சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

தொகுப்பு :- அஷ்ஷெய்க் மவ்லவி N.M.அஹ்ஸன்(இன்ஆமி) (கிழக்கு மாகாணம், இலங்கை)

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ். எமது சமுதாயத்தில் எத்தனையோ பாவங்கள் நடந்தேறிக் கொண்டிருந்தாலும் அதிலும் குறிப்பாக சொல்வதாக இருந்தால் சீதனம் என்று சொல்லக்கூடிய ஒரு பெரும் பாவம் இன்று தலை தூக்கி இருக்கின்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சொல்வதாக இருந்தால் சொல்லி முடிக்க இயலாத அளவுக்கு பெரும் பாதிப்புக்கு ஏழை மக்களாக இருக்கலாம் நடுத்தர மக்களாக இருக்கலாம் அனைவரும் இந்த வலையில் சிக்கித் தவிக்கின்றார்கள்.

இருப்பினும் நல்லுணர்வு கொண்டோர்களுக்கு ஓரிரு எடுத்துக்காட்டுகளே போதுமானதாகும் என்ற எண்ணத்தில் சீதனம் பற்றிய ஒரு சில விஷயங்களை கூறலாம் என நினைக்கின்றேன்.

இதை படிக்கும் அனைவருக்கும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்ல விஷயங்களை கொண்டு நடக்கும் பாக்கியத்தையும், வரதட்சணை எனும் கொடுமையை முழுமையாக ஒழிக்கும் பாக்கியத்தையும் ஏக வல்ல நாயன் அருள் புரிவானாக....

சீதனம் பற்றி கூறுவதற்கு முன் மஹர் என்றால் என்ன? மஹருடைய சட்டம் என்ன? என்பவற்றை கூறுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌   
நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமணக்கொடைகளை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்,
(அல்குர்ஆன் : 4:4)

மேற்குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹ் மகரை பற்றி கூறக்கூடியதை பார்க்க முடியும்.  இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை எடுத்துப் பார்ப்போம் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு மஹரை கொடுத்து திருமணம் முடித்து இருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல அவர்களுடைய பெண் மக்களுக்கு மஹரை பெற்றே திருமணம் முடித்தும் வைத்தும் இருக்கின்றார்கள்.

மேலே குறிப்பிட்ட இறை வசனமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையும் நமக்கு எதை கற்பிக்கின்றது என்றால் ஒரு பெண்ணை தன் வாழ்க்கை துணைவியாக கரம் பிடிக்கும் ஆண் அப்பெண்ணுக்குரிய அப்பெண்ணினால் நிர்ணயம் செய்யப்பட்ட "மஹரை" கொடுத்து மணமுடிப்பதே இஸ்லாமிய மரபு என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – மணக் கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

இந்த மஹர் பணமாகவும், பொருளாகவும் இருக்கலாம். சில நபித்தோழர்கள் தோட்டத்தை, தங்கத்தைக் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். மணப்பெண் எதை ஏற்றுக் கொள்கின்றாளோ அதுவும் மஹராக அமையலாம்.

அபூதல்ஹா(வ) உம்மு சுலைம்(வ); அவர்களைத் திருமணம் செய்ய விரும்பிய போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அதையே மஹராக ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறே குர்ஆனின் சூறாக்களைக் கற்றுக் கொடுத்து அதையே மஹராக நபி(ச) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மஹர் என்பது பெண் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.

ஒருவர் மணமுடித்து அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பிரிய நினைத்தால் எவ்வளவுதான் மணக்கொடை கொடுத்திருந்தாலும் அதை மீளப் பெற முடியாது.

“ஒரு மனைவியின் இடத்தில் வேறொரு மனைவியை (விவாகரத்தின் மூலம்) மாற்றிக்கொள்ள நீங்கள் நாடினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு செல்வக் குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அநியாயமாகவும் பகிரங்கமான குற்றமாகவும் அதை நீங்கள் பறித்துக் கொள்வீர்களா?”

