ஹதீஸ், ஸுன்னா பதவிளக்கம்:
ஹதீஸ் என்ற அரபுப் பதம், செய்தி, புதியவை, உரையாடல் எனும் மொழிக்கருத்துக்களில் பிரயோகிக்கப்படுகிறது.
இஸ்லாத்தில் இப்பதம் “நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், வர்ணனைகள், பண்புநலன்கள்” என்பவற்றைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது.
ஸுன்னா என்ற அரபுப் பதம் வாழ்க்கை வழி, மார்க்கம், நியதி, முறைமை, ஒழுங்கு, வழக்கம், நடைமுறை எனும் மொழிக்கருத்துக்களில் பிரயோகிக்கப்படுகின்றது. இஸ்லாத்தில் இப்பதம்
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற வாழ்க்கை முறைமையைக் குறிக்கின்றது.
ஹதீஸ், ஸுன்னா ஆகிய இரு பதங்களையும் பொதுவாக முஹத்திஸீன்கள் ஒரே
கருத்திலேயே பிரயோகிக்கின்றனர். வேறுபடுத்திக்காட்டுவோர், ஸுன்னா நபி (ஸல்)
அவர்களது வாழ்க்கை முறைமை எனவும் ஹதீஸ் அவற்றின் பதிவு எனவும் குறிப்பிடுகின்றார்கள்.
ஹதீஸ் என்ற பதம் “கபர்” “அஸமர்' எனும் சொற்களிலும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
எனினும் குராஸான் பிரதேசத்து அறிஞர்கள் “கபர்” என்ற சொல்லை ஹதீஸ் என்ற கருத்திலும் “அஸர்' என்ற சொல்லை நபித்தோழர்களின் வாக்குகளும்
முடிவுகளும் என்ற கருத்திலும் குறித்துக்காட்டியுள்ளார்கள்.
ஸுன்னா என்ற சொல்லை துறைசார் அறிஞர்கள் ஒவ்வொரு கண்நோக்கில் முன்வைக்கின்றனர். நபியவர்களது வாழ்க்கை வரலாறு என்ற கருத்தில் ஸுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது நபியவர்களது பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து நிகழ்வுகளையும் குறிக்கின்றது. நுபுவ்வத்திற்கு முன்னைய நிகழ்வுகள் பின்னைய நிகழ்வுகள், நபியவர்களது பிறப்புக் காலப்பகுதியில் அறபு மக்களது வாழ்க்கைச் சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
ஸுன்னா என்ற பதத்தை இந்தக் கருத்தில் ஹதீஸ் துறை அறிஞர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். இங்கு நபியவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை ஆதாரபூர்வமான வடிவில் கோர்வை செய்வதே இவர்களது நோக்கமாகக்
காணப்பட்டிருக்கிறது.
ஷரீஆ அல்லது தீன் என்ற கருத்தில் ஸுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது மிகப் பெரும்பாலும் பித்அத் என்ற சொல்லுக்கான எதிர்ப்பதமாகவே கையாளப்படுகிறது. அதாவது ஒரு விடயம் ஷரீஅத்தில் உள்ளது என்று சொல்ல
ஸுன்னா என்றும் ஷரீஅத்தில் இல்லாதது என்று சொல்ல பித்அத் என்றும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பிரயோகம் அகீதா சார் அறிஞர்களிடத்திலும் வுஃஆழ் எனப்படும். சமூகப் பேச்சாளர்களிடத்திலும் அதிகம் காணப்பட்டது. இவர்கள் ஸுன்னா என்பதன் மூலம் நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை விடவும் இஸ்லாமிய வாழ்வுமுறையையே நாடினார்கள். இஸ்லாமிய வாழ்வு முறை என்பது அல் குர்ஆன், நபியவர்களது வாழ்வு, ஸஹாபாக்களது வாழ்வு போன்ற அனைத்திலிருந்தும் பெறப்படும் ஒரு வாழ்வு முறையாகும். இதனால்தான் ஸுன்னாவின் எதிர்ப்பதமான பித்அத்தை மறுதலிக்கும்போது அது அல்லாஹ் கூறவுமில்லை. நபியவர்களோ ஸஹாபாக்களோ செய்யவுமில்லை என்பதன் அடிப்படையில் மறுக்கப்படுகின்றது.
இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரம் என்ற கருத்தில் ஸுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பிரயோகம் அதிகமாக “உஸுலிய்யூன்” எனப்படும் சட்டக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் காணப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ்கலை அறிஞர்களது பிரயோகத்தை விடவும் இது சற்று வித்தியாசமானது.
இங்கு நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளில், இன்றைய எமது வாழ்வுக்கான மூலாதாரமாக அமையக்கூடியவை எவை? அல்லது நபியவர்கள் 'முபல்லிக்' எனும் அல்லாஹ்விடமிருந்து மனிதர்களுக்கு எத்தி வைப்பவர் என்ற வகையில் அமைந்த அவரது வாழ்வு எது? என்ற பரப்பு மாத்திரமே இங்கு நோக்கப்படுகிறது. அந்தவகையில் நபியவர்களது வாழ்வில் அவர் ஒரு மனிதர் என்ற வகையிலோ அல்லது அறபுக் கலாசாரத்தின் அடிப்படையிலோ தொழிற்பட்ட சந்தர்ப்பங்கள்,
நுபுவ்வத்திற்கு முன்னைய அவரது வாழ்வு போன்றன ஸுன்னா என்ற வட்டத்தினுள் அடங்க மாட்டாது. இவை தவிர நபி (ஸல்) அவர்களது வார்த்தைகள்,
செயற்பாடுகள், செய்ய நினைத்தவை, அங்கீகாரங்கள், நற்குணங்கள் என்பவை
மூலாதாரம் என்ற வகையில் ஸுன்னா என வழங்கப்படுகிறது.
ஒரு செயலைச் செய்தால் நன்மை கிடைக்கும் செய்யாத போது குற்றம் இல்லை என்ற கருத்தில் ஸுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வாஜிப் என்ற சொல் குறிக்கும் கருத்தை விடவும் சற்றுக் குறைந்த கருத்தைத் தருகிறது. அதாவது
வாஜிப் என்பது கட்டாயமாக நிறைவேற்றுவதற்குரிய ஒன்று. அதனை செய்தால் நன்மை கிடைக்கும். செய்யாத போது பாவம் ஆகும். ஆனால் ஸுன்னா என்பது கட்டாயமாக நிறைவேற்றுவதற்குரியதல்ல. செய்தால் நன்மை கிடைக்கும் செய்யாத
போது குற்றமாக கணிக்கப்படமாட்டாது.
மேற்குறிப்பிட்ட விளக்கங்களின் அடிப்படையில் நபியவர்களது ஸுன்னா என்றால்
என்ன? என்பதை விளங்கிக் கொள்வதற்கு நாம் எல்லோரும் சில பொது அடிப்படைகள்
மீது உடன்பட வேண்டியிருக்கிறது.
நபியவர்களது ஸுன்னா என்பது அல் குர்ஆன் அல்லாத வேறு ஒன்றையே குறிக்கின்றது. அதாவது ஸுன்னா என்பது வேறு அல்குர்ஆன் என்பது வேறு.
நபியவர்களது கீழ்வரும் ஹதீஸ் இந்தக் கருத்தைக் குறிக்கின்றது.
“அமானிதம் மனிதர்களின் உள்ளங்களில் வேரூன்றியிருக்கிறது. அடுத்து அவர்களுக்கு அல்குர்ஆனைக் கற்றுக் கொடுங்கள்.” (புகாரி, முஸ்லிம்)
நபியவர்களது ஸுன்னா என்பது ஸஹாபாக்களது வாழ்வு அல்லாத வேறு ஒன்றையே குறிக்கின்றது. ஸஹாபாக்களது வாழ்வுக்கும் ஸுன்னா என்ற சொற்
பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், இங்கு நபியவர்களது ஸுன்னா என்பது அவரது வாழ்வை மாத்திரம் குறிக்கும் ஒரு சொல்லாகும். ஹதீஸ்களில்
ஸுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது நபியவர்களது ஸுன்னா வேறாகவும் ஸஹாபாக்களது ஸுன்னா வேறாகவும் குறிப்பிடப்படுவதை
அவதானிக்கலாம். நீங்கள் எனது ஸுன்னாவையும் எனக்குப் பின்னர் வரும் நல்லாட்சியாளர்களின் ஸுன்னாவையும் கடைப்பிடியுங்கள்.....” (அபூதாவுத், திர்மிதி)
நபியவர்களது ஸுன்னா என்பது நாம் கட்டாயமாக வாழ்வு முறையாகக் கொள்வதற்குரிய ஒன்று. இக்கருத்தை பல்வேறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
“நான் உங்கள் மத்தியில் இரண்டை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அதனைப் பின்பற்றினால் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும், அவனது தூதரின் ஸுன்னாவும் ஆகும்.” என்றார்கள். (ஹாகிம்)
மேற்குறிப்பிட்ட அடிப்படைகளின்படி பார்க்கும் போது, ஸுன்னா என்பது, அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, முழு வாழ்விலும் அதனை கோட்பாட்டு வடிவிலும் சரி, செயற்பாட்டு வடிவிலும் சரி அமுல்படுத்திக் காட்டிய நபியவர்களது வாழ்வு முறை
எனலாம். மற்றொரு வகையில் கூறினால் அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுத்த நபியவர்களது வாழ்வு எனக்கூறலாம்.
ஸுன்னாவின் முக்கியத்துவம்:
குர்ஆனும் ஸுன்னாவும் ஹதீஸின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகின்றன.
1. “எவர் அல்லாஹ்வுடைய தூதருக்கு வழிப்பட்டு நடக்கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவராவார்.” (4:81)
2. “ (நபியே!)நீர் கூறும். நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (3:31)
3. “நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி காணப்படுகிறது.” (33:21)
முதலாவது வசனம், இறைத்தூதருக்குக் கட்டுப்பட்டு அவர்காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றுவது, அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவே அமைகின்றது என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. இறைத்தாதரைப் பின்பற்றுவதனூடாகவே
இறைதிருப்தியை அடைந்துகொள்ள முடியும் என்பதை இரண்டாவது வசனம் தருகின்றது. எமது வாழ்விற்கான முழுமையான வழிகாட்டல்களும் முன்மாதிரிகளும் இறைத்தூதரிடமிருந்தே பெறப்பட வேண்டும் என்பதை இறுதிவசனம் தெளிவாக
உணர்த்துகின்றது.
இறுதி ஹஜ்ஜின் போது முஸ்லிம் உம்மத்தினரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
1. “நான் உங்களிடம் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பின்பற்றியொழுகும் காலமெல்லாம் வழிதவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும் எனது வழிமுறையுமாகும்.” (ஜாமிஉல் பயான்)
ஒரு முஸ்லிம் நேர் வழியில் இருப்பதற்கு குர்ஆனையும் ஹதீஸையுமே பின்பற்ற வேண்டும். இன்றேல்
வழிதவற நேரிடும் என்ற கருத்தை மேலுள்ள ஹதீஸ் வலியுறுத்துகின்றது.
2. மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள், "நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனக்கு குர்ஆனும் அதனைப் போன்ற ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.” (அபூதாவூத்) என்றார்கள்.
இங்கு குர்ஆனோடு சேர்த்து அதனை ஒத்ததாக ஹதீஸையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆனில் பிரயோகிக்கப்பட்டுள்ள ஹிக்மா என்ற சொல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைக் குறிப்பதாகச் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபித் தோழர்களும் தாபிஈன்களும் தபஉத்தாபான்க௧களும் ஹதீஸோடு தொடர்புடைய
அறிஞர்களும் இத்துறையில் காட்டிய அத்த ஈடுபாடானது ஹதீஸின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் மற்றொரு சான்றாகும்.
