ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 103 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த தினத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள் பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும், தங்களுக்கான சுதந்திரத்தையும் முன்வைத்து பதாகைகளோடும் துண்டுப் பிரசுரங்களோடும், ஆர்ப்பரிக்கும் கோஷங்களோடும் உலா வருவதைப் பார்க்கிறோம்.
இத்தகைய நிலைப்பாடுகள் பெண்களுக்கான முழு உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுத்தந்து விட்டனவா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.
இந்த தினம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் என்ன?
18 ஆம் நூற்றாண்டில் பெண்கள் ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டு வீடுகளிலேயே முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
வேலைகளில் பெண்களுக்கும் உரிமை வேண்டும் எனவும் ஆரம்ப கல்வி வேண்டும் எனவும் தங்களுக்கான உரிமைகள் தரப்பட வேண்டும் எனவும் ஆண்களுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் எனவும் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அமெரிக்காவில் பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1907 ஆம் ஆண்டும் ஒரு போராட்டம் நடை பெற்றது.
ரஷ்யாவின் அலெக்ஸாண்டிரா கெலன்ரா என்பவர் தான் 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக அனுசரிக்கவேண்டும் என்று பிரகடனப்படுத்தினார். அன்றிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான், ரஷயா, கியூபா, வியட்நாம், கம்போடியா, உக்ரைன், ஆர்மேனியா, மங்கோலியா, மால் டோவா, புர்கினியாபெசோ, எரித்திரியா, பெலாரஸ், மான்டே நெக்ரோ இது போன்ற பல நாடுகளில் தற்போது இத்தினத்தில் விடுமுறை வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு காலத்தில் பெண் என்றால் பேய் என்றும்,அவள் ஒரு ஜடப் பொருளே என்றும், அவளுக்கு ஆத்மா இருக்கிறதா இல்லையா?என்று பட்டிமன்றங்கள் நடத்துவதும், அவள் ஒரு போகப் பொருளைப் போன்றும், ஆண்களின் காமப் பசியைத் தீர்க்கவே படைக்கப்பட்டிருக்கிறாள் என்றும்,அவளுக்கு தேவதாசி பட்டம் கட்டி கோயில்களில் விடப்பட்டு ஆண்களின் காமப் பசி தீர்க்கும் அபலைகளாகவும், அவளுக்கு எவ்வித உரிமைகளோ சுதந்திரங்களோ கிடையாது என்றும்,கணவன் இறந்து விட்டால் வாழும் உரிமை மறுக்கப்பட்டு அவனோடு உடன்கட்டை ஏறி செத்து விட வேண்டும் என்றும்,கல்வி கற்கும் உரிமை, ஆலயங்களுக்கு செல்லும் உரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை,சொத்துரிமை, வாரிசுரிமை, பிறக்கும் உரிமை போன்ற எவ்வித உரிமைகளும் அற்றவளாவே இருக்கவேண்டும் என்றும், கருவிலே கொல்லப்படவேண்டும் என்றும்,அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டாலும் கள்ளிப்பால்,நெல்மணி கொடுத்து கொல்லப்படடுவிட வேண்டும் என்றும்……இப்படி பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளெல்லாம் நடந்து கொண்டிருந்த காலகட்டம்.
இந்த இழி நிலைகளெல்லாம் மாற வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட தினமே இந்த மகளிர் தினம்.
