ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும்

ஸஃபர் صفر என்பது இஸ்லாமிய, அரேபிய மாதங்களில் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு விசேடமும் தனித்துவமும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய மாதங்கள் சந்திர மாதங்களாகும். சந்திர மாதங்கள் மற்றும் அவற்றின் நாட்களின் அடிப்படையிலேயே முஸ்லிம்களாகிய நாம் எங்களுடைய மார்க்க வழிபாடுகளை நிறைவேற்றுகின்றோம். 

இஸ்லாத்தில் சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்று சில தனித்துவங்கள் இருக்கின்றன. உதாரணமாக: றமளான் மாதம் மாதங்களில் தனித்துவமான சிறப்பு மிக்க மாதம். அதே போன்று யுத்தம் தடைசெய்யப்பட்ட நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஹஜ்ஜுக்குரிய மூன்று மாதங்கள் இருக்கின்றன. இரவுகளில் லைலத்துல் கதர் இரவு சிறந்தது. பகல்களில் துல்ஹிஜ்ஜஹ் முதல் பத்துப் பகல்களும் சிறந்தவை. அவற்றிலும் 9, 10 ஆகிய அறஃபஹ் மற்றும் ஹஜ் பெருநாள் தினங்கள் மிகச் சிறந்தவை. இவ்வாறான எந்தச் சிறப்பும் ஸஃபர் மாதத்திற்கு இல்லை. 

இஸ்லாத்தில் சிறப்பான காலங்கள் என்பதன் அர்த்தம் என்ன?

அல்லாஹ் தனது படைப்புக்களில் சிலதை விட சிலதைச் சிறப்பித்து இருக்கின்றான். அவற்றில் சில காலங்களை விட சில காலங்களைச் சிறப்பித்து இருக்கின்றான். இஸ்லாத்தில் ஒரு காலத்தை விட ஒரு காலம் சிறப்பானது என்பதன் அர்த்தம் சிறப்பிக்கப்படாத காலங்கள் மோசமானவை என்பது அல்ல. மாற்றமாக பொதுவான நல்ல அமல்களை அல்லது குறிப்பிட்ட சில நல்ல அமல்களை அந்தச் சிறப்பான காலங்களில் செய்வது ஆர்வமூட்டப்படுகிறது அல்லது கட்டாயமாக்கப்படுகிறது என்பதுதான் அதன் அர்த்தமாகும். அதாவது றமளான் மாதம் சிறந்தது என்பதன் அர்த்தம் அதில் நோன்பு, இரவு வணக்கம், ஏனைய வணக்கங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான். முஹர்ரம் மாதம் சிறந்த மாதங்களில் ஒன்று என்பதன் அர்த்தம் அந்த மாதத்தில் யுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் நோன்பு நோற்பதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது என்பதாகும். துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் சிறப்பானவை என்பதன் அர்த்தம் அந்நாட்களில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்வதும் ஏனைய பொதுவான அனைத்து வணக்கங்களிலும் ஈடுபடுவதும் வரவேற்கப்படுகிறது என்பதாகும். இந்த நாட்கள் அல்லது மாதங்கள் சிறப்பானவை என்பதன் அர்த்தம் இவற்றில் வியாபாரம், திருமணம், வீடு குடி போகுதல் போன்ற உலக விடயங்களை ஆரம்பிப்பதற்குரிய நல்ல காலம் என்பதல்ல. சில கலாச்சாரங்களில் இருப்பதைப் போன்று எமது உலகக் காரியங்களைச் செய்வதற்கு இந்தக் காலம் சிறந்த காலம், இந்தக் காலம் கெட்ட காலம் என்று இஸ்லாத்தில் இல்லை. உலக காரியங்களில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த விடயங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றனவோ அவற்றை அந்தந்த நேரங்களில் செய்வதற்கு இஸ்லாம் ஆர்வமூட்டி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு நாளில் அல்லது மாதத்தில் எந்த ஒரு உலக காரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது அல்லது ஆரம்பிக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டவில்லை. குறிப்பிட்ட காலத்தை, நேரத்தை பீடையாகக் கருதுவது இஸ்லாத்திற்கு முற்பட்ட ஜாஹிலிய்யஹ் கால அரேபியர்களின் வழிமுறையாகும். அதனை இஸ்லாம் முற்றாகத் தகர்த்தெறிந்துள்ளது. அதேபோன்று பல்வேறு கலாச்சாரங்களிலும் இந்த நம்பிக்கை இருக்கிறது. அக்கலாச்சாரங்களுடன் ஒன்றிணைந்து வாழும் சில முஸ்லிம் சமூகங்களிலும் இவ்வாறான மூடநம்பிக்கைகள் பரவிக் காணப்படுகின்றன.

ஸஃபர் மாதம் பீடை மாதம் அல்ல

சில முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று கருதுகின்றனர். இது இஸ்லாத்தில் இருந்து கொண்டு ஜாஹிலிய்யத்தைப் பின்பற்றும் செயலாகும். ஜாஹிலிய்யஹ் காலத்தில் ஷவ்வால் மாதத்தில் திருமணம் முடிப்பது பீடை என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அதனைத் தகர்த்தெறியும் வகையில் நபி ﷺ அவர்கள் ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா அவர்களை ஷவ்வால் மாதத்தில் மணமுடித்துக் கொண்டார்கள். இதனை அவர்களே அறிவிக்கும் பின்வரும் ஹதீஸில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
عن عائشة، قالت: «تزوجني رسول الله ﷺ في شوال، وبنى بي في شوال، فأي نساء رسول الله ﷺ كان أحظى عنده مني؟» صحيح مسلم 3483
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னை ஒரு ஷவ்வால் மாதத்தில் மணமுடித்துக் கொண்டார்கள். இன்னொரு ஷவ்வால் மாதத்தில் என்னோடு இல்லறத்தை ஆரம்பித்தார்கள். அவர்களது மனைவியரில் அவர்களிடம் என்னைவிட மிகவும் விருப்பமான பெண் யார்தான் இருந்தார்? (முஸ்லிம் 1423)

அதேபோன்று ஸஃபர் மாதத்தையும் அறியாமைக் கால மக்கள் பீடை மாதமாகக் கருதி இருந்தார்கள் என்பதை பல அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ் அதற்கு ஆதாரமாக உள்ளது.
عن أبي هريرة، عن النبي ﷺ قال: «لا عَدْوى، ولا طِيَرَةَ، ولا هامَةَ، ولا صَفَرَ.» البخاري 5757 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: *(அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல்) தொற்று நோய் கிடையாது. சகுனம் கிடையாது. ஆந்தை (சகுனமும்) கிடையாது. ஸஃபர் (மாதத்தில் பீடை) கிடையாது.* (புகாரி 5757, முஸ்லிம் 2220)

இந்த ஹதீஸில் ஸஃபர் கிடையாது என்பதன் அர்த்தம் ஸஃபர் மாதத்தில் பீடை கிடையாது; அதனை பீடை மாதமாகக் கருதுவது கூடாது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாக பல அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு ஸஃபர் என்பது ஒட்டகத்தின் வயிற்றில் ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் என்றும் சிலரால் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தை ஜாஹிலிய்யஹ் மக்கள் சில காலங்களில் முஹர்ரம் மாதத்திற்குப் பதிலாக யுத்தம் தடை செய்யப்பட்ட மாதமாக மாற்றி அல்லாஹு தஆலா ஏற்படுத்திய மாத விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதை மேற்படி ஹதீஸ் குறிக்கும் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இமாம் இப்னு றஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் முதல் கருத்தையே பலமானதாகக் கருதுகிறார்கள்.
எனவே, அது எவ்வாறாயினும் ஒரு மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவது ஜாஹிலிய்யஹ் கால நம்பிக்கைகளில் ஒன்றாகும். அதனை இஸ்லாம் களை எடுத்துள்ளது.

