بسم الله الرحمن الرحيم
- ஷைகுல் இஸ்லாம் தகியுத்தீன் அபுல் அப்பாஸ் அஹ்மது இப்னு தைமிய்யா (ரஹி)
(شيخ الإسلام تقي الدين أبو العباس أحمد بن تيمية)
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் கொள்கையாகவும் சொல்லாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் உறுதிபடுத்தினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வெளிச்சமிக்க விளக்காக திகழ்ந்தார்கள். அவர்கள் மூலமாக மக்களை அல்லாஹ் இருள்களில் இருந்து வெளியேற்றி வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வந்தான். மக்கள் கருத்து வேற்றுமை கொள்கின்ற விஷயங்களில் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக நபி ஸல்லல்லாஹுஅலைஹி வசல்லம் அவர்களுக்கு வேதத்தையும் அவன் இறக்கினான். தங்கள் மார்க்க விஷயங்களில் சச்சரவு ஏற்பட்டால் அல்லாஹ் நபிக்கு கொடுத்து அனுப்பிய வேதம் மற்றும் ஞானத்தின் பக்கம் தங்கள் கருத்தை திருப்பிவிட வேண்டும் என்று அல்லாஹ் மக்களுக்கு கட்டளை இட்டான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தெளிவான ஆதாரத்தில் இருந்துகொண்டு, அல்லாஹ்வின் பக்கமும் அவனது மார்க்கத்தின் பக்கமும் அல்லாஹ்வின் அனுமதியுடன் மக்களை அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.
இந்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கும் அவர்களின் உம்மத்திற்கும் அவர்களின் மார்க்கத்தை அல்லாஹ் நிறைவு செய்து கொடுத்தான்; தனது அருளை அவர்கள் அனைவர் மீதும் பரிபூரணப்படுத்தினான் என்பதையும் அல்லாஹ் அறிவித்து விட்டான்.
இப்படி இருக்க அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்ற விஷயத்தை குழப்பமாக, தெளிவில்லாமல் நபிஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விட்டுவிட்டார்கள் என்று கூறுவது அறிவாலும் மார்க்கத்தாலும் ஏற்கமுடியாத ஒரு கருத்தாகும்.
அல்லாஹ்விற்கு தகுதியான, அவனுக்கு அவசியாமான, அவனுக்கு ஆகுமான அழகிய பெயர்கள், உயர்வான குணங்கள் என்னென்ன, இன்னும் அவனுக்கு கூடாத பண்புகள் என்னென்ன என்பதை நபி ஸல்லல்லாஹுஅலைஹி வசல்லம் அவர்கள் விளக்கி சொல்லாமல் சென்று விட்டார்கள் என்று கற்பனை செய்வது அறவே அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமாகும்; மேலும், மார்க்கத்தில் ஏற்க முடியாத ஒரு கருத்தாகும்.
ஈமான் – அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை அறிவது இந்த மார்க்கத்தின் அடிப்படையாகும்; நேர்வழியின்அஸ்திவாரம் ஆகும். மேலும், அது உள்ளங்கள் சம்பாதித்த செல்வங்களில், ஆன்மாக்கள் அடைந்து கொண்ட இன்பங்களில், அறிவுகள் புரிந்துகொண்ட கல்விகளில் மிக சிறந்ததாகும். அப்படி இருக்க இந்த வேதம் அதை விளக்கிக் கூறாமல் இருக்குமா? இன்னும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்(ஈமான் சமபந்தப்பட்ட விஷயங்களை விளக்கி) கூறாமல் விட்டிருப்பார்களா?! நபிமார்களுக்கு பின்னர் அல்லாஹ்வின் படைப்புகளில் மிக சிறந்தவர்களாக இருந்த சஹாபாக்கள் கொள்கை விஷயத்திலும் ஏனைய கூற்றுகளிலும் எப்படி இந்த குர்ஆனை(யும் நபியின் கூற்றையும்) நடுவராக ஆக்காமல் இருந்திருப்பார்கள்?!