ஸுன்னாவின் அவசியம் அல்லது பயன்பாடு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.
1. குர்ஆனைப் புரிந்துகொள்வதற்கு ஹதீஸ் தேவைப்படுதல்.
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தாதர் என்ற வகையில் அல்லாஹ்விடமிருந்து பெற்ற நேர்வழிகாட்டலை உரியமுறையில் மனிதசமூகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்புடையவராக இருந்தார். அவரது பொறுப்பைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது.
“மேலும் மனிதர்களுக்கு அவர்கள் பால் இறக்கிவைக்கப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் மற்றும் அவர்கள்
சிந்திப்பபர்களாக ஆகிவிடலாம் என்பதற்காகவும் உம்பால் இவ்வேதத்தை நாம் இறக்கிவைத்தோம்.”(38: 29)
அல் குர்ஆனைப் புரிந்துகொள்வதற்குப் பின்வரும் வழிமுறைகளில் ஹதீஸ் துணைபுரிகின்றது.
i) குர்ஆனின் முஜ்மலான சில போதனைகளின் விரிவான விளக்கத்தைப் புரிந்துகொள்ள (முபஸ்ஸல்) ஹதீஸ் தேவைப்படுகின்றது. உதாரணமாக:
“தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்” (2:110) சுருக்கமாக அமைந்த இப்போதனையை நபி அவர்களின் பின்வரும் ஹதீஸ் விரிவுபடுத்துகின்றது.
“எவ்வாறு நான் தொழக்கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்.” (புகாரி)
ii) அல்குர்ஆனின் சில போதனைகளை ஹதீஸ் மேலும் உறுதிப்படுத்துகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி அவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது என வினவப்பட்டபோது,
“அது அல்குர்ஆனாகவே இருந்தது” என பதிலளித்தார்கள். இக்கூற்றின் மூலம் நபி அவர்களின் வாழ்க்கை குர்ஆனைப் பிரதிபலித்தது என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வைக்கின்றது.
“விசுவாசிகளே! நீங்கள் உடன்படிக்கைகள் செய்துகொண்டால், அதனைச் சிறந்த முறையில் நிறைவேற்றுங்கள்.” (5:1)
இவ்விறை வசனத்தில் விசுவாசிகள் உடன்படிக்கைகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் இவ்வசனத்தைப் பிரதிபலித்துக்காட்டினார்கள் என்பதை
அவரது தனிப்பட்ட, வியாபார, அரசியல் ரீதியான உடன்படிக்கைகள் நிரூபிக்கின்றன. (உதாரணமாக குறைஷியர்களின் அமானிதப் பொருட்களை வழங்கல்) ஹுதைபியா உடன்படிக்கை, மதீனா சாசனம், மக்கா என்பவற்றைக் குறிப்பிடலாம்.
iii) குர்ஆன் சில விடயங்களைப் (அல்ஆம்) பொதுவாகக் குறிப்பிட ஹதீஸ் அதனை
சில குறிப்பிட்ட விடயத்தோடு தொடர்புபடுத்தி விளக்குகிறது. இதனைத் தெரிந்துகொள்ள ஹதீஸ் தேவைப்படுகிறது. உதாரணமாக சொத்துரிமையைப்
பற்றிய பின்வரும் குர்ஆன் போதனைக்கு ஹதீஸின் விளக்கம் தேவைப்படுவதை அவதானிக்கலாம்.
“ உங்களில் இறந்த, அவருக்குச் சந்ததியுமிருந்து (பெற்றோருமிருந்தால்) தாய் தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச் சென்ற சொத்தில் ஆறிலொரு பாகமுண்டு..” (4:12)
மேற்படி வசனத்தில் மேலெழுந்தவாரியாகக் குறிக்கப்படும் கருத்தை ஹதீஸ் விளக்குகிறது. குழந்தைகளது சொத்தில் பெற்றோர் சொத்துரிமை பெற குழந்தைகளும், பெற்றோரும் பின்பற்றும் மார்க்கம் இஸ்லாமாக இருக்கவேண்டுமென
ஹதீஸ் கூறுகின்றது.
“ஒரு காபிர், முஸ்லிமின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெறமாட்டார். ஒரு முஸ்லிம்; காபிரின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெறமாட்டார்.'” (முஸ்லிம்)
iv) சிலபோது குர்ஆன் ஒரு விதியைப் பொதுப் பிரமாணமாக (முத்லக்) விளக்க, ஹதீஸ் அதனோடு தொடர்புடைய வேறுவிதிகள் மூலம் அப்பொது விதியை (முகய்யத்) மேலும் விளக்குவதால் அதற்காக ஹதீஸ் தேவைப்படுகின்றது.
உதாரணமாக திருட்டுக்குற்றத்திற்குரிய தண்டனை பற்றிய குர்ஆன் வசனத்திற்கு, ஹதீஸ் தரும் விளக்கத்தைக் குறிப்பிடலாம்.
“களவெடுத்த ஆண், பெண் ஆகிய இருவரது கரங்களையும் துண்டித்து விடுங்கள்.” (5: 38)
இத்தண்டனையிலிருந்து சித்தசுவாதீனமற்றோர், குழந்தைகள் ஆகியோர் விதிவிலக்குப்
பெறுவார்கள் என ஹதீஸ் விளக்குகின்றது.
v) குர்ஆன் குறிப்பிடாத சில விடயங்களை ஹதீஸ் குறிப்பிடுகிறது. அவற்றை ஹதீஸ் மூலமே விளங்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணம்: திருமணச்சட்டத்தில் மனைவியின் தாயின் சகோதரிகளைத் திருமண முடிப்பது ஹராம் என ஹதீஸ் கூறுவதைக் குறிப்பிடலாம்.
2. இஸ்லாத்தின் சட்ட மூலாதாரங்களுள் ஹதீஸும் ஒன்றாக இருத்தல்.
3. இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாத் பணியினை மேற்கொள்ள ஹதீஸும் துணையாக அமைவதால் முஸ்லிம் உம்மத்தினருக்கு அது தேவைப்படுதல்.
4. முன்மாதிரியானதொரு இஸ்லாமிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள ஹதீஸ் உதவுதல். இதனால் அது முஸ்லிம் உம்மத்தினருக்குத் தேவைப்படுகின்ற பாங்கை அல் குர்ஆன் பின்வருமாறு தெளிவாகக் கூறுகின்றது.
"நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள்
காணப்படுகின்றன.” (33:21)
சட்ட மூலாதாரம் என்ற வகையில் ஸுன்னா:
இஸ்லாமிய சட்டத் துறை அறிஞர்கள் அனைவரும் அல்குர்ஆனுக்கு அடுத்த தரத்திலான மூலாதாரமாக ஸுன்னாவை அங்கீகரித்துள்ளனர். அல்குர்ஆனின் சட்ட விதிகளைப் போலவே, ஸுன்னாவின் அடியாக எழும் சட்ட விதிகளும் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தும் அந்தஸ்துடையவை ஆகும்.
ஸுன்னாவுக்கு இவ்வந்தஸ்து கிடைத்தமைக்கு நபிகளாரின் தலைமைத்துவத்தை மக்கள் அங்கீகரித்தமை ஒரு காரணமாக அமையவில்லை. மாறாக, அல்குர்ஆனே இவ்வந்தஸ்தை ஸுன்னாவுக்கு
வழங்கியுள்ளது. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
“அவர் (இறைத் தூதர்) தன் இஷ்டப்படி (எதனையும்) கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறன்று (53:3-4)
“... இறைத் தாதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக் கொண்டாரோ, அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (59:7)
“(இத் தூதரோ,) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களுடைய பளுவை அவர்களை விட்டும் போக்கி, அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (இறைவனுடைய பல கடினமான கட்டளைகளையும் இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கி விடுவார். (7:157)
அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்குண்டு என்ற கருத்தைத் தரும் அல்குர்ஆன் வசனங்கள் பல உள்ளன. அவற்றுள் சில மேலே
உதாரணத்துக்காக காண்பிக்கப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கள், தீர்மானங்கள், ஏவல் விலக்கல் முதலானவை உட்பட அவரது வாழ்க்கை
முன்மாதிரிகள் அனைத்தும் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதை மேலே குறித்த அல்குர்ஆன் வசனங்கள் காண்பிக்கின்றன.
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னா, சட்டங்களுக்கான ஒரு மூலாதாரம் என்பதை ஹதீஸ்களும் உறுதிப்படுத்துகின்றன. நபி (ஸல்) அவர்கள், முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை யெமன் பிரதேசத்தின் நீதிபதியாக நியமித்தார்கள். அவர்களிடம்
“எந்த மூலாதாரங்களைத் துணை கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறைவேதத்தைத் துணை கொள்வதாகவும், அதில் தீர்வுகாண வழிமுறை இல்லாதவிடத்து, ஸுன்னாவை மூலாதாரமாகக்
கொள்வதாகவும், இவ்விரண்டினதும் துணை கிட்டாத போது, தனது இஜ்திஹாதைத் துணை கொள்வதாகவும் கூறிய அவரது கருத்தை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். மற்றொரு ஹதீஸில், “உங்களிடம் இரு அம்சங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பின்பற்றும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும் எனது ஸுன்னாவுமாகும் என்றார்கள். (ஜாமிஉல்
பயான்)
தீர்ப்புகளை வழங்குவதற்கு அல்குர்ஆனில் ஆதாரம் கிடைக்காத போது ஸுன்னாவை ஆதாரமாகக் கொள்ளுமாறு கலீபா உமர் (ரழி) அவர்கள் நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்த போதும், அவரது மரணத்துக்குப் பின்னரும் ஸஹாபாக்கள் ஹதீஸ்களைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். ஸஹாபாக்களின் இஜ்மாவான முடிவும் ஸுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்பதைக் காண்பிக்கின்றது. முஸ்லிம் தனிநபர்களும், முஸ்லிம் சமூகமும்,
முஸ்லிம் அரசும் ஸுன்னாவைப் பின்பற்றி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை அல்குர்ஆனும் ஸுன்னாவும் ஸஹாபாக்கள் வாழ்வும் காண்பிக்கின்றன.
அல்குர்ஆன் சுருக்கமாகக் கூறும் கட்டளைகளுக்கு விளக்கமளிப்பவராகவும், அல்குர்ஆனில் குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சட்டம் இயற்றுபவராகவும், முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரிப் புருஷராகவும் செயற்பட வேண்டியவராகவும்
நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட இப்பணிகள் பயன்தர வேண்டுமாயின் மனிதர்கள் முழுமையாக அவருக்குக்
கட்டுப்படுவது அவசியமாகும். அதாவது ஸுன்னாவுக்குக் கட்டுப்படுவது அவசியமாகும்.
இஸ்லாமிய சிந்தனையைப் பொறுத்தவரை, அல்லாஹ்வே முழுமையான இறைமையுடையவன். ஆதலால் சட்டம் ஆக்கும் உரிமையை எவருக்கு வழங்குவது என்ற முடிவை அவன் ஒருவனால் மட்டுமே எடுக்க முடியும். அவனாக விரும்பி இறுதித் தூதரைத் தேர்ந் தெடுத்து சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஓர் எல்லையுள் அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்பதால், இறுதித் தூதரின் ஸுன்னாவை ஒரு மூலாதாரமாகக் கொள்வது அவசியமாகிறது.
ஸுன்னா அல்குர்ஆனுக்கு அடுத்த தரத்திலான மூலாதாரமாதலால் முஜ்தஹித்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அல்குர்ஆனுக்கே முன்னுரிமை வழங்கினர். அல் குர்ஆனின் துணை கிட்டாத போது மட்டுமே ஸுன்னாவின் துணையை நாடினர்.
ஸுன்னா அல்குர்ஆனுக்கு அடுத்த தரத்தில் வைத்துக் கருதப்படுவதற்குப் பின்வருவன காரணமாயின.
அல்குர்ஆனின் உத்தரவாதத்தன்மை ஸுன்னாவை விட மேம்பட்டதாகும். அதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. ஸுன்னா, அல்குர்ஆனுக்கு விளக்கமாக இருப்பது அல் குர்ஆனின் முதன்மையைப் பிரகடனப்படுத்தி நிற்கிறது. அல்குர்ஆனுக்கு அடுத்த
தரத்திலான ஆதாரம் ஹதீஸே என்ற சிந்தனையை முன்வைக்க அது ஏதுவாகியது.
அல் குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் இடையே முரண்பாடு இருக்க முடியாது. அவ்வாறு முரண்பாடு தோன்றினால் முஜ்தஹித்கள் அவற்றுக்கிடையே இணக்கப்பாடு காண முயற்சிப்பர்.
ஸுன்னா சுதந்திரமான ஒரு மூலாதாரமா? அன்றேல், அல்குர்ஆன் வழி அமைந்த துணை மூலாதாரமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஸுன்னா குறிப்பிடும்
போதனைகள் ஏற்கனவே அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ள விதிகளை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
“ஒரு முஸ்லிமின் உடைமைப் பொருளை அவனது அனுமதியின்றி எடுப்பது அனுமதிக்கப்பட்டதல்ல” என்ற ஹதீஸ் அல்குர்ஆனின் 4:19 ஆம் வசனத்தின் கருத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது என்பதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஸுன்னா முன்வைக்கும் இத்தகைய போதனைகள் அல்குர்ஆன் குறிப்பிடும் சட்ட விதிகளை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. ஈமானிய அம்சங்கள், பெற்றோர் உரிமைகள், கொலை, களவு போன்ற குற்றச் செயல்கள் என்பன பற்றி வந்துள்ள
ஹதீஸ்களையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அல்குர்ஆனின் மயக்கமான கருத்துக்களைத் தெளிவாக்குவதும், அல் குர்ஆனிய விதிகளுக்குச் செயன்முறை விளக்கமளிப்பதும் ஸுன்னாவின் மற்றொரு பயன்பாடாகும். தொழுகை, சகாத், ஹஜ் போன்ற இபாதத்கள், வர்த்தகம் போன்ற சமூக செயற்பாடுகள் மற்றும் திருட்டுக் குற்றச் செயலுக்கு கை வெட்டுதல் போன்ற தண்டனைகள் அல்குர்ஆனில் ஏவல்களாக மட்டுமே உள்ளன. அவற்றின் நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளை ஸுன்னாவே தருகிறது. இவ்வாறான ஷரீஆ விதிகளுக்கு ஸுன்னாவை ஒரு சுதந்திரமான மூலாதாரமாகக் கொள்வது பொருத்தமற்றதாகும்.
ஸுன்னா தரும் போதனைகளில் கணிசமானவை மேற்குறித்தவாறான அம்சங்கள் சார்ந்தவையாகும். இத்தகைய விதிகளுக்கான மூலாதாரமாக அல்குர்ஆனைத் தனியாகவோ, ஸுன்னாவைத் தனியாகவோ கொள்ளாது, இவ்விரண்டு மூலாதாரங்களினதும் அடியாக அவை உருவானவை என்று கொள்வதே சாலச் சிறந்தது.
அல்குர்ஆனில் குறிப்பிடப்படாததும், ஸுன்னாவின் மூலம் உருவானதுமான சட்ட விதிகளைப் பொறுத்தவரை ஸுன்னாவை ஒரு சுதந்திரமான மூலாதாரமாகக் கொள்ள முடியும் என சட்டவியலாளர் கருதுவர். இத்தகைய ஸுன்னாவை “அஸ்ஸுன்னா
அல் முஅஸ்ஸிலா” என்றழைப்பர். இத்தகைய ஹதீஸ்களின் உள்ளடக்கத்தை அல்குர்ஆனில் தேடிப் பெற முடியாது. இதற்கு உதாரணமாக பின்வரும் சட்ட
விதியைக் குறிப்பிட முடியும். விவாகம் புரிய ஆகாதவர்களின் பெயர்ப்பட்டியல் ஒன்று அல்குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவன் ஏக காலத்தில் தன் மனைவியையும் மனைவியின் தாய்வழி அல்லது தந்தை வழி சாச்சி அல்லது மாமியையும் மனைவியாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று இவ்வட்டவணை தடுக்கவில்லை. ஆயினும் ஸுன்னா மூலம் அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இவ்விதிக்கு
ஸுன்னாவே மூலாதாரமாக அமைவதால் இத்தகைய சட்டங்களைப் பொறுத்தவரை, ஸுன்னா ஒரு சுதந்திரமான மூலாதாரம் எனலாம். இஸ்லாமிய சட்ட அறிஞர்களான “அஷ்ஷாதிபி” “அஷ்ஷவ்கானி” போன்றவர்களும் இக்கருத்தையே ஆதரிப்பர்.
எவ்வாறாயினும், ஸுன்னாவின் வழி உருவான சட்ட விதிகளுக்கு முஸ்லிம்கள் அடிபணிய வேண்டும் என்பதும், அதனை மீறுவது பாவச் செயல் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு
ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு நபி முஹம்மது (ஸல்) அவர்களது நுபுவ்வத்திலிருந்து ஆரம்பமாகி இன்றுவரை தொடர்கின்றது.
இவ்வரலாற்றின் தோற்றம், அதைப் பெற்றுக் கொள்ளுதல், பாதுகாத்தல், ஏனையோருக்கு அறிவித்தல், ஹதீஸ்களைத் திரட்டுதல், நூலுருப்படுத்தல், போலிகளிலிருந்து அதனைத் தூய்மைப்படுத்தல், தொகுத்து எழுதுதல், விளக்கி
விரிவுரை எழுதுதல் போன்ற அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
நபி (ஸல்) அவர்களது காலம்:
நபி (ஸல்) அவர்களது நபித்துவத்திலிருந்து அவரது வபாத் வரையுள்ள காலப்பகுதி ஹதீஸின் வரலாற்றில் நபி (ஸல்) அவர்களது காலமாக கணிக்கப்படுகிறது. இக்காலப் பகுதியில் தான் ஹதீஸ்கள் வெளியாகின. நபி(ஸல்) அவர்களிடமிருந்து வெளியாகிய ஹதீஸ்களை நபித்தோழர்கள் பெற்றுக்கொள்வதில் மிகத் தீவிர ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார்கள். உதாரணம் திண்ணைத்தோழர்களின் நடவடிக்கைகள்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஹதீஸ்களைப் பாதுகாப்பதற்கு மிக முக்கியமான நான்கு வழிமுறைகள் நபித்தோழர்களினால் பின்பற்றப்பட்டமையைக் கண்டுகொள்ள முடிகின்றது.
1. மனனமிடுதல்
2. எழுதிப்பாதுகாத்தல்
3. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாதுகாத்தல்.
4. எத்திவைத்தல்
திண்ணைத் தோழர்கள், உம்மஹாதுல் முஃமினீன்௧கள், நபிகளாரின் பணியாட்கள்,
தனிப்பட்ட அடிப்படையில் தோழர்கள் மனனத்தின் மூலம் ஹதீஸ்களைப் பாதுகாத்து வழங்கினார்கள்.
உதாரணம்: நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களான உம்மஹாதுல் முஃமினீன்கள், பெண்கள் சம்பந்தமான போதனைகளை மனனத்தில் பாதுகாத்து
வழங்கியதைக் குறிப்பிடலாம்.
மனனத்தின் மூலம் ஹதீஸ்களைப் பாதுகாப்பதன் சிறப்பை சிலாகித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“40 ஹதீஸ்களை மனனஞ் செய்பவர் நாளை மறுமையில் ஞானிகளுடன் எழுப்பப்படுவார்.”
ஜாஹிலிய்யாக் கால அரபு நாட்டில் எழுதும் வழக்கம் உடையவர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேனும் இருந்துள்ளனர் என்பதை கஃபதுல்லாவில் தொங்கவிடப்பட்ட கவிதைத் தொகுப்புக்கள், உடன்படிக்கைகள், கடிதங்கள்
நிரூபிக்கின்றன.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹதீஸ்களை எழுதிப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நபித்தோழர்கள் மேற்கொண்டார்கள் என்பதற்கு வரலாற்றாதாரங்கள் காணப்படுகின்றன.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று "நான் ஹதீஸ்களில் சிலவற்றை விளங்கிவைக்க விரும்புகின்றேன்.
அவற்றை எனது மனனத்தோடு ஒப்பிட்டு எழுதிவைக்கவும் விரும்புகின்றேன். அதுபற்றி
தங்களது கருத்தென்ன? என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், எழுதுவதில் தவறில்லை, ஆனால் "என்னைப்பற்றி மனமுரண்டாகப் பொய்யுரைக்கின்றவன் நாளை மறுமையில் நரகைத் தங்குமிடமாக எடுத்துக்கொள்வான்.” (புகாரி) எனக் கூறினார்கள்.
இதற்குப் பின்னர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹதீஸ்களை எழுதிக் கொண்டதாகவும் அவ்வாறு எழுதிக்கொண்ட ஹதீஸ்களை உள்ளடக்கிய திரட்டுக்களை தாபிஈன்கள் கண்டதாகவும், அவருடைய திரட்டு, ”ஸஹீபா ஸாதிகா” என
அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாதாரங்கள் குறிப்பிடுகின்றன.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களது ஹதீஸ்கள் அனைத்தையும் எழுதிக் கொள்ளும் வழக்கம் உடையவராக இருந்தார். "நபி (ஸல்) அவர்கள் சுகதுக்க வேளைகளில் கூறுகின்றவற்றையுமா எழுதிக்
கொள்கின்றீர்? என தோழர்கள் கேட்டபோது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது
பற்றி முறைப்பாடு செய்து, சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டார். "அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வாயிலிருந்து உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவராது.” என நபி(ஸல்) அவர்கள் இவருக்குக் கூறினார்கள்.
இதன் மூலம் மேற்படி தோழர் எழுதிக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு நபித் தோழர்களுள்
நாற்பதுக்கு அதிகமானவர்கள் ஹதீஸ்களை எழுதிப்பாதுகாத்ததாக வரலாற்றா
தாரங்கள் கூறுகின்றன.
ஹதீஸ்களைப் பாதுகாக்கும் விடயத்தில் நபி (ஸல்) அவர்களது காலத்தில் பின்பற்றப்பட்ட மிகவும் சிறந்த ஒரு வழிமுறை தோழர்கள் தமது வாழ்க்கையில்
ஹதீஸ்களை அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி வந்தமையாகும்.
தோழர்கள் நபி (ஸல்) அவர்களை அணு அணுவாகப்
பின்பற்றினார்கள் என்பதனை அஷ்-ஷிபா எனும் நூலில் பதிவாகியுள்ள பின்வரும் வரலாற்றுச் சம்பவம் நிரூபிக்கின்றது.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடாத்திக் கொண்டிருக்கும் போது தமது பாதணிகளை ஒருபுறமாகக் கழற்றி வைத்தார்கள். இதை அவதானித்த தோழர்களும் தமது பாதணிகளையும் கழற்றி வைத்தார்கள். தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் தோழர்களை நோக்கி "நீங்கள் ஏன் உங்களது பாதணிகளை
கழற்றி வைத்தீர்கள்? எனக்கேட்டபோது "யா ரசூலல்லாஹ்! நீங்கள் செய்ததனாலேயே நாங்களும் அவ்வாறு செய்தோம் எனக் கூறினார்கள். அதற்கு
நபி (ஸல்) அவர்கள் எனது பாதணியில் நஜீஸ் இருப்பதாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் அறிவித்ததனாலேயே நான் அவ்வாறு செய்தேன்.” எனக் கூறினார்கள். இங்கு தோழர்கள் நபி (ஸல்) அவர்களை அணுவணுவாகப் பின்பற்றி வந்துள்ளார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
ஸஹாபாக்கள் காலம்:
நபி (ஸல்) அவர்களது வபாத்திலிருந்து அதாவது ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டிலிருந்து ஸஹாபாக்கள் காலம் ஆரம்பித்து ஹிஜ்ரி 100 ஆம் ஆண்டுவரை அல்லது கடைசி ஸஹாபி வபாத்தாகும் வரை இக்காலம் தொடர்கிறது. இக்காலம் ஆட்சிப்பரவலின்
அடிப்படையிலும், சூழ்நிலை மாற்றங்களின் அடிப்படையிலும் முன்னைய காலத்தைவிட வித்தியாசமான தன்மைகள் கொண்டனவாகக் காணப்பட்டது.
நபித்தோழர்கள் ஹதீஸின் அல்லது நபிகளாரின் வழிமுறைகளின் பாதுகாப்பிற்கும்,
ஏனையவர்களுக்கு அதனைச் சென்றடைய வைப்பதற்கும் தம்மால் ஆற்றவேண்டிய பங்களிப்புக்களை அரசியல் மட்டத்திலும், தனிப்பட்டவகையிலும் சிறந்த முறையில் மேற்கொண்டு இன்று வரை முஸ்லிம் உம்மத்தினர் ஹதீஸ்களைப் பெற்று இஸ்லாத்தின் வழியிற் செல்ல வழிவகுத்தார்கள்.
தாபின்கள் காலம்:
ஸஹாபாக்களை அடுத்து ஹதீஸ்துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்கள் தாபிஈன்௧களாவர். தாபிஈன்கள் காலம் ஹிஜ்ரி 100லிருந்து ஆரம்பமாகி ஹிஜ்ரி 150 அல்லது ஹிஜ்ரீ 200வரை தொடர்கிறது எனக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
தாபிான்கள் காலத்தின் ஆரம்பத்தில் ஹதீஸ்துறை எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கான காரணங்கள்
1. குலபாஉர் ராஷிதூன்களுக்குப் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய உமையா ஆட்சியாளர்களில் ஒரு சிலரின் மோசமான நிலை.
2. குலபாஉர் ராஷிதூன்கள் ஹதீஸின் பாதுகாப்பு விடயத்தில் கைக்கொண்ட முயற்சிகள் கைவிடப்பட்டமை.
3. ஒரு நூற்றாண்டு காலம் வரை ஹதீஸ்கள் கோர்வை செய்யப்படாமை. இதனால் போலியானவை தோன்றின. பகுத்தறிவின் அடிப்படையில் தீர்ப்புகூறும் அளவிற்கு நிலைமை மோசமாகியது.
உமையாக்கள் வரிசையில் ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சிபீடமேறியதன் பின்னர் இப்பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்கள்.
இதற்கடிப்படைக் காரணம் இவரது பெற்றோரது வழிநடத்தலும், அவரது பரம்பரையும், அவர் கல்விகற்ற சூழலும், கற்ற துறைகளுமாகும். அவர் தனது
ஆட்சியில் அரசியல் பொருளாதார, சமூக, அறிவியல், ஒழுக்கப்பணபாட்டுத் துறைகளில் எல்லாம் மாபெரும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இந்த
வரிசையில் தாபிஈன்கள் காலத்தின் ஆரம்பத்தில் ஹதீஸ்துறை எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வொன்றையும், பாதுகாப்பொன்றையும் வழங்கினார்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை ஒன்றுதிரட்டி எடுப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.
"ரஸுல் (ஸல்) அவர்களின் ஹதீஸையும் ஸுன்னாவையும் தேடிக்கண்டுபிடியுங்கள்,
ஏனெனில் நான் அறிவின் மறைவையும் அறிஞர்களின் பிரிவையும் அஞ்சுகிறேன்.” என மதீனாவின் கவர்னருக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது இதனை உறுதிப்படுத்துகின்றது.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஹதீஸ்துறையில் ஈடுபாடு கொண்ட அறிஞர்களையும் ஹதீஸை ஒன்றுதிரட்டும் பணியில் ஈடுபடுத்தியமைக்கு
"இமாம் ஷிஹாபுத்தீன் சுஹ்ரி” என்பவர் தூண்டப்பட்டதைக் குறிப்பிடலாம்.
கிலாபத்தின் நாலா பகுதிகளிலும் ஹதீஸ்களை ஒன்றுதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களை அக்காலப்பகுதியில் காண முடிந்தது.
ஹதீஸ்களை ஒன்றுதிரட்டும் பணியில் பாரிய பங்களிப்புக்களைச் செய்த தாபிஈன்கள் காலத்து அறிஞர்கள் ஹதீஸின் தூய்மையைப் பேணுவதற்காகச் சில பாதுகாப்பு முறைகளை அல்லது தூய்மை பேணும் முறைகளை அறிமுகஞ் செய்தார்கள்.
அவற்றுள் மிகப்பிரதானமான இரண்டு வழிமுறைகள் பின்வருமாறு.
1. இஸ்னாதைக் குறிக்கும் வழிமுறையை முதன் முதலில் நடைமுறைக்கு கொண்டு
வந்தார்கள்.
2. ஹதீஸ்களை அறிவித்தவர்கள் எவராவது உயிருடன் இருந்தால் அவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து அதனை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
தாபிஈன்கள் காலத்தில் ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்டதனால் முஸ்லிம் சமூகத்தினருக்கு
பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் உருவாகின.
1. முஸ்லிம் உம்மத்தினருக்கு முதன் முதலில் ஹதீஸ் கிரந்தங்கள் கிடைத்தன. முதலாவது கிடைத்த கிரந்தமாக அதிகமான இஸ்லாமிய அறிஞர்களினால்
குறிக்கப்படுவது இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் “முஅத்தா” என்ற கிரந்தமாகும்.
2. தாபிான்கள் காலத்தின் ஆரம்பத்தில் ஹதீஸ்துறை எதிர்நோக்கிய பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியது.
3. பகுத்தறிவின் அடிப்படையில் மார்க்கப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அல்குர்ஆன் அல்லது ஹதீஸின் அடிப்படையில் அவை தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்தை உறுதிப்படுத்த முடிந்தது.
4. அடுத்துவரக்கூடிய ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு ஹதீஸ் துறைக்குப் பங்களிப்புக்களைச் செய்ய இவர்களது பணிகள் முன்மாதிரியாக அமைந்தன.
தாபிான்கள் காலத்து அறிஞர்கள் தாம் திரட்டிக்கொண்ட ஹதீஸ்களை “முஸ்னத்”
அடிப்படையிலேயே நூலுருப்படுத்தினார்கள். ஒரு முஹத்திஸ் தான் திரட்டிக்கொண்ட ஹதீஸ்களை அறிவிப்பாளரின் பெயரொழுங்கின் அடிப்படையில் நூலுருப்படுத்திக் கொள்வதை “முஸ்னத்” வடிவத்தில் நூலுருப்படித்துதல்” என்பது குறிக்கின்றது.
தபஉத்தாபிஈன்கள் காலம்:
ஹதீஸ்கள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தி வழங்கப்பட்டமை.
1. முன்னைய காலங்களைவிட ஹதீஸ்களைப் பாதுகாத்தல், ஒன்றுதிரட்டல், நூலுருப்படுத்தல், விளக்கமளித்தல் போன்ற காரியங்களை மேற்கொள்கின்றபோது இக்காலத்து அறிஞர்கள் பரந்த ஒரு நோக்கத்தின் அடிப்படையில் இம்முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அதாவது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வழிமுறைகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தினருக்குத் தேவை என்ற அடிப்படையில் இப்பணியில் ஈடுபட்டார்கள்.
2. தபஉத்தாபிான்௧ளது காலத்திற்கு முன்னைய காலங்களில் ஹதீஸ்களோடு சேர்த்து அதற்குரிய விளக்கங்களை எழுதிக் கொள்கின்ற ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டது. இது ஹதீஸின் தூய்மைக்குப் பிரச்சினையாக அமைந்ததால் தபஉத்தாபிான்கள்
காலத்து முஹத்திஸீன்கள் ஹதீஸ்களை மாத்திரம் குறித்துக்கொள்ளும் முறையை அறிமுகஞ் செய்தார்கள். இதனால் ஹதீஸின் தூய்மை பேணப்பட்டது.
3. தாபிஈன்கள் காலத்து முஹத்திஸீன்கள் தாம் திரட்டிக் கொண்ட ஹதீஸ்களை “முஸ்னத்” அடிப்படையில் நூலுருப்படுத்தினார்கள். ஆனால் தபஉத்தாபிான்கள் காலத்து அறிஞர்கள் தாம் திரட்டிக் கொண்ட ஹதீஸ்களை “ஜாமிஉ” அல்லது
முஸன்னப் அடிப்படையிலேயே நூலுருப்படுத்தினார்கள். ஒரு முஹத்திஸ் தாம்
திரட்டி எடுத்துக் கொண்ட ஹதீஸ்களைத் தலைப்புக்களின் அடிப்படையில் நாலுருப்படுத்தி வழங்குவதனை இது குறிக்கின்றது.
“கிதாப் என்ற பெரிய தலைப்புக்களின் அடிப்படையிலும் “பாபுன்” என்ற சிறிய
தலைப்புக்களின் அடிப்படையிலும் இவர்கள் தொகுத்து எழுதினார்கள். இதனால் முஸ்லிம் சமூகத்தினர் தமக்குத் தேவையான ஹதீஸ்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
4. போலியான ஹதீஸ்களை இனங்கண்டு கொள்ள ஹதீஸோடு தொடர்பான ஏனைய கலைகள் அறிமுகம் செய்யப்பட்டன. உதாரணமாக அஸ்மாஉர் ரிஜால், இல்முல் ஜரஹ் வத்தஃதீல், உஸாலுல் ஹதீஸ்
5. அஸ்ஸிஹாஹுஸ் ஸித்தா எனும் பரிசுத்த ஹதீஸ் திரட்டுக்கள் வழங்கப்பட்டமை.
மெளழுஆத்களின் தோற்றமும் அவை ஏற்படுத்திய தாக்கமும்:
“நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காதவற்றை, அவர்களது பண்புகளில், வர்ணனைகளில் அடங்காதவற்றை சொன்னதாகவும், செய்ததாகவும் அங்கீகரித்ததாகவும் பண்புகள், வர்ணனைகளில் அடங்குவதாகப் பொய்யாக குறித்துக்
காட்டுவதனையே போலியான ஹதீஸ் என்பது குறிக்கின்றது.”
போலியான ஹதீஸ்கள் எப்போது தோற்றம் பெற்றன என்பதில் பின்வரும் மூன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. நபி (ஸல்) அவர்களது காலத்தில் பொய்யான ஹதீஸ்கள் தோன்றின.
2. அபூபக்ர், உமர்(ரழி) அவர்களது காலத்தில் பொய்யான ஹதீஸ்கள் தோன்றின.
3. உஸ்மான் (ரழி)அவர்களது ஆறு ஆண்டு ஆட்சியின் பின்னர் பொய்யான ஹதீஸ்கள் தோன்றின. இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்றதற்கான சான்றுகளே உள்ளன.
போலியான ஹதீஸ்கள் துரித வேகத்தில் வளர்ச்சியடைந்தமைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. குலபாஉர் ராஷிதான் ஆட்சியாளர்கள் ஹதீஸின் பாதுகாப்பு, ஹதீஸின் தூய்மை விடயத்தில் கடைப்பிடித்த நடவடிக்கைகளை, அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்களில் ஒருசிலர் கைவிட்டமை.
