بسم الله الرحمن الرحيم
உள்ளடக்கம்:
மல ஜலம் கழிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
வுளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்
பிரார்த்தனை செய்யும் முறை
உண்ணும் முறை
ஆடை அணியும் முறை
தூங்கும் முறை
மல ஜலம் கழிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்:
மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்கள் என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட போது, ஆம்! மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்)விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் :- முஸ்லிம்
அன்புள்ள சகோதரர்களே? சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.
ஆகவே நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் நாம் பேணி நடக்கும் போது மல ஜலம் கழிப்பது கூட நற்கூலிக்கான ஒன்றாக கருதப்படும். நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.
மல ஜலம் கழிக்கும் முறைகள் பின்வருமாறு
1- கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது.
நீங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- நஸாயி
2-கட்டடத்திற்குள் கிப்பலாவை முன்னோக்கி, பின்னோக்கி மல ஜலம் கழிப்பதில் தவறில்லை.
ஒரு நாள் ஹஃப்ஸா (ரலி)அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்- திர்மிதி
3-மல ஜல கூடத்திற்குள் நுளையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث
அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள் - இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
4- கட்டடமில்லாத வெளி இடங்களில் மல ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாகிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக)செல்வார்கள். ஆதாரம்- அபூதாவூத்
நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். ஆதாரம்; -திர்மிதி,அபூதாவூத்
5- வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது
உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் - அபூதாவூத், நஸாயி
6- கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.
உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும,; அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த குபா வாசிகளை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான்.
பரிசுத்தமாக இருப்பதயே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9-108)
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமர்ந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். ஆதாரம்-நஸாயி
7- மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டயையும் கொண்டு வந்தேன,; இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு விட்டயை(பார்த்து இது)அசுத்தமானதென்று வீசிவிட்டார்கள் என அபூ உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்-திர்மிதி
8- உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் -நஸாயி
9-நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். ஆதாரம் -திர்;மிதி, அபூதாவூத்
10- மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, நிழல்(போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
11-குளிப்பறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- அபூதாவூத்
வுளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம்-அஹ்மத்
12- தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
வுளு செய்யக்கூடிய, அல்லது குழிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆதாரம்-நஸாயி
13-மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம்செய்தார்கள்) ஆதாரம்-நஸாயி
14- சிறு நீர் கழிக்கும் போது ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு விடையளிக்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் விடையளிக்கவில்லை. ஆதாரம்-நஸாயி
15- சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்)பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் -நஸாயி
16-கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
غُفْرَانَكَ
குஃப்ரான(க்)க
ஆதாரம்:-திர்மிதி
பொருள் :- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.
வுளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்:
வுளு ஒரு வணக்கம் அதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்பிரகாரம் செய்ய வேண்டும்.
யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) வுளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
வுளு செய்வதின் சிறப்புகள்
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரொடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரொடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- முஸ்லிம்
யார் நல்ல முறையில் வுளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக்கீழால் இருந்து கூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- முஸ்லிம்
வுளு செய்யும் முறை
1- நிய்யத்து வைப்பது. (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் வுளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
2-வுளு செய்யு முன் பிஸ்மி சொல்வது.
(வுளு செய்யும் போது ) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு வுளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-இப்னு மாஜா, திர்;மிதி, அபூ தாவூத்
3-மிஸ்வாக் செய்து கொள்வது.
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு வுளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்
4-இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது.
உத்மான் (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் வுளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் வுளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
5-வாய்க்கும், நாசிக்கும் தண்ணீர் செலுத்துவது.
நபி (ஸல்) அவர்களின் வுளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்ஸாரி (ரலி)அவர்களிடத்தில கேட்கப்பட்டது, அப்போது வுளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை அழைத்து (வுளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒரு அள்ளு தண்ணீரால் வாயையும் கொப்பழித்து நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறைசெய்தார்கள். ஆதாரம் :- புகாரி , முஸ்லிம்
நீ வுளு செய்தால் வாயை கொப்பழித்துக் கொள் என்பதாக லகீத் இப்ன் ஸுப்ரா (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அபூ தாவூத் , பைஹகி
உங்களில் ஒருவர் வுளு செய்தால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி பின் சீறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-புகாரி , முஸ்லிம்
நோன்பு இல்லாத நேரத்தில் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் வாய் கொப்பழிப்பதையும் அதிகப்படுத்தியே செய்ய வேண்டும்.
வலது கையினால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி விடுவதே நபி வழியாகும்.
அலி (ரலி) அவர்கள் வுளு செய்வதற்குரிய தண்ணீரை அழைத்து (வுளு செய்தார்கள்) பின்பு நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி விட்டு இதுதான் நபி (ஸல்) அவர்கள் செய்த வுளு என்றார்கள். ஆதாரம் :-அஹ்மத், நஸாயி
அலி(ரலி) அவர்கள் வுளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் நாசியை சீறிவிட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த வுளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் :- தாரமி
6-முகத்தை கழுவுதல். (முகம் கழுவக்கூடிய அளவு, நீளத்தால் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழிவரைக்கும், அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரைக்கும்)
விசுவாசங்கொண்டோரே!நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹுசெய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
7- தாடியை குடைந்து கழுவுவது.
நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை குடைந்து கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்)அவர்கள் வுளு செய்தால் தண்ணீரில் ஒரு அள்ளை எடுத்து நாடிக்கு கீழாலே நுழைத்து தன் தாடியை குடைந்து கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள். ஆதாரம் :- அபூதாவூத், ஹாகிம், பைஹகி
8- இரு கைகளையும் முழங்கை உட்பட கழுகுவது.