ஸஃபர் மாதத்தைப் பீடை பிடித்த மாதமாகக் கருதுவது மூடநம்பிக்கையே

அல்லாஹ் எந்த ஒரு காலத்தையும் அனைவருக்கும் மோசமான விளைவுகள் நடக்கக் கூடியதாகப் படைக்கவில்லை. எந்த ஒரு காலமாக இருந்தாலும் அதில் சிலருக்கு நலவும் சிலருக்குக் கெடுதியும் ஏற்படலாம். யாருக்கு நலவு ஏற்பட வேண்டும் யாருக்கு கெடுதி ஏற்பட வேண்டும் என்று விதிப்பது அல்லாஹ்வே. அவனது முழுமையான ஞானத்தின் அடிப்படையில் அவற்றைத் தீர்மானிக்கின்றான். உதாரணமாக முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான். பிர்அவ்ன் எனும் கொடுங்கோல் இறை நிராகரிப்பாளனை அழித்தான். அதே முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரப்பிள்ளை ஹுஸைன் றளியல்லாஹு அன்ஹு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு நாளில் ஒரு நல்ல மனிதருக்கு நலவும் இன்னொரு நல்ல மனிதருக்குக் கெடுதியும் ஏற்படுகிறது. அது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். அதற்கும் அந்தக் காலத்திற்கும் சம்பந்தமில்லை. 

ஸஃபர் மாதத்தில் நபி ﷺ அவர்கள் எந்த ஒரு பணியையும் இடைநிறுத்தவில்லை. வழமையாக தேவைக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவார்களோ அவ்வாறே செயல்பட்டார்கள். உதாரணமாக: நபி ﷺ அவர்களின் காலத்தில் ஸஃபர் மாதத்தில் தான் கைபர் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது. அம்மாதத்தில் முழுமையாக அல்லது அதிகமாக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று இருந்தால் அதனை அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். அதனடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். எனவே இஸ்லாத்தின் பார்வையில் ஸஃபர் மாதத்தை அல்லது அதில் வரும் கடைசிப் புதன் கிழமையை மோசமான காலமாகக் கருதுவதானது ஜாஹிலிய்யத் எனும் இஸ்லாத்திற்கு முரணான அறியாமையே; மூடநம்பிக்கையே.

காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும்

காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும்.
 
عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي ابنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وأنا الدَّهْرُ، بيَدِي الأمْرُ أُقَلِّبُ اللَّيْلَ والنَّهارَ». البخاري (٧٤٩١) واللفظ له، ومسلم (٢٢٤٦) 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். அவன் காலத்தைத் திட்டுகின்றான்; நானே காலமாக இருக்கின்றேன்; (ஏனெனில்) என் கையிலே அதிகாரம் இருக்கிறது; நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றி அமைக்கின்றேன். (புகாரி 7491, முஸ்லிம் 2246)

ஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒருவருக்கு கஷ்டங்களும் துன்பங்களும் ஏற்பட்டால் அது அவருக்கு ஒரு கஷ்டமான, துயரமான நாளாக இருந்தது என்று குறிப்பிடும் பொழுது, அது ஒரு மோசமான நாளாக இருந்தது என்று வர்ணிப்பதில் தவறில்லை. அந்த நாள் தான் அவரின் துயரத்துக்குக் காரணம் என்று கருதாமல் அந்த நாளில் ஏற்பட்ட துயரத்தைக் கருத்தில் கொண்டு அது சொல்லப்பட வேண்டும். எனவே அந்த நாளைக் குறை கூறும் நோக்கம் இல்லாமல் அந்த நாளில் நடந்த துயரமான நிகழ்வைக் குறிக்கும் விதமாக ஒரு நாளை மோசமான நாள் அல்லது துயரமான நாள் என்று சொல்லுவது காலத்தைத் திட்டுவதாக அமையாது. அந்த நாள் குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது சிலருக்குக் கஷ்டமான நாளாக இருந்திருக்கிறது; அதே நேரம் ஏனையவர்களுக்கு அதில் நிறைய நலவுகள் நடந்திருக்க முடியும். அதேபோன்றுதான் ஒரு நாளைக் குறித்து இன்று கடுமையான வெக்கையான நாளாக இருக்கிறது என்று காலத்தைத் திட்டும் நோக்கம் இல்லாமல் கூறுவது தவறில்லை. லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வந்த வானவர்களை அவர் மனிதர்கள் எனக் கருதி, தனது மோசமான சமூகம் தன்னிடம் வந்திருக்கும் இந்த விருந்தினர்களை தொல்லை கொடுப்பார்கள் என்று எண்ணி, {وقالَ هَذا يَوْمٌ عَصِيبٌ} இது ஒரு கடினமான நாள் என்று குறிப்பிட்டதை அல்லாஹ் ஹூத் அத்தியாயத்தின் 77 வது ஆயத்தில் குறிப்பிடுகின்றான். 

இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் காலத்தைக் குறை கூறும் விடயத்தை மூன்று பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். அவை:
1- குறை கூறும் நோக்கம் இல்லாமல் ஒரு தகவலுக்காக ஒரு காலத்தில் நிகழ்ந்த துன்பத்தை எடுத்துரைத்தல். இது அனுமதிக்கப்பட்டது. உதாரணமாக: இன்று கடுமையான சூட்டின் காரணமாக நாம் கலைப்படைந்து விட்டோம் என்று கூறுதல்...
2- காலம்தான் நன்மையையும் தீமையையும் ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் காலத்தை திட்டுதல். இது ஷிர்குன் அக்பர் எனும் பெரும் இணை வைத்தல் ஆகும். அல்லாஹ்வுடன் இன்னொரு படைப்பாளன் இருப்பதாக நம்புவதாகும்...
3- காலம் தான் நன்மையையும் தீமையையும் செய்கிறது என்று நம்பாமல், அல்லாஹ்தான் அனைத்தையும் செய்யக்கூடியவன் என்ற நம்பிக்கையோடு, ஒரு காலத்தில் நடந்த துன்பத்திற்காக அந்தக் காலத்தைத் திட்டுவது. இது இணை வைத்தல் என்ற நிலையை அடையாவிட்டாலும் ஹறாமான செயலாகும். இது அறிவீனமும் மார்க்க ரீதியான வழிகேடுமாகும். ஏனெனில், இந்தத் திட்டுதல் அல்லாஹ்வை நோக்கியே திரும்புகின்றது. காரணம், அவனே காலத்தைத் திட்டமிட்டு அமைக்கின்றான். அதிலே அவன் நாடுகின்ற நலவை அல்லது கெடுதியை உருவாக்குகின்றான்; காலம் எதையும் செய்வதில்லை. இந்தத் திட்டுதல் ஒருவனை இறை நிராகரிப்பாளனாக மாற்றி விடமாட்டாது. ஏனெனில், அவன் நேரடியாக அல்லாஹ்வைத் திட்டவில்லை. (ஆனாலும் இது பாவமானது.) பார்க்க: القول المفيد على كتاب التوحيد (2/240)