2. ஒரு நூற்றாண்டு காலம் ஹதீஸ்கள் கோவை செய்யப்படாமையை விஷமிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டமை.
போலி ஹதீஸ்கள் தோன்றியதற்கான காரணங்கள்
அரசியல் ரீதியான காரணங்கள்:
உஸ்மான் (ரழி) அவர்களின் முதல் ஆறு ஆண்டு ஆட்சி கழிந்த பின்னர் இஸ்லாத்தின் எதிரிகளால் இஸ்லாமிய அரசியலில் குழப்பங்களும் பிரச்சினைகளும்
உருவாக்கப்பட்டன. இதனைச் சாதிப்பதற்கு பொய்யான ஹதீஸ்களை அரசியல் ரீதியாகத் தோன்றிய ஒவ்வொரு உட்பிரிவினரும் பயன்படுத்தினர். ஷீயாக்கள் என்றும், உமையாக்கள் என்றும் காரிஜ்கள் என்றும் முதல் மூன்று கலீபாக்களையும் ஆதரித்தோர் என்றும் அவர்கள் தம்மை இனங்காட்டிக் கொண்டனர். இவர்கள்
இட்டுக் கட்டிய போலி ஹதீஸ்களுக்கு உதாரணம்:
“அலி (ரழி) எனது வாரிசுக்காரன், அவர் எனது சகோதரன், எனக்குப் பின்னால் தலைவராக வருபவர், நீங்கள் அவரது கட்டளைகளுக்குச் செவிமடுத்து அவருக்குப் பணிந்து நடந்துகொள்ளுங்கள்.” (பொய்யான ஹத்ஸ்)
. “நெருப்பு விறகை எரிப்பது போல அலியை நேசிப்பது பாவச் செயல்களை அழித்துவிடும்” (பொய்யான ஹதீஸ்)
“முஆவியா(ரழி)யை மிம்பரில் கண்டால் வாளால் வெட்டிவிடுங்கள்”
(பொய்யான ஹதீஸ்)
“அல்லாஹ்விடத்தில் நம்பிக்கைக்குரியவர்கள் மூவர் நான், ஜிப்ரீல், முஆவியா” (பொய்யான ஹதீஸ்)
மேற்குறித்த அடிப்படையில் ஒவ்வோர் உட்பிரிவினரும் பொய்யான ஹதீஸ்களை அறிவித்ததனால் ஹதீஸின் தூய்மை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கட்டிவளர்த்த ஒற்றுமையும், ஐக்கியமும், ஒருமைப்பாடும் சீர்குலைந்து போய்விட்டன. இன்றுவரை சீர்செய்ய முடியாத அளவிற்கு
தாக்கங்களை அது ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் காரிஜ்கள் பொய்யான ஹதீஸ்களை அறிவித்தமைக்குச் சான்றுகள் கிடையாது.
ஸின்தீக்குகள் அல்லது இஸ்லாத்தின் எதிரிகளின் நடவடிக்கைகள்:
இஸ்லாத்தை அறிவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கின்ற நோக்கத்தில் பொய்யான ஹதீஸ்களை அறிவித்த இஸ்லாத்தின் எதிரிகளே ஸின்தீக்கள் ஆவர். ஹலால், ஹராம், அகீதா, இபாதத் போன்ற பல்வேறு துறைகளில் பொய்யான
ஹதீஸ்களை இவர்கள் அறிவித்தார்கள். இதற்கு உதாரணங்கள் பின்வருமாறு;
1. “அல்லாஹ் தனது மார்பிலும் கரங்களிலுமுள்ள மயிர்களினால் மலக்குகளைச் சிருஷ்டித்தான்.” (பொய்யான ஹதீஸ்)
2. “அழகான முகத்தைப் பார்ப்பது இபாதத் ஆகும். (பொய்யான ஹதீஸ்)
3. “அல்லாஹ் தன்னை சிருஷ்டிக்க நாடிய போது குதிரையைச் சிருஷ்டித்து அதனை ஓடச் செய்தான். பின்னர் குதிரையின் வியர்வையிலிருந்து தன்னைச்சிருஷ்டித்தான்” (பொய்யான ஹதீஸ்)
மேற்படி நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாமிய அகீதாவை, இஸ்லாமிய இபாதத்களை, ஹலால், ஹராம் பற்றிய வரம்புகளை பாதிப்படையச் செய்தன.
இன்றும் கூட முஸ்லிம்கள் இதன் தாக்கங்களுக்கு உட்பட்டு வருகின்றார்கள்.
மொழி, இனம், பிரதேசம், மத்ஹப், இமாம் எனும் விடயங்களில் வெறிகொண்டவர்கள் இட்டுக்கட்டியவை:
பாரசீக மொழி தனது செல்வாக்கை இழந்து செல்கிறது எனக் கருதி அம்மொழியைப்
பேசுகின்றவர்கள் தமது மொழிக்குச் சாதகமாகவும் அரபுமொழிக்கு எதிராகவும் பொய்யான ஹதீஸ்களை அறிவித்தார்கள். இதற்காதராமாக பின்வரும் பொய்யான ஹதீஸை குறிப்பிடலாம்.
“அல்லாஹ்வின் அர்ஷைத்தாங்கி இருப்பவர்கள் பாரசீக மொழியைப் பேசுகின்றனர். அல்லாஹ் வஹி அருளும் போது மென்மையான விடயங்களை பாரசீக மொழியிலும் கடினமான விடயங்களை அரபு மொழியிலும் அருளுகிறான்”(பொய்யான ஹதீஸ்)
அரபிகள் இதனை எதிர்த்து பின்வரும் பொய்யான ஹதீஸை அறிவித்தனர்.
“அரபு சுவர்க்கத்தின் மொழி, அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய மொழி பாரசீக மொழி” (பொய்யான ஹதீஸ்)
பிரதேச அடிப்படையில் வெறிபிடித்தவர்கள் இட்டுக்கட்டியவற்றுக்காகப் பின்வரும்
பொய்யான ஹதீஸைக் குறிப்பிடலாம்.:
“மக்கா மதீனா, பைதுல் முகத்தஸ், திமிஷ்க் (டமஸ்கஸ்) ஆகிய நான்கு நகரங்களும்
இவ்வுலகத்தின் சுவர்க்க நகரங்களாகும்.”(பொய்யான ஹதீஸ்)
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களை ஆதரித்த ஒருவர் அவருக்குச் சாதகமாக பின்வரும் பொய்யான ஹதீஸை அறிவித்தார்.
“எனது உம்மத்தில் அபூஹனீபா இப்னு நுஃமான் என ஒருவர் தோன்றுவார். அவர் சமூகத்தின் ஒளி விளக்காவார்.” (பொய்யான ஹதீஸ்)
இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் பிரபல்யம் அடைவதைக் கண்ட மாற்று இமாமை ஆதரித்த ஒருவர் மனவேதனைப்பட்டுக் கூறினார்.
“முஹம்மத் இப்னு இத்ரீஸ் என்ற ஒருவர் பிற்காலத்தில் எனது சமூகத்தில் தோன்றுவார். அவர் இப்லீஸைவிடவும் கேடுகெட்டவராக இருப்பார்.” (பொய்யான ஹதீஸ்)
மேற்படி நடவடிக்கைகளினால் முஸ்லிம்களின் மத்தியில் பிளவுகள் உருவாகி அது, நபி(ஸல்) அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கட்டியெழுப்பிய முஸ்லிம்களது ஐக்கியம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன படிப்படியாக மறையக்காரணமாக அமைந்துவிட்டன.
உபதேசிகளும் கதை கூறுபவர்களும் இட்டுக்கட்டியவை:
உபதேசிகள், கதை கூறுபவர்கள் மக்கள் மத்தியில் தாம் செல்வாக்குப் பெற்றுக் கொள்வதற்காகவும், தமது சொந்த நலன்களைப் பேணுவதற்காகவும் பொய்யான ஹதீஸ்களை அறிவித்தார்கள். இதற்காதாரமாக இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்,
இமாம் யஹ்யா இப்னு முரன் ஆகிய இருவரும் தனக்கறிவித்ததாக ஒரு உபதேசி அவ்விருவரதும் முன்னிலையிலேயே தனது உபதேசத்தில் அறிவித்த பின்வரும் பொய்யான ஹதீஸைக் குறிப்பிடலாம்.
“யார் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று மொழிகின்றாரோ அதன் ஒவ்வொரு
சொல்லுக்கும் அல்லாஹ் ஒவ்வொரு பறவையைச் சிருஷ்டிக்கின்றான். அப்பறவையின் சொண்டு தங்கத்தினாலும் இறக்கை நவரத்தினங்களினாலும்
ஆக்கப்பட்டிருக்கும்.” (பொய்யான ஹதீஸ்)
கதை கூறுபவர்கள் இட்டுக்கட்டியதற்கு பின்வரும் பொய்யான ஹதீஸைக் குறிப்பிடலாம்.
“ நூஹ் நபியின் கப்பல் தூபான் வெள்ளத்தில் மிதந்து கஃபதுல்லாஹ்வை ஏழுமுறை வலம்வந்து ஒருமுறை ஸாஜுது செய்தது.” (பொய்யான ஹதீஸ்)
மேற்படி பொய்யான ஹதீஸ்களினால் பாமர மக்கள் இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியது. இஸ்லாத்தைத் தவறாக
விளக்குகின்றவர்களுக்கு இடம் கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையும் உருவாகியது. இவை இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தன.
பிக்ஹிலும் இல்முல் கலாமிலும் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் இட்டுக் கட்டியவை:
பிக்ஹ், இல்முல் கலாம் போன்ற துறைகளில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தமக்குச் சார்பாகவும், எதிர்தரப்புடையவர்களை முறியடிக்கும் வகையிலும் பொய்யான ஹதீஸ்களை அறிவித்தார்கள். இதற்கு உதாரணமாக பின்வரும் பொய்யான ஹதீஸைக்
குறிப்பிடலாம்.
“எவர் தொழுகையில் தமது இரு கரங்களையும் உயர்த்துகின்றாரோ அவரது தொழுகை முறிந்துவிட்டது.” (பொய்யான ஹதீஸ்)
இது ஹனபி மத்ஹபைச் சார்ந்த ஒருவர் அடுத்த மத்ஹபை சார்ந்தவர்களுக்கு எதிராக இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ் ஆகும்.
“எவர் அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறுகிறாரோ அவர் காபிராகிவிட்டார்.”
(பொய்யான ஹதீஸ்)
மார்க்கத்தில் அறியாமையும் நல்லதைச் செய்யவேண்டும் என்ற ஆசையும் கொண்டவர்கள் இட்டுக்கட்டியவை.
வரலாற்றில் அரசியல் ரீதியாகவும், இயக்கரீதியாகவும், கொள்கைகளின் அடிப்படையிலும் பிரிந்தவர்களை நலலிணக்கப்படுத்தும் நோக்கத்திலும், தாம்
சார்ந்திருக்கின்ற விடயங் களில் ஈடுபடுத்தும் நோக்கத்திலும் பொய்யான ஹதீஸ்களை
இட்டுக்கட்டினார்கள். இவ்வாறு இட்டுக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டவர்களிடம் இது பற்றி
வினவியபோது “நாங்கள் றஸுலுக்கு சார்பாக இட்டுக்கட்டினோம்” என நியாயம் கூறினார்கள். அதுமாத்திரமன்றி முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் புறக்கணித்து விட்டு இமாம்களது சட்டவிளக்கங்களிலும் வரலாற்றுத் துறைகளிலும் தமது கவனத்தைச் செலுத்துவதில் இருந்து அவர்களை விடுத்து அல்குர்ஆன் பக்கம் திரும்பி விடுவதற்காக இவ்வாறு புனைந்துரைத்ததாகவும் கருத்துத் தெரிவித்தார்கள். குலாம் கலீல் என்ற
ஒருவன் திக்ரின் சிறப்பைப் பற்றி பொய்யான ஹதீஸ்களை அறிவித்தான். மக்களின்
உள்ளங்களை நெகிழச் செய்து நன்மையின் பால் அவர்களைத் தூண்டுவதற்காக இவ்வாறு செய்ததாகத் தெரிவித்தான்.
