உழ்ஹியா கொடுப்பது சிறந்ததா? அல்லது அதன் பெறுமதியை தர்மம் செய்வது சிறந்ததா?

இக்கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்...


ஆரம்பத்தில்:  

"கஃபாவை தவாப் செய்வதை விட ஏழைகளுக்கு உணவளிப்பது மேல்..."

"ஆயிரம் பள்ளிகள் கட்டுவதை விட ஓர் எழைக்கு உணவளிப்பது சிறந்தது..."

"உழ்ஹியாவுக்காக பிராணியை அறுப்பதை விட அதன் பெறுமதியை தர்மம் செய்வது மேல்..."

போன்ற கருத்துக்களும் விமர்சனங்களும்  அண்மைக்காலமாக பரவுவதை அவதானிக்க முடியும்.

இவற்றுக்கு  விடையாக:

முதலாவது: இது போன்ற தேவையற்ற கருத்துக்களால் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப்பட்டு, நபியவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்கத்தின் பல அடையாளச் சின்னங்கள் காலம் செல்லும்போது இல்லாமலாக்கப்படும் அபாயமுள்ளது.

மார்க்கத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதன் நுணுக்கமான விடயங்கள், முன்னுரிமைகள் பற்றி நாம் அறிய வேண்டும்.

நபிகள்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்றைய நமது காலம் வரை எல்லாக் காலங்களிலும் ஏழைகள் இருந்திருக்கின்றார்கள்... இன்னும் இருக்கிறார்கள். எவரும் இது போன்ற கருத்துக்களை தெரிவித்ததாக அறியமுடியவில்லை. 

இரண்டாவதாக: அதிகமாக உம்ரா செய்பவர்கள், பள்ளி கட்டுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளுக்கு உதவுபவர்களாகவே இருப்பார்கள். உள்ளத்தில் ஈமான் நிறைந்த காரணத்தினாலேயே அவர்கள் இதுபோன்ற இபாதத்களை செய்கின்றனர்.

மூன்றாவதாக: இதைவிட அது சிறந்தது என்ற இந்த ஒப்பீடு எதற்காக? ஏன் இப்படியான ஒப்பீடுகள் மார்க்க அடையாளங்களான உம்ரா, உழ்ஹியாவுக்கும் ஏழைகளுக்கு உதவுதலுக்கும் இடையில் மட்டும் பேசப்படுகின்றது?

விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதைத் தவிர்த்து ஏழைகளுக்கு உதவுங்கள் என்று ஏன் சொல்லப்படுவதில்லை? திருமணங்களின் செலவுகளை குறைத்து ஏழைகளுக்கு உதவுங்கள் என்று ஏன் சொல்லப்படுவதில்லை?
விழாக்கள், சுற்றுலாக்கள் போன்றவற்றை நிறுத்தி ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று ஏன் சொல்லப்படுவதில்லை?
ஆடம்பரமாக வாழ்வோர் தமது வாழ்க்கைச் செலவினை குறைத்து ஏழைகளுக்கு உதவலாமே என்று ஏன் சொல்லப்படுவதில்லை?
ஏன்? ஏன்?

அதை விடுத்து மார்க்க அடையாளங்கள், அனுஷ்டானங்களை செய்ய ஏன் இத்தனை குறுக்கீடுகள்?
நபிகளார் செய்து காட்டிய மார்க்கத்தின் அடையாளங்களுல் ஒன்றான, அதுவும் வருடத்தில் ஒரேயொரு முறை வரும் உழ்ஹியாவை நிறைவேற்றுவதில் மட்டும் ஏன் இத்தனை கருத்துக்கள்?

உழ்ஹியா மற்றும் ஏழைக்கு உதவுதல் என்ற இந்த இரண்டு இபாதத்களையும் ஏன் ஒப்பிட வேண்டும்? இரண்டுமே சிறப்புக்குரியவையல்லவா?
மக்கள் எல்லா இபாதத்களையும் விட்டுவிட்டு ஏழைகளுக்கு உதவுதல் என்ற ஒரே இபாதத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமென்பதைப் போலல்லவா இருக்கின்றது இந்த வாதம்.

விடையின் சுருக்கம்: உழ்ஹியா கொடுப்பது சிறந்தது. அதுவே நபி வழி. அதை நிறைவேற்றுவோம். 
உழ்ஹியாவை நிறைவேற்ற வேண்டும் அத்துடன் ஏழைகளுக்கும் உதவ வேண்டுமென்ற ஆசை இருந்தால் உழ்ஹியாவை முழுவதுமாக அல்லது அதன் பெரும் பகுதியை ஏழைகளுக்கு வழங்குங்கள்.

ஏழைகளுக்கு உதவுவோர் உதவட்டும். உழ்ஹியா கொடுக்க நினைப்போரை விட்டுவிடட்டும். 

"இதுவே (அல்லாஹ்வின் போதனை) யாகும். எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் பயபக்தியில் உள்ளதாகும். (அல்குர்ஆன்- 22:32)

அல்லாஹ் போதுமானவன். அவனே நன்கறிந்தவன். 
மொழிபெயர்ப்புடன் கூடியது...

- பாஹிர் சுபைர் -
أحدث أقدم