ஸஃபர்மாதமும் ஒடுக்கத்து புதனும்

இஸ்லாமிய மாதங்களில் ஸஃபர் மாதம் இரண்டாவது மாதமாகும். இம்மாதத்தை பீடை மாதம் என்று நம்புவோர் நம்மில் உள்ளனர். காலத்தை நல்லது கெட்டது என்று குறிப்பிடுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும்.

அறியாமைக் காலத்தில் இம்மாதம் குறித்து இது போன்ற தவறான நம்பிக்கை இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இது குறித்த நபிமொழி : தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. “ஸஃபர்” மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு!

(நூல் : புகாரி 5707).

இங்கு ஸஃபர் மாதம் குறித்த தவறான நம்பிக்கையை நபி (ஸல்) அவர்கள் மறுத்துக் கூறியுள்ளார்கள்.

இந்த நபிமொழியில் உள்ள மற்றொரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். துவக்கத்தில் தொற்று நோயை மறுத்து விட்டு இறுதியில் தொழுநோயாளியிடமிருந்து விலகியிருக்கும் படிச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் என்னவெனில், அறியாமைக்காலத்தில் நோய் ஏற்படுவதற்குக் காரணமே தொற்றுதான் அல்லாஹ்வின் நாட்டத்துக்கு அதில் தொடர்பில்லை என்ற நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது. அதைத்தான் துவக்கத்தில் நபியவர்கள் மறுக்கிறார்கள். அதே நேரத்தில் தொற்றக் கூடிய சில நோய்கள் அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. வெளிப்படையான காரணங்களின் அடிப்படையில் தற்காப்பு மேற்கொள்வது சரியே என்பதை விளக்கும் விதத்திலேயே நபிமொழியின் பிற்பகுதி அமைந்துள்ளது.

ஸஃபர் மாதம் பீடை மாதம் என்பதும் அம்மாதத்தின் கடைசி புதன் கிழமையில் பலா முஸீபத்துக்களெல்லாம் (சோதனைகள்) இறங்குவதாக நம்புவதும் சத்திய இஸ்லாத்துக்கு விரோதமான நம்பிக்கையாகும். இந்த நாளை ஒடுக்கத்துப் புதன் என்று குறிப்பிடுகிறார்கள்.

காலத்துக்கும் மனித வாழ்க்கையில் நடைபெறும் இன்ப, துன்ப நிகழ்வுகளுக்கும் சம்பந்தமில்லை. மனிதர்களின் வாழ்வில் நடப்பவை எல்லாம் அல்லாஹுதஆலா எழுதி வைத்துள்ள விதியின் படியே நடக்கிறது. காலத்தின் ஒரு பகுதியை நல்லகாலம் என்றும் (அதாவது அப்போது செய்யப்படும் காரியமெல்லாம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புவது) இன்னொரு பகுதியை கெட்டகாலம் என்றும் (அதாவது அப்போது செய்யப்படும் காரியங்கள் வெற்றிகரமாக அமையாது என்று நம்புவது) சொல்வது மார்க்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒத்துவராததாகும்.

இத்தகைய நம்பிக்கை உள்ளவர்கள் நல்ல நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நேரத்தில் நடப்பவையெல்லாம் நல்லதாக நடப்பதில்லை. இவர்கள் கெட்ட நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நேரத்தில் நடப்பவையெல்லாம் கெடுதலாக நடப்பதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியது, “ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்.

(நூல் : புகாரி 7491, முஸ்லிம், அபூதாவூத்)

ஆக காலத்தை கெட்டது என்று குறிப்பிடுவது அதை இயக்கிக் கொண்டிருக்கும் அல்லாஹ்வையே குறை கூறுவதாகும்.

இந்த ஒடுக்கத்துப் புதன் நம்பிக்கை கொண்டவர்கள், பீடை கழிவதற்காக இலைகளில் குர்ஆன் வசனங்களை எழுதி தண்ணீரால் அதைக் கழுவிக் குடிக்கிறார்கள். இப்படிச் செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை, இது மூட நம்பிக்கையை தொடரும் மூடநம்பிக்கையாகும்.

அதே போல் அந்த பீடையிலிருந்து விடுபடுவதற்காக கடலிலும் ஆறுகளிலும் குளிக்கும் நடைமுறையையும் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் பலர்.

நம் மார்க்கத்தின் உயர்ந்த, அறிவார்ந்த தன்மையை

அறியாமல் மடமையால், தான் தோன்றித்தனமாக பிற மதங்களைப் பார்த்து காப்பி அடுத்து இதுபோன்ற செயல்களை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இந்தச் செயல்களை உருவாக்கி வைத்திருப்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்த ஒடுக்கத்து புதன் நாளில் தான் கடும் நோயிலிருந்து குணமானதாக சொல்கிறார்கள். வரலாற்றுப்படி இது தவறாகும். ஸஃபர் மாதம் 28 அல்லது 29ல் நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்டு அது நீடித்து ரபீஉல் அவ்வல் 12ல் மரணித்தார்கள் என்பது தான் சரித்திரம்.

ஒரு வேளை இவர்களின் தவறான வரலாறு சரி என்று வைத்துக் கொண்டாலும் அந்த நாள் பீடையிலிருந்து விடுபடும் நாளாக ஆகாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளும் கஷ்டங்களும் ஏற்பட்டுள்ளது. அவற்றிலிருந்து அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் விடுபட்டுள்ளார்கள்.

அல்லாஹ் எழுதி வைத்துள்ள படி சோதனைகள் ஏற்படுகின்றன. அவை விலகவும் செய்கின்றன. அதற்காக காலம் பீடையாக ஆவதில்லை.

ஆக ஸஃபர் மாதம் பீடை என்பதும் ஒடுக்கத்துப்புதன் பீடை கழிக்கும் நாள் என்பதும் இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

(நூல் : புகாரி 2697, மு-ஸ்லிம்)
أحدث أقدم