ஸலஃபுகளை மிகைக்கக் கூடியவர்கள் எல்லை மீறியவர்கள். அவர்களைத் தவிர்க்கக் கூடியவர்கள் மார்க்கத்தில் குறை செய்யக் கூடியவர்கள்

 

(லும்அதுல் இதிஹாத் நூலிலிருந்து)

நபி ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

“எனது வழிமுறையையும், எனக்குப் பின்னர் நேர்வழி பெற்ற, நேர்வழி காட்டக் கூடிய கலீபாக்களின் வழிமுறையையும் உங்கள் மீது கடமையாக்குகிறேன். அதனை கடைவாய்ப் பற்களால் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். காரியங்களில் புதிதானதாக மார்க்கத்தில் உருவாக்கப் படுவதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படக் கூடிய ஒவ்வொன்றும் பித்அத்தாகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்.

அவர்களது அடிச்சுவடுகளை பின் தொடர்வதற்கும் அவர்களது வழிகாட்டுதல்களை எடுத்து நடப்பதற்கும் நாங்கள் ஏவப்பட்டுள்ளோம். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவைகளை கொண்டும் நாங்கள் எச்சரிக்கபட்டுள்ளோம். நிச்சயமாக அவைகள் வழிகேடானவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளோம். 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள்: 

பின்பற்றுங்கள் பித்அத்களை உருவாக்காதீர்கள். நிச்சயமாக நீங்கள் போதுமாக்கப் பட்டுள்ளீர்கள். 

உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"அந்த ஸஹபாக்கள் சமூகம் நின்ற எல்லையில் நில். ஏனெனில் அவர்கள் கல்வியின் அடிப்படையை அந்த எல்லையில் நின்றார்கள். தெளிவான பார்வையுடன் தடுத்துக் கொண்டார்கள். அவர்களை மிகைக்கக் கூடியவர்கள் எல்லை மீறியவர்கள். அவர்களைத் தவிர்க்கக் கூடியவர்கள் மார்க்கத்தில் குறை செய்யக் கூடியவர்கள். அவர்களை விட்டும் ஒரு கூட்டம் அவர்களை குறைவானதாக நோக்கியதால் மார்க்கத்தில் காய்ந்து விட்டார்கள். ஏனையவர்களில் அவர்களை வரம்பு மீறியவர்கள் மார்க்கத்தில் எல்லை மீறிப் போனார்கள். நிச்சயமாக அவர்கள் இவ்விரு சாராருக்கும் மத்தியில் நேரான பாதையில் மீது இருக்கிறார்கள். 

இமாம் அபூ அம்ர் அல அவ்ஸாயி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 

முன் சென்றவர்களின் அடிச்சுவடுகளை உன்மீது கடமையாக்கிக் கொள். மனிதர்கள் உன்னை மறுத்தாலும் சரி. இன்னும் மனிதர்களின் கருத்துக்களை விட்டும் உன்னை எச்சரிக்கிறேன். வார்த்தையின் மூலம் உனக்கு அதனை அவர்கள் அலங்கரித்தாலும் சரி. 

முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல் அத்ரமீ அவர்கள் பித்அத் ஒன்றைக் கூறி அதன் பால் மக்களை அழைக்கின்ற ஒரு மனிதருக்கு கூறினார்கள்:

“இதனை அல்லாஹ்வின் தூதர் ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன் அவர்கள் அறிந்தார்களா? அல்லது அறியவில்லையா?” 
அதற்கு அவன் “இதனை அறியவில்லை” எனக் கூறினான். 
“இவர்கள் அறியாத ஒரு விடயத்தை நீ அறிந்துவிட்டாயா?” என வினவினார்கள். 
அதற்கு அம் மனிதன் “நிச்சயமாக நான் கூறுவேன் அதனை அவர்கள் அறிந்திருந்தார்கள்.” 
“அதனை பேசாமல் இருப்பதற்கோ அல்லது அதனை நோக்கி மக்களை அழைக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு போதுமானதாக இருந்ததா அல்லது போதுமானதாக இருக்கவில்லையா?”
“ஆம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது”. 
“அல்லாஹ்வின் தூதருக்கும், அவரது கலீபாக்களுக்கும் போதுமானதாக இருந்த ஒரு விடயம் உனக்குப் போதுமானதாக இல்லையா?” 
அந்த பித் அத்அத்கார மனிதன் மௌனமாகி விட்டான். 
அப்போது அங்கிருந்த கலீபா கூறினார்கள், 
"அவர்களுக்கு போதுமானது எவனுக்குப் போதுமானதாக ஆகவில்லையோ அவருக்கு அல்லாஹ்தஆலா அவனுக்குப் போதுமானதாக ஆக்காமல் இருக்கட்டும் " என்று. 