முகத்தை கழுகுவதற்கு சொன்ன குர்ஆனுடைய வசனமே இதற்கும் ஆதாரம்.
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
9- விரல்களை குடைந்து கழுகுவது.
நீ வுளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத், திர்மிதி,இப்னு மாஜா
நபி(ஸல்) அவர்கள் வுளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்)சின்னி விரல்களைக் கொண்டு குடைந்து கழுகுவார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னு மாஜா, அபூதாவூத்
10-மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவது(தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹு செய்ய வேண்டும்)
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து வுளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்)என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் எல்லைகடந்து தவறிளைத்த அனியாயக்காறராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- அஹ்மத், முஸ்லிம்
நபியவர்கள் ஒரு தடவை, இரண்டு தடவை கழுவியும் வுளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.
11- வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது.
நீங்கள் ஆடை அணிந்தாலும், வுளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அஹ்மத், அபூதாவூத், திர்மிதி
12- வுளு செய்யும் உறுப்புக்களை தேய்த்துக் கழுவுவது.
உறுப்புக்களை தேய்த்து வுளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து வுளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத், இப்னு ஹிப்பான், அபூ தாவூதுத்தயாலிஸி
13- தலையையும், காதையும் மஸ்ஹு செய்வது(தடவுவது)
தலையை மஸ்ஹும் செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிளைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பா அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பா அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பா இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபிவழியல்ல.
ஆனால் தலைப்பா அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹு செய்தார்கள், (அதாவது) தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடதி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பி;த்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள். ஆதாரம் :-புகாரி,முஸ்லிம்
14- இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்வது, காதை மஸ்ஹு செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உழ் பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)
நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதின் உள் பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில் :- தலையையும், இரு காதையும் ஒரு தடவை மஸ்ஹு செய்தார்கள். ஆதாரம் :-அபூதாவூத்
15- இரண்டு கால்களையும் விரல் நுணியிலிருந்து கரண்டிக்கால் வரை கழுவுவது.
வுளுவின் ஆயத்தே இதற்கும் ஆதாரம்.
கால்களை கழுவும் போது கரண்டிக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் குடைந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டடார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்ப்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் வுளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம் :புகாரி , முஸ்லிம்
16- வுளு செய்யும் உறுப்புக்களை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக கழுகுவது.
17- வுளு செய்யப்படும் உறுப்புக்களை மேலே கூறப்பட்ட முறைப்படியாக (ஒன்றன் பின் ஒன்றாக) செய்வது.
18- முகம், கை, கால்களை கழுவும் போது அவசியமாக கழுவ வேண்டிய பகுதியை விட அதிகமாக்கி கழுகுவது சிறந்தது.
வுளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம், கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள். ஆதாரம் :-புகாரி , முஸ்லிம்
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் முழங்கையை விடவும் அதிகமாக்கி கழுவினார்கள், இரு கால்களையும் கழுவும் போது கரண்டைக்காலை விடவும் அதிகமாக்கி கெண்டைக்கால் வரையும் அதிகமாக்கி கழுவினார்கள், ஏன் இப்படிக் கழுவுகின்றீர்கள் என நான் கேட்டேன்? அதற்கு இது (மறுமையில்)ஆபரணம் அணியப்படும் இடம் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தாக அபூ ஸுர்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:-அஹ்மத்
19- தண்ணீரில் வீண் விரயம் செய்யக்கூடாது.
நபி(ஸல்) அவர்கள் நாலு அல்லது ஐந்து முறை இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர்; அளவைக்கொண்டு குளித்திருக்கின்றார்கள், இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர் அளவைக்கொண்டு வுளு செய்திருக்கின்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :- முஸ்லிம்
20-ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது சில குறிப்பிட்ட துஆக்கள் ஓதுவதற்கு சரியான ஆதாரமில்லை.
21-வுளு செய்த பின் ஓதுமு; துஆ.
உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் வுளு செய்துவிட்டு பின்பு
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்
யார் வுளு செய்து முடிந்ததும்
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِـحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيِكَ
என்று ஓதுகின்றாரோ அதை ஒரு துண்டில் எழுதப்பட்டு அதில் முத்திரையிடப்படும், மறுமை நாள் வரைக்கும் அதை உடைக்கப்படமாட்டாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-தப்ராணி,அமலுல் யஃமி வல்லைலா லிஇப்னிஸ்ஸுன்னி.
பிரார்த்தனை செய்யும் முறை:
பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்முஃமின் -60)
ஆகவே நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி (ஸல்)அவர்கள் கற்றுத்தந்த முறையில் செய்ய வேண்டும், அவைகள் பின்வருமாறு.
1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும் -இறைவன் இவ்வாறு திருமறையில் கூறுகின்றான்.
ஆகவே காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து)அழையுங்கள். (அல் முஃமின்-14)
2. அல்லாஹ் இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அல்லாஹ் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
என் அடியான் என்னை எப்படி நினைக்கின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி
3. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல் ஜின்-18)
நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
4. அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையைஆரம்பித்து அதைக்கொண்டே முடிக்கவும் வேண்டும்.
நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5. உள்ளம் சம்மந்தப்பட்டநிலையில் பிரார்த்தனை செய்யவேண்டும்.
