கிதாபுத் தவ்ஹீத்




அரபி மூலம் : இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாப் (ரஹ்)


உள்ளடக்கம் :

1. தவ்ஹீத் மற்றும் அதன் வகைகள்

2. ஷிர்க் 

3. வளையம் கயிறு மற்றும் அவை போன்றவைகளை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல் தடுத்துக் கொள்வதற்கும் அணிந்து கொள்வது ஷிர்க்கை சேர்ந்ததாகும்

4. மந்திரித்தல் மற்றும் தாயத்து அணிதல் பற்றிய விளக்கம்

5. மரம் அல்லது கல் மற்றும் அவை போன்றவற்றைக் கொண்டு பரக்கத்து தேடுவது ஹராமாகும்

6. அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்து பலியிடுவது ஹராமாகும்
 
7. அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடுமிடத்தில் அல்லாஹ்வுக்கு குர்பானி (பலி) கொடுக்கக் கூடாது.

8. அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

9. அல்லாஹ்வை விடுத்து மற்றவரிடத்தில் பாதுகாவல் தேடுவது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

10. அல்லாஹ் அல்லாதவரைக் கொண்டு இரட்சிக்கத் தேடுவதும் அல்லது அவனல்லாதவரை அழைப்பதும் ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

11. ஷஃபாஅத் (பரிந்துரைத்தல்)
 
12. மக்கள் (அல்லாஹ்வை) நிராகரிப்புச் செய்வதற்கும் தங்களின் மார்க்கத்தை அவர்கள் விடுவதற்கும் காரணம் நல்லவர்களை கண்ணியப்படுத்துவதில் அவர்கள் வரம்பு மீறுவதினாலேயாகும்.
 
13. (அல்லாஹ்வுடைய நேசரான) ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்?
 
14. நல்லோர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது அவர்களை அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகின்றது
 
15. அவ்லியாக்கள் நல்லோர்கள் விஷயத்தில் வரம்பு மீறி நடப்பதுதான் உலகில் ஷிர்க் உண்டாவதற்கான மூல காரணமாகும். அவ்லியாக்களை நேசிக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதுடன் அவர்களுக்குள்ள அந்தஸ்துகளில் அவர்களை வைக்க வேண்டும் அதில் மிகைப்பட நடந்து கொள்ளலாகாது எனவும் கட்டளையிட்டுள்ளான்.
 
16. திண்ணமாக இந்த உம்மத்தவர்களில் சிலர் சிலைகளை வணங்குவார்கள் என்பது பற்றிய விபரம்.
 
17. ஸிஹ்ரு(சூனியத்து)டைய விபரம்
 
18. சூனியத்தின் வகைகளில் சிலவற்றைப் பற்றிய விளக்கம்
 
19. ஜோதிடர்களைப் பற்றிய விபரம்
 
20. சூனியத்தை எடுப்பது பற்றிய விபரம்
 
21. துர்ச்சகுனம் பார்ப்பது பற்றிய விபரம்
 
22. வான சாஸ்திரம் கற்பதை பற்றிய விபரம் 

23. வானில் உதயமாகும் நட்சத்திரங்களால்தான் மழை பொழிகிறது என நம்புதல் கூடுமா?
 
24. அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருத்தல்
 
25. அல்லாஹ் விதித்த விதிகளின் மீது பொறுமையாக இருப்பது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உள்ளதாகும்
 
26. முகஸ்துதி மறைமுக ஷிர்க்காகும் என்பது பற்றிய விளக்கம்
 
27. மனிதன் தான் செய்யும் செயலைக் கொண்டு உலக வாழ்க்கையை நாடுவது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.
 
28. அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் விஷயத்தில் அல்லது அவன் ஹராமாக்கியதை ஹலாலாக்கும் விஷயத்தில் மக்கள் உலமாக்களுக்கோ தலைவர்களுக்கோ கீழ்படிவார்களாயின் அம்மக்கள் அவர்களைத் தங்களின் கடவுளர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் ஆவர் என்பதைப் பற்றிய விபரம்.
 
29. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனின் பண்புகளில் ஒன்றை மறுப்பவரை பற்றிய விபரம்
 
30. ஒரு விஷயத்தில் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்தும் அதைத் திருப்திபடாதவர்
 
31. அல்லாஹ் நாடியதும் நீர் நாடியதும் நடந்தது அல்லது நடக்கும் என்று ஒருவரை நோக்கிக் கூறுவது கூடாது.
 
32. காலத்தை ஏசியவர் அல்லாஹ்வை சங்கடப்படுத்தியவராவார்
 
33. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைப் பற்றிய விளக்கம்
 
34. யாஅல்லாஹ்! நீ நாடினால் பிழை பொருத்தருள்வாயாக! என துஆச் செய்வது கூடாது.
 
35. ஒருவர் தன் பணியாட்களைப் பார்த்து இவர் என் அடிமை இவள் என் அடிமைப்பெண் எனச் சொல்வது கூடாது.
 
36. அல்லாஹ்வின் திருமுகத்தைக் கொண்டு சொர்க்கத்தைத் தவிர வேறொன்றையும் கேட்கக் கூடாது.
 
37. இடையூறு ஏற்படின் இவ்வாறு செய்திருந்தால் அவ்வாறு செய்திருந்தால் ஏற்பட்டிருக்காதே என சொல்வது கூடாது.
 
38. காற்றை ஏசுவது கூடாது
 
39. எந்த இடையூறு ஏற்படினும் அல்லாஹ்வை பற்றி கெட்ட எண்ணம் கொள்ளக் கூடாது.
 
40. விதியை மறுப்போர் பற்றிய விரிவுரை
 
41. உருவம் வரைவோரைப் பற்றிய விபரம்
 
42. அதிகமாக சத்தியம் செய்வதைப் பற்றிய விபரம்
 
43. அல்லாஹ்வின் உடன்படிக்கை மற்றும் அவனுடைய நபியின் உடன்படிக்கை பற்றிய விபரம்
 
44. அல்லாஹ்வைக்கொண்டு அடியார்களிடம் சிபாரிசு வேண்டல் கூடாது
 
45. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் உம்மத்தவர்களுக்கு) தவ்ஹீதடைய பகுதியை பாதுகாத்து ஷிர்க்குடைய வழிகளை அவர்கள் தடுத்தது பற்றிய விஷயம்.



தவ்ஹீத்

தவ்ஹீத் என்றால் ஏகத்துவம் ஒருமைப்படுத்துதல் என்பதாகும். அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹவைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும். இன்னும் அல்லாஹ்விற்கு மாத்திரம் உள்ள பண்புகளை அல்லாஹ்விற்கு மாத்திரம் செலுத்துவதுமாகும்.

ஒரு முஸ்லிம் முதன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதில் தவறிழைப்பவர் மார்க்கத்திலேய தவறிழைத்து விட்டார். இதனால்தான் நபிமார்கள் எந்த சமுதாயத்துக்கெல்லாம் அனுப்பப்பட்டார்களோ அவர்கள் அந்த சமுதாயத்துக்கு முதலில் ஏவியதெல்லாம் இந்த ஏகத்துவத்தைப்பற்றித்தான். ஏக அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கின்றோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (16:36)

ஏகத்துவத்தைக் குறிக்கும் ஆயத்துக்கள்:- (51:56) (17:23) (4:36) (6:151,153) (2:256)

நபி (ஸல்) அவர்களும் நபித்துவம் கிடைத்த பின் மக்கா வாழ்க்கையில் அதிக காலத்தை இந்த ஏகத்துவத்தைப் பரப்புவதற்காகவே ஈடுபட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு பொறுப்பாளியாக அனுப்பும் போது நீங்கள் வேதங்கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்திடம் செல்கின்றிர்கள். அவர்களிடம் முதலில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் யாரும் இல்லையென்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் எனக்கூறும்படி கட்டளையிட்டார்கள். ஆகவே! ஏகத்துவத்தைப்பற்றித்தான் நாமும் முதன் முதலில் மக்களுக்கு சொல்ல வேண்டும். இதில் தவறிழைத்துக் கொண்டு எவ்வளவு நல் அமல்கள் செய்தாலும் அது வீணானதே. காரணம் ஏகத்துவத்தில் தவறிழைப்பவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராகி விடுகின்றார். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவரின் அமல்களெல்லாம் அழிக்கப்படுவதாக அல்லாஹ் கூறுகின்றான்.

(நபியே!) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்து விடும் நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது.(39:65)

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாக அல்லாஹ்வுக்குத் தெரியும். அப்படியிருந்தும் நபியவர்களுக்கே இந்த எச்சரிக்கையென்றால் நம்போன்றவர்களைப்பற்றி என்ன சொல்வது! சிந்தியுங்கள்... நம்மில் எத்தனையோ பேர் ஹஜ் கடமையை முடித்து விட்டு நபி (ஸல்) அவர்களின் கப்ருக்குச் சென்று நபியவர்களிடம் பாவமன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் ஹஜ்ஜின் நிலை என்ன? இன்னும் இவர்கள் போன்ற எத்தனையோ முஸ்லிம்களின் நிலை என்ன?

இன்னும் ஷிர்க் வைப்பவர் தவ்பா செய்யாமல் மரணித்து விட்டால் அவருக்கு நிரந்தர நரகமே. நம் சமூகத்தில் அதிகமானவர்கள் இப்படிப்பட்ட ஷிர்க்கான காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இத்தவறை உணர்த்துவது நம் அனைவரின் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் நம் அனைவரையும் ஷிர்க்கான எல்லாக் காரியங்களிலிருந்தும் பாதுகாப்பானாக.


ஏகத்துவம் மூன்று வகைப்படும்

1.படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.

2.வணக்க விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.

3.பெயர் இன்னும் அவனுக்குரிய தன்மை விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.


முதல் வகை

படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.

படைக்கும் விஷயத்தில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவதென்பது இவ்வுலகத்தையும் இவ்வுலகத்திலுள்ளவைகளையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. இவைகளைப்படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வோடு அல்லாஹ்வின் வேறு எந்தப்படைப்பும் சம்மந்தப்படவில்லை என்று நம்புவது.

நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் உட்பட இவ்வுலகத்தை படைத்து பரிபாலிப்பது அல்லாஹ் மாத்திரம்தான் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படி நம்பியிருந்தும் அவர்களை குர்ஆன் முஷ்ரிக்கீன்கள் எனக்கூறுகின்றது. காரணம் அவர்கள் மற்ற ஏகத்துவ வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருந்தார்கள்.

இந்த வகையை மாத்திரம் ஏகத்துவப்படுத்தி மற்ற இரு வகையையோ அல்லது அதில் ஒன்றையோ மறுத்தால் அவர் அல்லாஹுவுக்கு இணை வைத்தவராகவே கருதப்படுவார். மற்ற இரு வகைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கா முஷ்ரிக்கீன்கள் அல்லாஹுதான் இவ்வுலகத்தை படைத்தான் என்று எற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை அறிவிக்கும் இறை வசனங்கள்.

வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது செவிப்புலனையும் பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின்) சகல காரியங்களைத்திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்? என (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக! அ(தற்க)வர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக. (10:31)

(நபியே!) அவர்களிடம் வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் கேட்டால் (யாவையும்) மிகைத்தவன் நன்கறிகிறவன் (ஆகிய அல்லாஹ்) தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (43:9)

(அன்றி) ஏழு வானங்களின் இரட்சகனும் மகத்தான அர்ஷின் இரட்சகனும் யார்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! அ(தற்க)வர்கள் (அவையாவும்) அல்லாஹ்வுக்கே உரியன என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் (அவனுடைய தண்டனையை) பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக. (23:86,87)


இரண்டாவது வகை

வணக்க விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது.

அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும் நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கமே இந்த வகையை மக்களுக்கு அறிவிப்பதற்குத்தான்.

ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்). (16:36)

வணக்கம் என்பது தொழுகை நோன்பு ஸக்காத் ஹஜ் போன்றவைகள் மட்டும் அல்ல எவைகளையெல்லாம் அல்லாஹுவுக்கு மாத்திரம் செய்யவேண்டுமென்று குர்ஆனிலும் ஹதீதிலும் சொல்லப்பட்டிருக்கின்றதோ அவைகலெல்லாம் வணக்கம்தான். அவைகள் எல்லாவற்றையும் அல்லாஹுவுக்காக மாத்திரமே செய்ய வேண்டும். அவைகளில் எதையாவது ஒன்றை அல்லாஹ்வின் படைப்புக்கு செலுத்தினால் அதற்கு ஷிர்க் (இணைவைத்தல்) என்று சொல்லப்படும்.

வணக்கம் இரண்டு வகைப்படும்

1. உள்ளத்தால் செய்யும் வணக்கம்

2. உறுப்புக்களால் செய்யும் வணக்கம்


உள்ளத்தால் செய்யும் வணக்கத்திற்கு சில உதாரணங்கள்

அல்லாஹ்வை மாத்திரம் ஈமான் கொள்வது, அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சுவது, அல்லாஹ்வை மாத்திரம் எந்த ஒரு விஷயத்திலும் ஆதரவு வைப்பது, அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவக்குல் வைப்பது, இன்னும் இது போன்றவைகள். இவைகள் அல்லாஹ்வுக்குத்தான் செய்ய வேண்டும் என்பதற்கு குர்ஆனின் ஆதாரங்கள்.

அல்லாஹ்வை மாத்திரம் ஈமான் கொள்வதற்கு ஆதாரம்:

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள். (4:136)

அல்லாஹ்வை மாத்திரம் நேசிப்பதற்கு ஆதாரம்:

(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். (3:31)

அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சுவதற்கு ஆதாரம்:

இது ஒரு ஷைத்தான்தான் அவன் தன் நண்பர்களைப்பற்றி (அவர்கள் பலசாலிகள் கடுமையானவர்கள் என) உங்களைப் பயப்படுத்துகிறான். ஆகவே நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அவர்களுக்கு பயப்பட வேண்டாம் எனக்கே பயப்படுங்கள்.(4:175)

அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவக்குல் வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்

நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வையுங்கள். (5:23)

இன்னும் (32:48) (65:3) (14:12) போன்ற வசனங்களை பார்வையிடுக

அல்லாஹ்வின் மீது மாத்திரமே ஆதரவு வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்

எவர் தன் இரட்சகனை சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்கருமங்களைச் செய்யவும். (18:110)

இன்னும் (33:21) (21:90) (94:7,8) போன்ற வசனங்களை பார்வையிடுக.


உறுப்புக்களால் செய்யும் வணக்கத்திற்கு உதாரணம்

1. துஆ செய்வது

சிறிய காரியமாக இருந்தாலும் சரி பெரிய காரியமாக இருந்தாலும் சரி அல்லாஹ்விடத்திலேயே மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவன் மாத்திரமே நம் தேவைகளை நிறைவு செய்து தர முடியும். அவனுடைய படைப்புகளால் நமது தேவைகளை செய்து தர முடியாது. அப்படி செய்வோமேயானால் நாம் அல்லாஹ்வுக்கு இணை வைத்த குற்றவாளிகளாகி விடுவோம். இன்று நமது முஸ்லிம்களில் அதிகமானோர் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்காமல் அல்லாஹ்வின் படைப்புகளாகிய நல்லடியார்களிடத்தில் தங்களின் தேவைகளை கேட்கின்றார்கள் இது முற்றிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இணைவைப்பதற்கு கிடைக்கும் தண்டனையைப்பற்றி அதற்குரிய இடத்திலே கூறுகின்றேன்.

அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் துஆ கேட்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்:

அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காக இருக்கின்றன எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)

இன்னும் (2:186) (3:135) (27:62) போன்ற வசனங்களையும் பார்வையிடுக.

2. நேர்ச்சை செய்வது

நேர்ச்சையையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். இன்று முஸ்லிம்களில் அதிகமானோர் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் போதும் அந்த பிரச்சினையிலிருந்து தீர்வு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஏதோ ஒரு அவ்லியாவின் பெயரி்ல் நோ்ச்சை செய்து அதை நிறைவேற்றியும் விடுகின்றார்கள். இது மாபெரும் ஷிர்க்காகும். அல்லாஹ்வுக்கு மாத்திரமே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம்.

இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும் அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (2:265)

விளக்கம்:- நேர்ச்சை அல்லாஹ்வுக்குரிய வணக்கம் என்பதினால்தான் அதை அவன் நன்கறிந்து அதற்குரிய கூலியை கொடுப்பதாக கூறுகின்றான்.

இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். (76:7)

விளக்கம்:- அல்லாஹுத்தாஆலா முஃமின்களின் பண்புகளை கூறும் போது அவர்கள் செய்த நேர்ச்சையை அல்லாஹ்வின் பெயரி்ல் நிறைவேற்றுவார்கள் என்று கூறுகின்றான். ஆகவே நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

யார் அல்லாஹ்வுக்கு அடிபணிவதாக நேர்ச்சை செய்கின்றார்களோ அதை நிறைவேற்றட்டும் யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்கின்றார்களோ அதை நிறைவேற்றக்கூடாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

3. உதவி தேடுவது

நாம் உதவி தேடும் போதும் அல்லாஹ்விடத்தில் மாத்திரமே உதவி தேட வேண்டும். அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்; (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4)

நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள் இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்-விடத்திலேயே உதவியும் தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. சத்தியம் செய்வது

சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வெண்டும். அல்லாஹ்வின் எந்த படைப்பின் மீதும் சத்தியம் செய்யக்கூடாது. யார் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது உறுதியாக இணைவைத்து விட்டார் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5. குர்பானி கொடுப்பது

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என்று (நபியே) நீர் கூறுவீராக. (6:162)

ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியம் கொடுத்து அதை) அறுப்பீராக. (108:2)

அல்லாஹ் அல்லாத ஒன்றுக்காக யார் குர்பானி கொடுக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

6. ருகூஉ, சுஜுது

ருகூஉ என்பது தலை சாய்ப்பது, சுஜுது என்பது தலையை தரையில் வைப்பது. இவ்விரண்டையும் அல்லாஹ் அன்றி வேறு யாருக்கும் செய்யக்கூடாது. இன்று முஸ்லிம்களில் பலர் அரசியல் தலைவர்களுக்கும், பிள்ளைகள் தாய் தந்தைக்கும், மனைவி கணவனுக்கும் ருகூஉ சுஜுது செய்கின்றார்கள் இதுவும் ஷிர்க்காகும்.

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (குனிந்து) ருகூஉச் செய்யுங்கள் இன்னும் (சிரம்பணிந்து) சுஜுதும் செய்யுங்கள் இன்னும் உங்கள் இரட்சகனை வணங்குங்கள் மேலும் நீங்கள் வெற்றியடைவதற்காக நன்மையைச் செய்யுங்கள். (22:77)

7-தவாபு செய்தல்

(ஹஜ்ஜின் அடிப்படைக் கடமையான தவாபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் (தவாபு செய்ய) சுற்றி வரவும். (22:29)

மேலே கூறப்பட்ட வணக்கங்களைப்போல் இன்னும் குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கக்கூடிய எல்லா வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அவைகளில் எதையாவது அல்லாஹ்வின் படைப்புகளுக்கு செய்தால் அல்லாஹ்வுக்கு இணைவைத்த குற்றமாகவே கருதப்படும். அல்லாஹ் நம் அனைவரையும் அவனுக்கு இணைவைக்கும் குற்றத்திலிருந்தும் மற்ற எல்லா குற்றங்களிலிருந்தும் பாதுகாப்பானாக.


மூன்றாவது வகை

அல்லாஹ்வின் பெயர் மற்றும் அவனின் தன்மைகளில் அவனை ஒருமைப்படுத்துவது.

அதாவது அல்லாஹ்வுக்குரிய திருநாமங்கள் இன்னும் அவனுக்குரிய தன்மைகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் எப்படி கூறப்பட்டிருக்கின்றதோ அதை அப்படியே (மறுக்காமல்‌, மாற்றாமல்‌, உருவகப்படுத்தாமல்‌, ஒப்பாக்காமல்‌ அப்படியே உறுதிப்படுத்தி‌) நம்ப வேண்டும் அதை கூட்டவோ குறைக்கவோ கூடாது அல்லாஹ்வின் தன்மைகள் மற்றும் அவனின் பெயருக்கு இணையாக அல்லாஹ்வின் எந்தப்படைப்பையும் ஆக்கக்கூடாது. உதாரணமாக அல்லாஹ் மறைவானவற்றை அறியக்கூடியவன்; அத்தன்மையை அல்லாஹ்வின் எந்தப்டைப்புக்கும் கொடுக்கக்கூடாது. அல்லாஹ்வைத்தவிர மறைவானவற்றை யாரும் அறிய முடியாது என்றும் உள்ளத்தில் உள்ளவைகளை அறியக்கூடியவன் என்றும், கண் சாடைகளைக்கூட அறியக்கூடியவன் என்றும் இப்படி மறைவானவற்றை அறிவது அது எனக்குரிய பண்பாக அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அல்லாஹ்வுக்குரிய பண்புகள் இன்னும் அவனுக்குரிய பெயர்களை அவனுக்கே சொந்தமாக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் மாத்திரம் இல்லை அதைவிட அதிகமாக இருக்கின்றது குர்ஆன் ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய பெயர்களைத்தவிர வேறு பெயர்களும் உண்டு அவைகளை அவனுடைய படைப்புகளில் யாருக்கு அறிவித்து கொடுத்தானோ அவர்களைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. மேலே வரும் ஹதீத் அதை தெளிவு படுத்துகின்றது.

ஒரு நீளமான ஹதீதில் வந்துள்ளது:- உனக்கு நீ பெயர் வைத்துக்கொண்ட எல்லா பெயர்களின் உதவியாலும் அல்லது உன் படைப்புகளில் யாருக்காவது நீ கற்றுக்கொடுத்த பெயர்களின் உதவியாலும் அல்லது நீ உன் வேதத்தில் இறைக்கிவைத்த பெயர்கள் அல்லது மறைவான உன் அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயரின் உதவியாலும் நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆதாரம்:- (அஹ்மத்)

இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்வது:- அல்லாஹ்வுக்கு குறிப்பிட்ட பெயர்கள்தான் இருக்குமென்று சொல்ல முடியாது நாம் தெரிந்திருக்கும் பெயர்கள் அல்லாது இன்னும் பல பெயா்கள் அல்லாஹ்வுக்கு உண்டு அவைகளை அப்படியே நம்ப வேண்டும் அவைகளை எந்த கூட்டுதல் குறைத்தல் இன்றி அப்படியே நம்ப வேண்டும் இதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாகும்.

