பெற்றோருக்கு நன்மை செய்தல்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்:

“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான செயல் எது?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

‘தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது.’ என கூறினார்கள்.

‘அதற்குப் பிறகு எது?’ என நான் கேட்டேன்.

அதற்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

‘பெற்றோருக்கு நன்மை செய்வது.’” எனக் கூறினார்கள்.

ஆதாரம்: அதபுல் முப்ரத் ஹதீஸ் எண் 1


பெற்றோரின் திருப்தியே அல்லாஹ்வின் திருப்தி:

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறினார்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளது. மேலும் அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 2

நன்மை செய்ய அதிக உரிமை பெற்றவர் யார்? :

பஹ்ஸ் இப்னு ஹகீம் அவர்கள் தனது பாட்டனார் (முஆவியா இப்னு ஹைதா ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்:

“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்,

‘அல்லாஹ்வின் தூதரே! நான் யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘உன் தாய்க்கு.’

நான் கேட்டேன்:

‘அதற்குப் பிறகு யார்?’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘உன் தாய்க்கு.’

நான் கேட்டேன்:

‘அதற்குப் பிறகு யார்?’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘உன் தாய்க்கு.’

நான் கேட்டேன்:

‘அதற்குப் பிறகு யார்?’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘உன் தந்தைக்கு. அதன் பிறகு உனக்கு நெருக்கமான உறவினர்களுக்கு.’”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 3

ஹதீஸின் தரம்: ஹஸன் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


பெற்றோருக்கு மென்மையாக பேசுதல்:

தைஸலா இப்னு மய்யாஸ் அவர்கள் கூறுகிறார்:

“நான் நஜ்தாத் (ஹவாரிஜ்கள்) கூட்டத்தினருடன் இருந்தபோது, சில பாவங்களைச் செய்தேன். அவை பெரிய பாவங்கள் என்று நினைத்தேன். அதை இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் கூறினேன்.

அவர்கள் கேட்டார்கள்:

‘அவை என்ன?’

நான் கூறினேன்:

‘இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தேன்.’

அதற்கு இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்:

‘இவை பெரிய பாவங்களில் உள்ளவை அல்ல. பெரிய பாவங்கள் ஒன்பது உள்ளன:

அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, ஒரு உயிரைக் கொல்வது, போர் நேரத்தில் பின்வாங்குவது, கற்புடைய பெண்ணை அவதூறு கூறுவது, வட்டி உண்பது, அனாதையின் சொத்தை உண்பது, பள்ளிவாசலில் தவறான செயல் செய்வது, மக்களை கேலி செய்வது, பெற்றோரை கண்ணீர் சிந்த வைப்பது.’

பின்னர் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்:

‘நரகத்தை விட்டு தப்பிக்கவும், சொர்க்கத்தில் நுழையவும் விரும்புகிறாயா?’

நான் கூறினேன்:

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஆம்.’

அவர்கள் கேட்டார்கள்:

‘உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?’

நான் கூறினேன்:

‘என் தாய் உயிருடன் இருக்கிறார்.’

அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ உன் தாயிடம் மென்மையாகப் பேசினால், அவருக்கு உணவு அளித்தால், பெரிய பாவங்களைத் தவிர்த்தால் நீ சொர்க்கத்தில் நுழைவாய்.’”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 8 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 

பெற்றோரிடம் பணிவும் இரக்கமும் காட்டுதல்:

ஹிஷாம் இப்னு உர்வா அவர்கள் தனது தந்தை உர்வா இப்னு ஸுபைர் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்:

அல்லாஹ் கூறும் வசனமான:

“அவ்விருவருக்கும் இரக்கத்தின் காரணமாக பணிவின் இறக்கையைத் தாழ்த்துவீராக.”

என்ற வசனத்தை (அல்-இஸ்ரா 17:24) பற்றி உர்வா இப்னு ஸுபைர் அவர்கள் கூறினார்கள்:

“அவர்கள் விரும்பும் எந்த ஒரு காரியத்தையும் நீ மறுக்காமல் செய்வதே இதன் பொருள்.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 9

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 

குறிப்பு: இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடி ஹதீஸ் அல்ல; தாபிஈயான உர்வா இப்னு ஸுபைர் அவர்களின் விளக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெற்றோருக்கு மாறு செய்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்று

அபூ பக்ரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“மிகப் பெரிய பெரும் பாவங்கள் எவை என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?”