அவர்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்து, நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் அனுபவித்திருக்கும் நிலையில் அதை எப்படி நீங்கள் எடுக்க முடியும்?” (4:20,21)

ஒரு பெண் தனது கணவரை வேண்டாம் என்று கூறினால் அவர் கொடுத்த மணக் கொடையை மீளக் கையளிக்க வேண்டும்.

திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட முன்னர் ‘தலாக்’ – விவாகரத்து நடந்தால் குறித்த மஹரில் அரைவாசியை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும். இதில் பெண் தரப்பு தனது பகுதியை விட்டுக் கொடுப்பதோ அல்லது மாப்பிள்ளை தனது மீதி 50¤ ஐ விட்டுக் கொடுத்து பேசிய படி முழு மஹரைக் கொடுப்பதோ அவரவர் நல்ல சுபாவத்தைப் பொருத்ததாகும்.

“நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டு வதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.” (2:237)

இஸ்லாம் விதித்த இந்த மஹர் தொடர்பான சட்டம் பெண்ணினத்திற்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளில் ஒன்றாகும். இதை மீறுவறு குற்றமாகும். இதை மீறி பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது ஆண் இனத்திற்கே அவமானமாகும்!

வரதட்சணை தோன்றிய வரலாறு:

சீதனம் எனும் கொடுமை இந்த சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்து விட்டதற்கு காரணம் பெண்களைப் ஈன்றெடுத்த பெற்றோர்களே...! 

ஆம்! ஒரு காலத்தில் சீதனம் என்ற வார்த்தையை தெரியாமல் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது பணம் படைத்த சிலர் தங்களது கௌரவத்தை வெளிக்காட்டுவதற்காக, புகுந்த வீட்டிலே தன் மகள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவளை துணைவியாக ஏற்றுக் கொள்ளும் மணமகன் அவள் மீது அதிக பிரியம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது அவளுக்குத் தேவையான, அவள் கணவனுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். 

ஒருவரைப் பார்த்து மற்றவர், மற்றவரை பார்த்து அடுத்தவர் என்ற இந்த பழக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் மக்களுக்கு மத்தியில் பரவ ஆரம்பித்தது. அது மாத்திரமின்றி தன் மகள் கண்ணியமானவன், கௌரவமானவள், என் மகள் அடுத்தவனின் வீட்டில் போய் இருப்பதா என்ற கருவம் மேலோங்கி தன் பிள்ளைகளுக்கு தேவையான வீடுகளை கட்டிக் கொடுத்தார்கள். தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தார்கள். எவ்வளவு பெரிய கௌரவமான ஒரு ஆணாக இருந்தாலும் அவன் தான் கட்டி கொடுத்த, தன் மகளின் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்ற தற்பெருமை படைத்தவர்களாக பெற்றோர்கள் மாத்தி விட்டார்கள்.  இதன் விபரீதம், முதுகெலும்பில்லாத ஆணவர்களும் இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

 நாளடைவில் தன் மகள் கணவனின் வீட்டில் போய் இருப்பதை கேவலமாக கருதும் அளவுக்கு மக்கள் மாற்றப்பட்டு விட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே... 

பணம் படைத்தவர்கள் செய்வதை பார்த்து ஏழைகளும், பின்னால் ஏற்படப் போகும் விபரீதத்தை உணராமல், இதனால் இந்த மனித சமுதாயமே இன்னலடைய போகிறது என்பதை உணராமல் தங்களால் முடிந்ததை தங்களுடைய மகளுக்கு கொடுத்து அனுப்பும் பழக்கத்தில் விழுந்தனர். இது நாளடைவில் படித்தவர்கள், படிக்காதவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள் என்ற பாரபட்சம் இன்றி நிர்பந்தமான வழக்கமாகவும் அவ்வாறு கொடுத்த அனுப்பாதவர்கள் கேவலம் கெட்டவர்களாகவும், கஞ்சத்தனம் உடையவர்களாகவும் மக்களால் கருதப்பட்டனர். இந்த மனநிலை வலுவடைந்து நாளடைவில் மணமகனின் குடும்பத்தார்களே நேரடியாகப் பெண் வீட்டிலும் கேட்க ஆரம்பித்தனர். இவ்வாறு வலுவடைந்த பழக்கம் இன்று சீதனமாக உருவெடுத்து திருமணத்திற்கு முன்பாகவே மணமகனின் தகுதியை வைத்து பேரம் பேசப்படும் அவல நிலைக்கு இந்த சமுதாயத்தை இழுத்து வந்து விட்டது.


