ஒரு காலத்தில் அடுப்பங்கரை மட்டுமே தெரிந்த பெண்கள் இன்று கல்வியில் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சி தரும் விடயம் என்பது ஒரு புறமிருக்க,
ஆசிரியை, அலுவலர் என்ற சாதாரண பதவிகளையும் தாண்டி இன்று பெண்கள் அதிபர், முகாமையாளர், பணிப்பாளர், பிரதேச செயலாளர் போன்ற நிறைவேற்றுப் பொறுப்புகளையும் (executive posts) நோக்கிய பெண்களின் வரவு என்றோ ஆரம்பித்து மிக வேகமாக அதிகரித்துவருகிறது.
இது ஆரோக்கியமானதொரு சமூக முன்னேற்றமா? வரவேற்கத்தக்க சமூக நகர்வா? அதிகம் சிந்திக்கவேண்டியுள்ளது.
அலுவலக வேலைகள் காரணமாக அவ்வப்போது இரவு எட்டு மணிக்குப் பின்னரே வீடு திரும்பும் நிலை, தாயின்றி வாடும் பிள்ளைகள், வீடுகளில் அமர்ந்துகொண்டு பிள்ளைகளுக்கு எதையாவது கூறி சமாளிக்கத் தெரியாமல் சமாளிக்கும் தந்தையர், ஆண் சாரதியோடு தனியாக வாகனத்தில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம், வாகனத்தில் இரு ஆண்களுக்கு இடையில் நடுவே அமர்ந்து பயணிக்க வேண்டிய சங்கடம், பெற்றோர் மற்றும் கணவருக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்ற முடியாத தவிப்பு, இத்தனைக்குமிடையே வீட்டுப் பணிகளையும் செய்தே ஆகவேண்டிய அவதி...இவை போன்ற இன்னும் பல சொல்லமுடியாத கஷ்டங்கள் பெரும் பதவிகளை அலங்கரிக்கும் பெண்களுக்கு உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.
பெரியதொரு பாடசாலை அதிபராக இருக்கும் ஒரு பெண்மணி பற்றி சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் கூறிக்கொண்டிருந்தார். தனது அதிகரித்த வேலைப்பளுக்கள் காரணமாக தனது பிள்ளை சுயமாக சாப்பிடவும் தனது பல வேலைகளை சுயமாக நிறைவேற்றவும் பழக்கியிருப்பதாக கூறினார். பிள்ளையின் வயது என்னவென்று கேட்டேன். "மூன்றரை" என்றார். அதிர்ச்சிதான் ஏற்பட்டது. தாயன்பு, தாயின் அரவணைப்பு இல்லாத இயந்திரத்தனமான பிள்ளைகளையா இந்த சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று கேட்டேன். நண்பரிடம் பதிலில்லை.
என்ன வகையான 'சமூக முன்னேற்றம்' இது?
இக்கேள்வி நிச்சயமாக பெண்கள் படிப்பதற்கும் கல்வியில் முன்னேறிச்செல்வதற்கும் எதிரானதல்ல.
பயனுள்ள கல்வியைப் பெறுவதென்பதை இஸ்லாம் ஆண், பெண் வேறுபாடின்றி இருபாலாருக்குமே கடமையாக்கியுள்ளது.
அறியாமையை போக்கவும், கல்வியறிவுபெறவும், வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்கவும், பிள்ளைகளை சிறந்த ஒழுக்கமும் அறிவும் பண்பாடும் கொண்ட பிள்ளைகளாக வளர்த்தெடுக்கவும் கல்வியறிவு தேவை என்ற நோக்கங்களையெல்லாம் மறந்து, 'தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள மட்டும்தான் படிப்பு' என்ற மிகக் குறுகிய நோக்கத்தை ஒரே இலக்காகக் கொண்டதுதான் இவ்விளைவுகளுக்குக் காரணம்.
இப்போதே நிலைமை இப்படி என்றால் எதிர்காலம் இன்னும் மிக மிக கவலைப்படத்தக்கதாக இருக்கும்.
ஏனெனில் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களையும் அதிகமாக நிறைத்திருப்பவர்களும் பொதுப் பரீட்சைகளிலும் போட்டிப் பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுபவர்களும் ஆண்களை விட அதிகமாக பெண்களே. இந்நிலையில் பெண்களும் ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் தொழில் பெறுவது மட்டுமே - எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு படித்து மிக உயர்ந்த பதவியை அடைவதே முழு இலட்சியம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணிக்கும் வரை எதிர்காலம் மிகக் கவலைப்படத்தக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
குடும்ப கஷ்டம், வருமானம் போதாமை, பெண்தான் இத்தொழிலுக்குப் பொருத்தம் என்பன போன்ற தனிநபர் மற்றும் சமூகத் தேவைகளின் நிமித்தம் பெண்கள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி பொருத்தமான தொழிலில் ஈடுபடுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால், இன்றைய நிலையில் அத்தியாவசியத் தேவைகள் என்பதையும் தாண்டி, ஆடம்பரமான வாழ்க்கை, சொகுசு, கௌரவம் என்பவற்றுக்காகவும் 'படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதா...?' என்றவாறான சிந்தனைகளுமே பல பெண்களின் தொழில்செய்தலுக்கான பின்னணிகளாக உள்ளன.
தாய்மாரின் அருகாமைக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் பிள்ளைகள், என்ன செய்வதென்று புரியாலும் வெளியே சொல்ல முடியாமலும் அவஸ்தைப்படும் கணவர்கள், ஒழுங்கின்றி அலங்கோலமாய் காட்சி தரும் வீடுகள், சந்திக்கமுடியாமல் தவிக்கும் சுற்றங்கள் மற்றும் உறவுகள்... இன்னும் எத்தனையோ இவ்வாறான 'உத்தமங்கள்' சடவாத சிந்தனைக்குள் சகதியாகிவிட்டன.
அநேகமாக அனைத்து பிரதேசங்களிலும் ஆண் மாணவர்கள் கல்வியில் ஆர்வம்காட்டாமல் வெளிநாடு செல்லும் கனவுகளில் சிலரும், போதைவஸ்து பாவனை போன்ற தீய பழக்கவழங்களுக்கு அடிமையாகி பலரும் அர்த்தமற்ற, வீணான பொழுதுபோக்குகளில் பலரும் என சீரழிந்துகொண்டிருப்பதால் பெண்கள் கல்வி, தொழில், பதவி போன்ற இடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை சமூகத் தலைமைகள் உணர்ந்து காரியமாற்ற வேண்டியது மிகமிக அவசியம்.
யாரையும் சங்கடப்படுத்துவதோ, குற்றப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ நிச்சயமாக - மிக நிச்சயமாக இப்பதிவின் நோக்கமல்ல. மிக குறிப்பாக சாதாரண தொழில்களையும் கடந்து பெண்கள் உயர் பதவிகள் வகிப்பதனூடாக ஏறபட்டுவருகின்ற சமூக சீரின்மைகள், ஏற்றத்தாழ்வுகள், அவை எதிர்காலத்தில் கொண்டுவரப் போகும் சமூக அவலங்கள், சீரழிவுகள் பற்றிய சமூக பிரக்ஞையின் அடியாக எழுந்த உணர்வலை.
இது குறித்து ஆழ்ந்த கரிசனையோடு சிந்திக்க வேண்டியதும் அர்த்தமுள்ள தீர்வுகளை நோக்கி நகரவேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)