இன்னும் அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன ஆகவே அவற்றைக்கொண்டே நீங்கள் அழையுங்கள் அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுவோரை விட்டுவிடுங்கள் அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள். (7:180)

இதே போல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் கூறப்பட்ட பல பண்புகள் இருக்கின்றன. அவைகளையும் எந்த கூட்டுதல் குறைத்தல் இன்றி நம்ப வேண்டும்.

அல்லாஹ்வின் பெயருக்கு சில உதாரணங்கள்:- சக்தியுள்ளவன், அறிவுள்ளவன், இரக்கமுள்ளவன், உணவளிப்பவன், பாவங்களை மன்னிப்பவன், இப்படி இன்னும் பல பெயர்கள்.

அல்லாஹ்வின் பண்புகளுக்கு உதாரணம்:- சக்தி அறிவு இரக்கம் மன்னித்தல் இன்னும் இது போன்றவைகள்.


ஷிர்க்

ஷிர்க் என்றால் இணைவைத்தல் அதாவது அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றை ஆக்குவது அதாவது மேலே கூறப்பட்ட அல்லது அது போன்ற அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்த வேண்டுமென்று குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட வணக்கங்களின் ஒன்றை அவனின் படைப்புகளுக்கு செலுத்துவது இதற்கு ஷிர்க் என்று சொல்லப்படும். தஃஹீதின் வகைகளில் எந்த வகையில் அல்லாஹ்வுக்கு நிகரை ஏற்படுத்தினாலும் அது ஷிர்க்குதான் ஆனால் வணக்க விஷயத்தில்தான் அதிகமாக இணைவைத்தல் ஏற்படுகின்றது. உதாரணமாக பிரார்த்தனை செய்வது. முஸ்லீம்களில் அதிகமானோர் அல்லாஹ்வின் படைப்புகளிடத்தில் பிரார்த்தனை செய்வதை சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம். பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மட்டுமே செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் அல்லாஹ்வின் எந்தப்படைப்பினத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்த குற்றமாகவே கருதப்படும். இது அல்லாஹ்விடத்தில் மாபெரும் குற்றமாகும். ஒருவர் ஷிர்க் வைத்த நிலையில் மரணித்தால் அல்லாஹ் அவரின் குற்றத்தை மன்னிப்பதே இல்லை. அவருக்கு நிரந்தர நரகம்தான். அல்லாஹ் நம் அனைவரையும் அப்படிப்பட்ட குற்றத்திலிருந்து பாதுகாப்பானாக.


இணை வைத்தலுக்கு கிடைக்கும் தண்டனை

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே) மாட்டான் இதனைத்தவிர (மற்ற)தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார். (4:48)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே) மாட்டான் இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். இன்னும் எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார். (4:116)

நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றாரோ அவர்மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான். இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் இல்லை. (5:72)

இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்பற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப்போன்றோ அல்லது (பெருங்காற்று) அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொன்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (22:31)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் என்னுடைய இரட்சகனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கக்கூடியதாய் நீ ஆக்கிவைப்பாயாக! மேலும் என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக! என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) (14:35)

(நபியே!) நீர் கூறுவீராக அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாததை நான் வணங்க வேண்டுமென்று நிச்சயமாக என்னை நீங்கள் ஏவுகின்றீர்களா? (நபியே!) நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. (39:64,65)

யார் கொஞ்சமாவது அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணிக்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் அல்லாஹ்வை சந்திக்கின்றாரோ அவர் சுவர்க்கம் புகுவார் யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் அல்லாஹ்வை சந்திக்கின்றாரோ அவர் நரகம் புகுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


வளையம் கயிறு மற்றும் அவை போன்றவைகளை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல் தடுத்துக் கொள்வதற்கும் அணிந்து கொள்வது ஷிர்க்கை சேர்ந்ததாகும்

(நபியே! அவர்களிடம்) அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக்கூடியவையா? அல்லது எனக்கு ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை என்னை (வந்தடையாமல்) தடுத்து விடக்கூடியவையா? என்று நீர் கேட்பீராக! அல்லாஹ்வே எனக்கு போதுமானவன் (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்று நீர் கூறுவீராக. (39:38)

நபி (ஸல்) அவர்கள் ஒர் ஆடவரை அவருடைய கையில் செம்பினாலான வளையம் இருக்கக் கண்டார்கள் அப்போதவர்கள் இது என்ன? எனக் கேட்டார்கள். அ(தற்க)வர் வாஹினாவின் காரணமாக (அணிந்துள்ளேன்) எனக்கூறினார். நீர் இதனைக்கழற்றி விடுவீராக! காரணம் நிச்சயமாக அது உமக்கு பலவீனத்தை தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தாது. மேலும் அது உம்மீது இருக்கும் போது நீர் மரணித்து விட்டால் நிச்சயமாக நீர் எப்போதும் வெற்றி பெறமாட்டீர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

எவர் (தனது காரியம் நிறைவேறுவதற்காக) தாயத்தை தொங்க விடுகின்றாரோ அவருடைய நோக்கத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். இன்னும் எவர் சிப்பியை தொங்க விடுவாரோ அவருக்கு அல்லாஹ் சுகத்தை கொடுக்கமாட்டான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம், அபூயஃலா)

எவர் தாயத்தை தொங்க விடுவாரோ அவர் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை அவருடைய கையில் காய்ச்சலின் காரணமாக ஒரு கயிறு இருக்கக் கண்டார்கள். உடனே அதை அவர்கள் துண்டித்து விட்டார்கள். மேலும் அவர்களில் பெரும்பாலோர் அவர்கள் இணை வைக்கின்றவர்களாகவே தவிர அல்லாஹ்வை விசுவாசிப்பதில்லை (12:106) என்ற அல்லாஹ்வினுடைய வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். (இப்னு அபீஹாதம்)


மந்திரித்தல் மற்றும் தாயத்து அணிதல் பற்றிய விளக்கம்

நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் நான் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தூதுவரை அனுப்பி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்பட்டு) உள்ள வில் கயிற்றினாலான மாலையை அல்லது (வில் கயிற்றினாலான மாலையென குறிப்பிடாது பொதுவான) எந்த மாலையையும் துண்டிக்காமல் நீர் விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்கு கூறியதாக அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

(ஷிர்க்கான வார்த்தைகளைக் கூறி) மந்திரித்தல் தாயத்துகள் (ஏலஸ்கள் கட்டுதல். தாவீசுகள்) திவலாக்கள் ஆகிய அனைத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

தமாயிம் - தாயத்துகள் கண்திருஷ்டிக்காகக் சிறார்கள் மீது தொங்க விடப்படும் ஒன்றாகும். எனினும் அவ்வாறு தொங்கவிடப்படுவது குர்ஆனில் உள்ளவைகளாக இருந்தால் முன் சென்ற இஸ்லாமியப் பெரியார்களில் சிலர் அதிலே அனுமதி கொடுத்துள்ளனர். மற்றும் அவர்களில் சிலர் அதற்கும் அனுமதி தரவில்லை. அதை தடை செய்யப்பட்டவைகளில் ஒன்றாக ஆக்கி விட்டனர். இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களும் அ(வ்வாறு கூறுப)வர்களில் உள்ளவர்களாவர்.

ஆனால் (ருகா) மந்திரித்தலோ ஷிர்க்கான வார்த்தைகளிலிருந்து உள்ளவற்றை தவிர அது (எவ்வித கருத்து வேறுபாடுமின்றி) ஆதார அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கண் திருஷ்டிக்காகவும் விஷக்கடிக்காகவும் மந்திரிக்க அனுமதி அளித்துள்ளனர்.

திவலா - என்பது பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தாங்களிடம் நேசங்காட்டுபவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக செய்து கொள்ளும் ஒன்றாகும்.

எவர் எதையாகிலும் (கழுத்து மற்றும் அதுவல்லாத இடங்களில்) தொங்க விடுவாரோ அவர் அதனளவிலேயே சாட்டப்படுவார். (அஹ்மத், திர்மிதி)

ருவைஃபிஉ என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்: ருவைஃபிஉவே! உமக்கு வாழ்நாள் நீளமாகலாம் (அப்படி நீளமானால்) யார் தனது தாடியில் முடிச்சுப் போட்டாரோ அல்லது (நோய் நீங்க) வில்லுக்கயிற்றை (தன் கழுத்திலோ அல்லது தனது வாகனத்தின் கழுத்திலோ) மாலையாக மாட்டிக்கொண்டாரோ அல்லது சிறுநீரை கால் நடைகளின் விட்டையால் அல்லது எலும்பால் சிறுநீர் துப்பரவு செய்வாரோ நிச்சயமாக முஹம்மது அவாரிலிருந்து நீங்கிக் கொண்டார் என மக்களுக்கு நீர் அறிவித்து விடுவீராக. (அஹ்மத்)

எவர் வேறொரு மனிதாரிடமிருந்து தாயத்தை துண்டிக்கின்றாரோ அவர் ஒரு அடிமையை உரிமையிட்டதற்கு சமம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தாயத்துகள் குர்ஆன் வசனங்கள் மூலமாக எழுதப்பட்டாலும் சரி அல்லது வேறு வார்த்தைகள் மூலமாக எழுதப்பட்டாலும் சரி அனைத்தையும் ஸஹாபாக்கள் வெறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என இப்றாஹீம் அந்நகயீ (ரஹ்) அவர்கள் மூலமாக வகீஃ (ரஹ்) அறிவிக்கிறார்கள்.


மரம் அல்லது கல் மற்றும் அவை போன்றவற்றைக் கொண்டு பரக்கத்து தேடுவது ஹராமாகும்

நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றொன்றாகிய மூன்றாவதான மனாத்(தெனும் பெண் விக்ரகத்)தையும் (நீங்கள் கண்டீர்களா?) உங்களுக்கு ஆண்(மக்)கள் இன்னும் (அல்லாஹ்வாகிய) அவனுக்குப் பெண்(மக்)களா? அவ்வாறாயின் அது மிக்க அநியாயமான பங்கீடாகும். இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களே தவிர இல்லை அ(வை தெய்வங்களென்ப)தற்காக அல்லாஹ் (உங்களுக்கு) யாதொரு சான்றையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கி வைக்கவில்லை. அவர்கள் வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புவனவற்றையும் தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை நிச்சயமாக அவர்கள் இரட்சகனிடமிருந்து அவர்களுக்கு நேர்வழி வந்து விட்டது. (ஆனால் அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை). (53:19.23)

அபூவாக்கிதி அல்லைஸிய்யி (ரலி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருந்தோம். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். (அங்கு) இணைவைப்போருக்கு ஒரு இலந்தை மரம் இருக்கிறது. அவர்கள் அங்கே தங்கி (இஃதிகாஃப்) இருக்கிறார்கள் மேலும் அதில் தங்களுடைய போர்ச்சாதனங்களை (பரகத்தை நாடி) தொங்க விடுவார்கள்.'தாத்து அன்வாத்து” என அதற்கு கூறப்படும். நாங்கள் அந்த இலந்தை மரத்தின் பால் நடந்து சென்றோம். அப்போது நாங்கள் '' அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களுக்குரிய 'தாத்து அன்வாத்” போன்று எங்களுக்கும் தாத்து அன்வாத்தை ஏற்படுத்துங்கள்”” என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் '' அல்லாஹு அக்பர்”” நிச்சயமாக இவைகள்தான் (அறியாமை காலத்தவர்களின் செயல்கள் மற்றும்) வழிமுறைகளாகும். என்னுடைய உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன்மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடம் பனீ இஸ்ராயீல்கள் கூறியதைப் போன்று கூறிவிட்டீர்கள். (அதாவது) மூஸாவே! அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக! (என்று அவர்கள் கூற) அ(தற்கு மூஸா நபிய)வர்கள் நிச்சயமாக நீங்கள் அறியாதவர்களான ஓர் கூட்டத்தினராவீர்கள் என்று கூறினார்கள். (இது போன்றே நீங்களும் கூறிவிட்டீர்கள்) திண்ணமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழி முறைகளை பின்பற்றுவீர்கள் என்று கூறினார்கள். (திர்மிதி)


அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்து பலியிடுவது ஹராமாகும்

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவனுக்கு யாதொரு இணையுமில்லை (துணையுமில்லை) இதைக்கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். இன்னும் (அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்)நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக!) (6:162,163)

ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுக்க அதை) அறுப்பீராக. (108:2)

ஹதீஸ்கள்:-

அலி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களை அறிவித்தார்கள்; அல்லாஹ் அல்லாத (மற்ற)வருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்துவிட்டான். தன் பெற்றோரை சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். குற்றவாளிக்கு அபயம் அளிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். நில அடையாளக் கல்லை (தனக்குச் சாதகமாக) மாற்றி அமைத்தவனையும் அல்லாஹ் சபித்து விட்டான்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஓர் ஆடவர் ஒரு ஈயின் காரணமாக சுவர்க்கம் புகுந்தார், மேலும் ஓர் ஆடவர் ஈயின் காரணமாக நரகம் புகுந்தார் என்று கூறினார்கள். (அப்போது நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எவ்வாறு எனக் கேட்டார்கள். இரு ஆடவர்கள் ஒரு கூட்டத்தாரை கடந்து சென்றனர்; அவர்களுக்கு ஒரு சிலை இருந்தது. (அங்கேயிருந்த சிலையைக் கடந்து செல்பவர் எவராக இருந்தாலும்) எதையாவது அதற்கு அறுத்துப் பலியிடாதவரை அதை கடந்து செல்ல முடியாது. எனவே அவ்விருவரில் ஒருவரிடம் (எதையாவது இதற்கு) பலியிடுவீராக என்று அ(ங்குள்ள)வர்கள் கூறினார்கள். நான் பலியிடுவதற்கு என்னிடத்தில் எதுவுமில்லையே என அவர் கூறினார். அ(தற்க)வர்கள் ஒரு ஈயாக இருந்தாலும் சரியே (பிடித்து அதற்கு) பலியிடுவீராக என்று அவருக்குக் கூறினார்கள். ஆகவே அவர் ஒரு ஈயை பலியிட்டார். அப்போது அவருக்கு வழி கொடுத்தனர்; இதனால் அவர் நரகம் புகுந்தார். மேலும் மற்றவரிடமும் நீர் பலிகொடுப்பீராக! என்று அவர்கள் கூறினார்கள் அ(தற்)வரோ நான் அல்லாஹ்வை விடுத்து வேறு எவருக்கும் எதையும் பலியிடுவதற்காக நான் இருக்கவில்லை என்று கூறினார். (இவ்வாறு அவர் கூறியதும்) அப்போது அவரை அவர்கள் கொலை செய்து விட்டனா். இதனால் அவர் சுவர்க்கம் புகுந்தார். அறிவிப்பாளா்: தாரிக் இப்னு ஷிஹாப் (அஹ்மத்).

படிப்பினைகள்:

1. அல்லாஹ் அல்லாதவருக்கு பலியிடுபவரை அல்லாஹ் சபித்துள்ளான்.

2. பெற்றோர்களை சபிக்கிறவர் அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளாவார்.

3. அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட தண்டனைக்குள்ளான குற்றவாளிக்கு அபயம் கொடுத்தவரை அல்லாஹ் சபித்துள்ளான்.

4. தனக்கு சாதகமாக நில அடையாளக்கல்லை மாற்றி அமைப்பவரை அல்லாஹ் சபித்துள்ளான்.

5. குறிப்பாக ஒருவரை சபிப்பதற்கும் பொதுவான முறையில் பாவம் செய்பவர்களை சபிப்பதற்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு.

6. ஈ தொடர்பான நிகழ்ச்சியே இதில் முக்கியமான அம்சமாகும்.

7. ஈயின் மூலமாக நரகம் புகுந்தவர் அவ்வாறு பலியிடுவதற்குக் காரணம் அந்த மக்களின் தீங்கை விட்டும் தப்பிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு பலியிட நாடவில்லை என்ற உண்மையை அறிந்து கொள்வது.

8. விசுவாசிகளின் உள்ளங்களில் ஷிர்க்கின் அளவை அறிந்து கொள்வது. மேலும் ஈயை பலியிடாதவரிடமிருந்து அந்த மக்கள் வெளிப்படையான அமலைத்தான் நாடினார்கள். இருந்தும் அவர் அவ்வாறு செய்யாது அவர்கள் கொலை செய்யும் வரை எவ்வாறு பொறுமையாக (உறுதியான ஈமானுடன்) இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது.

9. நரகம் புகுந்தவர் முஸ்லிமானவரே! காரணம் காஃபிராக இருந்தால் ஈ உடைய விஷயத்தில் நரகம் புகுந்தார் என சொல்லத் தேவையில்லை.

10. சொர்க்கம் உங்கள் பாத அணியின் வாரை விட பக்கத்தில் உள்ளது. அது போலவே நரகமும் என்ற ஹதிஸூக்கு இந்த ஹதிஸ் ஒரு ஆதாரமாக இருக்கிறது.

11. உள்ளத்தின் செயல்தான் மிக முக்கியமானது என்பதை அறிந்து கொள்வது.


அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பலியிடுமிடத்தில் அல்லாஹ்வுக்கு குர்பானி (பலி) கொடுக்கக் கூடாது.

(நபியே) நீர் ஒரு போதும் அதில் (தொழுவதற்காக) நிற்க வேண்டாம் ஆரம்ப நாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது - அதில்தான் நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது. பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர் அல்லாஹ்வும் பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9:108)

ஹதீஸ்:-

ஓர் ஆடவர் 'புவானா” எனுமிடத்தில் ஒட்டகத்தை குர்பானி செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆகவே (அதுபற்றி) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கேட்டார்; அ(தற்க)வர்கள் 'அறியாமைக் காலத்தவரின் சிலைகளில் எந்த சிலையாவது அங்கு வணங்கப்படுவதாக இருந்ததா?” என கேட்டார்கள். அ(தற்கு நபித் தோழர்களான அ)வர்கள் இல்லை! என்று கூறினார்கள் (அறியாமை காலத்தவரான) அவர்களின் (கந்தூரி) விழாக்களில் எந்த விழா கொண்டாட்டமாவது அங்கு இருந்ததா? என (நபி) அவர்கள் வினவினார்கள். அ(தற்க)வர்கள் இல்லை! என்று கூறினார்கள் (அவ்வாறெனில் அங்கு) உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு பாவமான காரியத்தில் உள்ள நேர்ச்கைக்கும் ஆதமுடைய மகனுக்கு உடமையில்லாத ஒன்றிலும் (உள்ள நேர்ச்கைக்கும்) நிறை வேற்றுதல் (கடமை) என்பதில்லை. அறிவிப்பாளா;: ஸாபித் பின் ளஹ்ஹாக் - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: அபூதாவூத்

படிப்பினைகள்:-

1. ஓரிடத்தில் பாவம் செய்வதினால் அந்த இடம் பாவம் படிந்த பூமியாக மாறிவிடுகிறது. அவ்வாறே நல்லது செய்வதினால் அந்த பூமியும் நல்ல இடமாக மாறி விடுகிறது. (இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சிலை வழிபாடு நடந்த இடத்திலும் மக்கள் திருவிழா கந்தூரி கொண்டாடுமிடத்திலும் நேர்ச்சையை நிறைவேற்ற தடை விதித்தார்கள்)

2. விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான விஷயத்தை விளங்கிக்கொள்ள தெளிவான விஷயத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

3. அவ்வாறு சிக்கலான விஷயத்தைப்பற்றி ஒரு ஆலிமிடம் விளக்கம் கேட்கப்படும் சமயத்தில் தேவைப்பட்டால் அவர் அதுபற்றிய முழு விபரத்தை கேட்டு விசாரித்துக் கொள்வார்.

4. புவானா என்ற இடம் சிலை வழிபாடு செய்யப்பட்டு வந்த இடமாக இருந்திருந்தால் அங்கு நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது.

5. அது போலவே மக்கள் எல்லோரும் ஒன்று கூடி விழா (கந்தூரி) கொண்டாடும் இடமாக இருந்திருந்தாலும் அங்கும் நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது.

6. இவ்வாறான இடங்களில் நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது. காரணம் இது பாவமான நேர்ச்சையாகும்.

7. விழா (கந்தூரி) கொண்டாட்டங்களில் மாற்று மதத்தவருக்கு ஒப்பாக இருக்கக் கூடாது.

8. பாவமான காரியங்களில் நேர்ச்சை செய்வது கூடாது.

9. நம்மால் நிறைவேற்ற இயலாத காரியங்களில் நேர்ச்சை செய்வது கூடாது.



அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் திருவசனங்கள்:-

அவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறை வேற்றுவார்கள் இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள். அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும் (76:7)

(நன்மைக்காக) செலவு வகையிரிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அல்லது நேர்ச்சையிலிருந்து நீங்கள் எதை நேர்ச்சை செய்த போதிலும் அதை அல்லாஹ் நன்கறிவான். (2:270)

ஹதீஸ்:-

அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர் (அதை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடுவாராக! அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதை நிறை வேற்றி) அவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹு. நூல்கள்: புகாரீ அஹ்மது நஸயீ திர்மிதீ இப்னுமாஜா

படிப்பினைகள்:-

1. நேர்ந்த நேர்ச்சையை நிறைவேற்றுவது கடமையாகும்.

2. நேர்ச்சை செய்வது வணக்கமாகும். அதை அல்லாஹ்வுக்கன்றி மற்றவர்களுக்கு செய்வது ஷிர்க்கான காரியமாகும்.

3. பாவமான காரியத்தில் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது.



