வரம்பு மீறிய இசை தான் தடுக்கப்பட்டுள்ளதா?

வரம்பு மீறிய இசை தான் தடுக்கப்பட்டுள்ளதா?
நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களுக்கு பதில்.
‍‍‍‍‍‍ ‍‍
இஸ்லாத்தில் இசை ஹராம் இல்லை மாறாக வரம்பு மீறிய இசையை தான் இஸ்லாம் தடுக்கிறது என்பது நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களின் வாதம்.

"உண்மையில் இஸ்லாம் இசையை தடுக்கிறதா? நீர் ஓடுவதிலும் இசை இருக்கிறது! காற்றுவீசுவதிலும் இசை இருக்கிறது" என்று கூறுவதை பார்க்கலாம். அதிலும் ஒருவர் கொஞ்சம் எல்லை மீறி சென்று "குர்'ஆன் ஓதுவதிலும் இசை வெளிப்படுகிறது! அதுவும் ஹராமா? இன்னும் சொல்வதென்றால் இஸ்லாம் தான் உலகத்திற்கு கலைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது அப்படி பட்ட இஸ்லாம் இசையை தடுத்திருக்குமா? இல்லை, மாறாக இசையில் வரம்பு மீறுவதை தான் இஸ்லாம் தடுத்திருக்கிறது." என்று கூறுவதை பார்க்கின்றோம்.
‍‍‍‍‍‍ ‍‍
இவையெல்லாம் குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ நபித்தோழர்களின் புரிதல்களோ அல்ல மாறாக இவை வெறுமனே மனோ இச்சையை நியாயப்படுத்துவதற்கான வீண் வாதங்களே தவிர வேறு எதுவுமில்லை, எனவே இது என்னமோ ஆழமான ஆய்வு போல் முன்வைக்கப்பட்டாலும் அதை நாம் கணக்கில் எடுக்கவேண்டியதில்லை. அதிகாரத்தையும் பட்டத்தையும் பயன்படுத்தி பல்கலைக்கழகங்களிலும் ஏனைய வகுப்புகளிலும் இப்படி பேசி அப்பாவி மாணவர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டால் போதுமானது.
‍‍‍‍‍‍ ‍‍
இவர்களுடைய வாதம் எவ்வளவு பலவீனமானது தெரியுமா?
‍‍‍‍‍‍ ‍‍
உண்மையில் இவர்கள் இசை சம்பந்தமாக உள்ள ஹதீஸை கூட வாசித்ததில்லை என்று தான் சொல்லவேண்டும். இவர்கள் ஹதீஸின் வாசகத்தை புரிந்து எதிர்வாதங்கள் அமைக்கவில்லை மாறாக மக்களுக்கு மத்தியில் பதிவாகி இருக்கும் இஸ்லாத்தில் இசை ஹராம் என்ற கருத்துக்கு எதிராகவே அவர்களுடைய எதிர்வாதம் அமைந்திருக்கிறது. ஏனெனில் ஹதீஸின் வாசகத்தை பார்த்தால் இசை தடைசெய்யப்பட்டது என்று புரிவதை விடவும் இசை கருவிகள் தடைசெய்யப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்வதே பொருத்தமானது. எனவே நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மார்க்க அறிவில் மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பது நிரூபிக்கப்படும் மற்றுமொரு இடம் இது. அல்ஹம்துலில்லாஹ்!
‍‍‍‍‍‍ ‍‍
இசை கருவிகள் தடைசெய்யப்பட்டது என்ற கருத்தை பின்வரும் செய்திகளில் புரிந்துகொள்ளலாம்.
‍‍‍‍‍‍ ‍‍
*1)*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்ட
வையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), புஹாரி 5590
‍‍‍‍‍‍ ‍‍
விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட விஷயங்களுடன் இசை கருவிகளையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள், மேலும் சிலர் இவற்றை ஹலாலென கருதுவார்கள் என எச்சரித்தும் உள்ளார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*2)*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), அஹ்மத்
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*3)*
ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்), அஹ்மத்
‍‍‍‍‍‍ ‍‍
மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் இசை கருவிகள் தான் தடை செய்யப்பட்டது என்றும் இசை கருவிகள் மூலம் வரும் ஓசையை தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வெறுத்துள்ளார்க
ள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். இயற்கையான ஓசைகள் தடைசெய்யப்பட்டது அல்ல.
‍‍‍‍‍‍ ‍‍
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெறுமனே இசை ஹராம் என்ற கருத்துப்பட சொல்லியிருந்தால் கூட "குர்ஆன் ஓதுவதிலும் நீர் ஓடுவதிலும் இசை வெளிப்படுகிறதே?" என்று இவர்கள் முன்வைக்கும் வீண் வாதங்கள் ஒரு அளவேனும் சரி என்று சொல்லலாம், ஆனால் ஆதாரமும் இல்லை, வாதங்களும் பிழை!
‍‍‍‍‍‍ ‍‍
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தை அற்புதமானது, ஏனெனில் அது வஹி! பகுத்தறிவாளர்கள் மற்றும் மனோ இச்சை காரர்களின் வாதங்கள் எல்லாம் ஹதீஸின் வாசகத்துக்கு முன்னாள் மூக்குடைந்து போய் நிற்கிறதே!
‍‍‍‍‍‍ ‍‍
_- Hamdhan Hyrullah, Paragahadeniya_
Previous Post Next Post