முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

ஆக்கம்:- S.H.M.இஸ்மாயில் (ஸலபி)

முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய யாரும் உலகில் இல்லை. அப்படி யாரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போவதுமில்லை.

ஏனெனில், அந்தப் பெயர் வழிகெட்ட பிரிவுகளின் பெயரில் ஆழமாக இடம்பெற்றுவிட்டது. ஏற்கனவே இருந்த முஃதஸிலாக்கள் கூட தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம்மை “அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்” என்றே அழைத்துக் கொண்டனர். எனவே, இன்றும் கூட தவ்ஹீத்வாதிகள் என்ற பெயரில், இஸ்லாமிய அமைப்புக்கள் என்ற பெயரில் முஃதஸிலாக்களின் எச்ச சொச்சங்கள் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ளது.

முஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் பாணியில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட அடிப்படையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன.

எனவே, முஃதஸிலாக்கள் என்பது அழிந்து போன அமைப்பு அல்ல. சிந்தனா ரீதியில் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த வழிகெட்ட அமைப்பின் தாக்கம் இஸ்லாமிய சிந்தனையாளர்கள், நவீனகால அறிஞர்கள் என அடையாளம் காணப்பட்ட பலரிடமும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே, முஃதஸிலாக்களின் வழிகேட்டு வலையில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் பற்றிய இத்தொடர் முன்வைக்கப்படுகின்றது.

முஃதஸிலா பெயர் விளக்கம்:

“இஃதஸல” என்றால் பிரிந்து சென்றான், விலகிச் சென்றான், ஒதுங்கினான் என்று அர்த்தம் செய்யலாம்.

“என்னை நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லையானால் என்னை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள் (எனவும் மூஸா கூறினார்.)”(44:21)

மேற்படி வசனத்தில் விலகிச் செல்லுங்கள் என்பதற்கு ‘பஃதஸிலூன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தோன்றிய இஸ்லாமிய அகீதாவை ஆய்வு செய்யும் விடயத்தில் பகுத்தறிவுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் அமைப்புக்குச் சொல்லக்கூடிய பெயராகும். இவர்கள் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களது மஜ்லிஸில் இருந்து பிரிந்து சென்ற வாஸில் பின் அதாவின் குழுவினர் என அறியப்பட்டார்கள்.
(அல் பர்க் பைனல் பிரக்: 20, அல் மினல் வன்னிகல்: 1ஃ50, வபயாத் லில் அஃயான்: 2ஃ71, அத்தஃரீ பாத் லில் ஜுர்ஜானி: 238)

பெயருக்கான காரணம்:

முஃதஸிலா என்ற பெயர் இவர்களே தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இவர்களை இழிவுபடுத்துவதற்காகவும் அடையாளப்படுத்துவதற்காகவும் இவர்களுக்கு இட்ட பெயரே இதுவாகும். இவர்கள் இஸ்லாமிய உம்மத்திலிருந்து சிந்தனா ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகவே இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். இந்தப் பெயர் இவர்களுக்குச் சொல்லப்படுவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது என்பது பிரபலமான கருத்தாகும்.

இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ஒரு சபையில் இருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து, ‘இமாமவர்களே! இப்போது ஒரு கூட்டம் தோன்றியுள்ளது. அவர்கள் பெரும் பாவம் செய்பவர்களைக் காபிர்கள் என்று கூறுகின்றனர். பெரும் பாவம் செய்வது அவர்களின் பார்வையில் குப்ர் ஆகும். பெரும் பாவம் செய்தவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான் என்பது அவர்களது நிலைப்பாடு. இவர்கள் கவாரிஜ்கள்.

மற்றுமொரு கூட்டம் பெரும்பாவம் செய்பவருக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுகின்றனர். அவர்களது பார்வையில் ஈமான் என்பது நம்பிக்கை மட்டுமே, செயல் கிடையாது. ஈமானுடன் பெரும் பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கின்றனர். குப்ருடன் நன்மை செய்தால் எப்படி எந்த நன்மையும் இல்லையோ அவ்வாறே ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறுகின்றனர். இவர்கள் முர்ஜிய்யாக்கள். இந்தக் கொள்கை பற்றி நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்” என்று கேட்டார்.

இதற்கு இமாமவர்கள் பதிலளிப்பதற்கு முன்னர் அந்த சபையில் இருந்த வாஸில் பின் அதாஃ (ஹி. 80-131) என்பவன் பெரும் பாவம் செய்பவனை முழுமையான முஃமின் என்றும் நான் சொல்லவும் மாட்டேன், காபிர் என்று முழுமையாகக் கூறவும் மாட்டேன். எனினும், ஈமான்-குப்ர் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றான். அவன் முஃமினும் இல்லை காபிரும் இல்லை.
(மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன்)

இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்று கூறிவிட்டு ஹஸன் பஸரியின் மஜ்லிஸை விட்டும் ஒதுங்கி மஸ்ஜிதில் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அம்ர் இப்னு உபைத் என்ற அவனது நண்பனும் அவனுடன் இணைந்து கொண்டான். இந்த சந்தர்ப்பத்தில்தான் இமாம் ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் ‘இஃதஸலனா வாஸில்…” ‘வாஸில் எம்மை விட்டும் ஒதுங்கிவிட்டார்” என்றார்கள். அதுவே அவர்களை அடையாளப்படுத்தும் பெயராக மாறிவிட்டது என இமாம் ஸஹ்ருஸ்த்தானி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(அல் மினல் வன்னிகல்: 1ஃ52)

குறித்த இந்த சம்பவம் தொடர்பிலும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நவீன கால முஃதஸிலா ஏஜென்டுகள் இந்த நிகழ்ச்சியை வைத்து இமாம் ஹஸனுல் பஸரியையே குறை கூற ஆரம்பித்துள்ளனர். வாஸில் தவறான கருத்தைக் கூறியிருந்தால் அவனுடன் விவாதித்து உண்மையை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டம் கூறி அவனை ஒதுக்கியது தவறு என்ற அடிப்படையில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ‘தானாடாவிட்டாலும் தசை ஆடும்” என்பார்கள். தமது முன்னோர் குறை கூறப்படும் போது உள்ளம் கொதி கொதிக்கின்றது போலும்!

இந்த நிகழ்ச்சியில் இமாம் ஹஸனுல் பஸரியிடம்தான் கேள்வி கேட்கப்பட்டது. அவர்தான் பதில் சொல்ல வேண்டும். இடையில் பாய்ந்து பதில் சொன்னது வாஸிலின் தவறாகும். பதிலைக் கூட அவர் குர்ஆன், ஹதீஸில் இருந்து கூறவில்லை. தனது கருத்தாகவே முன்வைக்கின்றார். கருத்தைச் சொன்னாலும் அடுத்தவர்களுடைய கருத்து என்ன? இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் என்ன? என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை. தானாகவே ஒதுங்கிச் சென்றுவிட்டான்.

எனது கருத்து இதுதான். இதற்கு மாற்றமான கருத்துடன் இணைந்திருக்க முடியாது என்று ஒதுங்கிச் சென்றது அவன்தான். அவனை ஹஸனுல் பஸரி(ரஹ்) ஒதுக்கவில்லை. இன்றைய முஃதஸிலா குஞ்சுகளும் ஏதேனும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அதைச் சாட்டாக வைத்து ஒதுங்கிச் செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதை அவதானிக்கும் போது இது இரத்தத்துடன் இரத்தமாக ஊறிப்போன குளமோ என்று ஐயப்படவேண்டியுள்ளது.

முஃதஸிலாக்களின் பெயர்கள்:

முஃதஸிலாக்களுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. முஃதஸிலாக்களுக்கு பிற முஸ்லிம்கள் வைத்த பெயர்கள் உள்ளன. அவ்வாறே அவர்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட பெயர்களும் உள்ளன.

பிறர் சூட்டிய பெயர்கள்:

1. முஃதஸிலாக்கள்:
இந்தப் பெயர் தோன்றிய காரணம் குறித்து முன்னர் பார்த்தோம்.

