5 நிமிட வழிபாடு – ஒரு மலையளவு நற்கூலி

முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய வாழ்வின் நோக்கம் அல்லாஹ்வை வழிபடுவது தான் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறோம்.  சில சமயங்களில் இடைவிடாது அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து இருப்பது மிகவும் சிரமமான காரியம் போல் தோன்றும்.  இன்னும், சில சமயங்களில் இஸ்லாத்தில் அதிகப்படியாக இருப்பது போல் தோன்றும்.  இது ஏனென்றால், இஸ்லாத்தைப்பற்றி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதற்கு மாற்றமான கருத்தை நாம் கொண்டிருப்பது தான்.  நம்முடைய வாழ்வின் குறிக்கோள் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய திருப்தியைப் பெறுவது தான்.  அதை அடைவதற்கு அவன் மிகவும் எளிதான வழிமுறைகளை கொடுத்திருக்கிறான்!

அதனால், செய்வதற்கு மிகவும் எளிதானவை, ஆனால், மிக ஏராளமான நற்கூலிகளைப் பெற்றுத்தரும் செயல்களைப்பற்றி பார்ப்போம்.  நம்முடைய தராசுத்தட்டு, நம்மால் இயன்ற அளவு நற்செயல்களால் கனக்க வேண்டும் என்று நாம் விரும்பவில்லையா?  இதோ அதற்கான சந்தர்ப்பம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “செயல்களிலேயே மிகச் சிறந்ததும், உங்களுடைய ரப்பின் பார்வையில் மிகவும் தூய்மையானதும், மிக உயர்ந்த தரத்தை உடையதையும் பொன்னையும், வெள்ளியையும் செலவழிப்பதை விடவும், போர்க்களத்தில் எதிரியை சந்திக்கும்போது நீங்கள் அவர்களுடைய கழுத்தையும் அவர்கள் உங்களுடைய கழுத்தையும் வெட்டுவதை விடவும் உயர்ந்ததை உங்களுக்கு அறிவிக்கவா?  ” என்று கேட்டார்கள்.  நபித்தோழர்கள் (ரலி) “ஆம், கூறுங்கள் யா ரசூலுல்லாஹ்” என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “அது தான், ‘திக்ரு’ (அல்லாஹ்வை நினைவு கூறுதல்)’ என்று பதிலளித்தார்கள். [திர்மிதி]

அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆனில் கூறுகிறான், ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன். …’[அல் குர்’ஆன் 2:152]

அல்லாஹ்வை நினைவு கூருவதன் மூலம் நாம் வழிபாடுகளிலேயே மிகவும் சிறந்ததை செய்கிறோம் என்பதும், மேலும், அதனால், அல்லாஹ் (சுபஹ்) நம்மை நினைவு கூர்ந்து, நம்மைப்பற்றி தன் மலக்குகளிடம் குறிப்பிடுகிறான் என்பதும் எத்தனை வியப்பானது!  எத்தனை பெரிய கௌரவம்!  மேலும், பல விதமான திக்ருகளை செய்வதற்கு பன்மடங்கான நற்கூலிகள் இருப்பது இன்னும் மதிப்பு கூட்டுவதாக இருக்கிறது!

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நான்கு திக்ருகள்  – ஸுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் – என கூறினார்கள்.  [முஸ்லிம்].  இவை ஒவ்வொன்றையும் நூறு முறை ஓதினால், மொத்தமாகவே ஐந்து நிமிடங்கள் தான் ஆகும்.  இருப்பினும், அதற்கு கிடைக்கக்கூடிய நற்கூலிகள்?

– 400 தர்மங்கள் செய்ததற்கான நற்கூலி [முஸ்லிம்]

– சுவனத்தில் 100 மரங்கள் நடப்படுதல் [திர்மிதி]

– முதிர்ந்த மரத்திலிருந்து இலைகள் உதிருவது போல் பாவங்கள் உதிருதல் [திர்மிதி]

– நரக நெருப்பிலிருந்து பாதுகாவல் [திர்மிதி]

– சுபஹானல்லாஹ் என 100 முறை சொல்வது 1000 நற்செயல்களுக்கான கூலியை பெற்றுத்தரும், 1000 பாவங்கள் அழிக்கப்படும், 100 அடிமைகளை விடுதலை செய்த நன்மை கிடைக்கும் [முஸ்லிம்]

– சுபஹானல்லாஹ் என 100 முறை சொல்வது இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியரில் 100 அடிமைகளை விடுவித்த நன்மை. [அஹமது]

– அல்ஹம்துலில்லாஹ் என 100 முறை சொல்வது 100 குதிரைகளை தர்மம் செய்த நன்மையை பெற்றுத்தரும் [அஹமது]

– அல்லாஹு அக்பர் என 100 முறை சொல்வது 100 குர்பான் செய்ததற்கு [அஹமது]

-  இந்த சொற்கள் அல்லாஹ்வுடைய அர்ஷைச் சுற்றி, அவற்றை சொன்னவர்களின் பெயரைச் சொல்லி தவாஃப் செய்யும் [இப்னு மாஜா, தபரானி, அஹமது]

சுபஹானல்லாஹ் என்ற சொற்றொடர் அல்லாஹ் எந்த விதமான குறைகளும் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது.  இது அல்லாஹ்வுடைய முழுமையை பறைசாற்றுகிறது.

அல்ஹம்துலில்லாஹ் என்பது அல்லாஹ் முழுமையானவனாக இருப்பதால், நாம் சந்திக்கும் அனைத்திற்கும், எல்லா புகழும், நன்றியும் அவனுக்கே உரியது  என்பதைக் குறிக்கிறது.

லா இலாஹ இல்லல்லாஹ் என்பது எல்லாவற்றையும் விட மகத்தானதும், மிகவும் சிறந்த திக்ரும் என ஹதீஸ்கள் கூறுகின்றன.  நம்முடைய நம்பிக்கையின் அஸ்திவாரம் அது தான். மேலும், நாம் ஓதக்கூடியவற்றில் மிகவும் சிறந்ததும் அது தான்.

அல்லாஹு அக்பர் என்ற சொற்றொடர் அனைத்தையும் விட அல்லாஹ் தான் பெரியவன் என்பதை உறுதியாக அறிவிக்கிறது.  நம்முடைய பிரச்சினைகள், நம்முடைய தேவைகள், நம்முடைய விருப்பங்கள், நாம் தேடும் அனைத்தையும் விட பெரியவன்!

இந்த சொற்களைப் பற்றி சிந்திப்போம், நம் நேரத்திலிருந்து தினமும் 5 நிமிடங்கள் ஒதுக்கி, இந்த திக்ருகளை ஓதி, நம்மிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ள இறைவனை வழிபடுவோம்!
Previous Post Next Post