விடை கிடைக்குமென்ற உறுதியோடு பிரார்த்தனை செய்யுங்கள், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள், மறதியான உள்ளத்தால் (உள்ளம் சம்மந்தப்படாமல் நாவால் மாத்திரம்)கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
6. அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை ஞாபகித்து தான் செய்த பாவத்தை ஏற்றுக்கொண்டவராக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவா!நீ எனது இறைவன், நீயே என்னை படைத்தாய், நான் உனது அடிமை, நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன், வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒரு அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
7. பயபக்தியோடும் மனமுடைந்த நிலையிலும், அல்லாஹ்விடத்திலுள்ள சுவனத்தை ஆதரவு வைத்த நிலையிலும், நரகத்திலிருந்து பயந்த நிலையிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அவர்களின் விலாக்கள் படுக்ககைகளை விட்டு (தூக்கத்திலிருந்து)விலகி விடும், தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும் ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள். (அஸ்ஸஜ்தா-16)
8. அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் நாம் தேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், 'நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக்கிருபையாளன்" என்று (பிரார்த்தனை செய்து )அழைத்த போது. (அல் அன்பியா - 83)
ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நியைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து 'என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ , வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்"என்று (பிரார்த்தனை செய்த) போது. (அல் அன்பியா-89)
9. சந்தோசமான நேரத்திலும் , கஷ்டமான நேரத்திலும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.
கஷ்டம், இன்னும் துன்பமுள்ள நேரத்தில் தன்னுடைய பிரார்;த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் சநதோசமான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
சந்தோசமான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள் கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னை தெரிந்து கொள்வான் என நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.
10. பிரார்த்தனை செய்யும் போது கிப்லாவை முன்னோக்கி பிரார்த்திப்பது மேலானது.
மழை தேடி பிரார்த்திப்பதற்காக தொழும் இடத்திற்கு நபி (ஸல்)அவர்கள் வெளியேறிச்சென்று கிப்லாவை முன்னோக்கி மழை தேடி பிரார்த்தனை செய்தார்கள், பின்பு தன் போர்வையை புரட்டினார்கள். ஆதாரம் : புகாரி
11. சுத்தமாக இருப்பது நல்லது.
வுளு செய்வதற்கு நபி (ஸல்)அவர்கள் தண்ணீரை கேட்டார்கள் பின்பு தன் இரு கரங்களையும் உயர்த்தினார்கள் யா அல்லாஹ்! (இறைவா!) உபைத் அபூ ஆமிரின் (பிழைகளை) மன்னித்தருள்வாயாக, நான் நபியவர்களின் இரு கக்கத்தின் வெண்மையையும் பார்த்தேன், இறைவா! உன் மனித படைப்புகளில் அதிகமானவர்களுக்கு மேல் அவரை (உயர்த்தி) வைப்பாயாக என்றும் பிரார்த்தனை செய்தார்கள். ஆதாரம் : புகாரி
12. இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களைக்கொண்டு அல்லாஹ்விடத்தில் உதவி(வஸீலா) தேடுவது, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா மூன்று வகைப்படும்.
1. அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது.
2. நல் அமல்களைக் காட்டி பிரார்த்திப்பது.
3. உயிருடன் இருக்கும் நல்லடியார்களிடம் பிரார்த்திக்கும் படி வேண்டுவது.
13. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் உதவி தேடுதல்.
உன்னையே வணங்குகிறோம் இன்னும் உன்னிடத்திலேயே உதவியும் தேடுகிறோம். (அல் பாத்திஹா - 4)
இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
14. அவசரப்படாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும், (அதாவது நான் பிரார்த்தனை செய்தேன் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வது.)
அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
15. இரு கைகளையும் ஏந்திப்பிரார்த்திப்பது.
தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்தத்தனை செய்தார்கள் நான் அவர்களின் கக்கத்தின் வெண்மையை பார்த்தேன் என அபூ மூஸா அல் அஸ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி
நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும் சங்கையுள்ளவனுமாவான், ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என ஸல்மானுல் பாரிஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திர்மிதி
16. நபியவர்கள் மூலம் தெரிந்து கொண்ட பிரார்த்தனைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது நல்லது.
17. பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பொருத்தமான சிறப்புக்குரிய நேரங்களையும், காலங்களையும் பயன் படுத்திக்கொள்வது.
1. ரமளான் மாதம்.
2. லைலத்துல் கத்ர் இரவு.
3. இரவின் கடைசிப்பகுதி.
4. பர்லான தொழுகைகளின் இறுதிப்பகுதி.
5. பாங்கு இகாமத்துக்கு மத்தியில்.
6. அரஃபா தினத்தில்.
7. ஜும்ஆவடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.
8. கடமையான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது.
9. யுத்த நேரத்தில்.
18. முதலில் தனக்காக பிரார்த்தனை செய்து பின்பு மற்றவர்களுக்காக பிரர்த்திப்பது.
19. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக உள்ள திக்ருகளை தேர்ந்தெடுத்து பிரார்த்திப்பது .
உ-ம் அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது, நாம் செய்த நல்ல அமல்களை முன் வைத்து பிரார்த்திப்பது, இன்னும்
لاَاِلَهَ إِلاأَنْتَ سُبْحَانَكَ إِني كُنْتُ مِنَ الظَّالمِيْنَ .
பொருள் : தூய்மையானவனே! நிச்சயமாக எனக்கு நானே அனியாயம் செய்து விட்டேன், வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிரவேறு யாரும் இல்லை.