அல்லாஹ்வை விடுத்து மற்றவரிடத்தில் பாதுகாவல் தேடுவது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

உயார்வானவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று:-

இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் சிலர் ஜின்களிலுள்ள ஆண்கள் சிலரிடம் (தங்களைக்) காக்கத் தேடுபவர்களாக இருந்தனர். இதனால் அவர்கள் அவர்களுக்கு கர்வத்தை அதிகமாக்கி விட்டார்கள். (72:6)

ஹதீஸ்:-

எவர் ஒரு இடத்தில் இறங்கிஇ பின்னர் 'அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மாகலக்” (நிறைவான அல்லாஹ்வுடைய வார்த்தைகளைக் கொண்டு அவனின் படைப்பினங்களின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்) எனக் கூறுவாரோ அவருடைய அந்த இடத்திலிருந்து அவர் கிளம்பிப் போகும் வரை எதுவும் அவருக்கு தீங்கிழைக்காது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பாளர்: கவ்லா பின்த்து ஹகீம் நூல்: முஸ்லிம்.

படிப்பினைகள்:-

1. அல்லாஹ் அல்லாதவரிடத்தில் பாதுகாவல் தேடுவது ஷிர்க்காகும்.

2. மேலே சொல்லப்பட்ட நபிமொழி இதற்கு சான்றாக அமைகிறது.

3. இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் நிறைவான வாக்குகள் படைக்கப்பட்டவற்றைச் சேர்ந்தவையல்ல. அதனால் அவற்றைக் கொண்டு பாதுகாவல் தேடுவது கூடும். ஆனால் படைக்கப்பட்டவற்றைக் கொண்டு பாதுகாவல் தேடுவது கூடாது. இது ஷிர்க்காகும்.

4. சுருக்கமாக அமைந்திருப்பதுடன் இந்த துஆவின் தனிச் சிறப்பு.


அல்லாஹ் அல்லாதவரைக் கொண்டு இரட்சிக்கத் தேடுவதும் அல்லது அவனல்லாதவரை அழைப்பதும் ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் திருவசனங்கள்:-

இன்னும் (நபியே!) அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம் அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே நீரும் அநியாயக்காரர்களில் (உள்ளவராக) ஆகிவிடுவீர்.

அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு எவரும்) இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் (எவரும்) இல்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ளுமாறு செய்கிறான். அவனோ மிக்க மன்னிப்போன் மிகக் கிருபையுடையோன்.

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றீர்களே அத்தகையோர் உணவளிக்க சக்திபெற மாட்டார்கள் ஆகவே (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ் இடமே தேடுங்கள் அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள் அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள் அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (29:17)

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழி கெட்டவன் யார்? அவர்களோ இவர்களுடைய அழைப்பைப்பற்றி மறந்தவர்களாக உள்ளனர் மேலும் மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால் (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர் இவர்கள் வணங்கிக்கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவர். (46:5,6)

(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா) அல்லது கடுந்துன்பத்திற்குள்ளாக்கப்-பட்டவனுக்கு - அவனை இவன் அழைத்தால் - (அவனுக்குப்) பதிலளித்து மேலும் (அவனுடைய) அத்துன்பத்தை நீக்கி பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவ(ன் சிறந்தவ)னா? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கிறானா? (27:62)

ஹதீஸ்:-

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஒரு நயவஞ்சகன் விசுவாசிகளை துன்புறுத்துபவனாக இருந்தான். அப்போது (நபித்தோழர்களான) அவர்களில் சிலர் சிலரை நோக்கி எங்களுடன் வாருங்கள்! இந்த நயவஞ்சகனி(ன் தீமையி)லிருந்து அல்லாஹ்வின் தூதரிடம் இரட்சிக்கத் தேடுவோம் எனக் கூறினார்கள். (இதைச் செவியுற்ற) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் இரட்சிப்புக் கோரலாகாது இரட்சிப்புத் தேடப்படுவதெல்லாம் அல்லாஹ்வைக் கொண்டு தான் எனக் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)

படிப்பினைகள்:-

1. அல்லாஹ்வையன்றி மற்றவர்களை உதவிக்காக அழைப்பது பெரிய ஷிர்க்காகும் என்ற உண்மையை (10:106) என்ற மேற்கண்ட வசனம் விவரிக்கின்றது.

2.ஒரு நல்ல மனிதர் மற்றவர்களின் திருப்திக்காக அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பாராயின் அவர் அக்கிரமக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவார்.

3. ஒருவருக்கு அல்லாஹ் ஒரு தீங்கை நாடினால் அதை அவன்தான் நீக்க முடியுமேயன்றி வேறெவராலும் முடியாது. அதற்காக வேறொருவரை அழைப்பது எந்தப்பயனையும் தராது. மாறாக அது குப்ஃரான செயலாகி விடும் என்ற விளக்கத்தைத்தான் (10:107) என்ற வசனம் தெளிவுபடுத்துகிறது.

4. ஆகாரத்தை அல்லாஹ்விடமே கோர வேண்டும். அவ்வாறே சொர்க்கத்தையும் அவனிடமே கோரவேண்டும்.

5. அல்லாஹ்வையன்றி மற்றவர்களை அழைப்பவனை விட வழிகெட்டவன் யாருமில்லை.

6. அவ்விதமே மற்றவர்களை அழைத்தாலும் அவர்கள் இவர்களின் அழைப்பை அறியக் கூடமாட்டார்கள்.

7. இப்படி அழைப்பது அழைக்கப்படுபவரை வணங்கப்படுபவராகக் கணிக்கப்படும்.

8. அழைக்கப்படுபவர் அழைப்பு எனும் இவ்வணக்கத்தை மறுத்து விடுவார்.

9. மேற்கூறப்பட்ட செயல் மனிதனை வழிகெடுத்து விடும். இந்த விளக்கத்தைத்தான் மேற்கண்ட 46:5,6 வசனங்கள் தெளிவு செய்கின்றன.

10. ஆச்சரியப்படத்தக்க விஷயம் யாதெனில் கஷ்டமான காலத்தில் கஷ்டத்தை நீக்க அல்லாஹ் ஒருவனால்தான் முடியும் என இணைவைத்துக் கொண்டிருந்தோரும் விளங்கியிருந்தனர். அதனால் கஷ்டகாலத்தில் கஷ்டத்தை நீக்க அல்லாஹ்வையே அவர்கள் அழைத்து வந்தனர்.

(ஆனால் இக்கால முஸ்லிம்களோ கஷ்ட காலத்திலும் அல்லாஹ்வை விட்டுவிட்டு நபிமார்களிடமும் அவ்லியாக்களிடமும் சென்று கஷ்டத்தை நீக்க வேண்டுகின்றனர். அவ்வாறே கஷ்டத்தை நீக்க ஷிர்க்கான நேர்ச்சை போன்ற பல காரியங்களை செய்கின்றனர். இவ்வாறே முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். கஷ்டகாலத்தில் அல்லாஹ் ஒருவன்தான் கஷ்டத்தை நீக்கி வைப்பான் என்ற உண்மையை மனதில் கொண்டு அவனையே அழைக்க வேண்டும்)

11. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தவ்ஹீத் (ஏகத்துவத்)திற்கு தக்க பாதுகாப்பு அளித்துள்ளார்கள்.


ஷஃபாஅத் (பரிந்துரைத்தல்)

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் கூற்றுகள்:-

இன்னும்இ (நபியே! மறுமையில்) தங்கள் இரட்சகனிடம் (விசாரணைக்காக) ஒன்று திரட்டப்படுவதை பயப்படுகிறார்களே அத்தகையோரை - (குர்ஆனாகிய) அதைக் கொண்டு அவர்கள் பயபக்தியுடையோராக ஆவதற்கு - நீர் எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) பாதுகாப்பளிப்பவரோ பரிந்து பேசுபவரோ அவனையன்றி(வேறெவரும்)இல்லை. (6:51)

(நபியே!) நீர் கூறுவீராக: பரிந்துரைகள் யாவும் அல்லாஹ்வுக்கேச் சொந்தமானது.(39:44)

அன்றியும் வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கிறார்கள் அல்லாஹ் தான் நாடியோருக்கு அனுமதியளித்து அவன் திருப்தியும் கொண்டதன் பின்னரே தவிர அவர்களின் பரிந்துரை (எவருக்காகவும்) யாதொரு பயனுமளிக்காது. (53:26)

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வையன்றி நீங்கள் (கடவுள்களெனத் தவறான) எண்ணங் கொள்கிறீர்களே அத்தகையோரை நீங்கள் அழைத்துப் பாருங்கள் வானங்களிலோ பூமியிலோ அவர்கள் ஓர் அணுவளவையும் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எத்தகைய கூட்டுமில்லை (இவற்றில்) அவனுக்கு உதவியாளரும் அவர்களில் யாருமில்லை. இன்னும் யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் பரிந்துரை பயனளிக்காது. (34:22,23)

அபுல் அப்பாஸ் (இப்னு தைமிய்யா) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: (அல்லாஹ்வுக்கே உரிய செயல்களிலிருந்து) இணை வைக்கின்றவர்கள் (மற்றவர்களிடம்) நம்பிக்கை வைத்திருந்த ஒவ்வொன்றையும் எதிலும் சொந்த அதிகாரமோ அல்லது அதிலொரு பங்கோ அல்லது அல்லாஹ்வுக்கு அவர் உதவியாளராக இருப்பது கூட இல்லை என அறிவித்து விட்டான் - தவிர (இதில் மற்றவர்களுக்கு உரிமை கொடுத்துள்ளான்) நிச்சயமாக (ஷஃபாஅத்தான) அது அவன் பொருந்திக் கொண்டவரைத் தவிர (மற்றெவருக்கும்) இவர்கள் பரிந்துரை செய்யவுமாட்டார்கள் (21:28) என அவன் கூறியிருப்பது போன்று இரட்சகன் விரும்பி அனுமதியளித்தவருக்கே தவிர பயன் அளிக்காது என்பதை விவரித்துக் கூறிவிட்டான். ஆகவே முஷ்ரிக்குகள் எண்ணிக் கொண்டிருக்கும் ஷஃபாஅத்தானது குர்ஆனும் அதை இல்லையென சொல்லியது போன்று கியாமத் நாளில் இல்லாத ஒன்றாகும்.

மேலும் (கியாமத் நாளில் நடக்கும் ஷஃபாஅத்தைப் பற்றி) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக அவர்கள் வருவார்கள் தனது இரட்சகனுக்கு சிரம் பணிந்து அவனைப் போற்றி புகழ்வார்கள் முதன்முதலாக பரிந்துரைப்பதைக் கொண்டு ஆரம்பிக்கமட்டார்கள். பின்னர் 'உம்முடைய தலையை உயர்த்துவீராக! சொல்லுங்கள்! அது செவியேற்கப்படும்! நீங்கள் கேளுங்கள்! அது கொடுக்கப்படுவீர்கள்! சிபாரிசு செய்யுங்கள்! உங்களது சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும!” என அவர்களுக்கு கூறப்படும்.

(இதைக் கேட்டுக் கொண்டிருந்த) அபூஹூரைரா - ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் (அல்லாஹ்வின் தூதரே!) மனிதர்களில் உங்களுடைய ஷஃபாஅத்திற்கு மிக உரிய பாக்கியசாலி யார்? எனக் கோட்டார்கள். அ(தற்க)வர்கள் எவர் தன் இதயத்திலிருந்து தூய்மையாக 'லாயிலாஹ இல்லல்லாஹூ” எனும் கலிமாவை மொழிந்தாரோ அவராவார் எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி இந்த ஷஃபாஅத்து இக்லாஸ் எனும் தூய்மையான எண்ணமுள்ளோருக்கும் ஏகத்துவக் கொள்கை உடையவர்களுக்குமே சொந்தமாகும்.

ஷஃபாஅத்தின் உண்மை என்னவெனில் நிச்சயமாக அல்லாஹ் ஷஃபாஅத்துச் செய்ய யாருக்கு அனுமதி கொடுக்கின்றானோ அவருடைய துஆவின் வாயிலாக - அவர் கண்ணியப்படுத்தப்படுவதற்காகவும் (அல்மகாமுல் மஹ்மூது எனும்) புகழ்பெற்ற இடத்தை அவர் அடைவதற்காகவும் - தூய்மையாளர்கள் மீது பேருபகாரம் செய்து பாவங்களை அவர்களுக்கு மன்னிக்கின்றான்.

குர்ஆன் எந்த ஷஃபாஅத்தை இல்லையெனக் கூறுகிறதோ அது ஷிர்க் இடம் பெற்ற ஷஃபாஅத்தாகும்.

அல்லாஹ்வின் உத்தரவு பெற்று செய்யப்படும் ஷஃபாஅத்துக்களைப் பல இடங்களில் நிருபனப்படுத்தி உள்ளான். நிச்சயமாக இது தவ்ஹீத் எனும் ஏகத்துவக் கொள்கை உடையவர்க்கும் இக்லாஸ் எனும் உளத் தூய்மை உடையவர்க்கும் கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள். இத்துடன் இஸ்லாமியப் பெரியார் இப்னு தைமிய்யா அவர்களின் கூற்று முடிவுற்றது.

படிப்பினைகள்:-

1. நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கியாமத் நாளில் ஷஃபாஅத் செய்யும் முறையை அறிதல்.

2. நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்தவர்களாக இருப்பார்கள். உத்தரவு வந்த பின்னரே ஷஃபாஅத் செய்யத் தொடங்குவார்கள்.

3. அவர்களின் ஷஃபாஅத்திற்கு உரித்தானவர்கள் யார்? என்பதை அறிதல்.

4. அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அதற்கு தகுதியற்றவன்.

5. ஷஃபாஅத்தின் உண்மை விளக்கத்தை விளங்குதல்



அல்லாமா இப்னுல் கைய்யிம் அவர்கள் கூறுகிறார்கள்:

மறுமை நாளில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யும் ஷஃபாஅத்துகள் ஆறு வகைப்படும்.

1. 'பெரிய ஷஃபாஅத்” இது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதாவது மஹ்ஷர் மைதானத்தில் மற்றெல்லா நபிமார்களும் மக்களுக்கு ஷஃபாஅத் செய்வதிலிருந்து பின்வாங்கும் பொழுது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே ஷஃபாஅத் செய்ய முன் வருவார்கள்.

2. சொர்க்கத்திற்கு தகுதியுடையோரை அதில் பிரவேசிக்கச் செய்வதற்காக ஷஃபாஅத் செய்வது.

3. தமது உம்மத்தவரில் நரகத்திற்குத் தகுதியான பாவிகளை அதில் பிரவேசிக்கச் செய்யாதிருப்பதற்காக ஷஃபாஅத் செய்வது.

4 தங்கள் பாவத்தின் காரணமாக நரகம் புகுந்த ஏகத்துவக் கொள்கை உடையோருக்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யும் ஷஃபாஅத்.

5. சொர்க்கவாசிகளுக்கு மென்மேலும் உயர்வும் கூலியும் உபசரணைகளும் அதிகமதிகம் கிடைப்பதற்காக ஷஃபாஅத் செய்வது.

6. நரகில் வீழ்ந்த சில காஃபிர்களுக்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யும் ஷஃபாஅத். இந்த ஷஃபாஅத் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுக்கு மட்டுமே குறிப்பானது. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யும் இந்த ஷஃபாஅத்தின் மூலமாக அபூதாலிப் அவர்களின் வேதனை சற்று குறைக்கப்படும்.

ஒரு வசனத்தின் விளக்கம்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் திருவசனம்:-

(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர்வழியில் நீர் செலுத்திவிடமாட்டீர் எனினும் அல்லாஹ் அவன் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான் மேலும் நேர்வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தான். (28:56)

ஹதிஸ்:

(நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் வந்தார்கள். அவரிடத்தில் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவும் அபூஜஹ்லும் இருக்கிறார்கள். அப்போதவர்கள் என் பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹூவைக் கூறுங்கள் (ஏனெனில் இதுவே) உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் அதைக் கொண்டு நான் வாதாடப் போதுமான வார்த்தையாகும் என அவரிடம் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) அவ்விருவரும் 'நீர் (உமது தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிப்பீரா? என அவரிடம் கூறினார்கள். நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பவும் அவரிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அவ்விருவரும் (முன்னர் கூறியதை) திரும்பவும் கூறினார்கள். (இறுதியில்) அவர் (தமது தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே நான் இருக்கிறேன் என்பதே அவர் சொல்லிய கடைசி சொல்லாக இருந்தது. (உடனே மரணமடைந்து விட்டார்) லாயிலாஹூ இல்லல்லாஹூவைச் சொல்ல மறுத்தும் விட்டார். (இதையறிந்த) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தியமாக! நான் அல்லாஹ்விடம் - உம் விஷயத்தில் நான் தடுக்கப்படாதவரை - உமக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன் என கூறினார்கள். அப்போது 'நபிக்கோ, விசுவாசிகளுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்போருக்காக - அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று தெளிவானதன் பின்னா; - மன்னிப்புக் கோருவது ஆகுமானதல்ல” என்ற (9:13) வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான் (நபியே! நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்திவிடமாட்டீர் எனினும் அல்லாஹ் அவன் நாடியோரையே நேர்வழியில் செலுத்துகின்றான் மேலும் நேர்வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தவன் என்ற (28:56) வசனத்ததையும் அபூதாலிப் விஷயமாக இறக்கி வைத்தான். (அறிவிப்பாளர்: இப்னு முஸய்யப் அவர்கள்)

படிப்பினைகள்:-

1. அபூஜஹ்லும் அவனுடனிருந்தவனும் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கத்தை அறிந்தவர்களாக இருந்தனர்.

2. தமது பெரிய தந்தை இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமென்பதில் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மும்முரமாக முயற்சித்தார்கள்.

3. நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார்களும் அவர்களுக்கு முன் சென்றவர்களும் முஸ்லிம்களே எனக் கூறுவோருக்கு இந்த சம்பவம் மறுப்பாக அமைந்துள்ளது.

4. தன் பெரிய தந்தைக்காக நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோரினார்கள். அல்லாஹ்வோ அதை ஏற்க மறுத்து அவ்வாறு கோருவதைத் தடை செய்தான்.

5.கெட்ட தோழர்களினால் ஏற்படும் கெடுதியை அறிந்து கொள்ளுதல்.

6. முன் சென்றவர்களையும் பெரியோர்களையும் தேவையில்லாத விஷயத்தில் கண்ணியப்படுத்துவதினால் ஏற்படும் கெடுதியை அறிதல். (காரணம் அபூதாலிப் அவர்கள் தமக்கு முன் சென்றோரை கண்ணியப்படுத்தியதின் காரணத்தினால்தான் இஸ்லாத்தை ஏற்க மறுத்து விட்டார்)

7. இறுதி முடிவைக் கொண்டுதான் எல்லா அமல்களும் கணிக்கப்படும் என்பதற்கு இந்த ஹதிஸ் சான்றாகத் திகழ்கிறது. ஏனெனில் அபூதாலிப் அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹூ என்ற திருக்கலிமாவை தமது இறுதி நேரத்தில் மொழிந்திருந்தால் அது அவருக்கு நன்மையாக அமைந்திருக்கும்.



மக்கள் (அல்லாஹ்வை) நிராகரிப்புச் செய்வதற்கும் தங்களின் மார்க்கத்தை அவர்கள் விடுவதற்கும் காரணம் நல்லவர்களை கண்ணியப்படுத்துவதில் அவர்கள் வரம்பு மீறுவதினாலேயாகும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வசனம்:-

வேதமுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள் இன்னும் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)

(நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களை நிராகரித்தவர்கள் தங்களிடையே) திண்ணமாக நீங்கள் உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை விட்டுவிடாதீர்கள் வத்து, ஸூவாவு, எகூஸ், யஊக். நஸ்ர் (ஆகிய விக்கிரகங்)களையும் நீங்கள் திண்ணமாக விட்டு விடாதீர்கள் எனக் கூறினார்கள் என்ற (71:23) அல்லாஹ்வுடைய திருவசனத்தின் விஷயமாக இப்னு அப்பாஸ் - ரலியல்லாஹூ அன்ஹூமா அவர்கள் கூறுகிறார்கள். இவையெல்லாம் நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சமூகத்தைச் சார்ந்த நல்லவர்களின் பெயர்களாகும். அவர்கள் மரணித்து விட்ட போது ஷைத்தான் அவர்களுடைய சமூகத்தவரிடம் அ(ந்நல்ல)வர்கள் அமர்ந்திருந்த சபைகளில் (அவர்களின் நினைவாக அவர்கள் உருவில்) கற்களை நட்டுங்கள் அவைகளுக்கு அவர்களின் பெயர்களையும் சூட்டிவிடுங்கள் என அறிவித்தான். அவர்களும் (அவ்வாறே) செய்து விட்டனர் (எனினும் இப்படிச் செய்த அம்மக்கள் உயிரோடு இருக்கும் வரை) அவை வணங்கப்படவில்லை. முடிவாக இம்மக்கள் இறந்து (இச்சிலைகள் எதனால் நிறுவப்பட்டன என்ற) உண்மை அறிவு மறக்கடிக்கப்பட்ட போது (அவற்றை தெய்வங்கள் என எண்ணி அவர்களுக்கு பின் தோன்றிய மக்களால்) வணங்கப்பட்டன.

இப்னுல் கைய்யிம் அவர்கள் கூறுகிறார்கள்:- (நூஹ் நபி அவர்களின் கூட்டத்தாரில் நல்லோர்களாகிய) அவர்கள் மரணித்து விட்ட போது அ(க்காலத்த)வர்கள் அவர்களுடைய சமாதிகளில் தங்கி (இஃப்திகாஃப்) இருக்கலானார்கள். பின்னர் அவர்களுடைய உருவங்களை வடிவமைத்தார்கள். இப்படியே காலம் செல்லச் செல்ல கடைசியாக அவ்வுருவங்களையே (அவர்களின் பின் தோன்றல்கள்) வணங்கலாயினர் என முன் சென்ற ஸலஃப்களில் (முன்னோர்களில்) பலர் சொன்னார்கள்.

ஹதீஸ்கள்:-

மர்யம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களுடைய மகன் ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை கிறிஸ்தவர்கள் மிகைப்படுத்தி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் மிகைப்படுத்தி புகழாதீர்கள். நானும் ஒரு அடிமையே. ஆகவே (என்னை) அல்லாஹ்வின் அடியான் மற்றும் அவனின் தூதர் எனக் கூறுங்கள் என்று நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமா; - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: புகாரீ முஸ்லிம்.

