நபிவழியில் (ஸுன்னாவில்) நிலைத்திருப்போம்

-மெளலவி ஏ.ஜி.எம் ஜலீல் மதனி.

யா அல்லாஹ்! எம்மை நபிவழியில் (ஸுன்னாவில்) நிலைத்திருக்கும் செய்வாயாக..

நபியவர்கள் தமது 23வருட வாழ்க்கையில் நபிவழி-சுன்னத்தை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய அதேயளவுக்கு அல்லது அதைவிடவும் அதிகமாக நபிவழி ஸுன்னாவுக்கு எதிரான  இணைவைப்பு- மற்றும் மார்க்கத்தின் பேரால் அரங்கேறும் பித்அத், நூதன அனுஷ்டானம், மூடநம்பிக்கைகளையும் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள். ஸஹாபாக்களும் இதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

நபித்தோழர் ஹுதைபா (றழி) கூறுகின்றார்கள்...
மக்கள் நபியர்களிடம் நன்மையைத் பெற்றுத்தரும் காரியங்களைப் பற்றியே வினவுவார்கள். ஆனால் நானோ தீமையைப் பெற்றுத்தரும் விடயங்களைப் பற்றியே நபியவர்களிடம் அதிகம் கேட்டறிவேன். காரணம் யாதெனில் நான் நல்லதை செய்யாவிடிலும் பரவாயில்லை. தீயதில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே!  

ஒருதடவை நபியிடம் நான் யாரஸூலல்லாஹ்! நாம் அன்று ஜாஹிலிய்யத்திலும் வழிகேட்டிலும் இருந்தோம். அப்போதுதான் நீங்கள் சன்மார்க்கமான  இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினீர்கள். நாமும் அதைப் பின்பற்றியதால் தற்போது  முஸ்லிம் சமூகம் மிகச் சிறப்பானதொரு நிலையில் உள்ளது. இந்நிலை நீங்கி மீண்டும்  பழைய நிலை -ஜாஹிலிய்யத் ஏற்படுமா? என வினவியதற்கு ஆமென நபிகளார் பதிலளித்தார்கள்.

நானோ  மீண்டும் அல்லாஹ்வின் தூதரே! அந்த (நவீன ஜாஹிலிய்யத்) நிலை நீங்கி மீண்டும் பழைய நல்ல நிலை திரும்ப வருமா? என்றதற்கு.. ஆம் வரும்தான், ஆனால் முன்னால் இருந்தது போல் இருக்காது.. உம்மத்துக்குள் பலவீனம் தோன்றிவிடும் என்று சொல்ல.. அதென்ன பலவீனம் என்று கேட்டதற்கு என் உம்மத்தைச் சேர்ந்தவர்களே எனது வழிமுறைகளைப் புறக்கணித்து வேறு அனாச்சாரங்களைப் பின்பற்றுவார்கள்... அவர்கள் சில நல்லவற்றையும் செய்யக் காண்பீர்கள்.  சில தடுக்கப்பப்பவைகளையும் செய்யக் காண்பீர்.. என்றார்கள்.

அந்த நிலைக்குப் பின் திரும்பவும் முஸ்லிம் உம்மத் மார்க்கத்தில் அபாய நிலையை எதிர்கொள்ளுமா? என நான் வினவ.. ஆம்! அப்படியொரு காலம் வரும்  அக்காலத்தில் நரகின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்கள் அதிகரித்து காணப்படுவார்கள். அவர்களின் அழைப்புக்கு பதிலளிப்பவர்களை நரகுக்குள் இழுத்து தள்ளி விடுவார்கள். என்று கூறினார்கள். அப்போது யாரஸுலல்லாஹ் நான் அக்காலத்தை அடைந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென வஸிய்யத் செய்யுங்களேன் என்று கேட்டதற்கு ஆம்!! முஸ்லிம் உம்மத்தின் ஜமாஅத்- கூட்டமைப்பையும் அதன் தலைமைத்துவத்தையும் பற்றிப்பிடித்து தலைமைக்குக் கட்டுப்பட்டு பிரிந்து பிளவுபட்டு விடாமல் ஒற்றுமையாக இருப்பீராக எனக் கட்டளையிட்டார்கள்.

