சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்குமில்லை

- Hamdhan Hyrullah, Paragahadeniya.
‍‍‍‍‍‍ ‍‍
சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதில் யாரும் முரண்படலாகாது, இன்று இந்த தலைப்பு தவறாக அணுகப்படுவதன் காரணத்தால் இது ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பாக மாறியுள்ளது, வெறுமனே அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்கவில்லை என்பதால் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை முஸ்லிம்களே ஓட்டும் நிலையை உருவாக்கி இருக்கிறது.
‍‍‍‍‍‍ ‍‍
இந்நிலை புதியதல்ல, இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக இவ்வாதத்தை முற்படுத்தி முஸ்லிம்களை காபிர்கள் என்று தீர்ப்பளித்து கொலை செய்வதை நியாயப்படுத்தியவர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் தோன்றிய ஹவாரிஜ்கள். பின்னர் சென்ற நூற்றாண்டில் இஹ்வான்கள் அதனை புதுப்பித்தார்கள், குறிப்பாக செய்யித் குதுப் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி இஸ்தாபகர் மவ்லானா மவ்தூதி. இது தான் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவின் விளக்கம் என்று சொன்னார்கள், நபி மார்கள் இதற்காக தான் அனுப்பப்பட்டார்கள் என்று சொன்னார்கள், தவ்ஹீதுல் ஹாக்கிமிய்யா என்று பெயர் சூட்டினார்கள், வாய்க்கு வந்தவாறு தக்fபீர் செய்தார்கள். இதனடிப்படியிலையே தக்fபீர் சிந்தனையை சுமந்த ஹாரிஜிய்ய அமைப்புகள் உருவாகின, எனவே தக்fபீர் சிந்தனையின் ஊற்று "சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது" என்பது சம்பந்தமான இந்த தவறான பிரச்சாரம் தான்.
‍‍‍‍‍‍ ‍‍
அடிப்படையில் முஸ்லிமாக இருக்கும் ஒருவர் வெறுமனே அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்காததன் காரணமாக அவரை காபிர் என்று தீர்ப்பளிக்க முடியுமா?
‍‍‍‍‍‍ ‍‍
அல்லாஹ் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் பற்றி அல்லாஹ் மூன்று விதமாக சொல்கிறான்.
‍‍‍‍‍‍ ‍‍
அவர்கள் காபிர்கள்:
"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
" [குர்ஆன் 5:44]
‍‍‍‍‍‍ ‍‍
இந்த வசனத்தை வைத்து தான் அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிப்பவன் காபிர் என்ற தீர்ப்பை சொல்கிறார்கள்.
‍‍‍‍
‍‍‍‍‍‍ ‍‍அவர்கள் அநியாயக்காரர்கள்:
"எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!" [குர்ஆன் 5:45]
‍‍‍‍‍‍ ‍‍
அவர்கள் பாவிகள்:
"எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்." [குர்ஆன் 5:47]
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍அவர்கள் காபிர்கள் என்று வரக்கூடிய வசனம் குறித்து இப்னு அப்பாஸ் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களுடைய மாணவர்களும் கூறினார்கள்: "அவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாத ஒரு குப்ர்ரை கொண்டு நிராகரித்தார்கள்" [இமாம் இப்னு தைமிய்யா - மஜ்மூ அல்பதாவா 7/312]
‍‍‍‍‍‍ ‍‍
இப்னு அப்பாஸ் ரலி அல்லாஹு அன்ஹு மற்றும் தாவூஸ் (தாபிஈன) ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: "அது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய குப்ர் அல்ல, மாறாக ஒருவன் அதனை செய்தால் அவன் நிராகரிப்பாளன் தான், ஆனாலும் அவன் அல்லாஹ்வையும் மறுமையையும் நிராகரித்தவனுக்கு ஒப்பானவன் அல்ல." [இமாம் பாகவி - மஆலிமுத் தன்ஸீல் 3/61]
‍‍‍‍‍‍ ‍‍
இந்த விளக்கத்தையே ஏனைய ஸலபுகளும் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வுடைய இமாம்கள் சொல்லியிருக்கிறார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
எமது மொழி வழக்கில் சொன்னால் அது *சிறிய குப்ர் [குப்ர் அல்அஸ்கர்]*
‍‍‍‍‍‍ ‍‍
எனவே அடிப்படையில் முஸ்லிமாக இருக்கும் ஒருவன் வெறுமனே அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்காததால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட மாட்டான்.
