சில நாட்களுக்கு முன்பு, நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) ஊடகம், 'ஆரம்ப கால இஸ்லாமிய அறிவியல் எப்படி மருத்துவதுறையை முன்னேற்றியது' என்ற தலைப்பில் மிக ஆழமான, படிப்பதற்கு பார்ப்பதற்கு அரிய செய்தி மற்றும் படங்களுடன் ஆச்சர்யமளிக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
958-ல், ஸ்பெயினின் வடக்கு பகுதியை ஆண்ட ரோமன் கத்தோலிக்க மன்னரான சான்சோவின் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் அகற்றப்படுகிறது. புரட்சிக்கான காரணம் வித்தியாசமானது. மன்னர் தன் அரசாங்க கடமைகளை நிறைவேற்ற முடியாத அளவு குண்டாக இருக்கிறார் என்பதே காரணம். சான்சோவின் பாட்டி இந்த சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என ஸ்பெயினின் தெற்கு பகுதியை ஆண்ட இஸ்லாமிய கலீபாவிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
இஸ்லாமிய ஆட்சியின் திறன்மிகு மருத்துவர்கள், கலீபாவின் உத்தரவின் பெயரில் சான்சோவின் உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டு மருத்துவ முறைகளை பரிந்துரைக்கின்றனர். ஓரிரு வருடங்களில் மருத்துவர்களின் முயற்சியின் பலனாக உடல் எடை குறைந்து ஒல்லியாகிறார் சான்சோ. பின்னர் இஸ்லாமிய படைகளின் உதவியோடு இழந்த ஆட்சியை மீட்கிறார் என்ற வரலாற்று செய்தியோடு கட்டுரையை தொடங்குகிறது நேஷனல் ஜியோகிராபிக்.
‘அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை, முதுமையை தவிர' என்பது போன்ற நபிமொழிகள் இஸ்லாமிய மருத்துவ அறிவியலுக்கு அடிப்படையாக இருந்ததாக குறிப்பிடும் கட்டுரை, இன்று வரை நாம் மருத்துவதுறையில் பயன்படுத்தும் பல்வேறு யுக்திகளை கண்டுபிடித்தது இஸ்லாமிய மருத்துவ உலகம் தான் என்கிறது.
உதாரணத்திற்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு தையல் போட பயன்படும் நரம்பிக் கம்பிகளை (Catgut) சுட்டிக் காட்டுகிறது. நரம்புக்கம்பிகள் என்பவை விலங்குகளின் குடல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழையாகும். மற்றுமொரு உதாரணமாக, உலக வரலாற்றில் நுரையீரல் சுழற்சியை (Pulmonary Circulation) முதன் முதலில் விளக்கியது இஸ்லாமிய மருத்துவ அறிஞர்கள் தான் என்கிறது அக்கட்டுரை.
பள்ளிவாசல்களுடன் இணைந்திருக்கும் மதரசாக்கள் மருத்துவ கல்வியை போதிப்பதில் சிறந்து விளங்கியிருக்கின்றன. இங்கிருந்து மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்த்து செயல்முறை பயிற்சியை பெற்றிருக்கின்றனர். ஆம், இன்று மருத்துவ கல்வி எப்படி செயல்படுகிறதோ அதனை அப்போதே செயல்படுத்தி காட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் பள்ளிவாசலை ஒட்டியே மருத்துவமனைகளும் கட்டப்பட்டிருக்கின்றன.
இன்று ஆங்கிலம் பொதுவான மொழியாக இருப்பது போல அன்று அரபி மொழி இருந்திருக்கின்றது. அரபியை அறிவியலுக்கான மொழியாகவே அன்றைய உலகம் அணுகியதாக கூறுகிறது நேஷனல் ஜியாகிராபிக். பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பின்னணியாக கொண்ட மருத்துவர்கள், அரபியை பொது மொழியாக கொண்டே விவாதங்கள் மற்றும் கற்பித்தலை முன்னெடுத்து சென்றதாகவும் கூறுகிறது கட்டுரை. இஸ்லாமிய ஸ்பெயினின் Corboda நகரம், அன்றைய ஐரோப்பாவின் பெரிய நகரமாகவும், மிகச் சிறந்த கலாச்சாரத்தையும் கொண்டிருந்ததால் 'உலகின் ஆபரணம்' என சிலரால் அழைக்கப்பட்டதையும் மறக்காமல் நினைவுபடுத்துகிறது கட்டுரை.
உண்மையில், இப்படியான கட்டுரைகள் நேஷனல் ஜியோகிராபிக் போன்ற ஊடகங்களில் வருவதையெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் இன்றோ விக்கிப்பீடியா முதற்கொண்டு பல்வேறு நன்கறியப்பட்ட ஊடகங்களும் இஸ்லாமிய அறிவியல் பொற்காலத்தையும், அறிஞர்களையும், அவர்கள் நவீன உலகிற்கு அளித்த பங்களிப்புகளையும் துறைச்சார்ந்து பட்டியலிடுகின்றன. ஆதாரங்களுடன் கூடிய தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் மேற்கொண்டு வருவதே இதற்கு காரணம். இந்த தலைப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயமாக மிஸ் பண்ணாமல் நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரையை படியுங்கள்.
நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரையை முழுமையாக படிக்க: