ஆயிஷா ரழி அவர்களின் திருமண வயது

சில மாற்று மத நண்பர்கள் நபி(ச) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை ஆறு வயதில் மணந்து ஒன்பது வயதில் இல்லறத்தில் இணைந்ததைக் குறை கூறுகின்றனர். இவர்கள் தமது தாய், பாட்டியின் திருமணத்தைக் கேட்டால் இந்த வீணான விமர்சனத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள்.

அனைவராலும் மதிக்கப்படும் மகாத்மா காந்தி 1883 இல் தனது 13 ஆம் வயதில் 13 வயதான கஸ்தூரி பாயை மணந்தார். 1897 இல் மகா கவி பாரதியார் தனது 14 ஆம் வயதில் 7 வயதான செல்லம்மாவை மணந்தார். 1898 இல் தனது 19 ஆம் வயதில் 13 வயது நாகம்மாவை மணந்தார் ஈ.வே.ரா. பெரியார். 1906 இல் டாக்டர் அம்பேத்கார் தனது 15 ஆம் வயதில் 09 வயது இராமா பாயை மணந்தார்.

இவ்வாறு இள வயதுத் திருமணம் செய்தவர்களை விமர்சிக்காதவர்கள் இதை விட 1000 வருடங்களுக்கு முன்னர் 09 வயது ஆயிஷா(ரலி) அவர்களுடன் இல்லறத்தில் இணைந்ததை விமர்சிப்பது வியப்பாகவே உள்ளது!

-இஸ்மாயில் ஸஃலபி


ஆயிஷா ரழி அவர்களின் திருமணம் சம்பந்தமான நபிமொழியில் சந்தேகம் எழுப்புவோருக்கான ஒரு மறுப்பு

6 வயதில் நபியவர்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து 9 வயதில் குடும்ப வாழ்க்கையில் இணைந்ததாக ஆயிஷா ரழி அவர்கள் கூறும் அறிவிப்பு எவ்வித சந்தேகத்துக்குமிடமற்றதாகும். ஆனாலும் தாழ்வு மற்றும் தோல்வி மனப்பான்மையுடைய சிலரால் இதில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. சந்தேகம் எழுப்பத் தயங்குவோரில் சிலர் இதனை இஸ்லாத்திலுள்ள ஒரு குறையாகக் கருதுகின்றனர். 

ஆனால் உண்மையான ஒரு முஸ்லிமுக்கு அதில் எவ்விதமான சங்கடமும் இருக்காது. ஆதாரபூர்வமான அறிவிப்பில் இடம்பெற்ற இச்செய்தி உண்மையில் நடந்தது மாத்திரமின்றி அதில் குறைகாண்பதற்கு எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக நம்பிக்கை கொள்வார். நபியவர்கள் செய்தால் அதில் பல நலவுகள் இருக்கும் என்று உறுதியாக நம்புவார். அதனை முழு உலகமும் குறை எனக் கருதினாலும் அவருக்கு அது ஒரு பொருட்டல்ல. 

ஆனாலும் தோல்வி மனப்பான்மையுள்ளோர் புரிந்துகொள்வதற்காக பின்வரும் விடயத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

Nicholas Orme என்ற ஆங்கில ஆய்வாளர் ஒருவர் 
Medieval Children (மத்தியகால குழந்தைகள்) என்ற தனது நுலில் பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்றார்.  

”இந்நூற்றாண்டில் ஏழு வயதுடைய ஒரு பிள்ளை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் மாத்திரமின்றி திருமணப் பேச்சுக்குக் கூட முன்வரும் அளவுக்கு போதுமான முதிர்ச்சியடைந்தவராக கருதப்பட்டது. 

14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வீட்டை விட்டு வெளியேறி தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான சராசரி வயது, 12 முதல் 13 க்கு இடைப்பட்டதாகவே காணப்பட்டது.”

படிப்பினை
தற்காலத்தில் இயல்புநிலை சிதைக்கப்பட்டு முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உலக அமைப்பில் நாம் சிந்தித்தால் மார்க்கத்தின் பல விடயங்கள் சங்கடமாகத்தான் இருக்கும். மனித இயல்பு சிதைக்கப்படாதவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டதிட்டங்களே எப்பொழுதும் எக்கட்டத்திலும் நீதமாகத் தெரியும். நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் தோன்றினால் இஸ்லாமிய சட்டங்களைக் குறைகூறாமல் நமது வாழ்க்கை முறைதான் குறையுள்ளது எனப் புரிந்து அதனை மாறறுவதற்கு முயல வேண்டுமே தவிர இஸ்லாத்தை மாற்ற முனையக் கூடாது. அவ்வாறு எவராலும் மாற்றவும் முடியாது. மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்தான் எனபதே குர்ஆன் கூறும் கருத்தாகும்.

நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். 8:36.

- அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி

أحدث أقدم