எமக்கு மத்தியில் சில நயவஞ்சகர்களும் மதச்சார்பின்மை போக்கில் உள்ளவர்களும் இருக்கிறார்கள், சில ரகசிய முகவர்கள் எம் சமூகத்தில் உருமறைத்துக் ஊடுருவியிருக்கிறார்கள்.
அவர்கள் நாடுவது இஸ்லாத்தின் அழிவையே.
முஸ்லிம்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது குப்ர்! அவர்கள் நிராகரித்ததை போல் நாமும் நிராகரிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பு.
எம்மில் சிலர் அவர்களுடன் நட்பு வைத்திருக்கிறார்கள், சிலருக்கு உறவினர்களாக இருக்கிறார்கள், அதிலும் மிக பயங்கரமான நிலை எம்மில் சிலர் அவர்களிடம் (மார்க்க) கல்வியை கற்பவர்களாக இருக்கின்றனர். அவர்களை தங்களது உஸ்தாத்மார்களாகவும் தாங்கள் மேற்கோள் காட்டக் கூடியவர்களாகவும் எடுத்தவர்களே மிக பயங்கரமான நிலையில் இருப்பவர்கள.
சமூகத்தில் புத்திஜீவிகள் என அடையாளம் பெற்றவர்களில் சிலர் துறையில் இஸ்தீரமான அறிவில்லாததன் காரணமாகவும் இன்னும் சிலர் மனோ இச்சைக்கு விலைபோனதன் காரணமாகவும் அந்த சிந்தனைகளை உள்வாங்கி பிரச்சாரமும் செய்து வருகிறார்கள்.
முஹம்மத் இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: "நிச்சயமாக இந்த அறிவு மார்க்கமாகும், எனவே உங்கள் மார்க்கத்தை எவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள். (முகத்திமது ஸஹீஹ் முஸ்லிம்)
உங்களுடைய அறியாமையை பயன்படுத்தி பிற்காலத்தில் சந்தேகங்களையும் குழப்பங்களையும் போட்டு உங்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி நரகதிற்கு இட்டுச்செல்லும் கருத்துகளை உங்கள் மனதில் உட்செலுத்தும் நோக்கில் இஸ்லாத்தை வைத்து நாடகமாடி உங்களுடைய நம்பிக்கையை வெல்லும் ஒரு நயவஞ்சகராக அல்லது ஒரு மதச்சார்பின்மை சிந்தனையுடையவராக உங்களுடைய உஸ்தாத் இருந்தால், எப்படிபட்ட ஒரு மார்க்கத்தை நீங்கள் பெறுவீர்கள்!?
ஆனாலும் அவர்களுடைய திட்டம் நிறைவேறாது, முஃமீன்களுக்கு வாக்களித்த வெற்றியை அல்லாஹ் கொடுத்தே தீருவான்!
பசு தோல் போர்த்திய இந்த புலிகளை நாம் எவ்வாறு அடையாளம் காண்பது?
அல்குர்ஆனில் அல்லாஹ் ஒரு அடையாளத்தை குறிப்பிடுகின்றான்
وَلَوْ نَشَآءُ لَاَرَيْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيْمٰهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِىْ لَحْنِ الْقَوْلِ وَاللّٰهُ يَعْلَمُ اَعْمَالَكُمْ
(நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக் குறியைக்கொண்டே நீங்களும் அறிந்து கொள்வீர்கள். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீங்கள் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 47:30)
இந்த வசனத்தை பற்றி நாம் சற்று சிந்திக்க கடமைபட்டுள்ளோம். அவர்கள் யார் என்பதை குறிப்பிட்டு தெளிவாக சொல்லப்படவிட்டாலும் அவர்களை அடையாளம் காணலாம் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
எப்படி .....?
அவர்களுடைய வார்த்தைகள்! அவர்களுடைய பேச்சு! அவர்ஙளுடைய நோக்கங்கள் அவர்களுடைய வாயினால் வெளிப்படும், உள்ளத்தில் இருப்பதை அவர்களால் மறைக்க முடியாது. இமாம் இப்னு அல்கய்யூம் (ரஹிமஹுல்லாஹ்) கூரினார்கள்: நாவு என்பது ஒரு கரண்டியை போன்றது உள்ளத்தில் உள்ளதை தான் அது எடுத்துவரும். (அல்ஹில்யா)
அவர்களுடைய உள்ளங்களில் உள்ள குப்ர் நாவில் வெளிப்படும்!