என்று மூன்று முறை கேட்டார்கள்.

அவர்கள்,

“ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மற்றும் பெற்றோருக்கு மாறு செய்வது.”

இதைக் கூறிக்கொண்டிருந்தபோது அவர்கள் சாய்ந்திருந்த நிலையில் இருந்தார்கள். பின்னர் நேராக அமர்ந்து,

“மேலும், பொய்யான சாட்சி கூறுவதும் (அதில் அடங்கும்).”

என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அபூ பக்ரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

“அவர்கள் அதை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார்கள். இறுதியில், ‘இப்போது நிறுத்திவிட மாட்டார்களா!’ என்று நான் நினைத்தேன்.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 15

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 


பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவமாகும்:

அபூத்துஃபைல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம்,

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு மட்டும், மற்ற மக்களுக்கு வழங்காத ஏதேனும் சிறப்பான அறிவை வழங்கினார்களா?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மற்ற மக்களுக்கு வழங்காத எந்தச் சிறப்பையும் எங்களுக்கு மட்டும் வழங்கவில்லை. என் வாளின் உறையில் இருந்த இந்த ஏட்டைத் தவிர.”

அந்த ஏட்டில் எழுதப்பட்டிருந்தது:

அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக.

நிலத்தின் எல்லைக் குறிகளை மாற்றுபவனை அல்லாஹ் சபிப்பானாக.

தன் பெற்றோரைத் திட்டுபவனை அல்லாஹ் சபிப்பானாக.

மார்க்கத்தில் புதுமை செய்பவருக்கு அடைக்கலம் கொடுப்பவனை அல்லாஹ் சபிப்பானாக.

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 17

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

எனவே பெற்றோரிடம் எப்போதும் மரியாதையுடனும் மென்மையான வார்த்தைகளுடனும் பேசுங்கள்.

கோபம் வந்தாலும், அவர்களின் மனம் புண்படும் வார்த்தைகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

அல்லாஹ்விடம், பெற்றோருக்கு அழகிய முறையில் நடக்கும் நற்குணத்தை வழங்குமாறு துஆ செய்யுங்கள்.


பெற்றோருக்குக் கீழ்ப்படிவது – பாவமில்லாத விஷயங்களில்:

அபூத் தர்தா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒன்பது விஷயங்களை உபதேசித்தார்கள்:

“அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காதே; நீ துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும் அல்லது எரிக்கப்பட்டாலும்.

வேண்டுமென்றே கடமையான தொழுகையை விடாதே. அதை வேண்டுமென்றே விட்டவன் அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து விலகிவிடுகிறான்.

மதுபானம் அருந்தாதே. அது எல்லாத் தீமைகளுக்கும் திறவுகோலாகும்.

பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நட. அவர்கள் உன் உலகச் செல்வத்தையெல்லாம் விட்டுவிடுமாறு கட்டளையிட்டாலும், அவர்களுக்காக அதை விட்டுவிடு.

ஆட்சியாளருடன் போட்டியிடாதே; நீயே சரி என்று நினைத்தாலும்.

போர்க்களத்தில் எதிரிகளை விட்டு ஓடாதே; உன் தோழர்கள் ஓடினாலும்.

உன் குடும்பத்தினருக்காக உன் வசதிக்கேற்ப செலவு செய்.

உன் குடும்பத்தை ஒழுக்கப்படுத்துவதில் அலட்சியம் காட்டாதே.

உன் குடும்பத்தினருக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்து.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 18

அறிவிப்பின் தரம்: ஹஸன் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 


பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே ஜிஹாத்:

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,

“நான் ஜிஹாதில் பங்கேற்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள்.