2. ஜஹ்மிய்யாக்கள்:
ஜஹ்ம் இப்னு ஸப்வான் என்ற ஒரு வழிகேடன் இருந்தான். இவனது பல கொள்கைகளை முஃதஸிலாக்கள் ஏற்றுக் கொண்டு அதைப் பிரச்சாரம் செய்தனர். குர்ஆன் படைக்கப்பட்டது போன்ற கொள்கைகளை உருவாக்கினான். அல்லாஹ்வின் ஸிபத்துக்களுக்கு மாற்று விளக்கம் அளிக்கும் இவனது வழிகெட்ட சிந்தனைப் போக்கின் தாக்கம் இன்று தம்மை அஹ்லுஸ் சுன்னா என அழைத்துக் கொள்ளும் பல அமைப்புக்களிடமும் இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஜஹ்மிய்யாக்கள் என்போர் முஃதஸிலாக்களை விட விசாலமான வழிகேட்டை உடையவர்கள். எனவேதான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்,
என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது, எல்லா முஃதஸிலாக்காரனும் ஜஹ்மிய்தான். ஆனால், எல்லா ஜஹ்மிய்யும் முஃதஸிலா அல்ல. (மின்ஹாஜுஸ் சுன்னா: 1ஃ256)

இந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் ஜஹ்மிய்யாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

“அல்லாஹ் அர்ஷின்மீதானான்” என்ற குர்ஆன் வசனத்திற்கு அர்ஷின் மீது தன் அதிகாரத்தை நிலைநாட்டினான் என்று மாற்றுவிளக்கமளித்தவன் இந்த ‘ஜஹ்ம்’தான். இவன் இந்தக் கருத்தை ஜஹ்த் இப்னு திர்ஹம் என்பவனிடமிருந்து எடுத்தான். ஜஹ்ம் பின்னர் அதை பிரச்சாரம் செய்ததால் இது போன்ற கருத்துக்கள் இவனுடன் இணைக்கப்பட்டு இவர்கள் ஜஹ்மிய்யாக்கள் எனப்பட்டனர்.
இந்த சிந்தனை யூதர்களிடமிருந்து வந்ததாகும். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதை இப்படிக் கூறலாம்.

ஜஹ்ம் இப்னு ஸப்வான்
அல் ஜஃத் இப்னு திர்ஹம்
அபான் இப்னு ஸம்ஆன்
தாலூத் (ஸபீத் இப்னு அஃலம் என்ற நபியவர்களுக்கு சூனியம் செய்த யூதனின் சகோதரியின் மகன்.)
லபீத் இப்னுல் அஹ்ஷம் எனும் நபிக்கு சூனியம் செய்த யூதன்.
(மஜ்மூஃ பதாவா: 5ஃ20)

இந்த அடிப்படையில் ஜஹ்மிய்யா சிந்தனையும் முஃதஸிலாப் போக்கும் யூத அடிப்படையில் உருவான வழிகேடுகளாகும்.

03. கதரிய்யாக்கள்:

நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்பது ஈமானின் அடிப்படையாகும். முஃதஸிலாக்கள் அல்லாஹ் தீமையை நாடமாட்டான் என்று வாதிடுகின்றனர். இவ்வாறே மனிதனின் செயல்களை மனிதன்தான் படைத்துக் கொள்கின்றான். மனிதனது செயல்களுக்கும் ‘கத்ரு”க்கு மிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் இவர்கள் கதரிய்யாக்கள் என அழைக்கப்பட்டனர்.

இதனை முஃதஸிலாக்கள் மறுக்கின்றனர். நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் கத்ர் படி நடக்கின்றது என்று கூறுவபவர்களுக்குத்தான் கதரிய்யா என்ற பெயர் பொருத்தமானது என்று கூறுகின்றனர்.

இது குறித்து இமாம் இப்னு குதைபா(ரஹ்) அவர்கள் கூறும் போது,

‘முஃதஸிலாக்கள், (அல்லாஹ்வின் நாட்டப்படி அனைத்தும் நடப்பதில்லை எனக் கூறி) அல்லாஹ்வின் கத்ரை இல்லை என்கின்றனர். (மனிதன் தனது செயல்களைத் தானே படைத்துக் கொள்கின்றான் என்று கூறுவதன் மூலம்) கத்ரை தம்மோடு இணைத்துக் கொள்கின்றனர். எனவே, அவர்கள்தான் கத்ரிய்யாக்கள் என்று கூற வேண்டும். ஏனெனில், தன்னிடம் ஒன்று இருப்பதாக வாதிடக்கூடியவன்தான் அந்தப் பெயரைக் கூறி அழைக்கத் தகுதியானவனாவான்” என்று கூறுகின்றார்கள்.
(தஃவீலு முஹ்தலபுல் ஹதீத்: 98,
தாரீகுல் ஜஹ்மிய்யா வல் முஃதஸிலா: 54)

4. இந்த உம்மத்தின் மஜூஸிகள்:

மஜூஸிகள் நல்லதைப் படைக்க ஒரு கடவுளும், தீயதைப் படைக்க இன்னொரு கடவுளும் இருப்பதாக நம்புகின்றனர். முஃதஸிலாக்களும் நன்மையை அல்லாஹ் படைப்பதாகவும், தீமையை மனிதன் படைப்பதாகவும் நம்புகின்றனர். இதன் மூலம் இரண்டு படைப்பாளர்கள் இருப்பதாக நம்புகின்றனர். இது தெளிவான குப்ராகும். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுக்கும் போது இன்றைய முஃதஸிலாக்கள் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர்.

நபிக்கு சூனியம் பலிக்கும் என்பது நல்லதா, கெட்டதா? கெட்டது! அல்லாஹ் கெட்டதை நாடுவானா? அல்லாஹ்வையும் சூனியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்போகின்றீர்களா? என்று கேட்கின்றனர்.

ஷைத்தான் நல்லவனா, கெட்டவனா? கெட்டவன். கெட்டவனை அல்லாஹ் படைப்பானா? அவனுக்கு நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுப்பானா? அவனுக்குப் பல்வேறுபட்ட ஆற்றல்களை அல்லாஹ் வழங்குவானா? ஷைத்தான் செய்யும் எல்லாத் தீமைகளிலும் அல்லாஹ் பங்காளியாக இருப்பானா? என்று கேட்டால், ஷைத்தானைப் படைத்தது வேறு இறைவன் என்று நம்ப வேண்டும். இந்த தெளிவான குப்ரைத்தான் இன்றைய முஃதஸிலாக்களும் மகத்தான வாதமாக முன்வைத்து வருகின்றனர்.

முஃதஸிலாக்களிடம் மஜூஸிகளின் இந்தத் தாக்கம் இருப்பதால், இந்த உம்மத்தில் உள்ள மஜூஸிகள் என அழைக்கப்பட்டனர்.

5. அல் வஈதிய்யா:

முஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளில் அல் வஃத் வல் வஈத் வாக்கும் எச்சரிக்கையும் என்பது ஒன்றாகும். அல்லாஹ் தனது வாக்கிலும் எச்சரிக்கையிலும் உண்மையானவன். தவ்பாவுக்குப் பின்னர்தான் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று இவர்கள் கூறி வந்தனர்.
(அல் இன்திஸார்: 126)

எனவே, இவர்கள் வஃதிய்யாக்கள் எச்சரிப்போர் என அழைக்கப்பட்டனர்.

6. முஅத்திலாக்கள்:

முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்த காரணத்தினால் ‘முஅத்திலாக்கள்” – மறுப்பவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு இவர்கள் பல பெயர் கொண்டு அழைக்கப்படுவதன் மூலமே இவர்களின் வழிகேடுகள் சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன.

இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற இதழில் இது குறித்து நோக்கினோம். இங்கு முஃதஸிலாக்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட சில பெயர்களையும் அவர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காரணங்களையும் நோக்கவுள்ளோம்.

முஃதஸிலாக்கள் தமக்குத்தாமே சூட்டிக் கொண்ட பெயர்கள்:

1. முஃதஸிலாக்கள்:
இந்தப் பெயர் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களால் இவர்களுக்கு சூட்டப்பட்டது. இந்தப் பெயரிலிருந்து தப்பிக் கொள்ள அவர்கள் முயன்றாலும் அவர்களால் முடியவில்லை. எனவே, இவர்களில் சிலர் தம்மை ‘முஃதஸிலா’ என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன் அதற்கு விளக்கமும் கூற ஆரம்பித்தனர். உதாரணமாக,

‘அவர்கள் கூறுபவற்றில் நீர் பொறுமையாக இருப்பீராக! மேலும், அழகிய முறையில் அவர்களை நீர் வெறுப்பீராக!’ (73:10)

இந்த வசனத்தைச் செயல்படுத்துவதென்றால் சமூகத்தை விட்டும் ஒதுங்காமல் -இஃதிஸால்- இல்லாமல் செயற்படுத்த முடியாது என வாதிட்டு சமூகத்தை விட்டும் ஒதுங்குவதற்கான ஆதாரங்களை முன்வைத்தனர்.

2. அஹ்லுல் அத்ல் வத் தவ்ஹீத்:
‘அத்ல்’ என்றால் நீதி, நியாயம் என்பது அர்த்தமாகும்ஃ அவர்கள் தம்மை, ‘அஸ்ஹாபுல் அத்ல்’ – நீதியின், நேர்மையின் கூட்டத்தினர் என்று கூறிக் கொண்டனர். எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல பெயர்களில்தான் தமது கெட்ட கொள்கையைப் போதித்தன.