ஜோதிடத்தின் மூலமாக ஒரு நாளின் நிலைமையை முற்கூட்டியே சொல்வது பாவமானது

ஒரு நாளின் நிலைமையை அது நிகழ்ந்து முடிந்ததற்குப் பிறகு தகவலாகச் சொல்ல முடியுமாக இருந்தாலும் ஜோதிடம் பார்த்து எந்த ஒரு நாளையோ வாரத்தையோ மாதத்தையோ வருடத்தையோ மோசமானது என்று அது வருவதற்கு முன்னாலே சொல்ல முடியாது. இவ்வாறு ஜோதிடத்தின் அடிப்படையில் சொல்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், மறைவான அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கிறது. மறைவான சில விடயங்களை அவன் அவனுடைய தூதர்களுக்கு வஹி மூலம் அறிவிக்கின்றான். இறை தூதர்கள் மூலமாக அறிவிப்புச் செய்யப்பட்டாலே மறைவான விடயத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியான நிலையில் மாத்திரமே மறைவான விடயத்தை நாம் நம்ப முடியும்; நம்பவும் வேண்டும். இந்த வகையில் தான் சில இறைத் தூதர்கள் அவர்களுடைய சமூகங்களுக்கு ஏற்படப்போகும் அழிவை முன்கூட்டியே அறிவித்தார்கள்.(உதாரணமாக பார்க்க: அல்குர்ஆன் 11:65)
((مَن أتى عَرّافًا فَسَأَلَهُ عن شيءٍ، لَمْ تُقْبَلْ له صَلاةٌ أرْبَعِينَ لَيْلَةً)) صحيح مسلم ٢٢٣٠
"எவர் ஒரு குறி சொல்பவனிடம் சென்று ஏதாவது ஒன்றைப் பற்றிக் கேட்கின்றாரோ, அவருடைய 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2230)
((مَن أتى عرّافًا أو كاهنًا فصَدَّقَه بما يقولُ، فقد كَفَرَ بما أُنْزِلَ على محمَّدٍ ﷺ)) انظر: تخريج سنن أبي داود - شعيب الأناؤوط (3904)     
"எவர் ஒரு குறிசொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப்படுத்துகின்றாரோ, அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்டதை நிராகரித்துவிட்டார்" என்று  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
عن الزُّبَيرُ بنُ عَدِيٍّ: أتَيْنا أنَسَ بنَ مالِكٍ، فَشَكَوْنا إلَيْهِ ما نَلْقى مِنَ الحَجّاجِ، فَقالَ: اصْبِرُوا، فإنّه لا يَأْتي علَيْكُم زَمانٌ إلّا الذي بَعْدَهُ شَرٌّ منه، حتّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِن نَبِيِّكُمْ ﷺ (البخاري ٧٠٦٨ )
சிலர் அனஸ் றளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்கின்ற கவர்னரால் தங்களுக்கு ஏற்படும் துயரங்களை முறையிட்டனர். அதற்கு அவர்கள், "பொறுமை செய்யுங்கள்; ஏனென்றால் நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை நிச்சயமாக நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு காலத்தை விடவும் அதற்குப் பின்னால் வருகின்ற காலம் மோசமானதாக இருக்கும்" என்று கூறிவிட்டு, இதனை நான் உங்களுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து செவிமடுத்தேன் என்று கூறினார்கள். (புகாரி 7068)

சகுனம் என்பது பொய்யானது; இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது

குறிப்பிட்ட வகை மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பொருற்கள், செயல்கள் போன்றவற்றைக் காண்பதாலோ, அல்லது குறிப்பிட்ட வார்த்தைகள், ஓசைகள் போன்றவற்றைச் செவிமடுப்பதாலோ அல்லது குறிப்பிட்ட கால, நேரங்களாலோ ஏதும் ஆபத்து விளைந்துவிடலாம் என்று நினைப்பதும் அவை கெட்ட சகுனம் என்று கருதுவதும் இஸ்லாத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, காலத்தை, நேரத்தை சகுனமாகப் பார்ப்பதும் பாவமானதாகும். சகுனத்தை நம்பி விரும்பும் ஒரு விடயத்தைச் செய்யாமல் இருப்பதோ அல்லது செய்ய முற்படுவதோ பிழையானதாகும். இதன் மூலம் மனிதன் அல்லாஹ் அல்லாத ஒன்றுடன் தனது உள்ளத்தைத் தொடர்பு படுத்துகின்றான். அதேபோன்று சம்பந்தமில்லாத ஒன்றை வைத்து அல்லாஹ் தனக்கு ஆபத்து விளைவித்து விடுவான் என்று அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் கொள்கின்றான். அத்தோடு இந்தப் பண்பானது அல்லாஹ்வுக்கு இணைவைத்து வாழ்ந்த, வாழுகின்ற சமூகங்களின் ஒரு பண்பாகவும் இருக்கிறது. (பார்க்க: அல்குர்ஆன் 27:47, 36:18, 7:131, 4:78) அந்த வகையில் இது ஈமானில் உள்ள கோளாறுக்குரிய ஒரு அடையாளமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஜாஹிலிய்யஹ் மக்களிடத்தில் இந்தப் பண்பு அதிகமாகக் காணப்பட்டது. அவர்கள் ஒரு பயணம் மேற்கொள்ளும் பொழுது அல்லது ஏதாவது தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்படும்பொழுது பறவைகள், மான்கள் போன்றவற்றைத் துரத்தி விடுவார்கள். அவை வலப்பக்கமாகச் சென்றால் தாங்கள் விரும்பிய பயணத்தை அல்லது காரியத்தை தொடர்வார்கள். அவை இடப்பக்கமாகச் சென்றுவிட்டால் தாங்கள் விரும்பியதை நிறுத்திக் கொள்வார்கள்; பயணத்திலிருந்து திரும்பி விடுவார்கள். அல்லாஹ் சில விடயங்கள் நடப்பதற்கு வேறு சில விடயங்களைக் காரணங்களாக வைத்திருக்கிறான். அல்லாஹ் ஒரு விடயத்திற்குக் காரணமாக வைக்காத ஒன்றைக் காரணம் என்று கருதுவது ஒருவகை இணை வைத்தலாகும். சகுனமும் அந்த வகையில் தான் அடங்கும். இத்தகைய இணைவைத்தலுக்கு சிறிய இணைவைத்தல் என்று கூறப்படும். பெரிய இணைவைத்தலுடன் ஒப்பிடும் பொழுது இது மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாத சிறிய இணைவைத்தலாக இருந்தாலும் இது பெரும் பாவமாகும். எந்த வகையான இணைவைத்தலும் பெரும் பாவமாகும். அதே நேரத்தில் எந்தப் பொருளை ஒருவர் சகுனமாகக் கருதுகிறாரோ அந்தப் பொருளை அல்லாஹ் வைத்திருக்கக் கூடிய காரணம் என்று கருதாமல் - அதுவாகவே தானாகவே  நலவையோ கெடுதியையோ ஏற்படுத்தும் என்று நம்புவது பெரிய இணைவைத்தலாகும்.
عن عبد الله بن مسعود مرفوعا: «الطِّيرةُ شركٌ والطيرةُ شركٌ ثلاثًا». وما منا إلا، ولكن اللهَ يُذهبُه بالتوكلِ.  أبو داود (٣٩١٠) واللفظ له، والترمذي (١٦١٤)، وابن ماجه (٣٥٣٨)، وأحمد (٣٦٨٧). وصححه الألباني، والوادعي، وش الأرناؤوط.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், *"சகுனம் ஷிர்க் - இணை வைத்தலாகும்"* என்று மூன்று முறை கூறினார்கள். இதனை அறிவிக்கும் இப்னு மஸ்ஊத் றளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: எங்களில் எவருக்கும் இது போன்ற எண்ணம் உள்ளத்தில் ஊசலாடாமல் இருப்பதில்லை. ஆனால் அல்லாஹ் மீது தவக்குல் வைப்பதன் மூலமாக அதனை  அவன் இல்லாமல் செய்து விடுகிறான். [அபூதாவூத் 3910, திருமிதி 1614, இப்னு மாஜஹ் 3538, அஹமத் 3689]
عن عبد الله بن عمرو مرفوعا: مَن ردته الطِّيَرَة عن حاجته فقد أشرك، قالوا: فما كفارة ذلك؟ قال: أن تقول: اللهم لا خير إلا خيرك، ولا طَيْرَ إِلَّا طَيْرُكَ ولا إله غيرك. أحمد (٧٠٤٥) واللفظ له، والطبراني (١٤٦٢٢) وصححه الألباني، وحسنه شعيب الأرنؤوط. وعن فضالة بن عبيد مرفوعا: مَن ردَّتْه الطِّيَرةُ، فقد قارَفَ الشِّركَ. ابن وهب في الجامع (٦٥٦).
"யாரை சகுனம் ஒரு தேவையை விட்டும் தடுத்து விடுகிறதோ அவர் நிச்சயமாக இணைவைத்து விட்டார்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அதற்கான குற்றப்பரிகாரம் என்ன? என்று வினவினார்கள். அதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அத்தகையவர்களில் ஒருவர் பின்வருமாறு கூற வேண்டும்" என்று கூறினார்கள்: "அல்லாஹ்வே! உன்னுடைய நலவைத் தவிர நலவு கிடையாது. சகுனத்துக்குரிய பொருள் உனக்குச் சொந்தமானதே தவிர வேறில்லை (அதாவது அதனால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது). உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் கிடையாது." [அஹ்மத் 7045, தபறானி 14622]
[* அல்பானி, ஷுஜபுல் அர்ணாஊத் ஆகிய ஹதீஸ்களை ஆய்வாளர்கள் மேற்படி ஹதீஸ்களை ஆதாரபூர்வமானவை என உறுதி செய்துள்ளனர்.]