யாரஸுலல்லாஹ் அக்காலத்தில் முஸ்லிம் தலைமைத்தவமோ ஜமாஅத் கூட்டமைப்போ இல்லாவிட்டால்..... என்று கேட்டதற்கு அப்படியொரு நிலமை ஏற்பட்டால் வழிதவறிய அக்கூட்டங்கள் அனைத்தையும் விட்டுப் பிரிந்து தனிமையில் உனக்கு மரணம் வரும்வரை மரத்தடியில் இபாதத் செய்து கொண்டிருங்கள் என்று நபியவர்கள் வஸிய்யத் செய்தார்கள். 

-நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழி மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் பித்அத், நூதன வழிபாடுகள் சிர்க் - இணைவைப்பு சார்ந்த செயற்பாடுகள் பற்றி எச்சரிப்பதோடு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை விட்டும் விலகியிருக்க வேண்டுமெனவும் எச்சரித்திருக்கின்றார்கள்.
 
இதனால்தான் இஸ்லாத்தை கற்று தெரிந்து கொள்ள விரும்புபவர் இஸ்லாத்துக்கு எதிரானவைகள் பற்றியும் கற்றால்தான் அக்கல்வி முழுமைபெறும். இல்லாவிடில் மார்க்கமென நினைத்துச் கொண்டே அதற்கு எதிரான- நபிகள் தடுத்துள்ளவற்றைச்  செய்து மறுமையில் நன்மைக்கு பதிலாக பாவத்தை அள்ளிக்கட்டும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விடும்.

இதனால்தான் நபிவழி, ஸுன்னத், சிர்க் பித்அத் பற்றிய தெளிவுகள் சிலதை தொடர்ச்சியாக முன்வைக்கலாம் என விரும்புகிறேன்.

அல்லாஹ் அதற்கு
நல்லுதவி பாலிப்பானாக.

ஸுன்னாவைப் புறக்கணிப்பது  ஆபத்தானது.

ஒருமுறை மதீனாவில் இமாம் மாலிக்(றஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து நான் உம்ராவுக்குச் செல்ல விரும்புகிறேன். அதற்கு எவ்விடத்தில் வைத்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்று கேட்க இமாமவர்கள் எங்கு நபியவர்கள் இஹ்ராம் கட்டினார்களோ அதே இடமான துல்ஹூலைபா எனுமிடத்திலேயே செய்ய வேண்டும் என இமாமவர்கள் கூறினார்கள். அதற்கவர் இல்லை நான் நபியின்  மஸ்ஜிதான இங்கிருந்தே இஹ்ராம் கட்டப் போகின்றேன் என அடம்பிடிக்க அப்படிச் செய்யாதே! என்று மாலிக்(றஹ்) கூறியதற்கு அவர் ஏன் கூடாது?  இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்துக்கு சில மைல்தூரத்திற்கு முன்னரே நான் இஹ்ராம் கட்டுவதால் எனக்கு அதிக நன்மைதானே   கிடைக்கும் அதை ஏன் தடுக்கின்றீர்கள்?  எனக் கேட்டதற்கு  இமாமவர்கள் இல்லை! நீ பித்னாவுக்குள் விழப்போகின்றாய் என அச்சப்படுகின்றேன். மார்க்கத்தில் எதுசரி எது தவறென்ன தெரியாது குழம்பி தட்டுத் தடுமாறி வழிதவறப் போகின்றாய் என்றார்கள். இஹ்ராம் கட்டும் இடத்தை முற்படுத்துவதால் எப்படி நான் பித்னாக்காரனாக ஆகின்றேன் என எனக்குப் புரியவில்லையே! என அவர் வினவியதும் இமாமவர்கள் " நபியவர்கள் செய்துகாட்டியதை விட நீ செய்வது சிறந்ததெனக் கருதுகின்றாயே!  இதைவிடப் பெரிய பித்னா - குழப்பம் வேறென்ன இருக்கின்றது என்றார்கள்.