சீதனம் என்றால் என்ன? அன்பளிப்பாக விரும்பி கொடுத்தால் சீதனம் ஆகாதா?

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ ‌‏
(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் (-அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்,  மேலும், (இவ்வேதத்தை இறக்கி வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும், அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)

சீதனம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதற்காக வேண்டி அந்தப் பெண் வீட்டாரிடம் கேட்டு பெற்றுக் கொள்வதே சீதனமாகும். அது பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், அல்லது காணி பூமியாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அந்த பெண் வீட்டாரிடம் இருந்து கேட்டு பெற்றுக் கொள்வது சீதனமாகும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை  யாவரும் அறிந்து விடயமே...

இன்று எமது சமுதாயத்தில் சீதனம் என்றால் என்ன என்று அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். சீதனம் என்பது மார்க்கத்தில் கூடாது அது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடித்து அந்த மனைவிக்குரிய முழு செலவையும் ஒரு ஆண் பார்த்துக்கொள்ள வேண்டும், அந்தப் பெண்ணுக்குரிய மஹரை கொடுக்க வேண்டும் என்பது சம்மந்தமாக  நாம் பார்த்தோம்.

அன்பளிப்பாக விரும்பி கொடுத்தால் சீதனம் ஆகாதா?

இன்று சீதனம் என்ற பெயர் மங்கிப்போய் அன்பளிப்பு என்ற பெயரில் சீதனக்கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது... தன்னுடைய மகளுக்கு என் சொத்தில் இருந்து நான் கொடுத்தால் உமக்கு என்ன? என்னுடைய மகளுக்கு நான் கொடுப்பதை கொடுக்கின்றேன்? என்ற கேள்வியை முன் வைத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனையை பிச்சை கொடுக்கின்றார்கள்....

முதலில் அன்பளிப்பு என்றால் என்ன? என்பதை பார்க்க வேண்டும்.

அன்பளிப்பு என்பது எமது பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு அன்பளிப்பாக ஏதாவது ஒன்றை கொடுக்கும்போது அது சரிசமமாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு வீட்டையும் ஒரு காணியையும் அன்பளிப்பாக கொடுத்தால், அதேபோன்று அனைத்து பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
ஆனால் இன்று பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம் அன்பளிப்பு ஆண் பிள்ளைகளுக்கு இல்லை. சிலர் இதை சமாளிப்பதற்காக வேண்டி பெண் பிள்ளைக்கு ஒரு காணியையும், ஒரு வீட்டையும் கட்டி கொடுக்கின்றார்கள். ஆண் பிள்ளைகளுக்கு காணிய மாத்திரம் கொடுக்கின்றார்கள். எனவே அன்பளிப்பு என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் எதை கொடுக்கின்றோமோ அதை சரிசமமாக கொடுக்க வேண்டும் ஒரு பிள்ளைக்கு ஒரு காணியையும், ஒரு வீட்டையும் கொடுத்தால், அதேபோன்று ஒரு காணியையும் அதே அளவுள்ள ஒரு வீட்டையும்  அனைத்து ஆண், பெண் பிள்ளைகளுக்கும் கொடுப்பது கட்டாயமாகும். அப்போதுதான் இது அன்பளிப்பு ஹத்யாவாக என்ற பெயரில் போய் சேரும்.
இதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ، أَتَى بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا. فَقَالَ "" أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَ مِثْلَهُ "". قَالَ لاَ. قَالَ "" فَارْجِعْهُ "".
நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது:                     என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். 
ஸஹீஹ் புகாரி : 2586. 
அத்தியாயம் : 50. முகாதப்

حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَامِرٍ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا "". قَالَ لاَ. قَالَ "" فَاتَّقُوا اللَّهَ، وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ "". قَالَ فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ.
ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:                     நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். 
ஸஹீஹ் புகாரி : 2587. 
அத்தியாயம் : 50. முகாதப்.