மேற்கூறப்பட்ட இழிநிலைகளெல்லாம் மாறியதா?அல்லது மாற்றப்பட்டதா எனில் பற்பல தொழில் நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் கூட பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களை வைத்து நிர்வாண ஆபாசப்படங்கள் எடுப்பது, விளம்பரங்களில் போகப் பொருளாகக் காட்டுவது, ஆண்களுக்கு முன்னால் அரைகுறை ஆடைகளுடன் உலா வர விடுவது, பாடல்களில், சினிமாக்களில் நாடகங்களில் பெண்கள் கள்ளத் தொடர்பில் ஈடுபடுவது போன்று தவறாக காட்டுவது, விபச்சாரத்தில் ஈடுபடுபவது போன்று காட்டுவது, பாடல்களில் பெண்களை கொச்சைப்படுத்தி பாடுவது, பள்ளி கல்லூரிகளில் தன் சக ஆண் நணபர்களாலும், வேலை பார்க்கிற இடங்களில் மேலதிகாரிகளாலும் பாலியல் தீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது போன்ற பெண்களுக்கெதிரான அத்தனை கொடுமைகளும் நவநாகரீக காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெண்கள் அமைப்புகள், மாதர் சங்கங்கள் போன்ற பெண்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லக்கூடிய அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?இவைகளை கவனத்தில் கொண்டு இக்கொடுமைகளுக்கெதிராக கிளர்ந்தௌ வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆனால் இன்று பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் பெண்களுக்கான அத்துனை உரிமைகளையும் மனித படைப்பின் ஆரம்பத்திலேயே இஸ்லாம் வழங்கியருக்கிறது.
இஸ்லாம் வழங்கும் பெண்களுக்கான உரிமைகள்.
1) பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று பெண் விடுதலையின் முதற் சுதந்திரப்பிரகடனத்தை நபி(ஸல்)அவர்கள் விடுக்கிறார்கள்.
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீவிட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும்.எனவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
(புகாரி: 5186 முஸ்லிம், திர்மிதீ)
2) பிறக்கும் உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருந்த அஞ்ஞான கால கட்டத்தில் அவ்வுரிமையை வழங்கியது.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்), அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?
அல்குர்ஆன்16:58,59
3)வாழும் உரிமை
பெண் குழந்தை என்றாலே பாவம் கேவலம் என்று நினைத்துக் கொலை செய்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தான் நபியவர்கள் அதைத் தடுத்து நிறுத்தி பெண் குழந்தையை பெற்று ஒழுக்கத்துடன் வளர்த்து திருமணமும் முடித்துக் கொடுத்தால் சொர்க்கம் என்றார்கள் நபியவர்கள்.
ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் அவர்கள் நரகத்திற்கு திரையாக இருப்பார்கள் அல்லது அவர் சொர்க்கம் செல்வார் என்றார்கள் நபியவர்கள்.அதபுல் முஃப்ரத்
சிசுக்கொலை கூடாது என்றும் அதற்கான தண்டனையை கண்டிப்பாக அனுப வித்தே ஆக வேண்டும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கிறது.
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை(யும் வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாக மிகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக)அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
(புகாரி:2408.5975,6473,7292 முஸ்லிம்,முஸ்னத் அஹ்மத்)
பெண் சிசுக் கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது'' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விசாரம் செய்வது'' என்றுகூறினார்கள்.
புகாரி4477,4761,6001,6811,6861,7520,7532.முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, முஸ்னத் அஹ்மத்.
பெண் குழந்தையை வாழ விடவேண்டும் என்றும் அவள் இயற்கையாகவே மரணித்து விட்டாலும் சொர்க்கம் கிடைக்கும் என்றும் கூறுகிறது இஸ்லாம்.இத்தகைய சிறப்பு வேறு எந்த மதத்திலும் காண முடியாது.
'பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது. புகாரீ:102/99.
ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், 'இவ்வாறு பல பெண் குழந்தைகளால்
சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி: 1418, முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்
4)உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெண்களை மதித்து அவர்களுக்கு வீட்டு உரிமையை வழங்கி அது சம்பந்தமாக விசாரிக்கப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிப்படுவான்.பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 2409.
5)கல்வி கற்கும் உரிமை.
'(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில்' உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்'' அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.புகாரி: 101
'மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும்,முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார் புகாரி:97
இஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாத இஸ்லாத்தின் எதிரிகள் பல காலகட்டஙகளிலும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தின் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களை வைத்தபோதும்கூட அவைகளையெல்லாம் தகர்த்தெறிந்து இஸ்லாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அவர்களின் குற்றச்சாட்டுக்களில் ஒன்று இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. அவர்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடையாது.அவர்களை பர்தா என்ற சிறையில் அடைத்திருக்கிறது என்பது.
இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியிருக்கிற விஷயங்களை கவனிக்கும் போது இவர்கள் வைக்கிற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்பதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கவே என்பதும் விளங்குகிறது.
அன்னை ஆயிஷா(ரலி) உம்மு ஹபீபா(ரலி) உம்மு மைமூனா(ரலி) அன்னை ஹஃப்ஸா(ரலி) உம்முசலமா(ரலி) உம்மு தர்தா(ரலி) போன்ற நபி காலத்தில் வாழ்ந்த ஸஹாபியப் பெண்கள் குர்ஆனிலும் நபிமொழிக் கலையிலும் சிறந்து விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உமர் என்று சொல்லப்படக்கூடிய கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்பவர் நபிமொழிக் கலையில் வல்லுநராக விளங்கிய அம்ரா பின்த் அப்திர்தரஹ்மான் என்பவரிடம் நபிமொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி கற்க பர்தா என்றைக்குமே தடையாக இருந்ததில்லை என்பது விளங்குகிறது.
உம்மு தர்தா என்ற ஸஹாபியப் பெண்மணியிடம் தான் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் கல்வி பயின்றிருக்கிறார்.
பாத்திமா அல்ஃபிஹ்ரி அவரின் சகோதரி மர்யம் கி.பி.859 ஆம் ஆண்டு மொராக்கோவில் உலகின் முதன்முதலில் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவி அதில் மார்க்கக் கல்வியோடு வானவியல் புவியியல், மருத்துவம் என அனைத்துக் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டு சான்றிதழுடன் கூடிய பட்டப்படிப்புகளை வழங்கி இன்றும் அது அல்காராவின் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாம் வாழுகிற இந்த நூற்றாண்டில் கூட தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த கதீஜா ஹப்பாஜு,கனடாவின் தலைசிறந்த கல்வியாளர் ஷாஹினா சித்தீகி,மாபொரும் பெண் அறிஞர் மர்யம் ஜமீலா,எகிப்தின் ஜைனப் கஸ்ஸாலி,அமெரிக்காவின் லூயி லாமா அல்ஃபருக்கீ போன்ற இஸ்லாமிய பெண் கல்வியாளர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்றால் இது இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளின் அடையாளங்களாகும் என்பதை இஸ்லாத்திற் கெதிராக குற்றச்சாட்டுக்களை வைப்பவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு மதிப்பளித்து உபதேசம் செய்திருக்கிறார்கள்.
'பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்'' இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புகாரி 98/96.
6)தன் பொருப்பாளரின் துணையோடு தன் வருங்காலக் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை.
தந்தையோ, மற்ற காப்பாளரோ கன்னிப்பெண்ணிற்கோ, கன்னி கழிந்த பெண்ணிற்கோஅவர்களின் விருப்பமில்லாமல் மணமுடித்து வைக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள், 'கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான)உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள் புகாரி: 5136.
ஒரு பெண்மணி நபியிடம் வந்து என் தந்தை எனக்கு விருப்பமில்லாத ஒருவருக்கு என்னை திருமணம் முடித்துக் கொடுதத்துவிட்டார்கள் என்று சொன்னபோது நீ அவரை விவாகரத்து செய்து விடலாம் என்று நபியவர்கள் கூற இல்லை அல்லாஹ்வின் தூதரே பெண்களுக்கு கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதற்கு தான் நான் இவ்வாறு கேட்டேன் என்று அப்பெண்மணி கூறுகிறார்கள்.ஹதீஸின் கருத்து.