عن معاوية بن الحكم السلمي: قُلتُ: يا رَسولَ اللهِ، أُمُورًا كُنّا نَصْنَعُها في الجاهِلِيَّةِ، كُنّا نَأْتي الكُهّانَ، قالَ: فلا تَأْتُوا الكُهّانَ قالَ قُلتُ: كُنّا نَتَطَيَّرُ قالَ: ذاكَ شيءٌ يَجِدُهُ أحَدُكُمْ في نَفْسِهِ، فلا يَصُدَّنَّكُمْ. مسلم ٥٣٧
முஆவியஹ் இப்னுல் ஹகம் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: "நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நாம் ஜாஹிலிய்யஹ் காலத்தில் சில விடயங்களைச் செய்யக்கூடியவர்களாக இருந்தோம்; குறி பார்ப்பவர்களிடம் செல்வோம்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், *"குறிபார்ப்பவர்களிடம் செல்ல வேண்டாம்"* என்று கூறினார்கள். "நாம் சகுனம் பார்ப்பவர்களாக இருந்தோம்" என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: *"அது உங்களில் ஒருவர் (எந்த அடிப்படையும் இல்லாமல்) தனது உள்ளத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம்; அது உங்களை (எந்தக் காரியங்களில் இருந்தும்) தடுத்துவிட வேண்டாம்".* (முஸ்லிம் 537)

புதன் கிழமை கெட்ட சகுனமா?

புதன்கிழமை ஒரு மோசமான நாளா? ஒவ்வொரு மாதமும் இறுதிப் புதன்கிழமை கெட்ட நாளா? ஸஃபர் மாதத்தின் இறுதிப் புதன்கிழமை சகுனத்துக்குரிய நாளா? எமது சமூகத்தில் சிலரிடத்தில் இந்த கேள்விகளைக் கேட்டால் ஆம் என்று பதில் சொல்வார்கள். ஆனால் அல்குர்ஆனிலும் ஆதாரபூர்வமான ஸுன்னஹ்விலும் இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்தால் நிச்சயமாக இல்லை என்ற பதிலே உங்களுக்குக் கிடைக்கும். அப்படி என்றால் இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் சிலரிடத்தில் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? சமூகத்தில் பரவிக்கிடக்கும் மார்க்கம் காட்டித் தராத பல்வேறுபட்ட  பித்அத்கள் எனும் நூதனங்கள், மூடநம்பிக்கைகள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அறிவீனம், முன் வாழ்ந்த சமுதாயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், கலந்து வாழும் பிறசமூகங்களின் தாக்கம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அல்லது பலவீனமான ஹதீஸ்கள், மனோ இச்சையைப் பின்பற்றுதல், தங்கள் மூதாதையர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், மார்க்கத்தில் அளவு கடத்தல், மக்களைக் கவர்வதற்காக தகவல்களை உறுதிப்படுத்தாமலும் அறிவு பூர்வமாக அணுகாமலும் பிரச்சாரம் செய்யும் பிரச்சாரகர்கள் மற்றும் வழிகாட்டிகள் போன்ற பல காரணங்களால் மார்க்கத்தின் பெயரால் நூதனங்கள் உருவாகின்றன.

சிலர் புதன்கிழமையைக் கெட்ட சகுனத்துக்குரிய நாளாகக் கருதுவதற்குக் காரணமாக அமைந்த சில இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிகப் பலவீனமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. புதன்கிழமையின் சிறப்பு குறித்தும் சில ஹதீஸ்கள் வந்துள்ளன. சரியான ஆய்வுகளின் அடிப்படையில் அவையும் பலவீனமானவை என்ற கருத்தையே பலமானதாகக் கருதுகிறேன். ஆனால் அவை புதன்கிழமை மோசமான நாள் என்று சொல்லும் ஹதீஸ்களை விட பலமானவை என்பதில் சந்தேகமில்லை.
1- புதன்கிழமையில் அல்லாஹ் ஒளியைப் படைத்ததாக முஸ்லிமில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ். இருந்தாலும் இமாம் இப்னுல் மதீனி, இமாம் புகாரி போன்ற சில ஹதீஸ் கலை பேரறிஞர்கள் அதனைப் பலவீனமாகக் கருதுகின்றனர். 
2- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பிரார்த்தனை செய்த போது புதன்கிழமை அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முஸ்னது அஹ்மத் மற்றும் வேறு சிலகிரந்தங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ். இது கஸீர் இப்னு ஸைத் என்ற அறிவிப்பாளர் தனித்து அறிவிப்பதன் காரணமாக பலவீனமானது என்பதே சரியான கருத்து.
எனவே, இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிகப் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு புதன்கிழமையை மோசமான நாளாக் கருதுகிறவர்கள், பல அறிஞர்கள் பலமாகக் கருதும் மேற்படி இரு ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு அதனை நல்ல நாளாக் கருதுவது அல்லவா அறிவுடைமையாக இருக்கும்!
அதேபோன்று புதன்கிழமை இரவு இஷா தொழுகையில் கலந்து கொள்வதின் சிறப்பைப் பற்றிச் சொல்கின்ற ஒரு பலவீனமான செய்தியும், புதன்கிழமையிலே ஒரு மரத்தை நட்டுவதின் சிறப்பைப் பற்றிச் சொல்கிற ஒரு பொய்யர் அறிவிக்கின்ற செய்தியும் இருக்கின்றன. மேலும், புதன்கிழமையில் நோன்பு நோற்பதன் சிறப்பைக் குறிக்கக்கூடிய பல பலவீனமான ஹதீஸ்களும் இருக்கின்றன.

