உஸ்மான் இப்னு அஃவ்ஃபான் (ரலியல்லாஹுஅன்ஹு) அவர்களின் உயிர்தியாகம்

-முகமது உவைஸ் மதனி


كيف نقرأ التاريخ ؟ 

இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை எவ்வாறு அணுக வேண்டும்?

முதலில் ஒரு அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்தில் அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆகிய இரண்டு மட்டும்தான் மூல ஆதாரமாகும்.

 வரலாறு என்பது மார்க்கத்தின் ஆதாரமாகாது . நீங்கள்  வரலாற்றை ஹதீஸ்களில் உள்ள நிபந்தனைகளுடன்‌ அணுகினால் அதிகமான வரலாறு இட்டுக்கட்டப்பட்டதாகவும் அதன் அறிவிப்பாளர்  தொடர் சரியில்லாததாகவும் ஏனைய வரலாறுகளில் அறிவிப்பாளர் தொடரே இல்லாததாகவும் காணப்படும்.   

ஒரு வரலாற்றை சாதாரணமாக படிப்பதால் அது எந்த ஒரு பாதிப்பையும் கடத்தாது 

ஆனால் ஒரு வரலாறு ஈமானுடைய விடயத்தில் ஒரு தாக்கத்தை அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னால் அந்த வரலாற்றின் ஆதாரத்தன்மயை அறிவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். 

சஹாபாக்கள் என்பவர்கள் ஈமானுடைய ஒரு அங்கமாவார்கள். ஸஹாபாக்களை எப்படி ஈமான் கொள்வது, சஹாபாக்களுடைய அந்தஸ்து என்ன? சஹாபாக்களின் கண்ணியம் என்ன? என்பதெல்லாம்  ஈமானை சார்ந்த விடயமாகும் எனவே சஹாபாக்களைப் பற்றி அல்குர்ஆனுக்கும்  அஸ்ஸுன்னாவுக்கும் எதிராக ஒரு வரலாற்று நிகழ்வோ அல்லது  அவர்களுடைய கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் ஒரு நிகழ்வோ அல்லது அவர்களை மிக மோசமானவர்களாக  சித்தரிக்கின்ற ஒரு நிகழ்வோ நம்மிடம்  வரலாற்று ரீதியாக வருமேயானால் 
அதனுடைய உண்மை தன்மையை அறிவது கட்டாயமாகும். மார்க்க ஆதாரமற்ற அந்த வரலாற்றை மார்க்க ஆதாரமான அல்குர்ஆன் மற்றும் சுன்னாவுடன் உரசி பார்ப்பதென்பது  தவறாகும்

யாருடைய வரலாற்று புத்தகங்களை படிப்பது ?

சில வரலாற்று புத்தகங்கள் இருக்கிறது அவை வார்த்தைகளால் மட்டும் அலங்கரிக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால் அவற்றில் சரியான வரலாற்றுச் செய்திகள் இருக்காது  

உதாரணமாக தாஹா உசேன் அவருடைய வரலாற்று புத்தகமாக இருக்கட்டும் அல்லது ஜுவைரிஜி  ஸெ(z)ய்தான் அவர்களுடைய வரலாற்று புத்தகமாக இருக்கட்டும் அல்லது காலித் முகம்மது ஹாலித் அவர்களுடைய புத்தகமாக இருக்கட்டும் 
இவைகள் எல்லாம் அலங்கார சொற்களால் அலங்கரிக்கப்பட்ட புத்தகங்களாகும். இந்த புத்தகங்களில் இடம் பெறும் செய்திகளின்  உண்மை தன்மையை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது 

அப்படி என்றால் யாருடைய புத்தகத்தை படிப்பது? 

உங்களால் அறிவிப்பாளர் தொடர் வரிசையை சரி காண முடியும் என்றால் இமாம் அத்தபரி உடைய புத்தகங்களை படிப்பது மிகச் சிறந்தது. அவ்வாறு அறிவிப்பாளர் தொடர் வழியாக சரி காணத் தெரியாதவராக இருந்தால் இமாம் இப்னு கஸீர் அவருடைய அல்பிதாயா வா அந்நிகாயா , இமாம் அத்தகபி அவர்களுடைய புத்தகம் தாரிகுல் இஸ்லாம்  மற்றும் அபூபக்கர் இப்னுல் அரபி அவர்களுடைய புத்தகம் அல்அவாசிம் மினல் கவாசிம் போன்ற புத்தகங்களை வாசிப்பது சிறந்தது.

வரலாற்று புத்தகங்களை முக்கியமாக ஸஹாபாக்கள் சம்பந்தமான வரலாறுகளை அணுகும்போது  இரண்டு விடையங்களை நம் எண்ணத்தில்  கொள்ளுதல் அவசியம் 

1. சஹாபாக்கள் அனைவரும் சிறந்தவர்கள். நபிமார்களுக்கு பின்னால் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலாவாலும்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலும் பாராட்டப்பட்ட சமுதாயமென்பதால் மனிதர்களிலே சிறந்தவர்கள் இந்த சஹாபாக்கள்

2.  நாம் அறிவோம் சஹாபாக்கள் அனைவரும் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்ல நபிமார்களை தவிர வேறு யாரும் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் கிடையாது.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்னுடைய இந்த சமுதாயம் வழிகேட்டின் மீது ஒருபோதும் ஒன்றுபடாதென்று. எனவேதான் ஸஹாபாக்களின் சமுதாயம் வழிகேட்டில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் 
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை ரீதியான ஸஹாபாக்களிடம் குறைகள் ஏற்படலாம் எனெனில் அவர்களும் மனிதர்கள்தான். நபிமார்களை போன்று அவர்கள் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்ல.