‍‍‍‍‍‍ ‍‍
இதனை இமாம் இப்னு அல்ஜவ்ஸி 5:44 வசனத்துக்கு விளக்கம் சொல்லும் பொது அழகாக முன்வைக்கிறார்: "யார் அல்லாஹ்வின் சட்டத்தை மறுத்த நிலையில் அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர் காபிராவார், யார் தனது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் சட்டத்தை மறுக்காமல் அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவன் பாவியாவான்". [ஸாத் அல்மஸீர் 2/366]
‍‍‍‍‍‍ ‍‍
பல ஸலபுகளின் விளக்கமாக பதியப்பட்டிருந்தும் சிலர் அதனை இப்னு அப்பாஸ் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களோடு மட்டும் சுருக்கிவிட்டு அதனை ஏற்க மறுக்கின்றனர். அந்த விளக்கம் சரியானது, அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்காததன் காரணமாக இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் புரியமுடியும்.
‍‍‍‍‍‍ ‍‍
ஹுதைபா (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
"எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழிமுறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்
கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நான், "அந்தக் கால கட்டத்தை அடைந்தாள் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன்.
அதற்கு "அந்த ஆட்சியாளரின் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே! உன் செல்வங்கள் பறிக்கபட்டாலும் சரியே! (அந்த ஆட்சித்தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்]
‍‍‍‍‍‍ ‍‍
வேறு சில ஹதீஸ்களில்: "தெளிவான குப்ர்ரை காணாத வரை கிளர்ச்சி செய்ய வேண்டாம்" என்று நபியவர்கள் வழிகாட்டுகிறார்.
‍‍‍‍‍‍ ‍‍
தெளிவான குப்ர் ஒன்றை காணாதவரை கிளர்ச்சி செய்யக்கூடாது என்பது நபியவர்களின் வழிகாட்டல், ஸலபுகளின் மன்ஹஜ் ஆகும்.
‍‍‍‍‍‍ ‍‍
மேற்குறிப்பிட்ட ஹதீஸில் //அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழிமுறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள்// என்ற வாசகத்தில் அவர்கள் அல்லாஹ்வின் சட்டம் அல்லாத்தை கடைபிடிப்பார்கள் என்பதும் அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படி ஆட்சி செய்யமாட்டார்கள் என்பதும் தெரிகிறது ஆனாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவேண்டாம் என்று நபியவர்கள் சொல்வதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
‍‍‍‍‍‍ ‍‍
எனவே இப்னு அப்பாஸ் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களின் விளக்கம் சரியானது என்பதை மேற்கூறிய ஹதீஸில் இருந்து நிரூபணமாகின்றது.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍அடுத்தது இது முஸ்லிம்கள் குறித்தது இறக்கப்பட்ட வசனம் அல்ல என்றும் ஹவாரிஜ்கள் காபிர்களுடைய விஷயத்தில் இறக்கப்பட்ட வசனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இப்னு உமர் ரலி அல்லாஹு அன்ஹு தெரிவிக்கிறார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
இமாம் புஹாரி பதிவு செய்கிறார்கள்: "இப்னு உமர் ரலி அல்லாஹு அன்ஹு ஹவாரிஜ்களை அல்லாஹ்வின் படைப்புகளிலையே மிகவும் மோசமானவர்களாக கருதினார்கள், மேலும் இப்னு உமர் கூறினார்கள்: நிச்சயமாக அவர்கள் காபிர்கள் பற்றி இறக்கப்பட்ட வசனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த்துகி
றார்கள்" [ஸஹீஹ் புஹாரி 6531]
‍‍‍‍‍‍ ‍‍
இதனை இமாம் ஷாதிபி குறிப்பிட்ட வசனம் பற்றி பேசும் பொது அழகாக முன்வைக்கிறார்:
"இந்த வசனமும் (5:44) இதன் பின்னர் உள்ள இரண்டு வசனங்களும் குப்பார்கள் குறித்தும் யூதர்களில் அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றியவர்கள் குறித்தும் இறக்கப்பட்டதாகும், இஸ்லாமியர்கள் குறித்து எந்த சம்பந்தமும் இல்லை, ஏனெனில் ஒரு முஸ்லிம் பெரும் பாவம் ஒன்றை செய்வதால் அவனை காபிர் என்று சொல்ல முடியாது." [அல்மூவாபகாத் 4/39]
‍‍‍‍‍‍ ‍‍
எனவே எவரொருவர் இந்த வசனத்தை வைத்து வெறுமனே அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்காத முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் ஹவாரிஜ்களுடைய மன்ஹஜ்ஜில் பயணிப்பவர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
‍‍‍‍‍‍ ‍‍
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்
இப்படியான வழிதவறிய சிந்தனைகளில் இருந்து அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக
Previous Post Next Post