ஆட்சியாளர்களதும் செல்வந்தாரகளதும் நலன் தேடுவதற்காக இட்டுக்கட்டப்பட்டவை:
ஒருசிலர் தமது வாழ்க்கையைக் கடத்துவதற்காகப் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளதைக் கண்டு கொள்ள முடிகின்றது. இதற்கு ஆதாராமாகப் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
“அப்பாஸிய கலீபா மஹ்தியிடம் ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இயாஸ் இப்னு இப்ராஹிம் என்பவன் அரண்மனைக்கு வந்தான்.
கலீபா புறாக்களுடன் விளையாடிக் கொண்டு இருப்பதைக் கண்ட அவன், இவரது இவ்விளையாட்டு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்த உண்மையான ஹதீஸான “அம்பையும், குதிரையையும், ஒட்டகத்தையும் தவிர வேறு எதனையும் போட்டிக்கு விடுவது கூடாது” (அல்ஹதீஸ்) பறவைகளையும் எனும் சொல்லையும் இதனுடன் சேர்த்துக் கூறினான். இவர் உரைத்தது பொய்யானது
என கலீபா அறிந்தும் கூட அவருக்குச் சன்மானம் வழங்கி அனுப்பிவைத்தார். அவன் பொய்யுரைக்க புறாக்கள் காரணமாக இருந்தன எனக் கருதி புறாக்களை அறுத்துவிடுமாறு கட்டளையிட்டார்.
விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்டவை:
ஒருசில வியாபாரிகள் தமது வியாபாரப் பொருட்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகப் பொய்யான ஹதீஸ்களை அறிவித்தார்கள். மரக்கறி வியாபாரி ஒருவர் அறிவித்த பின்வரும் பொய்யான ஹதீஸை இதற்கு ஆதாரமாக குறிப்பிடலாம்.
"எவன் கத்தரிக்காய் சாப்பிடுகின்றானோ, அவன் சுவர்க்கம் நுழைவான்”
(பொய்யான ஹதீஸ்)
ஸுன்னாவின் தூய்மையைப்பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:
தபஉத்தாபிாான்௧கள் காலத்து முஹத்திஸீன்கள் ஹதீஸின் தூய்மையையும், அதன் நம்பகத் தன்மையையும் பேணிக்கொள்வதற்காகவும், உண்மைக்கு முரணான ஹதீஸ்களை இனங்கண்டு கொள்வதற்காகவும் பின்வரும் திறனாய்வுக்கலைகளை மேற்கொண்டார்கள்.
1. அஸ்மாஉர் ரிஜால்
2. இல்முல் ஜரஹ் வத்தஃதீல்
3. உஸுலுல் ஹதீஸ்
அஸ்மாஉர் ரிஜால்:
ஒரு ஹதீஸின் இஸ்னாத் பற்றி ஆராய்கின்ற கலையே அஸ்மாஉர்ரிஜால் எனக் குறிப்பிடப்படுகின்றது. “மனிதர்களது பெயர்கள்” என்ற மொழிக்கருத்தினை இப்பதம் கொடுத்தாலும் ஹதீஸ்துறையில் அது பின்வரும் கருத்தினையே கொடுக்கிறது.
"நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்கள் அனைத்தும் வெளியாகியது முதல் அவை பெறப்பட்டு அறிவிக்கப்பட்டு, ஒன்றுதிரட்டப்பட்டு தொகுப்பாசிரியரினால் தொகுத்தெழுதப்படும் வரை யார் யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டார்களோ
அவர்கள் அனைவரது வரலாறுகளையும் குறிக்கின்ற ஒரு கலையாக இது உள்ளது. அஸ்மாஉர் ரிஜால் மூலம் ஹதீஸ்களை அறிவித்தவர்களது முழுமையான
தகவல்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதனால் ஒரு ஹதீஸ் தொடர்பாக இறுதியானதொரு தீர்மானத்திற்கு வர அது உதவுகிறது.”
உதாரணம் 1:
ஒரு ஸனதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்ற ஒர் அறிவிப்பாளர் அஸ்மாஉர் ரிஜாலில் அடங்காதவராக இருந்தால் இஸ்னாதில் ஒரு முறிவு ஏற்பட்டு இருக்கின்றது என்ற தீர்மானத்திற்கு வந்து, குறித்த ஹதீஸை நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸின்
பட்டியலில் சேர்த்துவிட முடிகின்றது.
உதாரணம் 2:
ஸனதில் அடங்குகின்ற இரு அறிவிப்பாளர்களுக்கிடையில் ஏற்படுகின்ற வரலாற்று
ரீதியிலான முரண்பாட்டை இக்கலை வெளிப்படுத்தக்கூடியதாக இருப்பதால்
ஹதீஸின் இறுதியான நிலை பற்றித் தீர்மானிக்க அஸ்மாஉர் ரிஜால் உதவுவதையும் குறிப்பிடலாம். இவ்வாறு அறிவிப்பாளர் வரிசையில் ஏற்படுகின்ற குறைகளை முரண்பாடுகளை அஸ்மாஉர் ரிஜால் இனங்காட்டி ஒரு ஹதீஸின் நம்பகத்தன்மையையும் தூய்மையையும் உறுதிசெய்து கொள்ள
உதவுகின்றது.
இல்முல் ஜரஹ் வத்தஃதீல்:
ஒரு ஹதீஸின் மத்ன் பற்றியும், ஸனத் பற்றியும் ஆராய்கின்ற கலைகளுள் இல்முல் ஜரஹ் வத்தஃதீலும் ஒன்றாகும் இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஹதீஸ்கலை வல்லுனர்கள் பின்வரும் அடிப்படைகளில் அமையுமானால் அவ்வாறான
ஹதீஸ்களை நிராகரிக்கக்கூடிய ஹதீஸின் வகைகளில் சேர்த்துக்கொள்ள முடியுமெனக்
கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
01. அரபிகளது, அதிலும் விசேடமாக குறைஷிகளது மொழி வழக்கிற்கு மாற்றமாக அல்லது தாழ்ந்த அரபு மொழிநடையில் வருபவை.
02. நபி (ஸல்) அவர்களது மொழிப் பிரயோகத்திற்கு அல்லது மொழிப் போக்கிற்கு மாற்றமாக வருபவை.
03. அறிவியல், ஒழுக்கவியல் கோட்பாடுகளுக்கும் புலன் உணர்வுகளுக்கும் முரணாகவும், இச்சையின்பால் தூண்டும் விதத்திலும் மருத்துவ, வரலாற்று உண்மைகளுக்கு முரணாகவும் வருபவை.
04. அல்குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கு எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவாறு முரணாக வருபவை.
05.நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கு முரணாக
வருபவை.
உதாரணம்: கதீர்கும் என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) பற்றி கூறிய மெளழூவான ஹதீஸ்
06. ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் கொள்கைக்குச் சார்பானதாக இருத்தல்.
உதாரணம் : ஷீயாக்களில் ராபிழிகள் கூறிய அஹ்லுல் பைத்துக்களைப் பற்றியவை.
07.ஒரு சிறிய செயலுக்குப் பெரிய நன்மையையும், ஓர் அற்ப விடயத்திற்கு கடமையான தண்டனையையும் வழங்குவதாக மிகைப்படுத்திக் கூறப்பட்டவை.
08. எல்லோருக்கும் பொதுவான ஒரு விடயம் ஒருவரினால் மாத்திரம் அறிவிக்கப்பட்டு
இருப்பவை.
இவ்வாறு முஹத்திஸீன்கள் மத்னில் இடம்பெறக்கூடிய உண்மைக்கு முரணானவற்றை இனங்கண்டு கொள்ளும் வழிமுறைகளை அறிமுகப்படுத்திச் சென்றார்கள். இதனால் தரமான, தூய்மையான ஹதீஸ்களை முஸ்லிம் சமூகத்தினர் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
உஸுலுல் ஹதீஸ்:
தபஉத்தாபிஈன்௧கள் காலத்தில் ஹதீஸின் தூய்மையைப் பேணுவதற்காக அக்காலத்து
அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு பாதுகாப்புக் கலையாக அமைவது உஸுலுல் ஹதீஸாகும். ஹதீஸின் அடிப்படை பற்றி ஆராய்கின்ற கலையாக இதனைக் குறிப்பிடலாம். இக்கலையில் ராவி- அறிவிப்பாளர், முஹத்திஸ்- ஹதீஸ்
கலை அறிஞர், தாலிபுல் ஹதீஸ்- ஹதீஸை கற்போர்கள் போன்றோரது தகைமைகள்
அடிப்படைகள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது. உஸாலுல் ஹதீஸ் கூறுகின்ற நிபந்தனைகளுக்கு, வரையறைகளுக்கு முரணாகின்ற வகையில் உள்ள எந்த ஹதீஸும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகைகளிலும் அடங்கமாட்டாது. ஆகவே இக்கலையும் அறிவிப்பாளர்களையும், முஹத்திஸீன்களையும் ஹதீஸைக் கற்கின்ற மாணவர்களையும் சரியான முறையில் இனங்காட்டித் தூய்மையா ஹதீஸ்களைப்
பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை முஸ்லிம் உம்மத்தினருக்கு தருகின்றது.
திறனாய்வுக் கலைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக ஹதீஸ்கள் பின்வரும் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
1. முதவாதிரான ஹதீஸ்
2. ஆஹாதான ஹத்ஸ்
முத்தவாதிர்:
முத்தவாதிரான ஹதீஸ் என்பது ஒரு விடயத்தில் அவர்கள் பொய்யுரைத்தல் சாத்தியமாகாது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தரத்திலும் அதிகமான எண்ணிக்கையுடைய அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ் ஆகும்” ஸனதின்
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இவ்விதி பேணப்படல் வேண்டும். இவ்வாறான ஹதீஸ், அறிஞர்களால் மிக உறுதியான ஆதாரபூர்வமான ஹதீஸாகக் குறிக்கப்படுகின்றது.
அல் - ஆஹாத்:
அல் - ஆஹாத் என்ற அரபுப் பதம் அஹத் அல்லது வாஹித் என்ற அரபுப் பதத்தின் பன்மைச் சொல்லாகும். மொழிக் கருத்தில் ஒருவர் என்ற கருத்தைக் கொள்ளலாம். ஹதீஸின் அடிப்படையில் முத்தவாதிருடைய நிபந்தனைகளை அல்லது
முதவாதிரான ஹதீஸின் ஸனதில் அடங்குகின்ற அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையை
எவ்வகையிலும் அடையாத ஹதீஸ்களை இது குறிக்கும். ஒரு ஹதீஸ் ஆஹாதானது
என நிரூபிக்கப்பட்டால் உஸுலுல் ஹதீஸின் சட்டவிதிகளின்படி ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அதனை ஏற்பதா மறுப்பதா என்ற தீர்மானம் பெறப்படும்.
ஆஹாதான ஹதீஸ்கள் பல உபபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
அ) அறிவிப்பாளர் வரிசைகளின் (ஸனத்கள்) எண்ணிக்கையைப் பொறுத்து அதனை மூன்று பிரிவுகளாகப்பிரித்து நோக்குவர்.