அவர்,

“ஆம்” என்று கூறினார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அப்படியானால், அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலேயே உன் ஜிஹாதை மேற்கொள்.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 20

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 


பெற்றோரைப் பெற்றும் சொர்க்கத்தை அடையாதவன்:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அவனுடைய மூக்கு மண்ணில் படட்டும்! அவனுடைய மூக்கு மண்ணில் படட்டும்! அவனுடைய மூக்கு மண்ணில் படட்டும்!”

அப்போது சஹாபாக்கள் கேட்டார்கள்:

“அல்லாஹ்வின் தூதரே! யார் அவர்?”

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“தனது பெற்றோரையோ, அல்லது அவர்களில் ஒருவரையோ முதுமையில் அடைந்தும், (அவர்களுக்குப் பணிவிடை செய்து) சொர்க்கத்தை அடையாமல் நரகத்தில் நுழைபவன்தான்.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 21

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 

எனவே பெற்றோர் உயிருடன் இருந்தால், அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து அன்பாக உரையாடுங்கள்.

அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஆரோக்கியம், பரக்கத் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி துஆ செய்யுங்கள்.

பெற்றோர் மறைந்திருந்தால், அவர்களுக்காக மஃபிரத் வேண்டி துஆ செய்து, அவர்களின் பெயரில் ஒரு நற்செயலைச் செய்யுங்கள்.


முஷ்ரிக்காக இறந்த பெற்றோருக்காக மன்னிப்பு கோரக்கூடாது

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அல்லாஹ்வின் இந்த வசனத்தைப் பற்றி கூறினார்கள்:

“அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உன்னிடம் முதுமையை அடைந்தால், அவர்களுக்கு ‘உஃப்’ என்று கூட சொல்லாதே... மேலும், ‘என் இறைவா! அவர்கள் என்னை சிறுவயதில் வளர்த்தது போன்று, அவர்களுக்கு நீ அருள் புரிவாயாக’ என்று கூறுவாயாக.”

பின்னர் அவர்கள் கூறினார்கள்:

இந்த வசனத்தில் உள்ள (முஷ்ரிக்காக இறந்த) பெற்றோருக்காக மன்னிப்பு கோருவது தொடர்பான பகுதி, ஸூரத்துத் தவ்பாவில் உள்ள இந்த வசனத்தால் மாற்றப்பட்டது:

“நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இணைவைப்போர் நரகவாசிகள் என்பது தெளிவான பிறகு, அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், அவர்களுக்காக மன்னிப்பு கோருவது உரியதல்ல.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 23

அறிவிப்பின் தரம்: ஹஸன் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 

குறிப்பு: இது இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் அல்ல. 


இணைவைப்போராக இருந்தாலும் பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும்:

அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என் தாய், அவர்கள் இணைவைப்போராக இருந்த காலத்தில், என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அப்போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்,

“என் தாய் என்னிடம் வந்திருக்கிறார். நான் அவருடன் நல்லுறவைப் பேணலாமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“ஆம், உன் தாயுடன் நல்லுறவைப் பேணி நட.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 24

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 


பெற்றோரின் நண்பர்களுக்கும் நன்மை செய்வது:

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ஒருவன் தனது தந்தையின் நண்பர்களுடன் நல்லுறவைப் பேணுவதே, மிக உயர்ந்த நன்மைகளில் ஒன்றாகும்."

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 26

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


தந்தையின் நண்பருக்கு மரியாதை செலுத்துதல்:

இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் மக்காவுக்குச் செல்லும் வழியில் ஒரு கிராமவாசியைச் சந்தித்தார்கள்.

அவருக்கு ஸலாம் கூறி, தாம் அமர்ந்திருந்த கழுதையின் மீது அவரை ஏற்றி, தாம் அணிந்திருந்த தலைப்பாகையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

அப்போது இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ் உங்களைச் சீர்திருத்துவானாக! அவர் ஒரு சாதாரண கிராமவாசிதானே! அவருக்கு இவ்வளவு மரியாதை செய்கிறீர்களே?”

அதற்கு இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்:

“இவருடைய தந்தை, என் தந்தை உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்:

‘ஒருவன் தன் தந்தையின் நண்பர்களுடன் நல்லுறவைப் பேணுவதே, நன்மைகளில் மிகச் சிறந்ததாகும்.’”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 27

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

எனவே உங்கள் பெற்றோரின் நண்பர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமான உறவினர்களில் ஒருவரை மரியாதையுடன் நலம் விசாரியுங்கள்.