இவ்வாறேதான் அல்லாஹ்வின் தூதருக்கும், அவரது தோழர்களுக்கும் அவர்களை நல்ல நோக்கத்துடன் பின்துயர்ந்த தாபீயீன்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் வந்த இமாம்களுக்கும் மார்க்கக் கல்வியில் ஆழ்ந்த அறிவுள்ள உலமாக்களுக்கும் போதுமானதாக இருந்த அல்லாஹ்வின் பண்புகளை சுமந்த வசனங்களை ஓதுவதில் அதனது அறிவிப்புக்களை வாசிப்பதில் வந்த மாதிரி எத்தி வைப்பதில் எவனுக்கு போதுமானதாக இல்லையோ அவனுக்கு அல்லாஹுதஆலா போதுமானதாக ஆக்காமல் இருக்கட்டும்.

- லும்அதுல் இதிஹாத் நூலிலிருந்து


ஸஹாபாக்கள் விடயத்தில் பிரிவுகளின் தீவிர போக்கும் அஹ்லுஸ் ஸுன்னாவின் நடு நிலை போக்கும்

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد

ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள். ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள். அல்லாஹுத்தஆலா அவர்களை நீதப்படுத்தியதற்கு ஏற்பவும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களை சிறப்பித்துக் கூறியதற்கு ஏற்பவும் நீதமானவர்கள். 

இமாம் நவவி அவருடைய கிதாப் தக்ரீபில் கூறுகிறார்: 

இதனை இமாம் ஸுயுத்தி அவருடைய கிதாப் தத்ரீபுல் றாவியிலே ஷரஹ் செய்துள்ளார்.

ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள். 

ஸஹாபாக்கள் என எண்ணப்படக்கூடியவர்கள் அனைவரும் அவர்களில் பித்னாவிற்கு உட்பட்டவர்களும் இன்னும் ஏனைய அனைவரும் நீதமானவர்கள் என்பது அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் ஏகோபித்த முடிவாகும்.

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அல் இஸாபா என்ற நூலில் கூறுகிறார்:

ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள். 

இந்தக் கருத்துக்கு சில பித்அத்வாதிகளைத் தவிர வேறெவரும் மாற்றுக் கருத்துக் கூறவில்லை. இதுவே அஹ்லுஸ்ஸுன்னாவின் முடிவாகும்.

ஸஹாபாக்களில் எவருடைய பெயரையும் நாம் அறியாமல் இருந்ததனால் அவர்களிடமிருந்து வருகின்ற அவ்வறிவித்தல்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்ட ஸஹாபாக்களில் ஒருவரை தொட்டும் அறிவிப்பதாக ஒரு தாபிஈ கூறினால் அவ்வறிவிப்பில் ஸஹாபியின் பெயர் குறிப்பிடப் பட வில்லை என்பதற்காக அந்த ஹதீஸிற்கு எந்தக்குறையும் ஏற்படாது. ஸஹாபாக்களில் யாராக இருப்பினும் அவர்கள் அறிவித்தவை ஸஹீஹ் என்றே ஏற்கப்படும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் நீதமானவர்கள்.

