லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

بسم الله الرحمن الرحيم

நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு காட்டிய கருணையின் வெளிப்பாடுகளில் ஒன்றே, தன்னை ஞாபகப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களை அவர்களுக்கு வழங்கியமையாகும். அதிலும் குறிப்பாக அவன் விரும்பக்கூடிய மிகச் சிறந்த வகையைச் சேர்ந்த திக்ருகளை காட்டிக் கொடுத்தமையாகும்.

அத்தகைய மகத்துவமிக்க வார்த்தைகளில் ஒன்றுதான், لا حول ولا قوة إلا بالله  லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ஆகும். இதனுடைய கருத்து: படைப்பிற்கு ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குத் திரும்புவதற்கோ, அதனுடைய விடயங்களை இலகுவான அமைப்பில் செய்வதற்கோ, தன்னுடைய காரியங்களில் இருந்தும் எந்த ஒரு காரியத்தை மேற்கொள்வதற்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லாஹ்வைக் கொண்டும் அவனுடைய உதவியைக் கொண்டும் மேலும், அவனுடைய பொருத்தத்தைக் கொண்டுமன்றி முடியாது என்பதுவாகும்.

படைப்புகள் அல்லாஹ்விடத்தில் தேவையுடையனவாக உள்ளன. இன்னும், அவற்றுக்கு ஒருபோதும் அவனை விட்டும் ஒதுங்கி வாழ முடியாது. அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டேயன்றி அவற்றுக்கு எந்த சக்தியும் கிடையாது. அதேபோன்று, அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற விடயத்தை விட்டும் விலகி நடப்பதாக இருந்தாலும் அவனுடைய உதவியைக் கொண்டேயன்றி விலகி நடக்க முடியாது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து (செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான். (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெறமாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்!" (அல் அன்ஃபால்: 24)

பொதுவாக, அரபு மொழி வழக்கில் لا حول ولا قوة إلا بالله  என்ற வார்த்தைக்கு ஹவ்கலா என்று சொல்லப்படும். இந்த ஹவ்கலாவானது எமது வாழ்வின் எல்லா கட்டங்களிலும் கூறப்பட வேண்டி ஒன்றாக இருக்கின்றது.

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "அவனுடைய வழமை لا حول ولا قوة إلا بالله என்று கூறக்கூடியதாக இருக்கட்டும்! அதன் மூலம் சுமைகள் சுமக்கப்படுகின்றன. அகோரமான நிலைமைகள் தளர்த்தப்படுகின்றன. இன்னும், நீங்கள் விட்டுவிட முடியாத துஆவாக அது இருக்கின்றது".

அதனால் தான், இந்த ஹவ்கலாவானது எமது வாழ்வில் பின்னிப்பிணைந்த அமைப்பில் காணப்படும் முகமாக சில சந்தர்ப்பங்களில் கூறுமாறு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அந்தவிதத்தில், முஅத்தின் حي على الصلاة ، حي على الفلاح என்று கூறும் போதும், தூங்கச் செல்லும் போதும், தூக்கமின்மையால் படுக்கையில் பிரலும் போதும், வீட்டைவிட்டு வெளியேறும் போதும், ஒவ்வொரு தொழுகையின் போதும், சகுனத்திற்கு பரிகாரம் தேடும் போதும் மற்றும், உணவு உட்கொண்ட பிறகும் என இவ்வார்த்தையைக் கூறுமாறு மார்க்கம் உபதேசிக்கின்றது.

ஹவ்கலாவுடைய பிரயோசனங்கள்

ஹவ்கலாவுக்கென்று தனியான பிரயோசனங்கள் பல உள்ளன. அவற்றை பின்வருமாறு இனங்காட்டலாம்.

சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகும்.
நபியவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கி: "கைஸின் மகன் அப்துல்லாஹ்வே! சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒன்றை உனக்கு அறிவித்துத் தரட்டுமா?" என வினவினார்கள். அதற்கு அவர்: "ஆம்" எனக்கூற,

 لا حول ولا قوة إلا بالله
என்ற வார்த்தையை நபியவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனத்தின் விளைச்சல்களில் ஒன்றாகும்.
நபியர்கள் கூறினார்கள்: "சுவனத்தின் விளைச்சல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அதனுடைய நீர் மதுரமானது. மேலும், அதனுடைய மண் வாசனைமிக்கது. எனவே, அதனுடைய விளைச்சல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்!" அதற்குத் தோழர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அதனுடைய விளைச்சல்கள் என்ன?” எனக் கேட்க,