அத்ல் – நீதி என்பது நல்ல வார்த்தைதான். அவர்கள் அல்லாஹ்வை உண்மையில் நீதவானாகக் காட்டுவது நாம்தான் என்று சொன்னார்கள். கழாகத்ரை மறுப்பதுதான் இதனுடைய அடிப்படை.

அல்லாஹ்வே கத்ரை நியமித்துவிட்டு அடியார்களைத் தண்டிப்பது நீதியானது அல்ல என்று கூறி கத்ரை மறுத்தனர். கத்ரை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாஹ்வை அநியாயக் காரனாக சித்திரிப்பதாகக் கூறினர். கத்ர் மறுப்பு என்ற தமது கொள்கையை வைத்துத்தான் தம்மை ‘அஸ்ஹாபுல் அத்ல்’, ‘அஹ்லுல் அத்ல்’ – நீதியின் அணியினர், அல்லாஹ்வை நீதமாகக் காட்டும் கூட்டம் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

‘அஹ்லுத் தவ்ஹீத்’ – தவ்ஹீத்வாதிகள் என்றும் தம்மை அழைத்துக் கொண்டனர். ‘அல்லாஹ்வின் பண்புகளை ஏற்பது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலை உண்டு பண்ணும்’ என்று இவர்கள் நம்பினர். எனவே, இவர்கள் அல்லாஹ்வின் ஸிபத்துக்களை மறுக்கும் தாமே உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொண்டனர்.

3. அஹ்லுல் ஹக்!:
முஃதஸிலாக்கள் தம்மை சத்தியவான் களாகவும் ஏனையவர்களை ‘அஹ்லுல் பாதில்’ – அசத்தியவாதிகளாகவும் கூறி வந்தனர். அல்லாஹ்வை எல்லாவிதமான குறைகளில் இருந்தும் தூய்மைப்படுத்தும் கூட்டமாகத் தம்மை அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் ஸிபத்துக்களை ஏற்பவர்கள் முஷ்ரிக்குகளாகவும் ‘முஷப்பிஹா’ அல்லாஹ்வுக்கு ஒப்புவமை கூறுபவர்களாகவும் அவர்கள் பார்த்தனர்.

முஃதஸிலாக்களின் வளர்ச்சியும் அதற்கான காரணமும்:

வரலாற்றில் முஃதஸிலாக்கள் பெரும் வளர்ச்சி கண்டார்கள். இது ஒரு சிந்தனை சார்ந்த வழிகேடு. இதனால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதும், இனங்காட்டுவதும் சிரமமானதாகும். இந்தப் பெயரில் இன்று எந்த ஒரு அமைப்பும் இல்லையென்றாலும் இந்த வழிகெட்ட சிந்தனையால் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் நிறையவே இருக்கின்றனர். இது ஒரு கொள்கை சார்ந்த வழிகேடாக இருப்பதால் அடையாளம் காண்பது கடினமானது. செயல்சார்ந்த வழிகேட்டை உடனே புரிந்து கொள்ளலாம். கொள்கை சார்ந்த வழிகேடுகள் சில போது அந்தக் கொள்கையை ஏற்றவர்களுக்கே, தான் இந்த வழிகெட்ட கூட்டத்தின் கொள்கையில் இருக்கின்றேன் என்பது தெரியாமல் இருக்கும்.

எனவே, இந்த சிந்தனை வளர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது எனலாம்.

முஃதஸிலாக்களின் வளர்ச்சிக்கான காரணங்கள்:

1. அரசியல் செல்வாக்கு:
முஃதஸிலா கொள்கையின் பிறப்பிடமாக பஸரா திகழ்கின்றது. அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் பக்தாத், கூபா, பஸரா போன்ற நகரங்கள் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்தன. அறிவையும் நாகரிகத்தையும் மற்றப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும் பிரதேசங்களாக இவைகள் திகழ்ந்தன.

அத்துடன் அப்பாஸிய ஆட்சியாளர்களில் பலரும் தீவிர முஃதஸிலா கொள்கை சார்பானவர்களாக மாறினர். ஒரு நாட்டின் அரசு ஒரு கொள்கையில் அல்லது மதத்தில் இருந்தால் குடிமக்கள் அதன்பால் ஈர்க்கப்படுவது இயல்பாகும். அத்துடன் முஃதஸிலா கலீபாக்களில் சிலர் மாற்றுக் கொள்கையுடைய அறிஞர்களை சிறை பிடித்து சித்திரவதையும் செய்தனர். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) போன்றவர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஃதஸிலாக்களுக்கு அரசியல் பலம் கிடைத்ததால் மாற்றுக் கருத்துடையவர்கள் அடக்கப்பட்டனர். இதனால் பரந்து விரிந்த அப்பாஸிய ஆட்சியில் முஃதஸிலாக் கொள்கை வெகு வேகமாகப் பரவியது எனலாம்.

2. தீர்ப்பை முன்வைத்தனர்:
அன்றைய உலகு சந்தித்த பல பிரச்சினை களுக்கு முஃதஸிலாக்கள் தீர்வு சொன்னார்கள். அந்தத் தீர்வு சரியானதாக இல்லாவிட்டாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

உதாரணமாக, பெரும்பாவம் செய்யும் முஸ்லிமின் நிலை என்ன என்பது குறித்து பெரிய சர்ச்சை அன்று கிளம்பியிருந்தது.

கவாரிஜ்கள்:
பெரும்பாவம் செய்பவன் காபிர், அவன் நரகத்தில் நிரந்தரமாக இருப்பான் என்றனர். இந்தக் கொள்கை மக்கள் மத்தியில் பாவத்தை விட்டும் ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மாற்றுக் கொள்கைவாதிகளை மார்க்கத்தின் பெயரில் கொடூரமாக் கொலை செய்தனர். அதை அவர்கள் பாவமாகப் பார்க்கவில்லை.

முர்ஜிய்யாக்கள்:
பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ‘குப்ருடன், நன்மை செய்வதால் எந்தப் பயனும் இல்லாதது போல் ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என இவர்கள் போதித்தனர். இது மக்கள் மத்தியில் பெரும்பாவங்களையும் சர்வசாதாரணமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியது. பாவங்கள் பெருக இது காரணமாக அமைந்தது.

அஹ்லுஸ்ஸுன்னா:
அஹ்லுஸ்ஸுன்னாவுடைய அறிஞர்கள் பெரும்பாவம் ஈமானை விட்டும் வெளியேற்றாது, குப்ரில் நுழைவிக்காது. ஆனால், பாவியாவான். அவனது பாவத்தின் அளவுக்கு அவன் தண்டிக்கப்படுவான் என்று கூறினர். இதுதான் சரியானது.

இருப்பினும் முஃதஸிலாக்கள் பெரும் பாவம் செய்தவன் முஃமினும் இல்லை, காபிரும் இல்லை. ஈமானுக்கும் குப்ருக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான். அவன் நரகம் செல்வான். அதில் நிரந்தரமாக இருப்பான். காபிரை விட குறைந்த தண்டனை வழங்கப்படும் எனக் கூறினர்.

ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சினையை அணுகாதவர்களுக்கு பெரும்பாவம் செய்பவன் முஃமினும் இல்லை, காபிரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்ற கருத்து நடுநிலையானதாகத் தெரிந்தது. எனவே, இது சரிதான் என்று ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறே முஃதஸிலாக்கள் எல்லா வழிகெட்ட அமைப்புக்களில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து புதிய கொள்கையை உருவாக்கியிருந்தனர். இதனால் பலரும் அவசரப் பட்டனர். முஃதஸிலாக்களிடம் கவாரிஜ்களிலும், ஷீஆக்களிலும் கொள்கைத் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இவ்வாறே பலவற்றைச் சேர்த்து வழங்கியமை, அவர்களது கொள்கைப் பரம்பலுக்கு முக்கிய உதாரணமாகத் திகழ்ந்தது எனலாம்.

பிற சமயக் கொள்கைகளின் தாக்கம்:

முஃதஸிலாக்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பிற சமயங்களின் தாக்கம் பிரதானமான காரணமாக இருந்தது எனலாம்.

நபி(ச) அவர்களின் மரணத்தின் பின் அரபுலகின் பல பகுதிகளும் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது. அவ்வப்பகுதியில் இஸ்லாத்தை ஏற்ற மக்கள் அந்தந்தப் பகுதியில் வசித்த மாற்று மத மக்களுடன் இரண்டறக் கலந்து வாழும் நிலை ஏற்பட்டது. சிந்தனைச் சிக்கல்கள் தோன்ற இது ஒரு காரணமாகத் திகழ்ந்தது.

இவ்வாறே இஸ்லாமிய ஆட்சி விரிவடையும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். இவர்கள் போதிய மார்க்கத் தெளிவு இல்லாமலும் பழைய கொள்கைகளில் இருந்து முற்று முழுதாக விலகாத நிலையிலும் இஸ்லாத்தில் இணைந்ததால் பிற மத சிந்தனைத் தாக்கத்திற்குள்ளாகினர்.