வரலாறு ரீதியான புத்தகத்தை படிக்கும் போது இமாம் அத்தபரி உடைய புத்தகம் மிகவும் சிறந்தது ஏனென்றால் இமாம் அத்தபரி அவர்கள் காலத்தால் அந்நிகழ்வுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இதைப்பற்றிய கல்வியில் சிறந்தவராகவும் இருந்தார்கள் அவருடைய வரலாற்று புத்தகத்தில் அறிவிப்பாளர் தொடரோடு நிகழ்வுகளை அறிவித்திருப்பார் . வரலாற்றில் அதிகமான உலமாக்கள் அவருடைய புத்தகங்களிலிருந்து தான் மேற்கோள் காட்டியுள்ளார்கள் அவர்களுள் அஹ்லுஸ் ஸுன்னாவின் உலமாக்களும், அஹ்லுல் பித்ஆவின் இம்மாகளும் அடங்குவர்.

இமாம் அத்தபரிவுடைய புத்தகத்தை படிக்கும் முன்பு அவருடைய வழிமுறை என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அவர் தனது புத்தகத்தின் முன்னுரையில் சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாக வரும் செய்தியினை மட்டும் ஏற்கவும் அதற்கு மாற்றாக வரும் செய்தியினை ஏற்க்க தேவையில்லை என்பதனை குறிப்பிட்டுள்ளார்கள்

இமாம் அத்தபரி அவருடைய புத்தகத்தில் இருப்பது அனைத்துமே சரி என்று வாதிடவில்லை 
எனவே இந்த இடத்தில் நாம் ஒரு  வரலாற்று நிகழ்வை படிக்கும்போது அதிலும் சஹாபாக்கள் உடைய வரலாற்றை படிக்கும் போது இமாம் இப்னு ஸீரின்(ரஹ்) கூறியதயைப் போன்று 
-'எங்களுக்கு மத்தியில் எப்போது குழப்பம்  ஏற்பட்டதோ  அப்போது இருந்து நாங்கள் இதை உங்களுக்கு அறிவித்தது யார்  என்று கேட்டு அறிந்து அதில் அஹ்லுஸ் ஸுன்னா/ சத்தியவாதிகளிடமிருந்து வந்தால்  எடுத்துக் கொள்வோம் அஹ்லுல்பித்ஆ/ வழிகேடர்களிடமிருந்து வந்ததாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' - என்ற வழிமுறையை கையாளுவதே பாதுகாப்பான வழிமுறையாகும்.

உஸ்மான் இப்னு அஃபான்ரலியல்லாஹு அன்ஹு அவர்களில் பாட்டனாரில் ஒருவர் அப்துல் மனாஃப் இந்த நபர் அலி ரலி அல்லாஹ் அவர்களுடைய பாட்டனாரில் ஒருவராகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனாரில் ஒருவராகவும் வரக்கூடியவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உறவினர்கள்.
உஸ்மான் இப்னு அஃபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள் அனைவரும் அறிந்ததே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு மகள்களையும் ருக்கையா, உம்மு குல்தூம் ஆகியோரை திருமணம் செய்தவர் மற்றும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர். பல சிறப்புகள் அவருக்கு இருக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் அறிவிப்பை மட்டும் , அதுவும் குறிப்பாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயிர் தியாகம் சம்பந்தமாக நபியவர்கள்  கூறிய முன்னறிவிப்பை நாம் இங்கே காணலாம். 

1. பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (ஆற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று கூறினார்கள். (புகாரி)

2. 3697. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன்மீது ஓர் இறைத்தூதரும் ஒரு “சித்தீக்'கும் இரு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்” என்று சொன்னார்கள். (இதைக் கூறியபோது) நபியவர்கள் தமது காலால் மலையை (ஓங்கி) அடித்தார்கள் என எண்ணுகிறேன்.61

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் உஸ்மான் இந்த ஆட்சியை அல்லாஹ் உனக்கு வழங்கி இருக்கிறான் ஒருநாள் நயவஞ்சகர்கள் இந்த ஆட்சியை உன்னிடமிருந்து கலைப்பதற்கு நாடுவார்கள் . அல்லாஹ் கொடுத்த இந்த ஆட்சியை நீ கொடுத்து விடாதே . (சுனன் இப்னுமாஜா)

4. அதேபோல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் அந்த பித்துனா உடைய நாளில் (உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு) நேர்வழியின் மீது இருப்பார்கள் என்று. (திர்மிதி)

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் மூன்று விடயங்களில் இருந்து வெற்றி பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்று விட்டார் என்று மூன்று முறை கூறினார்கள்: முதல் விடயம் என்னுடைய மரணம் இரண்டாவது அத்தஜ்ஜால் மூன்றாவது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு பொறுமையாளராக கொலை செய்யப்படுவது .  (அஹ்மத்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இடத்தில் தெளிவாகக் கூறுகிறார்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு பொறுமையாளராக இருந்து மரணிப்பார் என்பதாக இதை கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பொறுமையாளராக இருந்து மரணிப்பார்.

6. உஸ்மான்  ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் ஒரு உடன்படிக்கை செய்தார்கள் அந்த பித்துனா உடைய காலத்தில் நான் பொறுமையாக இருக்கும்படி. (அஹ்மத்)

இந்த விடயங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பக்குவப்படுத்தினார்கள் இந்த பித்துனா வரும் அந்த பித்துனா உடைய காலங்களில் நீ அவசரப்படாதே பொறுமையாக இரு பொறுமையோடு மரணத்தை சந்தி என்பதாக. அவர்களின் இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வளர்த்தார்களோ அதன் அடிப்படையிலே உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு தனது மரணத்தை சந்தித்தார்கள். 