உஸ்மான் (ரலி அல்லாஹு அன்ஹு) இதை சற்று விரிவாக கூரினார்கள்: யார் ஒருவர் ஒரு ரகசியத்தை (நம்பிக்கையை) மறைக்கிறாரோ அதனை அல்லாஹ் அவருடைய முகத்திலும் நாவிலும் வெளிப்படுத்தாமல் விட்டதில்லை. (தப்ஸீர் இப்னு கஸீர்)
எனவே உள்ளதில் உள்ளது நாவில் வெளிப்படும், இது பல விதத்தில் வெளிப்படும்.
அவர்களுடைய நாவில் தெளிவாக வெளிப்படும் மிக பயங்கரமான ஒரு கருத்தை பற்றியே நான் இந்த இடத்தில் பேச விரும்புகிறேன், அது தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸுன்னாஹ்வை குறித்து அவர்களிடம் வெளிப்படும் முரண்பாடு, எதிர்ப்பு மற்றும் தரம்தாழ்த்தல்.
நபியவர்களின் ஸுன்னாஹ்வை எதிர்க்க, முரண்பட, தரம்தாழ்த்த முனைகிறார்கள், ஹதீஸ் அறிவிப்பு என்று வரும்போது இதனை இரண்டு விதத்தில் செய்வார்கள்.
1) ஹதீஸ்களை முதலில் அறிவித்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பார்கள். இதை தான் ஷீஆக்கள் செய்கிறார்கள், இமாம் அபூ ஹாதிம் அர்ராஸி ஷீஆக்களை பற்றி பேசும் போது கூரினார்கள்: எவரொருவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிகிறாரோ அவர் (ஸுன்னாஹ்வுக்குறிய) எமது சாட்சியாளர்களை விமர்சிக்கிறார், மேலும் அவர் (உண்மையில்) எதிர்க்க முனைவது நபியவர்களின் ஸுன்னாஹ்வையே!
அவர்களுக்கு நேரடியாக நபியவர்களை விமர்சிக்க முடியாது எனவே அவருடைய செய்திகளை சுமந்திருக்கும் அவருடைய தோழர்களை விமர்சிக்கிறார்கள் என்பதே உண்மையான நிலவரம். எனவே தான் ஷெய்ஹ் அல்பானி கூரினார்கள்: "அவர்கள் அபூ ஹுரைராவை வெறுக்கின்றனர் ஏனெனில் அவர் பல ஹதீஸ்களை அறிவித்து அவர்களுடைய முதுகை முறித்தார்." இந்த கூற்றை சற்று அவதானிப்பது பொருத்தமானது. உண்மையில் அவர்களுக்கு அபூ ஹுரைரா பற்றி எந்த கவனமும் இல்லை, மாறாக அவர் சுமந்திருப்பதை தான் அவர்கள் வெறுக்கிறார்கள், அது தான் நபியவர்களின் ஸுன்னாஹ்.
2) சமகாலத்தில் நபியவர்களின் ஹதீஸ்களை தாக்குவதில் இன்னொரு வழிமுறையை கையாளுவதை நாம் காண்கிறோம், அது தான் Orientalist-களின் வழிமுறை, இதைத்தான் எமக்கு மத்தியில் உள்ள சில நயவஞ்சகரகளும், மதச்சார்பின்மை சிந்தனை தாக்கமுள்ளவர்களும் தங்களது அரபு பெயர்களையும் இஸ்லாமிய கலைசொற்கள் தொகுப்பையும் வைத்துக்கொன்டு பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.
அது தான் ஹதீஸ் அறிவிப்பாளர்களை தாக்குவதாகும், குறிப்பாக இமாம் புஹாரி போன்ற அறிவிப்பாளர் வரிசையை தங்களது நூல்களில் பதிவு செய்தவர்களை தாக்குவார்கள்.
