சுத்ராவின் சட்டங்கள்

_அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு)

بسم الله الرحمن الرحيم
‘சுத்ரா’ என்பதன் விளக்கம்

தொழக்கூடியவர் தனக்கு முன்னால் கடந்து செல்வோரை தடுக்கும் நோக்கில் தனக்கு முன்பாக வைக்கும் பொருள் ‘சுத்ரா’ எனப்படும்.

சுத்ராவின் சட்டம்

தொழக்கூடியவர் தனக்கு முன்னால் சுத்ரா வைப்பது கட்டாயமாகும்.

ஆதாரம் 01: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு சுத்ராவை நோக்கியே அன்றி நீ தொழாதே! உனக்கும் உனது சுத்ராவுக்கும் மத்தியில் எவரையும் கடந்து செல்வதற்கு நீ விட்டுவிடாதே!” (இப்னு ஹுஸைமா)

ஆதாரம் 02: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் தினத்தில் தொழுகைக்காக வெளியாகினால் ஓர் ஈட்டியை எடுத்து வருமாறு கட்டளையிடுவார்கள். அது அவர்களுக்கு முன்பாக வைக்கப்படும். அவர்கள் அதனை நோக்கித் தொழுவார்கள். (புஹாரி, முஸ்லிம்)

சுத்ரா விடயத்தில் ஸஹாபாக்களின் நிலைப்பாடு

1. குர்ரத் இப்னு இயாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்: “நான் பள்ளிவாசலில் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுது கொண்டிருந்தபோது என்னை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்டார்கள். பின்பு அவர்கள் எனது பிடறியைப் பிடித்து என்னை ஒரு சுத்ராவின் பக்கம் கொண்டு சென்று ‘நீ இதனை நோக்கித் தொழு’ என்று கூறினார்கள்.” (முஸன்னப் இப்னு அபீஷைபா)

2. நாபிஃ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்: “இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பள்ளிவாசலில் உள்ள தூண்களில் ஒரு தூணை சுத்ராவாக வைத்து தொழ முடியாத நிலை ஏற்பட்டால், என்னைப் பார்த்து ‘உனது முதுகை என் பக்கம் திருப்பி வைப்பீராக!’ எனக்கூறுவார்.” (முஸன்னப் இப்னு அபீஷைபா)

3. அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “மக்ரிப் தொழுகைக்கு அதான் கூறப்பட்ட பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு வெளியாகும் வரையில் அவரது தோழர்கள் தொழுவதற்காக தூண்களை நோக்கி விரைந்து செல்வதை நான் கண்டிருக்கிறேன்.” (புஹாரி)

4. ஸலமத் இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாலைவனத்தில் பிரயாணம் செய்தால் (தொழும்போது) கற்களைப் பொறுக்கி அவற்றை அடுக்கி அதனை நோக்கித் தொழுவார்கள். (முஸன்னப் இப்னு அபீஷைபா)

சுத்ராவின் அளவு

சுத்ராவின் ஆகக்குறைந்த உயரம் ஒட்டகத்தில் அமர்ந்து செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சாய்வுக்கட்டையின் உயரமாகும்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் யுத்த தினத்தில் சுத்ரா(வின் அளவு)பற்றி வினவப்பட்டார்கள். அதற்கவர்கள் ‘அது ஒரு சாய்வுக்கட்டையின் உயரமாகும்’ என பதிலளித்தார்கள். (முஸ்லிம்) சாய்வுக்கட்டையின் உயரம் ஒரு முழத்தின் மூன்றில் இரு பகுதியாகும் என்று இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்.

சுத்ராவின் அகலம் குறித்து ஹதீஸ்கள் பதிவாகவில்லை. எனவே, சுத்ரா அம்பு, ஈட்டி போன்ற மிக மெல்லிய பொருட்களாகவோ சுவர் போன்ற மிக விசாலமான பொருளாகவோ இருக்க முடியும் என்று இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்.