இமாம் ஹதீப் அல் பக்தாதி (ரஹிமஹுல்லாஹ்) கிதாபுல் கிபாயா என்ற நூலில் கூறுகிறார்:

“ஓவ்வொரு நபி மொழியும் அதனது அறிவிப்பாளர்த் தொடர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடக்கம் அதனை அறிவிக்கும் அறிப்பாளர்களுக்கும் இடையில் தொடர்புபடுகின்றதோ அந்த அறிவிப்பாளர்களின் தொடரில் வருகின்ற ஒவ்வொரு அறிவிப்பாளரினதும் நீதித் தன்மையை நாம் உறுதிப்படுத்தும் வரை அந்த அறிவித்தலைக் கொண்டு அமல் செய்வது எம்மீது கடமையாகாது. அதனைக் கொண்டு அமல் செய்வதற்கு முன்னால் அச்செய்தியை அறிவித்தவர்களின் தன்மைகளையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்வது எமது கடமையாகும். அறிவிப்பாளர் மீதான இந்நிபந்தனை ஸஹாபாக்களைத் தவிரவுள்ள ஏனையவர்களுக்குரியதாகும். ஏனெனில் ஸஹாபாக்களுடைய நீதித் தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகும்.

அல்லாஹ் ஸுப்ஹானஹுவதஆலா அவர்களின் நீதித் தன்மையைப் பற்றித் தீர்ப்பளித்துவிட்டான். 

அல்லாஹ்வே அவர்களின் தூய்மைத் தன்மையை அல் குர்ஆன் வசனங்களினால் கூறிக் காட்டியிருக்கிறான்.

ஸஹாபாக்களைப் பற்றி சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள சில அல்குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் இமாம் ஹதீப் அல் பக்தாதி ரஹிமஹுல்லாஹ் அடையாளம் காட்டிய பின்னர் பின்வருமாறு கூறிப்பிடுகிறார்கள்:

அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் ஸஹாபாக்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள எந்த அறிவித்தலும் எமக்குக் கிடைக்கவில்லையென்று இருந்தாலும் அந்த ஸஹாபாக்கள் புரிந்த ஹிஜ்ரத், ஜிஹாத், தன்னையும் தன்சொத்துகளையும் தியாகம் புரிதல், மார்க்கத்திற்காக தங்களின் பெற்றோர்களையும் குழந்தைகளையும் கூட எதிர்த்துப் போராடியது, மார்க்கத்தை தங்களுக்கு மத்தியில் பரப்புதல், ஈமான் 
எனும் நம்பிக்கையும், யகீன் எனும் உறுதியும் பலமிக்கதாக இருந்தது அவர்களின் நீதித் தன்மைக்குப் போதிய சான்றுகளாக இருக்கின்றன. 
இன்னும் அவர்கள் பரிசுத்தமானவர்கள் என நம்புவதற்கு போதுமானதாகும். இதனடிப்படையில் அந்த ஸஹாபாக்களை நீதமானவர்களென நாம் கூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளோம். அந்த நபித்தோழர்கள் அவர்களுக்குப் பின்னால் மறுமை நாள் வரைக்கும் வருகின்ற அனைத்து சிறப்பானவர்களை விடவும் நீதமானவர்களை விடவும் சிறப்பிலும் தரத்திலும் உயர்ந்தவர்களாவர்கள்.

அபீ ஸுர்ஆ அர்ராஸி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:

மனிதர்களில் யாராவது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் யாரையேனும் குறை கூறுவதை நீ கண்டால் அவன் ஒரு ஸின்தீக் என்பதைப் புரிந்துகொள். 
ஏனென்றால் எங்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையானவர். அல் குர்ஆன் உண்மையானது. இந்தக் குர்ஆனையும் சுன்னாவையும் எம்மிடம் எத்திவைத்தவர்கள் அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள்தான்.

இந்த சாட்சிகளைக் குறைகாண்பதற்கே இந்த ஸின்தீக்குகள் நாடுகிறார்கள். ஏனென்றால் குர்ஆனையும் சுன்னாவையும் எம்மிடம் ஒப்படைத்த சாட்சிகளான ஸஹாபாக்களைக் குறை கூறுவதன் மூலம் அந்தக் குர்ஆனையும் சுன்னாவையும் அசத்தியப்படுத்துவதற்கு நாடுகிறார்கள். அவர்களைக் காயப்படுத்துவது தலையாயக் கடமையாகும். குறை காணும் இவர்கள் தான் நிச்சயமாக ஸின்தீக்குகள் ஆவார்கள்.


ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கையின் சாரம்சம்:

ஸஹாபாக்கள் பற்றிய கொள்கையும் நிலைப்பாடும் நடுநிலையானதாகும். 

தீவிரமான இரு கூட்டங்களில் எதனையும் சாராத நடு நிலையாகும். 

இவ்விரு தீவிரமான போக்குகளில் ஒரு சாரார் ஸஹாபாக்களை அவர்களின் தரத்தை விடவும் உயர்த்தி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுத்து அவர்களின் மதிப்பில் தீவிரப் போக்கை மேற்கொள்வது. 

இது அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தின் நிலைப்பாடல்ல. 

அதே போன்று இன்னொரு சாரார் அந்த ஸஹாபாக்களை மட்டந்தட்டிக் கொண்டு அவர்களைக் குறைகூறிக் கொண்டு அவர்களைத் திட்டிக் கொண்டு அவர்களின் அந்தஸ்தைக் குறைத்து விடுவது. 

இவ்விரு தீவிரப் போக்கிலிருந்தும் அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் தவிர்ந்திருக்கிறார்கள். 

இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையிலேயே அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் இருக்கிறார்கள். 

அதாவது ஸஹாபாக்களை இழிவுபடுத்துவதுமில்லை. அவர்களை அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் மதிப்பில் உயர்த்துவதுமில்லை. 

இவ்விரு போக்குகளும் தவறான போக்குகளாகும்.

அஹ்லுஸ் ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்கிறார்கள். இன்னும் அவர்களை எந்த அந்தஸ்தில் வைப்பது நீதியானதோ அந்த அந்தஸ்தில் வைத்து விடுவார்கள். அந்த அந்தஸ்தின் எல்லை எதுவாக இருக்கிறதோ அந்த எல்லைக்கு மேல் உயர்த்தமாட்டார்கள். அதே போன்று அந்த ஸஹாபாக்களின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறவும் மாட்டார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவின் நாவுகள் எப்போதுமே ஸஹாபாக்களைப் பற்றி நல்லதையே பேசுவதாக இருக்கும். அவர்களின் உள்ளங்கள் ஸஹாபாக்கள் மீதான நேசிப்பினால் நிறைந்திருக்கும்.

ஸஹாபாக்கள் மத்தியில் எந்த விடயங்களிளெல்லாம் வேறுபாடுகள் காணப்பட்டதோ அதற்கான காரணம் அவர்களின் ஆராய்ச்சி ரீதியாக அவர்கள் எடுத்த முடிவுகளினால் ஏற்பட்டதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆராய்ச்சி சரியானதாக இருந்தால் அவர்களுக்கு இரு கூலிகள் கிடைக்கும். அதன் முலம் பிறர் பயனடையும் போது அதன் மூலம் அவர்களுக்கு நன்மை சேர்ந்து கொண்டிருக்கும். அதே வேளை அவர்களின் ஆராய்ச்சி தவறாக அமைந்து விட்டால் அவர்களின் இஜ்திஹாத்தின் கூலியாக ஒரு கூலி கிடைப்பதோடு அவர்களின் தவறையும் அல்லாஹ் மன்னித்து விடுவான். 
அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யாதவர்களல்ல. மனிதனென்ற ரீதியில் அவர்களிடமும் சரியானதும் தவறானதும் உள்ளன. இருப்பினும் அவர்களின் நன்மைகள் ஏனைய மனிதர்களின் நன்மைகளை விடவும் எவ்வளவோ அதிகமாக இருக்கின்றன. அவர்களின் குறைகளும் தவறுகளும் ஏனைய மனிதர்களை விடவும் எவ்வளவோ குறைவாக இருக்கின்றன. 

அது மட்டுமன்றி அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும் அல்லாஹ்வின் திருப்தியும் கிடைக்கிறது. மனிதர்களில் மிகச்சிறப்பானவரான ரஸுலு ல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழமைக்காக மனித இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸஹாபாக்களின் விடயத்தில் தெளிந்த பரிசுத்தமான இக்கொள்கையின் நிலைப்பாடு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் நூல்களிலே நிரப்பப்பட்டுள்ளது. 

-நபிவழி நம் வழி
أحدث أقدم