பெண்களுக்கு இவ்வளவு நன்மையா?

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இச்செய்தி சரியானதா ? பதில் தரவும்..

1)கர்ப்பினியாக இருக்கும் பெண்களுக்கு
பகல் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையும், இரவு முழுவதும் வணங்கிய நன்மையும் கிடைக்கும். 

2) ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்தால்
70 வருடங்களுடைய தொழுகையின் நன்மையும், நோன்பு நோற்ற  நன்மையும் எழுதப்படும். 

3) பிரசவ வேதனையின் காரணமாக ஒவ்வொரு நரம்பிலும் உண்டாகும் வேதனைக்கு பதில்
ஒரு ஹஜ் செய்த நன்மை. 

4) குழந்தை பிறந்த 40 நாட்களுக்குள் தாய் மரணமடைந்துவிட்டால் ஷஹீதுடைய அந்தஸ்து.

5) குழந்தை இரவில் அழும்போது அக்குழந்தையை திட்டாமல் தாய்ப்பால் புகட்டினால் வருடம் தொழுத நன்மையும்,நோன்பு நோற்ற நன்மையும்.

6) குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டினால்
ஒரு வானவர் இறங்கி வந்து சுவனத்தை நன்மாறாயம் சொல்கிறார்.

7) இரவில் குழந்தை அழுவதால் ஏற்படும் சிரமத்திற்கு 70 அடிமைகளை உரிமை விட்ட நன்மை. 

8)குழந்தை நோயுற்று அதற்காக இரவில் விழித்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு 12 வருடங்களின் நன்மை எழுதப்படுகிறது. 

9) கணவன் வீட்டுக்கு வரும்போது மனைவி புன்முறுவலோடு வரவேற்பது அல்லது கணவனின் கவலைக்கு ஆறுதல் சொல்லும் போது
புனிதப் போரில் கலந்து கொண்ட நன்மை. 

10) எந்தப்பெண் தன் கணவனின் விருப்பத்தை அறிந்து செயற்படுகிறாளோ அத்தகைய பெண்ணுக்கு 7 தோலா தர்மம் செய்த நன்மை. 

11) எந்தப் பெண் வெட்கத்தால் அந்நியர்களை பார்ப்பதை விட்டும் 
பாதுகாத்துக்கொள்கிறாரோ அத்தகைய பெண்ணை மறுமையில் பார்க்க அல்லாஹ்வே வருவான். 

12) மார்க்க பக்தியுள்ள பெண்
70 ஆண் நேசர்களை விட சிறந்தவள். 

13) பல குழந்தைகளை பெற்ற தாயின் 2 ரகாஅத் தொழுகை குழந்தை இல்லாத பெண்ணின் 82 வருட நபில் வணக்கத்தை விட சிறந்தது. 

14) எந்தப்பெண் திக்ர் செய்துகொண்டே வீட்டை சுத்தம் செய்கிறாளோ
அவளுக்கு கஃபதுல்லாஹ்வை சுத்தம் செய்த நன்மை. 

15) எந்தப் பெண் தன் கணவர் அல்லாஹ்வின் பாதையில் செல்வதால் மகிழ்கிறாளோ
அவள் 50 வருடங்களுக்கு முன் சுவர்க்கம் புகுவாள். 

16) எந்தப் பெண் தன் கணவரை அல்லாஹ்வின் பாதையில் அனுப்பிவிட்டு அல்லாஹ்வை பயந்து அந்நியர் பார்வையை விட்டும் மறைகிறாளோ 
அந்தப் பெண்ணுக்கு சுவர்க்கத்தில் 70,000 மலக்குகள் ஆடையை எடுத்து வருவார்கள், யாகூத் எனும் குதிரையில் சவாரி செய்தவண்ணம் தன் கணவனை வரவேற்பாள். 

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இச்செய்தி சரியானதா ? பதில் தரவும்..

பதில் : இந்த செய்தியை நம்பத்தகுந்த ஹதீஸ்கலை மேதைகளோ அறிஞர்களோ தமது எந்த அடிப்படை ஹதீஸ் மூலாதார நூல்களிலும் பதிவு செய்யவில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இட்டுக்கட்டப்பட்ட, பொய்யான ஒரு செய்தியாகும். இதனை அறியாத அப்பாவி மக்கள் இதனை பகிர்ந்து கொள்கிறார்கள், அப்படி பகிர்ந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டிய அம்சமாகும். 

இட்டுக்கட்டப்பட்ட பொய்களை பரப்புவதால், பகிர்ந்து கொள்வதால் பாவம்தான் கிடைக்குமே தவிர ஒரு போதும் நன்மை கிடைக்கப்போவதில்லை என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

குறிப்பு : பெண்களின் உழைப்புக்களுக்கும் அர்ப்பணங்களுக்கும் உயர்ந்த கூலிகள் அல்லாஹ்விடம் உண்டு என்பதனை வேறு பல ஸஹீஹான செய்திகள் சொல்கின்றன. 

-முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி. 
அல்மனார் சென்டர், துபாய், அமீரகம்.
Previous Post Next Post