என்ற திருக்கலிமாவை ஓதி பிரார்த்தனை செய்தல் , யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றில் இருக்கும் போது இந்த வார்த்தைகளைக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள் அல்லாஹ் அப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான், இன்னும் இதுபோன்ற வார்த்தைகள்.
20. சிறப்புக்குரிய நேரங்களில் பிரார்த்தனை செய்வது.
உ-ம் : சுஜூது செய்யும் போது
உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது செய்யும் நேரம்,ஆகவே சுஜூது செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
சுஜூதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் (அதில் கேட்கப்படும் பிரர்த்தனை ஏற்றுக்கொள்ளபடுவதற்கு) தகுதியுள்ளது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
தொழுகையில் சூரத்துல்ஃபாத்திஹா ஓதிமுடிந்ததும் ஆமீன்சொல்லும் போது.
இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள் (மலக்குகளும் ஆமீன் சொல்கிறார்கள்) யாருடைய ஆமீன் மலக்கு மார்களின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ஆதாரம் : புகாரி
சேவல் கூவும் போது.
சேவல் கூவுவதை கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக்கேளுங்கள், அது மலக்கை காணும்போதுதான் கூவுகின்றது என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
பிரயாணி தன் பிரயாணத்தின் போதும், நோன்பாளி நோன்பு திறக்கும் போதும். ஆதாரம் :- பைஹகி
மற்ற சகோதரருக்காக பிரார்த்திக்கும் போது.
ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக, இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக எனவும் பிரார்த்திப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
21. பிரார்த்தனையில் எல்லைகடக்காமல் இருக்க வேண்டும்.
(ஆகவே முஃமின்களே!)உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7-55)
எல்லை கடந்து பிரார்த்தனை செய்வதற்கு சில உதாரணங்கள்
அல்லாஹ் அல்லாத பெயர்களைக்கொண்டு அழைத்துப் பிரார்த்திப்பது.
எல்லை கடந்து சத்தத்தை உயர்த்துவது.
மெட்டெடுத்து பிரார்த்திப்பது, இன்னும் இது போன்றவைகள்.
22. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களை உகயோகிப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது.
என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக்கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடைய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
இரத்தபந்தங்களின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது.
யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்)அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் அப்படியென்றால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோம் என்றார்! அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள். ஆதாரம் : திர்மிதி
பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4-48)
அன்புச்சகோதரர்களே!பிரார்த்தனை என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்தப்படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்னும் குர்ஆன் வசனங்களின் நம்பரை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன் அதை குர்ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள், அல் பகரா-186, ஆலு இம்ரான்-135, அல் அஃராஃப்-55, அந்நம்லு-62, அஸ்ஸஜ்தா-16, அல் ஜுமர்-53,அல் முஃமின்-60. அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியை பின்பற்றி நடப்பதற்கு வாய்ப்பளிப்பானாக.
உண்ணும் முறை:
இஸ்லாத்தில் உணவு உண்பதற்கும் பல வழிமுறைகள் உள்ளன, அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய ஒன்றாக பதியப்படும், அவைகள் பின்வருமாறு.
1. இறைவனை வணங்கி வழிபடுவதற்கு உடல் வலிமை பெறுவதற்காக இந்த உணவை உண்ணுகிறேன் என்று எண்ணி உண்பது.
2. ஹலாலான உணவையே உண்பது, குடிப்பது.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)
3. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்
4. பணிவான முறையில் அமர்ந்து உண்பது.
ஒருக்கணித்து சாய்ந்த நிலையில் நான் உண்ண மாட்டேன். நான் (அல்லாஹ்வின்) அடியான் ஒரு அடியான் உண்பதைப்போல் உண்பேன். ஒரு அடியான் உட்காருவதைப்போல் உட்காருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
5. உணவை பார்க்கும் நேரத்தில் இந்த துஆவை ஓத வேண்டும்.
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْـرًا مِنْهُ
6. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக( பிஸ்மில்லாஹ் என்று)கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أََوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:அபூதாவூத்
பிஸ்மில்லாஹ் சொல்வதின் பிரயோசனங்கள் பின் வருமாறு:
1. சாப்பிடும் போது ஷைத்தான் நம்முடன் சேர மாட்டான்.
2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றிய நன்மை கிடைக்கும்.
3. அதில் அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுகின்றது.
4. அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுவதால் அதில் அல்லாஹ் அருள் புரிகின்றான்
7. வலது கையால் உண்ணவேண்டும்.
நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா(ரலி)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
உங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி , அபூதாவூத்
இடது கையால் சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகள்:
1. ஷைத்தான் நம்முடன் சேர்ந்து கொள்கிறான்.
2. ஷைத்தானின் செயல்களுக்கு ஒப்பாகிறது,
3. அல்லாஹ்வின் அருள் இறங்காது.
4. பெருமையின் அடையாளம்.
5. நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமான நடைமுறை.
8. சாப்பிடும் போது நம்பக்கத்தில் உள்ளதையே சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதுதான் நபிவழியும் ஒழுக்கமான நடைமுறையுமாகும்,
நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா(ரலி)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
9. பாத்திரத்தின் ஓரத்திலிருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். பாத்திரத்தின் நடுவிலிருந்து ஆரம்பிக்கக்கூடாது.
(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின் )ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின் ) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி
10. சாப்பிடும் போது மற்றவர்களை நோட்டமிடக்கூடாது அது அவர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தும் .
