மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்
நாம் வீதிகளில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல வேணடும் என்பதை இஸ்லாம் நமக்கு அழகான முறைகளில் வழிக்காட்டுகின்றன.
ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, ஹதீஸின் அடிப்படையில் பாதையின் ஒழுங்கு முறைகளை பேணி நடப்பதோடு, அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட அடியார்களாகவும் மாற முடியும்.
பாதையின் உரிமைகள்
ஒரு மனிதர் பாதையில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி கூறுவதை கவனியுங்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
'நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள். பு 6221
இந்த ஹதீஸில் முதலாவதாக போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பாதையின் குறுக்கே நின்று கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ இருக்க கூடாது என்று தடை செய்கிறது. ஆனால் சில இடங்களில் நடு பாதைகளில் நின்று கொண்டு இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
மேற்ச் சென்ற ஹதீஸில் தொடர்ந்து பாதையின் உரிமையை கொடுங்கள் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். பாதையின் உரிமைகள் என்றால் நமது பார்வைகளை பேணிக் கொள்வதாகும். அதாவது பாதைகளில் பெண்கள் போகும் போது அவர்களை தவறாக பார்ப்பது, அல்லது கேலி, கிண்டல் செய்வது, அல்லது பாதைகளில் நடக்கும் மானக்கேடான, அருவருப்பான விடயங்களை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் மேற்ச் சென்ற ஹதீஸில் தொடர்ந்து யாராவது ஸலாம் சொன்னால் அதற்கு பதில் சொல்வது பாதையுடைய உரிமைகளில் உள்ளதாகும்.
அதே போல மேற்ச் சென்ற அந்த ஹதீஸில் நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் படியும் ஏவுகிறது. பாதைகளில் தவறுகளை காணும் போது அது தவறு என்பதை அழகான முறைகளில் எடுத்துக் காட்டுவதும் பாதைகளின் உரிமைகளி்ல் உள்ளதாகும்.
எனவே இப்படியான ஒழுங்கு முறைகளை சரியாக பேணி நடக்க வேண்டும்.
சாபத்திற்கு உரியவர்கள்
சாபத்திற்குறிய இரண்டு விடயங்களை பயந்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, சாபத்திற்குறிய அவைகள் என்ன என்று நபித் தோழர்கள் கேட்டார்கள். மனிதர்கள் நடமாடும் பாதைகளில் மலம், சலம், கழிப்பது, அல்லது மக்கள் நிழல் பெறும் இடங்களில் மலம் சலம் கழிப்பது என்று (எச்சரிக்கையாக) கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம்.)
மனிதர்கள் நடக்கும் பாதைகளில் அசுத்தங்களை ஏற்ப்படுத்துபவர்கள் இறை சாபத்திற்கு உரியவர்கள். பாதைகளில் மலம், சலம் கழிப்பது மட்டும் இல்லை. குப்பை கூழங்களையும், மனிதர்கள் வெறுக்கும் பொருட்களை போடுவதும் இறை சாபத்திற்குரிய விடயங்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் மனிதர்கள் ஓய்வெடுக்கம் இடங்களில், நிழல் தரும் மரங்களுக்கு கீழாக, குளிக்கும் இடங்களில், தேங்கி நிற்கும் தண்ணீரி்ல் இப்படி மனிதர்களுக்கு இடைஞ்சல் தரும் அமைப்பில் நடந்து கொண்டால் இறை சாபத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
சமூக சேவை
பாதைகளில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக எந்த பொருள் இருந்தாலும், அதை உடனே எடுத்து துார போட வேண்டும். அதை நாம் அப்புறப் படுத்துவதன் மூலம் மக்களை பாதுகாப்பதோடு, அதற்காக அதிகமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு வழங்குகிறான். என்பதை பின் வரும் நபிமொழியை கவனியுங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.” புகாரி 652
எனவே நாம் பாதைகளில் செல்லும் போது மனிதர்களுக்கு இடைஞ்சல் தரும் எந்த பொருளாக இருந்தாலும் உடனே அதை அப்புறப் படுத்த வேண்டும். உச்சக் கட்ட நன்மையாக சுவர்க்கத்தையே அல்லாஹ் வழங்குகிறான்
பெருமையை தவிர்த்தல்
வீதிகளில் நாம் நடந்து செல்லும் போது அடக்கமாகவும்,பணிவாகவும். செல்ல வேண்டும். மாறாக நான் செல்வந்தன், நான் அரசியல்வாதி, நான் பதவி பட்டம் அதிகாரம் உடையவன், என்று ஆணவத்தோடு நடந்து சென்றால் அதுவே அவரின் அழிவுக்கு காரணமாகிவிடும்.
பின் வரும் குா்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் கவனியுங்கள்
அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் – அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.( 31:7. )
மேலும் ”நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். (முஸ்லிம் 5789)
எவருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவனம் செல்லமாட்டார்.
எனவே அன்பு வாசகர்களே ! நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமையை விட்டு விட்டு பாதைகளில் கண்ணியமாக நடந்து செல்வோமாக! மேலும் பாதைகளில் ஒழுங்கு முறைகளை பேணி நடந்து கொள்ள அல்லாஹ் நமக்கு அருள் பாலிப்பானாக !