இங்கு இரண்டு விஷயங்களை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

1. முதலாவதாக தனது ஆட்சியை அந்த முனாஃபிக்கீன்ளுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது.

2. அந்த பித்துனா உடைய சமயத்தில் பொறுமையாளராக இருந்து மரணித்து சந்திக்க வேண்டும் என்பதாக.

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அநியாயமாக கொலை செய்யப்படுவார் அந்த நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதின் அடிப்படையில் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு சத்தியத்தின் மீது இருப்பார்.

ஃபித்னாவின் ஆரம்பம் ஹிஜ்ரி 34

ஃபித்னாவின் காரணங்கள் : 

1 . முதன்மையான காரணம் அப்துல்லா இப்னு சபா என்ற யகுதி ஒரு முனாஃபிக் ஆவான். தன்னை முஸ்லிமாக காட்டிக் கொண்டு முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று ஆசை கொண்டவன் . அவன்  ஷியாக்களுடைய தலைவன் என்ற தகுதிக்கும் பின் நாட்களில் உயர்ந்தவன் . அவனும் அவனது சகாக்களும் இந்த ஃபித்னாவில் மிகவும் முக்கியமான  பங்காற்றியவர்கள் அவனுடைய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பெயர்கள். 

الغافقي بن حرب ،عبد الرحمن بن عديس البلوي، كنانة بن بشر ،سودان حمران ،عبد الله بن زيد بن ورقاء ، عمرو بن الحمق الخزاعي ،حرقوص بن زهير 

இமாம் அஃமஷ் ரஹீமஹுல்லாஹ்: அவர்கள் கூறினார்கள்: 

 ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீதும் ஜுபைர் இப்னு அவ்வாம் அவர்கள் மீதும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும்  உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் ஏகப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட கடிதங்கள் மற்றும் சிறு சிறு ஏடுகளை அப்துல்லாஹ் இப்னு சபாவாலும்  அவனுடைய உதவியாளர்கள் மூலமாகவும் புனையப்பட்டு எழுதப்பட்டது.

அக்கடிதங்கள் பல நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக குஃபா எகிப்து சிரியா போன்ற நாடுகளுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டது

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு எங்களை இவ்வாறு செய்துவிட்டார் அவருடைய ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்றெல்லாம் புனையப்பட்டு பரப்பப்பட்டது. 

(البداية و النهاية ஆதாரம்)

2. இரண்டாவது காரணம் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆட்சிக்குப் பின் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவருடைய ஆட்சியில் மிகவும் செழிப்பான ஆட்சியாக இருந்தது. 

இமாம் ஹசனுல் பஸரி கூறுகிறார்கள் : மக்களிடம்  கனிமத்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு  உங்களுடைய பங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய பங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கப்படும்

ஆதாரம் (تحقيق موافق الصحابة في الفتنة )

இந்த செல்வச் செழிப்பு மக்களில் பலருக்கும் அதிலும் அப்போது இஸ்லாத்தில் புதிதாக நுழைந்த மக்களுக்கும் இவை கோபமூடியது. அதன் காரணமாக  அவர்களும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சியில் குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

3. மூன்றாவது காரணம் 

ஆட்சி அதிகாரம் குரைஷிகளின் கைகளிலே நீடிப்பதால் அந்த ஆட்சி அதிகாரம் தமக்கு வர வேண்டும் என்று சில கூட்டங்கள் விரும்பியதும் ஒர் காரணமாகும் 

ஆதாரம்  (تحقيق موافق الصحابة في الفتنة )

4. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு உடைய இயல்பும் குணமும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இயல்பிற்கும்  குணத்திற்கும் வேறுபட்டது 

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அனைத்தையும் மன்னிக்கக் கூடியவராக இருந்தார்கள் உதரணமாக அபு தாஹிர் என்ற நபர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பின்னர்  திரும்பி இஸ்லாத்துக்குள் வந்த போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவரை கூட்டிச் சென்று அவர்களுங்காக பரிந்து பேசினார்கள் . 
 
எகிப்து சிரியா போன்ற நாடுகளில் வாழ்ந்த ஹவாரிஜிகள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு மீது  பல அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் சுமத்தினர். அவற்றுள் முக்கியமானவை 

1. உறவினர்களை பதவியில் அமர்த்தியது

2. குர்ஆனை எரித்தது

3. இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடித்தது

4. தனது ஆட்சியில் மதினாவின் எல்லையை விரிவுப்படுத்தியது 

5. மினாவில் பயணத்திலே தொழுகையை நான்கு ரக்காயத்தாக தொழுதது 

6. உஹது போர்க்களத்தில் பின்வாங்கி மிரண்டு ஓடியது 

7. பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது

8.பைய்யத்து ரித்வானில்  பங்கு கொள்ளாதது

இன்னும் சில குற்றச்சாட்டுகளை ஹவாரிஜ்கள் முன் வைத்தார்கள்.