11. மற்றவர்களுக்கு அருவருப்பு தரும் செயலை செய்யக்கூடாது. உதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாத்திரத்திற்குள் கையை உதறுவது, வாயை சுத்தம் செய்வது இன்னும் இது போன்ற செயல்கள் .
12. விரிப்புக்கு மேல் உணவை வைத்து சாப்பிட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மேஜைக்கு மேல் வைத்து உணவை உண்ணவுமில்லை, சிறு பாத்திரத்தில் உண்ணவுமில்லை, இன்னும் நபியவர்களுக்கு மெல்லிய ரொட்டி சுடப்படவுமில்லை என்று (கதாதா -ரலி-அவர்கள் கூறிய போது)எப்படி நபியவர்கள் சாப்பிட்டார்கள்? என நான் கதாதா (ரலி) அவர்களிடம் கேட்டேன் இந்த விருப்புக்கள் மீதுதான் என கதாதா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : ஷமாயிலுத்திர்மிதி
13. உணவில் வீண்விரயம் பண்ணக்கூடாது.
14. உணவில் பெருமை அடிக்கக் கூடாது.
பெருமை இல்லாமலும், வீண்விரயம் செய்யாமலும், தான தருமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள், இன்னும் உண்ணுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்,நஸாயி
15. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும். அதுவே சிறந்தது.
உங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம் , அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்)அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
16. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.
ஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி
17. தனக்கு கிடைத்த உணவை பொருந்திக்கொள்ள வேண்டும,; உணவை குறைகூறக்கூடாது, விருப்பமாக இருந்தால் உண்பது, விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடுவது.
எந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
உணவை குறைகூறுவது அல்லாஹ்வின் அருளை அவமதிப்பதாக கருதப்படும், அது பெருமையின் அடையாளமாகும்.
18. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.
உங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
19. உணவில் ஊதக்கூடாது (உணவு, பானம்)
(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள.; ஆதாரம் : திர்மிதி
20. முன்று முறடாக பானங்களை குடிப்பது நபிவழியாகும் .
நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
21. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ கூடாது .
தங்கம் , வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள் , மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி
22. வயிறு புடைக்க எல்லைமீறி உண்ணக்கூடாது.
ஆதமுடைய மகன் நிரப்பும் பாத்திரத்தில் மிகவும் கெட்டது அவன் தன் வயிற்றை நிரப்புவது. ஆதமுடைய மகன் தன் முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்வதற்கு சில பிடி உணவே போதுமானது. அதை அவனால் சுமந்து கொள்ள முடியாவிட்டால் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்காகவும், மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்காவும், மூன்றில் ஒரு பங்கை தன் உள்ளத்தின் அமைதிக்காகவும் விட்டுவிடட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
23. சமைக்காமல் பச்சையாக வெங்காயம் இன்னும் வெள்ளைப்பூடை சாப்பிட்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் பள்ளிக்குள் செல்லக்கூடாது, சமைத்து சாப்பிட்டால் பறவாயில்லை.
யார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்
24. ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது அல்லாஹ்வின் அருள் அதில் இறங்குகின்றது.
இரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா? ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச்சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா
25. விருந்துக்கு அழைக்கப்படாதவரை விருந்து உண்பதற்கு கூட்டிக்கொன்டு சென்றால் விருந்து கொடுப்பவரிடம் அனுமதி பெற்ற பின்புதான் விருந்தில் உட்கார வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அளைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்;கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து)உண்பதற்கு உத்தரவழியுங்கள், நீங்கள் (உத்தரவழிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்
26. மற்றவர்களோடு சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி அதிகம் அதிகம் அள்ளி உண்ணக்கூடாது.
உரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னுமாஜா
27. உணவில் அல்லது குடிபானத்தில் ஈ விழுந்தால் அதை உள்ளே நன்றாக அமுக்கி விட்டு பின்பு அதை வெளியெறிந்து விட்டு உண்ண வேண்டும்.
ஊங்கள் ஒருவரின் (உணவுப்)பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு அறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்
28. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும், சுன்னத்தான நோன்பு நோற்றிருந்தாலும் விட்டுவிட வேண்டும்.
உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்ர்ல் அதற்கு அவர் விடையழிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்
29. ஆரம்பத்தில் பிஸ்மி சொல்ல மறந்து விட்டால்
بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று ஓதவேண்டும்.
உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக் கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத்
30. சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும்.
உங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார் ஆதாரம் : முஸ்லிம்
31. விருந்தளித்தவர் அல்லது நமக்கு ஏதாவது உணவைக்கொடுத்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.
اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِـيْ وَاسْقِ مَنْ سَقَانِـيْ
ஆதாரம் : அபூதாவூத்
32. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் பிரார்த்தனை
اَلْـحَمْدُ للهِ كَثِيْـرًا طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا.
اَلْـحَمْدِ للهِ الَّذِيْ أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.
யார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி
ஆடை அணியும் முறை:
இஸ்லாத்தில் ஆடை அணிவதற்கும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன, அவைகளை நாமும் பேணி நடப்பதினால் நாம் அணியும் ஆடையும் ஒரு கூலிபெற்றுத்தரும் நன்மையாக கருதப்படும்,அவைகள் பின்வருமாறு.
1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.
யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் :
2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.
பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும,; ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : அபூதாவூத்
பெண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய ஆண்களையும், ஆண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : புகாரி
3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது
யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : அபூதாவூத்
ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியக்கூடாது.