 ما شاء الله لا حول ولا قوة إلا بالله
எனக் கூறுவதாகும் என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுத் தர்கீப்)

சுவனத்தின் கதவுகளில் ஒன்றாகும்.
"சுவனத்தின் கதவுகளில் ஒன்றை உனக்கு அறிவித்துத் தரட்டுமா?" என நபியவர்கள் வினவிவிட்டு,

لا حول ولا قوة إلا بالله
என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுத்தார்கள். (ஸஹீஹுத் திர்மிதி)

பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணங்களில் ஒன்றாக அமையும்.
நபியவர்கள் கூறினார்கள்: "பூமியில் ஒரு மனிதன்

لا إله إلا الله والله أكبر وسبحان الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله
என்று கூறுவானென்றால், அவனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அவை அமைந்துவிடும். அவை கடல் நுரையளவு இருந்தாலும் சரியே!" (அஹ்மத்)

5. அல்லாஹ்வுக்கு வார்த்தைகளில் மிக விருப்பமானதாக இருக்கும்.
நபியவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு வார்த்தைகளில் மிக விருப்பமானது:

سبحان الله ، لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شيء قدير، ولا حول ولا قوة إلا بالله، سبحان الله وبحمده
என்பதாகும். (அதபுல் முப்ரத்)

யார் இவ்வார்த்தையைக் கூறுகின்றாரோ, அவருடைய இரு கரங்களையும் நலவைக் கொண்டு அல்லாஹ் நிரப்பிவிடுவான்.
ஒரு மனிதர் நபியவர்களிடத்தில் வந்து, "நிச்சயமாக நான் அல்குர்ஆனில் இருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ள முடியாதவனாக உள்ளேன். எனவே, அதனில் இருந்தும் எனக்குப் போதுமாக்கிக் கொள்ளக்கூடிய ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்!" என்றார். அதற்கு நபியவர்கள்:

سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
என்று கூறுமாறு பணித்தார்கள். அப்போது அவர்: "அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ்வுக்குரியது, எனக்குரியது எது?" என வினவினார். அதற்கு நபியவர்கள்:

اللهم ارحمني وارزقني وعافني واهدني
என்று கூறுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அம்மனிதர் தனது கையால் "இவ்வாறு தானே!" என்று கூறியவராக எழுந்து செல்ல நாடிய போது நபியவர்கள்: "இவரைப் பொருத்தளவில் தனது கரத்தை நலவைக் கொண்டு நிரப்பிவிட்டார்" என்றார்கள். (அபூ தாவுத்)

மறுமையில் பிரயோசனம் எதிர்பார்க்கப்படுகின்ற எஞ்சியிருக்கும் நல்ல காரியமாகக் கருதப்படும்.
நபியவர்கள் கூறினார்கள்: "நீங்கள் எஞ்சியிருக்கும் ஸாலிஹான நல்லமல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்!" அப்போது: "அல்லாஹ்வின் தூதரே! அவை என்ன?" என்று வினவப்பட, "அவை நபிமார்களின் மார்க்கமாகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு தோழர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அது என்ன? எனக் கேட்டார்கள். அப்போதும் நபியவர்கள் அதே பதிலை அளித்தார்கள். மறுபடியும் தோழர்கள் அதே கேள்வியைத் தொடர, "தக்பீர் கூறுவதும், لا إله إلا الله என்று கூறுவதும், தஸ்பீஹ் செய்வதும், அல்லாஹ்வைப் புகழ்வதும், لا حول ولا قوة إلا بالله என்று கூறுவதுமாகும்" என்றார்கள். (அஹ்மத்)

எனவே, கண்ணியத்துக்குரிய சகோதர சகோதரிகளே! எம்முடைய வாழ்நாளின் கால எல்லையைக் கருத்திற்கொண்டு, நன்மைகளை அதிகரித்துக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகளில் களமிறங்க வேண்டிய தேவையில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அந்தவிதத்தில் சிறிய அமல்களின் மூலமாக கூடிய நன்மைகளைத் பெற்றுத்தரக்கூடிய காரியங்களைத் தேடி செயலுருப்படுத்துவது புத்திசாலித்தனமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்பாக்கியங்களைப் பெற்றிட அருள்பாளிப்பானாக!

-அஸ்கி அல்கமி
أحدث أقدم