இப்போது புதன்கிழமை சகுனத்துக்குரிய நாள் என்று சொல்லும் செய்திகளைப் பார்ப்போம். 
 "... يوم الأربعاء يوم نحس مستمر ..."
1- "புதன்கிழமை தொடர்ச்சியான சகுனத்துக்குரிய நாள்" என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறியதாக *ஜாபிர் றளியல்லாஹு அன்ஹு அவர்கள்* கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு  ஹதீஸ். 
இதனை அறிவிக்கும் இப்றாஹீம் இப்னு அபீ ஹய்யஹ் என்பவருடைய ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதையும் இவர் மிகப் பலவீனமான அறிவிப்பாளர் என்பதையும் ஆரம்பகால ஹதீஸ் கலை பேரறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால்தான் இவருடைய இந்த செய்தியை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து அடையாளப்படுத்திய சில அறிஞர்கள் அவர்களுடைய அந்நூல்களில் பதிவு செய்துள்ளனர். பார்க்க:   
تنزيه الشريعة لابن عراق، تذكرة الموضوعات للفتني، الأسرار المرفوعة للملا علي قاري.

"... يوم الأربعاء يوم نحس مستمر ..."
2- "புதன்கிழமை தொடர்ச்சியான சகுனத்துக்குரிய நாள்" என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கூறியதாக *அலி றளியல்லாஹு அன்ஹு* அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு  ஹதீஸ்.
இமாம் இப்னு அதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், الكامل في ضعفاء الرجال என்ற பலவீனமான அறிவிப்பாளர்களை விமர்சிப்பதற்குரிய தன்னுடைய நூலில் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். அதன் அறிவிப்பாளர் வரிசை மிகப் பலவீனமானதாகும். அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டிருப்பதுடன் அதில் பலவீனமுள்ள அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். குறிப்பாக ஈஸா இப்னு அப்தில்லாஹ் இப்னு முஹம்மத் எனும் அறிவிப்பாளர் மிகப் பலவீனமானவராவார். இமாம் இப்னு அதீ அவர்களும் இமாம் தாறகுத்ணி அவர்களும் இவரை متروك الحديث என்று கடுமையான வார்த்தையால் விமர்சித்துள்ளனர். "இவர் தன்னுடைய தந்தை, மூதாதையர் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்திருக்கின்றார்; இவரை ஆதாரமாக எடுப்பது ஹலால் இல்லை" என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். "இவருடைய  ஹதீஸ்கள் எழுதப்படவே கூடாது" என்று இமாம் அபூ நுஐம் கூறியுள்ளார்.
இந்த ஹதீஸை இப்னு மர்தவைஹி அவர்களும் அறிவித்திருப்பதாக ஸுயூதி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளப்படுத்தும் اللآلئ المصنوعة எனும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் அறிவிப்பாளர் வரிசையும் மிகப் பலவீனமானதாகும். குறிப்பாக அதில் யஹ்யா  இப்னுல் அலா என்கின்ற ஒரு பொய்யர் இடம் பெறுகிறார். இந்த அறிவிப்பாளர் "றாஃபிளி, பொய்யன், மோசமானவன்" என்று இமாம் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் அவர்களால் விமர்சிக்கப்பட்டவர். மேலும், இவர் மூத்த ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

"... يوم نحس يوم الأربعاء ..." 
3- கெட்ட சகுனத்துக்குரிய நாள் புதன்கிழமை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக *ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா* அவர்கள் அறிவிப்பதாக இடம் பெறும் செய்தி. 
இதன் அறிவிப்பாளர் வரிசை மிகவும் பலவீனமானது. இதில் ஜாஃபர் இப்னு முஹம்மத் இப்னு மர்வான் என்ற ஒரு பலவீனமான அறிவிப்பாளரும் இப்றாஹீம் இப்னு ஹறாஸஹ் என்ற முற்கால பல ஹதீஸ் துறை வல்லுனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மிகப் பலவீனமான ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். இதனால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளப்படுத்துவதற்காகத் தொகுக்கப்பட்ட நூல்களில் ஒன்றான ஸுயூதி அவர்களின் اللآلئ المصنوعة  என்ற நூலில் இந்த ஹதீஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 سُئلَ النبيُّ ﷺ عن الأيامِ وسُئلَ عن يومِ الأربعاءِ قال: يومُ نحسٍ قالوا: وكيفَ ذاك يا رسولَ اللهِ قال أغرقَ اللهُ فرعونَ وقومَهُ وأهلكَ عادًا وثمودًا.
4- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் புதன்கிழமையைப் பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, "அது கெட்ட சகுனத்துக்குரிய நாள்" என்று அவர்கள் கூறியதாகவும், அதற்கு, அது எவ்வாறு? என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, "அல்லாஹ் பிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் மூழ்கடித்தான்; ஆத், சமூத் சமூகங்களை அழித்தான்" என்று அவர்கள் பதில் கூறியதாக *அனஸ் றளியல்லாஹு அன்ஹு* அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ் உள்ளது.
இந்த ஹதீஸை இப்னு மர்தவைஹி அவர்கள் தனது தப்ஸீரில் அறிவித்திருப்பதாக ஸுயூதி அவர்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளப்படுத்தும் اللآلئ المصنوعة எனும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் அறிவிப்பாளர் வரிசை பல அறிமுகமற்ற அறிவிப்பாளர்களைக் கொண்டு மிகப் பலவீனமானதாகும். குறிப்பாக இதில் இடம்பெறும் அபுல் அக்யல் என்பவர் இந்த ஹதீஸை இட்டுக்கட்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர் என்று ஸுயூதியவர்கள் அதே நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். இவரை ஒரு பொய்யர் என்று இவரின் காலத்தில் வாழ்ந்த, இவரைப் பார்த்த இமாம் ஜஃபர் அல் ஃபிர்யாபி அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

 "...آخر أربعاء من الشهر يوم نحس مستمر..."
5- மாதத்தின் இறுதிப் புதன் கிழமை தொடர்ச்சியான சகுனத்துக்குரிய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு செய்தி.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் மஸ்லமஹ் இப்னுஸ் ஸல்த் என்கின்ற அறிவிப்பாளரை மிக மோசமான பலவீனத்தைக் குறிக்கும் متروك الحديث என்ற வார்த்தையால் முற்கால ஹதீஸ் துறை வல்லுனர் அபூஹாதிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். 
இந்த செய்தியின் இன்னொரு  அறிவிப்பில் இது இப்னு அப்பாஸ் றளியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சொந்தக் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹஸன் இப்னு உபைதில்லாஹ் அல்-அப்ஸாரிالأبزاري என்ற ஒரு பொய்யர் இடம்பெற்றுள்ளார். அதேபோன்று அதில் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
எனவேதான் இந்த ஹதீஸையும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து அடையாளப்படுத்திய  அறிஞர்கள் தமது நூட்களில் பதிவு செய்துள்ளனர். பார்க்க:
الموضوعات لابن الجوزي، اللآلئ المصنوعة للسيوطي، تنزيه الشريعة لابن عراق، الفوائد المجموعة للشوكاني

