சமூக வலைத்தளங்களில் பத்வா கொடுப்போரின் கவனத்திற்கு

சமூக வலைத்தளங்களில் அசால்டாக பத்வா கொடுக்க முன்வருவோர் இமாம்கள் வரையறைத்துள்ள கண்டிப்பான நிபந்தனைகளை பார்த்து விளங்கிவிட்டு தகுதி பெற்று முன்வரப் பாருங்கள்.

மற்றொரு சாரார் தம்மை மார்க்கத்தை கற்காது கற்றதாக சமூகத்துக்கு அடையாளப்படுத்தி வெளிப்படையாக பெயர் போடாத ஆனால் ஆலிம்கள் என அழைக்க விரும்பும் புகழ் விரும்பிகளும் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும். ஏன் இந்த குளறுபடியான நப்பாசை!!!

சரி விடயத்துக்கு வருவோம்.

ஒரு முப்திக்கு இருக்க வேண்டிய மார்க்க அறிவு சார் நிபந்தனைகள்

1. அல்குர்ஆனை கற்று, அறிந்திருத்தல் அவசியம்

அதன் காயிதாக்கள், உஸுல்கள்(உஸுலுல் பிக்ஹ், தாரீகுத் தஷ்ரீஃ, பிக்ஹ், கவாயித் பிக்ஹிய்யா, தப்ஸீர் இன்னும் பல), ஹாஸ், ஆம், முஜ்மல், முபய்யன், முத்லக், முகய்யத், நாஸிக், மன்ஸுக், மன்தூக், மப்ஹூம், முஹ்கம், முதஷாபிஹ் போன்ற அல்குஆர்னோடு தொடர்புடைய சட்டதிட்டங்களை கற்றிருத்தல் அவசியம்.

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் போன்றோர் ஒரு முப்தி அல்குர்ஆனை மனனமிட்ட ஹாபிழாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டுள்ளனர்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸுன்னாவை நன்கு கற்று அறிந்திருத்தல் அவசியம்

இங்கும் முதல் நிபந்தனையில் கூறப்பட்டது போன்று ஸுன்னூவுடன் தொடர்பானவற்றை கற்றிருப்பதோடு நடைமுறைப் பிரச்சினைக்கு ஏற்ற ஹதீஸ்கள் பற்றிய பரந்த அறிவிருத்தலும் வேண்டும். (மேலெழுந்தவாறான அறிவல்ல)

அறிவிப்பாளர் வரிசை வழிகள், ஹதீஸ்களது இஸ்னாத்கள், பலமான, பலவீனமான அறிவிப்பாளர் தொடர்பான அறிவும் இருத்தல் வேண்டும்.

3. இஜ்மாஃ பற்றிய அறிவிருத்தல் வேண்டும்

முன்னர் எவ்விடயங்களில் இஜ்மாஃ ஏற்பட்டுள்ளன என்பவற்றை அறிந்திருத்தல் வேண்டும் 

ஏற்படும் மார்க்க பிரச்சினை தொடர்பான கருத்து வேறுபாடுகள், முன்னர் இது தொடர்பான பிரச்சினைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை தெரிந்திருந்தல் வேண்டும்

4. பரந்தளவான ஆழமான அரபு மொழி அறிவு இருத்தல் வேண்டும்

அரபு மொழிக்கான கவாயித்களை (அரபு இலக்கணம் -النحو والصرف والبلاغة- ஆகியவற்றை திறம்பட கற்றிருத்தல் வேண்டும்

5. கியாஸ் பற்றிய ஆழமான அறிவிருத்தல் வேண்டும்

அதன் உஸூல், வரையறைகள், அதில் ஸலபுகளது போக்குகள் போன்றவற்றை தெரிந்திருத்தல் வேண்டும்

6. மகாஸிதுஷ் ஷரீஆ பற்றிய அறிவிருத்தல் வேண்டும் 

சட்டத்தின், பிரச்சினையின் உருவாக்கம் வேண்டி நிற்கும் மஸ்லஹா போன்ற பல்வேறுபட்ட மகாஸித் அறிவிருத்தல்

அரபுப் பாசை, அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, இஜ்மா, புகஹாக்களது கருத்து முரண்பாடுகள், கருத்தொற்றுமைகள், கியாஸின் விதங்கள் போன்றவற்றிலிருந்து சட்டத்தை எடுக்கும்-استنباط- ஆற்றல் இருத்தல் வேண்டும்.

பின்வருபவை ஒரு முப்தியின் பண்புகளைக் குறிக்கின்றன.

7. பக்குவமானவராக  இருத்தல் வேண்டும் 

8. மார்க்க விடயத்தில் அல்லாஹ்வுக்கன்றி யாருக்கும் பயப்படாதவராக இருத்தல் வேண்டும்

9. கடும் போக்கில்லாது, மார்க்க சட்டங்களை நடுநிலைக் கண்ணோடு ஆய்வுக்குற்படுத்துபவராகவும் குறித்த மத்ஹப் வெறியில்லாது திறந்த மனதோடு செயற்படுபவராகவும் இருத்தல் வேண்டும்.

இவற்றை அறியாது, அறிவில்லாமல் மார்க்கத் தீர்ப்பு கொடுக்க முன் வருவது அறிவீனமும், ஏனையோரை அழிவின் பாலும் வழிகேட்டின் பக்கமும் இட்டுச்செல்லும் பாரதூரமான விடயமாகும்.

பெரும்பெரும் அறிஞர்கள் பத்வாக் கொடுக்க தகுதியிருந்தும் ஏன் ஸஹாபாக்கள் கூட தம்மை விட அறிவில் சிறந்த ஆலிமிடம் செல்லுமாறு பணித்திருக்கும் போது நாம் மேலோட்டமாக ஒரு சில விடயங்களை தெரிந்து கொண்டு ஆலிமும் இல்லாது மார்க்க பத்வாக்களை அள்ளி வழங்குமளவு எமக்கு தைரியம் வருகிறதெனில் எம்மை நாம் மீள் பரிசீலனை செய்வதோடு அல்லாஹ்விடம் மறுமையில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதையிட்டு பயப்பட்டு, சிந்தித்து, திருந்தி நடப்போமாக!

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட 40 மஸ்அலாக்களில் 32 க்கு தெரியாது என்றே பதலளித்திருக்கும் போது நாம் எம்மாத்திரம்!!!

அல்லாஹ் அனைவரையும் மார்க்க விடயங்களை விளையாட்டாகவும், கேளிக்கையாகவும் உட்படுத்துவதை விட்டு பாதுகாத்து அல்லாஹ்வைப் பயந்து மார்க்க சட்டதிட்டங்களை முறையாக கற்று நடை முறைப்படுத்த அருள் புரிவானாக!

நட்புடன் 
Azhan Haneefa 
أحدث أقدم