உங்களையும் (புகழ்வதிலும் மற்றும் அதுவல்லாததிலும்) வரம்பு மீறுதலையும் அஞ்சி (எச்சரிக்கையாக இருந்து) கொள்ளுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்ததெல்லாம் வரம்பு மீறல்தான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

வரம்பு மீறியவர்கள் அழிந்தார்கள் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்லிம்.

படிப்பினைகள்:-

1. இந்த பாடத்தையும் இதனை அடுத்து வரும் இரண்டு பாடங்களையும் நன்கு விளங்கியவருக்கு இஸ்லாத்தின் உண்மை தத்துவம் தெளிவாகும்.

2. நல்லவர்களை அளவுக்கு மீறி கண்ணியப்படுத்துவதினால்தான் பூமியில் முதலில் ஷிர்க் உண்டாகியது என்பதை அறிந்து கொள்வது.

3. நபிமார்களின் மார்க்கம் துவக்கத்தில் எப்படியெல்லாம் மாற்றப்பட்டது என்பதற்குரிய முதன்மைக் காரணத்தை விளங்கிக் கொள்வது.

4. இஸ்லாமிய ஷாரீஅத்தும் மனிதனின் இயற்கையும் பித்அத்தை புறக்கணிக்க நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

5. பித்அத்துகளை ஏற்பதற்கும் ஷிர்க் உண்டாவதற்கும் காரணம் ஒன்று: நல்லவர்களை அளவுக்கு மீறி கண்ணியப்படுத்துவதாகும். இரண்டு: மார்க்க அறிஞர்கள் சிலர் நல்லதை நாடி ஒரு செயலைச் செய்ய அதை தொடர்ந்து வரும் மக்கள் (அந்த அறிஞர் பெருமக்கள் நாடாத) வேறொன்றை நாடியதாக எண்ணுவது.

6. உள்ளத்தில் உண்மை குறைவதும் பொய் மிகைப்பதும் மனிதனின் இயல்பாகும்.

7. பித்அத்தான காரியங்கள்தான் குப்ஃருக்கு காரணமாக அமைகிறது என்று இஸ்லாமிய முன்னோர்கள் கூறிய கூற்றுக்கு மேற்கண்ட சரித்திரம் சான்றாகும்.

8. பித்அத்து செய்பவனின் எண்ணம் நல்லதாக இருப்பினும் சரி அதனால் ஏற்படும் தீயவிளைவை ஷைத்தான் நன்கறிந்தவன் என்பதை அறிந்து கொள்வது.

9. பொதுவான ஒரு சட்டத்தை மனதில் கொள்ள வேண்டும். அதாவது எதிலும் வரம்பு மீறாமல் இருப்பதும் அதனால் ஏற்படும் தீமையின் விளைவை அறிந்து கொள்வதுமாகும்.

10. நற்செயலுக்காக மண்ணறைகளில் தங்கி (இஃதிகாஃப்) இருப்பதினால் ஏற்படும் கெடுதியை அறிந்து கொள்வது.

11. உருவச் சிலைகளை தவிர்த்துக் கொள்வதும் ஏன் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதின் உண்மையை அறிந்து கொள்வது.

12. மேல் சென்ற (71:23) வசனத்துக்கு இப்னு அப்பாஸ் - ரலியல்லாஹூ அன்ஹூமா - அவர்கள் கூறிய விளக்கத்தின் சரித்திர குறிப்பை ஆழ்ந்து சிந்திக்க அவசியமாக இருக்க மக்கள் அதை மறந்தவர்களாக இருக்கின்றனர்.

13. இவ்வாறு அம்மக்கள் அந்தச் சிலைகளை வணங்குவதன் மூலம் அவர்களின் ஷஃபாஅத் தைத்தான் நாடுகின்றனர் என்பது தெளிவான விஷயமாகும்.

14. கிறிஸ்தவர்கள் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் விஷயத்தில் வரம்பு மீறி அளவு கடந்து புகழ்ந்ததைப் போன்று என் விஷயத்தில் வரம்பு மீறாதீர்கள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பகிரங்கமாக எச்சரித்துக் கூறினார்கள்.

15. எதிலும் வரம்பு மீற வேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை செய்துள்ளார்கள். அவ்வாறு வரம்பு மீறுவதே அழிவுக்கு காரணம் என்று எச்சரித்துள்ளார்கள்.

16. உண்மை விஷயம் மறக்கடிக்கப்பட்ட பின்னரே நூஹ் நபி அவர்களின் சமூகத்தவர் சிலைகளை வணங்கினார்கள் என்பதை அறிந்து கொள்வது.

17. அவ்வாறு உண்மை விஷயம் மறக்கடிக்கப்படுவதற்கு காரணம் அறிந்தவர்களின் மரணமாகும்.


(அல்லாஹ்வுடைய நேசரான) ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்?

ஹதீஸ்கள்:-

நிச்சயமாக உம்மு ஸலமா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அபீஸீனியா நாட்டில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும் அதில் உள்ள உருவப் படங்களையும் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் அப்போதவர்கள் அது அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அ(ந்த நல்ல)வருடைய சமாதியின் மீது மஸ்ஜிதைக் கட்டி அந்தப்படங்களை அதில் உருவமைத்து விடுவார்கள். அத்தகையோரே அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள் அறிவிப்பாளா;: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ

இவர்கள் சமாதிகளின் குழப்பம் மற்றும் உருவப்படங்களின் குழப்பம் ஆக இரண்டு குழப்பங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டார்கள் (என்ற இப்னு தைமிய்யா அவர்களின் கூற்றை இவ்விரண்டால் ஏற்பட்ட தீமைகளின் கொடூரத்தை உணர்த்த ஆசிரிரியர் எடுத்துக் கூறியுள்ளார்)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது தன் முகத்தின் மீது தனக்குரிய ஓர் ஆடையை போடுபவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் மூச்சுத் திணறும் போது அதை (முகத்தை விட்டும்) உயர்த்தி அவ்வாறான நிலையிலேயே அவர்கள் இருக்க 'யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக! தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என அவர்கள் செய்து கொண்ட ஒன்றை (மற்றவர்களுக்கும்) எச்சரிப்பவர்களாக - கூறுவார்கள். இ(வ்வகை எச்சரிக்கையான)து இல்லாதிருந்தால் அவர்களின் சமாதி (வீட்டுக்கு வெளியில் பகிரங்கமாக) ஆக்கப்பட்டிருக்கும் என்றாலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என அஞ்சப்பட்டது. அறிவிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ முஸ்லிம்.

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் - (நபி) இப்றாஹீமை தன் உற்ற தோழராக அவன் எடுத்துக் கொண்டது போன்று - என்னையும் அவன் உற்ற தோழனாக எடுத்துக் கொண்டான். நான் என் உம்மத்தவரிலிருந்து ஒரு உற்ற தோழரை எடுத்துக் கொள்பவனாக இருந்தால் அபூபக்கரையே உற்ற தோழராக எடுத்திருப்பேன் அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். ஆகவே அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் சமாதிகளை வணக்கத்-தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன் என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பாளர்: ஜூன்துப் பின் அப்துல்லாஹ் - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்லிம்.

நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் கடைசி நேரத்தில் அதை விட்டும் தடுத்துள்ளார்கள்.

பின்னர் நிச்சயமாக அவர்கள் முன் சென்ற ஹதீஸின் தொடரிலே அதைச் செய்பவரை சபித்துள்ளார்கள். அவ்விடத்தில் தொழுவதும் - பள்ளியாக அது கட்டப்படாவிட்டாலும் அ(வ்வாறு சபிக்கப்பட்ட)தில் உள்ளதாகும். இதுவே ஆயிஷா அவர்களின் (நபிகளாரின் கப்ரான) அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என அஞ்சப்பட்டது என்ற சொல்லுக்கு விளக்கமாகும். எனவே நபித்தோழர்கள் நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமாதியைச் சுற்றி மஸ்ஜிதைக் கட்டவில்லை. தொழுகையை நிறைவேற்ற நாடப்படுகின்ற ஒவ்வொரு இடமும் மஸ்ஜிதாக எடுக்கப்பட்டதாகும். மாறாக எனக்கு பூமியை மஸ்ஜிதாகவும் (அதன் மண்ணைக் கொண்டு தயம்மும் செய்வதற்கு) சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று தொழப்படக் கூடிய ஒவ்வொரு இடமும் மஸ்ஜிதாகக் கணிக்கப்படும்.

எவர்களை மறுமை நாள் - அவர்கள் உயிரோடு இருக்கும் நிலையிலேயே வந்தடையுமோ அவர்களும் சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொண்டார்களே அத்தகையோருமே நிச்சயமாக மக்களில் மிகக் கெட்டவர்கள் என ஹதீஸில் வந்துள்ளது. அறிப்பாளர்: இப்னு மஸ்ஊது - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்னது அஹ்மது

படிப்பினைகள்:-

1. நல்லவர்களின் சமாதிகளில் மஸ்ஜிதுகளைக் கட்டுவதைப் பற்றி நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றை அறிந்து கொள்வது.

2. சிலைகளை தவிர்த்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

3. சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவதைத் தடுத்து நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்வது. அதாவது நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இதை முதலில் விவரித்துக் கூறி பின்னர் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அதை தடுத்துக் கூறியதுடன் நிறுத்தி விடாது தம் உயிர் பிரியும் கடைசி கட்டத்திலும் அதைத் தடுத்துக் கூறி எச்சரித்துள்ளார்கள்.

4. நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு உருவாவதற்கு முன்னால் அதை மஸ்ஜிதாக ஆக்குவதை விட்டும் தடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வது.

5. நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதாக ஆக்குவது யூத கிறிஸ்தவர்களின் வழியாகும்.

6. இவ்வாறு செய்ததினால் அவர்களை நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

7. இவ்வாறு நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துக் கூறியதின் நோக்கம் நம்மை எச்சரிக்கை செய்வதாகும்.

8. ஏன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை வெளியில் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதின் காரணம் மேல் சென்ற ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொண்டவர்களும் கியாமத் நாள் வரும் பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இருசாரார்களை இணைத்து ஒரே ஹதீஸில் கூறியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வது.

10. ராஃபிளிய்யா ஜஹ்மிய்யா என்ற இருசாரார்களுக்கு மேலேயுள்ள இரண்டாவது ஹதீஸில் மறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சாரார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தவர்களைச் சார்ந்தவர்கள் அல்லர் என சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ராஃபிளிய்யா என்ற சாரார்களினால்தான் (முஸ்லிம்களின் மத்தியில்) ஷிர்க்கும் கப்ரு வணக்கமும் உண்டானது. அவர்கள்தான் முதலில் கப்ருகளின் மீது மஸ்ஜிதுகளைக் கட்டினார்கள்.

11. மரண வேளையில் ஏற்படும் வேதனை கொண்டு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் சோதிக்கப்பட்டுள்ளார்கள்.

12. அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் நபித்தோழர்களில் சிறந்தவர் என்று மேலேயுள்ள ஹதீஸில் தெளிவாக வந்துள்ளது. மேலும் அவர்கள்தான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் முதல் கலீஃபா ஆவார்கள் என சமிக்கினையாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில படிப்பினைகள்:-

சமாதிகளின் மீது கட்டிடங்களை எழுப்பியதால் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க்கான பல செயல்கள் நிகழ்கின்றன அவற்றை எல்லாம் விரிவாக அல்லாஹ்தான் நன்கறிவான். என்றாலும் இஸ்லாமிய மார்க்க மூதறிஞர்களில் ஒருவரான இப்னுல் கைய்யிம் - ரஹிமஹூல்லாஹூ அவர்கள் அதில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்கள். அதை இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

1. சமாதியில் தொழுவதை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்க அதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டனர்.

2. அங்கு சென்று தங்களுக்காக துஆச் செய்கின்றனர். மேலும் இந்த அவ்லியாவின் கபுரடியில் துஆச் செய்தால் உடனே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று கூறுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டிய பித்அத்தான செயலாகும்.

3. கஷ்டங்களை நீக்கவும் நல்லதைக் கொடுக்கவும் இந்த கப்ரில் அடங்கி இருக்கும் அவ்லியாவுக்கு தனித்தன்மை உண்டு என்று நம்புகின்றனர். மேலும் ஊரில் உள்ள இந்த அவ்லியாவின் சமாதியினால் அந்த ஊர்வாசிகளின் பலாய் முசீபத்துகள் தவிர்க்கப்படுகின்றன என்றும் உறுதியாக கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக இவையெல்லாமே இஸ்லாத்திற்கு முரணான செயல்கள் என்பதில் சந்தேகமேயில்லை காரணம் அப்படியே அவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின் அதற்கு தகுதியுடைய கப்ரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருதான். ஆனால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த சொற்ப காலத்திலேயே மதீனா வாசிகளின் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் பலாய் முசீபத்துகள் பஞ்சங்கள் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு இருப்பதினால் அவை எல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமே! ஏன் தவிர்க்கப்படவில்லை? எப்பொழுது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு இருக்குமிடத்தில் அவை தவிர்க்கப்படவில்லையோ அப்பொழுதே அந்த மக்கள் சொல்வது பொய் எனத் தெளிவாகிறது.

4. கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுகின்றனர். இவ்வாறு ஒன்று கூடுவதால் பல தகாத செயல்களும் தொழுகையை விடுவதும் ஏற்படுகின்றன. இந்தப் பாவங்களை கப்ரு உடையவர்கள் சுமந்து கொள்வார்கள் என நினைக்கின்றனர்.

5. விலையுயர்ந்த பட்டுப்புடவையால் கப்ரை போர்த்தி கண்ணியப்படுத்துகின்றனர்.

6. பொருட்களையும் செல்வங்களையும் அதற்கென்று ஒதுக்கி விடுகின்றனர்.

7. ஜியாரத் செய்கின்றவர்கள் அந்த கப்ருக்கு ஸஜ்தா செய்கின்றனர். இது குஃப்ரு என்பதில் சந்தேகம் இல்லை.

8. அதற்கென்று பொருட்களை ஹதியாவாக கொடுக்கின்றனா;. இந்த ஹதியாக்களை பெறக் கூடிய தர்கா லெப்பைமார்கள்தான் இந்த ஷிர்க்கான செயல்களுக்கு முதல் காரணகர்த்தாக்கள். ஏனெனில் இந்த கப்ரில் அடங்கி இருப்பவரை அழைத்தால் பதில் கூறுவார். உதவி கேட்டால் உதவி செய்வார் என்றெல்லாம் அறியாத மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் தங்களுக்கு ஹதியாக்களும் நேர்ச்சைகளும் அதிகமாக வர வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

9. கோவில்களுக்கு பூசாரிகளை நியமிப்பதைப் போல சமாதிகளுக்கும் தர்ஹாக்களுக்கும் லெப்பைகளை நியமிக்கின்றனர்.

10. அதில் அடங்கி இருப்பவர் சமாதி வணக்கஸ்தர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட மிக உயர்ந்தவராக திகழ்கின்றார். (உதாரணமாக திடீரென ஒரு ஆபத்தான காரியம் நடந்துவிட்டால் யாஅல்லாஹ்! என அழைப்பதற்கு பதிலாக யா முஹ்யத்தீன்! யா ஹாஜா! என்றெல்லாம் அழைக்கின்றனர்.)

11. கப்ரை ஜியாரத் செய்யுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறு உலகத்தை நினைவூட்டும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போல மறு உலகத்தை நினைவு கூறவேண்டும். அதில் அடங்கியிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் நாம் துஆச் செய்ய வேண்டும். மன்னிப்புக்கோர வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜியாரத்தை இஸ்லாத்தில் அமல்படுத்தினார்கள். ஆனால் கப்ரு வணங்கிகளோ அதை நேர்மாற்றமாக புரட்டி விட்டார்கள். அதாவது அவர்கள் உலக வாழ்க்கையை மனதில் வைத்துக் கொண்டு அங்கு சென்று அதில் அடங்கியிருப்பவரிடம் தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்ய வேண்டுகின்றனர்.

மேலும் இதுபோல் மார்க்கத்துக்கு முரணான எத்தனையோ ஷிர்க்கான செயல்கள் தர்ஹாக்களில் நடைபெறுகின்றன. நாம் அவற்றை உணர்ந்து அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொள்வதுடன் பிறரைத் தடுக்கவும் வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

நல்லோர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது அவர்களை அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகின்றது
நூலாசிரியர் இத்தலைப்பின் மூலம் நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்:-

1. நல்லவர்களின் கப்ருகளில் வரம்பு மீறுவது குறித்து எச்சரிக்கையாக இருப்பது.

2. அவ்வாறு வரம்பு மீறுவது அவர்களை வணங்கும் அளவுக்கு கொண்டு செல்கின்றது.

3. அவ்வாறு அக்கப்ருகள் வணங்கப் பட்டால் அவற்றுக்கு சிலைகள் என்றே கூறப்படும்.

4. கப்ருகள் மீது கட்டிடங்கள் கட்டுவதற்கும் அவற்றை மஸ்ஜிதுகளாக மாற்றுவதற்கும் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ்:-

யாஅல்லாஹ்! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்ரகமாக ஆக்கி விடாதே! தங்கள் நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்களே அந்த சமூகத்தார்மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகயிருக்கின்றது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இமாம் மாலிக் நூல்: அல்முஅத்தா

நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா? என்ற (53:19) வசனத்திற்கு முஜாஹித் அவர்கள் கூறிய விளக்கத்தை இப்னு ஜாரீர் அவர்கள் கூறுகிறார்கள் 'லாத்” என்பவர் (முந்தைய காலத்தில் வாழ்ந்த நல்லோர்களில் ஒருவர் அவரின் பெயர் சர்மத் பின் கன்ம் என்பதாகும் அவர்) ஹாஜிகளுக்கு மாவு குழைத்துக் கொடுப்பவராக இருந்தார். அவர் மரணித்து விடவே அவரின் கப்ரில் மக்கள் தங்கியிருக்கலாயினர். இப்படியாக காலப் போக்கில் அவரையே வணங்கலாயினர். இவ்வாறே இப்னு அப்பாஸ் அவர்களும் அவர் ஹாஜிகளுக்கு மாவு குழைத்துக் கொடுப்பவராக இருந்தார் என கூறியதாக அபூல் ஜல்ஸா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அதன் மீது மஸ்ஜிதுகளை மற்றும் (எரிப்பதற்கு) விளக்குகளை எடுத்துக் கொள்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் - ரலியல்லாஹூ அன்ஹூமா நூல்: அபூதாவூத் நஸயீ திர்மிதீ இப்னுமாஜா

படிப்பினைகள்:-

1. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தினர் தம் கப்ரை வணக்கத்தலமாக மாற்றிவிடுவார்களோ என பயந்து அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள்.

2. கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவோரின் மீது அல்லாஹ் கடும் கோபமுடையவனாக இருக்கிறான்.

3. லாத் எனும் சிலை வணங்கப்படும் பெரிய சிலையாக எப்படி ஆனது என்பதை அறிதல்.

4. அது ஆரம்பத்தில் நல்லதொரு மனிதனின் கப்ராகத்தான் இருந்தது.

5. லாத் என்பது அக்கப்ரில் அடங்கியிருக்கும் நல்லவரின் தொழில் பெயராகும்.

6. கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

7. அதில் விளக்கேற்றுபவர்களையும் சபித்துள்ளார்கள்.

அவ்லியாக்கள் நல்லோர்கள் விஷயத்தில் வரம்பு மீறி நடப்பதுதான் உலகில் ஷிர்க் உண்டாவதற்கான மூல காரணமாகும். அவ்லியாக்களை நேசிக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதுடன் அவர்களுக்குள்ள அந்தஸ்துகளில் அவர்களை வைக்க வேண்டும் அதில் மிகைப்பட நடந்து கொள்ளலாகாது எனவும் கட்டளையிட்டுள்ளான்.

அவ்லியாக்களைக் கண்ணியப்படுத்துவதற்கும் நேசிப்பதற்கும் உரிய ஒரே வழி அவர்கள் காட்டிச் சென்ற நற்செயல்களைப் பின்பற்றி நடப்பதும் அந்த வழியில் மக்களை அழைப்பதுமாகும். அவர்கள் சொல்லாத மற்றும் செய்யாத மார்க்கத்திற்கு முரணான காரியங்களை அவர்களின் பெயரி்ல் செய்வது அவர்களை பிரியம் வைப்பதாக ஆகாது. மாறாக அவர்களின் கோபத்திற்கு ஆளாக நோரிடும்.

ஆகவே நமக்கு மத்தியில் அவ்லியாக்களின் பெயரால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் அவர்கள் நமக்குக் கற்றுத் தராத செயல்களாகும். அதைத் தவிர்ப்பது மிகவும் அவசரமும் அவசியமுமானதாகும்.

முஸ்தஃபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தவ்ஹீதுடைய புறத்தைப் பாதுகாத்ததிலும் ஷிர்க்கின்பால் சேர்த்து வைக்கும் ஒவ்வொரு வழியையும் அவர்கள் அடைத்திருப்பதிலும் வந்துள்ள ஆதாரங்கள்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்று:-

(விசுவாசிகளே!) உங்களிலிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார் (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு வருத்தமாக இருக்கும் உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர் விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர் மிகக் கிருபையுடையவர்.

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக்கொண்டால் (அவர்களிடம்) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயனில்லை. அவன் மீது (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளேன். அவனே மகத்தான அர்ஷின் அதிபதியாவான்” (9:128,129)

ஹதீஸ்கள்:-

'நீங்கள் உங்கள் இல்லங்களை கப்ருகளாக ஆக்காதீர்கள் என்னுடைய கப்ரை ஈதாக (விழாவாக) கொண்டாடாதீர்கள் நீங்கள் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள் நிச்சயமாக உங்களுடைய ஸலவாத்தானது நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடைகிறது” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: அபூதாவூத்

அலீ பின் ஹூசைன் அவர்கள் ஒரு மனிதரை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருக்கு பக்கத்திலிருந்த பொந்தின் பக்கம் வந்து அதில் நுழைந்து துஆச் செய்பவராகக் கண்டார்கள் (அதுமாதிரி செய்வதை விட்டும்) அப்போது அவரைத் தடுத்தார்கள் மேலும் நான் உங்களுக்கு என்னுடைய தந்தை என்னுடைய பாட்டனார் வழியாக நான் செவியேற்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை அறிவிக்கட்டுமா? எனக் கூறினார்கள். 'என்னுடைய கப்ரை ஈதாகவும் உங்களின் இல்லங்களை கப்ருகளாகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள் நிச்சயமாக (நீங்கள் என் மீது கூறக்கூடிய) என்னை வந்தடையும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முக்தாரா

படிப்பினைகள்:-

1. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தவர்களை ஷிர்க்கின்பால் சேர்த்து வைக்கும் எல்லா வழிகளை விட்டும் தூரமாக்கி உள்ளார்கள்.

