பாதுகாவலர் (வலி) என்ற பெயரில் எல்லை மீறும் ஆண்கள்...!

தன் மகளுக்கு அல்லது தன் பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்ணுக்கு (வலி) பாதுகாவலர் என்ற பேரில் திருமணம் செய்து வைக்க முனையும் ஆண்களே! 

விலாயா என்ற அந்த திருமண பாதுகாப்பு சட்டம் வழங்கப்பட்ட நோக்கம், தனக்குக் கீழ் இருக்கும் பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பதற்கு அல்ல, மாறாக அவளது முழு விருப்பத்தை கேட்டு விருப்பம் தெரிவித்த பின் பாதுகாவலர் முழு மனதோடு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கும் வரை பெண்ணின் பாதுகாப்பை மனதிற் கொண்டு செயல்படவேண்டும் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதற்காகும்.

ஓர் ஆணுக்கு எவ்வாறு மனைவியைத் தேர்வு செய்ய உரிமை உள்ளதோ அவ்வாறே பெண்ணுக்கும் உள்ளது என்பதை பல நபிமொழிகள் மூலம் புரிந்துகொள்ள முடியும். 

நபி (ஸல்) கூறினார்கள் கன்னிப் பெண்ணின் அனுமதியின்றி அவள் திருமணம் செய்து வைக்கப்படக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்........ (நூற்கள் : புகாரி , முஸ்லிம்)

அது மாத்திரமல்ல நபி (ஸல்) அவர்களிடம் வற்புறுத்தல் பேரில் திருமணம் செய்யப்பட்ட பெண் வந்து முறையிட்ட போது நீ விரும்பினால் தொடரலாம் இல்லாவிடில் முறித்துக் கொள்ளலாம் என்ற உரிமை வழங்கியமை. நூல்கள்: (அபூதாவூத், இப்னு மாஜா, முஅத்தா, அஹ்மத்)

குறிப்பு : எந்தவிதத்திலும் ஓர் பெண், தனது திருமண முடிவை தன் (தந்தை) பாதுகாவலருக்கு எதிராக (அவர் திருமணம் செய்து கொள்ளக் கோரிய ஆண் மீது விருப்பம் இல்லை) முன்வைக்கும் போது தந்தைக்கு நோவினை செய்த பிள்ளையாக கருதப்படமாட்டாள்.

ஆக ஒரு பெண்ணைப் பொறுத்தவரை திருமணத்தில் அவளது விருப்பமும் பிரதானமானது. அதுமட்டுமின்றி அவள் விரும்பும் ஆண்மகனை உரிய முறையில் தன் பாதுகாவலரிடம் கூறி அனுமதி கேட்கும் உரிமையும் உள்ளது. பாதுகாவலர் அவளது விருப்பத்திற்கிணங்க செயல்படுவதோடு அவளது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறித்த ஆணின் நடவடிக்கைகள் மற்றும் மார்க்கம் சார்ந்த விழுமியங்களை கவனித்து ஏற்பதற்கும் மறுப்பதற்கும் (வலி) பாதுகாவலர் என்ற பெயரில் முழு அதிகாரம் உண்டு. 

விலாயா என்ற திருமண பாதுகாப்பு திருமண நிபந்தனைகளில் அடங்காது (மாறாக அது சுன்னா) என்று கூறும் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூட, (வலி) பாதுகாவலருக்கு, மணமகன் தன் மகளுக்கு அல்லது தன் பாதுகாப்பின் கீழ் இருக்கும் பெண்ணுக்கு பொருத்தமானவர் இல்லையென்று கருதினால் திருமணத்தை திருத்துவதற்கு உரிமை உண்டு என கூறுகிறார்.

அந்த வகையில் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை அறியாமை காரணமாக தடுக்காமல் அவளது உணர்வுகளைக் கருத்திற் கொண்டு அவளுக்கு உரிய உரிமைகளை வழங்கி இஸ்லாம் கூறும் வரையறைகளையும் கருத்திற் கொண்டு சமூகம் பயணிக்க வேண்டும் குறிப்பாக ஆண்கள் மற்றும் பாதுகாவலர்கள் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்களை இஸ்லாம் எவ்வாறு வழங்கியுள்ளது என்ற அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாய சூழலில் உள்ளனர். 

பெண்ணியம் பேசும் பெண்களில் பலர் இஸ்லாம் என்ற பெயரை பயன்படுத்தி வரம்பு மீறி செல்லும் போக்கையும் , இஸ்லாம் என்ற பெயரில் ஆணாதிக்க சமூகத்தில் புதைந்து போயுள்ள பெண்களின் உரிமைகளையும் வித்தியாசப்படுத்தி அறிவது காலத்தில் கட்டாயமாகிவிட்டது.

யாருக்கு எதிலும் எப்போதும் அநீதி இழைத்துவிடக்கூடாது என்று பயணிப்பதே இஸ்லாம் கூறும் மிக முக்கியமான அம்சம்.

- Ahsan Asman Muhajiri
أحدث أقدم