இமாம் புகாரீ (ரஹ்) வாழ்வு

நாம் நிறைய நபிமார்களின் வரலாறுகள் அறிந்திருப்போம், நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் ஏராளமான நிகழ்வுகள் நிறைய அறிந்திருப்போம், நிறைய நபித்தோழர்களின் வரலாறுகள் அறிந்திருப்போம். ஒரு முஸ்லீமாக இருந்து கொண்டு இவைகளை நாம் அறிந்திருப்பது எவ்வளவு அவசியமோ, இதுபோல் நபிமொழிகளைகளை தொகுத்தளித்த கண்ணியமிக்க மார்க்க மேதைகளான இமாம்களின் வாழ்க்கை வரலாறுகளை பற்றி அறிய வேண்டும். அவர்களின் வாழ்வின் நடைபெற்ற நிகழ்வுகளிலிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த தூய இஸ்லாத்தை நிலைநாட்ட தங்களின் உடலாலும், அறிவாலும், தியாகத்தாலும் அரும்பணிச் செய்த கண்ணியமிக்க இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் வாழ்வு பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. இவைகளில் இருந்து நமக்கு என்ன படிப்பினை உள்ளது என்பதை பார்க்கலாம்.

இமாம் புகாரி (ரஹ்) அரபு நாடுகளில் பிறக்கவில்லை, அசல் அரபியும் அல்ல, அரபிகளில் வழித்தோன்றல்களில் வந்தவர்களும் அல்ல, அரபு அவர்களின் தாய்மொழியும் அல்ல. அவர்களின் பெயர் முஹம்மது பின் இஸ்மாயில் இப்னு இபுறாஹீம், இன்றைய உஸ்பகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு நகரான புகாரா என்ற பிரதேசத்தில் ஹிஜ்ரி 194ல் பிறந்தவர் என்பதால், இவர்களுக்கு புகாரி (புகாராவை சேர்ந்தவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இஸ்லாத்தை பாதுகப்பதற்காக. ஒரு சில நல்ல மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கிக் கொண்டுதான் இருப்பான்.

அப்படிப்பட்டவர்களில் நபி(ஸல்) அவர்களுடைய அருமைத்தோழர்களுக்கு பிறகு அதீத ஞாபக சக்தியுள்ள, நல்ல அறிவாற்றல் உள்ள, இஸ்லாமிய விமர்சகர்களுக்கு தக்க பதில் அளிக்கக்கூடிய இமாம் புகாரி போன்ற மாமேதைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உருவாக்கி இந்த தீனை நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவி உள்ளான் என்று தான் சொல்ல வேண்டும்.

இமார் புகாரி அவர்களுக்கு இருந்த ஞாபகசக்தி போன்று இன்று ஒரு மனிதரைக்கூட காண இயலாது. இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கி இருந்த மிகப்பெரும் கிருபை. அன்றைய காலம் கம்பூட்டர் காலமல்ல, இமாம் புகாரி இமாம் அவர்களின் மூளையும் உள்ளமும் கணினி மயமாக்கப்பட்டிருந்தது என்று தற்கால சந்ததிகளுக்கு புரியும்படி சொல்லுவதும் தவறில்லை என்று கருதுகிறேன். லட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் இமாம் புகாரி அவர்கள். அவர்களில் தரம் பிரித்து, அறிவிப்பாளர் வரிசைகளில் குறைபாடுகள் இல்லாத, நம்பகமான 7,000ம் ஹதீஸ்களை நமக்கு மிகுந்த கவனத்துடன் தொகுத்து தந்துள்ளார்கள். இன்று திருக்குர்ஆனுக்கு அடுத்த நிலையில் இமாம் புகாரி அவர்கள் தொகுத்துத் தந்துள்ள புகாரி கிரந்தம் நமக்கு உள்ளது.

இமாம் புகாரி சிறுவயதில் இஸ்லாமிய அறிவாற்றல் மிக்கவராக இருந்துள்ளார்கள். பள்ளி பருவத்தில் ஆதாவது 10 வயதில் திருக்குர்ஆனும், பல நூறு ஹதீஸ்களையும் மனனம் செய்து விட்டார்கள். 16 வயதில் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) ஹிஜ்ரி 180களில் வாழ்ந்த மார்க்க அறிஞர் அவர்களின் புத்தகங்கள், இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆசிரியர் வகீஹ் பின் ஜர்ரா(ரஹ்) அவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் மனனம் செய்துவிட்டார்கள். பகுத்தறிவு ரீதியாக குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒதுக்கிய முஹ்தஸிலாக்களின் புரட்டு வாதங்களையும் அறிந்து வைத்து அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கும் சிறப்பான அறிவாற்றல் உடையவர்களாக திகழ்ந்துள்ளார்கள் இமாம் புகாரி. தந்தையை சிறுவயதில் இழந்த காரணத்தால், புகாரி இமாம் அவர்களின் தாயார் அவர்களை இஸ்லாமிய கட்டமைப்பில் வளர்த்துள்ளார்கள்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்கு 16 வயது இருக்கும்போது தன் தாயார் மற்றும் தன் சகோதரனுடன் சேர்ந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். மக்கா, மதீனா, பக்தாத் போன்ற நகரில் இருக்கும் மார்க்க அறிஞர்களிடம் மார்க்க அறிவு பெற்று தன் பிள்ளை மேலும் மார்க்க ஞானமுடையவராக வரவேண்டும் என்பதற்காக இமாம் புகாரி (ரஹ்) அவர்களை ஹஜ் முடிந்தவுடன், அவர்களின் தாயார் மக்காவில் விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கு தன்னுடைய மற்றொரு மகனாருடன் திரும்புகிறார்கள்.