1. அல் மஷ்ஹுர்
2. அல் அஸீஸ்
3. அல் கரீப்
ஹதீஸ்களை ஓர் இஸ்னாத் சென்றடையும் முடிவிடத்தை கருத்திற் கொண்டு மூன்றாக வகைப்படுத்தலாம்.
1. மர்பூஃ : இஸ்னாத் முறிவற்றுத் தொடர்ச்சியாக நபி(ஸல்) அவர்கள் வரை சென்று இணையும் ஹதீஸ்
2. மவ்கூப் : ஒரு ஹதீஸின் இஸ்னாத் ஸஹாபி வரை மட்டும் தொடர்ந்து செல்லுதல்
3. மக்தூஃ : ஒரு ஹதீஸ் தாபிஈ வரை சென்று அவரோடு நின்றுவிடுதல்.
ஹதீஸ்கள் இஸ்னாதில் ஏற்படும் முறிவுகளின் அடிப்படையிலும் பல வகைகளுக்கு உட்படும்.
1. முர்ஸல் : ஒரு ஹதீஸின் தொடரில் ஸஹாபியை விட்டுவிட்டு ஒரு தாபி நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்
2. முஅல்லக் : ஒரு இஸ்னாதின் ஆரம்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபடுதல்
3. முன்கதிஃ : ஒரு இஸ்னாதின் மத்தியில் ஓர் அறிவிப்பாளர் விடுபட்டிருத்தல்.
4. முஃதல் : ஒரு இஸ்னாதில் தொடர்ச்சியாக இரண்டு அறிவிப்பாளர்கள் ஒரு இடத்திலோ அதற்கு மேற்பட்ட இடங்களிலோ விடுபட்டு இருத்தல்.
ஹதீஸ்களைத் தரப்படுத்திக் கொள்ளும் விடயத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
1. அறிவிப்பாளர் ஒழுக்க நெறியுள்ளவராக இருத்தல்
2. அறிவிப்பு சரியானதும், நுணுக்கமானதுமாக இருத்தல்.
இவ்விரண்டு பண்புகளும் இணைந்து காணப்படும் ஒருவர் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் நம்பிக்கையானவர் என அழைக்கப்படுவார். இவர்களது அறிவிப்புக்கள் பொதுவாக முஹத்திஸீன்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஹதீஸ்கள் இவ்வாறான திறனாய்வுக்கும், தரப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டதன் விளைவாக அவை இரண்டு தரங்களாக வகைப்படுத்தப்பட்டன.
1. அல் மக்பூல் - ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஹதீஸ்
2. அல் மர்தூத் - நிராகரிக்கப்படக்கூடிய ஹதீஸ்
அல் மக்பூல்:
மக்பூலான ஹதீஸ் என்பது சொல்லப்பட்ட ஒருவரின் நம்பகத்தன்மை வலுவானதாக அமைகின்ற ஹதீஸ் வகையைக் குறிக்கின்றது. எனவேதான் இவை ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வகையைச் சார்ந்ததாக அமைகிறது. இவை நம்பகரமானவையாகவும்,
ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியனவாகவும், ஏற்று அமல் செய்யக்கூடியவனவாகவும், மார்க்கத்தின் அல்லது ஷரீஅத்தின் எல்லாத் துறைகளிலும் பிறருக்கும் ஏவக்கூடியனவாகவும் அமைகின்றன.
அல் மர்தூத்:
மர்தூதான ஹதீஸ் என்பது சொல்லப்பட்ட செய்தியின் நம்பகத் தன்மை வலுக்குன்றியதாக அமைந்த ஹதீஸ் வகையைக் குறிக்கின்றது. இவ்வாறான ஹதீஸைப் பொறுத்தவரை அவற்றை ஆதாரமாக ஏற்கவோ, அதனடிப்படையில் அமல் செய்யவோ அல்லது செயலாற்றவோ, பிறருக்கு அவற்றை ஏவவோ முடியாது. ஆயினும் இவ்வாறான ஹதீஸ்களில் சில வகைகளை நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ள முடியுமென ஹதீஸ்கலை வல்லுனர்கள் சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
மக்பூலான ஹதீஸில், அந்த ஹதீஸின் தராதரங்களைப் பொறுத்து இரு பிரிவுகளாக
வகைப்படுத்தப்படும்.
1. அஸ் - ஸஹீஹ்
2. அல் - ஹஸன்
அஸ் - ஸஹீஹ் (சரியானவை, ஆதாரபூர்வமானவை):
ஹதீஸின் வகையில் தரத்திலும், பலத்திலும், நம்பகத்தன்மையிலும் கூடிய ஹதீஸ் அஸ்-ஸஹீஹான ஹதீஸாகும்.
"நீதியும், நேர்மையும், உண்மையுமுள்ள, மனனசக்தி அல்லது எழுத்தாற்றல் உள்ள அறிவிப்பாளர்களினால், ஆரம்பமுதல் இறுதிவரை அறிவிப்பாளர் தொடர்பு அறுபடாமல் அறிவிக்கப்பட்ட, ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு முரணில்லாத வகையில் அமைந்த, ஹதீஸின் கருத்து குறைகாணப்படும் விதத்தில் அமையாத ஹதீஸையே இது குறிக்கின்றது.”
அல்-ஹஸன்:
ஹதீஸ் வகையில் ஸஹீஹாக்கு அடுத்ததாக அமைவது ஹஸனான ஹதீஸ்களாகும்.
"ஒரு ஹதீஸ் ஸஹீஹானதாக இருப்பதற்குத் தேவையான நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற "அல்-ழப்த்” எனும் பேணிப்பாதுகாக்கும் திறன் இலகுவானதாக அமைகின்ற அறிவிப்பாளர்களினால் அறிவிக்கப்படும் ஹதீஸ்” ஹஸன் எனப்படுகிறது.
நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் மக்பூலான அல்லது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஹதீஸ்களின் நியதிகளில் ஏதாவதொன்றையேனும் இழக்கும் ஹதீஸ்களும், நிராகரிக்கப்படக் கூடிய
ஹதீஸ்களிலேயே அடங்கும். இவ்வாறு நிராகரிக்கப்படுவதற்கு அடிப்படையான மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம்.
1. அறிவிப்பாளரின் குறைபாடு
2. இஸ்னாதில் ஏற்படும் முறிவு
3. சந்தர்ப்பபவசமான காரணங்களினால் ஏற்படும் பலவீனம்
அறிவிப்பாளர்களின் குறைபாடு:
அறிவிப்பாளர்களின் குறைபாடு ராவிகள் தரப்படுத்தலின் அடிப்படையிலேயே
தீர்மானிக்கப்படும்.
நிராகரிக்கப்படக்கூடிய ஹதீஸ் வகையில் ளஈபான அல்லது பலவீனமான ஹதீஸின் பிரயோகம் பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் பல்வேறு கருத்துக்களை
முன்வைத்துள்ளார்கள். அல்லாஹ்வின் பண்புகள், சட்டம், நம்பிக்கை தொடர்பான விடயங்கள் தவிர்ந்த உபதேசங்கள், கதைகள், நன்மை தீமையோடு தொடர்பான விடயங்களில் பயன்படுத்துவது ஆகும் எனக் குறிப்பிடுகின்றார்கள். எனினும் பின்வரும்
நிபந்தனைக்கமையவே அவ்வாறான ஹதீஸ்களைப் பிரயோகிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
1. குறிப்பிட்ட ஹதீஸ் மிகப்பலவீனமானதாக இருக்கக் கூடாது.
2. குறிப்பிட்ட ஹதீஸ் கூறும் விடயம் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஒரு விடயமாக இருக்க வேண்டும்.
3. குறிப்பிட்ட ஹதீஸைக் கொண்டு செயற்படும் போது ஆதாரபூர்வமான ஹதீஸைக் கொண்டுதான் அமல் செய்கிறோம் என்று நம்பக் கூடாது.
நன்மை செய்யத் தூண்டியும் தீமையை விட்டு எச்சரித்தும் அறிவிக்கப்படும் ஹதீஸ்களிலும் கூட ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. அல்லாஹ் விடத்தில் இவை இரண்டிற்கும் பெறுமானம் உண்டு. அவற்றைக் கூட்டியோ குறைத்தோ
கூற முடியாது.
செயல்களின் சிறப்பை எடுத்துக்கூறலாமே தவிர புதிதாக ஒன்றை உருவாக்கமுடியாது. நன்மை செய்யத் தூண்டியும், தீமையை எச்சரித்தும் வருகின்ற
ஹதீஸ்களாக இருந்தாலும் அவற்றை அறிவிப்பதாயின் மேற்குறித்த மூன்று நிபந்தனைகளோடு பின்வரும் இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
1. குறிப்பிட்ட ஹதீஸ் பகுத்தறிவாலோ, இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட வகையிலோ, மொழிரீதியாகவோ ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் மிகைப்படுத்தலைக் கொண்டதாக இருக்கக்கூடாது.
2. குறிப்பிட்ட ஹதீஸைவிட தரத்தில் கூடிய பலமான ஆதாரம் ஒன்றிற்கு முரணாக இருக்கக் கூடாது.
பிரதான ஹதீஸ் தொகுப்பு நூல்களும் ஆசிரியர்களும்:
ஸஹீஹுல் புகாரி -
இதன் ஆசிரியர் இமாம் முஹம்மத் இப்னு இஸ்மாஈல் அல் புகாரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 194 இல் புகாரா என்ற பிரதேசத்தில் பிறந்தார்கள்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர்கள் தாயுடன் ஹஜ்ஜுக்கு சென்று கற்பதற்காக அங்கே தங்கினார்கள்.
அறிவுத்திறன், நினைவாற்றல் உள்ளவராக இருந்தார்.
ஆரம்பத்தில் பிக்ஹ் துறையைக் கற்ற இவர் பின்னர் ஹதீஸ்துறையில் ஈடுபாடு கொண்டார்.
1080 ஆசிரியர்களிடம் ஹதீஸ்களைக் கற்ற இவரது முக்கியமான ஆசிரியர்களாக இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, அலி இப்னு மதீனி, குதைபா இப்னு ஸாத், அஹ்மத் இப்னு ஹன்பல் ஆகியோர் விளங்குகின்றார்கள்.
ஹிஜாஸ், கூபா, பஸரா, குராஸான் பிரதேசங்களுக்குச் சென்று ஹதீஸ்களைத் திரட்டினார்கள்.
அதிக நினைவாற்றல் உள்ள இவர் பல இலட்சம் ஹதீஸ்களைத் திரட்டி அவற்றைத் தரம் பிரித்து 16 வருடகால முயற்சியின் பின்னர் ஸஹீஹ் புகாரியைத் தொகுத்து வழங்கினார்கள்.
அவரிடம் சுமார் 90 000 மாணவர்கள் கற்றிருக்கிறார்கள் அவர்களுள் இமாம் திர்மிதி, இமாம் நஸாஈ, இமாம் முஸ்லிம், இப்னு குஸைமா, முஹம்மத் இப்னு நஸ்ர் போன்றோர் முக்கியமானவர்களாவர்.
உண்மை, பொறுமை, இரக்கம், தயாளம், தர்மம், வணக்கம் முதலிய நற்குணங்களைக் கொண்டவராக இருந்தார். ஹிஜ்ரி 256 இல் குர்தங் எனும் இடத்தில்
வபாத்தானார்கள்.
ஸஹீஹுல் புகாரியை எழுதுவதற்கு இமாமவர்கள் சுமார் 6 இலட்சம் ஹதீஸ்களை சேகரித்தார்கள். அவற்றுள் பத்தாயிரம் ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அவற்றில் 7275 ஹதீஸ்களை வடித்தெடுத்து ஸஹீஹுல் புகாரியைத் தொகுத்தார்கள்.
