அகீதா என்றால் என்ன? அகீதாவை எவ்வாறு புரிந்து கொள்வது?


-கலாநிதி முபாரக் மதனி

அகீதா

அகீதா என்றால் அரபு மொழி ரீதியான அர்த்தம் ‘ஒன்றை உறுதியாக கட்டுவது’ ஆகும்.

இந்த வார்த்தையின் வேர்ச்சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌

உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அல்குர்ஆன் : 5:89)

وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏

முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும், (அல்குர்ஆன் : 113:4)

இஸ்லாமிய மொழி வழக்கில் (அர்த்தம்): ஒரு முஸ்லிம் உள்ளத்தில் உறுதியாக நம்ப வேண்டிய அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், நன்மை தீமைகள் விதிப்படி நடக்கும் என்கிற இந்த ஆறு விஷயங்களையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் உறுதியாக நம்புவது.

அகீதா தொடர்பான விஷயங்களை எங்கிருந்து நாம் எடுக்க வேண்டும்?

அகீதா தொடர்பான விஷயங்கள் அனைத்தும் மறைவானது. ஒருவர் தானாக அறிந்து கொள்ள முடியாது. அகீதா தொடர்பான விஷயங்களை அல்லாஹ் குர்ஆனில் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது.

அல்லாஹ் அறிவித்து அவன் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஹதீஸில் சொல்லி இருக்க வேண்டும்.

குர்ஆனிலோ ஹதீஸிலோ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறாத ஒன்று சரியான அகீதாவாக இருக்க முடியாது. அகீதா தொடர்பான விஷயங்களில் குர்ஆன் அல்லது ஹதீஸில் இல்லாத ஒன்றை ஒருவர் கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை

அல்லாஹ்வை பற்றியும் அகீதா தொடர்பான மற்ற விஷயங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் எவ்வாறு கூறியுள்ளார்களோ அவ்வாறே எடுக்க வேண்டும். அதில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

அல்லாஹ் தன்னை பற்றி குர்ஆனில் கூறுகிறான்:

 لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 42:11)

 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏

(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (அல்குர்ஆன் : 20:5)


சரியான அகீதாவின் முக்கியத்துவம்.

அகீதா என்பது ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போன்றது. அது உறுதியாக இருந்தால் மட்டுமே அதன் கட்டப்படும் அமல்கள் என்கிற கட்டிடம் பலமுள்ளதாக இருக்கும்.

அகீதா என்றால் அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி ஆகியவை பற்றிய நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள் சரியானதாக இருந்தால் மட்டுமே அல்லாஹ் நம் அமல்களை ஏற்றுக்கொள்வான்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 وَلَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَ‌ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

(நபியே!) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது. (என்னவென்றால், இறைவனுக்கு) நீங்கள் இணைவைத்தால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்).(அல்குர்ஆன் : 39:65)

 بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ‏

ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்து வாருங்கள். (அல்குர்ஆன் : 39:66)

 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ‌ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

ஆகவே, எவர்கள் நம்முடைய வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப் படுவார்களா?(அல்குர்ஆன் : 7:147)

நாம் நிறைய அமல்கள் செய்கிறோம், சரியான பாதையில் இருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் நம்முடைய அகீதா சீராக, சரியாக இருந்தால் மட்டுமே நம்முடைய அமல்களை அல்லாஹ் அங்கீகரித்து, அதற்குரிய பலனை மறுமையில் கொடுப்பான் . இல்லையென்றால் நம்முடைய அமல்கள் அனைத்தும் அழிந்து விடும். 

அடிப்படை அகீதா சரியாக இருந்தால், நம்முடைய அமல்களில் குறை இருந்தாலும், அல்லாஹ் அதை மன்னித்து ஏற்றுக்கொள்வான்.

‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ என்னும் மனிதர் வந்தார். அவரை குறித்து நபி அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்: நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். ஸஹீஹுல் புஹாரி 3610.


குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை.

அதை சரியாக விளங்க வேண்டும் என்றால் நபி அவர்களுடன் வாழ்ந்த நபியிடம் இருந்து பயின்ற பயிற்சி பெற்ற சஹாபாக்களின் புரிதலை கொண்டு புரிவதே சரியான புரிதல்.