 முதலாவதாக எகிப்தில் இருந்து ஒரு படை மதினாவுக்கு வந்த போது இந்த குற்றச்சாட்டுகளை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமே முன்வைத்தார்கள் 

இத்தனை விடயங்கள் இருந்தும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு கொலை செய்யப்பட்டது அந்த ஒரு கடிதத்திற்காக அல்லது அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காக என்று வாதிடுவது எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டாகும் 

மார்க்கம் என்பது ஆதாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டது  எனவே ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை நாம் வைப்பதென்றால் அதற்கான ஆதாரம் கண்டிப்பாக தேவை அதுவும் குறிப்பாக ஈமானுடைய விடயத்தில்

ஹிஜ்ரி 34 கூபாவில் இருந்தும், பசராவிலிருந்தும், மிஸ்ரிலிருந்தும், மதினாவை நோக்கி ஹஜ் செய்ய வந்தவர்களைப்  போல் அவர்கள் தங்களை காட்டிக் கொண்டார்கள். அவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கு அதிகமாக இருந்தது. மிஸ்ரிலிருந்து  2000, பேரும் கூஃபாவில் இருந்து 2000, பேரும் பசராவிலிருந்து 2000 பேரும், கிட்டத்தட்ட 600 நபர்கள் வந்திருந்தார்கள். 

ஆதாரம் حقبة من التاريخ 

அவர்கள் 6000க்கும் அதிகமான நபர்கள் இருந்தார்கள். ஆனால் மதினாவில் ஸஹாபாக்களோ மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருந்தார்கள். ஏனென்றால் அந்த காலகட்டம் ஹஜ் உடைய காலகட்டம் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) உட்பட அதிகமான ஸஹாபாக்கள் ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்கள். இன்னும் அதிகமான ஸஹாபாக்கள் போர்க்களத்தில் இருந்தார்கள். இன்னும் சில ஸஹாபாக்களும் பல்வேறு நாடுகளுக்கு சென்று இருந்தார்கள். எனவே அந்த நேரத்தில் மதினாவில் சஹாபாக்கள் உடைய எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது, ஆனால் வெளியில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  வெளியே இருந்து வந்த அந்நியர்கள் மதினாவில் இருந்தவர்கள் அவர்களை அறியவில்லை. 

ஆதாரம் حقبة من التاريخ 

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது இந்த ஹவாரிஜீன்கள் வைத்த குற்றச்சாட்டுகள் என்ன என்பதை பார்த்தோம். 

அதை இமாம் புகாரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவருடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். 

மிஸரிலிருந்து வந்தவர்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் வைத்தார்கள் என்பதை 

இமாம் புகாரி ரஹ் விவரிக்கிறார்கள் : 3699. உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எகிப்துவாசியான ஒரு மனிதர் வந்து, (கஅபா) இறையில்லத்தில் ஹஜ் செய்தார். அப்போது ஒரு கூட்டம் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷியர்” என்று கூறினர். அவர், “இவர்களில் முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர்.

உடனே அவர், (அங்கிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களை நோக்கி) “இப்னு உமர் அவர்களே! நான் உங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்லுங்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது (போர்க்களத்திலிருந்து) வெருண் டோடியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள். அவர், “உஸ்மான் அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், “அவர் ஹுதைபியாவில் நடந்த “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?”62 என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்ததைப் போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும் படி) “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லை யென்று) உமக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவம் சம்பந்தமாக அல்லாஹ் அவரது பிழையைப் பொறுத்து அவருக்கு மன்னிப்பளித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.63

பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா-ரலி) உஸ்மான் அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர்' போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைக் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.)

“பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;)

எனவேதான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டி னார்கள்.

பிறகு “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்' என (இப்னு உமர் (ரலி) அவர்கள்) கூறிவிட்டு, (உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீர் போகலாம்” என்று சொன்னார்கள்.

இதில் ஒரு அடிப்படை தெரிய வேண்டும் என்று உஸ்மான் (ரலி அல்லாஹ்) அவர்கள் மீது நிறைய முரண்பாடுகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத விஷயங்கள் நிறைய இருந்தன இது எல்லாம் தான் காரணமாக இருந்தது கொலை செய்யப்படுவதற்கு. 

இமாம் இபுனு அபிஷேஃபா அவர்கள் தனது முஸ்ஸன்னப் இப்னு அபிஷேஃபா 

அதிலே இந்த சம்பவத்தை சரியான அறிவிப்பாளர் தொடருடன் குறிப்பிடுகிறார்கள்.

 உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) மிஸ்ரிலிருந்து ஒரு குழு வந்திருப்பதாக கேள்விப்படுகிறார். அவர்களை வரவேற்கிறார். அவருடைய இடத்தில் மதீனாவிற்கு வெளியே இருந்தார்கள். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவரிடத்தில் வந்த போது ஸுறா யூனுஸை திறக்க சொல்லி அதில் வரக்கூடிய ஆயத்தை ஓதினார்கள்.

قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا  قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ‏
(நபியே!) நீர் கூறுவீராக!  “உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவு வகைகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும் சிலவற்றை ஆகுமானவையென்றும் நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள்” (இவ்வாறு செய்ய)  “அல்லாஹ்தான் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றானா, அல்லது அல்லாஹ்வின்மீது (பொய்யைக்) கற்பனை செய்கிறீர்களா?”  என்று நீர் கேட்பீராக!
(அல்குர்ஆன் : 10:59)

இந்த வசனம் வந்தபோது மிஸ்ர் வாசிகள் கேட்டார்கள், எல்லையை பற்றி, எல்லை விரிவாக்கியது பற்றி, தொடர்ந்து மற்ற குற்றச்சாட்டுகளையும் கேட்டார்கள். அனைத்திற்கும் பதில் சொன்ன பிறகு அவர்கள் புரிந்துகொண்டு மதினாவுக்கு வந்தார்கள். மதினாவில் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) மக்களுக்கு மத்தியில் அறிவுரை கூறினார்கள் :

மிஸ்ரிலிருந்து வந்த மக்கள் சிறந்த மக்கள் என்பதாக புகழாரம் சூட்டினார்கள்.

