பிரபலமாகப் பேசப்படும் ஆதாரமற்ற சம்பவங்கள்

1. மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் வழியில் நபியவர்களும் அபூபக்ர் (றழி) அவர்களும் தவ்ர் குகையில் தங்கியிருந்த வேளை குகை வாசலில் சிலந்தி வலை பின்னியதாகவும் புறாக்கள் முட்டையிட்டதாகவும் கூறப்படும் சம்பவம் : இப்னு ஸஃத், தபரானீ ஆகியோர் தமது நூல்களில் பதிவுசெய்திருக்கும் இச்சம்பவம் ஆதாரமற்றதாகும். ஏனெனில் இதை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் நிராகரிக்கப்பட வேண்டிய மிக மிக பலவீனமானவர்கள் என இமாம் புஹாரி, இமாம் இப்னு மஈன் ஆகியோர் குறிப்பிடுவதாக இமாம் தஹபி அவர்கள் தனது மீஸானுல் இஃதிதால்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

2. நபிகளார் மதீனா வந்த போது மதீனாவாசிகள் "தலஅல் பத்ரு அலைனா..." என்ற பாடல் பாடி வரவேற்றதாக கூறப்படும் சம்பவம் : சில வரலாற்று நூல்களில் இது பதியப்பட்டிருந்தாலும் இது மிகவும் பலவீனவான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் சம்பவம் என இமாம்களான இப்னு ஹஜர் அவர்கள் தனது 'பத்ஹுல் பாரீ' யிலும்  இப்னுல் கய்யிம் தனது ' ஸாதுல் மஆத்' என்ற நூலிலும், ஹாபிழ் இராகி தனது 'தஹரீஜுல் இஹ்யா' என்ற நூலிலும் குறிப்பிடுகின்றனர்.

3. ஒரு மூதாட்டி விறகு சுமந்துகொண்டு சென்ற போது நபிகளார் அம்மூதாட்டிக்கு உதவியதாகவும் வழி நெடுகிலும் நபிகளாரை யாரென தெரியாமல் திட்டியதாகவும் பின்னர் நபிகளாரின் அழகிய குணத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறப்படும் சம்பவம் : எந்தவொரு ஹதீஸ் நூலிலும் கூறப்படாத ஆதாரமற்ற சம்பவம் என சமகால அறிஞர்களான அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுஹைம், அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் அல்ஹுழைர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

4. நபிகளார் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அவர்களை பலரும் தமது வீடுகளுக்கு அழைத்த வேளை நபியின் ஒட்டகம் அபூஅய்யூப் அல் அன்ஸாரி (றழி) அவர்களின் வீட்டின் முன்னே கால்மடித்து படுத்ததாக கூறப்படும் சம்பவம் : இப்னு அதீ அவர்கள் தனது நூலில் குறிப்பிடும் இச்சம்பவம் ஆதாரமாகக்கொள்ள முடியாத மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக்கொண்டதாகும் என ஷெய்க் அல்பானி அவர்கள் தனது 'ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அழ்ழஈபா' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

5. உமர் (றழி) அவர்களிடம் ஒரு மனிதர் தன் மனைவி பற்றி முறையிட வந்த போது உமர் (றழி) அவர்களோடு அவர்களது மனைவி சர்ச்சைப்பட்டிருந்ததாகவும் வந்தவர் உமர் (றழி) அவர்களிடம் முறையிடாமலே திரும்பிச்சென்றதாகவும் கூறப்படும் சம்பவம்: இது எந்தவொரு பிரபலமான இஸ்லாமிய வரலாற்று நூலிலும் கூறப்படாத ஆதாரமற்ற சம்பவமாகும். அறிஞர் ஸமர்கந்தி அவர்களும் வேறு ஒரு சில பிற்கால அறிஞர்களும் எந்தவொரு அறிவிப்பாளர் வரிசையோ, மூல நூலோ இன்றி தமது நூல்களில் பதிவுசெய்திருக்கிறார்கள் என சமகால அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

6. அலி (றழி) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்தில் ஜின்களுடன் போராடினார்கள் என்ற சம்பவம் : இது ஷீஆக்களால் புனையப்பட்ட பொய்யான சம்பவம் என இமாம் இப்னு தைமியா அவர்கள் தனது 'பதாவா'விலே குறிப்பிடுகிறார்கள்.

7. உமர் (றழி) அவர்கள் தன் சகோதரியிடம் சென்ற வேளை அவர் ஸூறா தாஹாவை ஓதிக்கொண்டிருந்ததாகவும் அது என்னவென்று கேட்டு சகோதரிக்கும் அவரது கணவருக்கும் அடித்ததாகவும் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் சம்பவம் : இது நிராகரிக்கப்படவேண்டிய 'முன்கர்' தரத்திலான மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடரை கொண்ட சம்பவமென இமாம் புஹாரி அவர்களும், இமாம் தஹபி அவர்கள் தனது 'மீஸானுல் இஃதிதால்' என்ற நூலிலும் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பு:

இஸ்லாத்தின் தனித்துவங்களில் ஒன்று, அதன் கொள்கைகள், கோட்பாடுகள், நிகழ்வுகள், செயல்முறைகள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டிருப்பதாகும். இஸ்லாத்தின் பாதுகாப்பு என்பது அதன் தனித்துவத்தங்களைப் பாதுகாப்பதில் தங்கியிருக்கிறது. ஆதாரமற்ற தகவல்கள், குறிப்புகள் - அவை எத்தனை அழகானவையாயினும் - சிறிதும் தேவையற்றவை எனும் அளவுக்கு இஸ்லாத்தின் செழிப்புமிகு பக்கங்கள் ஆதாரபூர்வமான தகவல்களால் நிறைந்திருக்கின்றன.

-ஏ.ஆர்.எம்.றிஸ்வான்(ஷர்கி)
أحدث أقدم