குர்ஆனை தர்ஜமா செய்யக்கூடியவர் 14 வகையான கல்வி அறிவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கி

விடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100)

فَقَالَ أَلاَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فِينَا فَقَالَ ‌‏ أَلاَ إِنَّ مَنْ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَإِنَّ هَذِهِ الْمِلَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَهِيَ الْجَمَاعَةُ ‏”‏ ‏.‏

அபூ ஆமிர் அல்ஹவ்தானி அறிவித்தார்கள்

முஆவியா இப்னு ஸுப்யான் எங்கள் மத்தியில் நின்று நபி صلى الله عليه وسلم கூறியதாக சொன்னார்கள்,  “உங்களுக்கு முன் வேதம் கொடுக்க பட்ட சமுதாயம் எழுபத்து இரண்டாக பிரிந்தது. என்னுடைய சமுதாயம் எழுபத்து மூன்றாக பிரியும். அதில் எழுபத்து இரண்டு நரகம் செல்லும். ஒரு கூட்டம் மட்டுமே சுவர்க்கம் செல்லும். அது நானும், என்னுடைய ஜமாஆ” (அபுதாவூத்)

நபி(ஸல் ) அவர்கள் குறிப்பிட்ட (72) எழுபத்து இரண்டு சமுதாயமும், முஸ்லிம்கள் அல்லாதவர்களோ, அமல்கள் செய்யாதவர்களோ கிடையாது. அவர்களும் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்கள் தான்.

ஆனால் அவர்கள் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டிய முறைப்படி ஈமான் கொள்ளவில்லை.

அல்லாஹ்வின் கட்டளைப்படி, நபி (ஸல் ) அவர்கள் சொன்னபடி சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அதில் பலவிதமான வழிகேடுகளை கலந்து தன் மனோஇச்சைப்படி நடந்துக் கொண்டனர்.

நபி(ஸல் ) அவர்கள் சொர்க்கம் செல்லும் ஓர் கூட்டத்தை பற்றி குறிப்பிட்டார்கள்,.அவர்கள் யார் என்றால், குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவதோடு , சஹாபாக்கள் எவ்வாறு மார்க்கத்தை புரிந்து கொண்டார்களோ, அதற்கான விளக்கத்தை கொடுத்தார்களோ அவ்வாறு நடைமுறைப்படுத்தி வாழக்கூடிய சமுதாயமாகும். 

ஒரே கட்டுரையோ,அல்லது ஒரே பேச்சையோ பலர் படித்தால் அல்லது கேட்டால், அவரவர்களின் அறிவிற்க்கும், புரிதலுக்கும் ஏற்ப விளக்கம் கொடுப்பார்கள்.

அதுபோல் நம்முடைய காலக்கட்டத்தில், குறுகிய இடங்களிலேயே ஒரு வார்த்தைக்கு ஒவ்வொரு இடங்களிலும் பொருள் மாறுபடுகிறது.

எனவேதான் மதீனாவில் உள்ள உலமாக்கள், குர்ஆன், ஹதீஸிற்கு விளக்கம் கூறும் போது, குர்ஆன் இறக்கப்படும் போது நபி(ஸல் ) அவர்களுடன் இருந்த, நபி (ஸல் )அவர்களால் போதிக்கப்பட்ட சஹாபாக்களின் புரிதலையும், விளக்கங்களையும் ஆராய்ந்து பொருளுணர்ந்து கல்வியாகவும், சட்டமாகவும் நமக்கு தந்திருக்கிறார்கள்.

இந்த விளக்கம் இல்லாமல், தங்களுக்கு தெரிந்த சிறிய அறிவை கொண்டு அரபு மொழியில் உள்ள குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை மொழி பெயர்த்து தங்களது கருத்துக்களை, வியாக்கியானங்களை நுழைப்பதால் தான் இன்று நம்மிடையே பல வழிகேடுகள், ஃபித்னாக்கள் தோன்றுகின்றன.

அடிப்படையே சஹாபாக்கள் புரிந்த மாதிரி, இத்தூய்மையான மார்க்கத்தை புரிய வேண்டும். நபி(ஸல் ) அவர்கள் காலத்தில் வாழ்ந்த அரபு சமுதாயத்தில் உள்ள இலக்கணம், இலக்கியம் இக்காலகட்டத்தில் நிறைய மாறுபடும். எனவே சஹாபாக்களின் புரிதலை கொண்டு நாம் இம்மார்க்கத்தை விளங்க வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். (2651ஸஹீஹ் புகாரி , ஸஹீஹ் முஸ்லிம்.)

ஆகவே அல்லாஹ்வும் நபி صلى الله عليه وسلم அவர்களும் புகழ்ந்து கூறிய, அந்த நேர்வழி பெற்ற, சஹாபாக்களின் புரிதலை கொண்டு மார்க்கத்தை புரிந்து செயல்படுவோம். நபி صلى الله عليه وسلم அவர்கள் அடையாள படுத்திய அந்த ஒரு கூட்டமாக அல்லாஹ்வின் சுவர்க்கத்தை அடைவோம்.

இன்ஷா அல்லாஹ்

Previous Post Next Post