கரண்டைக்கு கீழே இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
இன்னும் ஒரு அறிவிப்பில் :-நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரோடு பேசவும்மாட்டான், இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை (பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு என்று மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும் கைசேதமுமுள்ளவர்கள் யார் என வினவினார்கள்? கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன் பொருளை விற்பவனும் என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்
கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணிபவர்கள் காட்டும் பொய்ச் சான்றுகள்.
1. அதிகமானவர்கள் கரண்டைக்காலுக்கு கீழ்தானே ஆடை அணிகிறார்கள் ,
2. தையல் காரர் நீளமாக தைத்துவிட்டார் ,
3. நான் பெருமைக்காக அணியவில்லை.
4. கரண்டைக்கு மேல் அணிந்தால் மக்கள் என்னைப் பழிப்பார்கள்.
5. இதைப்பற்றிய சட்டமோ தண்டனையோ எனக்கு தெரியாது.
6. இது பெரும்பாவமில்லை.
நொண்டிக் குதிரைக்கு சறுக்கிய சாட்டு என்பதைப் போல் அல்லாஹ்வின் நபியின் பொன்மொழிக்கு இப்படி விளக்கம் கொடுப்பது ஒரு முஃமினின் பண்பாக இருக்கக்கூடாது. யார் அல்லாஹ்வையும், அவனின்தூதரையும் முற்றிலும் அஞ்சுகிறாரோ அவருக்கு மேலே கூறப்பட்ட நபி மொழியே போதுமானது.
5. உருவமுள்ள ஆடையை அணியக்கூடாது. இதில் ஆண்களும் பெண்களும் சமமே.
ஆயிஷா (ரலி) அவர்கள் உருவமுள்ள தலையணையை வாங்கியிருந்தார்கள், நபியவர்கள் வீட்டுக்குள் வந்தபோது அதைக்கண்டு வீட்டுக்குள் நுழையாமல் கதவடியிலேயே நின்று விட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபியவர்களின் முகத்திலே வெறுப்பைத் தெரிந்து கொண்டபின் நான் அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் பாவமன்னிப்புத்தேடுகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டேன். இந்த உருவத்தை தீட்டியவர்கள் நாளை மறுமையிலே வேதனை செய்யப்படுவார்கள், இன்னும் நீங்கள் படைத்ததற்கு உயிரூட்டுங்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் . ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
6. ஆடை அணியும் விஷயத்தில் வீண் விரயம் செய்யக்கூடாது இதில் ஆண்களும் பெண்களும் சமமே .
பெருமை இல்லாமலும், வீண் விரயம் செய்யாமலும் உண்ணுங்கள், பருகுங்கள், ஆடை அணியுங்கள், தர்மமும் செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :அபூதாவூத்
7. மேனி தெரியுமளவுக்கு மெல்லிய, அல்லது சிறிய உடையை அணியக்கூடாது.
8. வெள்ளை ஆடை அணிவது மிகவும் நல்லது.
வெள்ளை ஆடையை அணியுங்கள் அது மிகவும் தூய்மையும் நல்லதுமாயிருக்கும். உங்களின் மைய்யித்தை அதிலேயே கஃபனுமிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : அபூதாவூத், நஸாயி , திர்மிதி
9. பெண்கள் தங்களின் மேலாடையை எப்படி வைத்துக்கொள்வது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஒரு சாண் இறக்கி உடுக்கவேண்டுமென்று நபியவர்கள் விடையளித்தார்கள். அப்போது கால்பாதம் தெரிகின்றதே! என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்க ஒரு முழமளவிற்கு நீட்டி உடுத்துக்கொள்ளட்டும். அதைவிடவும் அதிகப்படுத்தக்கூடாது என்றார்கள் நபியவர்கள். ஆதாரம் : திர்மிதி
10. இறுக்கமான, மற்றவர்களின் உள்ளத்தில் தவறான சிந்தனைகளை உருவாக்கும், இன்னும் உறுப்புக்களின் அமைப்பை வெளிப்படுத்தக்கூடியது போன்ற ஆடைகளை அணியக்கூடாது விஷேஷமாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
11. ஆண்கள் தங்கம் இன்னும் பட்டாடையை அணியக்கூடாது.
தங்கத்தையும் , பட்டையும் அணிவது என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கின்றது, இன்னும் அந்த உம்மத்தின் பெண்களுக்கு அது ஹலாலா (ஆகுமா ) க்கப்பட்டிருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் கையில் தங்க மோதிரத்தைப் பார்த்து அதைக்கழட்டி வீசிவிட்டு உங்களில் ஒருவர் நெருப்புத்தணலை எடுத்து தன் கையில் வைத்துக் கொள்கின்றார் என்று கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் சென்றதற்கு பிறகு அந்த மனித(நபித்தோழ)ரிடம் அந்த மோதிரத்தை எடுத்து பிரயோசனமடைந்து கொள் என்று (அங்கிருந்த நபித்தோழர்கள்) கூறினார்கள் , அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் வீசிய மோதிரத்தை நான் எடுக்க மாட்டேன் என்று கூறி (அதை எடுக்க மறுத்து விட்டார்) ஆதாரம் : முஸ்லிம்
12. செருப்பு, இன்னும் ஆடைகளை அணியும் போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணியும்போதும், தலைவாரும் போதும் சுத்தம் செய்யும்போதும் இன்னும் அவர்களின் எல்லாக்கருமங்களிலும் வலது பக்கத்தை முற்படுத்துவதை விரும்புவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி
13. ஒரு செருப்பை மாத்திரம் அணிந்து கொண்டு நடக்கக்கூடாது. அப்படி நடப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்
ஒரு செருப்பை அணிந்துகொண்டு உங்களில் ஒருவர் நடக்கவேண்டாம் , இரண்டையும் அணிந்து கொண்டு நடக்கட்டும், அல்லது இரண்டையும் கழட்டிவிட்டு நடக்கட்டும் என்பதாக நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம் : புகாரி முஸ்லிம்
14. நஜீஸான (அசுத்தமான) தோலினால் செய்யப்பட்ட செருப்பை அணியக்கூடாது.