மற்றும் சிலர் அல்லாஹ்வுக்காக இஸ்லாத்தில் இணையாமல் உலகாதாய நோக்கத்திற்காக இஸ்லாத்தில் இணைந்ததால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது பற்றோ, பாசமோ இருக்கவில்லை. பிடிப்பும் இருக்கவில்லை. பெயரளவு முஸ்லிம்களாக இவர்கள் திகழ்ந்தனர். இவர்கள் கொள்கை அளவில் பழைய நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.
மற்றும் சிலர் இஸ்லாத்தின் மீது கொண்ட கோபத்தில் இஸ்லாத்தில் இணைந்தனர். முஸ்லிமாக நடித்துக் கொண்டு உள்ளே இருந்து முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்பது இவர்களின் திட்டம். இந்தத் திட்டத்துடன் உள்ளே வந்தவர்கள் வெளிப்படையில் தம்மை முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டாலும் குப்ருடைய கொள்கையில்தான் இருந்தனர். இவர்கள் தமது குழந்தைகளுக்கும் அவர்களது கொள்கைகளையே கற்றுக் கொடுத்தனர். இதனால் முஸ்லிம் சமூகத்தில் பிற மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பலர் உருவாகும் நிலை உண்டானது.

அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் மாபெரும் அறிவெழுச்சி ஏற்பட்டது. எனவே, ஏராளமான நூற்கள் அறபு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. இதில் தத்துவ நூல்களும் முக்கியத்தும் பெற்றன. உரோம, பாரசீக, இந்து மதங்களில் தாக்கம் செலுத்திய பல நூற்களும் அரபியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. முஸ்லிம்களில் ஒரு குழுவினர் இந்நூல்களில் அதிக அக்கறை காட்டினர். தேவையில்லாத தத்துவ வாதங்களுக்குள் மூழ்கத் துடித்தனர். முஸ்லிம் உலகில் ஏற்பட்ட கொள்கைக் குழப்பங்களுக்கும் தத்துவ வாதங்களுக்கும் இடையில் நிறையவே தொடர்புண்டு என்றால் மிகையாகாது. இந்த நூற்களினூடாக பிற மத கொள்கைகள் இஸ்லாமிய சாயம் பூசப்பட்டு முஸ்லிம்களுக்குள் ஊடுருவியது.

இவ்வாறு பிற மத தாக்கம் இஸ்லாமிய உலகை உலுக்கிக் கொண்டிருந்த சூழலில்தான் முஃதஸிலா சிந்தனை தோற்றம் பெறுகின்றது. முஃதஸிலா சிந்தனைக்கும், பிற மதங்களின் கொள்கைக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா? என்ற கேள்வி எழலாம்.

தத்துவவாதிகள் கடவுள் பற்றித்தான் அதிகம் அலட்டிக் கொண்டு கருத்துக்கள் கூறினர். ‘இல்முல் கலாம்’ என்ற பெயரில் முஸ்லிம்களும் அதில் மூழ்கினர். ஆனால், ஆரம்ப கால அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ‘குர்ஆன், சுன்னாவில் அல்லாஹ் பற்றி போதிய அளவு கூறப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளதை அப்படியே ஏன்? எப்படி? என்ற கேள்வியின்றி, இப்படித்தான், அப்படித்தான் என்ற விளக்கமின்றி உள்ளதை உள்ளது போல் நம்பினால் போதும்’ என்று கூறினர். இதுதான் சரியானதும், பாதுகாப்பானதுமான நிலைப்பாடாகும். ஆனால், பாமர மக்களுக்கு எதுவும் புத்திக்குப் புலப்படுகின்றமாதிரி இருந்தால்தான் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள்.

முஃதஸிலாக்கள் மாற்றுமத சிந்தனைகளின் தாக்கத்திற்குள்ளாகுவதற்கு தத்துவ நூல்களில் அவர்கள் காட்டிய ஆர்வம் முக்கிய காரணமாகும்.

முஃதஸிலாக்களும் யூதர்களும்:

முஃதஸிலாக்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற புதியதொரு கொள்கையைக் கொண்டு வந்தனர். இந்தக் கொள்கைக்கும் யூத சிந்தனைக்கும் தொடர்பிருக்கின்றது. லபீத் இப்னு அஃஸம் எனும் யூதன்தான் முதன் முதலில் தவ்ராத் படைக்கப்பட்டது என்ற கருத்தைக் கூறியவன் என இமாம் இப்னுல் அதீர்(ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். (தத்கிரதுல் ஹுப்பாழ் 4ஃ 185), அல்காமில் பித் தபிரீஹ் 1ஃ9)

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழிகெட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்களில் மிக முக்கியமானவர் ‘பிஸ்ருல் முறைஸி’ என்பவன். இவனது தந்தை ஒரு யூதனாவான். ஏற்கனவே குர்ஆன் படைக்கப் பட்டது என்ற கருத்து யூத சிந்தனையில் இருந்து எப்படி வந்தது என்பது குறித்து நாம் குறிப்பிட் டுள்ளோம் என்பதை நினைவூட்டுகின்றேன்.

கிறிஸ்தவமும், முஃதஸிலாவும்:

கிறிஸ்தவ சிந்தனைக்கும், முஃதஸிலா சிந்தனைக்கும் இடையில் நிறையவே தொடர்புண்டு எனலாம்.

உமையாக்களின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தனர். சில கிறிஸ்தவ அறிஞர்கள் அரச சபையிலேயே செல்வாக்குடன் திகழ்ந்தனர். முஆவியா(வ) அவர்கள் தனது எழுத்தாளராக சர்ஜூன் இப்னு மன்ஸூர் எனும் கிறிஸ்தவரை நியமித்திருந்தார்.

முஆவியா(வ) அவர்களுக்குப் பின் அவரது மகன் யஸீத் இவரிடம் ஆலோசனை பெறுபவராக இருந்தார். (தபரி 6ஃ183, அல் காமில் 4ஃ7)

சர்ஜூனுக்குப் பின்னர் அந்த இடத்தை அவரது மகன் யஹ்யா அத்திமிஷ்கி பெற்றார்.

இந்த யஹ்யா திமிஷ்கி கிறிஸ்தவ மதத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நூற்களை எழுதினார். ஒரு முஸ்லிம் இப்படிக் கேள்வி எழுப்பினால் இப்படிப் பதில் கூற வேண்டும் என்ற கருத்துப் பரிமாற்ற ரீதியில் அவரது நூற்கள் அமைந்திருந்தன.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் மத ரீதியான விவாதங்கள் நடந்தன. உமையா மற்றும் அப்பாஸிய ஆட்சியினரின் தாராளத்தன்மைக்கு அவை ஆதாரமாகவும் அமைந்தது. கலீபா மஃமூனின் அவையிலேயே சில விவாதங்கள் நடந்தன. இதனூடாக சில கிறிஸ்தவ சிந்தனைகளும் முஸ்லிம்களுக்குள் ஊடுருவின.

முஃதஸிலாக்கள் கழாகத்ரை மறுத்தனர். முஸ்லிம் உலகில் முதன் முதல் கழாகத்ரை மறுத்தவன் ‘மஃபத் அல் ஜுஹனி’ என்ப வனாவான். இவன் இந்த சிந்தனையை அபூயூனுஸ் எனும் கிறிஸ்தவரிடமிருந்து பெற்றான். (அல்பர்க் பைனல் பிரக் 17)

இவனுக்குப் பின்னர் இக்கொள்கையை அதிகம் பேசியவன் ‘சைலான் அத்திமிஷ்கி’ எனும் கிப்தியாவான். இவன் கிறிஸ்தவனாக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவன். இதனூடாகவும் கிறிஸ்தவத்திற்கும் இக்கொள்கைக்குமிடையில் உள்ள தொடர்பை யூகிக்கலாம்.

‘யஹ்யா அத்திமிஷ்கி’ அல்லாஹ், ‘கைர்’ நல்லவன். அவனிடமிருந்துதான் எல்லா நன்மைகளும் ஊற்றெடுக்கின்றன என்றான். முஃதஸிலாக்களும் அல்லாஹ், ‘கைர்’நல்லவன், அவனிடமிருந்து கெட்டது எதுவும் வராது என்று கூறினர். கத்ரையும், அல்லாஹ்வின் நாட்டத்தையும் மறுப்பதற்கான வழியாக இதை அமைத்தனர்.

இவ்வாறே அல்லாஹ்வின் பண்புகளை நிராகரிக்கும் கருத்தையும் இவர்கள் கிறிஸ்தவத் திடமிருந்து பெற்றனர். இதன் அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகள், செயல்களுக்கு மாற்று விளக்கமளித்தனர்.

