بسم الله الرحمن الرحيم
நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது "அல்ஃபிர்தவ்ஸ்" என்ற சொர்க்கத்தை கேளுங்கள். அதுதான் அதி உயர்ந்ததும் சிறப்பானதுமான சொர்க்கமாகும். அதற்கு மேலால் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதில் இருந்துதான் சுவனத்து நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்.
தெளிவு:
--
(1) சொர்க்கம் வானலோகத்தில்தான் இருக்கின்றது என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாகும்.
((2) பல சொர்க்கங்களில் அதி உயர்ந்த, வசதிகள் கூடிய, மனங்களைக் கவர்கின்ற முழுவதையும் உள்ளடக்கிய சொர்க்கம் "அல்ஃபிர்தவ்ஸ்" என்ற சொர்க்க மாகும்.
(3) அல்லாஹ்வின் படைப்புக்களில் வானங்கள், பூமியை விட விசாலமான படைப்பே அவனது "அர்ஷ்" என்ற சிம்மாசனமாகும். இது பற்றிய தெளிவு குர்ஆன், ஹதீஸ்களில் தாராளமாக உண்டு.
(4) அவன் அவனது கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் தகுதியான முறையில்
அதன் மீதிருந்தவாறே இன்றும் என்றும் ஆட்சி செய்து வருகின்றான்.
(5) அந்த அர்ஷை மறுமை நாளில் அல்லாஹ்வின் வானவர்கள் எண்மர் சுமந்தவர்களாக மஹ்ஷர் மன்றில்ஆஜராகுவர்.
وجاء ربك والملك صفا صفا
(அப்போது) வானவர்கள் அணிதிரண்டு புடைசூழ அல்லாஹ் வருவான் என்பது குர்ஆனின் கூற்றாகும்.
عَنْ جابِرٍ - ﵁ - قالَ: قالَ رَسُولُ اللهِ - ﷺ -: «أُذِنَ لِي أنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِن مَلائِكَةِ اللهِ مِن حَمَلَةِ العَرْشِ، ما بَيْنَ شَحْمَةِ أُذُنِهِ إلى عاتِقِهِ (٣) مَسِيرَةُ سَبْعِ مِائَةِ عامٍ (أبو داود )»
அர்ஷை சுமக்கின்ற வானவர்களில் ஒருவரைப் பற்றி உங்களுக்கு அறிவிக்குமாறு எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது எனக் கூறிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் "அவர்கள் ஒருவரது காதின் சோணைக்கும் தோழ்புயத்திற்கும் இடைப்பட்ட தூர அளவு எழுநூறு ஆண்டுகள் ஒரு மனிதன் நடக்கும் தூர அளவாகும் என்பதாகக் கூறினார்கள். (சுனன் அபீதாவூத்)
இது கண்ணியமிக்க அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் ஹதீஸ்களில் ஒன்றாகும்.
அவன் எப்படி இருக்கின்றான்? அதனோடு சேர்ந்தா? ஒட்டயாவறா? மனிதன் போலவா? என்றெல்லாம் சிந்திக்க முயல்வது பிற்காலத்தில் வந்த வழிகேடான கற்பனைக் காரர்களின் போக்காகும் என்பது சுன்னா அறிஞர்களின் முடிவாகும்.
அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பதை மறுப்போர் உலகில் எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக நம்பிக்கொள்கின்றனர்.
அந்த நம்பிக்கையை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் காப்பதில் அவன் அர்ஷ் மீதிருக்கின்றான் என்ற நம்பிக்கை வலுவானதும் மனித இயல்புக்கு ஒத்ததுமாகும்.
(6) ஒரு அடியான் தனது கோரிக்கைகளை மரணித்தவர்களை வைத்து கேட்காமல்
அல்லாஹ்விடம் நேரடியாக விழித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
எம். ஜே.எம்.
ரிஸ்வான் மதனி