பின்பு பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்..
 
அந்த நபியின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தாம் பித்னா- மார்க்க குழப்பத்தில் வீழ்வதையோ அல்லது கடுமையான வேதனை அவர்களைப் பிடிப்பதையோ அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்.   ஸுரா நூர் 133. 
நூல்: ஷாத்யிபி இமாம். அல் இஃதிகாப்.

ஒருமுறை  மூத்த தாபியீன்களில் ஒருவரான ஸயீத் இப்னு முஸய்யிப் ( றஹ்) அவர்கள் மஸ்ஜிதிலே ஒருவர் பஜ்ருக்குப்பின் நிறைய றக்அத்துகள் தொழுவதைக் கண்டார்கள். அவரிடம் ( பஜ்ருக்குப் பின்னரான நேரம் தொழுவதற்குத் தடுக்கப்பட்ட நேரமாகையால் ) என்ன தொழுகை தொழகின்றீர்கள் என விசாரித்ததற்கு தான் நப்ல் தொழுவதாகத் தெரிவிக்க இந்நேரத்தில் நப்ல்- உபரியான சுன்னத் தொழக் கூடாது என்று தடுத்ததற்கு அப்படியானால் அல்லாஹ் மறுமையில் என்னை நான் தொழுத தொழுகைக்காகத் தண்டிப்பான் என்றா சொல்ல  வருகின்றீர்கள்? ஆக தொழுதவரை அல்லாஹ் அவர் தொழுதமைக்காக நரகில் போட்டு தண்டிக்கப் போகின்றான்... அப்படித்தானே? என நக்கலாக குதர்க்கம் செய்தார். அதற்கு இமாமவர்கள் ஆம்! அல்லாஹ் நிச்சயம் தண்டிப்பான். தொழுததற்காகவல்ல! நபிவழியை புறக்கணித்து அதற்கு மாற்றமாக செய்ததற்காக.... என்று பதிலளித்தார்கள்.

- ஆதாரம்   : முஸன்னபு அப்துர் ரஸ்ஸாக்.

பித்அத் என்றால் என்ன? 

நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்றுத்தராத மார்க்க விடயம் ஒன்றை இபாதத் வணக்கம் என்ற பெயரில் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாராவது செய்தால் அதற்கு நூதன அனுஷ்டானம் -பித்அத் எனப்படும். இவ்வரைவிலக்கணத்தின் ஒவ்வொரு சொல்லும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
 
1-நபிகள் கற்றுத்தராதது.
2- மார்க்க விடயத்தில் சம்பந்தப்பட்டது. 
3-இபாதத் வணக்கம் என்ற பெயரில் செய்யப்படுவது.
4-நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செய்யப்படுவது...

சிலர் பித்அத்துக்களை, சிர்க் சார் விடயங்களை நியாயப்படுத்த முன்வைக்கும் வாதம் யாதெனில் நபியவர்கள் செய்யாததெல்லாம் சிர்க் என்றால் நபியவர்கள் கார் ஒடவில்லையே! கரண்ட் பாவிக்க வில்லையே! மைக்கில் பேசவில்லையே! ஆகவே அவையெல்லாம் பித்அத்தா? சிர்க்கா? எடுத்ததற்கெல்லாம் சிர்க் என்கின்றார்கள். சறுக்கி விழுந்தாலும் சிர்க்காம்.. முறுக்கு  உண்டாலும் சிர்க்காம் அப்படியெனில் அவர்கள் ரொட்டியை உண்டு  ஒட்டகத்தில் பயணித்து குப்பிவிளக்கு வெளிச்சத்தில் வாழ வேண்டியதுதான் என்று கூறுவர்.  

இதற்கு பதில் இவை மார்க்க விடயம் சம்பந்தப்பட்டதல்ல. நன்மை கிடைக்கும் நம்பிக்கையில் செய்யப்பட்டதுமல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். 