15. புதிய ஆடையை அணிந்த ஒருவரை பார்க்கும்போது இந்த துஆவை ஓதவேண்டும்
اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَـمِيْدًا وَمُتْ شَهِيْدًا
16. புது ஆடையை அணியும் போது ஓதும் துஆ
اَللَّهُمَّ لَكَ الْـحَـْمدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْـرِهِ وَخَيْـرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَّرِّ مَا صُنِعَ لَهُ.
17. ஆடை அணியும்போது بـسمِ الله என்று சொல்லி அணிந்து , மேலும் பின்வரும் துஆவையும் ஓத வேண்டும் .
اَلْـحَمْدُ للهِ الَّذِيْ كَسَانِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ .
தூங்கும் முறை:
தூங்கும் நேரத்தையும் நன்மை(கூலி)தரக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொழ்வதற்கு மேலே கூறப்படும் முறைப்படி நம் தூக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் தூக்கத்திலேயே நம் கால் வாசிப்பகுதியைக் கழிக்கின்றோம்
1. தூங்கி எழுந்தால் உடலுக்கு ஏற்பட்ட களைப்பு நீங்கி விடும். மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் தூங்க வேண்டும். நான் தூங்கும் போதும் அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்தவனாக தூங்குகின்றேன் என்பதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.
2. முன் இரவிலே தூங்கிவிட வேண்டும், (அதாவது இஷாத்தொழுகைக்குப்பின் தூங்கி விடுவது,) இரவில் கண்விழித்து நீண்ட நேரம் விழித்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு, சுப்ஹு தொழுகைக்கும் ஆபத்து. இஷாத்தொழுகைகுப்பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : புகாரி
3. பாதுகாப்பான இடத்தில் தூங்கவேண்டும்.
வளைத்து பாதுகாப்பில்லாத (மொட்டை) மாடியில் தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : திர்மிதி
4. ஒவ்வோரு நாளும் தூங்கும்போது அன்று செய்த செயல்களைப்பற்றி சுய பரிசோதனை செய்து (தனக்கு தானே கேள்வி கணக்கு கேட்டுக் ) கொண்டு அதற்குரிய பரிகாரத்தையும் செய்யவேண்டும் .
நீங்கள் கேள்வி கணக்கு கேட்கப்படும்முன் உங்களை நீங்களே கேள்வி கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள் என்று உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.
5. ஏதாவது வஸிய்யத்து செய்ய வேண்டி இருந்தால் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் தூங்கக்கூடாது. தூக்கத்தில் உயிர் பிரிவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
ஏதாவது ஒரு வஸிய்யத்து செய்ய வேண்டி உள்ளவர் அவருடைய தலைமாட்டிற்கு கீழ் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் இரண்டு இரவை கழிக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6. படுக்கை விரிப்பு விசயத்தில் அளவு கடந்து சிரமத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது , சாதாரணமான விருப்பில்தான் நபியவர்களும் தூங்கி இருக்கின்றார்கள்.
7. பத்து வயதடைந்த பிள்ளைகளை தனித்தனியாக பிரித்து தூங்க வைக்க வேண்டும்.
(பிள்ளைகள்) பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களின் படுக்கை இடத்தை பிரித்து விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம் : அஹ்மத்
8. தூங்கும் விரிப்பை சுத்தம் செய்து(உதறிக்) கொள்ளவேண்டும், காரணம் ஏதாவது நோவினை தரும் ஒன்று படுக்கை விரிப்புக்குக்கீழ் இருக்கலாம்.
உங்களில் ஒருவர் தன்படுக்கைக்கு சென்றால் தன் படுக்கை விரிப்பை உதறிக்கொள்ளட்டும். அதற்கு அடியில் என்ன இருக்கிறதென்று அவருக்கு தெரியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
9. தூங்கும் போது விளக்கை அணைத்து விடவேண்டும், கதவை மூடிவிடவேண்டும், தோல்பையை கட்டிவிட வேண்டும், பாத்திரங்களை மூடிவிடவேண்டும்.
நிச்சயமாக ஷைத்தான் மூடப்பட்ட கதவை திறக்கமாட்டான், கட்டப்பட்ட தோல்பையை அவிழ்க்கமாட்டான், மூடப்பட்ட பாத்திரத்தை திறக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
நெருப்பு உங்களின் விரோதி நீங்கள் தூங்கினால் நெருப்பை அணைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி - முஸ்லிம்
10. தூங்கும்போது வுளு செய்து கொள்வது சிறப்பாகும்.
நீங்கள் தூங்குவதற்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளு செய்துகொள்ளுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
11. தூங்குவதற்கு முன் வித்ர் தொழுகை தொழுது கொள்வது மிகவும் நல்லது. யாருக்கு இராத்(தஹஜ்ஜத்) தொழுகை தொழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள் இராத் தொழுகையை முடித்தபின் வித்ர் தொழுகையை தொழுவதே சரியானது.