அவர்களிடம் அன்பாகப் பேசி, உங்கள் பெற்றோருக்குச் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.

அல்லாஹ்விடம், பெற்றோருக்குப் பிறகும் அவர்களின் நல்லுறவுகளைப் பேணும் நற்குணத்தை உங்களுக்கு வழங்குமாறு துஆ செய்யுங்கள்.


தாயின் சகோதரியும் தாயைப் போன்றவரே:

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,

“நான் ஒரு மிகப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன். எனக்கு தவ்பா உண்டா?” என்று கேட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“உனக்குத் தாய் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள்.

அவர்,

“இல்லை” என்று கூறினார்.

பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“உனக்குத் தாயின் சகோதரி (காலா) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள்.

அவர்,

“ஆம்” என்று கூறினார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அப்படியானால், அவருக்கு நன்மை செய்து நட.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 28

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுவது பெற்றோருக்கு நன்மை செய்வதில் ஒரு பகுதியாகும்:

அப்துல்லாஹ் இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவன் தனது தந்தை இறந்த பிறகும், அவரது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நல்லுறவைப் பேணுவது, தந்தைக்குச் செய்யும் நன்மையின் (பிர்ரின்) ஒரு பகுதியாகும்.” 

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 29

அறிவிப்பின் தரம்: ஸஹீஹ் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

குறிப்பு: இது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் கூற்றாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


தாய்க்கு ஸலாம் கூறி துஆ செய்வது:

அபூ ஹாஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபூ முர்ரா (உம்மு ஹானி பின்த் அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமை) அவர்கள் கூறினார்கள்:

நான் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் அவருடைய நிலத்திற்குச் சென்றேன்.

அவர் தனது வீட்டிற்குள் நுழைந்ததும் உரத்த குரலில்,

“அஸ்ஸலாமு அலைகி வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு, யா உம்மதா !” என்று கூறுவார்கள்.

அவருடைய தாய்

“வ அலைகஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு யா புனய்ய” என பதிலளிப்பார்கள்.

அப்போது அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுவார்கள்:

“நான் சிறுவனாக இருந்தபோது என்னை வளர்த்ததற்காக அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.”

அவருடைய தாய் கூறுவார்கள்:

“என் மகனே! நீ எனக்கு முதுமையில் நன்மை செய்ததைப் போன்று, அல்லாஹ் உனக்கு நற்கூலியையும் தனது திருப்தியையும் வழங்குவானாக.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 14

அறிவிப்பின் தரம்: ஹஸன் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்) 

குறிப்பு: இது அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் செயலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


பெற்றோருக்கு நன்மை செய்தல் – ஆயுள் நீடிப்பதற்கும் வாழ்வில் பரக்கத் கிடைப்பதற்கும் ஒரு காரணம்:

அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“யார் தமது ஆயுள் நீட்டிக்கப்படுவதையும், அவருடைய வாழ்வாதாரத்தில் பரக்கத் வழங்கப்படுவதையும் விரும்புகிறாரோ, அவர் தனது பெற்றோருக்கு நன்மை செய்யட்டும்; உறவினர்களுடனான உறவைப் பேணட்டும்.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 30

அறிவிப்பின் தரம்: ஹஸன் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


பெற்றோருக்கு நன்மை செய்வது – அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதின் ஒரு பகுதி:

அபூ உஸைத் மாலிக் இப்னு ரபீஅ அஸ்-ஸாஇதி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, பனூ ஸலமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து,

“அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இறந்த பிறகும், அவர்களுக்கு நான் செய்யக்கூடிய நன்மை ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“ஆம். அவர்களுக்காக துஆ செய்வதும், அவர்களுக்காக மன்னிப்புக் கோருவதும், அவர்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், அவர்களால் மட்டுமே பேணப்படும் உறவுகளைப் பேணுவதும், அவர்களின் நண்பர்களை கண்ணியப்படுத்துவதும் ஆகும்.”