மற்றும்  சிலர் இப்படி வாதிடுவர்..  கூட்டு ஸக்காத் ஆகும் கூட்டு உழ்ஹிய்யா ஆகும், கூட்டு நிகாஹ் ஆகும் அப்படியெனில் ஏன் கூட்டு திக்ர் கூடாது? கூட்டு துஆ  கூடாது என்று வினவுகின்றனர். 

மற்றும் சில உலமாக்கள் நபியவர்கள் ஐங்காலத் தொழுகையின்பின் கூட்டாக துஆ ஓதவில்லைதான் . கூட்டாக திக்ர் செய்ய வில்லைதான். ஆனால் இவை காலாதி காலமாக  நடந்து வருவது .. அதனால் அதைச் செய்வதில் தவறில்லை. அப்படியெனில் இவ்வளவு காலமும் இதைச் செய்து வந்த அறிஞர்கள் மார்க்கம் தெரியாதவர்களா?  அதைச் செய்த மக்கள் பாவிகளா? உங்கள் பார்வையில் நாங்கள் பித்அத் வாதிகளா? என்று வினவுகின்றனர். 

இவர்களுக்கு பித்அத் பற்றிய சரியான தெளிவூட்டல் செய்யாதது தமது தவறும்தான்....

இதற்காக இவர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரம் பின்வரும் சட்ட விதியாகும்.     الأصل بقاء ما كان على ما كان
அதாவது நீண்ட காலமாக இடம்பெற்று வந்த ஒருவிடயம் பற்றிய மார்க்க நிலைப்பாடொன்று தெளிவாக இல்லாத போது  அது தொட்டு தொட்டு இருந்துவருவதே அது ஆகுமென்பதற்கான  ஆதாரமாகம் எனக் கொள்ளலாம்  என்பது இதன் கருத்து.  

இச்சட்டம் சரியே! ஆனால் இதை இங்கு ஆதாரமாக்குவதுதான்  பொருத்தமற்றதாகும். ஏனெனில் பழைமையை ஆதாரமாகக் கொள்வது ஆகும் என்பது எப்போதெனில்  மார்க்கம் அதுபற்றி எதுவும் பேசாத போதுதான். மார்க்கம் ஒரு முறையைக் காட்டிருக்க அதை விடுத்து  நீண்டகாலமாகச் செய்யப்பட்டு வந்தமையை யாரும் ஆதாரமாகக் கொள்ள முடியாது. அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டுமென நபிகளார் மக்களை அழைத்தபோது எமது மூதாதையர் காலாகாலமாக வணங்கிய சிலைகளையே நாங்கள் வணங்குவோமென அவர்கள் பதிலளித்த வேளை அல்லாஹ் அவர்களுக்கு இப்படிச் சொல்கின்றான்..  
உங்கள் மூதாதையினர் புரியாமல் தவறாகச் செய்து வழிதவறிச் சென்றிருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவீர்களா ? என்று எச்சரிக்கின்றான்.

கூட்டுப் பிரார்த்தனை, கூட்டு திக்ர்மஜ்லிஸ் போன்றவற்றை கூட்டாக நடத்துவதானது கூட்டு ஸக்காத் , கூட்டு உள்ஹிய்யா கொடுப்பது போன்றதல்ல! 

துஆ திக்ர்கள் கலப்பற்ற இபாதத் عبادة محضة ஸக்காத் உள்ஹிய்யா போன்றவை عبادة غير محضة பொதுவான இபாதத் என்றும் சொல்லப்படும். இரண்டுக்குமான   வேறுபாடு யாதெனில் தொழுகை துஆ திக்ர் போன்றவற்றை  அவர்கள்தான் தமக்காக நிறைவேற்ற வேண்டும். ஸக்காத் உழ்ஹிய்யா போன்றவற்றை யாரும் இன்னொருவருக்காக  நிறைவேற்றலாம். இன்னொரு வகையில் விளக்குவதாயின் தொழுகை துஆ திக்ர் போன்றவை செய்யப்படும் முறை விபரிக்கப்பட்ட இபாதத். இதில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை. ஸக்காத் உள்ஹிய்யா போன்றவை நிய்யத் வைப்பதே இபாதத். நிறைவேற்ற வேறொருவரை பொறுப்பாக முடியும். 
இந்த வேறுபாடுகளை புரியாமல் சிலர் துஆ ஓதுவது இபாதத்தானே! அதை தனியாகச் செய்தால் என்ன? கூட்டாகச் செய்தால் என்ன? என்று குழம்புகின்றனர்.

