"அல்லாஹ்வுக்கு 99 நாமங்கள் உள்ளன. அவற்றை யார் மனனமிட்டு பாதுகாக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்" என நபிகளார் கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
அல்லாஹ்வின் 99 பெயர்களையும் ஒருவர் மனனமிட்டுக்கொண்டால் அவர் சுவனம் நுழைந்துவிட முடியுமா? அவ்வாறெனில் இது மிகமிக இலகுவான காரியமாகிவிட்டதே...சுவனம் செல்வதற்கு... அந்தளவுக்கு அல்லாஹ் சுவனம் செல்வதை மிக இலகுவான ஒரு செயலுக்குள் சுருக்கிவைத்திருக்கிறானா என்று பலர் நினைக்கக்கூடும்!
வெறுமனே மனனமிடுவது என்றால் அது பலராலும் செய்துவிட முடியுமான ஒரு காரியமே....முஸ்லிமல்லாதவர்கள் கூட சிரமமின்றி மனனமிட்டு விட முடியுமே.... அவ்வாறெனில் மேற்படி ஹதீஸ் அல்லாஹ்வின் பெயர்களை வெறுமனே மனனமிடுவதை மாத்திரம் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
வேறு என்ன விடயங்களை, நிபந்தனைகளை அந்த ஹதீஸ் நம்மிடம் வேண்டி நிற்கிறது... சுவனம் செல்லுதல் என்ற அந்த மாபெரும் பாக்கியத்தை அடைவதற்கு...
வரலாறு நெடுகிலும் தோன்றிய பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் மேற்படி ஹதீஸில் குறிப்பிட்டதன் அடிப்படையில், ஒருவர் சுவனம் நுழைவதாயின் சில விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.
இமாம் கத்தாபி, இமாம் நவவி, இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னுல் கையிம், அஷ்ஷெய்க் இப்னு பாஸ் போன்ற பல அறிஞர்கள் வழங்கிய விளக்கங்கள் சுருக்கமாக :
1. அல்குர்ஆனிலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் கூறப்பட்ட அல்லாஹ்வின் பெயர்களை தேடியறிந்து மனனமிட வேண்டும்.
2. அவை ஒவ்வொன்றுக்குமான அர்த்தத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
3. அப் பெயர்கள் எந்தவொரு படைப்பினத்திற்கும் உரியவை அல்ல, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியவை என்பதை ஆழமாக ஈமான்கொள்ள வேண்டும்.
4. அல்லாஹ்வின் திருநாமங்கள் பிரதானமாக இரு வகையாக காணப்படும் :
அ) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான, அவனது இயல்புடன் மட்டுமே பொருந்தக்கூடிய பெயர்கள்
உ-ம் : அல்முதகப்பிர் (பெருமைக்குரியவன்), அல்ஜப்பார் (அடக்கியாள்பவன்), அல்கய்யூம் (என்றும் நிலையானவன்)...
இத்தகைய பெயர்கள் உட்பொதிந்துள்ள தன்மைகளையும் பண்புகளையும் மனிதர்கள் தம்மிடம் ஏற்படுத்திக்கொள்ளாமல், அவை அல்லாஹ்வுக்கு மட்டுமுரியவை என நம்பி அவற்றிலிருந்து தவிர்ந்துவாழ்தல் வேண்டும்.
எடுத்துகாட்டாக, (அல்முதகப்பிர்) "பெருமைக்குரியவன்" என்ற பெயர் உள்ளடக்கியுள்ள " பெருமை" என்ற பண்பு அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால் அதை முற்றாக தவிர்ந்து வாழ்தல். இவ்வாறே அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான "அல்அஹத்" (ஒருவன்), "அல்குத்தூஸ்" (மிக தூய்மையானவன்), "அல்ஹாலிக்" (படைப்பாளன்) போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமேயுரிய பெயர்கள் விடயத்தில் அவை முழுமையாக அல்லாஹ்வுக்குரியவை என விசுவாசித்து, அவனுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ்தல்.
அவ்வாறே "அர்ரஸ்ஸாக்" (வாழ்வாதாரம் அளிப்பவன்), "அல்கப்பார்" (பாவங்களை மிக மன்னிப்பவன்) போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமேயான பெயர்களை ஈமான் கொள்ளும் அதே நேரம் அப்பெயர்கள் பொதிந்துள்ள பண்புகள் வேறு எவருக்கும் இல்லாதவை என்பதனால் வாழ்வாதாரத்தையும் பாவ மன்னிப்பையும் அல்லாஹ்விடம் மட்டுமே முன்வைத்து பிரார்த்தித்தல். இத்தேவைகளை எந்தப் படைப்பினத்திடம் சென்றும் முறையிடாதிருத்தல்.
ஆ) அதே நேரம் அல்லாஹ்வின் நாமங்களுள் மனிதர்கள் பின்பற்றுவதற்கு தேவையான பண்புகளை உள்ளடக்கியுள்ள பெயர்களும் உள்ளன.
உ-ம் : அர் ரஹீம் (மிக இரக்கமுள்ளவன்), அஸ்ஸபூர் (மிக பொறுமையுள்ளவன்)...
இத்தகைய பெயர்கள் பொதிந்துள்ள பண்புகளை (உ-மாக, இரக்கம், பொறுமை...) மனிதர்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.
5. பிரார்த்தனையின் போது அல்லாஹ்வின் பெயர்களை குறிப்பிட்டு பிரார்த்தித்தல் வேண்டும்.
உ- ம் : யா ரஹ்மான்! என் மீது உன் அருளை சொரிந்துவிடு!
யா கப்பார் ! என் பாவங்களை மன்னித்துவிடு!
இவ்வாறு அல்லாஹ்வின் பெயர்களை குறிப்பிட்டு பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் அது காரணமாகிறது. அல்லாஹ் கூறுகிறான் : ' "அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக்கொண்டு அவனிடம் பிரார்த்தியுங்கள்"
( 7:180).
எனவே, அல்லாஹ்வின் பெயர்கள் தொடர்பில் மேற்படி விடயங்களை கவனத்திற் கொண்டு செயற்படும் போது நபிகளார் கூறியது போன்று சுவனம் நுழையும் பாக்கியத்தை பெற்றிட முடியும். வல்ல அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக.
-ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)