முஃதஸிலாக்கள் இது போன்ற கிறிஸ்தவ சிந்தனையால் தாக்கம் பெற்றவர்களினூடாக அந்தக் கருத்துக்களைப் பெற்று அவற்றைத் தமது வாதத்திறமையினூடாக இஸ்லாமிய மயப்படுத்தி வந்தனர். முஃதஸிலாக்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பிற மதங்கள் குறிப்பாக யூத, கிறிஸ்தவ மதங்களின் தாக்கம் முக்கிய காரணமாகத் திகழ்ந்தது என்றால் அது மிகையன்று!

முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபல் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே!

1. தவ்ஹீத் – ஏகத்துவம்.
2. அல் அத்ல் – நீதி
3. அல் வஃது வல் வஈது – வாக்குறுதியும் எச்சரிக்கையும்
4. மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன். – (ஈமான்- குப்ர், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை.
5. அல் அம்ரு பில் மஃரூப் வன்னஹீ அனில் முன்கர். – நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது இதில் உள்ள நான்காவது அம்சத்தைத் தவிர மற்றைய அனைத்தும் இஸ்லாத்தில் உள்ள அம்சங்கள் தான். இஸ்லாத்தில் உள்ள இந்த அடிப்படையான அம்சங்களுக்கு அவர்கள் வழங்கிய விளக்கங்கள்தான் வில்லங்கமானது.

தவ்ஹீதும் முஃதஸிலாக்களும்:
தவ்ஹீத் என்பது புனிதமான வார்த்தைதான். முஃதஸிலாக்களிடம் கப்ரு வணக்கம், இறந்தவர்களிடம் பிரார்த்தித்தல், மூட நம்பிக்கைகள் போன்றவை இருக்கவில்லை. அவர்கள் தம்மை ‘அஹ்லுத் தவ்ஹீத்” – தவ்ஹீத்வாதிகள் என அழைத்தும் கொண்டனர். அல்லாஹ்வின் அஸ்மாக்களை ஏற்றுக் கொள்வதையும் அவனது பண்புகளை நிராகரிப்பதையுமே அவர்கள் தவ்ஹீத் என்றனர்.
உதாரணமாக, அல்லாஹ் ‘ஆலிம்” அறிந்தவன் என்றனர். ஆனால், அவனுக்கு ‘இல்ம்” – அறிவு என்ற பண்பு இருப்பதை நிராகரித்தனர், இதற்கு பின்வருமாறு ஒரு வித்தியாசமான வாதத்தை முன்வைத்தனர்.

அல்லாஹுதஆலா தனது அறிவால் ஆலிமாக இருக்கின்றான் என்று கூற முடியாது. ஏனெனில், அல்லாஹ்வுடைய அறிவு, ஆதி அந்தம் அற்றதாக இருக்க வேண்டும். அல்லது பின்னர் உருவாகிய புதிய ஒன்றாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அறிவு பழையது. ஆதி, அந்தம் அற்றது என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் அல்லாஹ்வும் ஆதி-அந்தம் அற்றவன். அவனது அறிவும் ஆதி-அந்தம் அற்றது. எனவே, ஒரே நேரத்தில் ஆதி-அந்தம் அற்ற பழையது இரண்டு இருந்ததாகக் கூற நேரிடும். இது தவ்ஹீதுக்கு மாற்றமானது.

இதற்கு மாற்றமாக ஆரம்பத்தில் அல்லாஹ்தான் இருந்தான். அவனது அறிவு பின்னர் உருவானது என்று கூறினால் அதுவும் தவறுதான். ஏனெனில், அல்லாஹ்வில் புதிய மாற்றம் உருவாகிறது என்று கூற நேரிடும். என்று தத்துவவாதிகளின் தத்துவங்ளைப் படித்து ஏதோ உளர ஆரம்பித்தனர். அல்குர்ஆனில் அல்லாஹ்வின் அறிவு என நேரடியாகப் பல வசனங்கள் வந்திருந்தும் அவற்றைக் கவனத்திற் கொள்ளாமல் இந்தக் குதர்க்கத்தில் ஈடுபட்ட அதே நேரம் தம்மைத் தவ்ஹீத் வாதிகள் என்றும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஏற்றுக் கொள்பவர்களை முஷ்ரிக் குகள் என்றும் கூறினர்.

இமாம் அஷ்அரி(ரஹ்) அவர்கள் முஃதஸிலாவாக இருந்து பின்னர் அந்தக் கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர். முஃதஸிலாக்களின் இந்தக் கருத்து பற்றி அவர் விபரிக்கையில்,

‘முஃதஸிலாக்கள் ஆட்சியாளர்களின் வாளுக்குப் பயந்தனர். உண்மையில் அவர்களது நோக்கம் அல்லாஹ்வையே நிராகரிப்பதுதான். அல்லாஹ் அறிவு இல்லாமலே ஆலிம், வல்லமை இல்லாமலேயே காதிர் – வல்லமை மிக்கவன். ஹயாத் – வாழ்வு இல்லாமலேயே ‘ஹையு” – உயிர் வாழ்பவன் என்று அவர்கள் கூறினர். அறிவு இல்லாதவன் ஆலிமாக முடியாது. வாழ்வு இல்லாதவன் வாழ்பவனாக முடியாது. வல்லமை இல்லாதவன் வல்லவனாக முடியாது. முஃதஸிலாக்கள் அல்லாஹ் ஆலிம் இல்லை என்று நேரடியாகச் சொன்னால் ஆபத்து என்றுதான் இப்படிக் கூறினர். உண்மையில் அல்லாஹ்வையே நிராகரிப்பதுதான் அவர்களின் நோக்கமாகும். தாம் அல்லாஹ்வின் அஸ்மாக்களை ஏற்பது போல் அவர்கள் நடித்தாலும் அல்லாஹ்வின் ஸிபத்துக் களை மறுப்பதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் அஸ்மாக்களையும் மறுக்கவே செய்தனர்.

இது குறித்து முஃதஸிலாக்கள் செய்யும் வாதங்களைப் படித்தால் தலை சுற்ற ஆரம்பிக்கும். ஆய்வு எனும் பெயரில் இவர்கள் மயிர் பிளக்கும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபாடு காட்டினர்.

02. அல் அத்ல் – நீதி, நேர்மை:

‘அல் அத்ல்” என்றால் நீதி, நேர்மை என்று அர்த்தப்படும். இதன் மூலம் அவர்கள் நாடியது என்னவென்றால் மனிதர்களின் செயல்கள், பேச்சுக்கள் என்பன அல்லாஹ்வால் படைக்கப்பட்டவை அல்ல. அல்லாஹ் நல்லவன், அவனிடமிருந்து நல்லது மட்டுமே வெளிப்படும். தீமையை அல்லாஹ் படைப்பதில்லை என வாதிட்டனர். நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். அந்த அடிப்படையை மறுத்தனர். அல்லாஹ் தீமையை நாடமாட்டான் என்று வாதிட்டனர்.

கேட்பதற்கு இந்த வாதம் நல்லது போல் இருந்தாலும் அல்லாஹ் நாடாததும் உலகில் நடக்கின்றது என்று கூறுவதாக இது அமைந்துவிடும். அல்லாஹ் படைக்காததும் உலகில் இருப்பதாக சொல்வதாக அமையும். அத்துடன் தீமையைப் படைக்க தனிக் கடவுள் இருப்பதாகவும் ஆகிவிடும். அத்துடன் ‘கழாகத்ரை” மறுப்பதற்கும் இந்த அடிப்படையை ஆதாரமாக ஆக்கினர். அல்லாஹ் தீமையைப் படைக்கவில்லை. தீமையை நாடமாட்டான். மனிதனின் செயல்களை அவனே படைத்துவிட்டு தீமை செய்தவர்களுக்குத் தண்டனை கொடுப்பது அல்லாஹ்வின் நீதிக்கு ஏற்றதில்லை என்று கூறி, தாம் மட்டுமே அல்லாஹ்வை உண்மையான நீதிமானாக நம்புவதாக வாதிட்டனர். எனவே, தம்மை ‘அஹ்லுல் அத்ல்” – நீதிக்குரியவர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்.

அல் வஃது வல் வஈது:

வாக்குறுதியும் எச்சரிக்கையும் என்பதன் மூலம் முஃமினுக்குக் கூலி கொடுப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகும். பாவம் செய்தவன் தவ்பா செய்தால்தான் அல்லாஹ் அவனை மன்னிப்பான். பெரும் பாவம் செய்தவன் தவ்பா செய்யாமல் மரணித்தால் அவன் நரகில் நிரந்தரமாக இருப்பான். அவன் ஷபாஅத் மூலமோ விஷேட மன்னிப்பின் மூலமோ நரகில் இருந்து வெளியேற மாட்டான். காபிருக்குக் கிடைக்கும் வேதனையை விட இவனுக்குக் கிடைக்கும் வேதனை சற்று குறைவாக இருக்கும் என்று கூறினர்.

4. மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன்:
குப்ருக்கும் ஈமானுக்கும் இடைப்பட்ட நிலை என்பது முஃதஸிலாக்கள் உருவாக்கிய புதிய கோட்பாடாகும். ஒரு முஸ்லிம் பெரும்பாவம் செய்தால் அவன் காபிர் என்பது கவாரிஜ்களின் நிலைப்பாடாகும். முஃதஸிலாக்கள் அவன் காபிரும் இல்லை, முஃமினும் இல்லை இரண்டுக்கும் இடையில் இருக்கின்றான். அவன் மரணிக்க முன்னர் தவ்பா செய்துவிட்டால் முஃமினாகிவிடுவான். இல்லையென்றால் நரகில் நிரந்தரமாக இருப்பான் என்று கூறினர்.

பெரும்பாவம் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாது! அல்லாஹ் நாடினால் அவனை மன்னிக்கலாம். அவன் நரகம் சென்றாலும் எப்போதாவது ஒருநாள் அவன் சுவனம் நுழைவான் என்பது அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையாகும்.

5. நன்மையை ஏவுதலும், தீமையைத் தடுத்தலும்:

தீமை செய்பவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சக்திக்கு ஏற்ப போராட வேண்டும். ஆட்சியாளர்கள் பாவம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கட்டுப்படாமல் வெளியேற வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். ஆட்சியாளரிடம் தெளிவான குப்ரைக் காணும் வரை அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். ஆட்சியாளனுக்கு எதிரான செயற்பாடுகள் அவர்களை இன்னும் இன்னும் பாவம் செய்யவே தூண்டும்.

இந்த ஐந்து அம்சங்களில் நான்கு அம்சங்கள் நல்ல அம்சங்களாக இருந்தாலும் இது குறித்த முஃதஸிலாக்களின் விளக்கம் விபரீதமானது என்பதை இதனூடாக அறியலாம்.

இத்துடன் முஃதஸிலாக்கள் இன்னும் பல கொள்கைகளைக் கூறினர். நாளை மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என குர்ஆனும், ஹதீஸும் கூறுகின்றன. முஃதஸிலாக்கள் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அல்லாஹ்வைப் பார்க்க முடியாது. அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்றால் அவனுக்குத் திசை யையும், இடத்தையும் கற்பிக்க நேரிடும். அல்லாஹ் திசை, இடத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்று கூறியதுடன் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என்று வரும் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கூறியதுடன் ஹதீஸ்களையும் மறுத்தனர்.

7. அல்லாஹ் அர்ஷின் மீதானான் என்பதை மறுத்தனர்:

அவன் அர்ஷின் மீது தனது ஆட்சியை நிலைநாட்டினான் என்று கூறினர். இதே கருத்தையே அஷ்அரிய்யாக்களும் கூறினர். இதுதான் இன்று அஹ்லுஸ் சுன்னாவின் நிலைப்பாடாக மக்கள் மத்தியில் போதிக்கப் படுகின்றது. அது தவறாகும். அல்லாஹ் அர்ஷின் மேல் உள்ளான் என்பதே அஹ்லுஸ்சுன்னாவின் நிலைப்பாடாகும்.

8. ஷபாஅத்தை முஃதஸிலாக்கள் மறுத்தனர்:

நபியவர்கள் பெரும்பாவம் செய்தவர்களுக்காக பரிந்துரைப்பார்கள் என்பதை மறுத்ததுடன், பாவிகளுக்கு எதிராக நபியவர்கள் முறைப்பாடுதான் செய்வார்கள் என்றனர். பெரும் பாவம் செய்பவர்கள் நரகம் செல்வார்கள் என்ற தமது கருத்துக்கு முரண்படுவதால் குர்ஆனுடைய சில வசனங்களை எடுத்து குதர்க்கமான வாதங்களை முன்வைத்து ஷபாஅத்தை மறுத்தனர்.

9. இறைநேசர்களுக்கு கராமத்து ஏற்படலாம் என்பதை மறுத்தனர்:

வலிமார்கள் மூலமாகவும் அற்புதங்கள் நடக்கும் என்றால் வலிமார்கள் நபிமார்களுக்கு ஒப்பாகிவிடுவார்கள் என்று வாதிட்டனர்.

10. குர்ஆன் படைக்கப்பட்டது என்று பெரும் புரளியைக் கிளப்பி இஸ்லாமிய உலகில் குழப்பத்தை விளைவித்தனர்:

இவ்வாறு இஸ்லாமிய உலகில் பல்வேறு பட்ட கொள்கைக் குழப்பத்தை முஃதஸிலாக்கள் உருவாக்கினார்கள்.

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும்.

குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம்.

செத்துப் போன வாதங்களை உயிர்ப்பிப்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட சிந்தனைகளை இறக்குமதி செய்த அனைவரும் குர்ஆன், ஹதீஸின் பெயரில்தான் இறக்குமதி செய்தனர். இன்றும் அதே நிலை நீடிக்கின்றது. எமது ஈமானை நாம் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால் இது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும்.

அடுத்து, இஸ்லாத்தில் இல்லாத ஒரு கொள்கையை உருவாக்கிவிட்டு அதற்கு சாதகமாக அவர்கள் எப்படியெல்லாம் குதர்க்கம் புரிந்தனர் என்பதைப் புரிந்து கொண்டால், தப்பான ஒரு கொள்கைக்கு சாதகமாகக் கூட சிலர் குர்ஆன், சுன்னாவை வளைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். குர்ஆன், சுன்னாவுக்கான சரியான பொருளைப் புரிந்து கொள்ள, அவற்றை ஆரம்பகால அறிஞர்கள் அதாவது, சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபித்தோழர்கள், தாபிஈன்கள் போன்ற நல்லவர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்ற விபரம் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், குப்ரிய்யத்தான கொள்கைகள் தலைகாட்டும் போதெல்லாம் அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் எவ்வளவு நுணுக்கமான ஆழமான பார்வையுடன் அவற்றை அணுகி அழித்துள்ளனர் என்பதையும் புரிய முடியும். அத்தகைய ஆழமான, ஆரோக்கியமான, நுணுக்கமான பார்வையுள்ள அறிஞர்களின் மறைவுகள்தான் இந்த சமூகத்தில் மிகப்பெரும் இழப்பாகும்.

முஃதஸிலா வாதம்:

குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை குர்ஆனே கூறுகின்றது.

‘நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு, இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாம் ஆக்கினோம்.” (43:3)

இங்கே ‘ஜஅல்னாஹு” என்று அல்லாஹ் கூறுகின்றான். ‘ஜஅல” என்றால் படைத்தான் என்பதே அர்த்தமாகும். அல்குர்ஆனில் ‘ஜஅல” ஆக்கினான் என்பது ‘ஹலக” படைத்தான் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான ஆதாரங்களைக் காணலாம். இப்படிக் கூறி பின்வருவன போன்ற வசனங்களைத் தமது வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் கூறினர்.

(பார்க்க – (2:22, 30, 66, 125), (6:1, 6, 96, 97), (7:27, 189), (10:5, 67), (13:3), (15:16 ), 16:78), (17:12), (20:53), (25:47), (27:61)

இவ்வாறு அவர்கள் வசனங்களை அடுக்கிக் கொண்டு செல்லும் போது பார்க்கின்ற பாமர மக்கள் ஆதாரங்களை அடுக்கடுக்காக அள்ளி வீசுவதாகவே கருதுவர். வழிகேட்டை இறக்குமதி செய்யும் பலரும் சம்பந்தமில்லாமல் வசன எண்களை அள்ளி வீசி மக்கள் மனதை மயக்கவும், மாற்றவும் முயற்சித்து வருகின்றனர். இந்த மாய வலையை மதி கொண்ட அறிஞர்கள் யூகித்துக் கொள்கின்றனர். மதிகெட்டவர்கள் இவர்களின் சதி வலையில் வீழ்ந்து சத்திய வழியில் இருந்து சருகிச் செல்கின்றனர்.

அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களின் பதில்:

இந்த வாதத்திற்கு பதில் சொல்லும் போது இஸ்லாமிய அறிஞர்கள் முஃதஸிலாக்களிடம் சில கேள்விகளைக் கேட்டனர். ‘ஜஅல” என்றால் ‘ஹலக” அதாவது படைத்தான் என்பதுதான் உங்கள் வாதமா? ஆம்!, அப்படித்தான். அப்படித் தான் சொல்கின்றோம். இனியும் அப்படித்தான் சொல்வோம். படைப்புக்களை அல்லாஹ் தனித்துப் படைத்தானா அல்லது படைக்கும் விடயத்தில் அல்லாஹ்வுடன் யாரும் கூட்டு சேர்ந்தனரா என்று கேட்டனர்.

அதற்கு முஃதஸிலாக்கள்: இல்லை இல்லை, அல்லாஹ் தனியாகவே படைத்தான். அதில் அவனுடன் யாரும் கூட்டுச் சேரவில்லை.