நபித்தோழர் இப்னு மஸ்ஊத்( றழி) அவர்களின்  காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் இது எவ்வளவு பெரிய தவறென்பதை நன்கு தெளிவுபடுத்துகின்றது.

ஒருமுறை இப்னு மஸ்ஊத்(றழி ) அவர்களிடம் ஒருவர் ஓடோடி வந்து பக்கத்திலுள்ள மஸ்ஜிதொன்றில் சிலர் ஒன்றுசேர்ந்து நபியவர்களின் காலத்தில் நாம் கண்டிராத வித்தியாசமான முறையில் திக்ர் செய்கின்றார்கள். அதை நீங்கள் வந்து பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லுங்கள் என்றார். உடனே அவ்விடத்தை நோக்கி புறப்பட்ட இப்னுமஸ்ஊத் (றழி) அவர்கள் மஸ்ஜிதுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருக்க ஏனையோர் அவரைச்சுற்றியிருக்க திக்ர் மஜ்லிஸை நடத்தினார். நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் கூறுங்கள் என்றுகூற அவர்களும் ஒரேகுரலில் சத்தமிட்டு திக்ர் செய்தனர். இதைக்கண்ட நபித்தோழர் இப்னுமஸ்ஊத் அவர்கள் நிறுத்துங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீகள்? என வினவ நாங்கள் கூட்டாக திக்ர் செய்து அதைக் கற்களால் கணக்கிடுகின்றோம் என பதிலளித்தனர்.  நீங்கள்  செய்யும் செயலால் கிடைக்கவிருக்கும் பாவங்களை எண்ணுங்கள்...  ஏன் இவ்வளவு விரைவாக வழிகேட்டின் பக்கம் போகின்றீர்கள்?? ..
இதோ நபிகளாருடன் இருந்த தோழர்கள் நிறைவாக எம்மத்தியில் வாழ.. நபிகள் பாவித்த ஆடை இத்துப் போகக்கூட இல்லை. அவர்கள் பாவித்த பாத்திரங்கள் கூட உடைந்திடாமல்  இருக்கும் நிலையில் நபிவழிக்கு மாற்றமாக நடக்க ஆரம்பித்து விட்டீர்களே! என்று எச்சரித்தார்கள் . 

அதற்கவர்கள் நாங்கள் நல்லதைத்தானே செய்கின்றோம். திக்ர் செய்வது தவறா? என்று வாதிட்டனர். அதற்கு இப்னுமஸ்ஊத் அவர்கள் நன்மை-நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்யும் அதிகமானோர் நல்லதைச் செய்வதில்லை. அப்படித்தான் நீங்களும் ... என்று கூறி அவர்களை மஸ்ஜிதை விட்டு வெளியேற்றுமாறு கட்டளையிட அவ்வாறே வெளியேற்றப்பட்டனர். 

இச்செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் கூறுகிறார். இப்னு மஸ்ஊத் (றழி)யின் எச்சரிக்கையையும் மீறி வேறோர் இடத்தில் இவ்வாறு திக்ர் நடத்திய அவர்களில் அதிகமானோர் பின்னாளில் நஹர்வான் போரில் கலீபா அலி(றழி) க்கு எதிராகப் போராடிய கவாரிஜ் கூட்டத்தோடு சேர்ந்து  தங்களது மோசமான முடிவைத் தேடிக் கொண்டார்கள்.
ஆதாரம் ஸுனன் தாரமி 210 . 

பித்அத்தின் இறுதி முடிவு மார்க்கத்தில் வழிதவறலில் கொண்டு சேர்க்கும் என்பதற்கு இச்சம்பவம் நல்லது பாடமாகும்.
Previous Post Next Post