சுத்ராவுக்கும் தொழக்கூடியவருக்கும் மத்தியில் உள்ள இடைவெளி

தொழக்கூடியவர் நிற்கும் இடத்திற்கும் சுத்ராவுக்கும் மத்தியில் மூன்று முழமளவிற்கு இடைவெளி அமைந்திருக்க வேண்டும்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவினுள் நுழைந்தபோது – தொழ நாடிய போது – தனக்கும் சுவருக்கும் மத்தியில் மூன்று முழமளவிற்கு இடைவெளி ஏற்படுத்தினார். (அஹ்மத்)

சுஜூது செய்தால் தலைக்கும் சுத்ராவுக்கும் மத்தியில் ஓர் ஆடு கடந்து செல்லுமளவு இடைவெளி இருக்க வேண்டும்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுமிடத்திற்கும் சுவருக்கும் மத்தியில் ஓர் ஆடு கடந்து செல்லுமளவு இடைவெளி காணப்பட்டது. (புஹாரி, முஸ்லிம்)

தரையில் கீறப்படும் கோடு சுத்ராவுக்கு செல்லுபடியாகாது

இவ்விடயம் குறித்து அஹ்மத் என்ற கிரந்தத்தில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. “உங்களில் ஒருவர் தொழுதால் அவர் தனக்கு முன்பாக ஒரு பொருளை வைத்துக்கொள்ளட்டும். அவருக்கு அது கிடைக்காவிட்டால் ஒரு தடியை நட்டட்டும். அதுவும் கிடைக்காவிட்டால் ஒரு கோட்டையாவது கீறிக்கொள்ளட்டும்” என்பதே அந்த ஹதீஸாகும்.

இந்த ஹதீஸ் ‘முத்தரிப்’ எனும் வகையைச் சார்ந்த பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அறியப்படாத ஒரு நபரும் இடம்பெற்றுள்ளார்.

சுப்யான், ஷாபிஈ, பைஹகீ, அஹ்மத், அல்பானி ஆகிய அறிஞர்கள் இச்செய்தி பலவீனமானது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தொழுகையைத் துண்டிக்கும் மூன்று விடயங்கள்

பெண், கழுதை, கறுப்பு நாய் ஆகியன தொழுகையில் எமக்கு முன்பு கடந்து சென்றால் எமது தொழுகை துண்டிக்கப்படும்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “சாய்வுக்கட்டை போன்ற ஒன்றை சுத்ராவாக வைத்து ஒரு முஸ்லிம் தொழாதபோது பெண், கழுதை, கறுப்பு நாய் ஆகியன அவருக்கு முன்னிலையில் கடந்து சென்றால் அது அவரது தொழுகையைத் துண்டித்துவிடும்.” (முஸ்லிம்)

தொழுகையாளி தனக்கு முன் கடந்து செல்வோரைத் தடுப்பது கட்டாயம்:

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் மனிதர்களிடமிருந்து தன்னைத் தடுக்கக்கூடிய ஓரு சுத்ராவை நோக்கி தொழும்போது எவராவது அவருக்கு முன்னிலையில் கடந்து செல்ல நாடினால் அவர் அவரைத் தடுக்கட்டும். அவர் மாறுசெய்தால் அவர் அவருடன் சண்டையிடட்டும். ஏனெனில், அவன் ஷைத்தான் ஆவான்.” (புஹாரி, முஸ்லிம்)

தொழுகையாளிக்கு முன் கடந்து செல்வது ஹராமாகும்:

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “தொழுபவருக்கு குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்கு பதிலாக நாற்பது தடவைகள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்.” (புஹாரி, முஸ்லிம்)

நாற்பது தடவைகள் என்பது நாற்பது வருடமா அல்லது, நாற்பது நாட்களா அல்லது, நாற்பது மாதங்களா என்பது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அபுந்நள்ர் என்பவருக்கு நினைவிருக்கவில்லை.