இவ்வாறான ஸஹீஹான ஹதீஸ் கிரந்தம் ஒன்றைத் தொகுப்பதற்கு அவரது ஆசிரியரான இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் என்பவரே தூண்டினார்கள்.
மிகத்தூய்மையான முறையில் குளித்து, வுழு செய்து இரண்டு ரக்அத் தொழுததன் பின்னரே ஒவ்வொரு ஹதீஸையும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஸஹீஹுல் புகாரி அல்குர்ஆனுக்கு அடுத்த தரத்தில் வைத்துக் கணிக்கப்படுகின்றது.
அதில் 97 பெரிய தலைப்புகள் உள்ளன. (கிதாப், அவை ஒவ்வொன்றும் பல சிறிய தலைப்புகளாகப் (பாபுன்) பிரிக்கப்பட்டுள்ளன.
தொகுக்கப்பட்ட நூலை தனது ஆசிரியர்களான அஹ்மத் இப்னு ஹன்பல், யஹ்யா இப்னு முஈன் போன்றோரிடம் காட்டி அனுமதியையும் பெற்றுக் கொண்டார்கள்.
ஸஹீஹால் புகாரிக்கு பல்வேறு விளக்க நால்களும் எழுதப்பட்டுள்ளன. இர்ஷாதுஷ்ஷாரி, பத்ஹுல் பாரி என்பன அவற்றுள் முக்கியமானவை.
இமாம் அவர்களது இதர நூல்களில் அத்தாரிகுல் கபீர் முக்கியமானதாகும்.
ஸஹீஹ் முஸ்லிம்:
இதன் ஆசிரியர் இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ். அவர் ஹிஜ்ரி 204இல் நைஸாபூரில் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை நைஸாபூரில் பெற்ற அவர் உயர்கல்விக்காகவும், ஹதீஸ்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும் பல நாடுகளுக்கும் பிரயாணம் செய்தார்கள்.
இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், முஹம்மத் இப்னு யஹ்யா, அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் புகாரி போன்ற தலைசிறந்த ஆசிரியர்களிடம் கற்றார்.
தாம் திரட்டிய ஹதீஸ்கள் அனைத்தையும் மனனமிட்டிருந்த இமாம் முஸ்லிம் அதிக நினைவாற்றல் மிக்க நால்வரில் ஒருவர் என பாராட்டப்படுகின்றார்.
பக்தாதிலும், நைஸாபூரிலும் ஹதீஸ்களைக் கற்றுக்கொடுத்த இவருக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுள் இமாம் திர்மிதி, அபூபக்ர் இப்னு குஸைபா போன்றோர் முக்கியமானவர்களாவர்.
தாம் திரட்டிய சுமார் 3 லட்சம் ஹதீஸ்களைப் பகுப்பாய்ந்து, அவற்றுள் நான்காயிரம் ஹதீஸ்களைத் தெரிந்தெடுத்து ஸஹீஹ் முஸ்லிமைத் தொகுத்தார்கள்.
தனது நூலைத் தொகுத்து, பிரசித்தி பெற்ற முஹத்திஸான அபூ ஸர்ஆ (ரஹ்) அவர்களிடம் காட்டிச் சரியென அனுமதி பெற்றதன் பின்னரே வெளியிட்டார்.
இவர் வரலாறு, குர்ஆன் விரிவுரை சார்ந்த சுமார் 18 நூல்களை எழுதியுள்ளார்.
ஸஹீஹுல் முஸ்லிமுக்கு எழுதப்பட்ட விளக்க நால்களுள் இமாம் நவவி (ரஹ்) அவர்களின் நூலே பிரசித்தி பெற்றதாகும்.
சாந்தம், தயாளம், பொறுமை, பணிவு முதலான நற்குணங்களை பெற்றிருந்த இமாமவர்கள் ஹிஜ்ரி 261 இல் நைஸாபூரில் வபாத்தானார்கள்.
சுனன் அபூதாவூத்:
இதன் ஆசிரியர் இமாம் அபூதாவூத் ஸுலைமான் இப்னு அஷ்அஸ் ஸிஜிஸ்தானில் ஹிஜ்ரி 201 இல் பிறந்தார்.
நைஸாப்பூரில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் குராஸான், எகிப்து, ஸிரியா, ஹிஜாஸ் பிரதேசங்களில் கல்வி கற்றதோடு ஹதீஸ்களையும் திரட்டிக் கொண்டார்.
இவர் இமாம் அஹ்மத், யஹ்யா இப்னு முஈன், ஸுலைமான் இப்னு ஹர்ப் போன்ற தலைசிறந்த ஆசிரியர்களிடம் கற்றார்.
(பிக்ஹ்) சட்டக்கல்வியிலும், ஹதீஸ் துறையிலும் சமமான தேர்ச்சி பெற்றிருந்த இவர் பஸராவில் கற்பித்து வந்தார்.
மிகுந்த நினைவாற்றல் உள்ளவராக இருந்த அவர் தான் திரட்டிய 5 இலட்சம் ஹதீஸ்களை நினைவில் வைத்திருந்தார்.
தான் திரட்டிய 5 இலட்சம் ஹதீஸ்களிலிருந்து 4800 ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து ஹதீஸ் நூலைத் தொகுத்தார்.
20 வருடகாலம் இந்தமுயற்சியில் ஈடுபட்டார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்களின் கிரந்தங்களில் ஸுனன் அபூதாவூத் முக்கியமானதாகும். அதனை அவர் தனது ஆசிரியர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலிடம் காட்டி
சரிபார்த்துக்கொண்டார்கள்.
பிக்ஹ் அடிப்படையில் வைத்து நோக்கினால் இவரது கிரந்தமே ஆறு திரட்டுக்களில் முதலிடத்தைப் பெறும் என்பது அறிஞர்களது கருத்தாகும்.
இவரது மாணவர்களில் அபூபக்கர், லுஃலுஃ இப்னு அஃராபி, இமாம் திர்மிதி, இமாம் நஸாஈ போன்றோர் முக்கியமானவர்களாவர்.
இறையச்சம், தியானம், நன்றியுணர்வு, ஈகை, நற்பண்புகளைக் கொண்ட இமாம் அவர்கள் ஹிஜ்ரி 275 இல் பஸராவில் வபாத்தானார்கள்.
ஜாமிஉத் திர்மிதி:
இதன் ஆசிரியரான அபூ ஈஸா முஹம்மத் இப்னு ஈஸா அத்திர்மிதி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 209 இல் குராஸானில் உள்ள திர்மித் எனும் இடத்தில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை குராஸானில் மேற்கொண்ட இவர் கூபா, பஸரா, வாஸித், ஹிஜாஸ் போன்ற பிரதேசங்களில் கல்வி கற்றதோடு ஹதீஸ்களையும் சேகரித்து வந்தார்.
இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், குதைபா இப்னு ஸஃத், அஹ்மத் இப்னு முஸ்னி ஆகியோர் இமாமவர்களது ஆசிரியர்களாவர்.
நினைவாற்றல் மிக்க இவர் ஹதீஸ் கலையோடு தப்ஸீர், பிக்ஹ் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
பல இலட்சம் ஹதீஸ்களைத் திரட்டியெடுத்த இமாமவர்கள் 3956 ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து ஜாமிஉத்திர்மிதி நூலை எழுதினார்கள்.
இவரது ஆயிரக்கணக்கான மாணவர்களுள் முஹம்மத் இப்னு அஹமத் மரூஸி என்பவர் முக்கியமானவராவர்.
இந்நூல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஹதீஸ்கள் திரும்பத்திரும்ப வருவதில்லை, புகஹாக்கள் எந்த ஆதாரங்களைக் கொண்டு
சட்டங்களை வகுத்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது, ஹதீஸ்களின் பிரிவுகள்
தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, அறிவிப்பாளர்கள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது, இமாம்களது கருத்து வேறுபாடுகளும் விபரிக்கப்பட்டுள்ளன.
நூலைத் தொகுத்த இமாமவர்கள் ஹிஜாஸ், ஈரான், குராஸான் ஆகிய மாகாண அறிஞர்களுக்கு அதனை அனுப்பிச் சரிபார்த்துக் கொண்டார்கள்.
இறையச்சமும், நல்லொழுக்கமும், பண்பு நலன்களும் நிறைந்தவராக இருந்த இமாமவர்கள் ஹிஜ்ரி 279 இல் திர்மிதில் வபாத்தானார்கள்.
ஸுனனுன் நஸாஈ:
இதன் ஆசிரியரான அபூ அப்துர் ரஹ்மான் அஹ்மத் இப்னு சுஐப் அந்நஸாஈ ஹிஜ்ரி 215 இல் குராஸான் மாநில நஸாஈ எனும் ஊரில் பிறந்தார்.
ஆரம்பத்தில் இமாம் குதைபா இப்னு ஸாத் அவர்களிடம் கல்விகற்ற இமாமவர்கள் பின்னர் ஈரான், ஈராக், ஹிஜாஸ், ஸிரியா, எகிப்து முதலான நாடுகளுக்குச் சென்று கற்றதோடு ஹதீஸ்களையும் திரட்டிக் கொண்டார். அவ்வேளை இஸ்ஹாக் இப்னு
ராஹவைஹ், இமாம் அபூதாவூத், ஈஸா இப்னு நஸீர் முதலான அறிஞர்களிடமும் கல்வி கற்றார்.
நினைவாற்றல் மிக்கவரான இவர் ஹதீஸ் துறையோடு பிக்ஹ் துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
தாம் திரட்டிய 5 இலட்சம் ஹதீஸ்களிலிருந்து இமாம் நஸாஈ அஸ்ஸானனுல் கபீர் அந்நாஸாஈ எனும் நூலை முதலில் தொகுத்து எழுதிய போது ஒரு மன்னரின்
வேண்டுகோளுக்கு இணங்க ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் உள்ளடக்கிய ஸுனனுன் நஸாஈயை எழுதினார்.
தமது ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுத்த அதே காலப்பகுதியில் கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டார்.
இவரது மாணவர்களுள் இமாம் தபராணி, இமாம் தஹாவி ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
இவர் பலஸ்தீனில் ரம்ஸா எனும் இடத்தில் ஹிஜ்ரி 303 இல் வபாத்தானார்.
ஸானனுன் இப்னு மாஜாஹ்:
இதன் ஆசிரியரான இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு பஸீத் அல்கஸ்வின் ஹிஜ்ரி 209 இல் ஈரானிலுள்ள கஸ்வின் எனும் இடத்தில் பிறந்தார்.
ஹதீஸ் திரட்டுதலில் உச்சகட்டத்தை அடைந்த காலப்பகுதியில் பிறந்து வளர்ந்ததால் இவர் இத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டார்.
ஈரானிலும் பின்னர் குராஸான், ஈராக், ஹிஜாஸ், ஸிரியா, எகிப்து, பஸரா, கூபா, வாஸித் முதலான பிரதேச நகரங்களுக்கும் சென்று ஹதீஸ் துறையில் ஈடுபட்டு ஹதீஸ்களைத் திரட்டிக் கொண்டார்.
இவர்களது ஆசிரியர்களுள் அபூபக்கர் இப்னு ஷைபா, இமாம் இப்றாஹீம் இப்னு முன்ஸிர் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவார்கள்.
ஸுனன் இப்னு மாஜா நாற்பதாயிரம் ஹதீஸ்களிலிருந்து நான்காயிரம் ஹதீஸ்களை
தேர்ந்தெடுத்து 35 கிதாபுகளும் 1500 பாபுகளும் கொண்டதாக தொகுக்கப்பட்டது.
வரலாறு, தப்ஸீர் துறையிலும் இவர் நூல்களை எழுதியுள்ளார்.
இமாமவர்கள் ஹிஜ்ரி 273 இல் வபாத்தானார்கள்.