2. நாம் சிறந்த உம்மத்தவர்களாக ஆக வேண்டுமென்பதில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாகவும் நம்மீது இரக்க குணமுடையவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

3. ஜியாரத்து செய்வது ஒரு நல்ல செயலாக இருப்பதுடன் குறிப்பிட்ட முறையில் தங்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் நம்மை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.

4. அதிகமாக ஜியாரத் செய்வதையும் தடுத்துள்ளார்கள்.

5. சுன்னத்தான தொழுகைகளை ஆண்கள் தங்களது இல்லத்திலேயே நிறைவேற்றும்படி நம்மைத் தூண்டி உள்ளார்கள். (அதாவது சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறை வேற்றும்படி கூறியுள்ளார்கள்.)

6. கபுரடியில் தொழுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும்.

7. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஒருவர் எங்கிருந்து சலவாத்துஈ ஸலாம் கூறினாலும் அது அவர்களை வந்தடையும். மாறாக பக்கத்திலிருந்து தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.

8. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலமுல் பர்ஜகில் இருந்தவாறே அவர்கள் மீது கூறப்படும் சலவாத்துகள் மற்றும் ஸலாம்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.


திண்ணமாக இந்த உம்மத்தவர்களில் சிலர் சிலைகளை வணங்குவார்கள் என்பது பற்றிய விபரம்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வசனங்கள்:-

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப் பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் விக்ரகங்களையும் தாகூத்தை (ஷைத்தானை)யும் விசுவாசிக்கின்றார். மேலும் (இணைவைப்போரான குறைஷியர்களைச் சுட்டிக் காண்பித்து) இவர்கள்தாம் உண்மை விசுவாசிகளை விட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர் என்று காஃபிர்களுக்குக் கூறுகின்றனர். (4:51)

அல்லாஹ்விடம் இருக்கும் தண்டனையால் இதைவிடக் கெட்டவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவரை சபித்து அவர் மீது கோபமும் கொண்டு அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவரும் (அவர்களில்) ஷைத்தானை வணங்கியவரும் அன்றியும் நேரான வழியிலிருந்தும் மிகத் தவறியவர்கள் என்று நீர் கூறுவிரீராக!

தம் காரியத்தில் (விவாதித்து அதில்) வெற்றி பெற்றார்களே அவர்கள் இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்துவிடுவோம் என்று கூறினார்கள்.(18:21)

இவ்வாறு கூறியவர்கள் முஸ்லிம்களா? அல்லது முஷ்ரிகீன்களா? என்ற விஷயத்தில் விரிவுரையாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இவ்வாறு செய்வதினால் அவர்கள் பழிக்கப்பட்டவர்களே! காரணம் நபிமார்களின் கப்ருகளையும் சாலிஹீன்களின் கப்ருகளையும் மஸ்ஜிதுகளாக ஆக்கிய யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அல்லாஹ் சபித்துள்ளான் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த திருவசனங்களை இங்கு கூறியதின் நோக்கம் நம் உம்மத்தவர்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வழியை படிப்படியாக பின்பற்றுவார்கள் என உண்மை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்தபடி இந்த மூன்று திருவசனங்களில் கூறப்பட்டுள்ள வேதக்காரர்களின் வழிகளை நம் உம்மத்தவர்களில் சிலர் பின்பற்றுவார்கள்.

ஹதீஸ்கள்:-

திண்ணமாக நீங்கள் உங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை (ஒன்று விடாமல் அப்படியே எடுத்து நடப்பதில்) அம்பினுடைய இறக்கை மற்ற இறக்கைக்குச் சமமானது போன்று (சரிக்குச் சமமாக) பின்பற்றுவீர்கள். எதுவரையெனில் அவர்கள் ஒரு உடும்புக்பொந்தில் நுழைவார்களாயின் நீங்களும் அதில் நுழைந்து விடுவீர்கள் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அ(தைக் கேட்ட நபித் தோழர்களான)வர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (முன்னோர்கள் எனக் குறிப்பிட்டீர்களே அவர்கள்) யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களா? என வினவினர். (ஆம்) பிறகு யார்? என அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீது - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: புகாரீ முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான் அதனுடைய கிழக்கத்திய மற்றும் அதன் மேற்கத்திய பகுதிகளை கண்டேன் அதிலிருந்து எனக்குச் சுருட்டிக் காண்பிக்கப்பட்டதில் நிச்சயமாக என்னுடைய உம்மத்தவர்கள் அதனுடைய ஆட்சியை அடைவார்கள் எனக்கு சிவப்பு மற்றும் வெள்ளையான இரு பொக்கிஷங்களை நான் கொடுக்கப்பட்டேன் மேலும் என் உம்மத்தினருக்காக எனது இரட்சகனிடம் அவர்களை அவன் பெருவரியான பஞ்சத்தால் அழிக்காமல் இருப்பதற்கும் அவர்கள் மீது அவர்களல்லாத (அந்நிய) விரோதியைச் சாட்டி அதனால் அ(வ்விரோதியான)வன் அவர்களுடைய சக்தியினை அழித்து விடாதிருப்பதற்கும் நிச்சயமாக நான் கேட்டேன். நிச்சயமாக என்னுடைய இரட்சகன் கூறினான் முஹம்மதே! நான் ஒரு தீர்ப்பை எழுதிவிட்டால் அதை யாராலும் தடுக்கப்படாது. நிச்சயமாக நான் உம(து வேண்டுதலு)க்காக உம்முடைய உம்மத்தவர்களுக்கு அவர்களை நான் பெருவரியான பஞ்சத்தைக் கொண்டு அழிக்காமல் இருப்பதையும் அவர்கள் மீது அவர்கள் அல்லாத (அந்நிய) விரோதியை உலகில் இருப்பவர்கள் அவர்களுக்கெதிராக ஒன்று சேர்ந்தாலும் சரியே! இது எதுவரையெனில் அவர்களில் சிலர் சிலரை அழிக்காமலும் அவர்களில் சிலர் சிலரை சிறை பிடிக்காமலும் இருக்கும் வரைதான் (அவ்வாறு அவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே இவ்வாறு செய்வார்களாயின் அவர்கள் மீது அந்நிய விரோதியை சாட்டிவிடுவேன்) அறிவிப்பாளர்: ஸவ்பான் - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்லிம்.

சிவப்பு நிற பொக்கிஷத்தைக் கொண்டு கருத்தாவது பாரசீக நாட்டு மன்னரின் ஆட்சியும் அவரின் மாடமாளிகையுமாகும். வெள்ளை நிற பொக்கிஷத்தின் கருத்தாவது ரோம் தேச மன்னரின் ஆட்சியும் அவரின் மாடமாளிகையுமாகும்.

இதே ஹதீஸை இமாம் பர்கானி அவர்கள் தம் நூலில் குறிப்பிட்டிருப்பதுடன் பின் வருபவற்றையும் அதிகமாகக் கூறியுள்ளார்கள். என் உம்மத்தவர்கள் மீது நான் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கக் கூடிய தலைவர்களைத் தான். மேலும் என் உம்மத்தவர்களுக்கு மத்தியில் கொலை குழப்பம் நிகழ்ந்து விட்டால் அது இறுதிநாள் வரை நடந்து கொண்டேயிருக்கும். மேலும் என் உம்மத்தவரில் ஒரு சாரார் இணை வைப்போருடன் சேரும் வரையிலும் என்னுடைய உம்மத்தவரில் அதிகமான கூட்டத்தினர் சிலைகளை வணங்கும் வரையிலும் கியாமத்நாள் வராது. நிச்சயமாக என்னுடைய உம்மத்தவர்களுக்குள் முப்பது பொய்யர்கள் உருவாகுவார்கள் அவர்களில் ஒவ்வொருவரும் நிச்சயமாக தாம் ஒரு நபி என கற்பனை செய்து கொள்வார் ஆனால் நானோ இறுதி நபியாவேன் எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. என் உம்மத்தவர்களில் ஒரு கூட்டத்தினர் உண்மையின் மீது நிலைத்து வெற்றியுடன் திகழ்வார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பு வரும் வரை அவர்களுக்கு உதவாதவர்கள் யாதொரு தீங்கையும் செய்து விட முடியாது.

படிப்பினைகள்:-

1. சிலைகளையும் ஷைத்தான்களையும் நம்புவதன் பொருளை அறிந்து கொள்வது. அது உள்ளத்தைச் சார்ந்த அமலா? அல்லது அதை வெறுப்பதுடன் அது தவறு என அறிந்திருப்பதுடன் அவற்றை வணங்குபவர்களுடன் ஒத்துப்போவதா?

2. காஃபிர்கள் தம்மைக் காஃபிர்கள் என்று புரிந்த குப்ரியத்தைச் செய்கின்றனர். ஆனால் விசுவாசிகளில் சிலரோ தம்மை முஃமின் என்று கூறியே ஷிர்க்கை செய்கின்றனர்.

3. மேலேயுள்ள ஹதீஸை இந்தப்பாடத்தில் குறிப்பிட்டதன் நோக்கம் இந்த உம்மத்தவர்களில் சிலர் சிலைகளை வணங்குவார்கள் என்பதை அறிந்து கொள்வதுடன் அவ்வாறே நிகழ்ந்தும் விட்டது என்பதையும் அறிந்து கொள்வது.

4. உம்மத்தவர்களின் மத்தியில் ஒரு கூட்டத்தினர் உண்மையின் மீது நிலைத்திருப்பர் அவர்களுக்கு யாரும் தீங்கு விளைவிக்க முடியாது இது கியாமத் நாள் வருவதற்கு ஓர் அறிகுறியாகும்.

5. வழி கெடுக்கக் கூடிய தலைவர்கள் தன் உம்மத்தவர்கள் மத்தியில் உருவாகுவதை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அதிகமாக பயந்துள்ளார்கள்.

6. மேலேயுள்ள ஹதீஸ்களில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவம் உண்மை என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன அதாவது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைப் போல நிகழ்ந்துள்ளது அவைகளாவன:-
      
1. மேற்கத்திய கிழக்கத்திய நாடுகள் இஸ்லாமியர் கைவசமிருந்தது.

2. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இரு பொக்கிஷங்களும் கொடுக்கப்பட்டன.

3. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தவர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர்.

4. முஸ்லிம்களில் சிலர் சிலரை அழித்தனர் சிறை பிடித்தனர்

5. வழிகேட்டின்பால் அழைக்கக் கூடிய தலைவர்கள் இவ்வும்மத்தவர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர்.

6. உம்மத்தவர்களுக்கு மத்தியில் கொலை நிகழ்ந்தது (முதலில் மூன்றாவது கலீஃபா உஸ்மான் - ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கொல்லப்பட்டார்கள்.)

7. அவர்களுக்கு மத்தியில் தம்மை நபியென வாதிடக்கூடிய பொய்யர்கள் உருவானார்கள்.

8. உண்மையின் மீது நிலைத்து வெற்றியுடன் திகழும் ஒரு கூட்டத்தினர் உம்மத்தவர்களில் இருந்து கொண்டேயிருப்பர்.



ஸிஹ்ரு(சூனியத்து)டைய விபரம்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்றுகள்:-

இன்னும் அ(ச் சூனியத்)தை எவர் விலைக்கு வாங்கிக் கொண்டாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமுமில்லை என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்திருக்கின்றனர். (2:102)

அவர்கள் ஜிப்தையும் தாகூத்தையும் விசுவாசிக்கின்றனர். (4:51)

'ஜிப்து” என்பது சூனியமாகும் 'தாகூத்” என்பது ஷைத்தானாகும் என உமர் - ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் - ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள்: தவாகீத் என்பது ஜோசியம் சொல்பவர்களாவர் அவர்கள் மீது ஷைத்தான் இறங்குகிறான் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் ஒருவன் இருப்பான்.

ஹதீஸ்:-

'(உங்களை) அழித்துவிடக் கூடிய ஏழு பெரும் பாவங்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை யாவை? என (நபித் தோழா;களான) அவர்கள் கேட்டனர் அ(தற்கு நபிய)வர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது சூனியம் வைப்பது அல்லாஹ் கண்ணியப் படுத்திவிட்ட எந்த ஒரு ஆத்மாவையும் முறையின்றி கொலை செய்து விடுவது வட்டி உண்ணுதல் அநாதைகளின் சொத்தை சாப்பிடுதல் போரில் புறங்காட்டி ஓடுதல் பத்தினிகளான ஒன்றுமறியாத விசுவாசிகளான பெண்களைப் பற்றி அவதூறு கூறுதல் ஆகியவை” எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: புகாரி

சூனியக்காரனுடைய தண்டனை அவனை வாள் கொண்டு வெட்டுவதாகும் என ஹதீஸில் வந்துள்ளது. அறிவிப்பவர்: ஜூன்துப் - ரலியல்லாஹூ அன்ஹூ

ஒவ்வொரு சூனியக்காரனையும் சூனியக் காரியையும் கொன்று விடுங்கள் என கலீஃபா உமர் - ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் (தம்முடைய அதிகாரிகளுக்கு) எழுதினார்கள். எனவே நாங்கள் மூன்று சூனியக்காரர்களைக் கொன்று விட்டோம் என (அறிவிப்பாளரான) அவர் கூறுகிறார். அறிவிப்பாளர்: பஜாலா இப்னு அப்தா - ரலியல்லாஹூ அன்ஹூ

நூல்: புகாரீ

(நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி) ஹஃப்ஸா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தனக்கு சூனியம் செய்து விட்ட தனக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை கொன்று விடுமாறு கட்டளையிட்டார்கள் எனவே அவள் கொல்லப்பட்டாள். நூல்: முஅத்தா

படிப்பினைகள்:-

1. இந்தப் பாடத்தின் மூலம் ஏழு பெரும் பாவங்களை அறிந்து கொள்வது

2. சூனியக்காரன் நிராகரிப்பவனுக்கு ஒப்பானவனாவான்.

3. மரண தண்டனைதான் அவனுக்கு தரப்படுமே தவிர தவ்பா செய்யும்படி வேண்டப்படமாட்டான்.

4. கலீஃபா உமர் - ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் காலத்திலேயே முஸ்லிம்களில் சூனியக்காரர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் தற்காலத்தில் அவர்கள் இருப்பது ஆச்சரியமல்ல
.

சூனியத்தின் வகைகளில் சிலவற்றைப் பற்றிய விளக்கம்

பறவையை பறக்க விட்டு சகுனம் பார்ப்பதும் பூமியில் கோடிட்டு ஜோசியம் பார்ப்பதும் துர்ச்சகுனம் பார்ப்பதும் சூனிய வகையைச் சாரும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூற தாம் கேட்டதாக கபீசா - ரலியல்லாஹீ அன்ஹூ அறிவிக்கிறார்கள்

எவர் நட்சத்திரக்கலையில் ஒரு பகுதியைக் கற்றுக் கொண்டாரோ அவர் சூனியத்தில் ஒரு பகுதியைக் கற்றுக் கொண்டார் (நட்சத்திரக் கலையான) அ(தைக் கற்ப)து அதிகரிக்கும் போதெல்லாம் (சூனியமான) இது அதிகமாகி விடும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் - ரலியல்லாஹூ அன்ஹூமா நூல்: அபூதாவூத்

எவர் (நூலில்) ஒரு முடிச்சுப் போட்டு பின்னர் அதில் ஊதிவிட்டாரோ திட்டமாக அவர் சூனியம் செய்து விட்டார் எவர் சூனியம் செய்து விட்டாரோ அவர் இணைவைத்து விட்டார் எவர் எதையாவது தொங்க விடுவாரோ அதன்பாலே அவர் சாட்டப்படுவார் (அல்லாஹ்வை மறந்து அதுவே தன்னைக் காப்பதாக நம்பிவிடுவார்) என அபூஹூரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளது. நூல்: நஸயீ

அல்யிழா என்றால் என்ன? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதுதான் மக்களுக்கு மத்தியில் பல பேச்சுக்களைப் பரப்பி கோள் சொல்வதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது - ரலியல்லாஹீ அன்ஹீமா. நூல்: முஸ்லிம்

பயானில் (பேச்சுக் கலையில்) சூனியமுள்ளது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

படிப்பினைகள்:-

1. முதல் ஹதீஸில் குறிப்பிட்ட வகை யாவும் சூனியத்தைச் சார்ந்ததாகும்.

2. ஜோசியம் சூனியத்தைச் சார்ந்ததாகும்.

3. நூலில் முடிச்சு போட்டு ஊதுவது சூனியமாகும்.

4. கோள் சொல்வது சூனியமாகும்.

5. பேச்சுக் கலையில் சூனியமுள்ளது. (பேச்சுக் கலையின் மூலமாக உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் ஆக்க முடியுமென்பதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது)


ஜோதிடர்களைப் பற்றிய விபரம்

ஹதீஸ்கள்:-

'எவரொருவர் ஜோதிடனை அணுகி எதை பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கைக் கொள்வாராயின் நாற்பது நாட்களின் தொழுகை அவருக்காக ஏற்கப்படாது” என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரி்ல் ஒருவர் நூல்: முஸ்லிம்

'எவர் ஜோதிடனிடம் வந்து அவன் கூறுபவற்றை உண்மைப்படுத்துவாரோ அவர் முஹம்மது தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார்” என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - (ரலி) நூல்: அபூதாவூத்

'பறவை சகுனம் பார்ப்பவன் அல்லது பார்க்கக் கோருபவன் அல்லது குறிபார்ப்பவன் அல்லது குறி பார்க்கக் கோருபவன் அல்லது சூனியக்காரன் அல்லது சூனியம் பார்க்கக் கோருபவன் நம்மைச் சார்ந்தவனல்ல. எவன் ஜோதிடனிடம் வந்து அவன் கூறியதை உண்மையென நம்புவானோ அவன் முஹம்மது தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கிவைக்கப் பட்ட(வேதத்)தை நிராகரித்து விட்டான்” என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூசைன் - (ரலி) நூல்: (பஜ்ஜாருக்குரிய) முஸ்னது கபீர்

படிப்பினைகள்:-

1. குர்ஆனைக் கொண்டு ஈமான் கொள்வது. ஜோதிடனை உண்மைப் படுத்துவது இவை இரண்டும் ஒரே சமயத்தில் ஒன்று சேராது.

2. ஜோதிடம் போன்றவற்றை உண்மைப் படுத்துவது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும்.


சூனியத்தை எடுப்பது பற்றிய விபரம்

ஹதீஸ்கள்:-

(அறியாமைக் காலத்தில்) சூனியத்தை நீக்க கையாளப்பட்டு வந்த முறைபற்றி நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவப் பட்டார்கள் அப்போதவர்கள் அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் - (ரலி) நூல்: அஹ்மது அபூதாவூத்

இமாம் அஹ்மதும் அதுபற்றிக் கேட்கப்பட்டார்கள் அதற்கவர்கள் இவை ஒவ்வொன்றையும் இப்னு மஸ்ஊது அவர்கள் வெறுத்தார்கள் என கூறினார்கள் என்று அபூதாவூத் அறிவிக்கிறார்கள்.

கதாதா அவர்கள் கூறுகிறார்கள்:- நான் இப்னுல் முஸய்யபிடம் சூனியத்தால் பாதிக்கப்பட்ட ஓர் ஆடவர் அல்லது (சூனியத்தால்) தன் மனைவியிடம் உடலுறவு கொள்ள முடியாது தடுக்கப்படுகிறார் இவரை விட்டும் அது நீக்கப்பட ஏதும் செய்யலாமா? எனக் கேட்டேன் ஆம்! அதைச் செய்வது பரவாயில்லை (இதனால்) அவர்கள் நாடுவதெல்லாம் (பிறருக்கு) நன்மையைச் செய்வதைத்தானே எனவே (மக்களுக்கு) நன்மையளிக்கும் ஒன்றைத் தடுக்கப்படாது எனக் கூறினார். நூல்: புகாரீ

சூனியத்தை சூனியம் செய்பவனைத் தவிர (வேறு யாரும்) எடுக்கமாட்டார்கள் என ஹஸன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னுப் கைய்யிம் அவர்கள் கூறுகிறார்கள் சூனியத்தை எடுக்க கையாளப்படும் முறைகள் இரண்டு. ஒன்று: அது போன்ற சூனியத்தைக் கொண்டே சூனியத்தை எடுப்பது இது ஷைத்தானின் செயலாகும். (ஏனெனில் ஷைத்தானுக்கு உவப்பான காரியங்களினால் சூனியம் எடுக்கப்படுகிறது) இந்த முறையினைப் பற்றியே ஹஸன் அவர்களும் மேலே கூறியுள்ளார்கள். இரண்டு: அல்லாஹ்வின் திருவசனங்களால் மந்திரித்தும் அனுமதிக்கப்பட்ட துஆக்களை ஓதியும் மருந்துகளை உபயோகித்தும் சூனியத்தை எடுப்பது. இந்த முறையினைத்தான் இஸ்லாம் நமக்கு அனுமதி அளித்துள்ளது.

படிப்பினைகள்:-

1. சூனியத்தை எடுக்க அறியாமைக் காலத்தில் கையாளப்பட்டு வந்த முறைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2. மேலே கூறப்பட்டுள்ள இரு முறைகளை விளங்கிக் கொள்வது ஒன்றில் இஸ்லாம் அனுமதி கொடுத்து மற்றொன்றைத் தடுத்துள்ளது.



