بسم الله الرحمن الرحيم
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நவீன கலாச்சார மாறுபாட்டால் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்தல் என்பது அரிதாகிவிட்டது.
நம்முடைய இம்மை மற்றும் மறுமை வாழக்கைக்கு பயன்படும் காரியங்களை செய்வது மிக,மிக குறைந்து வருகிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக திக்ரு செய்வோம் என்ற தலைப்பில் திக்ரின் நன்மை மற்றும் நினைவில் கொள்ள இலகுவான சில திக்ருகளையும் குறிப்பிடுகிறோம்.
திக்ரின் அவசியம்:
நாம் அனைவரும் இறைவனின் அடியார்கள், அவனே அனைத்து ஆற்றல்களும் பெற்றவன் என்பதை எல்லா நேரங்களிலும் உணர்த்த திக்ருகள் அவசியமானதாகும்.மேலும் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் பெற திக்ருகள் மிகவும் பயன்படுகிறது.
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
இவ்வுலகில் கிடைக்கும் கடுமையான தண்டனை யாதெனில் அல்லாஹ் உன் நாவை அவனை நினைவுபடுத்துவதை விட்டும் தடுப்பதாகும்...
ஷைத்தான் மனிதன் மீது போடும் முதல் விலங்குச் சங்கிலி 'திக்ர்' செய்ய விடாமல் நாவை விலங்கிடுவதாகும். நாவு விலங்கிடப்பட்டால் ஏனைய உடலுறுப்புகள் சரணடைந்துவிடும்.
ٱسْتَحْوَذَ عَلَيْهِمُ ٱلشَّيْطَٰنُ فَأَنسَىٰهُمْ ذِكْرَ ٱللَّهِۚ
(ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான்.) [58:19]
எனவே, அல்லாஹ்வை திக்ர் செய்பவனாக இருந்து கொள்!
நூல்:
الوابل الصيب لابن القيم ص:42
أشد عقوبة في الدنيا
أن يمسك الله لسانك عن ذكره ...
أول قيود الشيطان على الإنسان تقييد اللسان عن الذكر ، فإذا قُيّد اللسان استسلمت الأركان. (استحوذ عليهم الشيطان فأنساهم
ذكر الله) فكن ذاكراً لله.
திக்ரு செய்யாதவன் பிணத்திற்கு சமம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி) நூல்: புகாரி 6407
இறைவன் உங்களை நினைக்க வேண்டுமா?
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
(அல்குர்ஆன்: 2:152)
உள்ளம் அமைதி பெறவேண்டுமா?
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன்: 13:28)
'திக்ர்' பாதுகாப்பான ஒரு அரண்:
நபி யஹ்யா –அலைஹிஸ்ஸலாம்- அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை படி தனது சமுதாய மக்களை அழைத்து ஐந்து விடயங்களை உபதேசித்தார்கள். அவற்றில் ஐந்தாவது பின்வருமாறு:
"அல்லாஹ்வை அதிகமாக நினைவு (திக்ர்) செய்யுமாறு உங்களை ஏவுகிறேன். அது (திக்ர்) எதைப்போன்றதெனில் ஒரு மனிதனை எதிரிகள் விரைவாக பின் தொடர்கின்ற போது அவன் பாதுகாப்பான ஒரு கோட்டைக்குள் நுழைந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதை போன்றதாகும். நிச்சயமாக அடியான் ஷைத்தானிடமிருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கும் நிலை யாதெனில் அவன் அல்லாஹ்வை நினைவு (திக்ர்) செய்யும் நிலையாகும்” (அஹ்மத்:17170) இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. இந்த ஹதீஸை தாரகுத்னீ, அல்பானீ, முக்பில் அல்-வாதிஈ போன்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளனர்.
مسند أحمد ط الرسالة (28/ 405)
وآمركم بذكر الله عز وجل كثيرا، وإن مثل ذلك كمثل رجل طلبه العدو سراعا في أثره، فأتى حصنا حصينا، فتحصن فيه، وإن العبد أحصن ما يكون من الشيطان إذا كان في ذكر الله عز وجل "
சப்தமிட்டு திக்ரு செய்யக்கூடாது:
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
(அல்குர்ஆன்: 7:205)
அதிக பலன்தரும் சிறிய திக்ருகள்:
1.நாவிற்கு எளிதானது மறுமையில் தராசில் கனமானது:
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِهِ ... سُبْحَانَ الْلَّهِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி,சுப்ஹானல்லாஹில்அழீம்
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.
புகாரி:6406
2.கடல் நுரையளவு பாவம் மன்னிக்கப்பட வேண்டுமா?
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِه
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
ِஒரு நாளில் 100 முறை கூறினால் அவரது பாவம் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6405
3.ஒரு துஆவில் மூன்று பலன்கள்:
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
தினமும் 100 முறை ஓதினால்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹு அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
1.நூறு நன்மை எழுதப்படும்.
2. நூறு தீமை அழிக்கப்படும்.
3.மாலை வரை ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
புகாரி:3293
4. சொர்கத்தின் கருவூலமான வார்த்தை:
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது. புகாரி:6409
5. சொர்கத்தின் எட்டு வாசல் உங்களுக்காக திறக்கப்பட வேண்டுமா?
உளுச் செய்த பின்னர்
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 345.