அறிவின் ஆரம்பம் ஏமாற்றம் தரக் கூடியதே!

بسم الله الرحمن الرحيم


(மார்க்க) அறிவைத் தேடும் மாணவன் அது விடயத்தில் அவசரப்படுதல், கற்பித்தல் பணியை மேற்கொள்ள முற்படுதல், மார்க்கத் தீர்ப்பு வழங்குதல் மற்றும் தான் உறுதியாவதற்கு முன்னர் மக்கள் மன்றத்தில் பிரசித்தியை எதிர்பார்த்தல் போன்ற பண்புகளைத் தவிர்ந்தாக வேண்டும். நாங்கள் (கல்வி பயிலும் காலத்தில் எங்களுடன் கல்வி கற்ற) நண்பர்களைப் பார்த்திருக்கின்றோம், அவர்கள் தாம் வாசித்த ஒரு மார்க்க விடயத்தை அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே அதனை வைத்துத் தம்மை அறிமுகமாக்கும் செயற்பாடுகளில் ஆர்வாம் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை நோக்கி எங்களுடைய ஆசான்கள்: “நீங்கள் அவசரப்பட வேண்டாம். உங்களுடைய காலத்தில் மார்க்கத் தீர்ப்பு வழங்கத் தகுதியானவர்களிடத்தில் அது தொடர்பான பொறுப்பை வழங்கிவிடுங்கள்! அல்லாஹுத்தஆலா நாடி உங்கள் விடயத்தில் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்குத் தேவையான பொருத்தப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினால் அவர்கள் உங்களிடத்தில் வருவார்கள். மேலும், மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்குத் தகுதியானவர்களிடத்தில் ஒன்று சேரும் மக்கள் தொகையைவிட உங்களிடத்தில் அதிமானவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாம்! உண்மையில் அவர்கள் உன்னைவிட இதற்குத் தகுதியானவர்கள். எனவே, எதிர்பார்த்திரு! தகுந்த முறையில் தேர்ச்சி பெறு! அதன் பின் கற்பித்தலுக்காக உன் நேரகாலத்தை ஒதுக்கு!” என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். இவைகள் தான் நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட விடயங்களாகும்.

அறிவைத் தேடும் சில மாணவர்கள் - அல்லாஹ் அவர்களைச் சீர் செய்ய வேண்டும் - சுத்தம் அல்லது தொழுகை தொடர்பான ஒரு பகுதியை வாசித்தவுடன் அதிலிருந்து ஒரு தொகுப்பைத் தயார் செய்து அதற்கு விளக்கக் குறிப்புக்கள் மற்றும், மேலதிக தகவல்களைச் சேர்த்து வெளியிடுகிறார்கள். இம்முயற்சிகள் அனைத்தும் ஆபத்தானவை! அறிவைத் தேடும் மாணவர்கள் அவசியம் இவற்றைத் தவிர்ந்தாக வேண்டும். மாற்றமாக, முன்சென்ற மற்றும் பின்வந்த அறிஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியமாகும். மேலும், அல்லாஹ்வினுடைய திருமுகத்தை நாடக்கூடிய விடயத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எனென்றால், அறிவைப் பொறுத்தளவில் அதில் பித்னா உண்டு. ஷைத்தான் அதனை உண்டுபன்னுவதில் மிக்க ஆர்வம் உள்ளவனாக இருக்கிறான். உலமாக்கள் கூறிய கூற்றுக்களில் ஒன்றுதான்: “நிச்சயமாக மார்க்கத்தை பாழ்படுத்தக் கூடியவர்கள் பாதியளவு மார்க்க விளக்கமுள்ளவரும் அறியாமை குடிகொண்ட வணக்கஸ்தாரியும் ஆவர்கள்.”

பாதியளவு அறிவுள்ள ஓர் அறிஞரைப் பொறுத்தளவில் அவரிடத்தில் அறிவு உண்டு. என்றாலும், அவருடைய அறிவு பூரணத்துவமானதாக இருக்கமாட்டாது. அதே நேரத்தில் அவர் அழிவுக்கும் வெற்றிக்கும் மத்தியில் இருப்பார். சில சமயங்களில் சரியான ஒரு கூற்றை எடுப்பார். அதில் உள்ள உண்மைத் தன்மையையிட்டு பொதுமக்கள் ஆச்சரியமடைவர். பிறகு அவர்களாகவே பல அழிவுக்குரிய இடங்களைக் கொண்டு வருவார்கள். இதன் பேறாக அப்படியான மக்களை நோக்கி ஒருவர், “நிச்சயமாக அவர் இந்த விடயத்தில் தவறிழைத்துவிட்டார்” என்று கூறினால், அதற்குப் பதிலாக அதே மக்கள்: “இல்லை. அவர் இதுவல்லாதவற்றில் சரியாகச் சொல்லியிருக்கிறாரே! மேலும், அவர் அறிவாளிகளில் ஒருவராகவும் இருக்கிறார்” என்று கூறிவிடுவர்.

எனவேதான், அறிவைத் தேடக்கூடிய மாணவர்கள் அவசரப்படக்கூடாது என்று கூறுகின்றோம். பாதியளவுள்ள அறிவைக் கொண்ட அறிஞரும் மார்க்க விளக்கமுடையவரும் தாம் கல்வியைத் தேடும் போதே இப்படியான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டே பிரசித்தி பெற்ற பின்வரும் முதுமொழி அமைந்துள்ளது: 'அறிவின் ஆரம்பம் தன்னில் துரிதமாற்றத்தை ஆதரவு வைக்கக் கூடியதும் பரபரப்பானதுமாக இருக்கும். அதன் இறுதி அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதும் அடக்கத்தை உண்டுபன்னக் கூடியதுமாக இருக்;கும்.”

எனவே, அறிவின் ஆரம்பமானது பல ஏமாற்றங்களைத் தரக்கூடிய அம்சங்களைத் தன்னகத்தே பொதிந்துள்ளது. அல்லாஹ் அதனுடன் இருப்பவரின் பாதத்தை உறுதிப்படுத்தினால் அவர் அதனைப் பூர்த்தி செய்யும் வரை அதில் பிரயாணித்து, அவர் மக்களுக்கு மத்தியில் வெளிப்படுவதாக இருந்தாலும் மற்றும், எதனையாவது எழுதி வெளியிடுவதாக இருந்தாலும் நிலையான தரணியில் தன்னுடைய இரட்சகனிடம் இருந்துள்ள அத்தாட்சியின் மீது ஆர்வம் கொள்ளக் கூடியவராக இருப்பார்.

-    வழங்கியவர்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ், நூல்: அஷ்ஷர்ஹுல் மும்திஃ (9/25)

-    தமிழில்: அபூஹுனைப்
أحدث أقدم