மேலும், மலம் ஜாலம் கழிக்க செல்கின்ற முறைகளைக் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தமது உம்மத்திற்கு கற்றுக் கொடுத்தார்கள். இன்னும், “உங்களை நான் வெண்மையான மார்க்கத்தில்விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் அதன் பகலைப் போன்றாகும். அழிந்து நாசமாகுபவர்கள்தான் எனக்குப்பின்னர் அதிலிருந்து வழிதவறுவார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். மேலும், “அல்லாஹ் எந்த ஒரு நபியை அனுப்பினாலும் அவர், தான் அறிந்த நன்மையை மக்களுக்கு அறிவிப்பதும் தனக்கு தெரிந்த தீமையிலிருந்து மக்களை தடுப்பதும் அவர் மீது கடமை ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறி இருப்பது ஸஹீஹான ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது. மேலும், அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “வானத்தில் தனது இரு இறைக்ககளை திறந்து மடக்கி பறக்கும் ஒரு பறவை இருந்தால் அதைப் பற்றியும் எங்களுக்கு சில கல்விகளை கற்றுக்கொடுக்கமால் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இறக்கவில்லை.” (6) மேலும், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்கு முன் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நின்றார்கள். படைப்புகள் ஆரம்பமாக படைக்கப்பட்டதை எடுத்துக் கூறினார்கள். இப்படியாக, இறுதியில் சொர்க்கவாசிகள் தங்கள் இல்லங்களுக்கு செல்வது, இன்னும் நரகவாசிகள் தங்கள் இடங்களுக்கு செல்வது வரை அனைத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். நினைவில் வைப்பவர் அதை நினைவில் வைத்துக் கொண்டார். அதை மறந்தவர்கள் மறந்துவிட்டார்கள்”.
(இத்தனை விஷயங்களை தெளிவாக போதித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கொள்கையைஎப்படி போதிக்காமல், அல்லது அதை தெளிவுபடுத்தாமல் விட்டு சென்று இருப்பார்கள்!?)
அல்லாஹு தஆலாவை அறிவதன் மதிப்பும் முக்கியத்துவமும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தங்கள் தோழர்களுக்கு இந்த மார்க்கத்தில் பலனுள்ளஅனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு விஷயம் மிக சிறியதாக இருந்தாலும் அதையும் விட்டுவிடாமல் தமது தோழர்களுக்கு போதித்தார்கள். அப்படி இருக்க அந்த தோழர்கள் வணங்குகின்ற அகிலங்களின் இறைவனை தங்கள் உள்ளங்களில் அவர்கள் எப்படி நம்பிக்கை நம்பிக்கை கொள்ள வேண்டும், அவன் விஷயத்தில் தங்கள் நாவால் அவர்கள் என்ன கூறவேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் நபிஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எப்படி விடுவார்கள். இது கற்பனைக்கு எட்டாத விஷயமாகும். அல்லாஹ்வை அறிவதுதான் ஞானங்களின் இறுதி எல்லை ஆகும், அவனை வணங்குவதுதான் நோக்கங்களில் மிக சிறப்பானதாகும், அவனளவில் சேர்வதுதான் இறுதி இலட்சியமாகும்.
அது மட்டுமல்ல, அல்லாஹ்வை அறிவதும் அவனை நம்பிக்கை கொள்வதும்தான் நபித்துவ அழைப்பின் சாராம்சமும் இறை தூதுத்துவத்தின் கருப்பொருளும் ஆகும். ஆகவே, ஒரு பிடி ஈமானும் அறிவு ஞானமும் யாருடைய உள்ளத்தில் இருக்குமோ அவர் எப்படி இவ்வாறு கற்பனை செய்ய முடியும்? அதாவது, நபிஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஈமான் உடைய பாடத்தை முழுமையாக தெளிவுபடுத்த வில்லை என்று? அப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தெளிவுப்படுத்தினார்கள் என்றால் இந்த உம்மத்தில் சிறந்தவர்களும் தலைமுறையில் உயர்ந்தவர்களுமாகிய நபித்தோழர்கள் இந்த பாடத்தில் அதில் இல்லாததை அதிகப்படுத்தி அல்லது அதில் இருப்பதை குறைத்து இந்த மார்க்கத்தில் தவறு செய்துவிட்டார்கள் என்று யாரும் கற்பனை செய்ய முடியுமா?! இது அறவே சாத்தியமில்லாத எண்ணமாகும்.
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஈமான் சமபந்தப்பட்ட விஷயங்களை தெளிவுபடுத்தாமல் சென்றுவிட்டார்கள் என்று எண்ணுவதும் சாத்தியமற்ற கற்பனை ஆகும். அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறிய பின்னர், தோழர்கள் அதை புரிவதில் கூடுதல் அல்லது குறைவுசெய்து மார்க்கத்தில் தவறிழைத்து விட்டார்கள் என்று எண்ணுவதும் அறவே சாத்தியமற்றதாகும்.)