"... ويومُ الأربعاءِ يومُ نحسٍ، قَرِيبِ الخُطَا، يَشِيبُ فِيهِ الولدانُ، وفيهِ أَرْسَلَ اللَّهُ الرِّيحَ عَلَى قومِ عَادٍ، وفيه وُلِدَ فرعونُ، وفيه ادَّعى الرُّبوبيَّةَ، وفيه أهلكَهُ اللَّهُ ..."
6- "சனிக்கிழமை சூழ்ச்சி மற்றும் துரோகத்திற்குரிய நாள்" என்று ஆரம்பித்து, *"புதன்கிழமை கெட்ட சகுனத்துக்குரிய நாள்... அதில்தான் அல்லாஹ் ஆத் சமூகத்தின் மீது காற்றை அனுப்பினான். அதில்தான் ஃபிர்அவ்ன் பிறந்தான். அதில்தான் அவன் தான் இறைவன் என்று வாதிட்டான். அதில்தான் அல்லாஹ் அவனை அழித்தான்"* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இடம் பெறும் ஒரு ஹதீஸ். இதில் ஒவ்வொரு நாளைப் பற்றியும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் அபூஹுறைறஹ் றளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஸி றஹிமஹுல்லாஹ் அவர்கள் இதனை தன்னுடைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து விமர்சிக்கும் நூலில் பதிவு செய்துவிட்டு, இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தி; இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர்களும் யாரென்று அறிமுகம் இல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இமாம் தஹபி அவர்கள் ميزان الاعتدال எனும் பலவீனமான அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும் தனது நூலில் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் யஹ்யா இப்னு அப்துல்லாஹ் என்ற அறிவிப்பாளரைக் குறித்து இவரிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு ஹாலித் எனும் அறிவிப்பாளர் நாட்களைப் பற்றிய பொய்யான ஒரு ஹதீஸை அறிவித்திருக்கிறார் என்று மேற்படி ஹதீஸ் பொய்யான ஹதீஸ் என்பதை உறுதி செய்துள்ளார்.
எனவே, புதன்கிழமை அல்லது ஒவ்வொரு மாதத்தினதும் இறுதிப் புதன்கிழமை அல்லது ஸஃபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமை கெட்ட சகனத்துக்குரிய நாள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரபூர்வமான நபி மொழியும் கிடையாது. அதேபோன்று முன் வாழ்ந்த சமுதாயங்கள் புதன் கிழமையில் அல்லது ஸஃபர் மாதத்தில் அழிக்கப்பட்டன என்பதற்கும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் கிடையாது.

ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் ஸகாவி அவர்கள், மனிதர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருக்கும் ஹதீஸ்களைத் தொகுத்து விமர்சிக்கும் المقاصد الحسنة என்ற தனது நூலில், புதன்கிழமை கெட்ட சகுனம் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதை எடுத்துரைத்துள்ளார்கள். அதே போன்று அதற்கு மாற்றமாக ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அந்த செய்தியில் "என்னைச் சார்ந்தவர்கள் பிரயாணத்தை ஆரம்பிப்பதற்கும் திருமணம் நடத்துவதற்கும் என்னைச் சார்ந்த சிறுவர்களை விருத்தசேதனம் செய்வதற்கும் எனக்கு மிக விருப்பமான நாள் புதன்கிழமையாகும் என்று அவர்கள் கூறியுள்ளதாக இடம் பெற்றுள்ளது. (ஹதீஸ் 1354)
ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த மற்றுமொரு அறிஞரான இப்னு தய்பஃ அஷ்ஷைபானி அவர்களும் மேற்படி நோக்கத்திற்காக எழுதிய تمييز الصحيح من الخبيث என்ற தனது நூலில், மேற்படி ஹதீஸ்கள் மிகவும் பலவீனமானவை என்பதையும் ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா அவர்களின் செய்தியையும் எடுத்துரைத்துள்ளார்கள். (பக் 128)
ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா அவர்களின் செய்தி சரியாக இருந்தால் ஜாஹிலிய்யஹ் காலத்திலும் மக்கள் புதன்கிழமையைக் கெட்ட சகுனமாகக் கருதி இருக்கிறார்கள். அதன் தாக்கத்தை தகர்த்தெறியும் விதத்திலேயே அவர்கள் அவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

புதன்கிழமையில் ஹிஜாமஹ் செய்யக்கூடாதா?

ஹிஜாமஹ் எனும் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை புதன்கிழமையில் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சில ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புகளில் புதன்கிழமை மாத்திரம் அல்லாமல்  சனிக்கிழமையும் இடம் பெற்றுள்ளது. வேறு சில அறிவிப்புகளில் வேறு நாட்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேற்படி அனைத்து அறிவிப்புகளும் மிகவும் பலவீனமானவையாகும். அவை பலவீனமானவை என்பதை முற்கால ஹதீஸ் கலை மாமேதைகள் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 

1. இப்னு உமர் றளியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ். அதில் புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஹிஜாமஹ் செய்வதைத் தவிர்க்குமாறும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஹிஜாமஹ் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், செவ்வாய்க் கிழமையில் தான் அல்லாஹ் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சோதனையில் இருந்து குணப்படுத்தியதாகவும் அவர்களுக்கு புதன்கிழமை சோதனையைக் கொடுத்ததாகவும் வெண்குஷ்டம், கருங்குஷ்டம் ஆகியவை புதன்கிழமை பகலிலும் அதன் இரவிலும் தான் வெளிப்படுவதாகவும் இடம்பெற்றுள்ளது. 
இதன் அறிவிப்பாளர் வரிசைகளில் பல்வேறு பலவீனங்கள் இருக்கின்றன. ஆரம்பகால ஹதீஸ் கலை மாமேதை இமாம் அபுஹாதிம் அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, "இந்த ஹதீஸ் எந்த ஒன்று(க்கு)ம் (பெறுமதி) இல்லை. இது நம்பகமானவர்களின் ஹதீஸ் அல்ல" என்று பதில் அளித்துள்ளார்கள். 
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஒரு அறிவிப்பாரைப் பற்றி இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடும் பொழுது, "இது போன்ற ஹதீஸ்களைப் புத்தகங்களில் குறிப்பிடுவது ஹலால் இல்லை. ஆனால், (விமர்சன நோக்கத்தில்) படிப்பினைக்காகக் குறிப்பிடலாம். ஏனெனில், இது இட்டுக் கட்டப்பட்டதாகும். இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸல்ல. யார் இது போன்ற ஹதீஸை அறிவிக்கிறாரோ அவர் அறிவிக்கும் அனைத்து ஹதீஸ்களும் கட்டாயமாகப் புறக்கணிக்கப்படவேண்டும். அவர் நம்பகமானவர்களுக்கு உடன்பாடாக சில அறிவிப்புகளில் அறிவித்திருந்தாலும் சரியே" என்று கூறுகிறார்கள்.

2. "யார் புதனில் அல்லது சனியில் ஹிஜாமஹ் செய்கிறாரோ அவருக்கு குஷ்டம் ஏற்பட்டால் அவர் தன்னைத் தவிர வேறு யாரையும் குறை சொல்ல வேண்டாம்" என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விசேடமாக அபூஹுறைறஹ் றளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில அறிவிப்புகளில் வேறு நபித் தோழர்களைத் தொட்டும் இதே போன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பலவீனமான அறிவிப்புக்களாகும்.
குறிப்பிட்ட நாளில் ஹிஜாமஹ் செய்வதைத் தடை செய்யக்கூடிய எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை என்பதை மாபெரும் ஹதீஸ் கலை இமாம்களான மாலிக், அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி, அஹ்மத், அபூ ஸுர்அஹ் அர்ராஸி, உகைலி போன்றவர்கள் கூறியுள்ளனர். அதேபோன்று அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்த இமாம்களான இப்னுல் ஜவ்ஸி, நவவி, இப்னு ஹஜர் போன்ற அறிஞர்களும் கூறியுள்ளனர்.
ஒரு சாதாரணமான பலவீனமான ஹதீஸ் பல வழிகளில் வருகின்ற பொழுது அதனை அறிஞர்கள் பலப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் மேற்படி ஹதீஸைப் பலப்படுத்த முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியாது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில், மேற்படி அறிவிப்புகள் கடுமையான பலவீனத்தையும் இஸ்லாமிய அகீதஹ்வுக்கு முரணான கருத்தையும் கொண்டுள்ளன. அதனால்தான் ஆரம்பகால மூத்த அறிஞர்கள் இவை அனைத்தும் பலவீனமான அறிவிப்புக்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். இது பொதுமக்களுக்கு எழுதப்படும் ஆக்கம் என்பதால் ஒவ்வொரு அறிவிப்புக்களிலும் இருக்கும் பலவீனங்களை மிக விரிவாக விளக்குவது வாசகர்களைச் சோர்வடையச் செய்யும் என்பதால் அதனைத் தவிர்த்துள்ளேன். புதன், சனி நாட்களில் ஹிஜாமஹ் செய்வதைத் தவிர்க்குமாறு வந்திருக்கும் ஹதீஸைப் பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு சில அறிஞர்கள் சாதாரண பலவீனமாகக் கருதி பல வழிகளில் அது வந்திருப்பதை வைத்து அதனைப்பலப்படுத்தியுள்ளனர். ஆனால் சரியான ஆய்வுகளின் அடிப்படையில் அவற்றில் இருக்கும் பலவீனங்கள் கடுமையானவையாகும். அதனால்தான் இமாம்களான இப்னுல் ஜவ்ஸி, தஹபி ஆகியோர் அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கருதுகின்றனர். இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸை மறுப்பதற்காகவே புதன் அல்லது சனி ஆகிய நாட்களிலேயே ஹிஜாமஹ் செய்து கொள்வார்கள். இமாம் அஹ்மத் அவர்கள் இந்த ஹதீஸைப் பலவீனமாகக் கருகினாலும் அவ்விரு நாட்களிலும் ஹிஜாமஹ் செய்வதை விரும்பவில்லை. ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸை ஆதாரபூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதற்கும் புதன்கிழமையைக் கெட்ட சகுனமாகக் கருதுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிகபட்சமாக குறிப்பிட்ட ஒரு சிகிச்சை குறிப்பிட்ட இரு நாட்களில் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று மாத்திரமே புரிந்துகொள்ளமுடியும்.

மூடநம்பிக்கைக்கு அல்குர்ஆனில் ஆதாரமா?

அல்லாஹ் கூறுகிறான்:
- ஆது சமுதாயத்தினர் பேரொலியுடன் வேகமாகச் சுழன்று வீசிய கடும் குளிர் காற்றால் அழிக்கப்பட்டனர். 
- அதனைத் தொடர்ச்சியாக ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள் மீது வீசச் செய்தான். அக்கூட்டத்தினர் வீழ்ந்து கிடக்கும் இற்றுப்போன பேரீச்சமர வேர்களைப் போல் அங்கு வீழ்ந்து கிடப்பதை நீர் காண்பீர்.
- அவர்களில் யாரேனும் எஞ்சியிருப்பதைக் காண்கிறீரா? (அல் குர்ஆன் 69:6-8)
- அவர்களை இவ்வுலக வாழ்வில் இழிவான வேதனையைச் சுவைக்கச் செய்வதற்காகத் *துயரமான நாட்களில்* கடும் சப்தத்துடன் கூடிய கடும் குளிர் புயல் காற்றை அவர்கள்மீது அனுப்பினோம். மறுமை வேதனையோ மிக இழிவானது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல் குர்ஆன்  41:16)
நீடித்த *துயரம் மிகுந்த ஒரு காலப்பகுதியில்* அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் கூடிய கடும் குளிர் புயல் காற்றை அனுப்பினோம். (அல் குர்ஆன் 54:19)

அல்லாஹ் படைத்த எந்த ஒரு நாளும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் துயரமான நாளாக இல்லை. எந்த ஒரு நாளிலும் சிலருக்கு நலவு நடக்கும் வேறு சிலருக்கு கெடுதி நடக்கும். ஒரு நாளில் ஒருவருக்கு கெடுதிகள் ஏற்படும் பொழுது அந்த நாள் அவருக்கு மோசமான நாளாக இருந்தது என்று நாம் சொல்லுவதில் தவறில்லை. அதே நேரம் அந்த நாளைக் குறை கூறும் நோக்கம் இருக்கக் கூடாது. 

ஆத் சமுதாயத்தை அல்லாஹ் அழித்தொழித்த நாட்களைப் பற்றி அல்குர்ஆனில் சொல்கின்ற பொழுது, அவை அவர்களுக்கு மோசமான நாட்களாக இருந்தன என்பதைச் சொல்கின்றான். இதை ஆதாரமாக வைத்து சிலர் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருக்கின்றன; அவர்கள் கெட்ட நாட்களில் அழிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடுகின்றனர். இவர்களின் வாதம் மிகத் தவறானதாகும். அந்த நாட்கள் ஆத் கூட்டத்திற்கு மட்டுமே மோசமான நாட்களாக இருந்தன. ஆனால் ஹூத் நபிக்கும் அவரை விசுவாசம் கொண்டவர்களுக்கும் எதிரிகள் அழிக்கப்பட்டதன் மூலம் அவை நல்ல நாட்களாக இருந்தன. இதனால்தான் தாபிஈன்களில் முக்கியமான தஃப்ஸீர் விரிவுரையாளர்களில் ஒருவரான கதாதஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்படி 41:16 ஆயத்தை விளக்கும் போது, அல்லாஹ் மீது சத்தியமாக அவை *அந்த சமுதாயத்திற்கு* துர்பாக்கியமான நாட்களாகவே இருந்தன என்றும் 54:19 ஆயத்தை விளக்கும் போது, துர்பாக்கியம் அவர்களுடன் நரகம் வரை தொடரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்கள். பார்க்க:
 الصحيح المبسور

இவ்வாறே ஒவ்வொரு கெட்ட கூட்டங்களும் அழிக்கப்பட்ட நாட்கள் நல்லவர்களுக்கு நல்ல நாட்களாக இருந்தன. அந்த நாட்கள் கெட்டவை என்பதற்காக அவர்கள் அழிக்கப்படவில்லை; அவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக அந்த நாட்களை அல்லாஹ் அவர்களுக்குத் துயரம் நிறைந்த நாட்களாக மாற்றி, நல்லவர்களுக்கு சந்தோஷமான நாட்களாக மாற்றினான். இதனால்தான் ஃபிர்அவ்ன் அழித்தொழிக்கப்பட்ட ஆஷூறாஃ தினத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள். 

சிலர் ஆத் சமுதாயம் அழித்தொழிக்கப்பட்டது ஒரு புதன்கிழமை என்றும் ஒவ்வொரு புதன்கிழமையும் மோசமான நாள் என்றும் வாதிடுகின்றனர். அவர்கள் எந்த நாளில் அழிக்கப்பட்டார்கள் என்று அல்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ நபித்தோழர்களின் ஆதாரபூர்வமான விளக்கங்களிலோ கிடையாது. சிலர் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டது ஷவ்வால் மாதத்தின் இறுதிப் புதனில் என்றும் வேறு சிலர் வெள்ளியில் என்றும் இன்னும் சிலர் ஞாயிறு காலையில் என்றும் கருத்துக்கள் கூறியுள்ளனர். பார்க்க:
 
 زاد المسير لابن الجوزي 
இக்கருத்துக்கள் ஆதாரமற்றவையாகும். இஸ்றாஈலிய்யாத் எனும் யூத, கிறிஸ்தவ நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். 
ஆத் சமுதாயம் ஒரு நாளில் அழித்தொழிக்கப்படவில்லை. அவர்கள் 8 பகல்களும் 7 இரவுகளும் தொடர்ச்சியாக கடும் சூறாவளியால் தண்டிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் தண்டிக்கப்பட்ட நாட்கள் எக்காலத்திலும் தொடச்சியாக அனைவருக்கும் கெட்ட நாட்களாக இருந்தால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் கெட்ட நாளாக இருக்க வேண்டும். 

