ஒரு மனிதர் தன் உலக வாழ்வில் செய்யக்கூடிய இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரக்கூடிய செயல்களிலேயே மிகவும் அற்புதமான ஒன்று த’வா – மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல் தான். அச்செயல் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான செயல்களில் ஒன்றல்லவா? அல்லாஹ்வின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரே குறிக்கோளோடு எல்லா இறைதூதர்களும் (அவர்கள் மேல் சாந்தி உண்டாவதாக) அனுப்பப்பட்டிருக்கும்போது, அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான செயல்களில் ஒன்றாக அது இல்லாமல் எப்படிப்போகும்?
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; …” [அல் குர்’ஆன் 12:108]. என்று உலகிற்கு அறிவிக்குமாறு அல்லாஹ்(சுபஹ்), நபி (ஸல்) அவர்களைப் பணித்திருக்கும்போது, மேலும், நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்தியிருந்தால், உலகிலில் உள்ள அனைத்தையும் விட அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.” [புகாரி, முஸ்லிம்] என்று கூறியிருக்கும்போது, அது எப்படி அவனுக்குப் பிரியமான செயலாக இல்லாமல் இருக்க முடியும்?
இந்த கட்டுரையில் நம்முடைய நோக்கம், த’வாவை எளிதாகவும், லேசாகவும் ஆக்குவது தான். “இஸ்லாமை இனிமையாகவும் எளிதாகவும் வைத்திருங்கள்” என்பது தான் உத்தி. நம்மில் பலருக்கு த’வா ஒரு பெரும் கடினமான செயல் போல தோன்றுகிறது. ஆனால், அல்லாஹ்வே பயன்படுத்தியுள்ள முறைகளைக் கையாண்டும், த’வாவிற்கு குர்’ஆனை பயன்படுத்தினால், இன் ஷா அல்லாஹ், காரியங்கள் மிகவும் லேசாக ஆகி விடும். இக்கட்டுரையில், நாம் எப்படி சூரா இக்லாஸை பயன்படுத்தி த’வா செய்யலாம் என்று பார்க்கலாம். மேலும், இதன் மூலம், நபி (ஸல்) “உங்களில் சிறந்தவர், குர்’ஆனை தானும் கற்று, பிறருக்கும் கற்றுத் தருபவரே.” [புகாரி] என்று கூறியதிலும், பங்கெடுத்தது போலிருக்கும்.
கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. எப்போதும்,, த’வாவில் நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் இது தான் – அல்லாஹ் ஒருவன் என்பது. அல்லாஹ்வுக்கு துணைவர்களோ, இடைத்தரகர்களோ, பௌதிக வடிவிலோ, உருவகத்திலோ இல்லை. முஸ்லிம் அல்லாதவர்களிடம், இறைவனுக்கு மகனோ, துணைக் கடவுள்களோ இருக்க முடியாது என்பதைத் தெளிவு படுத்த இதைச் சொல்வது மிகவும் முக்கியம். இறைவன் ஒருவன், அவன் ஒருவன் மட்டுமே! நிராகரிப்பாளர்களில் பலர், அல்லாஹ்வை நம்புகிறார்கள், ஆனால், அவனுடன் பிற கடவுள்களையும் நம்புகிறார்கள். இவ்வசனம், அல்லாஹ் ஒருவன் என்பதை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் வழிபடுவதற்கும், வணங்குவதற்கும் தகுதியான ஒரே ஒரு இறைவன் அவன் மட்டுமே! அவன் ஒருவன் தான் எல்லாவற்றிற்கும் மேலானவன், நம் வாழ்விலும், அவன் மட்டும் தான் எல்லாவற்றிற்கும் மேலானவனாக இருக்க வேண்டும். நம் வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு அர்ப்பணிக்க வேண்டும், ஏனென்றால், அவன் தான் அதற்குத் தகுதியானவன். படைப்பவன், வாழ்வாதாரம் வழங்குபவன், பரிபாலிப்பவன், ஒருவனும், ஒருவன் மட்டுமேயான ‘அல் அஹது’. அதனால், த’வாவின் முதல் பகுதி அல்லாஹ்வை நம் வாழ்வில் மிக முக்கியமானவனாக ஆக்குவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவு படுத்துவது தான். பெற்றோர், பிள்ளை, துணைவர், விக்ரகம், யேசு அல்லது வேறெதுவும் அவனை விடவோ, அவனுக்கு இணையாகவோ முக்கியமானதல்ல. அப்படியானால், அவன் யார்?