மனிதர்களில் சிலர் குர்ஆனைப் படைத்தனர் என்று யாராவது சொன்னால் அவன் முஃமினா? காபிரா? எனக் கேட்கப்பட்ட போது, இல்லை அவன் காபிர். அவனது இரத்தம் ஹலாலாகும் என்று முஃதஸிலாக்கள் பதில் கூறினர்.

அல்லாஹ்வை மனிதர்கள் படைத்தார்கள் என்று சொல்பவன் காபிரா? முஃமினா? எனக் கேட்ட போதும் முஃதஸிலாக்கள் காபிர்கள் என்றனர்.

இவ்வாறே மனிதர்களில் சிலர் மலக்குகளைப் படைத்தனர் என்று கூறினால் அல்லாஹ்வுக்கு இணைகளைப் படைத்ததாகக் கூறினால் அவனைப் பற்றி என்ன கூறுவீர்கள் என்று கேட்ட போதும் அவனைக் காபிர்கள் என்று கூறுவோம் என்று பதில் கூறினர்.
இவ்வாறு பல கேள்விகளைக் கேட்ட பின்னர் நீங்கள் காபிர்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாளர்களாகிவிட்டீர்கள் எனக் கூறி குர்ஆனில் இருந்து ஆதாரங்களை அடுக்கினர்.

‘நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையே உங்களுக்குப் பொறுப்பாளனாக ஏற்படுத்தியிருக்கிறீர்கள்….” (16:91)

‘ஜஅல” என்பதற்குப் படைத்தான் என்பது அர்த்தம் என்றால் ‘கத்ஜஅல்துமுல்லாஹ் கபீலா” அல்லாஹ்வையே பொறுப்பாளனாக படைத்துள்ளீர்கள் என்று அர்த்தமாகும். இந்த அர்த்தத்தைச் செய்தால் அல்லாஹ்வைச் சில மனிதர்கள் படைத்தார்கள் என்று அர்த்தப்படும். நீங்கள் காபிராகிவிடுவீர்கள்.

அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள் (2:224) என குர்ஆன் கூறுகின்றது. ‘ஜஅல’ என்றால் படைத்தான் என்பது அர்த்தம் என்றால் அல்லாஹ்வைத் தடையாகப் படைக்காதீர்கள் என்று அர்த்தப்படும். இது பொருந்துமா?

‘அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகின்றனர்.” (16:57)

என்ற மேற்படி வசனத்தில் ‘ஜஅல” பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஜஅல” என்றால் படைத்தான் என்பது அர்த்தம் என்றால் அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களைப் படைக்கின்றனர் என்று அர்த்தம் மாறுபடும். இது சரியா?
‘அர்ரஹ்மானின் அடியார்களான வானவர்களைப் பெண் மக்களாக அவர்கள் ஆக்குகின்றனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்களது சாட்சியம் பதிவு செய்யப்பட்டு இவர்கள் (மறுமையில்) விசாரிக்கப்படுவார்கள்.” (43:19)

‘ஜஅல” என்பதற்குப் படைத்தான் என்பது அர்த்தமென்றால் ரஹ்மானின் அடியார்களான வானவர்களைப் பெண்களாகப் படைக்கின்றனர் என்று வரும். இது குப்ர் அல்லவா?
‘அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணையாளர்களை ஏற்படுத்திக் கொண்டனர். ‘நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக நீங்கள் செல்லுமிடம் நரகமாகும்” என (நபியே!) நீர் கூறுவீராக!” (14:30)

அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துகின்றனர் என்பதற்கு இவர்கள் சொல்வது போல் அர்த்தம் செய்தால் அல்லாஹ்வுக்கு இணையாளர்களைப் படைத்தனர் என்று அர்த்தப்படும்.
‘அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக இவர்கள் ஜின்களை ஆக்கிவிட்டனர். அவனே அவர்களைப் படைத்துள்ளான். எவ்வித அறிவுமின்றி ஆண் மக்களையும், பெண் மக்களையும் அவனுக்கு கற்பனை செய்கின்றனர். அவன் தூய்மையானவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவனாகி விட்டான்.” (6:100)

ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஆக்கிவிட்டனர் என்பதற்கு இவர்கள் சொல்வது போல் அர்த்தம் செய்தால் ஜின்களை அல்லாஹ்வுக்கு நிகராக இவர்கள் படைத்தனர் என அர்த்தம் அமைந்ததாகிவிடும்.

”அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எதையும் இறக்கி வைக்கவில்லை” என அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனது கண்ணியத்திற்கு ஏற்றமுறையில் அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. ஒளியாகவும், மனிதர்களுக்கு நேர்வழியாகவும் மூஸா கொண்டுவந்த வேதத்தை இறக்கியவன் யார்? எனக் கேட்பீராக! அதை நீங்கள் (தனித்தனி) ஏடுகளாக ஆக்கி அவற்றில் (சிலதை) வெளிப்படுத்துகின்றீர்கள். அதிகமானதை மறைத்தும் விடுகின்றீர்கள். நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறிந்திராதவற்றைக் கற்றுக் கொடுக்கப்பட்டீர்களே (அந்த வேதத்தை இறக்கியவன் யார்? எனக்கேட்டு) அல்லாஹ்தான் என்று கூறுவீராக! பின்னர் (வீண் விவாதத்தில்) அவர்கள் மூழ்கி, விளையாடிக் கொண்டிருப்பதிலேயே அவர்களை விட்டு விடுவீராக.” (6:91)

தவ்றாத் வேதத்தை தனித்தனி ஏடுகளாக ஆக்கினீர்கள் என்பதை இவர்கள் கூறுவது போல் அர்த்தம் செய்தால் தவ்றாத்தை தனித்தனி ஏடுகளாகப் படைத்தீர்கள் என்று அர்த்தம் செய்ய நேரிடும்.

‘(வேதத்தை) கூறுபோட்டவர்கள் மீது (வேதனையை) நாம் இறக்கியதைப் போன்று இக்குர்ஆனைப் பல பிரிவுகளாக ஆக்கியோர் மீதும் (இறக்குவோம்).” (15:90-91)

‘ஜஅல” என்பதற்குப் படைத்தான் என்று அர்த்தம் செய்தால் குர்ஆனை மனிதர்களில் சிலர் படைத்தனர் என அர்த்தம் செய்ய நேரிடும்.

எனவே, குர்ஆனை அறபி மொழியில் ஆக்கினோம் (16:57) என்ற வசனத்தை வைத்து அறபி மொழியில் படைத்தோம் என அர்த்தம் செய்தால் அதுதான் அதன் அர்த்தம் என அடம் பிடித்தால் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்படும் என இஸ்லாமிய அறிஞர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வீசி அவர்களின் முதுகெலும்பை முறித்தனர். ஆனால், வழிகேட்டை விலை கொடுத்து வாங்கியவர்கள் தமது முட்டாள் தனமான வாதத்தில் முரட்டுத்தனமான பிடிவாதத்தில் இருந்தனர்.

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும்:

குர்ஆன் ஒரு பொருளா (ஷைஉன்) இல்லையா? என்று கேட்பர். அதை ஒரு பொருள் என்று கூற நேரிடும். அதை ஒரு பொருள் இல்லையென்றால் ஒன்றுமில்லை என்றாகிவிடும். இந்தக் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ‘ஹுவ ஷைஉன் லைஸ கல் அஷ்யாஇ” அது ஒரு பொருள் தான். ஆனால், ஏனைய பொருள் போன்றதல்ல எனப் பதில் கூறினர். மற்றும் சிலர் அது பொருள் அல்ல, ‘அம்ர்” அல்லாஹ்வின் கட்டளை எனப்பதில் கூறினர். எப்படிக் கூறினாலும்,

ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ

‘அவனே உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனே யாவற்றை யும் படைத்தவன். எனவே அவனையே நீங்கள் வணங்குங்கள். அவன் யாவற்றின் மீதும் பொறுப்பாளன்.”
(6:102)

‘அவனே யாவற்றையும் படைத்தவன்” (6:102) என குர்ஆன் கூறுகின்றது. அல்லாஹ் ‘குல்லு” என்ற சொல்லைப் பாவித்துள்ளான். இதற்குள் அனைத்துமே அடங்கிவிடும். எதுவும் இதை விட்டு விதிவிலக்காகாது. இந்த அடிப்படையில் அனைத்தையும் படைத்தவன் என்ற வாசகத்திற்குள் குர்ஆனும் வந்துவிடும். எனவே, குர்ஆனும் படைக்கப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என முஃதஸிலாக்கள் அடித்துக் கூறினர்.

அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களின் பதில்:

‘குல்லு” அனைத்தும் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அது எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் குறித்தேயாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. விதிவிலக்கும் இருக்கலாம்.