துர்ச்சகுனம் பார்ப்பது பற்றிய விபரம்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்றுகள்:-

பின்னர் அவர்களுக்கு (யாதொரு) நன்மை வருமானால் இது எங்களுக்கே உரியது எனக் கூறுகிறார்கள் மேலும் அவர்களுக்கு தீமை ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் இருப்பவர்களையும் (கொண்டு ஏற்பட்ட) துர்ச்சகுனம் என்பார்கள் அவர்களுடைய துர்ச்சகுனமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (வந்து) உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (7:131)

(நம் தூதர்கள்) உங்களுடைய துர்ச்சகுனம் உங்களுடன் தான் இருக்கிறது (எங்கள் மூலம் அல்லாஹ்வைப் பற்றி) நீங்கள் நினைவூட்டப் பட்டீர்களானாலுமா? (துர்ச்சகுனமென்று கூறுவீர்கள்?) அவ்வாறல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தார் என்று கூறினார்கள் (36:19)

ஹதீஸ்கள்:-

'(இஸ்லாத்தில்) தொற்றுநோய் என்பதில்லை துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது சஃபர் என்பதும் கிடையாது நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கூடாது கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - (ரலி) நூல்: புகாரீ முஸ்லிம்

(இஸ்லாத்தில்) தொற்று வியாதியில்லை துர்ச்சகுனம் பார்ப்பதில்லை எனினும் 'பஃலு” என்னை ஆச்சரியமடையச் செய்கிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'பஃலு' என்றால் என்ன? என்று (நபித் தோழர்களான) அவர்கள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள் 'நல்லவார்த்தை” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் - (ரலி) நூல்கள்: புகாரீ முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் சகுனம் பார்ப்பது பற்றி கூறப்பட்டது அப்போதவர்கள் அதில் மிக மேன்மையானது நல்ல வார்த்தையே ஆகும் மேலும் அது ஒரு முஸ்லிமுக்கு (விதிக்கப்பட்ட கலாகத்ரு - விதியில்) எதையும் மாற்றிவிடாது எனவே உங்களில் ஒருவர் தனக்கு வெறுக்கத்தக்க ஒன்றைக் கண்டால்

அல்லாஹூம்ம! லா யஃதி பில் ஹஸனாத்தி இல்லா அன்த்த வலா யத்ஃபஉஸ் ஸய்யியாத்தி இல்லா அன்த்த வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பிக

(பொருள்: யாஅல்லாஹ் உன்னையன்றி யாரும் நல்லவைகளை (எங்களுக்கு)க் கொண்டு வரவும் முடியாத உன்னையன்றி யாரும் கெட்டவைகளை (எங்களை விட்டு)த் திரும்புதலும் (நல்லவற்றை செய்வதற்குள்ள) சக்தியும் உன்னைக் கொண்டே தவிர இல்லை) எனக் கூறுவாராக! என்று கூறினார்கள்.

துர்ச்சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் துர்ச்சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் துர்ச்சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நம்மில் எவருக்கும் அது ஏற்படாமலில்லை எனினும் அல்லாஹ் (அவன் மீது நாம் கொண்டுள்ள) தவக்குலைக் கொண்டு அதை போக்கிவிடுகிறான். அறிவிப்பாளர்: இப்ன மஸ்ஊது - ரலி நூல்: அபூதாவூத்

'எவர் ஒருவருடைய (அவர்பார்த்த) சகுனம் அவருடைய தேவையை (நிறைவேற்றி முடிப்பதை) விட்டும் திருப்பி விடுகிறதோ அவர் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்து விட்டார்” என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதனுடைய பரிகாரமென்ன? என்று (நபித் தோழர்களான) அவாகள் கேட்டார்கள் அ(தற்கு நபிய)வர்கள்

அல்லாஹூம்ம லா கைர இல்லா கைருக்க வலா தைர இல்லா தைருக்க வலா இலாஹ இல்லா கைருக்க.

(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி வேறு நன்மையில்லை உன் சகுனமின்றி வேறு சகுனமில்லை உன்னையன்றி வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறில்லை) என நீர் வுறுவதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபள்லு இப்னு அப்பாஸ் - ரலி நூல்: அஹ்மது

படிப்பினைகள்:-

1. இஸ்லாத்தில் தொற்று நோயில்லை என்பதை அறிந்து கொள்வது.

2. அபசகுனம் பார்ப்பது கூடாது என்பதை அறிவது.

3. ஆந்தை சகுனம் பார்ப்பது கூடாது என்பதை அறிந்த கொள்வது

4. ஸஃபர் போன்ற மூட நம்பிக்கையை நீக்கக் கொள்வது

5. நல்ல வார்த்தைகள் (கேட்டு அதனால் பஃலு பார்ப்பது) துர்ச்சகுனத்தைச் சார்ந்ததல்ல. அது விரும்பத்தக்கதாகும்.

பொது மக்கள் மத்தியில் துர்ச்சகுனம் பார்ப்பது பரவலாக உள்ளது உதாரணமாக ஒருவர் ஒரு வேலையை நாடி வீட்டை விட்டுச் செல்லும்போது பூனை குறுக்கே போனால் அதை அவர்கள் துர்ச்சகுனமாக எண்ணுகிறார்கள் இரு போலவே ஒரு வீட்டில் ஆந்தை கத்தினால் அந்த வீட்டில் ஏதேனும் ஆபத்து நிகழும் என் எண்ணுகின்றனர் இதுபோலுள்ள எல்லா துர்ச்சகுனம் பார்ப்பதை விட்டும் நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.



 வான சாஸ்திரம் கற்பதை பற்றிய விபரம்

கதாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை வானத்திற்கு அலங்காரமாகவும் ஷைத்தானுக்கு எரி கற்களாகவும் அதைக் கொண்டு (இருளில் பிரயாணிப்போர்) சரியான பாதைகளை அறிந்து கொள்ளும் அடையாளச் சின்னங்களாகவும் ஆக இம்மூன்றுக்காகவே படைத்துள்ளான் எனவே இவையன்றி வேறு ஏதாவது பொருளை யாரேனும் கற்பித்தால் அவர் தவறிழைத்து விட்டார் தனக்குக் கொடுக்கப்பட்ட பேற்றினை வீனடித்து விட்டார் மேலும்இ தான் அறியாத ஒன்றில் ஈடுபட்டு தன்னைக் கஷ்டத்துள்ளாக்கிக் கொண்டார்.

ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவத்துள்ளார்கள்: சந்திரனின் படிநிலைகளை கற்பதை கதாதா அவர்கள் வெறுத்துள்ளளார்கள். இமாம் இப்னு உயைனா அதில் அனுமதியே தரவில்லை.

இமாம் அஹ்மது பின் ஹன்பலும் இஸ்ஹாக் அவர்களும் சந்திரனின் படிநிலைகளைப் பற்றி படிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.

ஹதீஸ்:

தொடர்ந்து மதுபானம் அருந்துபவர் சூனியத்தை உண்மைபடுத்துபவர் சொந்த பந்தங்களை துண்டித்து நடப்பவர் ஆக இம்மூவரும் சொர்க்கம் புகமாட்டார்கள். அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அஷ்அரீ - ரலி நூல்: முஸ்னத் அஹ்மது

படிப்பினைகள்:-

1. எந்த நோக்கத்திற்காக அல்லாஹ் நட்சத்திரங்களை படைத்துள்ளான் என்பதை அறிந்து கொள்வது

2. நட்சத்திர சூரிய சந்திர படிநிலைகளைப் பயிலும் விஷயத்தில் இமாம்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

3. சூனியத்தின் வகைகளில் ஒன்றை மெய்ப்படுத்துபவனுக்கு கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.



வானில் உதயமாகும் நட்சத்திரங்களால்தான் மழை பொழிகிறது என நம்புதல் கூடுமா?

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் கூற்று:-

(அல்லாஹ் அளித்துள்ளவற்றுக்கு) உங்கள் நன்றியை நிச்சயமாக நீங்கள் பொய்ப்படுத்துவதையே (பிரதியாக) ஆக்குகின்றீர்களா? (56:82)

ஹதீஸ்கள்:-

அறியாமைக்காலமக்களின் செயலிலிருந்து நான்கு என் உம்மத்தவரிலே இருக்கிறது. அவைகளை அவர்கள் விட்டொழிக்க மாட்டார்கள். தங்களின் மூதாதையரைக் கொண்டு குலப்பெருமை கொள்வது. மற்றவரின் பரம்பரையில் குறை கூறுவது. நட்சத்திரங்களினாலேயே மழை பெய்கிறது என நம்புவது (மரணித்தவரை நினைத்து) ஒப்பாரி வைத்து அழுவது. இவ்வாறு ஒப்பாரி வைத்து அழுதவள் தாம் மரணிப்பதற்கு முன் (ஓலமிட்டழுததை தவறு என உணர்ந்து) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரவில்லையெனில் நாளை மறுமையில் உருக்கப்பட்ட செம்பில் செய்யப்பட்ட மேலங்கியையும் சொறி நோய்க் கவசமும் அவள் மீதிருக்கவே (வேதனைச் செய்யப்பட்டவளாக) எழுப்பப்படுவாள் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூமாலிக் அல் அஷ்அரி - (ரலி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஹூதைபிய்யா” என்ற இடத்தில் அன்றிரவு பெய்திருந்த மழைக்குப் பின்னால் எங்களுக்கு தொழவைத்தார்கள் (தொழுகை முடிந்து) அவர்கள் திரும்பும் போது மக்களை முன்னோக்கி 'உங்களுடைய இரட்சகன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனின் தூதருமே (அதுபற்றி) மிக்க அறிந்தவர்கள் என (தோழர்களான) அவர்கள் கூறினார்கள். அ(தற்க)வர்கள் என்னுடைய அடியார்களில் என்னை விசுவாசித்தவரும் நிராகரித்தவரும் காலைப் பொழுதை அடைந்தனர். எனவே எவர் அல்லாஹ்வின் பேரருளாலும் அவனின் கருணையாலும் நாம் மழை பொழிவிக்கப் பட்டோம் என்று (மழைபெய்த பின்னர்) கூறினாரோ அவர் என்னை விசுவாசித்து நட்சத்திரத்தை நிராகரிப்பவராவார் ஆனால் எவர் இவ்வாறு இவ்வாறான நட்சத்திரங்களினால் தான் நமக்கு மழை பொழிவிக்கப்பட்டது என்று (மழை பெய்த பின்னர்) கூறினாரோ அவர் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசங் கொண்டவராவார் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜைது பின் காலித் (ரலி) நூல்: புகாரீ முஸ்லிம்

இந்தப் பாடத்தில் உள்ள திருவசனத்தின் தொடர் இறங்கிய காரணத்தை இப்னு அப்பாஸ் - ரலி அன்ஹூமா அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்திருந்தது அப்போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களில் நன்றியுடையவர்களும் நன்றி கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று கூறினார்கள் நபித் தோழர்களில் சிலர் இந்த மழை அல்லாஹ்வின் ரஹ்மத் என கூறினார்கள் வேறு சிலர் இன்னின்ன நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று கூறினார்கள் அது சமயமே அல்லாஹ் பின்வரும் திருவசனத்தை இறக்கினான்.

நட்சத்திரங்கள் (விழுந்து) மறையுமிடங்கள் மீது நான் சத்தியம் செய்கிறேன் நீங்கள் அறிவீர்களானால் நிச்சயமாக இது மகத்தான ஒரு சத்தியமாகும் நிச்சயமாக இது கண்ணியமிக்க குர்ஆனாகும். இது (லவ்ஹூல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் (எழுதப்பட்டு) இருக்கிறது. பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள். அகிலத்தாரின் இரட்சகனால் (இது) இறக்கப்பட்டது ஆகவே இச்செய்தியை நீங்கள் இலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்களா? (அல்லாஹ் அளித்துள்ளவற்றுக்கு) உங்கள் நன்றியை நிச்சயமாக நீங்கள் பொய்ப்படுத்துவதையே (பிரதியாக) ஆக்குகிறீர்களா? (56: 75 லிருந்து 82 வரை)

படிப்பினைகள்:-

1. முதல் ஹதிஸில் வந்த நான்கு விஷயங்கள் அறியாமைக் காலத்தவர்களின் பழக்கங்களாகும். (இதை விடுவது அவசியமாகும்)

2. அதில் சிலவற்றினால் (குஃப்ரு) நிராகரிப்பு ஏற்படுகிறது.

3. சில குஃப்ருகள் இருக்கின்றன அவற்றை செய்வதினால் ஒருவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடமாட்டார் ஆனால் பெருங் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

4. அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் நேரத்தில் சிலர் காஃபிர்கள் ஆகிறார்கள். வேறு சிலர் உண்மை விசுவாசிகளாகவும் ஆகி விடுகின்றனர்.

5. மரணித்தவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதவளுக்கு கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.



அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருத்தல்

 உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்றுகள்:

நீங்கள் (உண்மையான) விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள் (5:23)

(உண்மையான விசுவாசிகள் யாரென்றால் அல்லாஹ் என (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் (இவ்வேதத்தை இறக்கி வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். தங்கள் இரட்சகன் மீதே (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பார்கள். (8:2)

நபியே! உமக்கும் விசுவாசிகளில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ் போதுமானவன். (8:64)

எவர் அல்லாஹ்வின் மீது (தன் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். (65:3)

அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலனாக இருக்கிறான். (3:173)

இந்த திருவசனத்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (காஃபிர்களால்) தீக்குண்டத்தில் அவர்கள் எறியப்பட்ட (இக்கட்டான) நேரத்தில் சொன்னார்கள். அது போலவே நபி முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிலர் உங்களுக்கு விரோதமாக (யுத்தம் புரிய) சகல மனிதர்களும் ஒன்று சேர்ந்து விட்டனர். ஆதலால் அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள் எனக் கூறிய போது இதே திருவசனத்தைத்தான் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் - ரலி அன்ஹூமா அவர்கள் கூறினார்கள்

படிப்பினைகள்:-

1. அல்லாஹ் ஒருவன் மீதே தவக்குல் வைப்பது கடமையாகும். மேலும் இது ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதை விளங்குவது.

2. 'ஹஸ்புனல்லாஹூ வ நிஃமல் வகீல்” என்ற திருவசனத்தின் முக்கியத்துவத்தினை விளங்குவதுடன் கஷ்ட காலங்களில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்இ நபி முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த வாக்கியத்தையே கூறினார்கள் என்பதையும் அறிந்து கொள்வது.

இப்னு மஸ்ஊது (ரலி) அறிவிக்கிறார்கள் பெரும் பாவங்களில் மிகப்பெரியது அல்லாஹ்வுக்கு இணை வைப்பது அல்லாஹ்வுடைய சூழ்ச்சியிலிருந்து அச்சமற்றிருப்பது அவனின் அருளில் நிராசையுறுவது ஆகியவையாகும். இதனை அப்துர் ரஜ்ஜாக் பதிவு செய்துள்ளார்கள்.

படிப்பினை:

1. அல்லாஹ்வின் தண்டனை குறித்து அச்சமற்றிருப்பவனுக்கும் அவனின் ரஹ்மத்தைக் குறித்து நிராசையுற்றவனுக்கும் கடும் எச்சரிக்கை வந்துள்ளது.



அல்லாஹ் விதித்த விதிகளின் மீது பொறுமையாக இருப்பது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உள்ளதாகும் 

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்று:-

எவர் அல்லாஹ்வை விசுவாசிக்கிறாரோ அவருடைய இதயத்திற்கு (அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டதை பொருந்திக் கொண்டு பொறுமையுடனிக்க) அவன் வழி காட்டுகிறான். அன்றியும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன் (64:11)

இந்த திருவசனத்திற்கு விளக்கமாக அல்கமா - ரலி அன்ஹூ கூறுகிறார்கள் அவர் ஓர் ஆடவர் சோதனை அவரை பீடிக்கின்றது அப்போதவர் (அதுபற்றி மனங்கலங்காமல்) நிச்சயமாக இது அல்லாஹ்விடமிருந்தாகும் என்பதை அறிந்து உடனே அதைப் பொருந்திக் கொள்கிறார். (அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கு முன்) சரணடைந்து விடுகிறார்.

ஹதீஸ்கள்:

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இரண்டு மக்களிடையே இருந்து வரும் அவ்விரண்டும் 'குஃப்ரு” எனும் நிராகரிப்புத் தன்மை உடையதாகும் (ஒன்று) மற்றவர்களின் வம்சாவளியிலே குறை கூறுவது (இரண்டு) மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்தழுவது. அறிவிப்பாளர்; அபூஹூரைரா - ரலி நூல்: முஸ்லிம்

(மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னங்களில் அடித்துக் கொண்டவரும் சட்டைகளைக் கிழித்துக் கொண்டவரும் (குலவெறி கோத்திர வெறியூட்டுவதின் பால் மக்களை அழைத்தல் மற்றும் கேடு உண்டாக! நாசம் உண்டாக! என்பன போன்ற வார்த்தைகள் கூறுதல் போன்ற) அறியாமைக் காலத்தவருடைய அழைப்பைக் கொண்டு அழைப்பவரும் நம்மைச் சார்ந்தவரல்லர் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது (ரலி) நூல்கள்: புகாரீ முஸ்லிம்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன் அடியாருக்கு நன்மையை நாடுவனாயின் (அவன் பாவத்திற்குரிய) தண்டனையை இவ்வுலகத்திலேயே கொடுத்து விடுவான். மேலும் தன் அடியானுக்கு தீங்கை நாடுவானாயின் அவனை விட்டும் பாவத்திற்குரிய தண்டனையை (இவ்வுலகத்தில் தராமல்) தடுத்துக் கொள்கிறான் கடைசியாக இறுதி நாளில் (எல்லா பாவங்களுக்குமாகச் சேர்த்து) நிறைவான தண்டனையைத் தருவான். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: திர்மிதீ

மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அதிகமான கூலி (அல்லாஹ்விடமிருந்து கிடைப்பது) அதிகமான (அவனிடமிருந்து ஏற்பட்ட) சோதனையி(னைத் தாங்கிக் கொள்வத)னாலாகும். மேலும் நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமூகத்தாரை விரும்பும்போது அவர்களை சோதிக்கிறான். ஆகவே (அவர்களில்) எவர் (அச்சோதனையை அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது என பொறுமையுடன்) பொருந்திக் கொள்வாரோ அவருக்கு (அல்லாஹ்வுடைய) பொருத்தமுண்டு. எவர் (பொருமையிழந்து) அதிருப்தி அடைந்தாரோ அவருக்கு (அல்லாஹ்வுடைய) அதிருப்தி உண்டு. நூல்: திர்மிதீ

படிப்பினைகள்:-

1. பிற மக்களின் பாரம்பரியத்தில் குறை கூறலாகாது.

2. (மரணித்தவரை நினைத்து) ஒப்பாரி வைத்து அழுவது கன்னத்தில் அடித்து அழுவது சட்டைகளை கிழிப்பது முட்டாள் தனமாக புலம்புவது ஆகியவை இஸ்லாத்திற்கு முரணான காரியங்களாகும்.

3. அல்லாஹ் அடியானை சோதிப்பது அல்லாஹ் அடியானுக்கு நல்லதை நாடியுள்ளான் என்பதற்கு அறிகுறியாகும்.

4. அல்லாஹ்வின் சோதனைகளை அதிருப்தியுறுவது ஹராமாகும்.

5. அல்லாஹ் விதித்த துன்பங்களைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்பவருக்கு அதிக கூலி உண்டு.

6. அல்லாஹ் அடியானை சோதிப்பது அவன் அடியானை நேசிப்பதின் அறிகுறியாகும்.


முகஸ்துதி மறைமுக ஷிர்க்காகும் என்பது பற்றிய விளக்கம்

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் கூற்று:-

(நபியே!) நீர் கூறுவீராக நிச்சயமாக நான் உங்களைப் போன்று ஒரு மனிதன்தான் நிச்சயமாக உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீமூலம் அறிவிக்கப்படுகிறது ஆகவே எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்கருமங்களைச் செய்யவும் தன் இரட்சகனின் வணக்கத்தில் அவர் யாரையும் இணையாக்க வேண்டாம். (18:110)

ஹதீஸ்கள்:-

'எனக்கு இணையாக ஆக்கப்பட்டவர்களின் இணையை விட்டும் நான் தேவையற்றவன் எவர் ஒரு வணக்கத்தைச் செய்து - அதில் என்னுடன் என்னல்லாத(மற்ற)வரையும் - கூட்டாக்கி விடுவாரோ நான் அவரையும் அவரால் எனக்கு இணையாக ஆக்கப்பட்டவரையும் விட்டுவிடுவேன்” என உயர்வானவனாகிய அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

'என்னிடம் தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான)அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள் (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கிறார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார் (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.

படிப்பினைகள்:-

1. வணக்கங்களில் முகஸ்துதி புகுந்துவிடுமெனில் அவ்வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

2. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடையே முகஸ்துதி நிகழ்வதை பயந்துள்ளார்கள்.



மனிதன் தான் செய்யும் செயலைக் கொண்டு உலக வாழ்க்கையை நாடுவது ஷிர்க்கைச் சார்ந்ததாகும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்று:-

எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்(களுக்குரிய பலன்)களை இ(வ்வுலகத்)திலேயே நாம் பூரணமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம் அவர்களோ அதில் குறைவு செய்யப்படமாட்டார்கள் இத்தயையோர்தாம் - அவர்களுக்கு மறுமையில் (நரக) நெருப்பைத் தவிர (வேறு ஒன்றும்) இல்லை அவர்கள் அ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்தும் விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணானவையாகும் (11:15,16)

ஹதீஸ்:-

(தீனாரை - பொற்காசை நாடி போர் புரியும்) தீனாரின் அடிமை நாசமாவானாக! (திர்ஹமை - வெள்ளிக்காசை நோக்கமாகக் கொண்டு போர் புரியும்) திர்ஹமின் அடிமை நாசமாவானாக! போர்வை பருத்தி ஆடை போன்றவற்றிற்காகப் போர்புரிபவனும் நாசம் அடைவானாக! (இந்த எண்ணத்துடன் போர் புரிபவனுக்கு போர் முடிந்ததும்) ஏதேனும் (அவர் விரும்பியது) கொடுக்கப்பட்டால் திருப்தியுறுவார் (அவர் விரும்பியதிலிருந்து) அவருக்குக் கொடுக்கப்படவில்லையெனில் அதிருப்தியுறுவார் இன்னும் நாசமாவானாக! நஷ்டமடைவானாக! (அவனது பாதத்தில்) முள்தைத்து விட்டால் அந்த முள் எடுக்கப் படாமலிருக்கட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (இது போன்றுள்ளவர்களைப் பழித்து துஆச் செய்து) கூறினார்கள்.

