அல்குர்ஆனின் இதயமா சூரா யாசின்?

அல்குர்ஆனின் இதயம் சூரா யாசின்ஆகும். உங்களில் மரணித்தவர்களுக்காக அல்லது மரண தருவாயில் உள்ளவர்களுக்கு சூரா யாசினை ஓதுங்கள். போன்ற செய்திகள் தனித்தும் இரண்டு செய்திகளும் இணைக்கப்பட்டதாகவும் மஃகில் இப்னு யஸ்ஸார் ரழி அவர்களைத் தொட்டு 
முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, நஸாஈ, இப்னு ஹிப்பான், ஹாகிம், போன்ற இன்னும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளன. 

இந்த செய்தியை இமாம் இப்னு ஹிப்பான் ஸஹீஹான செய்தி என்று குறிப்பிட்டாலும் இமாம் யஹ்யா இப்னு கத்தான் அவர்கள் இவையனைத்துமே முழ்தரிபான (முரண்பாடான மிகவும் பலவீனமான) செய்திகள் என்பதாகவும் மௌகூபான செய்தி (ஸஹாபியின் கூற்று) என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுகின்ற அபூ உஸ்மான் மற்றும் அவரது தந்தை (மஜ்ஹூல்) அறியப்படாதவர்கள் என்பதால் இந்த செய்தி பலவீனமானதே என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்கள். 

இமாம் தாரகுத்னி அவர்கள் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது என்றும் மையக்கருத்து அறியப்படாததாகவும் அமைந்துள்ளது என்றும் குறித்த இந்த தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள எந்த செய்தியும் ஆதாரபூர்வமானது கிடையாது என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். 

சிலர் இதனை ஸஹீஹ் என கருதினாலும் அடிப்படையில் இது பலவீனமான செய்தியாகும்.
இமாம் நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஒரு அறிவிப்பாளர் பற்றி சிலர் குறை விமர்சனம் செய்திருக்கும் வேளையில் மற்றும் சிலர் அவரை நியாயப்படுத்தியிருப்பின் அவர் விடயத்தில் குறை விமர்சனமே முற்படுத்தப்படும் அவரை நியாயப்படுத்தியிருப்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் சரியே..

ஒட்டுமொத்த அறிஞர்கள் , 
புகஹாக்கள் , உஸூலிய்யூன்கள் அனைவரும் இதே நிலைப்பாட்டிலே உள்ளனர் என்பதாக இமாம் சுயூதி அவர்களும் விளக்கமளித்துள்ளார்கள்
நூல் : தக்ரீப் - 1/364

ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி.     அவர்கள் ஒரு அறிவிப்பாளர் பற்றி தெளிவான விமர்சனங்கள் இருக்கும் பட்சத்தில் அறிஞர்களின் அவர் பற்றிய நியாயங்களை
விட குறை விமர்சனங்களே முற்படுத்தப்படும்
என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் 
நூல் - ஷர்ஹுந் நுஹ்பா - 155 

இவ்விதிகளுக்கமைய இழ்திராப், ஜஹாலத், வக்ப், போன்ற ஹதீஸ்களைப் பலவீனமாக்கும் பல காரணிகள் இடம்பெறுவதால் குறித்த இந்த தலைப்பில் பதிவாகியுள்ள செய்திகள் யாவுமே மிகவும் பலவீனமானதாகும்.

- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
أحدث أقدم