நாற்பது நாட்கள், ஒரு மாதம் என ஜமா'அத் போகலாமா? - தப்லீக் ஜமா'அத்திற்கு மறுப்பு

- அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ் 


கேள்வி:

அல்லாஹ் உங்களுக்கு நல்லுபகாரம் செய்வானாக. மதிப்பிற்குரிய (ஷைஃக்) அவர்களே (கேள்வியாளர்) கேட்கின்றார்: “தப்லீக் ஜமா'அத் செய்வது போன்று (குறிப்பிட்ட சில) மாதங்கள், வாரங்கள் மற்றும் நாட்கள் என (தஃவாவுக்காக) வெளியேறுவது ஸுன்னாஹ்வா அல்லது பித்'அஹ்வா? ஒரு மனிதர் ஷரீஅத்தின் கல்வியை கற்பவராக இருக்கும் நிலையில் இந்த ஜமா'அத்துடன் வெளியேறுவது கூடுமா?” 

பதில்:

இது கூடாது. இது ஒரு பித்'அத்தாகும்.

இந்த நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள், நான்கு நாட்கள், நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் (என இவ்வாறு குறிப்பிட்ட நாட்கள் ) வெளியேறும் விடயமானது ஒரு பித்'அத்தாகும். மேலும் இது ஒரு ஸூஃபி ஜமா'அத் என்பது அறியப்பட்ட ஒன்றாகும். அதாவது, இது தேவ்பந்தை சேர்ந்தவர்களிடமிருந்து (தோன்றிய) ஒரு ஸூஃபி ஜமா'அத் என்பது உறுதியாகியுள்ளது.  

ஸூஃபித்துவத்தைப் பரப்புவதற்காக நமது (சவூதி) நாட்டிலும் மற்றும் பிற (நாடுகளிலும் இந்த ஜமா'அத்) நுழைந்து விட்டது. 

எனவே, ஸுன்னாஹ்வைச் சுமந்த ஒரு மனிதருக்கு, மேலும் தவ்ஹீதைச் சுமந்த ஒரு மனிதருக்கு அவர்களுடன் வெளியேறுவதென்பது கூடாது. ஏனெனில், அவர்களுடன் அவர் வெளியேறினால், (அவர்களின்) பித்'அத்தை பரப்புவதற்கு உதவிடுவார். 

மேலும் மக்கள் அவரை ஒரு ஆதாரமாகக் காட்டி, "இன்னின்னவர் அவர்களுடன் சென்றுள்ளார் அல்லது (இன்னின்ன) மக்கள் அவர்களுடன் சென்றுள்ளனர் அல்லது தான் வசிக்கும் பகுதியிலுள்ள (மக்கள் அவர்களுடன் சென்றுள்ளனர்)" எனக் கூறிவிடுவார்கள். எனவே, அவர்களுடைய பித்'அத்துடன் அவர்களின் நாட்டிற்கே அவர்கள் திரும்பி விடுவதற்காகவும், மேலும் நமக்கு மத்தியில் அவற்றை அவர்கள் பரப்பாமல் இருப்பதற்காகவும், அவர்கள் நிராகரிக்கப்படுவதும், அவர்களின் பக்கம் கவனம் செலுத்தப்படாதிருப்பதும் கடமையாகும். 

"அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக நான் அவர்களுடன் செல்வேன்" என்று ஒரு மனிதர் கூறக்கூடாது. (...) (பிறர் அவர்களுக்கு) கற்றுக் கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். (பிறர் அவர்களுக்கு) கற்றுக் கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் (தங்களுக்கென) ஒரு அடிப்படையையும், வழிமுறையையும் கொண்ட மக்களாவர்.

அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்க வந்துள்ளார்கள், உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு வரவில்லை. உங்களுக்கு அவர்களின் ஸூஃபித்துவத்தையும், அவர்களின் மத்ஹபையும் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்கள். உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு வரவில்லை. அவர்கள் (மார்க்கத்தை) கற்பதற்கு நாடியிருந்தால், பள்ளிவாசல்களில் அறிஞர்களிடம் அமர்ந்து புத்தகங்களை வாசித்திருப்பார்கள். இவை (அவர்களிடமுள்ள சில) பிழைகளாகும். இவற்றைக்கொண்டு ஏமாந்து விடக்கூடாது, ஆம்.


- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
أحدث أقدم