ஆதாரம்: அதபுல் முஃப்ரத் — ஹதீஸ் எண் 31

அறிவிப்பின் தரம்: ஹஸன் (இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


பெற்றோரை மகிழ்விப்பது முக்கியக் கடமையாகும்:

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஹிஜ்ரத் செய்வதற்காக தங்களிடம் பைஅத் (உடன்படிக்கை) செய்ய வந்துள்ளேன். என் தாய், தந்தையை அழுதுகொண்டிருக்க விட்டுவிட்டு வந்துள்ளேன்’ என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“அவர்களிடம் திரும்பிச் செல். எவ்வாறு அவர்களை அழ வைத்தாயோ, அவ்வாறே அவர்களைச் சிரிக்க வை.” என்று கூறினார்கள்

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 19

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


முதுமையில் பெற்றோருக்கு சேவை செய்யும் வாய்ப்பை இழக்காதீர்கள்:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அவனுடைய மூக்கு மண்ணில் புதையட்டும்! அவனுடைய மூக்கு மண்ணில் புதையட்டும்! அவனுடைய மூக்கு மண்ணில் புதையட்டும்!”

(ஸஹாபாக்கள்) கேட்டார்கள்:

“அல்லாஹ்வின் தூதரே! யார் அவர்?”

அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“தன்னுடைய பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அவர்களின் முதுமைப் பருவத்தில் அடைந்தும், (அவர்களுக்கு சேவை செய்து சுவனத்தைப் பெறும் வாய்ப்பு இருந்தும்) நரகத்தில் நுழைந்தவன் தான்.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 21

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


முஸ்லிமல்லாத பெற்றோருக்கும் நன்மை செய்வதும், அவர்களுக்கு உதவுவதும்:

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பட்டாடையைக் கண்டார்கள்.

அப்போது உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்,

“அல்லாஹ்வின் தூதரே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த ஆடையை வாங்கிக் கொள்ளுங்கள். ஜுமுஆ நாளிலும், தூதுக்குழுக்கள் தங்களைச் சந்திக்க வரும்போதும் இதை அணிந்து கொள்ளலாமே!” என்று கூறினார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“மறுமையில் எந்தப் பங்கும் இல்லாதவரே இதை அணிவார்.” என்று கூறினார்கள்.

பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அதே வகையான சில ஆடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அவற்றில் ஓர் ஆடையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்போது உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்,

“அல்லாஹ்வின் தூதரே! இதைப் பற்றி தாங்கள் முன்பு அவ்வாறு கூறியிருக்கும்போது, நான் இதை எப்படி அணிவது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“நான் இதை நீர் அணிவதற்காக உமக்குக் கொடுக்கவில்லை. மாறாக, நீர் இதை விற்கலாம் அல்லது யாருக்காவது அணிவிக்கலாம்.” என்று கூறினார்கள்.

அதன் பின்னர், உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த ஆடையை மக்காவில் இருந்த, இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத தம்முடைய சகோதரர் ஒருவருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஹதீஸில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்:

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது சகோதரர் இன்னும் முஸ்லிமாக ஆகாத நிலையில் இருந்தபோதும், அவருக்கு ஆடையை வழங்கினார்கள்.

இதன் மூலம், ஒருவர் முஸ்லிமாக இல்லாதவராக இருந்தாலும், அவருடன் குடும்ப உறவைப் பேணுவதும், அவருக்கு அனுமதிக்கப்பட்ட வகையில் உதவி செய்வதும் நல்ல பண்பாகும் என்பதை அறியலாம்.

குறிப்பாக, முஸ்லிமல்லாத பெற்றோராக இருந்தாலும், அவர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது, அவர்களின் தேவைகளில் உதவுவது மற்றும் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற நன்மையான காரியங்களைச் செய்வதில் இஸ்லாம் தடை விதிக்கவில்லை.

ஆனால், அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறான காரியத்தைச் செய்யும்படி கட்டளையிட்டால், அந்தக் காரியத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படியக்கூடாது. அதே நேரத்தில், உலக விஷயங்களில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 26

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


முஸ்லிமல்லாத பெற்றோரிடம் நன்மையாக நடந்து கொள்ளுங்கள்; ஆனால் அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடாதீர்கள்:

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் உடைய அல்லாஹ் கூறுகிறான்:

“உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ முதுமையை அடைந்துவிட்டால், அவர்களைப் பார்த்து ‘உஃப்!’ என்று கூறாதே. அவர்களை விரட்டாதே. அவர்களிடம் மரியாதையான வார்த்தைகளையே பேசுவாயாக.”

மேலும்,

“என் இறைவா! நான் சிறுவனாக இருந்தபோது அவர்கள் என்னை எப்படி வளர்த்தார்களோ, அவ்வாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை காட்டுவாயாக!” என்று கூறுமாறு அல்லாஹ் கற்றுக் கொடுத்துள்ளான்.

ஆனால், பராஅத் (அத்தவ்பா) அத்தியாயத்தில் அல்லாஹ் கூறினான்:

“நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்று அவர்களுக்குத் தெளிவான பிறகு, அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகாது.”

இதன் மூலம், முஸ்லிமல்லாத பெற்றோராக இருந்தாலும் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதும், அவர்களுக்கு உலக வாழ்க்கையில் தேவையான உதவிகளைச் செய்வதும் தொடர்கிறது; ஆனால் அவர்கள் இணைவைப்பாளர்களாக மரணித்தது தெளிவான பிறகு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது அனுமதிக்கப்படாது என்பதை அறியலாம்.

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 23

ஹதீஸின் தரம்: ஹஸன் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)


பெற்றோரைத் திட்டுவதும்,  திட்டுவதற்கு காரணமாக இருப்பதும் பெரும் பாவமாகும்:

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.”

அப்போது நபித்தோழர்கள்,

“அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன்னுடைய பெற்றோரை எப்படித் திட்டுவார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“ஒருவன் மற்றொரு மனிதரைத் திட்டுவான். அதற்குப் பதிலாக அந்த மனிதன் இவனுடைய தந்தையையும் தாயையும் திட்டுவான்.” என்று கூறினார்கள்.

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 27

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோரை நேரடியாகத் திட்டுவது மட்டுமல்ல; அவர்கள் திட்டப்படுவதற்கு காரணமாக இருப்பதும் மிகப் பெரிய குற்றமாகும்.

பிறரை அவமதிப்பதும், அவர்களின் பெற்றோரைப் பற்றி இழிவாகப் பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக, நம்முடைய வார்த்தைகளால் நம் பெற்றோருக்கு அவமரியாதை ஏற்படாதவாறு மிகவும் கவனமாகப் பேச வேண்டும்.


பெற்றோரைத் திட்டுவதற்கு காரணமாக இருப்பதும் பெரும் பாவமாகும்:

அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் அல்-ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஒருவர் தன் தந்தையைத் திட்டும்படி மற்றவர்களைத் தூண்டிவிடுவது, அல்லாஹ் தஆலாவிடம் பெரும் பாவங்களில் ஒன்றாகும்.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 28

ஹதீஸின் தரம்: ஹஸன் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

அதாவது, ஒருவர் பிறருடைய பெற்றோரை ஏசுவதன் மூலம், பதிலுக்கு அவர்கள் தனது தந்தையை ஏசும் நிலையை ஏற்படுத்துவது பெரும் பாவமாகும்.

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பிறரின் பெற்றோரை இழிவுபடுத்திப் பேசுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நம்முடைய செயலால் அல்லது வார்த்தையால் நம்முடைய பெற்றோர் திட்டப்படும் நிலையை ஏற்படுத்துவதும் பெரும் பாவமாகும்.

ஒரு முஸ்லிம் தனது பெற்றோரின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


பெற்றோரை அழ வைப்பதும் பெற்றோருக்கு செய்யும் பெரும் தவறாகும்:

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள்:

“பெற்றோரின் அழுகை, அதாவது பிள்ளைகளின் செயலால் பெற்றோரை அழ வைப்பது, பெற்றோருக்கு செய்யும் மாறுபாடுகளில் ஒன்றாகும்; மேலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 31

தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்).

இது நபித்தோழரின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

நம்முடைய பேச்சு, செயல்கள் அல்லது அலட்சியத்தின் காரணமாக பெற்றோர் அழும் நிலையை ஏற்படுத்துவது மிகவும் ஆபத்தானது.

பெற்றோரின் மனதைப் புண்படுத்துவது, அவர்களை வருத்தமடையச் செய்வது போன்றவற்றிலிருந்து நாம் விலக வேண்டும்.

அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு அன்பும், பொறுமையும், கவனிப்பும் அதிகமாக வழங்க வேண்டும்.

கோபம் ஏற்பட்டாலும் பெற்றோரிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், மரியாதையுடன் பேச வேண்டும்.


பெற்றோரின் துஆவைப் பெறுங்கள்; அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்.

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“மூன்று பிரார்த்தனைகள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்:

அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை.

பயணியின் பிரார்த்தனை.

பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு எதிராகச் செய்யும் பிரார்த்தனை.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 32

ஹதீஸின் தரம்: ஹஸன் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோரின் துஆவுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது.

எனவே, நம்முடைய செயல்களால் பெற்றோர்கள் மனமுடைந்து, நமக்கு எதிராக துஆ செய்யும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது.

பெற்றோரின் மனதை மகிழ்வித்து, அவர்களின் நல்ல துஆவைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

கோபம் ஏற்பட்டாலும் அவர்களிடம் கடுமையாகப் பேசாமல், பொறுமையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.


பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடுவது அவர்களின் தரத்தை உயர்த்தும்:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஒரு இறந்தவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய அந்தஸ்து உயர்த்தப்படும்.”

அப்போது அவர்,

“என் இறைவா! இது என்ன?” என்று கேட்பார்.

அதற்கு,

“உமது பிள்ளை உமக்காகப் பாவமன்னிப்புக் கோரியதால் உமது தரம் உயர்த்தப்பட்டது.” என்று கூறப்படும்.

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 36

ஹதீஸின் தரம்: ஹஸன் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோர் மரணித்த பின்னரும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வது மிகவும் சிறப்பான அமலாகும்.

குறிப்பாக, அவர்களுக்காக பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) தேடுவது, அல்லாஹ்வின் அனுமதியால் அவர்களின் மறுமை அந்தஸ்து உயர்வதற்குக் காரணமாக அமையலாம்.


எனவே இன்றே உங்கள் பெற்றோருக்காக இஸ்திக்ஃபார் செய்யுங்கள்.

“ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா”
“என் இறைவா! நான் சிறுவனாக இருந்தபோது அவர்கள் என்னை வளர்த்தது போன்று, நீயும் அவர்கள் மீது கருணை காட்டுவாயாக.”

உங்கள் பெற்றோர் மரணித்திருந்தால், அவர்களுக்காக அதிகமாக துஆ செய்து, அல்லாஹ்விடம் அவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டுங்கள்.l


பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடுவதன் சிறப்பு:

முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஒரு இரவு அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் இருந்தோம்.

அப்போது அவர்கள்,

“அல்லாஹும்மஃக்ஃபிர் லி அபீ ஹுரைரத, வலி உம்மீ, வலி மன் இஸ்தஃக்ஃபர லஹுமா.”

“யா அல்லாஹ்! அபூ ஹுரைராவையும், என் தாயாரையும், இவர்கள் இருவருக்காகவும் பாவமன்னிப்புக் கோரும் அனைவரையும் மன்னிப்பாயாக!” என்று துஆ செய்தார்கள்.

முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் துஆவில் நாங்களும் இடம்பெற வேண்டும் என்பதற்காக, நாங்கள் அவர்கள் இருவருக்காகவும் பாவமன்னிப்புக் கோருகிறோம்.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 37

இது நபித்தோழர் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்று/துஆவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்தப் பதிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடுவதும், அவர்களுக்காக துஆ செய்வதும் சிறந்த அமலாகும்.

பெற்றோர் உயிருடன் இருந்தாலும், மரணித்திருந்தாலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நன்மையை வேண்ட வேண்டும்.


பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளையாக இருங்கள்:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் இறந்துவிட்டால், மூன்று விஷயங்களைத் தவிர அவருடைய செயல்கள் (அதற்கான நன்மைகள்) நின்றுவிடுகின்றன:

நிலையான தர்மம் (ஸதகா ஜாரியா),

பயனளிக்கும் கல்வி,

அவருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 38

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோர் மரணித்த பிறகும், அவர்களுக்காக துஆ செய்யும் நல்ல பிள்ளையின் துஆ அவர்களுக்கு நன்மையைத் தரக்கூடியதாகும்.

எனவே, பெற்றோருக்கு உயிருடன் இருக்கும்போது நன்மை செய்வதுடன், அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்காக துஆ செய்வதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.


பெற்றோர் மரணித்த பிறகும் அவர்களுக்காக ஸதகா செய்வது:

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,

“அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மரண சாசனம் எதுவும் செய்யாமல் இறந்துவிட்டார்கள். அவருக்காக நான் தர்மம் (ஸதகா) செய்தால், அது அவருக்குப் பலனளிக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“ஆம்.” என்று பதிலளித்தார்கள்.

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 39

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோர் மரணித்த பிறகும், அவர்களுக்காக ஸதகா செய்வது அவர்களுக்குப் பலனளிக்கக்கூடிய நன்மையான அமலாகும்.

பெற்றோருக்காக நாம் செய்யக்கூடிய நன்மைகளில் ஒன்றாக, அவர்களின் சார்பாக தர்மம் செய்வதையும் அமைத்துக் கொள்ளலாம்.


பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இரு மனிதர்களைக் கண்டார்கள். அவர்களில் ஒருவரிடம்,

“இவர் உங்களுக்கு என்ன உறவு?” என்று கேட்டார்கள்.

அவர்,

“என் தந்தை.” என்று பதிலளித்தார்.

அப்போது அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

“அவரை அவரது பெயரைச் சொல்லி அழைக்காதீர்கள். அவருக்கு முன்னால் நடக்காதீர்கள். அவர் அமர்வதற்கு முன் நீங்கள் அமராதீர்கள்.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 44

இது நபித்தோழர் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்தப் பதிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோரிடம் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்து கொள்வது அவர்களுக்கு செய்யும் நன்மைகளில் ஒன்றாகும்.

அவர்களை பெயர் சொல்லி அழைப்பதைத் தவிர்த்து, மரியாதையான முறையில் அழைக்க வேண்டும்.

அவர்களுக்கு முன்னால் செல்வதைத் தவிர்த்து, அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் அமர்வதற்கு முன் நாம் அமராமல் இருப்பது போன்ற சிறிய விஷயங்களிலும் பெற்றோருக்கு மரியாதை காட்ட வேண்டும்.


தாய்க்கு மூன்று முறை முன்னுரிமை; பின்னர் தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள்:

அல்-மிக்தாம் இப்னு மஃதீகரிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேட்டேன்:

“நிச்சயமாக அல்லாஹ் உங்கள் அன்னையர் விஷயத்தில் உங்களுக்கு வஸிய்யத் செய்கிறான். பின்னர் உங்கள் அன்னையர் விஷயத்தில் உங்களுக்கு வஸிய்யத் செய்கிறான். பின்னர் உங்கள் தந்தையர் விஷயத்தில் உங்களுக்கு வஸிய்யத் செய்கிறான். பின்னர் மிக நெருங்கிய உறவினர்கள் விஷயத்திலும், அதற்கடுத்த உறவினர்கள் விஷயத்திலும் உங்களுக்கு வஸிய்யத் செய்கிறான்.”

ஆதாரம்: அல்-அதப் அல்-முஃபரத் — ஹதீஸ் எண் 60

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் (ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்)

இந்த ஹதீஸ் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

பெற்றோரில் தாய்க்கு மிகச் சிறப்பான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தாய்க்குப் பிறகு தந்தையின் உரிமையைப் பேண வேண்டும்.

அதன்பின் நெருங்கிய உறவினர்களின் உரிமைகளையும் பேணி, அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

أحدث أقدم