7)விவாகரத்து பெற்று விட்டாலோ கணவன் இறந்து விட்டாலோ மறுமணம் புரியும் உரிமை
நீங்கள் (உங்களுடைய) துணைவியரை விவாகரத்துச் செய்து அவர்கள் தங்களின்(இத்தா) தவணையின் இறுதியை அடைந்தால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம்! (திருக்குர்ஆன் 02:232)
8)வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லும் உரிமை
நபியவர்கள் காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி பெண்கள் இறையில்லங்களுக்கு வந்து வழிபாடுகள் செய்ய இஸ்லாம் அனுமதி வழங்கியருக்கிறது.
'நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை (வெளிச்சமின்மையால்) யாரும் அறியமாட்டார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.புகாரி: 372.
தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.
புகாரி:1203,1204, முஸ்லிம்,நஸாயீ,திர்மிதீ,முஸ்னத் அஹ்மத், அபூதாவூத்.
பள்ளிவாயில்களுக்கு செல்ல உங்கள் பெண்கள்(மனைவியர்)அனுமதி கேட்டால் தடுக்காதீர்கள்(அனுமதி கொடுங்கள்) என்றும் மற்றொரு நபிமொழியில் என்றாலும் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்றார்கள் நபியவர்கள்.
முஸ்லிம், அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்.
9)கருத்துச் சொல்லும் உரிமை
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபிய்யா என்ற இடத்தில் வைத்து நபியவர்களுக்கும் குறைஷிகளுக்கும் ஒரு உடன்படிக்கை நடைபெறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை முடித்தவுடன் தங்களது தோழர்களிடம் எழுந்து சென்று 'குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள்" என்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபி (ஸல்) மூன்று முறை கூறியும் எவரும் எழுந்து செல்லவில்லை. ஆகவே, நபி (ஸல்) தனது மனைவி உம்மு ஸலமாவிடம் சென்று மக்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) 'அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்" என்றார்கள். நபியவர்கள் தனது மனைவி கூறியவாறே எழுந்து சென்று யாரிடமும் பேசாமல் தனது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள். இதைப் பார்த்த மக்கள் எழுந்து தங்களது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டு ஒருவர் மற்றவருக்கு மொட்டையிட ஆரம்பித்தார்கள். ஸீரா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்.
10)பெண்களிடம் வரதட்சணைப் பிச்சை வாங்குகிற முதுகெலும்பில்லாத கோழை ஆண் வர்க்கத்தினருக்கு சாட்டையடியாக அவர்களுக்குமணக்கொடை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.4:4
11)சொத்துரிமை
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்ல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான், பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும், இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம்(அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்குச் சேரும்)……4:11
12) கேள்வி கேட்டு உரிமைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை.
அஸ்மா பின்த் யஸீத் என்ற பெண்மணி நபியவர்களிடம் வந்து என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்,நான் ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக வந்திருக்கிறேன்.சத்தியத்தைக் கொண்டு அல்லாஹ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நபியாக உங்களை அனுப்பியருக்கிறான்.நாங்கள் உங்களையும் உங்களை அனுப்பிய உங்கள் இறைவனையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாங்கள் பெண்கள் கூட்டம், குறைவான எண்ணிக்கையில் படைக்கப்பட்டிருக்கிறோம். உங்களுடைய வீட்டின் அடித்தளமே நாங்கள் தான்,உங்களின் இச்சைகளை தீர்க்கும் உங்களின் குழந்தைகளை சுமக்கும் பெண்களாக இருக்கிறோம்.நீங்களோ ஜும்ஆ, கூட்டுத் தொழுகை, நோயாளிகளை நலம் விசாரித்தல், ஜனாஸாவில் கலந்துகொள்ளுதல், ஹஜ்ஜிற்கு பிறகு ஹஜ் செய்தல் இவையெல்லாவற்றையும் விட சிறந்த காரியமாக இருக்கிற அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நன்மைகள்pல் எங்களை விட முந்தி விடுகிறீர்கள்.