(இதற்கு மாறாக அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நாடி அல்லாஹ்வின் வழியில் போர் புரியும் அடியானை பின் வருமாறு புகழ்ந்துள்ளார்கள்) தலைவிரி கோலமாக தன்னிருபாதங்களில் புழுதிபடிய அல்லாஹ்வின் பாதையில் தன் குதிரையின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டுசெல்லும் அடியானுக்கு நற்செய்தி உண்டாவாதாக! அவருக்கு சுகவாழ்வு அமையட்டுமாக! (இப்படிப்பட்டவரை) படைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடச் செய்தால் அ(தைச் செய்வென நிறைவேற்றி பாதுகாப்ப)தில் (நிலையாக) இருப்பார். படைகளின் பின்பகுதியில் நின்(று படைகளை பாதுகாக்கும்படி ஏவப்பட்டாரென்)றால் அ(தையும் செவ்வென நிறைவேற்றி பாதுகாப்ப)தில் (நிலையாக) இருப்பார். அவர் எந்த அனுமதி தேடினாலும் அனுமதி கொடுக்கபடாது. ஒருவருக்காக சிபாரிசு செய்தால் அது ஏற்கப்படாது. (இவ்வாறு மக்களிடையே எவ்விதச் செல்வாக்கும் பெற்றிராதவர் ஆவார்) அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரீ

படிப்பினைகள்;-

1. மறு உலகத்து நன்மைகளை நாடி செய்யப்படவேண்டிய அமலைக் கொண்டு இவ்வுலக நன்மைகளை மட்டும் நாடுவது கூடாது.

2. உண்மையாக அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் மனிதனைப் பார்த்து அவருக்கு நல்வாழ்வு உண்டாவதாக! என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.


அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் விஷயத்தில் அல்லது அவன் ஹராமாக்கியதை ஹலாலாக்கும் விஷயத்தில் மக்கள் உலமாக்களுக்கோ தலைவர்களுக்கோ கீழ்படிவார்களாயின் அம்மக்கள் அவர்களைத் தங்களின் கடவுளர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் ஆவர் என்பதைப் பற்றிய விபரம்.

இப்னு அப்பாஸ் - ரலி அன்ஹூமா அவர்கள் கூறினார்கள் உங்கள் மீது வானத்திலிருந்து பாறாங்கல் ஒன்று இறங்க ஏதுவாகி விட்டது. ஏனெனில் நான் அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக கூறுகிறேன் நீங்களோ (அதற்கு மாறாக அபூபக்கர் மற்றும் உமர் அவர்கள் சொன்னதாக கூறுகின்றீர்களே!

(நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்) ஹதீஸூடைய (அறிவிப்பாளர்கள்) தொடரையும் அது சரியான தொடர்தான் என்பதையும் அறிந்தும் (அதைப் புறக்கணித்து விட்டு) ஸூஃப்யான் அவர்களின் சொந்தக் கருத்(தை ஏற்று நடப்ப)தின்பால் செல்கின்றார்களே அத்தகைய கூட்டத்தவரைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். அல்லாஹ்வோ

ஆகவே (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகையவர்கள் (உலகில்) தாங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும் (24:63)

என்று கூறுகிறான் (இந்த வசனத்தில் உள்ள) ஃபித்னா (துன்பம்) என்றால் என்னனெ;பதை அறிவீர்களா? (இதில் கூறப்பட்டுள்ள) ஃபித்னா என்பது ஷிர்க்காகும். ஏனெனில் (தூதரான) அவருடைய சொற்களில் சிலவற்றை (அது சரியான அறிவிப்பாளர்கள் தொடரில் வந்துள்ளது என்பதை அறிந்த பின்னரும்) அவர் புறக்கணித்து விடுவாரானால் அவரது உள்ளம் (நேரான வழியிலிருந்து) சருகி தனக்கு அழிவையே உண்டாக்கிக் கொண்டவராகலாம் என இமாம் அஹ்மது பின் ஹன்பல் அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ்:-

அதிய்யி பின் ஹாதிம் - ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம் வேதக்காரர்களான) 'அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும் தங்களுடைய சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்” (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு 'நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும் அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?” எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது

படிப்பினைகள்:-

1. வணக்கம் என்றால் என்ன என்பது குறித்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அதிய்யி பின் ஹாதிம் அவர்களுக்கு அளித்த விளக்கம்.

2. இப்னு அப்பாஸ் - ரலி அன்ஹூமா அவர்கள் அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோர் குறித்து ஆட்சேபித்துக் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மது பின் ஹன்பல் அவர்கள் ஸூஃப்யான் அவர்களைக் குறித்து ஆட்சேபித்துக் கூறியுள்ளார்கள்.



அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனின் பண்புகளில் ஒன்றை மறுப்பவரை பற்றிய விபரம்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வசனம்:-

(நபியே! அவர்கள் உம்மை நிராகரிப்பது மட்டுமல்ல தங்கள் மீது அநேக அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) அர்ரஹ்மானையே நிராகரிக்கின்றனர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக அவன்தான் என்னுடைய இரட்சகன் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) ஒருவனுமில்லை (என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அவன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன் அவன்பாலே (என்) மீட்சியும் இருக்கிறது. (13:30)

ஹதீஸ்கள்:-

(அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனின் பண்புகளைப்பற்றி) மக்களுக்கு நீங்கள் கூறும் போது அவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடியவற்றையே கூறுங்கள் (மாறாக அவர்களுக்கு விளங்காத ஒன்றைக் கூறி) அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சொற்கள் பொய்ப்பிக்கப்படுவதை நாடுகின்றீர்களா? (அவ்வாறு நீங்கள் கூறாதீர்கள்) என அலீ - ரலி அன்ஹூ கூறினார்கள். நூல்: புகாரீ

ஒருவர் சிபாத்தென்னும் அல்லாஹ்வின் தன்மைகளை பற்றி எடுத்துரைக்கும் ஹதீஸைக் கேட்டபோது அதைப் புறக்கணித்து கையை உதறி மறுத்தார். இவரைப்பற்றி இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள். இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? தெளிவான பொருளுடைய திருவசனங்களை பார்க்கும் போது அவர்களுக்கு கனிவு ஏற்படுகிறது. பல பொருட்களை தன்னகத்தே கொண்ட திருவசனங்களை பார்க்கும் போது இவர்கள் அழிந்து விடுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விற்குரிய அர்ரஹ்மான் என்ற பெயரைக் கூறிய பொழுது அதைக் குரைஷி வர்க்கத்தினர் நிராகரித்தனர் அது சமயம் அவர்கள் அர்ரஹ்மானை நிராகரிக்கின்றனர் என்ற பொருளுடைய (13:30) வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

படிப்பினைகள்:-

1. அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனின் தன்மைகளில் ஒன்றை மறுப்பவருக்கு உண்மையான ஈமானில்லை.

2. மக்களுக்குப் புரியாத ஒன்றை கூறுவது கூடாது.

3. காரணம் அவ்வாறு கூறுகையில் அது அல்லாஹ்வையும் ரசூலையும் பொய்ப்பிக்க காரணமாக மாறி விடுகிறது.

4. அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனின் சிபாத்தென்னும் தன்மைகளில் ஒன்றை மறுத்தவரைப் பார்த்து அவர் அழிந்து விட்டார் என இப்னு அப்பாஸ் - ரலி அன்ஹூமா அவர்கள் கூறியிருப்பதை அறிந்து கொள்வது.



ஒரு விஷயத்தில் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்தும் அதைத் திருப்திபடாதவர்

ஹதீஸ்:-

நீங்கள் உங்கள் தாய் - தந்தையர் மீது சத்தியம் செய்யாதீர்கள்! சத்தியம் செய்பவர் உண்மையான விஷயத்தில் சத்தியம் செய்வாராக! அல்லாஹ்வைக் கொண்டு ஒரு விஷயத்தில் (யாருக்காவது) சத்தியம் செய்யப்பட்டால் அதை அவர் திருப்திபட்டுக் கொள்வாராக! அவ்வாறு திருப்திபட்டுக் கொள்ளாதவர் அல்லாஹ்வை விட்டும் நீங்கியவரே! என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் - ரலி நூல்: இப்னுமாஜா

படிப்பினைகள்:-

1. தாய் - தந்தையர் மீது சத்தியம் செய்வது கூடாது.

2. எவருக்காகச் சத்திய பிரமாணம் எடுக்கப்பட்டதோ அவர் (இனி அல்லாஹ்வின் பொறுப்பு எனச் சொல்லி) திருப்திபடாமல் இருந்தால் அவருக்கு எச்சரிக்கை வந்துள்ளது.



அல்லாஹ் நாடியதும் நீர் நாடியதும் நடந்தது அல்லது நடக்கும் என்று ஒருவரை நோக்கிக் கூறுவது கூடாது.

ஹதீஸ்கள்:-

நிச்சயமாக ஒரு யூதன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கிறீர்கள் (ஏனெனில்) நீங்கள் பிறரை நோக்கி அல்லாஹ் நாடியதும் நீர் நாடியதும் நடந்தது என்று கூறுகிறீர்கள் மேலும் நீங்கள் (அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யாது) கஃபாவின் மீது சத்தியமாக! என்றும் கூறுகிறீர்கள் எனக் கூறினான். உடனே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் தோழர்களான) அவர்களிடம் சத்தியம் செய்ய அவர்கள் நாடினால் கஃபாவுடைய இரட்சகன் மீது சத்தியமாக! என அவர்கள் கூற வேண்டும் எனவும் (நடந்தேறி விட்ட ஒரு காரியத்தில்) அல்லாஹ் நாடியபடி நடந்தது பின்னர் நீர் நாடியபடியும் நடந்தது என்று அவர்கள் கூறவேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர்: குதைலா - ரலி நூல்: நஸயீ

நிச்சயமாக ஓர் ஆடவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் நாடியதும் நீங்கள் நாடியதும் நடந்தது என கூறினார் உடனே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் என்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குகிறீரா? அல்லாஹ் - அவன் ஒருவன் நாடியதே நடந்தது என்று கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் - ரலி நூல்: நஸயீ

அன்னை ஆயிஸா அவர்களின் தாய்வழிச் சகோதரரான துஃபைல் - ரலி அன்ஹூ கூறுகிறார்கள் நிச்சயமாக நான் யூதர்கள் சிலரின் பக்கம் வந்து நிச்சயமாக நீங்கள் உஜைர் - அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய மகன் எனச் சொல்லாதிருந்தால் (உலகில்) நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த சமுதாயத்தவர்தான் என்று கூறுவது போன்று (ஒரு நாள்) கனவு கண்டேன் (இதற்கு பதில் சொல்வது போன்று) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ் நாடியதும் முஹம்மது நாடியதும் நடந்தது எனச் சொல்லாதிருந்தால் நிச்சயமாக நீங்களே சிறந்த சமுதாயத்தவர் என்று அவர்கள் கூறினார்கள். பின்னர் (அதே கனவில்) கிறிஸ்தவர்கள் சிலரின் பக்கம் வந்து நிச்சயமாக நீங்கள் ஈஸா - அலைஹிஸ் ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் மகன் எனக் கூறாதிருந்தால் நீங்களே சிறந்த ஒரு சமுதாயத்தவர்கள் எனக் கூறினேன் (இதற்கு பதில் சொல்வது போன்று) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ் நாடியதும் முஹம்மது நாடியதும் நடந்தது எனச் சொல்லாதிருந்தால் நிச்சயமாக நீங்களே சிறந்த சமுதாயத்தவர் என்று அவர்கள் கூறினார்கள். பின்னர் நான் அதிகாலைப் பொழுதை அடைந்ததும் இ(க்கனவில் நான் கண்ட)தை சிலரிடம் கூறினேன். பின்னா; நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதை அவர்களுக்கு அறிவித்தேன் அதை வேறு யாரிடமாவது அறிவித்தீரா? எனக் கேட்டார்கள் ஆம்! என்று நான் கூறினேன் உடனே அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி விட்டு (மக்களுக்கு உபதேசிப்பவர்களாக) நிச்சயமாக துஃபைல் அவர்கள் ஒரு கனவை கண்டார் உங்களில் சிலருக்கு அதுபற்றி அறிவித்தும் இருக்கிறார் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த சில வார்த்தைகளை இன்னின்ன சில காரணங்களால் அதை விட்டும் உங்களை நான் தடுக்காமலிருந்தேன். (ஆனால் இப்போது அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது) எனவே நீங்கள் 'அல்லாஹ் நாடியதும் முஹம்மது நாடியதும் நடந்தது” எனக் கூறாதீர்கள் மாறாக அல்லாஹ் - அவன் ஒருவன் நாடியதே நடந்தது எனக் கூறுங்கள் என்று கூறினார்கள். நூல்: இப்னுமாஜா

படிப்பினைகள்:-

1. ஒரு விஷயம் நிறைவேறுவதில் அல்லாஹ்வுடன் பிறரையும் சேர்த்துக் கூறுவது சின்ன ஷிர்க்காகும் என்பதை பிற சமுதாய மக்களான யூதர்கள் கிறிஸ்தவர்களும் கூட விளங்கி இருந்தனர்.

2. இவ்வாறு கூறுவது பெரிய ஷிர்க் அல்ல சிறிய ஷிர்க்காகும்.

3. நல்ல கனவுகள் அல்லாஹ்வுடைய வஹியின் வகைகளில் ஒன்றாகும்.

4. இப்படிப்பட்ட நல்ல கனவுகள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் புதிய சட்டங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது

5. அல்லாஹ் நாடியதும் நீங்கள் நாடியதும் நடந்தது என்று ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துக் கூறியதற்கே நீர் என்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குகிறீரா? என கூறியிருக்கிறார்கள் என்றால் 'படைப்புகளில் சிறந்தவரான நபியே! சோதனை இறங்கும் வேளையில் உங்களைத் தவிர வேறு யாரிடத்தில் ஒதுங்குவேன்? என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம அவர்களைப் பார்த்துக் கூறுபவருக்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.



காலத்தை ஏசியவர் அல்லாஹ்வை சங்கடப்படுத்தியவராவார்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்று:-

இது நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு) இல்லை (இதில்தான்) நாம் இறந்து விடுகிறோம் இன்னும் ஜீவிக்கிறோம் காலத்தைத் தவிர (வேறெதுவும்) நம்மை அழிப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள் (45:24)

ஹதிஸ்:

காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள் காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலி நூல்: புகாரீ

படிப்பினைகள்:-

1. (துன்பங்கள் ஏற்படும் பொழுது) காலத்தை ஏசுவது கூடாது.

2. காலத்தை ஏசுபவன் அல்லாஹ்வுக்கு அநீதியிழைத்தவனாவான்.



அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைப் பற்றிய விளக்கம்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வசனம்:-

இன்னும் அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன ஆகவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள் அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள் (7:180)

விளக்கம்:

இப்னு அப்பாஸ் - ரலி அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது அரபியர்கள் மத்தியில் மிக பிரபல்யமாக இருந்த 'அல்லாத்” என்ற சிலையின் பெயராகிறது அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ள அல்இலாஹ் என்ற பெயரிலிருந்து வந்தது என்றும் 'அல்உஜ்ஜா” என்ற சிலையின் பெயராகிறது அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ள அல்அஜிஸ் என்ற பெயரிலிருந்து வந்தது என்றும் அந்த அரபி காஃபிர்கள் எண்ணி அந்த சிலைகளை அல்லாஹ்வுக்கு இணையாக்கலானார்கள்.

படிப்பினைகள்:-

1. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன.

2. அந்த திருநாமங்களின் மூலம் அல்லாஹ்விடம் துஆச் செய்யும்படி அவன் கட்டளையிட்டுள்ளான்.

3. இந்த திருவசனங்களில் அல்லாஹ்வுக்கு இணை ஆக்குபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.



யாஅல்லாஹ்! நீ நாடினால் பிழை பொருத்தருள்வாயாக! என துஆச் செய்வது கூடாது.

ஹதீஸ்கள்:-

உங்களில் எவரும் யாஅல்லாஹ்! நீ நாடினால் பிழை பொருத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! நீ நாடினால் எனக்கு கிருபை செய்வாயாக! என்று கூறவேண்டாம். அவர் கேட்பதை (அல்லாஹ் கொடுப்பான் என்ற) மன உறுதியோடு கேட்கட்டும்! நிச்சயமாக அல்லாஹ்வை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலி நூல்: புகாரீ

இன்னொரு ஹதீஸில் வருகிறது (அல்லாஹ்விடம் துஆச் செய்பவர் தனது துஅவை அல்லாஹ் ஒப்புக் கொள்வான் என்ற) ஆவலை (அல்லாஹ்வின்பால்) அவர் பெரிதாக்கிக் கொள்வாராக! ஒருவரின் துஆவை ஏற்று அவருக்கு வெகுமதிகள் அளிப்பது அல்லாஹ்வுக்கு பெரிய காரியமல்ல என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நூல்: முஸ்லிம்

படிப்பினைகள்:-

1. நீ நாடினால் மன்னித்தருள்வாயாக! ஆபத்தை நீக்குவாயாக! ரஹ்மத் செய்வாயாக! என துஆச் செய்வது கூடாது. காரணம் அல்லாஹ்வின்பால் நாம் வைத்திருக்கும் மன உறுதியையும் நம் தேவையையும் இது குறைவாக்கிக் காட்டுகிறது.

2. துஆவுக்கு அல்லாஹ் பதிலளிப்பான் என மன உறுதியுடன் கேட்க வேண்டும்.

3. துஆச் செய்யும் பொழுது அல்லாஹ்வின்பால் நாம் ஆவலை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.



ஒருவர் தன் பணியாட்களைப் பார்த்து இவர் என் அடிமை இவள் என் அடிமைப்பெண் எனச் சொல்வது கூடாது.

ஹதீஸ்:

உங்களில் ஒருவர் (மற்றொருவரின் பணியாளைப் பார்த்து) நீ உன் ரப்புக்கு (முதலாளிக்கு) உணவு பாரிமாறு! உன் ரப்புக்கு உளுவு செய்ய தண்ணீர் ஊற்று என்று சொல்லாதீர்கள் மேலும் பணியாள்இ (தன் முதலாளியைப் பார்த்து இவர்) என் முதலாளி எனக்கு பொறுப்பாளி என்று கூறுவாராக! மேலும் (முதலாளிகள் தன் பணியாட்களைப் பார்த்து இவர் என் அடிமை இவள் என் அடிமைப் பெண் எனக் கூறாது) இவன் என் பணியாள் இவள் என் பணிப்பெண் இவர்கள் என் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவர்கள் எனக் கூறுவாராக! என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலி நூல்: புகாரீ

படிப்பினைகள்:-

1. ஒருவர் தன் பணியாட்களைப் பார்த்து இவர்கள் என் அடிமைகள் எனக் கூறக் கூடாது.

2. ஒரு பணியாள் தன் முதலாளியை இவர் என் ரப்பு என்று கூறுவது கூடாது.

3. இவ்வாறு அவர் என் ரப்பு இவர்கள் என் அடிமைகள் என்று சொல்வது கூடாது என்பதன் குறிக்கோள் எல்லோரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற தவ்ஹீதை வார்த்தைகளிலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும்.



அல்லாஹ்வின் திருமுகத்தைக் கொண்டு சொர்க்கத்தைத் தவிர வேறொன்றையும் கேட்கக் கூடாது.

ஹதீஸ்:

அல்லாஹ்வுடைய திருமுகத்தின் பொருட்டால் சொர்க்கத்தை தவிர வேறொன்றையும் கேட்கக் கூடாது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் - ரலி நூல்: அபூதாவூத்

படிப்பினைகள்:-

1. அல்லாஹ்வின் திருமுகத்தைக் கொண்டு சொர்க்கத்தையே கேட்க வேண்டும்.

2. அல்லாஹ்வுக்கு முகம் உண்டு என நம்புவது.



இடையூறு ஏற்படின் இவ்வாறு செய்திருந்தால் அவ்வாறு செய்திருந்தால் ஏற்பட்டிருக்காதே என சொல்வது கூடாது.

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் வசனங்கள்:-

(நயவஞ்சகர்களான) அவர்கள் நம்மிடம் ஏதும் இருந்திருந்தால் இங்குவந்து (இவ்வாறு) நாம் கொல்லப்பட்டிருக்கமாட்டோம் எனக் கூறுகின்றனர். (3:154)

அத்தகையோர் (யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கள் வீட்டில்) உட்கார்ந்து கொண்டே (யுத்தத்தில் இறந்து போன) தங்கள் சகோதரர்களைப்பற்றி அவர்களும் எங்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் (யுத்தத்திற்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என்றும் கூறுகின்றனர். (3:168)

ஹதீஸ்:

உமக்கு பயனளிப்பவற்றில் நீர் பேராசை உள்ளவராக இருப்பீராக! அல்லாஹ்விடத்தில் உதவி தேடுவீராக! உமக்கு இடையூறு ஏதும் ஏற்படின் நிச்சயமாக நான் இவ்வாறு செய்திருந்தால் அவ்வாறு ஏற்பட்டிருக்காதே! எனக் கூறாதீர்! மாறாக அல்லாஹ் நாடியதே நடந்தது எனக் கூறுவீராக! ஏனெனில் அவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு செய்திருந்தால் (அது ஏற்பட்டிருக்குமே! இது ஏற்பட்டிருக்காதே!) எனக் கூறுவது ஷைத்தானின் செயலுக்கு திறவு கோலாகும் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா - ரலி நூல்: முஸ்லிம்

படிப்பினைகள்:-

1. இடையூறு ஏற்படின் அவ்வாறு இருந்தால் இவ்வாறு இருந்தால் என்று சொல்வது கூடாது.

2. காரணம் இவ்வாறு கூறுவது ஷைத்தானின் செயலுக்கு வழிகாட்டியாகும்.