 எல்லாம் முடிந்த பின்பு அவர்கள்  திருப்தி கொண்ட நிலையிலே மிஸ்ரை நோக்கி திரும்பி சென்றார்கள். 

ஆதாரம்  مصنف ابن أبي شيبة 

முதல் முறை வந்து அவர்கள் திரும்பி சென்று விட்டார்கள். கொலை செய்யக்கூடிய அளவுக்கு அவர்கள் செல்லவில்லை.

இந்த இடத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், 

இதனால்தான் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முற்றிகை இட்ட போதும் கூட இந்த விஷயம் கொலை அளவுக்கு செல்லாது என்பதாக அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆதலால் தான் ஸஹாபாக்கள் அனைவரையும் யுத்தம் செய்ய வேண்டாம், வாள்களை ஏந்த வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள்.

இரண்டாவது முறையும் மிஸ்ரில் இருந்தும், கூபாவில் இருந்தும், பசராவிலிருந்து, அதிகமான மக்கள் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுவை) நோக்கி வந்தார்கள் இந்த முறையும் முன்பு நடந்தது போலவே நடந்து மறுபடியும் அவர்கள் பொருந்திய நிலையிலேயே மிஸ்ருக்கு திரும்பினார்கள்.

இந்தத் திரும்புகின்ற நேரத்தில்தான் ஒரு மனிதர் அவர்களை பின்தொடர்ந்து தன்னைத்தானே அவர்களுக்கு காட்டுவது போல அவர்கள் முன்னாடி செல்வதும் பின்பு மறைந்து கொள்வதும், திருப்பி அவர்களுக்கு காட்டிக் கொள்வதும் பின்னும் மறைந்து கொள்வதுமாக நடந்து கொண்டார். 

இந்த விஷயம் வேண்டுமென்றே செய்யப்பட்டது போன்று தெரிகிறது.

 உடனே அந்த குழு அவரைப் பிடித்து விசாரிக்கும் போது அவரிடம் ஒரு கடிதம் இருந்தது அந்த கடிதத்தில்  இவர்கள் மிஸ்ரை அடைந்தபோது இவர்களை கொலை செய்ய வேண்டும். இவருடைய கை, கால்களை, துண்டிக்க வேண்டும் என்பதாக இருந்ததது. உடனே இந்த கடிதத்தை கொண்டு அலி (ரலியல்லாஹு அன்ஹு) இடத்தில் வந்தார்கள்.

ஆதாரம்  مصنف ابن أبي شيبة 

ஹவாரிஜீன்கள் மிஸ்ரை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஒரு மனிதன் அவர்களை பின் தொடர்வதை அறிந்து, அவர்கள் அவரைத் தேடிப் பிடித்து பார்த்த போது ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதம் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) எழுதியதாக இருந்தது அந்த கடிதத்தை கொண்டு நேராக மதினாவிற்கு வந்தார்கள் மதீனாவிற்கு வந்து அலி (ரலியல்லாஹு அன்ஹுவை) சந்தித்தார்கள்.
அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அந்தக் குழு கேட்டது? 

நீங்கள் பார்க்கவில்லை அல்லாஹ்வுடைய எதிரியை. 
அவர் எங்களிடமே இப்படி செய்து விட்டார். அல்லாஹ் அவருடைய இரத்தத்தை ஹலால் ஆக்கிவிட்டான். எனவே நீங்கள் (அலி ரலியல்லாஹு அன்ஹு) எங்களுடன் எழுந்து வாருங்கள் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவரிடம் செல்வோம். 

அலி (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: 

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உங்களுடன் ஒருபோதும் வரமாட்டேன் என்று கூறி மதினாவில் இருந்து வெளியேறி, ஒரு ஊரை நோக்கி சென்றார். 
ஆதாரம் مصنف ابن أبي شيبة

இந்த இடத்தில் நமக்கு தெரிவது என்னவென்றால் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அந்த ஹவாரிஜின்களுடன் சென்று உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவரிடம் கேள்வி கேட்க்கவில்லை.

 மாறாக அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் செல்லாமல் தனியே விலகி மதினா விட்டு வெளியே சென்றார்.

ஏனென்றால் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவரின் முத்திரை மோதிரம் தொலைந்து விட்டது என்பது முன்பே ஏனைய சஹாபாக்களுக்கு தெரிந்த விடயம் தான். 

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவரின் கையில் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முத்திரை மோதிரம் தொலைதல்: 

இமாம் புகாரி அறிவிக்கிறார்கள்: 

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَاتَّخَذَ النَّاسُ مِثْلَهُ، فَلَمَّا رَآهُمْ قَدِ اتَّخَذُوهَا رَمَى بِهِ، وَقَالَ "" لاَ أَلْبَسُهُ أَبَدًا "". ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ الْفِضَّةِ. قَالَ ابْنُ عُمَرَ فَلَبِسَ الْخَاتَمَ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ ثُمَّ عُثْمَانُ، حَتَّى وَقَعَ مِنْ عُثْمَانَ فِي بِئْرِ أَرِيسَ.. 

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்

 'தங்கமோதிரம்' அல்லது 'வெள்ளி மோதிரம்' ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும்படி) வைத்தார்கள். 
அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று (இலச்சினை) பொறித்தார்கள். மக்களும் அதைத் தயாரித்து (அணிந்து) கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது தம் மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, 'நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்' என்றார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள். 
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டார்கள். பிறகு (அதை) உமர்(ரலி) அவர்களும், பிறகு உஸ்மான்(ரலி) அவர்களும் அணிந்தார்கள். இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களிடமிருந்து அது 'அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.