استحالة تقصير السلف في أصول الدين وفروعه
சான்றோர் மார்க்கத்தின் அசல் சட்டங்களிலும் கிளை சட்டங்களிலும் குறைபாடு செய்தார்கள் என்பது சாத்தியமற்றதாகும்:
சிறப்புகள் மிக்க தலைமுறையினர் மூவர் ஆவார்கள். ஒன்று நபி அவர்கள் அனுப்பப்பட்ட தலை முறையினர். இரண்டாவது, அவர்களை அடுத்து வந்த தலைமுறையினர் ஆவார்கள். மூன்றாவது அவர்களை அடுத்து வந்த தலைமுறையினர் ஆவார்கள். இந்த சிறப்பான மூன்று தலைமுறையினர் இந்த ஈமான் உடைய பாடத்தில் தெளிவான உண்மையையையும் சத்தியத்தையும் அறியாதவர்களாகவும் அதைப் பற்றி பேசாதவர்களாகவும் இருந்தார்கள் என்பது அறவே சாத்தியமற்ற ஒன்றாகும்.
இதை ஒருவர் ஏற்கவில்லை என்றால் இரண்டில் ஒன்றை அவசியமாக அவர் கூற வேண்டும். அதாவது அவர்கள் ஈமானை அறியவில்லை, இன்னும் அதைப் பற்றி பேசவில்லை. அல்லது உண்மைக்கு மாற்றமாக அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இன்னும் உண்மைக்கு மாற்றமானதை கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு விதமான கூற்றுகளும் நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்கள் விஷயத்தில் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஒன்றாகும்.
ஏனென்றால், யாருடைய உள்ளத்தில் கொஞ்சமாவது ஈமானும் கல்வியின் தேடலும் இருக்குமோ அல்லது வணக்கவழிபாட்டில் ஆர்வம் இருக்குமோ அவர் கண்டிப்பாக ஈமானைப் பற்றி அறியத் தேடுவார், அதைப் பற்றி விசாரிப்பார். அதை அறிவதுதான் அவருக்கு மகத்தான நோக்கமாகவும் பெரிய குறிக்கோளாகவும் இருக்கும். தான் எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை அறிவது அவரின் தலையாய நோக்கமாக இருக்கும். ரப்பு எப்படி இருப்பான், அவனது தன்மைகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அவர் ஆராய மாட்டார். மாறாக தான் எப்படி ரப்பையும் அவனது தன்மைகளையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை அறிவது அவருக்கு மிகமுக்கியமாக இருக்கும். பொதுவாக உள்ளங்கள் இதன் பக்கம்தான் அதிகம் ஆர்வம் உள்ளவையாக இருக்கும்.
இது நேரிய இயற்க்கையைக் கொண்டு தெளிவாக அறியப்பட்ட விஷயமாகும். ஆகவே, ஈமானைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அதிக தேவை இருந்தும் அந்த சான்றோர் அனைவரும் தங்கள் காலங்களில் அதைப் பற்றி அறியாமல், அதை தேடாமல் இருந்தார்கள் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயமாகும். மனிதர்களில் மிகவும் முட்டாளாக இருப்பவன், அல்லாஹ்வை அதிகம் புறக்கணித்து வாழ்பவன், உலகத்தை அதிகம் தேடக்கூடியவன், அல்லாஹ்வின் நினைவைவிட்டு அலட்சியமாக இருப்பவன் கூட ஈமானை அறியாமல் இருப்பான் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க அந்த சான்றோர் ஈமானை அறியாமல் இருந்தார்கள் என்று எப்படி சொல்ல முடியும்!?
அல்லது, நபித்தோழர்களும் தாபியீன்களும் ஈமானுடைய பாடத்தில் உண்மைக்கும் சத்தியத்திற்கும் மாற்றமானதை நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அதைத்தான் மக்களுக்கு கூறிக்கொண்டு இருந்தார்கள் என்பதை ஒரு முஸ்லிமால் நம்பிக்கை கொள்ளமுடியுமா!? அவரால் அதை ஏற்க முடியுமா!? அந்த சான்றோரைப்பற்றி அறிந்த புத்திசாலி யாரும் இப்படி எண்ணுவாரா!?
அந்த சான்றோரைப் பற்றிய (ஈமானியப்) பேச்சு, இந்த ஃபத்வாவில் அல்லது இதைவிட பன்மடங்கு இருக்கின்ற ஃபத்வாக்களில் எழுதி முடிப்பதைவிட அதிகமாக இருக்கின்றது. அந்த கல்வியைத் தேடி, ஆராய முற்படுபவருக்கு அது நன்றாகவே தெரியும்.
-அல்ஃபத்வா அல்ஹமவியாத்துல் குப்ரா
(الفتوى الحموية الكبرى )