அல்லாஹ்வை பார்க்க முடியுமா?

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது உண்மையாகும். இதனை யார் மறுக்கிறாரோ அல்லது மாற்று விளக்கம் தருகிறாரோ அவர் வழி தவறியவர்‌ ஆவார். 
                                                
 மறுமையில் முஃமின்கள் மகத்துவமும், மேன்மையும் மிக்க அல்லாஹு தஆலாவை கண்கூடாகப் பார்ப்பார்கள் என்பது அஹ்லுஸ்ஸுன்னாவின் நம்பிக்கையாகும். 
                                                
 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹு தஆலாவை மறுமையில் பார்க்க முடியும். முஃமின்கள் அவர்கள்‌ சொர்க்கத்தில் இருக்கும் நிலையில் தங்களுடைய கண்களால் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள். அதனை எதனோடும் ஒப்பிடவோ, அதற்கு வடிவம் கற்பிக்கவோ முடியாது. அல்லாஹ்விற்கும், அடியார்களுக்கும் மத்தியில் இடைவெளியும்  இருக்காது. 

 நூல்: அல்ஃபிகுஹுல் அக்பர் ஷாமில மின்னனு நூலகம், பக்கம் - 54, மாஹின் பிரிண்டர் வெளியீடு, பக்கம் - 94. 
                                                
 இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்று அவனை முழுமையாக சூழ்ந்தறியமாலும், எப்படி என்றில்லாமலும் மறுமையில் சுவனவாசிகள் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது உண்மையே. இதனைக்குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 
                                                
 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ  اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ‌ 

 அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். 

 தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். 

 (அல்குர்ஆன் : 75:22,23) 
                                                
 அல்லாஹ் நாடியவாறும், அவன் அறிந்ததைப் போன்றும்‌ இதன் விளக்கம் அமையும். 
 இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஸஹீஹான அனைத்து ஹதீஸ்களும் அவர்கள் கூறியதைப்போன்று விளங்க வேண்டும். 

 அல்லாஹ் நாடியவாறும், அவன்‌ அறிந்ததைப்போன்றும் இதன் விளக்கம் அமையும் என்பதன் பொருள், அது குறித்து நாம்‌ நமது சுயக் கருத்துகளை வலிந்து கூறவோ, நமது மனோ இச்சைப்படி யூகிக்கவோ முனையமாட்டோம் என்பதாகும் 

 மேலும் யார் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் முழுவதுமாக கட்டுப்பட்டு குழப்பமான விஷயங்களை அதனை அறிந்தவனிடம் ஒப்படைத்து விடுவாரோ அவர் ஈடேற்றம் அடைவார். 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 183. 
                                                
 இமாம் அபுல் இஸ் (ரஹ்) அவர்களின் விளக்கம்: 

 வழிகெட்ட பிரிவினர்களான ஜஹ்மியாக்களும், முஃதஸிலாக்களும் இன்னும் ஹவாரிஜ்களும், ஷியாக்களும், அவர்களின் வழிமுறையை பின்பற்றுவோர்களும் அல்லாஹ்வை பார்ப்பது தொடர்பாக அஹ்லுஸ்ஸுன்னாவின் கருத்திற்கு முரண்படுகிறார்கள். அவர்களின் கருத்து குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் பாத்திலாகும். மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பதை நபித்தோழர்களும், தாபியீன்களும், மார்க்கத்தின் முன்னோடிகளான இமாம்களும் இன்னும்‌ ஹதீஸ் துறை அறிஞர்களும், ஸுன்னத் ஜமாஅத்தின் பால் சேர்த்து பேசப்படும் தர்க்கவியலாளர்களில் ஒரு கூட்டத்தினரும் இக்கருத்தை உறுதிசெய்துள்ளார்கள். 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 183 
                                                
 அல்குர்ஆன் 75:22,23 ஆகிய வசனங்களுக்கு விளக்கமளிக்கையில் மேன்மையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் முகத்தைப் பார்ப்பதுதான் இதன் பொருள் என்று  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளித்தார்கள். 
                                                
 அஹ்லுஸ்ஸுன்னாவுடைய கொள்கையைச் சார்ந்த அனைவரும் இதே விளக்கத்தை தான் இவ்வசனம் தொடர்பாக கூறியுள்ளார்கள். 
                                                
 لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ 

 நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; 

 (அல்குர்ஆன் : 10:26) 
                                                
 இவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கும் "சியாதத்" என்பதற்கு அல்லாஹ்வின் முகத்தைப்  பார்ப்பது என்று அபூபக்கர்(ரலி)  அவர்களும், ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்களும் விளக்கமளித்தார்கள். 

 நூல்: அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்களின் கிதாபுஸ்ஸுன்னா  - 471. 
                                                
 மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பது தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு: 
                                                
 நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும் என்ற வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்தபோது, அழைப்பாளர் ஒருவர் அழைத்து நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ்விடம் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதி உள்ளது என்று கூறுவார். அதற்கு அம்மக்கள்  அல்லாஹ் எங்கள் முகத்தை பிரகாசிக்கச்  செய்தான்; எங்களை நரகிலிருந்து காப்பாற்றி சுவனத்தில் நுழைவித்தான் அல்லவா இதைவிட வேறு என்ன உள்ளது என்று கேட்பார்கள். அதற்கு மலாயிகா,  ஆம் என்று கூறுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் திரை விலக்கப்படும். 
                                                
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வைப் பார்ப்பதை விட விருப்பத்திற்குரிய ஒன்று அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை. 

 அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி) 
 நூல்: சுனனுத் திர்மிதி - 2552. 
                                                
 மறுமை நாளில் அல்லாஹ்வின் நேசர்கள் மட்டும் அவனை பார்ப்பார்கள் என்பதை விளக்கும் பாடத்தில் இமாம் இப்னு ஹுஸைமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ்வின் நேசர்களான முஃமின்களுக்கு அல்லாஹ் காட்சி தருவதன் மூலம் அவர்களை சிறப்பிப்பான். இன்னும் அல்லாஹ்வின் எல்லா எதிரிகளையும் விட்டு அவன் தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்வான். முஷ்ரிக், யஹூதி, கிறிஸ்தவன், வழிகேடர்கள் இன்னும் முனாஃபிக் ஆகியோர்கள் அல்லாஹ்வை பார்க்க முடியாது என்பதைத்தான் நான் அவனது கூற்றிலிருந்து அறிந்து கொண்டேன் என்று இந்த வசனத்தை ஓதினார்கள். 
                                                
 كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌  

 (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். 

 (அல்குர்ஆன் : 83:15) 

 நூல்: இமாம் இப்னு ஹுஸைமா அவர்களின் அத்தௌஹீத் - 180. 
                                                

- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
                                                
أحدث أقدم