சுப்ஹானல்லாஹ் தொலைதூர பிரதேசம் உஸ்பகிஸ்தானிலிருந்து ஹஜ் பயணம் வந்து மக்காவில் தன்னுடைய மகனை மார்க்க கல்வி கற்க விட்டுவிட்டு சென்றுள்ள அந்த தாயாரின் தியாகத்தை நினைத்தால் உண்மையில் மனம் உருகுகிறது. தன்னுடைய மகன் தீனுக்காக உழைக்க வேண்டும் என்று அந்த தாய் நினைக்கப் போய் இன்று எமக்கு இந்த இஸ்லாம் தூய வடிவில் கிடைப்பதற்கு ஷஹீஹான ஹதீஸ் தொகுப்பான புகாரி கிரந்தமும் ஓர் காரணம் தானே.

இமாம் புகாரி தன்னுடைய தாய் மக்காவில் விட்டுச்சென்ற பின்பு 16 வருடங்களாக நாடு நாடாக சுற்றி மார்க்க கல்வி கற்று ஹதீஸ்களை தொகுக்க ஆரம்பித்தார்கள். மக்கா, மதீனா, சிரியா, எகிப்த் ஜொர்டான், பாலஸ்தீன், லெபனான், கூஃபா பஸரா, பாக்தாத் என்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று மிகப்பெரும் மார்க்க மாமேதைகளிடம் ஹதீஸ்கள் கற்றுக் கொண்டு. அவைகளை தொகுக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞராக பாக்தாதில் இருந்த இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களிடம் ஹதீஸ்கள் கற்க கிட்டத்தட்ட ஏழு முறை வந்துச் சென்றுள்ளார்கள் இமாம் புகாரி அவர்கள்.

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் இஸ்லாம் வளர்ந்த காலகட்டத்தில், ஹதீஸ்களை முழுமையாக தொகுக்கப்படாத அந்த காலகட்டத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாக கொள்கை ரீதியாக பிளவுபட்டு பிறிந்து இருந்தார்கள். குர்ஆன் சுன்னாவை முழுமையாக பின் பற்றும் கொள்கையில் உள்ளவர்களிடம் மட்டுமே இமாம் புகாரி அவர்கள் ஹதீஸ்களை கேட்டு தொகுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 1080 பேர்களிடம் ஹதீஸ்கள் கேட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னத்துவல் ஜமாத் கொள்கையில் உள்ளவர்கள் என்று இமாம் புகாரி அவர்களே கூறியுள்ளது வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளது. ஹதீஸ்களை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் கொள்கை ரீதியாக மாறுபட்டவர்களுக்கு மறுப்பு சொல்லும் விதமாக தன்னுடைய ஹதீஸ்களை வரிசைபடுத்தி தொகுத்துதந்துள்ளார்கள்.

உதாரணமாக ஷியாக்கள், முஹ்தசிலாக்கள், ஹாரிஜியாக்கள் போன்றவர்களின் வழிகேட்டுக் கொள்கைக்கு மறுப்பு சொல்லும் விதமாக ஒவ்வொரு தலைப்பிட்டு ஹதீஸ்களை தொகுத்துள்ளார்கள் என்பதை புகாரி கிரந்தத்திலிருந்து நாமும் அறிந்து கொள்ளலாம். நீண்ட தூர பயணம், தூக்கமின்மை, வெயில், மழை, குளிர் போன்றவைகளால் ஏற்பட்ட சிரமங்களை சகித்துக் கொண்டு எண்ணற்ற தியாகங்கள் செய்து தான் இமாம் புகாரி அவர்கள் ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்து தந்துள்ளார்கள்.

இமாம் புகாரி அவர்கள் புகாரி (ரஹ்) கிரந்தம் மட்டும் எழுதவில்லை, மேலும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய நூல் தான் தஹ்ரீஹ் என்ற புத்தகம். இதில் நிறைய ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் பதிவு செய்கிறார்கள். இந்த தஹ்ரீஹ் என்ற நூலிருந்து தான் அநேக அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறியப்படுகிறது. 16 லட்சம் ஹதீஸ்களை சேகரித்துள்ளார்கள், அவைகளில் 7275 ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துத் தந்துள்ளார்கள். இவைகளை மூன்று முறை சரி பார்த்துள்ளார்கள்.