இமாமுக்குப் பின்னால் நிற்கும் மஃமூம்களுக்கு முன் கடந்து செல்லலாம்:

ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: “நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு பெட்டைக் கழுதையின் மீது ஏறி வந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவில் சுவர் அல்லாத ஒன்றின் பக்கம் தொழுது கொண்டிருந்தார்கள். நான் பின்னால் இருந்த சில தொழுகை வரிசைகளுக்கு முன்னால் கடந்து சென்றேன். பின்பு கழுதையிலிருந்து இறங்கி அக்கழுதையை மேய்வதற்கு அனுப்பினேன். பின்பு நானும் தொழுகை வரிசையில் இணைந்து கொண்டேன். என்னை யாரும் கண்டிக்கவில்லை. (புஹாரி, முஸ்லிம்)

எமது தொழுகையில் குறுக்கே ஒரு கால்நடை அல்லது ஒரு சிறிய குழந்தை வந்தால்:

இச்சந்தர்ப்பத்தில் நாம் சுத்ராவை முன்னோக்கி நகர்ந்து கால்நடையை அல்லது குழந்தையை எமக்குப் பின்னால் செல்கின்றவாறு செயற்பட வேண்டும்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தொழுதுகொண்டிருந்தார். அப்போது ஓர் ஆடு அவருக்கு முன்பாக கடந்து செல்ல முயற்சித்தது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஆட்டை முந்தி தனது வயிறை சுவரோடு ஒட்டிக்கொண்டார்கள். பின்பு அவ்வாடு அவருக்குப் பின்னால் கடந்து சென்றது. (ஹாகிம்)

இமாமுடைய சுத்ரா பின்னால் தொழக்கூடியவர்களுக்கும் சுத்ராவாகும்:

பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்தும் இமாம்கள் கட்டாயம் சுத்ரா வைத்து தொழ வேண்டும். ஆனால், அதிகமான பள்ளிவாசல்களில் இமாம்கள் இவ்வாறு தொழுவதில்லை. இது முற்றிலும் பிழையான அம்சமாகும். இமாம் வைக்கும் சுத்ராவே பின்னால் தொழக்கூடியவர்களினதும் சுத்ராவாகும் என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடாத்தும்போது அவர்கள் மாத்திரமே சுத்ரா வைத்துக் கொண்டார்கள். பின்னால் இருந்தவர்களுக்கும் சுத்ரா வைக்குமாறு ஏவவில்லை.

சுத்ராவை நோக்கி நடந்து செல்லல்:

நாம் ஜமாஅத் தொழுகையில் தாமதமாகி கலந்து கொண்டால், இமாம் ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து எஞ்சிய ரக்அத்களை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் எமக்கு முன்னிலையில் சுத்ரா காணப்படாவிட்டால் அல்லது எமக்கு முன்பிருந்தவர்கள் எழுந்து சென்றுவிட்டால், அருகிலிருக்கும் ஒரு சுத்ராவை நோக்கி எமக்கு நடந்து செல்லலாம். அல்லது சுத்ரா வலது பக்கத்தில், அல்லது இடது பக்கத்தில் காணப்பட்டால் அப்பக்கத்தை நோக்கி நகர்ந்து செல்லலாம். எம்மை விட்டும் சுத்ரா தூரத்தில் காணப்படுமாயின் அவ்வாறு அதனை நோக்கி நடந்து செல்வது அவசியமற்றது. இச்சந்தர்ப்பத்தில் இயன்றளவு எமக்கு முன்னால் கடப்போரைத் தடுத்து நிறுத்தி எமது தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும்.

சுத்ரா பற்றிய சட்டங்களை ஆதாரங்களுடனும் மார்க்க அறிஞர்களின் விளக்கங்களுடனும் சுருக்கமாகத் தொகுத்தளித்துள்ளோம். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டாயப்படுத்திய சுத்ராவுடைய விடயத்தில் கவனம் செலுத்துவது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். சுத்ரா பற்றி தெளிவில்லாதவர்களுக்கும் இதனை எத்திவைப்பது எமது கடமையாகும். அல்லாஹுதஆலா எங்களினதும் உங்களினதும் தொழுகைகளை ஏற்றுக்கொள்வானாக!

அல்ஹம்துலில்லாஹ்…
Previous Post Next Post