ஸஹீஹ் புகாரி : 5866. 

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மோதரம் தொலைந்து விட்டது என்று சஹாபாக்களுக்கு தெரிந்ததும் இது உன்னுடைய மோதிரம் தானே நீ தானே அதனை எழுதி இருப்பார் என்று சஹாபாக்கள் யாருமே சந்தேகம் கொள்ளவில்லை. எந்த ஒரு சஹாபியும் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) கொலையிற்கு  சாதகமாக இருக்கவில்லை. 

இமாம் ஹஸனுல் பசரி கூறுகிறார்கள்:

இமாம் ஹஸனுல் பசரி அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். 

அவர்களிடம் கேட்கப்பட்டது? உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) கொலைகளில் ஏதேனும் சஹாபாக்கள் பங்கு கொண்டார்களா? என்று வினவினார்கள்.

இல்லை முழுமையாக மிஸ்ர் வாசிகளே உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்தார்கள் இமாம் ஹஸனுல் பசரி கூறுகிறார்கள். 

ஆதாரம் تاريخ الخليفة

இந்த குழப்பத்திற்கு தலைவராக இருந்தவர்கள் 
• كنانة بن بشر 
• رمان بن اليماني
• شخص يقال له جبلة 
• سودان بن حمران 
• الموت الاسود 

இந்த பெயர்களை  முன்பு நீங்கள் பார்த்திருப்பீர்கள். அன்ஸாரிகள், சஹாபாக்கள் என அனைவருக்கும் தெரியும் அப்துல்லா இப்னு சபா என்ற யகூதி முன்பிருந்தே ஒவ்வொரு சஹாபியின் மீதும் இட்டுக்கட்டி பல கடிதங்களை, பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.  எனவே இதுவும் அவனுடையது  தான் என்று எண்ணினார்கள். 

இமாம் சஃபாரைனீ (الامام السفاريني)
கூறுகிறார்கள் :

யார் நேரடியாக உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்தார்கள் என்பதற்கு  கருத்து வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால் கொலை செய்தவனை யாரும் அறியவில்லை. வெளியே இருந்து வந்தவர்கள் அந்நியவர்களாக இருந்தார்கள். சஹாபாக்களுக்கு அறியப்படாதவர்களாகவும்  இருந்தார்கள்.

ஆனால் கொலை செய்தவர்கள் இன்னார் என்று சொல்லப்படுகிறது :
الأسود  التجيبي 
جبلة بن الايهم
سودان بن حمران 
رومان بن سرحان 

சில நேரங்களில் அவருடைய வண்ணங்களை வைத்தும், அடையாளம் காண்பிக்கப்பட்டது. ஏனென்றால் அனைவரும் அந்நியவர்களாக. 

ஆதாரம் لوامع الأنوار البهية

ஸஹாபாக்கள் அனைவரும் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை பாதுகாக்க சஹாபாக்கள் நாடினார்கள் ஆனால் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அதனை நிராகரித்து விட்டார்கள். 
இறுதியில் முற்றுகை மோசமான நிலையை அடைந்தபோது அப்துல்லா இப்னு ஸல்லாம் (ரலியல்லாஹு அன்ஹு),  உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவரிடத்தில் ஆலோசனை செய்கிறார்கள், என்ன செய்வது! என்பதாக உஸ்மான்  (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் போரை தடுத்துக் கொள்ளுங்கள் தடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். 

ஆதாரம் مصنف ابن أبي شيبة

البخاري - التاريخ الكبير

حارثة بْن النعمان الْأَنْصَارِيّ،
قَالَ مُوسَى بْن إِسْمَاعِيل عَنْ حماد عَنْ ثابت عَنْ عَبْد اللَّه بْن رباح أن حارثة قَالَ لعثمان وهو محصور: إن شئت 
أن نقاتل دونك.

ஹாரிஸா இப்னு நுஃமான் அல்லாஹ்  அன்ஹு உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தில் நீங்கள் விரும்பினால் உங்களுக்காக நாங்கள் போர் செய்கிறோம் என்றார்கள் .

அதேபோன்று முகிரா இப்னு ஸுஃபா (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நிச்சயமாக உங்களுடன் ஒரு கூட்டம் இருக்கிறது. பலமும் இருக்கிறது. நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கிறீர்கள். அவர்கள் அசத்தியத்தின் மீது இருக்கிறார்கள். எனவே இதைக் கொண்டு போர் செய்யலாம். என்பதாக அறிவுரை கூறினார்கள்.

 உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பிறகு ரத்தத்தை ஓட்டுகின்றவர்களின் முதலானவர்களாக நான் சேர விரும்பவில்லை என்றார்கள். 

ஆதாரம் احمد و الخطيب البغدادي
تاريخ البغدادي

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் :  அமீருல் முஃமினின் அவர்களே! நீங்கள் அவர்களுடன் போர் செய்யுங்கள் அல்லாஹ் நிச்சயமாக அவர்களுடன் போர் செய்வதை ஹலால் ஆக்கி விட்டான். என்பதாக, அதற்கு உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் :

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களுடன் ஒருபோதும் போர் செய்ய மாட்டேன்.

ஆதாரம் ابن سعد و ابن عساكر و تاريخ الدمشق 

ஸைத் இப்னு ஸாபித்  (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், உன்னுடைய வாசலில் இருக்கக்கூடிய இந்த   ஸஹாபாக்கள் உங்களுக்கு உதவியாளர்கள். நீங்கள் விரும்பினால் நாங்கள் இரு முறை அல்லாஹ்வுடைய உதவியாளர்களாக மாறுகிறோம் என்றார். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) இதன்பால் எனக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக பதிலளித்தார். 