ஏன் அவர்கள் இமாம் புஹாரியை விமர்சிக்கிறார்கள்? அது இமாம் புஹாரியை வெறுப்பதன் காரணமாக அல்ல, மாறாக அவருடைய நூலில் அவர் சுமந்திருக்கும் ஹதீஸ்களை தட்டிகழிக்கவே அவரை தாக்குகிறார்கள். இமாம் புஹாரியை எவர் தாக்குகிறாரோ அவர் நிச்சையமாக ஒரு மடையர், அறிவிலி, அல்லது நயவஞ்சகர், வழிகெடுக்ககூடியவர்.
قَدْ نَـعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِىْ يَقُوْلُوْنَ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰـكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ
(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் : 6:33)
நபியவர்களை நேரடியாக தாக்குவது மிகவும் வெளிப்படையாக அமைந்துவிடும், அது அவர்களுடைய திரையை அகற்றிவிடும் என்பதனால் தான், எமக்கும் நபியவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பான ஸஹாபாக்களையும் இமாம் புஹாரி போன்ற அறிவிப்பாளர்களையும் தாக்குகிறார்கள். மக்களை ஏமாற்றக்கூடிய மறைமுகமான ஒரு வழிமுறை!
புஹாரி பற்றி ஒரு சில வார்த்தைகள்:
இமாம் புஹாரி தவறிழைக்காதவர் என்று நாம் சொல்கிறோமா? மீள்பார்வை தேவையற்றவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நாம் சொல்கிறோமா?
நிச்சையமாக இல்லை! மாறாக இமாம் தாரகுத்னி போன்ற பலமான அறிவாற்றல் நிறைந்த அறிஞர்களால் ஸஹீஹ் புஹாரி கடுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. இமாம் தாரகுத்னி, ஸுன்னாஹ்வை நேசித்த மனிதர், ஸஹீஹ் புஹாரியின் ஒவ்வொரு அங்குலத்தையும் சரி பார்க்க முயற்சித்தார், முடிவு என்னவானது? அல்லாஹ் அந்த புத்தகத்தை பாதுகாத்தான், இமாம் புஹாரியை தனது தூதருடைய ஸுன்னாஹ்வை பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தினான் என்பதே முடிவு!
இமாம் தாரகுத்னி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்த அந்த ஒரு சில விமர்சனங்களும் அவருடைய ஆய்வில் ஏற்பட்ட தவறுகளாக மேலும் அறிஞர்கள் ஆய்வு செய்யும் போது தெளிவானது.
புஹாரி பற்றி இமாம் தாரகுத்னி முன்வைக்காத, அவருக்கு முன்னர் உள்ள அறிஞர்கள் முன்வைக்காத விமர்சனங்களை எவராவது முன்வைத்தால் அவர் நிச்சயமாக ஒரு மடையர் என்பதே அறிஞர்கள் எடுத்திருக்கும் முடிவு.
ஹதீஸ் துறை விற்பன்னர், 20ற்கும் அதிகமான பாகங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை தனது நினைவுத்திறனால் எழுதிய இமாம் தாரகுத்னியாலும் அவருக்கு முன்னரும் பின்னரும் வந்த ஆயிரக்கணக்கான அறிஞர்களால் புஹாரியில் ஒரு தவறை சுட்டிக்காட்ட முடியவில்லை என்றால் புஹாரியை பற்றி பேச நீ யார்?
ஸஹீஹ் அல்புஹாரி கடந்த 1200 வருடங்களுக்கு மேலாக கவனத்தில் இருந்து வந்திருக்கிறது, இன்றும் நபியவர்களின் ஸுன்னாஹ்வை சுமந்து அதன் ஒளி பிரகாசமாக வீசிக்கொன்டு தான் இருக்கிறது.
எனவே உங்களை நீங்களே மதித்து நடந்துகொள்ளுங்கள், ஸஹீஹ் அல்புஹாரியை விட்டுவிடுங்கள். புஹாரியை பற்றி பேசுவது வானத்தை நோக்கி துப்புவதை போன்றது அது உங்கள் முகத்தில் தான் வந்து விழும்!
- Hamdhan Hyrullah, Paragahadeniya