‘அது தனது இரட்சகனின் கட்டளைப் பிரகாரம் அனைத்துப் பொருட்களையும் அழித்துவிடும். அவர்களது குடியிருப்புக்களைத் தவிர (வேறெதுவும்) காணப்படாதவாறு அவர்கள் காலையை அடைந்தனர். குற்றவாளிகளான இக்கூட்டத்தாருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.” (46:25)

இந்த வசனத்திலும் ‘குல்லு” – அனைத்தையும் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்தையும் அழித்ததாகக் கூறிவிட்டு அடுத்த வார்த்தையிலே அவர்களது குடியிருப்புக்கள் அழிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

‘ஆத் சமூகத்திடமும் (அத்தாட்சி இருக்கின்றது.) மலட்டுக் காற்றை நாம் அவர்கள் மீது அனுப்பிய போது, அது எதன் மீது பட்டாலும் அதனை அது உக்கிப் போன எலும்பைப் போலாக்காமல் விட்டு விடவில்லை.”
(51:41-42)

காற்றுப் பட்டதும் அனைத்துமே உக்கிப் போன எலும்புகள் போல் ஆனதாக இந்த வசனம் கூறுகின்றது. எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்தக் காற்று பூமி, மலைகள், வீடுகள், மரங்கள் மீதும் பட்டது. இருப்பினும் அவை உக்கிப்போன எலும்புகளாக மாறவில்லை. எனவே, விதிவிலக்குகள் இருக்கின்றன.

‘அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.” (27:23)

ஸபா நாட்டு இளவரசிக்கு அனைத்தும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவளுக்குக் கொடுக்கப்படாத விதிவிலக்கான எவ்வளவோ அம்சங்கள் உண்டென்பது அனைவரும் அறிந்ததே!

அல்லாஹ் அனைத்தையும் படைத்தான் என்ற பதத்திற்குள் குர்ஆனும் வரும். அதை விட்டும் எதுவும் வெளியேற முடியாது. என வாதிட்டால் ஏற்படும் விளைவுகளைப் பாருங்கள்.

وَاصْطَنَعْتُكَ لِنَفْسِي

‘இன்னும் எனக்காக உம்மை(த் தூதராக) நான் தேர்ந்தெடுத்தேன்.” (20:41)

وْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّـهُ نَفْسَهُ ۗ وَاللَّـهُ رَءُوفٌ بِالْعِبَادِ

‘ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மையையும், தான் செய்த தீமையையும் (தனக்கு) முன் கொண்டு வரப்பட்டதாகக் காணும் நாளில் (தீமை செய்த ஆத்மா) தனக்கும், அதற்குமிடையில் நீண்ட தூர இடைவெளி இருக்க வேண்டுமே என்று ஆசைப்படும். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். மேலும், அல்லாஹ் அடியார்களுடன் பெரும் கருணையாளனாவான்.” (3:30)

قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قُل لِّلَّـهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ۚ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

‘வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை யாருக்குரியன? என்று (நபியே) நீர் கேட்டு, ‘அல்லாஹ்வுக்கே உரியவை” என்று நீரே கூறுவீராக! அவன் தன்மீது கருணையைக் கடமையாக்கிக் கொண்டான். மறுமை நாளில் நிச்சயமாக அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.” (6:12)

وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۖ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِن بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ

‘எமது வசனங்களை நம்பிக்கை கொண்டோர் உம்மிடம் வந்தால், ‘உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!” என்று கூறுவீராக! உங்களது இரட்சகன் கருணை காட்டுவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் யார் அறியாமையின் காரணமாக ஏதேனும் ஒரு தீமையைச் செய்து, இதன் பின்னரும் பாவமன்னிப்புக் கேட்டு, (தன்னைச்) சீர்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.” (6:54)

وَإِذْ قَالَ اللَّـهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَـٰهَيْنِ مِن دُونِ اللَّـهِ ۖ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ ۚ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّامُ الْغُيُوبِ

‘மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும் எனது தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும் போது, அ(தற்க)வர் ‘நீ மிகத் தூய்மையானவன்; எனக்கு உரிமை இல்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய். ஆனால், உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று கூறுவார்.”
(5:116)

இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு ‘நப்ஸ்” உண்டு என்று கூறுகின்றது. அல்லாஹ்வுக்கு ‘நப்ஸ்” உண்டு என்பதை ஏற்கின்றீர்களா? என முஃதஸிலாக்களிடம் கேட்ட போது ஏற்பதாகக் கூறினர். அப்படியென்றால் இந்த வசனத்தை வைத்து நீங்கள் உங்கள் வாதத்தை அளந்து பாருங்கள்.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

‘ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! ” (3:185)

எல்லா ஆத்மாக்களும் மரணத்தை ருசித்தே தீரும் என இந்த வசனம் கூறுகின்றது. அல்லாஹ்வுக்கும் ‘நப்ஸ்” – ஆன்மா உண்டு.

குர்ஆன் ஒரு பொருள்தானே! அனைத்துப் பொருட்களையும் அல்லாஹ் படைத்தான் என்ற வசனத்தின் அடிப்படையில் குர்ஆனும் படைக்கப்பட்டதே! ‘குல்லு” என்பதை விட்டு எதுவும் விதி விலக்காகாது என்ற உங்கள் வாதப்படி அல்லாஹ்வுக்கும் நப்ஸ் உள்ளது! எல்லா நப்ஸுகளும் மரணத்தை சுவைத்தே தீரும் என்றால் அல்லாஹ் வின் நப்ஸும் மரணத்தை சுவைக்கும் என்று கூறப் போகின்றீர்களா? உங்கள் வாதப்படி இந்த வசனத்தை அணுகினால் இஸ்லாத்தை விட்டே வெளியேற நேரிடும் என இந்த வாதத்தின் அடிப்படையைத் தகர்த்தனர்.

அடுத்து, அல்லாஹ்வின் படைப்புக்கள் வேறு, அவனது ‘அம்ர்” – ஏவல், ‘கவ்ல்” – வார்த்தை வேறு என்பதைக் குர்ஆனே பிரித்துக் காட்டுகின்றது.

‘நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து, பின்னர் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீதானான். அவன் இரவைப் பகலால் மூடுகிறான். அது (இரவாகிய) அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகளாக(ப் படைத்துள்ளான்.) அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகி விட்டான்.” (7:54)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி கூறப்படுகின்றது. அத்துடன் ‘அல்அம்ர்” – ஏவல் என்ற வார்த்தை அதாவது அதன் மூலம்தான் அவன் படைப்புக்களைப் படைத்தான். அது பற்றியும் கூறப்படுகின்றது. அவனது படைப்பு வேறு, அவனது ‘அல் அம்ர்” – ஏவல் வேறு என்பது இதில் இருந்து விளங்குகின்றது.

அல்லாஹ்வின் ‘குன்” – ஆகுக! என்ற வார்த்தை மூலமே அனைத்தும் படைக்கப்பட்டது என குர்ஆனின் ஏராளமான வசனங்கள் கூறுகின்றன. படைப்பு வேறு ‘குன்” என்ற வார்த்தை வேறு என்பது இங்கே தெளிவாகின்றது.

‘நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து, பின்னர் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீதானான். அவன் இரவைப் பகலால் மூடுகிறான். அது (இரவாகிய) அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகளாக(ப் படைத்துள்ளான்.) அறிந்துகொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகி விட்டான்.” (7:54)

படைப்புக்களும் அல்லாஹ்வுக்கே உரியன, ஏவலும் அவனுக்கே உரியது என இந்த வசனம் தெளிவாகக் கூறுவதால் அல்லாஹ்வின் ஏவல் ‘அம்ர்” என்பது படைப்புக்குள் வராது. இவ்வாறு கூறியதுடன் குர்ஆன் அல்லாஹ்வின் அம்ருக்குள் அடங்கும் என்பதற்கு என்ன நேரடியான ஆதாரம் என அடம்பிடித்தனர்.

இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் சுற்றி வளைத்து விளக்கும் ஏராளமான வசனங்களைக் காட்டிய அதே நேரம் நேரடியாகக் குறிக்கும் வகையில் பின்வரும் வசனத்தைக் காட்டினர்.

‘இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இதை அவனே உங்களுக்கு இறக்கினான். எவர் அல்லாஹ்வை அஞ்சுகின்றாரோ அவரை விட்டும் அவரது தீமைகளை அவன் போக்கி அவருக்குரிய கூலியை மகத்தானதாக ஆக்குவான்.” (65:5)

இது குர்ஆன் குறித்தே பேசுகின்றது. எனவே, ‘அல் அம்ர்” என்பதில் அடங்கக் கூடிய குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகின்றது என ஆணித்தரமாக சத்தியத்தை எடுத்து வைத்து குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழி கெட்ட கொள்கைக்கு சாவு மணியடித்தனர்.
أحدث أقدم