அவன் அஸ்-ஸமது
அவன் அஸ்-ஸமது, எந்த தேவைகளும் இல்லாதவன், ஆனால் அவனையே எல்லா படைப்புகளும் சார்ந்திருக்கின்றன. பல நேரங்களில் பலர் அல்லாஹ் ஒருவன் எனவும், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்றும் புரிந்து கொள்கிறார்கள், ஆனால், “அது சரி, இப்போது என்ன ஆகப்போகிறது? இந்த கணத்தில் எனக்கு இறைவன் தேவையில்லை.” என கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும், நமக்கேயும் அவன் அஸ்-ஸமது என்பதை நினைவு படுத்துவது அவசியம். அவனுக்கு நம்முடைய உதவி தேவையில்லை. ஆனால், நாம் முற்றிலும் அவனைச் சார்ந்திருக்கிறோம். நமக்கு இவ்வுலகில் எது தேவையென்றாலும், நம்மிடம் இருப்பதெல்லாம் அல்லாஹ் மட்டுமே. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும், நாம் மிக ஆழமாக அவனுடைய தேவையுள்ளவர்களாக இருக்கிறோம். மக்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவது, அவனை நேசிப்பது, அவனை வணங்குவதன் அவசியத்தை புரிந்து கொள்ளும்படி செய்வது மிகவும் முக்கியம். இந்த உலக வாழ்விற்க்காக மட்டுமல்ல, நம்முடைய நிரந்தரமான மறுமைக்காகவும் அவனுடைய தேவையைப் புரிந்து கொள்வது அவசியம்!
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
பல சமயங்களும், கோட்பாடுகளும், முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுபவர்களும் கூட இறைவனுக்கு மகன்களையும், மகள்களையும் உருவாக்கியுள்ளார்கள். இந்த ஒரு வசனம், அது அத்தனையையும் தகர்க்கிறது. அல்லாஹ் தன் படைப்புகளிலிருந்து வேறுபட்டவன் என்பதை இது தெளிவாக்குகிறது. அவனுக்கு தந்தையோ, தாயோ இல்லை, அவனுக்கு மகனோ, மகளோ கிடையாது. தன் படைப்புகளிலிருந்து அவன் தனித்தவன். அவனுக்கு மனிதனின் சாயலுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
இது தான் இந்த சூராவின் இறுதி வசனம், மேலும், அல்லாஹ்வுடன் ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் வன்மையாக கண்டிக்கிறாது. நாம் அவனை எதனுடனும், எவருடனும் ஒப்பிட முடியாது. அவன் யேசுவைப் போலவோ, வேறெந்த சிலையைப் போன்றவனோ, ஒரு புனிதரைப் போன்றவனோ, ஒரு பாறை அல்லது மரத்தைப் போன்றவனோ இல்லை. அவனை உலகில் உள்ள எதனுடனும் ஒப்பிட முடியாது. அல்லாஹ், ஒருவனும், ஒருவன் மட்டுமே ஆவான். அவன் தேவைகளற்றவன். அவனை எதனுடனும், எவருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், உலகமும், அதிலுள்ள அனைத்தும் அவனையே சார்ந்திருக்கின்றன. அல்லாஹ் யார் என்பதற்கு இது தான் சுருக்கமான செய்தியும், அறிமுகமும் ஆகும். பொது மக்களுக்கு, அவர்கள் அறிவு எப்படியிருந்தாலும், மிக எளிதாகவும், விரைவாகவும் த’வா செய்வதற்கு வழி சூரா இக்லாஸ் தான்.