தற்கொலைத் தாக்குதல் கூடுமா?

சிறந்த மூன்று நூற்றாண்டில் வாழ்ந்த நல்லறிஞர்களின் வழியில் குர்ஆன் சுன்னாவை விளங்கி இஸ்லாத்தை தூய்மையாக எடுத்து நடக்க வேண்டும் என்பதே ஸலபி கொள்கையின் சாராம்சமாகும்.

இவர்கள் மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளையும் இணை வைப்பையும் எதிர்ப்பார்களே தவிர மாற்றுக் கருத்துள்ளவரை தாக்க வேண்டும் அழித்தொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் இருந்ததில்லை.

அரபு நாடுகளாகட்டும் ஆபிரிக்க நாடுகளாகட்டும். ஏன் நம் நாடாகட்டும். அங்குள்ள முஸ்லிம்கள் தங்களது நாட்டை ஆக்கிரமிக்க வந்த அந்நிய சக்திகளை விரட்டியடிப்பதற்கு தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக வரலாறு இல்லை.

இன்னும் சொல்லப் போனால் நேருக்கு நேராக யுத்தம் நடக்கும் போது தன்னந்தனியாக  எதிர்கொள்வதை  ஆதரித்தாலும்,  அப்பாவி மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தற்கொலைத் தாக்குதலை பாரிய குற்றமாகவே ஸலபி உலமாக்கள் நோக்குகின்றனர். அவ்வாறே பத்வாக்களை வெளியிட்டுமுள்ளனர். 

பலஸ்தீன் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள  போராளிக் குழுக்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு முற்பட்ட வேளைகளில் அவர்களுக்கு இதன் பாரதூரத்தை தெளிவுபடுத்தியவர்கள் ஸலபி உலமாக்கள் தான்.

வாருங்கள் தற்கொலைத் தாக்குதல் பற்றிய ஸலபி உலமாக்கள் என்ன செல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1. இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்:

கேள்வி :

யூதர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய சட்டம் என்ன?

பதில் :
இது கூடாது என்று பல தடவை உணர்த்தியிருக்கிறோம். "உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்.” என்று அல்லாஹ் அல்குர்ஆனில்  கூறுகிறான். 

“ஒருவன் எதன் மூலம் தன்னை கொலை செய்தானோ அதைக் கொண்டே மறுமையில் வேதனை செய்யப்படுவான்” என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புகாரி 5700, முஸ்லிம் 100) குண்டை தனது உடம்பில் கட்டி தானும் கொல்லப்பட்டு பிறரும் கொல்லப்படுவது பிழையான செயலாகும். 

2. இமாம் இப்னுல் உதைமீன் ரஹிமஹுல்லாஹ்:

தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்வது ஹராமாகும். அது பெரிய பாவமுமாகும். 
“எதன் மூலம் தன்னை கொலை செய்தானோ அதைக் கொண்டே மறுமையில் வேதனை செய்யப்படுவான்” என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புகாரி 5700, முஸ்லிம் 100) தற்கொலை என்பது இங்கு பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. 

இஸ்லாத்தையும்  முஸ்லிம்களையும் பாதுகாக்கவே அறப்  போராட்டம் நடைபெற வேண்டும். ஆனால் தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர் தன்னை அழித்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கு அவனால் தீங்கே  உண்டாகிறது. இதன் பின்னணியில்  எதிர்த்தரப்பினால் பல முஸ்லிம்கள் கொல்லப்படலாம் அல்லது பல  நெருக்கடிகளுக்கு அவர்கள் உள்ளாகலாம்.

தற்கொலைத் தாக்குதலை ஆதரிப்பது மோசமான செயலாகும். இதனால் பல மடங்கு தீங்குகளே உண்டாகின்றன. 
مجموع فتاوى ورسائل العثيمين (25/ 358)

ஹி 1418 ம் ஆண்டு அத்தஃவா என்ற  சஞ்சிகைக்கு இமாமவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கிய போது
"இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவருக்கு நரக வேதனை உண்டு என்பதே எனது கருத்தாகும்.” என்கிறார். 

3. ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித்:

தன்னைத் தானே வெடிக்கச் செய்வது தற்கொலையாகும். அது ஹராமாகும். இதனால் உயிர்கள் வீணாக பறிக்கப்படுவதோடு எதிர்த் தரப்பினரை மோசமாக பழிவாங்கவும் தூண்டுகிறது
https://islamqa.info/amp/ar/answers/217995

இந்தக் கருத்தையே முழு உலகிலுமுள்ள ஸலபி உலமாக்கள் கூறுகின்றனர். 

எடுத்துக்காட்டாக சிலரின் கூற்றுக்கள் பதியப்பட்டது. 

இதனடிப்படையில் தற்கொலைத் தாக்குதலை சரிகாணும் ஒருவர் ஸலபி மன்ஹஜ்ஜை சார்ந்தவராக இருக்க முடியாது என்பதே உண்மையாகும்.

Previous Post Next Post