புகாரி கிரந்தத்தை தொகுத்த பின்னர், இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தன்னுடைய ஆசான்களான இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்), அலி இப்னு மதீனி(ரஹ்), இஸ்ஹாக் இப்னு ராஹவியா(ரஹ்) போன்ற ஹதீஸ் துறையில் நிபுனத்துவம் வாய்ந்தவர்களிடம் புகாரி கிரந்தந்ததை காட்டி, அதில் உள்ளவைகள் அனைத்தும் சரி என்பதை உறுதிபடுத்திக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு ஹதிஸையும் பதிவு செய்யும்போது ஒளு செய்துவிட்டு இமாம் புகாரி அவர்கள் இரண்டு ரக்காத் தொழுத பிறகே ஒவ்வொறு ஹதீஸையும் எழுதியுள்ளார்கள்.

இந்த மாமனிதர் எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் தீனுக்காக எவ்வளவு தியாகங்கள் செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது உண்மையில் உள்ளம் பூரிப்பு அடைகிறது. இமாம் தம்முடைய இறுதி காலகட்டத்தில் தன்னுடைய சொந்த நாட்டிற்கு புகாராவுக்கு திம்பினார்கள். ஆனால் சேதனைகள் அவர்களுக்கு காத்திருந்த்து, ஒரு மார்க்க சட்டம் தொடர்பாக புகாராவின் ஆட்சியாளர் (அமீர்) அவர்களுடன் கருத்து முரண்பாடு ஏற்படுகிறது, அவர்களை புகாராவை விட்டு வேறு பிரதேசத்திற்கு செல்லுமாறு அமீரவர்களை உத்தரவிடுக்கிறார்கள். இதன் அடிப்படையில் பொறுமையுடன் ஹரம்தக் என்ற பிரதேசத்தில் குடியேறினார்கள்.

நல்லவர்களுக்கு சோதனை வரும் என்பதை இமாம் புகாரி அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். அந்த சோதனைகளை அல்லாஹ்விடமே விட்டு விட்டார்கள். ஹிஜ்ரி 256ஆம் ஆண்டு ஹரம்தக் என்ற இடத்தில் ஈதுல் ஃபித்ர் இரவு இஷா தொழுகைக்கு பிறகு இவ்வுலகை விட்டு பிரிந்து மரணம் மடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் மிகவும் பிரபலமான நபிமொழி “ஒரு மனித மரணித்துவிட்டால், 3 விசயங்கள் மட்டுமே அவனுக்கு நன்மை தேடித்தரும், அதில் ஒன்று பிரயோஜனமான கல்வி” இந்த பணியை தான் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் செய்து விட்டு சென்றுள்ளார்கள். திருக்குர் ஆனுக்கு பிறகு நம் அனைவருக்கும் நபிமொழிகளின் மூலம் வழிகாட்டுகிறது ஷஹீஹுல் புகாரி. இவைகளிலிருந்து நாம் பெறும் நன்மைகளில் இமாம் புகாரி அவர்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை.

இமாம் புகாரி (ரஹ்) போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்ற‌வற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாம் புகாரி போன்றவர்களின் வாழ்வு பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதும், இதனை நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துரைப்பதும், ஞாபகமூட்டுவதும் நம்முடைய ஈமானிற்கு வலு சேர்க்கும் என்பது நிச்சயம் சந்தேகமில்லை. காரணம் இன்று ஒரு சீடி இரண்டு சீடி மார்க்க சொற்பொழிவு கேட்டவனெல்லாம் மார்க்கம் பேசி தர்க்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

தூய இஸ்லாத்திற்காக அரும்பாடுபட்ட இமாம் புகாரி போன்றவர்களை எல்லாம் பெரிய அறிவாற்றல் உள்ளவரல்ல என்று தன் புத்திக்கு எட்டாத ஒரு சில விசயங்களை வைத்து தரம் தாழ்த்தி பேசுகிறான் இரண்டு சீடி கேட்டவன். இமாம் புகாரி போன்றவர்களின் வரலாறுகளை பற்றி அறியாமல் இருந்தால், இரண்டு சீடியில் பயான் கேட்பவர்கள் இமாம்களை தரக்குறைவாக பேசுவதை உண்மை என்று நம்பும் நிலை வருங்காலத்தில் எழலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக.

இமாம் புகாரி 10 வயதில் ஹாஃபிழானார்கள், ஆனால் இன்று 15 வயதில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள பிள்ளைகளை காண்பது மிக மிக அறிதாகி வருகிறது. நம் பிள்ளை ஒரு சினிமா பாடல் படித்து விட்டால் நாம் ரொம்ப ஆர்வதுடன் அதனை கேட்டு, கவுரவத்துடன் சந்தோசப்படும் அளவுக்கு, நம் பிள்ளை ஒரு பெரிய குர்ஆன் வசனத்தை மனம் செய்து ஓதிவிட்டானே என்று என்றைக்காவது சந்தோசப்பட்டிருப்போமா?

சிறந்த அறிவாற்றல், ஞாபகசத்தியுள்ள தன்னுடைய பிள்ளையை தீனுக்காக சேவை செய்யும் நோக்கில் மார்க்க கல்வி படிப்பதற்காக அனுப்ப எத்தனை பெற்றோர்களுக்கு மனம் வரும்?

இப்படி கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
أحدث أقدم