மேற்குறிப்பிட்ட செய்தியை வைத்து பார்க்கும் போது பிள்ளைகளுக்கு மத்தியில் அன்பளிப்பை கொடுக்கும்போது அதில் நீதமாக நடந்துகொள்வது என்பது கட்டாயம் என தெரிய வருகின்றது. ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீதமற்ற முறையில் கொடுத்த அன்பளிப்பை மீட்டெடுக்கும்படி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். *அன்பளிப்பை கொடுத்துவிட்டு அதை மீண்டும் பெற்றுக் கொள்வது நாய் வாந்தி எடுத்ததற்கு சமம் என்று சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்* நீதமற்ற முறையில் கொடுக்கப்பட்ட அன்பளிப்பை மீட்டெடுக்கும் படி சொன்னார்கள் எனவே பிள்ளைகளுக்கு மத்தியில் அன்பளிப்பு செய்யும் போது அதை நீதமாக கொடுப்பது கட்டாயம் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.

சரி அன்பளிப்பாக தான் கொடுக்கின்றீர்கள் என்றால் அதை ஏன் பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம் அன்பளிப்பு செய்கின்றீர்கள்? ஆண் பிள்ளைகளும் உமது பிள்ளைகள் தானே? சரி நீ பெண் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய அந்த அன்பளிப்பை உன்னுடைய ஆண் பிள்ளைகளும் அல்லது ஏனைய பிள்ளைகளும் பொருந்திக் கொண்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ஆண் கஷ்டத்தில் இருக்கும்போது இதை நினைத்து வருந்தினால் உண்மையில் அந்தப் பாவம் உம்மை வந்தே சாரும். இன்னும் சிலர் இந்த சீதனத்தை மறைப்பதற்காக கேட்கக்கூடிய ஒரு கேள்விதான்: ஒரு பெண்ணுடைய சொத்தை ஒரு ஆண் அனுபவிக்க கூடாதா? அதில் என்ன தவறு உள்ளது? ஆம், அதில் எந்தத் தவறும் இல்லை என்று தான் நாம் கூறுகிறோம். சரி, நீங்கள் சொல்வது போல் பெண்ணுடைய சொத்தை ஒரு ஆண் அனுபவிக்கிறார் அதில் என்ன தவறு? இப்போது உமக்கு ஒரு கேள்வியை கேட்கின்றேன் ஏன் ஓர் ஆண பிள்ளைகளுக்கு ஒரு காணியையும் ஒரு வீட்டையும் கொடுத்து அந்த ஆண் மகனுடைய சொத்தை ஏன் அவனுக்கு வரக்கூடிய அந்த பெண் அனுபவிக்கக்கூடாது? பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம் சொத்துக்களை கொடுத்து அவளுடைய கணவனை அனுபவிப்பதற்கு மாத்திரம் கொடுக்கின்றீர்கள்? அப்போது அந்த ஆண் பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகள் இல்லையா? பெண்கள் மாத்திரம் தான் உம்முடைய பிள்ளைகளா? ஆண்களுக்கும் அந்த சொத்தை கொடுங்கள், அந்த சொத்தை கொடுத்து அந்த ஆண்களுக்கு வரக்கூடிய அந்த மனைவியும் அதில் அனுபவிப்பாளே...!  இவ்வாறான சில கேள்விகளை கேட்கும் போது தான் அவர் உண்மையில் அந்த அந்த வீட்டையும் அந்த சொத்தையும் காணியையும் அவர் அன்பளிப்பாக கொடுத்தாரா? அல்லது சீதனமாக கொடுத்தாரா? அல்லது பெண்ணுக்குரிய சொத்தாக கொடுத்து அந்த சொத்தை கணவன் அனுபவிக்கிறார் இது தவறில்லை என்று கூறுவது சரியானதா? என்பது தெரியவருகிறது...

ஆனால் இன்று நடப்பது என்ன?

இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு வரதட்சணையை நியாயப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

இப்படிப் பெண் வீட்டார் மனப்பூர்வமாக விரும்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். ஆனால் உண்மையில் மனப்பூர்வமாகக் கொடுக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இன்று திருமணத்தை முன்னிறுத்தி பெண் வீட்டார் கொடுப்பதெல்லாம் மனப்பூர்வமாகக் கொடுப்பதாகக் கூறவே முடியாது. ஏனெனில் உண்மையில் இது லஞ்சம் கொடுப்பதைப் போன்றே உள்ளது.

லஞ்சத்தை நம்மில் பலர் கொடுப்பதற்குக் காரணம், அவர்களது காரியம் இலகுவாக நடக்க வேண்டும் என்பதற்குத்தான். தமது தேவை நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் லஞ்சம் வாங்குபவனோ மக்கள் விரும்பித்தானே தருகிறார்கள் என்று கூறுகிறான். ஆனாலும் விரும்பி லஞ்சத்தைக் கொடுத்தாலும் லஞ்சம் தவறுதான்.

அதேபோன்று திருமணத்தை முன்னிறுத்தி மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் கொடுக்கவில்லையெனில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை ஒழுங்காக நடத்த மாட்டார்கள்; மற்ற மருமகளுடன் ஒப்பிட்டுக் காட்டி நமது மகளைக் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்; மாமியார் வீட்டில் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும், கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில்தான் ஒருவர் தனது சக்திக்கு மீறி அன்பளிப்பு செய்கிறான். மேற்சொன்ன சூழ்நிலை சமூகத்தில் இல்லையெனில் நிச்சயம் யாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு எதையும் அன்பளிப்பாகக் கொடுக்கவே மாட்டார்கள். ஆக இஸ்லாத்தில் அன்பளிப்பு என்பது, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்படித்தான் அன்பளிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நபியவர்களின் உபதேசம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

*நபி (ஸல்) அவர்கள் பனூஅசத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’’ என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, ‘இது உமக்குரியது; இது எனக்குரியது’ என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தமது கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக  இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’’ என்று சொன்னார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “நான் எடுத்துரைத்துவிட்டேனா?’’ என்று மும்முறை கூறினார்கள்.*

நூல்: புகாரி 7174

இதே செய்தி புகாரியில் 2597, 6636, 6979 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளிலெல்லாம் அன்பளிப்பு தவறாகக் கொடுக்கப்படக் கூடாது என்ற நுணுக்கத்தைப் போதிக்கிறது.

எனவே திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படும் அன்பளிப்புகள் வரதட்சணை தான் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இது அன்பளிப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், சிலரது குடும்ப வாழ்க்கை திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்த சில தினங்களிலோ மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது பெண் வீட்டார் கொடுத்த அன்பளிப்பபைத் திரும்பவும் கேட்பார்கள். இது அன்பளிப்பாக அவர்கள் தரவில்லை என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அன்பளிப்பின் அடிப்படை இலக்கணமே, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, பதிலுக்குப் பதில் என்ற முறையில் இல்லாமல் கொடுப்பதேயாகும். இந்த அடிப்படையெல்லாம் திருமணத்தில் கிடையாது. எனவே திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்காமல் பெண் வீட்டார் கொடுப்பதுவும் வரதட்சணைதான்.

நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் அப்படித் தான் கேட்டார்கள். அன்பளிப்பு வழங்கப்பட்ட அதிகாரி அவரது தந்தை வீட்டிலும், தாய் வீட்டிலும் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்டதைப் போன்று நாமும் பெண் வீட்டில் கேட்டுப் பார்த்தால் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படியெனில் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதில் எந்த அன்பளிப்பும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

எனவே திருமண ஒப்பந்தத்தை ஒட்டி எதுவும் செய்யக் கூடாது. பின்னால் நம் வீட்டில் ஒருவராக நமது மருமகன் ஆனபிறகு அவர்கள் வீட்டில் நம் பெண் ஒரு குடும்ப உறுப்பினராகிய பிறகு அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் சகஜம்தான். அதில் குறைகூற வாய்ப்பில்லை.