ஆதாரம் خليفة عن قتادة في الحاشية

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அலி ரதியல்லாஹு அன்ஹு உதவி செய்து கொண்டிருந்தார்கள். மிஸ்ர் மற்றும் கூபாவில் இருந்து ஹவாரிஜின்கள் வந்த சமயத்தில் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திரும்பி செல்ல வைத்தார்கள். அதேபோல் அலி (ரலியல்லாஹு அன்ஹு) உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். நாங்கள் கண்டிப்பாக உதவி செய்வோம். அவர்களை உங்களிடமிருந்து  தடுத்துக் கொள்வோம்.  என்பதாக, ஆனால் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அனைத்தையும் மறுத்து  விட்டார்கள். அவருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு அலி ரலியல்லாஹு அன்ஹு நடந்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர் ஹலிஃபா அவர்களுக்கு கீழ்படிந்து இருந்தார்கள். இருந்தபோதிலும் இந்த அநியாயக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்தார்கள். முற்றுகையிட்டபோது அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதையும் தடுத்துவிட்டார்கள். அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அந்த நேரத்தில் தண்ணீர் கொடுத்து உதவினார்கள். 

ஆதாரம் ابن عساكر و تاريخ الدمشق

அவர்கள் தனது இரு மகன்களையும் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பாதுகாப்புக்காக அனுப்பினார்கள். 

இது போன்றே ஏனைய ஸஹாபாக்களும் தனது மகன்களை அனுப்பி வைத்தார்கள். 

ஸஹாபாக்கள் அனைவரும் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார்கள் போராடினார்கள். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வீட்டில் 700க்கும் மேற்பட்ட ஸஹாபாக்களுடைய புதல்வர்கள் இருந்தார்கள். காரணம் அந்த அநியாயக்காரர்கள் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக. 

அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள் :  நாங்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவருடன், அவருடைய வீட்டில் இருந்தோம். அனைவரும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஏனென்றால் அவர் கலீபா. அவரின் கட்டளைகளிற்கு கீழ்படிய வேண்டும். அவர் எங்களை வாழ் ஏந்துவதைவிட்டும்  தடுத்துவிட்டார். 

مصنف ابن أبي شيبة 

இவ்வளவு விஷயங்களையும் ஸஹாபாக்கள் செய்தார்கள்.

ஆனால் எந்த சஹாபியும், குறிப்பாக அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும், எந்த உதவியும் செய்யவில்லை. உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) கொலைக்கு சாதகமாக தான் இருந்தார்கள் என்று கூறுவது என்பது ஸஹாபாக்கள் மீது இவர்கள் இட்டுகட்டுகிற அவதூறாகும். 

ஸஹாபாக்கள், ஈமானை சார்ந்தவர்கள். அவர்களையும் நாம்  எவ்வாறு ஈமான் கொள்ள வேண்டும் என்பது தான் பாடம். 
குர்ஆன் ஸுன்னா  மட்டும்தான் ஆதாரம் என்று சொல்லிக்கொண்டு குர்ஆன் ஸுன்னா  அல்லாத வரலாற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்கள். 

ஈமானுடைய விஷயத்திலும், ஸஹாபாக்களுடைய விஷயத்திலும் அவதூறு என்னும் சேற்றை அள்ளி வீசுகிறார்கள். 

இப்படிப்பட்ட மக்களிடம் இருந்து அல்லாஹ் அனைவரையும்  பாதுகாக்க வேண்டும்.


சஹாபாக்கள் உடனிருந்தும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் ?

அதற்க்கு சில காரணங்களை குறிப்பிடலாம். 

1 : முதலாவது காரணம் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு சஹாபாக்கள் அனைவரையும் போர் செய்ய வேண்டாம் என்று தடுத்தார்கள் . உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கட்டுப்பட்டு யாரும் வாள் ஏந்தவில்லை. வாள் ஏந்தாதவரே  சிறந்தவர் என்று  உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு  கூறினார்கள். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது . ஒன்று உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்  வீரம்/ துணிவு மற்றொன்று அவர் உம்மத்தின் மீது வைத்திருந்த ரஹமத் /இரக்கம்.
அதிகமான உயிர் சேதம் குழப்பங்கள் ,பெருள் சேதம் போன்றவற்றை தவிர்க்கவும் அந்த முடிவை எடுத்தார்கள் 

2: இரண்டாவது காரணம் 

அந்த காலத்தில் சஹாபாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது ஏனென்றால் சில சஹாபாக்கள் ஹஜ்ஜுக்கு சென்று இருந்தார்கள் சிலர் வேறு இடங்களில் சென்று தங்கி இருந்தார்கள் சிலர் போர்க்களத்தில் இருந்தார்கள். மேலும் மதினாவில் போதுமான எண்ணிக்கை அவர்களிடம் இருக்கவில்லை. 

3: இந்நிலமையிலும் சஹாபாக்கள் அனைவரும் தனது புதல்வர்களை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹுவை பாதுகாக்க அனுப்பி வைத்தார்கள் கிட்டத்தட்ட 700 சஹாபாக்கள் உடைய புதல்வர்கள் அங்கே ஒன்று கூடியிருந்தார்கள். அப்படி இருந்த சமயத்தில் கூட உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு போர் செய்ய வேண்டாம் என்று அவர்களை தடுத்தார்கள் . மேலும் இந்த விஷயம் கொலை அளவுக்கு சென்று விடும் என்பதாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு எண்ணவுமில்லை. 

4: உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு மதினாவின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஒரு  செடியோ அல்லது மரமோ அதிலிருந்து அகற்றப்படக்கூடாது என்று எண்ணினார்கள். 

(ஆதாரம் حقبة من التاريخ )

யார் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவரை கொலை செய்தது?

அந்த நாள் ஜும்மா உடைய நாள். ‌உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு தன்னுடனிருந்த  சஹாபாக்கள் அனைவரையும் வெளியேற சொன்னார்கள். அவர்களிடம் நீங்கள் வீட்டிலிருந்து வெளியேறி விடுங்கள் என்னை தனிமையில் விட்டு விடுங்கள் இது எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ளது என்று கூறினார்கள். அப்பொழுது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவருடன் யாரும் இருக்கவில்லை.

இருந்தும் கூட சஹாபாக்கள் வெளியில் காவல் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவருடைய வீட்டில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். மேலும் நோன்பாளியாக இருந்தார்கள்

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு கதவை திறந்து முற்றுகையாளர்களுக்கும் அவருக்கும் மத்தியில் குர்ஆனை வைத்து இது உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாம் என்று அழைத்தார்கள். ஒரு மனிதர் உள்ளே நுழைந்து  தனது வாளை உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹுவை நோக்கி உயர்த்த, அவர் அதனை தனது கையால் தடுக்க முயற்ச்சிக்க , வஹி எழுதிய அன்னாரின் விரல்கள் துண்டாகின.

அம்ரா அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் சென்று இருந்தோம் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு கொலை செய்யப்பட்ட அந்த வருடத்தில் மக்காவை நோக்கி நாங்கள் மதினாவை வந்து அடைந்தபோது நாங்கள் பார்த்தோம் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு கொலை செய்யப்படும்போது அவர் கையில் இருந்த அந்த இறை வேதத்தை அவருடைய அறையில் இருந்தது அதில் இந்த வசனத்தின் மீது அவருடைய இரத்தம் சிதறி  விழுந்திருந்தது. 

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌  فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
ஆகவே, (விசுவாசங்கொண்டோரே) நீங்கள் எதை விசுவாசங்கொண்டீர்களோ, அது போன்றதை அவர்களும் விசுவாசங்கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர்வழியை அடைந்து விடுவார்கள்.  இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்)  அல்லாஹ் போதுமானவன்,  மேலும், அவன் (அவர்களின் சூழ்ச்சியான சொற்களைச்) செவியேற்கிறவன்; (அவர்களின் வஞ்சங்களை) மிக்க அறிகிறவன்.
(அல்குர்ஆன் : 2:137)

ஆதாரம் إسناد صحيح خليفة بن خياط

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவருடைய வீட்டில் ஏறி உள்ளே குதித்தவர் முஹம்மது இப்னு அபிபக்கர் மற்றும் சில நபர்கள் இல்லை என்பதும் அவ்வாறு  வரக்கூடிய செய்தி பலகீனமானது அதனுடைய அறிவிப்பாளர் தொடர் சரியானது அல்ல என்பதையும் நம்மால் அவதானிக்க முடிகின்றது 

இதிலிருந்து நாம் அறியவருவது என்னவென்றால்  உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் அந்த கோட்டையின் கதவை திறந்தார்கள் ஏனென்றால் அவர்களை முற்றுகை இட்டப்பட்டது பெரிய வீட்டைதான் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு தங்கி இருந்த அந்த கோட்டை சிறிய வீடு அல்ல ஒரு கோட்டை அளவு பெரியது

சில அறிவிப்புகளில் அது القصر கோட்டை என்றே வர்ணிக்கப்படுகிறது . மதினாவில் இருந்து கிழக்கு திசையில் அமைந்திருந்தது . பக்கியிலிருந்து இடது பக்கம் அமைந்திருந்தது. அது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறிய வீடு அல்ல மாறாக அது கோட்டை

 உஸ்மான் ரலியல்லாஹு கோட்டையின் உள்புறம் இருந்து ஒரு ஓட்டை வழியாக எட்டிப் பார்த்தார் என்பதாக. அந்த கோட்டை மிகவும் உயரமானது.  ஒன்பது நபர் நின்றால் எவ்ளோ உயரம்  இருக்குமோ அவ்வளவு  உயரமானது. கோட்டையின் உள்புரம் இருந்து உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அந்த முற்றுகையிட்ட நபர்களுடைய பேச்சைக் செவிமெடுத்துக் கொண்டிருந்தார்கள்

ஆதாரம் ابن سعد و الطبقات و تاريخ الدمشق

சஹாபாக்கள் மீது அவதூறு சொல்ல வேண்டும் என்பதாக நினைத்து ஒரு தாபியீனான முஹம்மது இப்னு அபூபக்கர் அவரே உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு கொலைக்கு காரணம் என்று கூறி ,அந்த முஹம்மது இப்னு அபீ பக்கர் என்பவர் அலி ரலியல்லாஹு அன்ஹு மடியில் வளர்ந்தார் அதனால் அலி ரலியல்லாஹு அன்ஹுவும் இதற்கு உடந்தை என்றும் அலி ரலியல்லாஹு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பதாக கூறி சஹாபாக்கள் மீது ஆதாரமற்ற செய்தியை வைத்து ஒரு கோர முகத்தை காட்ட சிலர் விரும்புகிறார்கள். 

 சஹாபாக்கள் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாக நம் அனைவரும் மரணிக்கும்  பாக்கியத்தைநம்  அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக.... ஆமீன்
أحدث أقدم