எனக்கு எனது தோழர் (ஸல்) அவர்கள் மூன்று விசயத்தை வஸிய்யத்து செய்தார்கள். ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிக்கும்படியும், இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழும்படியும், நான் உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகை தொழும்படியும் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
12. இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு தூங்கவேண்டும்
இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு யார் தன் தூங்குமிடத்துக்கு வந்து தூங்கி நித்திரை (அதிகரித்ததின்) காரணமாக சுப்ஹு நேரம் வரும் வரை தூங்கிவிட்டாலும் அவரின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹுவிடத்தில் இரவுத்தொழுகை தொழுத நன்மை எழுதப்படும், அவரின் தூக்கம் ஒரு தருமமாக ஆகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவதெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
13. ஒரு போர்வைக்குள் இரு ஆண்களோ, அல்லது இரு பெண்களோ ஒன்று சேர்ந்து தூங்கக்கூடாது.
ஒரே போர்வைக்குள் இரண்டு ஆண்களோ , அல்லது இரண்டு பெண்களோ நிர்வாணமாக தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்
14. தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய திக்ருகள்
சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதவேண்டும். ஆயத்துல் குர்ஸி, இன்னும் சூரத்துல் பகறாவின் கடைசி இரு ஆயத்துக்கள் (285, 286)
لاَ اِلَهَ إِلاَ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ وَلَهُ الْـحَمْدُ يُـحْيِ وَيُـمِيْتُ وَهُوَ حَيٌّ لاَ يَـمُوْتُ بِيَدِهِ الْـخَيْــرِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ .
என்று பத்து தடவை ஓத வேன்டும் ,
கையில் ஊதிய பின் சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் இம்மூன்றையும் ஓதி தலையில் இருந்து ஆரம்பித்து முகம் மற்றும் உடம்பில் முடியுமான எல்லா இடங்களிலும் மூன்று முறை தடவுவது.
اَللَّهُمَ أَسْلَمْتُ نَفْسِيْ إِلَيْكَ இ وَوَجَّهْتُ وَجْهِيْ إِلَيْكَ இ وَفَوَّضْتُ أَمْرِيْ إلَيْكَஇ وَأَلجْأْتُ ظَهْرِيْ إِلَيْكَஇ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَஇ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ இ آمَنْتُ بِكَتَابِكَ الَّذِيْ أَنْزَلْتَ ، وَبِنَبِيِّكَ الَذِيْ أَرْسَلْتَ (رَوَاهُ الْبُخَارِيُ) .
என்ற பிரார்த்தனையை கடைசியாக ஓதவேண்டும்,அதுவே கடைசி வார்த்தையாக இருக்கவேண்டும், இந்த துஆவை ஓதி அதே இரவில் மரணித்தால் இஸ்லாத்திலேயே மரணித்ததாக பதியப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
15. தூங்குவதற்கு முன் ஓதும் துஆ
اللَّهُمَ بِاسْـمِكَ أَمُوْتُ وَأَحْيَا
16. வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு வலது பக்கத்தில் சாய்ந்து தூங்க வேண்டும்.
நீ தூங்குவதற்காக உன் தூங்குமிடத்துக்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளுசெய்து கொண்டு உன் வலது பக்கத்தில் தூங்கிக்கொள் என்பதாக பராஉ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி,முஸ்லிம்
17. முகம் குப்பற படுக்கக் கூடாது.
முகம் குப்புற படுத்த ஒரு மனிதனை பார்த்த நபியவர்கள் இது அல்லாஹ் கோபிக்கக் கூடிய படுக்கை என்பதாக கூறினார்கள். ஆதாரம் : அபூ தாவூத்
18. தூக்கத்தில் கெட்ட கனவுகளை கண்டால் .
தான் விரும்பாத வெறுக்கத்தக்க செய்திகளை யாராவது கனவில் கண்டால் இடது பக்கம் துப்புவது போன்று சைக்கினை செய்துவிட்டு ஷெய்த்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்.(أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم என்று சொல்லவேண்டும்) இதனால் அவனுக்கு எந்த ஒரு இடஞ்சலும் ஏற்படாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் : அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வந்திருக்கின்றது . ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் : படுத்த பக்கத்தை விட்டுவிட்டு மறு பகக்கம் திரும்பி படுக்கும்படி நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
19. தூக்கத்தில் நல்ல கனவுகளை கண்டால் .
உங்களில் ஒருவர் தான் விரும்பக்கூடிய கனவை கண்டால் , நிச்சயமாக அது அல்லாஹுவிடத்தில் நின்று உள்ளதென்று (எண்ணிக்கொள்ளட்டும்) அதற்காக அல்லாஹுவை போற்றி புகழ்ந்து , அதை மற்றவர்களுக்கும் சொல்லட்டும்.
இன்னும் ஒரு அறிவிப்பில் - தான் விரும்பியவர்களுக்கு (மாத்திரம்)அறிவிக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்
21. தூங்கி விழித்துதம்.
اَلْـحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَ إِلَيْهِ النُّشُوْرُ
தூக்கத்தில் இருந்து விழித்தபின் மூன்று முறை கையை கழுவிய பின் தான் கையை பாத்திரத்தினுள் நுழைக்க வேண்டும். ஊங்களில் ஒருவர் தன் தூக்கத்திலிருந்து விழித்தால் மூன்று முறை கையை கழுவும் வரைக்கும் கையை பாத்திரத்தில் நுழைவிக்கக்கூடாது அவரின் கை இரவில் எங்கிருந்தது என்பது அவருக்கு தெரியாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி