யார் இந்த இமாம் அல் புகாரி?

அஹ்லுஸ் ஸுன்னா  வல் ஜமாத் உடைய பல மார்க்க அறிஞர்களுள் மிக முக்கியமான கல்விக்கடல், அல்குர்ஆனுக்கு பிறகு மிகச் சரியான புத்தகமாக கருதப்படக் கூடிய கிதாபுல் புகாரியின் ஆசிரியர் இமாம் புகாரியைப்பற்றிய சிறு குறிப்பு இது

இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்ராஹிம் இப்னு அல் முஹீரா அல் புகாரி ஹிஜ்ரி 194 ஷவ்வால் மாதம் 13 அன்று உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா என்ற பகுதியில் கல்வி சூழல் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறக்கிறார். 

அவருடைய தந்தை மிகச்சிறந்த ஹதீஸ் கலை அறிஞர் அவரது சிறுவயதிலேயே தந்தை இழந்து தாயின் மடியில் அனாதையாக வளர்ந்தார்கள். வரலாற்று ஆசிரியர்கள் இமாம் புகாரியைப் பற்றி கூறுகையில்  இமாம் புகாரி அவர்களுக்கு சிறுவயதிலே கண் பார்வை தெரியாமல் போக , அவருடைய தாய் ஒரு கனவு காண்கிறார் அதில் நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கனவில் தோன்றி உன்னுடைய அதிகமான துவாவினாளும் அதிகமான அழுகையாலும் அல்லாஹ் உனது மகனின் பார்வையை திருப்புவான் என்றார்கள் அதுபோலவே இமாம் புகாரி அவர்களின் பார்வை மீண்டும் கிடைத்தது. அவர் பத்து வயதை அடையும் முன்பே குர்ஆனையும் பல ஹதீஸ்களையும் மனனம் செய்திருந்தார். அந்த வயதிலேயே பலமான ஹதீஸ்கள் பலகீனமான ஹதீஸ்கள் எவை என்பதை பிரித்து அறியும் கல்வியை கற்க ஆரம்பித்தார். 

அவர்களது 11 வயதிலேயே  தனது ஆசிரியர்கள் வகுப்பில் விடும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தும் அளவிற்கு கல்வியில் இமாம் புகாரி திறன் பெற்றிருந்தார்கள் . 

இமாம் அப்துல்லா இப்னு முபாரக் அவருடைய புத்தகம் مسند عبد الله بن المبارك
மற்றும் இமாம் வஹீ இப்னு ஜர்ராஹ் அவருடைய புத்தகம் كتاب الزهد ஆகியவற்றை தனது பதினாறு வயதிலேயே மனனம் செய்திருந்தார்கள் . 

அவருடைய தாய் மற்றும் சகோதரர்களுடன் ஹஜ் செய்வதற்காக  மக்காவை நோக்கி பயணம் செய்தார்கள். ஹஜ் வணக்க வழிபாடு முடிந்த பிறகு அவர் மக்காவில்  கல்விக்காக தங்கிவிட அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள்  மட்டும் நாடு திரும்பினார்கள். மக்காவில் பல வருடம் தங்கி பல அறிஞர்கள் இடமிருந்து கல்வி கற்றார்கள். பிறகு மதீனாவை நோக்கி கல்விக்காக பயணமானர்கள் . மதினாவில் கல்வி கற்கும் பொழுது தாரீகுல் கபீர் التاريخ الكبير என்ற புத்தகத்தை தன்னுடைய 18 வயதில் எழுதினார்கள். 

மதினாவில் கல்வி கற்ற  பிறகு  ஷாம் ஈராக், பக்தாத் போன்ற பல  நாடுகளுக்கு பயணம் செய்து பல மார்க்க அறிஞர்களிடமிருந்து கல்வி கற்றார்கள் 

 அவருடைய ஆசிரியரின் எண்ணிக்கை 1080 ஆக இருந்தது. அவருடைய ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள் சிலர் 
இமாம் அகமது பின் ஹம்பல்
இமாம் அலி அல்மதினி
இமாம்யஹ்யா இப்னு மயீன்
இமாம் இஸ்ஹாக் இப்னு ராகவி ஆகியோர் 

இமாம் புகாரி உடைய மாணவர்கள் பலர் அதில் குறிப்பானவர்கள்.

இமாம் முஸ்லிம்
இமாம் இப்னு ஹுசைமா
இமாம் அஹ்மத் இப்னு ஸுயைப் அன்னசாயி
இமாம் முஹம்மது இப்னு ஈசா அத்திருமிதி 

இமாம் புகாரி அவர்கள் பல புத்தகங்களை எழுதி உள்ளார்கள் அதில் குறிப்பிடத்தக்கவை 
صحيح البخاري 
الأدب المفرد
التاريخ الكبير
كتاب الهبة 
رفع اليدين في الصلاه
இன்னும் பல. 

இதில் நாம்  அனைவரும் அறிந்த மிகவும் பிரபல்யமான புத்தகம் கிதாபுல் புகாரி.

கிதாபுல் புகாரி எழுவதற்கான காரணத்தை இமாம் புகாரி அவர்கள் கூறுகையில். 
'நான் யஹ்யா இப்னு மயீன் அவருடன் இருந்தேன் அப்பொழுது அவர் கூறினார் யாராவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை சரியானதை மட்டும் சுருக்கமாக தொகுத்தல் நன்றாக இருக்குமே என்றார். அது என்னுடைய உள்ளத்தில் பதிந்து விட்டது எனவே அந்த வேலையை நானே செய்ய தொடங்கினேன்' என்கிறார்கள் 

கிதாபு அல் புகாரியில் 7593 ஹதீஸில் உள்ளன 16 வருடங்களாக அதனை தொகுத்தார்கள். ஆனால் இமாம் புகாரி மனனம் செய்ததோ 600,000 ஹதீஸ்கள். மிகச் சரியானதை மட்டும் தேர்வு செய்து தனது கிதாபுல் புகாரியில் தொகுத்துள்ளார்கள்.

 தனது கிதாபுல் புகாரியைப் பற்றி சொல்லும்போது 'நான் என்னுடைய புத்தகம் கிதாபு புகாரியில் ஹதீஸ்களை தொகுக்கும்  முன் குளித்துவிட்டு இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு தான் அதில் பதிவு செய்வேன்' எனக் கூறுகிறார்கள் 
 
தனது ஸஹீஹுல் புகாரி கிதாப்பை எழுதிய பிறகு பல ஆசிரியர்களிடம் ஆய்வு பார்வைக்கு உட்படுத்தினார்கள். அதில் குறிப்பாக
அகமது பின் ஹம்பல்
அலி அல்மதினி
யஹ்யா இப்னு மயீன் போன்ற பெறும்  கல்வியாளர்களிடம் இந்நூலை சமர்ப்பித்து ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் .அனைவருமே அதனை சரி கண்டு
 குர்ஆனுக்கு அடுத்தபடியாக வானத்திற்கு கீழ் சரியான புத்தகம் ஸஹீஹுல் புகாரிதான் என்பதாக  சான்று பகிர்ந்தார்கள். . அதன் பிறகு இந்த உம்மத்தும் அதனை அவ்வாறு ஏற்றுக் கொண்டது . 

இமாம் புகாரி அவர்கள் பெருநாள் உடைய இரவில் ஷவ்வால் 1 அன்று தனது 62 ஆவது வயதில் இயற்கை எய்தினார்கள்.

محمد أويس مدني
أحدث أقدم