இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜௌஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) ஒரு சுருக்க அறிமுகம்
அபூ அப்தில்லாஹ் என்ற புனைப்பெயரையும் ஷம்ஸுத்தீன் முஹம்மத் இப்னு அபீ பக்கர் என்ற இயற்பெயரையும் கொண்ட இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜௌஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹிஜ்ரி 691ம் ஆண்டு சிரியாவில் மார்க்க அறிவுக்குப் பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தார்கள். அவர்களின் தந்தை அபீபக்ர் ஜவ்ஸிய்யா மத்ரஸாவின் (கய்யிம்) நிர்வாகியாக இருந்தார்கள். எனவே இவர்களுக்கு இப்னுல் கய்யிம் (நிர்வாகியின் மகன்) என்ற புனை பெயர் ஏற்பட்டது.
ஜௌஸிய்யா பாடசாலை நிர்வாகியாகவும் மார்க்க அறிஞர் பெருமகனாகவும் இருந்த தனது தந்தையின் நிழலில் வளர்ந்த இமாம் அவர்கள் தனது தந்தையிடம் வாரிசுரிமைச் சட்டங்கள் என்று பாடப் பரப்பைக் கற்றுத் தேர்ந்தார்கள்.
சிறுவயது முதல் ஒப்பில்லா அறிவுத் தேடலில் அளவில்லா ஆர்வம் கொண்டிருந்த இமாம் அவர்கள் இமாம் ஷிஹாம் அல் ஆபிர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடமும் இமாம் மிஸ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடமும் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்கள்.
இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எகிப்திலிருந்து ஹிஜ்ரி 712ம் ஆண்டு சிரியாவுக்கு திரும்பியது முதல் ஹிஜ்ரி 728ம் ஆண்டில் மரணிக்கும் வரை இமாம் இப்னு தைம்மியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் தொடர்ந்தும் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கல்வி கற்றார்கள்.
தப்ஸீர், ஹதீஸ், உஸூல்கள் என சகல கலைகளையும் இரவு பகல் பாராது தேடிக் கற்றுக் கொண்ட இமாம் அவர்கள் அதிகமதிகம் இறை வணக்கங்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபாடு காட்டினார்கள்.
இமாம் இப்னு கதீர் (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் இப்னு நாஸிருத்தீன் (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் சுயூதி (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) போன்ற பல்வேறு உலமாப் பெருமக்களால் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் அறிவுத்திறனுக்கும் ஆய்வாற்றலுக்கும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் இப்னு கதீர் (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்),
இமாம் இப்னு அப்தில் ஹாதி (ரஹிமஹுல்லாஹ்),
பிரபல அகராதி ஆரிசியர் பைரூஸாபாதி (ரஹிமஹுல்லாஹ்) போன்ற அறிஞர் பெருமக்கள் இமாம் அவர்களிடம் கல்வி கற்றவர்கள் என்பதே இமாம் அவர்களது அற்புத அறிவாற்றலுக்கும் அபார கல்விப்பணிக்கும் சான்றாக அமைந்துள்ளது.
இமாம் அவர்கள் சகல கலைகளிலும் பல்வேறுபட்ட அறிவுச் செறிவான சிறிய, பெரிய பயன்மிக்க நூல்களை எழுதியுள்ளார்கள்.
அவைகளுள் குறிப்பிடத்தக்கதாக :
1. இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமியா
2. அஹ்காமு அஹ்லித் திம்மா
3. துஹ்பதுல் மௌதூத்
4. இஃலாமுல் முவக்கிஈன்
5. ஸாதுல் மாஅத்
6. அல் புரூஸிய்யா
7. அஸ் ஸவாஇகுல் முர்ஸலா
8. அல் மனாருல் முனீப்
9. இகாததுல் லஹ்பான்
10. ஹிதாயதுல் ஹயாறா
போன்ற நூல்கள் அமைந்துள்ளன.
சத்தியப் பிரச்சாரத்திற்காக இமாம் இப்னு தைம்மியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சேர்ந்தும் தனியாகவும் சிறைப்படுத்தப்பட்டிருந்தும் தான் கொண்ட கொள்கையில் சமரசங்கள் எதுவும் செய்து கொள்ளாமல் உறுதியாக இருந்த இமாம் அவர்கள் ஈற்றில் ஹிஜ்ரி 751ம் ஆண்டு றஜப் மாதம் இவ்வுலகை விட்டும் மரணித்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இமாம் அவர்களது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக.. அன்னாரது தவறுகளை மன்னித்து அருள் புரிவானாக...
அன்னாரது நூற்களில் இருந்து பயன்பெறும் நன்மக்கள் கூட்டத்தில் எம்மையும் ஆக்கியருள்வானாக.!!