எனவே திருமணத்தின் போது (முன்போ பின்போ) பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படுபவை, மாப்பிள்ளை வீட்டார் அன்பளிப்பு என்ற பெயரில் பெற்றாலும், அதில் நம் பெண்ணின் வாழ்க்கை தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் பெண் மாமியார் வீட்டில் கொடுமைப் படுத்தப்படக் கூடாது என்பதற்காகவும் சமூகத்தில் எல்லோரைப் போன்று நாமும் முறையைச் செய்துவிடுவோம் என்ற அடிப்படையில்தான் தரப்படுகிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ளலாம். மேற்கண்ட நபியவர்களின் செயல்பாட்டிலிருந்து கேட்காமலே தந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிட வேண்டும். கொடுத்துவிட்டாலும் மறுத்துவிட வேண்டும்.

இன்னும் சிலர் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, செல்வமிக்க வீட்டில் பெண் தேடுவார்கள். கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைப் பார்த்து மணம் முடிப்பதைப் பார்க்கிறோம். ஏனெனில் இதுவெல்லாம் பிற்காலத்தில் நமக்குத் தான் வரவேண்டும் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். நாம் கேட்காமலே கிலோ கணக்கில் நகையைப் போட்டு அனுப்புவார்கள் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். இப்படி உள்ளூர ஆசை வைத்துக் கொண்டு வெளியில் நல்லவர்களைப் போன்று நடிப்பவர்களும் நபியவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆதாரங்கள் வாயிலாக தெரிகிறது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

*நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’’ என்றார்கள்.*

நூல்: புகாரி 1473, 7173, 7164

மேலும் பெண்கள் நான்கு நோக்கத்திற்காக திருமணம் முடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் இதற்கு ஆதாராமாகக் கொள்ளலாம். அதிலும் மார்க்கப் பற்று என்ற நோக்கமே வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டால், மார்க்கப்பற்று குறைவாக உள்ள பணக்காரப் பெண்ணை விட மார்க்கப்பற்று அதிகம் உள்ள ஏழைப் பெண்களைத் தேர்வு செய்வார்கள்.

(பார்க்க : புகாரி 5090)

இதுபோக பெண்களிடம் இருந்து வாங்குவது அநீதி என்பதை விளங்க வேண்டும். கொடுப்பதற்குத் தகுதி ஆண்களிடமும் பெறுவதற்குத் தகுதி பெண்களிடமும் தான் இருக்கிறது. இதைப்பற்றியும் குர்ஆன் பேசுகிறது. அப்படியெனில் நாம் தவறான முறையில் செல்வத்தைப் பெறவே கூடாது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!

(அல்குர்ஆன் 2:188)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2449

இப்படிப் பெண் வீட்டார் பல இடங்களில் பிச்சை எடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் போது வெளிப்படையில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மனம் புழுங்கிக் கொண்டு, சாபமிட்டுக் கொண்டும் இறைவனிடம் எதிராகப் பிரார்த்தனை செய்து கொண்டும்தான் கொடுப்பார்கள். நிச்சயம் இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ்விடம் அதிகம் மரியாதை உண்டு என்பதைப் புரிந்து மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே பெண்களிடமிருந்து வெளிப்படை யாகவும் வரதட்சணை வாங்கக் கூடாது. மறைமுகமாகவும் வாங்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்வில் பெண்ணுக்கும் சேர்த்து ஆண்கள் தான் பொருளாதாரப் பொறுப்பை சுமக்க வேண்டும் என்பதில் இவையும் அடங்கும் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.


சீதனத்தால் ஏற்படும் கொடுமைகள்.

தலை தூக்கி, கொடிகட்டிப் பறக்கும் இந்த சீதனக்கொடுமை, இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கும் சீரழிவுகளையும் அவலங்களையும் நடுநிலை கண்ணோட்டத்தோடு சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக இதை வெறுத்தொதுக்குவான்.

எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்துக்கு முன்பு ஜாஹிலிய்யதுடைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் எவ்வாறு ஒரு அச்சம் ஏற்படுமோ, அவ்வாறு இன்று ஒரு பெண் குழந்தை பிறந்தால்  பெற்றோர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகின்ற நிலைமை வந்துள்ளது.

ஒரு பெண் பிள்ளை பிறந்து விட்டால் ஒரு வயது இரண்டு வயதிலேயே அந்தப் பெண் பிள்ளைக்கான வீடு கட்டப்பட ஆரம்பிக்கின்றது.

தான் பெற்றெடுத்த பெண் மக்களை எப்படியும் மனக்கோளத்தில் காண வேண்டும் என்பதற்காக தன் மானத்தை துறந்து ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடு வீடாக, ஏன் பள்ளிவாசல் பள்ளிவாசலாக கையேந்தி பிச்சை கேட்கும் பெற்றோர்கள் ஆயிரமாயிரம்.

வட்டிக்கு கடன் வாங்கி, வரப்போகும் கணவனுக்கு சீதனமாக வாரிக் கொடுத்துவிட்டு, வாங்கிய கடனையும் வட்டியையும் செலுத்த முடியாமல் தற்கொலை மூலம் தன் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட பெற்றோர்கள் ஆயிரமாயிரம்.

வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கு வழியில்லாத போது, வரப்போகும் கணவனுக்கு சீதனமாக எங்கிருந்து பெற்றோர்களால் கொடுக்க முடியும்? உடன்பிறந்தோருக்கோ பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக தற்கொலை மூலம் தன் வாழ்க்கையை முடிவைத் தேடிக் கொண்ட கன்னியர்கள் ஆயிரமாயிரம்.

சீதனம் கொடுத்தால் தான் திருமணம் நடக்கும் என்ற வழமையை  செல்வந்தர்கள் உருவாக்கி இருக்கும்போது சீதனத்தை கொடுக்க முடியாததால், தம் வறுமைக்கும், வாலிப உணர்வுக்கும் வடிகாலாக விபச்சாரத்தைத் தேடிக் கொண்ட கன்னியர்கள் ஆயிரமாயிரம். இதற்குக் காரணம் சீதனத்தை உருவாக்கி, சீதனத்தை கொடுத்துக்கொண்டிருப்பவர்களே....

வாயையும் வயிரையும் கட்டிச் சேர்த்து வைத்த சொத்துக்களை வரப்போகும் கணவனுக்கு சீதனமாக கொடுத்துவிட்டு வீடிழந்து வீதிக்கு வந்து விட்ட குடும்பங்கள் ஆயிரமாயிரம்.

வரதட்சணை காரணமாக 18 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது , முப்பத்து ஐந்து வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும், ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
   
திருமண வாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களும், வரதட்சணையை அன்பளிப்பாக கொடுப்பவர்களுக்கும் பங்கு இருக்கிறது.

சீதன  வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள், பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்களும், சீதனத்தை கொடுத்து வழக்கமாக்கியவர்கள் பங்காளிகளாகின்றனர்.

பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர்.

சீதனம் எனும் கொடுமையால் இன்று சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் இது போன்ற அவலங்களும், சீரழிவுகளும் ஏராளம்.

நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள்.

மணமகளின் பெற்றோர்களை, உடன் பிறந்தோர்களை வறுத்தி, ஏழைகளை வதைத்து, மணமகளின் குடும்பத்தின் வாழ்க்கையை சீர்குலைத்துப் பெறப்படும் வசதிகளே இந்த சீதனமாகும். இக்கொடுமை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்வதைப் பார்க்கும்போது இன்னும் என்னென்ன சீர்குலைவையெல்லாம் இதில் இழுத்து வருமோ என்று அஞ்ச வேண்டி இருக்கின்றது.

இக்கொடுமை அரங்கேறக் காரணமாக இருப்பவர்களுள் முதன்மையானவர்கள் யார்? சீதனம் கேட்கும் மணமகனின் பெற்றோர்களும், அன்பளிப்பு என்ற பெயரில் சீதனத்தை வளர்க்கும் மணமகளின் பெற்றோர்கள் அல்லவா?





Previous Post Next Post