இதனால் சிலர் அவர்களுக்கு தண்டனை ஆரம்பிக்கப்பட்டதும் முடிவடைந்ததும் புதன்கிழமையில் என்று கூறுகின்றனர். இவை எதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மேலும், அல்லாஹ் அல்குர்ஆனில் அவர்களை அழித்த வாரத்தின் ஒரு நாளை மாத்திரம் துயரமான நாள் என்று சொல்லவில்லை; 'அய்யாமின் நஹிஸாத்' துயரமான நாட்கள் என்றும் சொல்லியுள்ளான். எனவே, அல்குர்ஆன் தான் இவர்களின் மூட நம்பிக்கைக்கு ஆதாரம் என்று வாதிடுவார்களேயானால், ஆத் சமுதாயம் அழிக்கப்பட்ட அனைத்து வார நாட்களும் கெட்ட நாட்கள் என்றே சொல்ல வேண்டும். 

சில நாட்களை மோசமான நாட்களாகக் கருதுவது வேற்றுமதக் கலாச்சாரங்களில் இருந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊடுருவியதாகும் என்பதைப் பல அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பார்க்க:
 ابن عطية 8/146،  التحرير والتنوير لابن عاشور 27/192

புதன்கிழமை ஆத் சமுதாயம் தண்டிக்கப்பட்டதாகக் கூறி இந்த மூடநம்பிக்கையை நியாயப்படுத்தும் விதமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் இப்னு அப்பாஸ் றளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் மீதும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இப்னு அப்பாஸ் றளியல்லாஹு அன்ஹுமா அவர்கள், துன்பகரமான நாட்களில் ஆத் சமுதாயம் அழிக்கப்பட்டதைக் குறித்து விளக்கம் சொல்லும் பொழுது, அல்லாஹ் படைத்த நாட்களில் பாக்கியமுள்ள நாட்களும் துர்பாக்கியமான நாட்களும் இருப்பதாகவும் எந்த ஒரு மாதத்திலும் 7 துர்பாக்கியமான நாட்கள் இருப்பதாகவும் மாதத்தின் இறுதிப் புதன் கிழமை அந்த நாட்களில் ஒன்று என்றும் அதில் தான் ஆத், ஸமூத் சமுதாயங்கள் அழித்தொழிக்கப்பட்டதாகவும் விளக்கம் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஷாஃபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஹதீஸ் கலை அறிஞர் இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "இது இப்னு அப்பாஸ் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதாகும்; இதனை அறிவிப்பது ஹலால் இல்லை" என்று பதில் கூறியுள்ளார்கள். பார்க்க: 
 تذكرة الموضوعات للفتَّني ص797،  الفوائد المجموعة للشوكاني ص438

அல் குர்ஆனில் 41:16 இல் أيام نحسات *துயரமான நாட்களில்* காற்றை அனுப்பினோம் என்று குறிப்பிடப்பட்டதற்கு, 67:7 இல் தொடர்ச்சியாக *7 இரவுகளும் 8 பகல்களும்* அவர்கள் மீது காற்றை வீசச் செய்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது விளக்கமாக அமைந்துள்ளது. மேலும், 54:19 இல் يوم نحس  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் *துயரமான ஒரு நாளில்* காற்றை அனுப்பினோம் அல்லது *துயரமான ஒரு காலப்பகுதியில்* காற்றை அனுப்பினோம் என்பதாகும். 'யவ்ம்' என்பதற்கு ஒரு நாள் என்ற அர்த்தம் உள்ளதைப் போல ஒரு காலப்பகுதி என்ற அர்த்தமும் உள்ளது. முன்னுள்ள இரண்டு ஆயத்களிலும் இருந்து ஆத் கூட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்டிக்கப்பட்டனர் என்பது தெளிவு. இந்த ஆயத்தில் 'யவ்ம்' என்பது அந்த ஒரு வார காலப்பகுதியைக் குறிப்பதாக இருக்கலாம். அந்த அடிப்படையில் மூன்று ஆயத்களும் ஒரே விடயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தக் கருத்தை சில குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பார்க்க:
 تفسير الرازي، تفسير ابن عادل
அவ்வாறல்லாமல் 'யவ்ம்' என்பதற்கு ஒரு நாளில் என்று அர்த்தம் கொடுத்தால் அவர்களுக்கு தண்டனை அனுப்பப்பட்ட முதல் நாளை அது குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆத் சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்ட துயரமான நாட்கள் نحس - نحسات நஹிஸாத், நஹ்ஸ் ஆகிய வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அர்த்தம் துன்பம், துயரம், கெடுதி, கஷ்டம், துர்பாக்கியம் என்பவையாகும்.  நஹ்ஸ் என்பது سعد ஸஃத் என்ற அரபுச் சொல்லின் எதிர்க் கருத்துச் சொல்லாகும். அதன் அர்த்தம் பாக்கியம், சந்தோசம், இன்பம் என்பவையாகும். ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை எழுதப்பட்ட பல தஃப்ஸீர்களிலும் அகராதிகளிலும் இந்த விளக்கத்தைப் பார்க்க முடியும். உதாரணமாகப் பார்க்க: 
 مقاييس اللغة لابن فارس -ن ح س / س ع د-،  التحرير والتنوير لابن عاشور 
எனவே ஆத் சமூகத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட அந்நாட்கள் அவர்களுக்கு துர்பாக்கியமான, சோதனையான, கெடுதியான, துன்பகரமான நாட்களாக இருந்தன. 

சிலர் நஹ்ஸ் என்பதை மிடிமை என்று தமிழில் மொழிபெயர்க்கின்றனர். தமிழ் அகராதியில் மிடிமை என்பது வறுமை, துன்பம் என்பவற்றைக் குறிக்கும். இந்த அர்த்தத்தில் நஹ்ஸ் என்பதற்கு மிடிமை என்ற சொல்லைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை. 

இன்னும் சிலர் மேற்படி அல்குர்ஆன் வசனங்களை மொழிபெயர்க்கும் பொழுது துர்ச்சகுனமான நாட்கள் அல்லது அபசகுனமுடைய நாட்கள் என்று மொழிபெயர்க்கின்றனர். தமிழ் அகராதியில் இவ்விரு சொற்களின் அர்த்தம் "கெடுவது காட்டுங் குறி" என்பதாகும். இந்த மொழிபெயர்ப்புக்கள் சிலரை இஸ்லாம் தடை செய்த சகுனத்தை நம்புவதற்குத் தூண்டுவதாக இருக்கின்றன.

எனவே ஒரு நாள் கெட்ட நாளாக அமைவது கெடுதிக்கு உள்ளாகும் நபரைச் சார்ந்ததே தவிர அந்த நாளைக் கருத்தில் கொள்ளப்பட்ட விடயமல்ல. ஒரு நாளில் ஒருவருக்குச் சோதனைக்காகவோ தண்டனைக்காகவோ கெடுதிகள் ஏற்பட்டு, அது அவரின் துயரமான நாளாக மாறலாம். ஒருவனின் துர்பாக்கியத்திற்குக் காரணமாக அமைவது அவன் செய்யும் பாவங்களே தவிர நாட்களோ நேரங்களோ அல்ல. எந்த நாளைச் சிலர் மோசமான நாளாகக் கருதுகிறார்களோ அந்த நாளில் அதிகமானவர்களுக்குப் பல்வேறு நலவுகள் நடப்பதைப் பார்க்க முடியும். வரலாறும் இதற்குச் சான்றாக இருக்கின்றது. மேற்படி கருத்துக்களை மூடநம்பிக்கையை உடைத்தெறியும் விதமாக பல அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்படி ஆயத்களை விளக்கும் போது எடுத்துரைத்துள்ளார்கள்.


உதாரணமாக இப்னுல் கைய்யிம், இப்னுல் அறபி அல் மாலிகி, ஆலூசி, இப்னு ஆஷூர், அமீன் அஷ்ஷங்கீதி போன்றோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


ஸுன்னஹ் அகாடமி:
Sunnah Academy:

facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ

Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp


Previous Post Next Post