்மையை நாடக்கூடியவர் யார் இருக்க முடியும்? 


விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போக மாட்டார். பணிபவர் உயர்வார்.


கணவனும் தன் கோபத்தை அடக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். வெறுப்பு என்ற நெருப்பை கண்ணிலும் வாயிலும் இதயத்திலும் எப்போதும் வைத்துக்கொண்டே இருக்கக் கூடாது. ஒருவர் மன்னிப்பு கேட்டால் உடனே மற்றவர் மன்னித்து விட வேண்டும். ஒருவர் இறங்கி வந்துவிட்டால் உடனே மற்றவரும் இறங்கிவிட வேண்டும். ஒருவர் சிரித்துவிட்டால் உடனே மற்றவரும் பல்லை காட்டிவிட வேண்டும். மூஞ்சை தூக்கிகொண்டு முருங்கை மரத்தில் உட்கார்ந்து இருக்க கூடாது.


வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையை இன்பமாக்க வழிகளை தேட வேண்டும். வலிகள் இருந்தாலும் இன்பமாக வாழ வழிகளை உருவாக்க வேண்டும். மன வலிமையும் குண நலனும் சிரித்த முகமும் கணிவான சொல்லும் சேவை மனமும் விட்டுக்கொடுக்கும் இயல்பும் இருந்தால் போதும் நீங்கள்தான் அங்கு ஆட்சியாளர்.


மனைவியின் சிணுங்கல்களை அன்பாக இன்பமாக கடந்து செல்வது அலைகளில் கால்களை நனைத்து மகிழ்வதுபோல. மனைவியின் சில முறையீடுகளை புன்முறுவலோடு செவிகொடுத்துவிட்டு, அதில் உள்ள நல்லதை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி தர வேண்டும். சிலவற்றை புரிய வைக்க வேண்டும். கணவன், மனைவிக்கு ஓர் ஆசிரியராகவும் இருக்க வேண்டும், அவளிடமுள்ள சில குறைகளை தவறுகளை திருத்தி தர வேண்டும். அவளுக்கு மாணவனாகவும் இருக்க வேண்டும். அவளிடமிருந்து கற்க சில நல்லவை இருக்கலாம். அவளுக்கு ஆலோசனை கொடுக்க அவளின் ஒரு நல்ல தோழியைப் போன்றும் இருக்க வேண்டும்.


அவள் சிணுங்கும்போது நீ அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். நீ கோபப்படும்போது அவள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அட்ஜஸ்மெண்ட்தான் வாழ்க்கை. அட்ஜஸ்மெண்ட் இல்லை என்றால் எதுவும் முடியாது. பாவத்திலும் மார்க்கத்தை மீறுவதிலும் அட்ஜஸ்மண்ட் இல்லை. மற்றபடி முடிந்த வரை விட்டுக்கொடுப்பதும் பெருந்தன்மையாக கடந்து செல்வதும்தான் வாழ்க்கை.


குடும்பத்தில் மன கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் அதிகமாகி ஒருவர் மற்றவருடன் அறவே இணக்கமாக இருக்கவே முடியாது என்று வரும்போதுதான் பிரிதல் என்பது வருமே தவிர, எடுத்த எடுப்பில் என்னை விடு என்று பெண் சொல்வதோ, அல்லது உன்னை தலாக் செய்துவிடுவேன் என்று ஆண் சொல்வதோ மார்க்கத்தில் இல்லை என்பதை நாம் புரிய வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.


அல்லாஹ்வே எங்களுக்கு எங்கள் ஜோடிகள் மூலம் மன நிம்மதியையும் கண் குளிர்ச்சியையும் தா! எங்களில் ஒருவரை மற்றவருக்கு மகிழ்ச்சியாக ஆக்கிவை. கவலையாக பிரச்சனையாக ஆக்கிவிடாதே! எங்களுக்குள் உள்ள மன கசப்புகளை, வெறுப்புகளை, கோபதாபங்களை போக்கி விடு! மார்க்கத்தோடு மறுமைக்காக வாழ்கிற நல்லோரில் எங்களை ஆக்கிவிடு! எங்கள் அமல்களையும் குணங்களையும் சீராக சிறப்பாக ஆக்கிவிடு! ஆமீன்.


அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.


(1)

اسْتَوْصُوا بالنِّساءِ؛ فإنَّ المَرْأَةَ خُلِقَتْ مِن ضِلَعٍ، وإنَّ أعْوَجَ شَيءٍ في الضِّلَعِ أعْلاهُ، فإنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وإنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أعْوَجَ، فاسْتَوْصُوا بالنِّساءِ.

الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري  | الصفحة أو الرقم : 3331 | خلاصة حكم المحدث : [صحيح]

(2)

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ 

ஸுரா அர் ரஅத் – வசனம் 28

(3)

وَما اجْتَمع قَوْمٌ في بَيْتٍ مِن بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بيْنَهُمْ؛ إِلَّا نَزَلَتْ عليهمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ المَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَن عِنْدَهُ، وَمَن بَطَّأَ به عَمَلُهُ، لَمْ يُسْرِعْ به نَسَبُهُ.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2699 | خلاصة حكم المحدث : [صحيح] |

Previous Post Next Post