நீங்கள் ஹஜ்ஜிற்கோ உம்ராவிற்கோ சென்று விட்டால் உங்களின் கற்பை பாதுகாக்கிறோம், உங்களின் செல்வங்களை பாதுகாக்கிறோம், உங்களின் ஆடைகளை சுத்தப்படுத்துகிறோம், உங்களின் குழந்தைகளை நல்ல முறையில் வார்த்தெடுக்கிறோம். ஆனால் நன்மைகளில் உங்களோடு கூட்டாக வழி இல்லையா அல்லாஹ்வின் தூதரே? என்று ஒட்டுமொத்த பெண்களின் ஆதங்கத்தைக் கொட்டிவிடுகிறார்கள்.
உடனே நபியவர்கள் தங்களின் தோழர்களிடம் திரும்பி இது போன்ற மார்க்க விஷயத்தில் அழகான கேள்வியைக் கேட்ட ஒரு பெண்ணை நீங்கள் கண்டதுண்டா? என்று வினவ அதற்கு நபித்தோழர்கள் இல்லை என்று சொல்கிறார்கள்.
பெண்ணே நீ திரும்பிச் சென்று ஒட்டு மொத்த பெண்களுக்கும் தெரிவித்து விடு.
பத்தினித் தனமாக இருக்கவேண்டும், கணவனின் இறை கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்,கணவனின் அன்பைப் பெற முயற்ச்சிக்க வேணடும் அவையெல்லாவற்றிற்கும் இவை ஈடாகிவிடும்(இவைகளைச் செய்தால் மேற்கூறப்பட்ட ஆண்கள் செய்கிற அமல்களுக்கு கூலி கடைப்பது போல் உங்களுக்கும் கூலி கிடைக்கும்); என்றார்கள் நபியவர்கள்.ஷுஅபுல் ஈமான், மஃரிஃபதுஸ் ஸஹாபா.
13)இஸ்லாமியப் பண்டிகைகளின் போது பண்டிகை கொண்டாடுவதற்கான உரிமை.
'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?'என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்'' என ஹஃப்ஸா அறிவித்தார். புகாரி:824 முஸ்லிம், நஸாயீ, முஸ்னத் அஹ்மத்
14) நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கிற அழைப்புப் பணிகளில் ஈடுபடுகிற உரிமை
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர், அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், (ஏழைவரியாகிய) ஜகாத்தை (முறையாக)க் கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள், அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.9:71
15)வருமானம் ஈட்டும் உரிமை
கணவனை இழந்த அல்லது தலாக் விடப்பட்ட பெண் தன் தேவைக்காக வருமானம் ஈட்ட வெளியில் செல்கின்ற உரிமை.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) சொல்கிறார்கள். என்னுடைய சிறிய தாய் தலாக் விடப்பட்டார்.அவர் தன் தேவைக்காக பேரீச்சை தோட்டத்திற்கு சென்று பழம் பறிக்க நினைத்த போது ஒரு மனிதர் அவர்களைத் தடுத்தார். என் சின்னம்மா நபியவர்களிடம் விவரத்தைக் கூற நீ சென்று உன் பேரீச்சை மரத்தில் பழங்களைப் பறித்துக் கொள்.அவற்றை நீ தர்மம் செய்யலாம்,அல்லது நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்றார்கள்.
முஸ்லிம், நஸாயீ, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்.
ஆக இஸ்லாத்தின் வரம்புகளோடு இவ்வனைத்து உரிமைகளையும் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாம் வலியுறுத்துகிறது.
பெண்கள் தினத்தில் மட்டும் பெண்களுக்கான உரிமைகளை முழங்குவதை விட்டுவிட்டு எல்லா நேரங்களிலும்,காலங்களிலும் இஸ்லாம் வழங்கிய உரிமைகளை பெண்கள் பெற வேண்டும் அதற்கு இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
அது ஒன்று மட்டுமே பெண்கள் உரிமைக்கான, விடுதலைக்கான, சுதந்திரத்திற்கான வழியாக இருக்கும்.
ஆக்கம்:
Kaja Firdousi MA