3. மாறாக எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்தது என்று கூறுவதுதான் ஒரு விசுவாசியின் தன்மையாகும்.

4. அல்லாஹ்விடத்தில் எதிலும் நிராசையாகி விடக்கூடாது.

5. அல்லாஹ்விடத்தில் உதவி தேடுவதுடன் பயன் அளிப்பவைகளில் பேராசையாக இருப்பது.


 காற்றை ஏசுவது கூடாது

ஹதீஸ்:

நீங்கள் காற்றை ஏசாதீர்கள்! காற்றின் மூலம் வெறுக்கத்தக்க ஒன்றைக் கண்டால்

””அல்லாஹூம்ம இன்னா நஸ்அலுக மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வ கைரி மா ஃபீஹா வ கைரி மா உமிரத் பிஹி வ நஊது பிக மின் ஷர்ரி ஹாதிஹிர் ரீஹி வ ஷர்ரி மாஃபீஹா வ ஷர்ரி மா உமிரத் பிஹி ”” என்று கூறுங்கள்.

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் இந்த காற்றினுடைய நன்மையை அதிலே உள்ள நன்மையை மற்றும் எதற்காக அது ஏவப்பட்டுள்ளதோ அதன் நன்மையையும் கேட்கிறோம். இன்னும் இந்த காற்றினுடைய தீமை அதிலே உள்ள தீமை மற்றும் எதற்காக அது ஏவப்பட்டுள்ளதோ அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நாங்கள் காவல் தேடுகிறோம்.

படிப்பினைகள்:-

1. காற்றை ஏசுவது கூடாது.

2. வெறுக்கத்தக்க ஒன்று காற்றின் மூலம் ஏற்படுவதை பயந்து மேற்கண்ட துஅவை ஓதிக் கொள்வது   அவசியமாகும். காரணம் நல்லதைக் கொண்டும் தீயதைக் கொண்டும் காற்று ஏவப்பட்டுள்ளது.

3. காற்று அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்டதாகும்.


எந்த இடையூறு ஏற்படினும் அல்லாஹ்வை பற்றி கெட்ட எண்ணம் கொள்ளக் கூடாது.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வசனங்கள்:-

அறியாமைக் காலத்தின் எண்ணம் போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை (தவறாக) எண்ண ஆரம்பித்து 'காரியத்தில் நமக்கேதும் உண்டா?” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு) நிச்சயமாக காரியம் - அது  அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! - என்று நபியே நீர் கூறுவீராக! (3:154)

அன்றியும் அல்லாஹ்வைப்பற்றி கெட்ட எண்ணம் எண்ணுகின்றவர்களான (வேஷதாரிகளாகிய) முனாஃபிக்கான ஆண்களையும் முனாஃபிக்கான பெண்களையும் இணைவைக்கின்ற ஆண்களையும் இணைவைக்கின்ற பெண்களையும் (அல்லாஹ்வாகிய) அவன் வேதனை செய்வான்; வேதனையின் சுழற்சி அவர்கள் மீதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான். அவர்களைச் சபித்தும் விட்டான். அவர்களுக்கு நரகத்தை தயார்படுத்தியும் வைத்திருக்கின்றான். அது செல்லுமிடத்தால் மிகக் கெட்டதாகியும் விட்டது. (48:6)

விளக்கவுரை: முதல் வசனத்தில் நயவஞ்சகர்கள் எவ்வாறு அல்லாஹ்வைப்பற்றி கெட்ட எண்ணம் கொண்டனர் என்பதை இப்னுல் கையிம் - ரஹிமஹுல்லலாஹ் - அவர்கள் கூறுகிறார்கள்:-

அல்லாஹ் தன்; ரஸுலுக்கு வாக்களித்தபடி உதவி செய்யமாட்டான் என்றும் (யுத்தத்தில் ஏற்பட்ட) துன்பங்கள் அல்லாஹ்வின் கலாக்கத்ரினாலும் அவன் யுக்தியாலும் வந்ததல்ல என்றும் அல்லாஹ் தன் மார்க்கமான இஸ்லாத்தைப் பூர்த்தியாக்கி வெற்றி பெற செய்யமாட்டான் என்றும் அல்லாஹ்வைப்பற்றி அவர்கள் கெட்ட எண்ணங்கொண்டனர்.

நிச்சயமாக இவ்வாறு கெட்ட எண்ணங் கொள்வது அல்லாஹ்வுக்கும் அவன் யுக்தியுக்கும் அவனின் புகழ்ச்சிக்கும் அவனின் உண்மையான வாக்குறுதிக்கும் பொருந்தாது.

அதிசயம் மிகைத்தும் சத்தியம் அடியோடு சென்றுவிடும் என்று எண்ணுவது அல்லது உலகத்தில் நடப்பதெல்லாம் அல்லாஹ்வின் கலாக்கத்ரின்படியே நடக்கிறது என்பதை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் கலாக்கதிரானது உண்மையான புகழ்ச்சிக்குரிய அவனின் யுக்தியால் அமைந்ததாகும் என்பதை மறுப்பது மேலும் கலாக்கதிரானது வெறும் நாட்டமேயின்றி வேறொன்றுமில்லை என எண்ணுவது ஆகிய இந்த எண்ணங்கள் எல்லாமே காஃபிர்களின் எண்ணங்களாகும். இப்படியான காஃபிர்களுக்கு நகர ஓடை காத்திருக்கிறது.

அதிகமான மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட காரியத்திலும் அல்லாஹ்வைப்பற்றி கெட்ட எண்ணம் கொள்கின்றனர். உண்மையாக அல்லாஹ்வை நன்கறிந்தவர்கள்தான் இவ்வாறான எண்ணங்களை விட்டும் ஈடேற்றம் அடைந்தவர்கள்.

இவற்றை எல்லாம் தமக்கு நல்லுபதேசமாக எடுத்துக்கொள்ளும் அறியுடையவனே! நீ தெளிவு பெற்றுக் கொள்வாயாக! மேலும் நீ எண்ணிய இவ்வாறான எண்ணங்களை விட்டு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்பாயாக!

மனிதனே இந்த விஷயத்தில் ஒருவனை நீ நன்றாக உற்று நோக்கினால் அவன் (தனக்கு ஏற்படும் கஷ்டகாலத்ததில்) விதியை மறுத்து அதைத் தூற்றி இவ்வாறு அவ்வாறாக இருப்பது அவசியமாகும் என்று கூறுபவனாக நீ காண்பாய். இவ்வாறு எண்ணுவது சிலருக்கு குறைவாக இருக்கலாம் சிலருக்கு அதிகமாகவும் இருக்கலாம்.

மனிதனே! இதை விட்டு நீ ஈடேற்றம் அடைந்தவன்தானா? என நீ உன்னை பற்றி சற்று சிந்தித்துப்பார்.

  
விதியை மறுப்போர் பற்றிய விரிவுரை

ஹதீஸ்கள்:

இப்னு உமர்(ரலியல்லாஹுஅன்ஹுமா) அறிவிக்கிறார்கள்:- இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! கலாகத்ரை விசுவாசம் கொள்ளாதவர் உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் ஹதீஸை எடுத்துக் கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லது கெட்டதெல்லாம் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கிறது என்பதையும் ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

உபாதா பின் சாபித்(ரலி) அவர்கள் தம் மகனைப் பார்த்து மகனே! உனக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும் உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக்கொள்ளமாட்டாய் எனக்கூறி பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள் : அல்லாஹ் கலம் எனும் எழுதுகோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட எதை எழுத வேண்டும் என அது கேட்க இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றுக்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன் எனக் கூறி மகனே! இவ்வாறு விதியை நம்பாமல் ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தாhகள். நூல் : அஹ்மது

நல்லது கெட்டது இவ்விரண்டும் அல்லாஹ் விதித்த விதியின்படியே நடக்கிறது என்று எவர் ஈமான் கொள்ளவில்லையோ அவரை அல்லாஹ் நரக நெறுப்பிலிட்டு கரித்து விடுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு வஹ்ப் அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.

இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் உபை பின் கஃபை அணுகி என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தைப் போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபைபின் கஃபு (ரலி) பின்வருமாறு கூறினார்கள் :- (இப்னு அபூதைலமியே!) நிச்சயமாக உனக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லதஹ்வின் விதியே ஆகும். அது உனக்கு வராமல் போகாது என்ற உண்மையையும் உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் அறிந்து கலாக்கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு ”நீர் கலாக்கத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்து விடுவாராயின் நீர் நரகவாசிகளில் உள்ளவரே” என்றார்கள். பின்னர் நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இதுபோலவே நபி ஸல்ல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் கூறியதாக கூறினார்கள். நூல்: முஸ்னத் இமாம் அஹ்மத் அபூதாவூத்

 உருவம் வரைவோரைப் பற்றிய விபரம்

ஹதீஸ்கள்:-

என்னுடைய படைப்புகளைப் போல் உருவாக்குபவர்களை விட அநியாயக்காரன் யாரும் உண்டா? (எவருமில்லை அவர்கள் படைக்க விரும்பினால்) ஒரு அணுவைப் படைத்துப் பார்க்கட்டும்! அல்லது ஒரு வித்தையாவது படைத்துப் பார்க்கட்டும்! அல்லது ஒரு கோதுமையாவது படைத்துப் பார்க்கட்டும்! என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் ஹதீஸ் குத்ஸியில் கூறினார்கள் அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) நூல் : புகாரி முஸ்லிம்

அல்லாஹ்வின் படைப்பைப் போல் (படைத்து) அதில் அல்லாஹ்வுக்கு ஒப்பாகின்றவர்கள் இறுதி நாளில் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) நூல் : புகாரி முஸ்லிம்

உருவம் வரைபவர்கள் அனைவரும் மறுமையில் நரகத்திலிருப்பர்; அவர்கள் வரைந்த உருவங்களுக்கு உயிரூட்டப்பட்டு அவர்ரைக் கொண்டு அவர்களுக்கு வேதனை அளிக்கப்படும். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலியல்லாஹு அன்ஹுமா. நூல் : புகாரி முஸ்லிம்

அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூஹய்யாஜ் அவர்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் எதைச் செய்யுமாறு கட்டளையிட்டு என்னை அனுப்பி வைத்தார்களோ அதைச் செய்யுமாறு உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவத்தையும் அழிக்காமல் விட்டுவிடாதீர்! உயர்ந்த கப்ர்கள் அனைத்தையும் சம்ப்படுத்தாது விட்டு விடாதீர்.



அதிகமாக சத்தியம் செய்வதைப் பற்றிய விபரம்

உயர்வானவனாகிய அல்லாஹ்வின் வசனம்:-

இன்னும் நீங்கள் உங்கள் சத்தியங்களை (பேணி)க் காப்பாறிறிக் கொள்ளுங்கள். (5; : 89)

ஹதீஸ்கள்:-

சத்தியம் செய்வது வியாபாரச் சரக்கை செலவழிக்கச் செய்யும் ஆனால் சம்பாத்தியத்தின் லாபத்தை அழித்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) – நூல்கள் : புகாரி முஸ்லிம்

மூவர் (நாளை கியாமத் நாளில்) அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. (அவர்கள் யாரெனில்) விபச்சாரம் செய்யும் வயோதிகர் பெருமை கொள்ளும் ஏழை அல்லாஹ்வை தன் வியாபாரப் பொருளாக ஆக்கிக் கொண்டு (எதையும்) எதையும் அவன் மீது சத்தியம் செய்தே தவிர வாங்கவும் செய்யாத அவன் மீது சத்தியம் செய்தே தவிர (எதையும்) விற்கவும் செய்யாத மனிதர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸல்மான்(ரலி) – நூல் : அத்தப்ரானீ

என் உம்மத்தவர்களில் சிறந்தவர்கள் என் காலத்தைச் சேர்ந்தவர்கள். பின்பு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள். பின்னர் உங்களுக்கு பின் ஒரு கூட்டத்தினர் வருவர். அவர்கள் தாமாக சாட்சி சொல்வார்கள். தாங்கள் விஷயத்திற்கு பிறரை சாட்சியாக ஏற்கமாட்டார்கள். சதி செய்வார்கள். பிறரை நம்ப மாட்டார்கள். நோர்ச்சை செய்வார்கள் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களில் உடல் பருத்தவாகள் தோன்றுவார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் அவர்களை அடுத்து வருபவர்கள் என்ற வார்த்தையை நபி(ஸல்) அவர்கள் இரு தடவை கூறினார்களா? மூன்று தடவை கூறினார்களா? என எனக்குத் தெரியாது என இந்த ஹதீஸை அறிவிக்கும் இம்றான் அவர்கள் கூறுகிறார்கள். நூல் : முஸ்லிம்

என் உம்மத்தவர்களில் சிறந்தவர்கள் என் காலத்தைச் சேர்ந்தவர்கள். பின்பு இவர்களை அடுத்து வருபவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு வகுப்பபினர் வருவர். அவர்களின் ஒருவரின் சாட்சியம் அவருடைய சத்தியத்தை முந்திவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊது(ரலி) – நூல் : முஸ்லிம்

நாங்கள் சிறுவர்களாக இருக்கையில் அவர்கள் எங்களை சாட்சி சொல்லும் படியும் உடன்படிக்கை செய்யும்படியும் அடிப்பவர்களாக இருந்தனர். (காரணம்) நாங்கள் சாட்சி சொல்ல மிகவும் அஞ்சினோம் என்று இப்றாஹீம் அந்நகயீ அவர்கள் கூறினார்கள்.



அல்லாஹ்வின் உடன்படிக்கை மற்றும் அவனுடைய நபியின் உடன்படிக்கை பற்றிய விபரம்

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் வசனம்:

இன்னும் நீங்கள் ஒருவொருக்கொருவர் உடன்படிக்கை செய்துகொண்டால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். சத்தியங்ளை அவற்றை உறுதிபடுத்திய பின்னர் உங்கள் மீது (அவற்றுக்கு) அல்லாஹ்வை பொறுப்பாகவும் ஆக்கியிருக்க நீங்கள் துண்டித்தம் விடாதீர்;கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிவான். (16 : 91)


ஹதீஸ் :

நபி(ஸல்) அவர்கள் ஒரு குழுவுக்கோ அல்லது படைக்கோ அமீரை (தலைவரை) நியமித்தால் அவருக்கு பயபக்தியையும் அவருடன் இருக்கும் முஃமின்களுக்கு நல்லதையும் உபதேசம் செய்வார்கள். நீங்கள் அல்லாஹ்வின் உதவியுடன் அவன் வழியில் போரைத் தொடங்கி அவனை நிராகரிப்பவர்களுடன் போர் செய்யுங்கள். போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களை பங்கின்றி எடுக்காதீர்கள். உடன்படிக்கையை முறிக்காதீர்கள். துண்டம் துண்டமாக யாரையும் வெட்டாதீர்கள்.

(அமீரே!) நீர் பகைவர்களை சந்தித்தால் அவர்களை மூன்று விஷயத்தின் பால் அழையும் அவற்றில் அவர்கள் செவிசாய்த்தால் நீர் போரின்றி அவர்களை விட்டு திரும்பிவிடும்.

முதலில் அவர்களை இஸ்லாத்தின்பால் அழைப்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்களாயின் நீர் ஒப்புக்கொண்டு அவர்களை தங்களின் நாட்டைவிட்டு முஹாஜிர்களின் ஊரான மதீனாவிற்கு மாறி வரும்படி அழைப்பீராக! அவ்வாறு அவர்கள் மாறி வருவார்களாயின் முஹாஸிரீன்களுக்கு என்ன உரிமைகள் உண்டோ அவ்வுரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்பதை அறிவித்து விடுவீராக! அவ்வாறு அவர்கள் மாறிவர மறுத்து விட்டால் மற்ற நாட்டு பிற முஸ்லிம்களைப் போல அல்லாஹ்வின் சட்டங்களை அவர்கள் மீது அமல் நடத்தப்படும் என்பதை அறிவித்து விடுவீராக! மேலும் அவர்களுக்கு போரின் வெற்றிப் பொருள்களிலிருந்து எந்த பங்கும் கிடையாது. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டாலே தவிர.

அப்படி அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்து விட்டால் ‘ஜிஸ்யா’ என்னும் வரியைத் தரும்படி கேட்பீராக! அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நீர் அதை ஒப்புக்கொண்டு அவர்களை விட்டு விலகிவிடும். அப்படியே ‘ஜிஸ்யா’ கட்ட மறுத்து விட்டால் அல்லாஹ்வின் உதவியுடன் போர் புரிவீராக!

மேலும் நீர் கோட்டை வாசிகளை முற்றுகையிடும் போது அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையையும் நபியின் உடன்படிக்கையையும் வேண்டினால் நீர் அவர்களை அந்த உடன்படிக்கையில் ஆக்காதீர். மாறாக உம்முடைய உடன்படிக்கையிலும் உம் தோழர்களுடைய உடன்படிக்கையிலும் ஆக்குவீராக! ஏனெனில் அல்லாஹ்வின் உடன்படிக்கையும் நபியின் உடன்படிக்கையையும் முறிப்பதை விட உம்முடைய மற்றும் உம் தோழர்களுடைய உடன்படிக்கையை முறிப்பது இலகுவானதாகும்.

மேலும் அவ்வாறு கோட்டை வாசிகளை முற்றுகையிடும் போது நீர் அவர்களை அல்லாஹ்வின் தீர்ப்பின்படி நட்த்தாட்டுமாறு அவர்கள் உம்மிடம் வேண்டினால் அப்படி செய்யாதீர்! மாறாக உம்முடைய சட்டத்தின் மீதை அவர்களை ஆக்குவிராக! ஏனெனில் நீர் அவர்களில் அல்லாஹ்வின் தீர்ப்பைப் n பற்றுக் கொள்வீரா? மாட்டீரா? என்று உமக்குத் தெரியாது. அறிவிப்பாளர் : புரைதா(ரலி) – நூல் : முஸ்லிம்.



அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதைப் பற்றிய விபரம்

ஹதீஸ்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்னவருக்கு அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் என ஒரு மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ் நான் இன்னவருக்கு மன்னிக்கவே மாட்டேன் என்று என் மீதே சத்தியம் செய்து கூறுபவன் யார்? நிச்சயமாக நான் அவனுக்கு மன்னிப்பளித்து விட்டேன். மேலும் (இப்படி உனக்கதிகாரமில்லாத இதில் சத்தியம் செய்த) உன் அமலை அழித்து விட்டேன் என அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜுன்துப் பின் அப்துல்லாஹ்(ரலி)  - நூல் : முஸ்லிம்

அபூஹுரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பில் : நிச்சயமாக அவ்வாறு சத்தியம் செய்து கூறியவர் ஓர் வணக்கசாலியாகும். இப்படி அவர் (அல்லாஹ்வின் அதிகாரத்திற்னுட்பட்ட விஷயத்தில்) கூறிய கூற்று அவரின் இம்மை மற்றும் மறுமை (வாழ்க்கை)யை அழித்துவிட்டது என வந்திருக்கிறது.


அல்லாஹ்வைக்கொண்டு அடியார்களிடம் சிபாரிசு வேண்டல் கூடாது

ஹதீஸ் :

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (மழையின்றி) உயிர்களெல்லாம் மாண்டுவிட்டன. குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றன. ஆடு மாடு ஒட்டகங்கள் அழிந்துவிட்டன. அதனால் உங்கள் இரட்சகனிடம் எங்களுக்காக மழை வேண்டி துஆச் செய்யுங்கள். அல்லாஹ்வைக் கொண்டு உங்களிடத்திலும் உங்களைக் கொண்டு அல்லாஹ்விடத்திலும் நாங்கள் சிபாரிசு வேண்டுகின்றோம் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘ஸுப்ஹானல்லாஹ் ஸுப்ஹானல்லாஹ்’ என இரு முறைக் கூறி ஆச்சர்யப்பட்டு தஸ்பீஹ் கூறக்கூடியவர்களானார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்ததினால் அவர்களின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றம் நபித்தோழர்களின் முகங்களிலும் தென்பட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் உன்மீது நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ் பற்றி என்ன நினைக்கிறீர்? நிச்சயமாக அல்லாஹ்வுடைய விஷயம் இதைவிட மிக கண்ணியத்திற்குரியது. நிச்சயமாக அல்லாஹ்வைக் கொண்டு யாருடைய சமூகத்திலும் சிபாரிசு கோரப்படலாகாது எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸுபைர் பின் முத்இம்(ரலி) – நூல் : அபூதாவூத்



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் உம்மத்தவர்களுக்கு) தவ்ஹீதடைய பகுதியை பாதுகாத்து ஷிர்க்குடைய வழிகளை அவர்கள் தடுத்தது பற்றிய விஷயம் 

ஹதீஸ்கள் :

அப்துல்லாஹ் பின் இப்னு ஷிக்கிர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் பனீ ஆமிர் என்ற கூட்டத்தினருடன் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து நீங்கள் எங்களுடைய தலைவர் (ஸெயிதுனா) என்று கூறினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வே தலைவன்’ எனக் கூறினார்கள். ‘நீங்கள் எங்களில் சிறப்பாலும் கண்ணியததாலும் உயர்ந்தவர்கள’ என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் அவ்வாறே கூறுங்கள். அல்லது இதைவிட குறைவாகவே கூறுங்கள். ஆனால் ஷைத்தான் உங்களை ஆட்கொண்டுவிட வேண்டாம் என எச்சரித்து கூறினார்கள். நூல் : அபூதாவூத்

சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்களில் மிகச்சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனாரே! எங்களுடைய தலைவரே! எங்களின் தலைவரின் மகனே! எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களே! உங்களின் சொற்களைக் கூறுங்கள். ஆனால் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள். நான் முஹம்மது. அல்லாஹ்வின் அடியான் மற்றும் அவனுடைய தூதுவனாவேன். என்னை அல்லாஹ் எந்த அந்தஸ்தில் வைத்திருக்கின்றானோ அத்தகைய என்னுடைய அந்தஸ்தைவிட (புகழ் வார்த்தையில்) உயர்த்தப்படுவதை நான் விரும்பவில்லை. (என்னை அவனின் அடியான் மற்றும் அவனின் தூதன் என புகழ்ந்தாலே போதும்) எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) – நூல் : நஸயீ 
أحدث أقدم