"நானே உங்கள் அதி உயர் கடவுளாவேன்" எனப் பிரகடணம் செய்தவனே நரகவாதியானால் நானும் அல்லாஹ் எனக் கூறுபவன் சொர்க்கத்தின் வாரிசாவானா?

உலகில் தம்மை கடவுள், கடவுளின் அவதாரம், நானும் கடவுளே, கடவுளின் பிள்ளையே போன்ற வார்த்தைகளை இஸ்லாமிய மதங்கள் அல்லாத வேறு மத நம்பிக்கைகளில் இருந்து வந்த இறை மறுப்புக் கோட்பாடாக புனித குர்ஆன் ஆங்காங்கு கண்டித்திருப்பதைப் போலவே நானே உயர்ந்த தெய்வம் எனக் கூறி தன்னை கடவுளாக அறிமுகப்படுத்தி, ஆணவத்தில் உச்சத்தை தொட்ட  ஃபிர்அவ்ன் & கம்பனி பற்றியும் அவர்களின் கெட்ட இறுதி முடிவு பற்றியும் அறிவிப்பதை ஒரு முஸ்லிம் சரியாக விளங்கினால்  அனைத்தும் கடவுள் கோட்பாட்டில் இருந்து தவ்பாச் செய்து மீளுவான் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு கால அவநம்பிக்கை
                -----
அல்லாஹ்வின் அபரிமிதமான தனித்தன்மை பற்றிய அறியாமை காரணமாக அல்லாஹ்வின் அடியார்டளான நல்ல மனிதர்கள் அல்லாஹ்விடம் தம்மைக் கொண்டு சேர்க்கும் இடைத்தரகர்களாக கருதப்பட்டு வணங்கப்பட்டனர் என்ற உண்மையை நூஹ் நபி (அலை) கால நல்லடியார்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பின் மூலம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது.

அவர்களின்  பின் வந்த கால சந்ததிகளில் குறிப்பாக சாமானிய மனிதர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்த இருண்ட காலங்களில் அரசர்கள், மன்னர்கள், மிருகங்கள், பெண்கள் போன்றோர் கடவுளின் அவதாரமாக நம்பப்பட்டு வந்தது மாத்திரமின்றி, ஃபிர்அவ்ன் போன்ற சில மன்னர்கள் தம்மை கடவுளர்களாகக் கருதி தமது மக்களை அடிமைகளாக்கி வாழ்ந்து வந்தனர் என்பதை ஃபிர்அவ்ன் தொடர்பான பின்வரும் சரித்திரம் ஒரு சான்றாகவும் அமைகின்றது.

 பின் வரும் செய்தியைக் குறிப்பிடும் இமாம் அஹ்மத் அவர்கள் 
"قَالَ بَيْنَا هِىَ تَمْشُطُ ابْنَةَ فِرْعَوْنَ ذَاتَ يَوْمٍ إِذْ سَقَطَتِ الْمِدْرَى مِنْ يَدَيْهَا فَقَالَتْ بِسْمِ اللَّهِ. فَقَالَتْ لَهَا ابْنَةُ فِرْعَوْنَ أَبِى قَالَتْ لاَ وَلَكِنْ رَبِّى وَرَبُّ أَبِيكِ اللَّهُ." (مسند أحمد )
ஃபிர்அவ்னின் அரண்மனையில் அவனது பிள்ளைகளுக்கு பணிபுரிந்து வந்த பெண் (மாஷித்தா) வின் கையில் இருந்த சீப்பு ஒருமுறை விழுந்ததும் அவள் பிஸ்மில்லா எனக் கூறிய படி அதனை எடுத்தாள். இதனைக் கேட்ட ஃபிர்அவ்னின் மகள் எனது தந்தை ஃபிர்அவ்னின் பெயரையா கூறுகின்றாய்? எனக் கேட்க, இல்லை; இல்லை என்னையும் (உன்னையும்) உனது தந்தை அனைவரையும் படைத்த அல்லாஹ்வின் பெயரைத்தான் மொழிந்தேன் எனக் கூறினாள் (முஸ்னத்- அஹ்மத்)

இதன் மூலம் ஃபிர்அவ்னுடைய மகள் தனது தந்தை  ஃபிர்அவ்னை அல்லாஹ்வின் இடத்தில் கடவுளாக எடுத்திருந்த அதே நேரம்; அந்த பணிப்பெண்ணோ மூஸா நபி பிரச்சாரம் செய்து வந்த அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு வாழ்ந்துள்ளாள் என்பது தெளிவாகின்றது.

அத்துடன், நபிமார்கள் போதித்த 
ஓரிறைக் கொள்கை என்பது வேறு. அத்வைதக் கொள்கை என்பது வேறு என்பதும் புலனாகின்றது.

ஃபிர்அவ்ன் கடவுள் இல்லை என்பது மூஸா நபி (அலை) அவர்கள் அடித்துக் கூறிய பிரச்சாரமானால்; .
அல்லாஹ் அனைத்துமாவான் என்ற வழிகெட்ட அத்வைதம் எவ்வாறு இஸ்லாமிய கொள்கையாக இருக்க முடியும் என சிந்திக்க வேண்டும்.

-எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி 

أحدث أقدم