குர் ஆன் சுன்னாவை நேசிக்க கூடிய ஒவ்வொருவருக்கும் உலமாக்களின் மரணம் மிகப்பெரும் வேதனையே !
இவ்வுலகில் நமக்கு ஏற்படும் இழப்புகளில் நாம் சந்திக்கும் சோதனைகளில் மிகப்பெரிய சோதனை அஹ்லுஸ் ஸுன்னாவை பிரச்சாரம் செய்யும் உலமாக்களின் மரணம்
இமாம் அய்யூப் ஸிஹ்தியானி (رحمه الله ) கூறுகிறார்கள் : அஹ்லுஸ் சுன்னாவில் உள்ள ஒருவரின் மரணம் எனக்கு அறிவிக்கப்பட்டால் எனது உடலில் சில பாகங்களை இழந்ததை போன்று நான் உணர்கிறேன். அல்லாலகாயி 1/60/29 ஹில்யத்துல் அவ்லியா 3/9
உலமாக்களின் மூலம் நாம் கற்ற அகீதா , மன்ஹஜ் இதற்கான கூலிகளை அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் பரிபூர்ணமாக வழங்குவானாக! அவர்களுக்கு உயர்ந்த சுவனமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக! அவர்களையும் நம்மையும் அல்லாஹ் மன்னிப்பானாக!
அல்லாஹ் கூறுகிறான் :
13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
இவ்வசனத்திற்கு இப்னு ஜரீர் அத்தபரி (رحمه الله ) அவர்களின் தஃப்ஸீருத் தபரியில் பிரபல்யமான நான்கு விளக்கங்களை பார்க்கமுடிகிறது
1 இப்னு அப்பாஸ் (رضي الله عنه) கூறுகிறார்கள் : நபி முஹம்மத் (ﷺ ) அவர்களுக்கு அல்லாஹ் விசாலமான பூமியை ஒன்றன் பின் ஒன்றாக வெற்றியை கொடுப்பான்.
2. பூமி அதன் ஓரங்களில் மிகப்பெரிய அழிவுகளின் மூலம் அழிந்து வருவது
3. பூமியில் அதன் நன்மைகளும் , அபிவிருத்திகளும் , மக்களின் எண்ணிக்கையும் அழிந்து கொண்டே வரும்
4. பூமியில் உலமாக்கள், ஃபுகஹாக்கள் மிகச் சிறந்த மனிதர்களின் மரணங்கள்
இதுவே பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் . என்ற வசனத்தின் விளக்கங்களாக பார்க்கிறோம் .
உலமாக்கள், ஃபுகஹாக்களின் மரணத்தையே இவ்வசனம் குறிப்பதாக தஃப்ஸீர் பகவியிலும் இந்த விளக்கங்களை பார்க்க முடிகிறது .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) , நூல் : புகாரி 100
முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (رحمه الله ) அவர்கள் கூறினார்கள் : உலமாக்களின் மரணம் என்பது ஈடு இணையற்றது. செல்வந்தர்கள் மரணித்தால் செல்வத்தை கொண்டு ஈடுகட்ட முடியும் ஆனால் உலமாக்களின் மரணம் எந்த ஒன்றைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது.
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.
நூல் : முஸ்லிம் 918
நாம் இழந்து விட்ட உலமாக்களுக்கு பகரமாக சிறந்த உலமாக்களை நமக்கு தந்தருள அல்லாஹ்விடம் அணுதினமும் பிரார்த்தனை செய்வோம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (رضي الله عنه) ஹஸனுல் பஸரி (رحمه الله ) கூறுவதை போல
ஒரு வாளில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்ய சில நேரம் தங்கம் வெள்ளியை உருக்கி ஊற்றினாலும் அதனை பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாது . அது போன்று உலமாக்களின் மரணங்களை ஈடுகட்ட முடியாது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (رضي الله عنه) கூறுகிறார்கள் : கல்வி அது கைபற்றப்படுவதற்கு முன் அதை கற்றுக் கொள் நூல் : ஸுனனுத் தாரமி 144
புத்தகங்களை வாசிப்பது சில ஆடியோக்கள் வீடியோக்களை கேட்பதால் மட்டும் கல்வி கற்பதை ஒருவர் மட்டுப்படுத்தி விடக் கூடாது. உலமாக்களிடம் அமர்ந்து கல்வி கற்பதின் மூலமே அது முழுமை அடையும்.
அலி (رضي الله عنه) கூறுகிறார்கள் : ஃபுகஹாக்களின் உதாரணம் நமது கையின் உதாரணத்தைப் போன்று (நகம் வெட்டப்பட்டால் வளர்ந்து விடும் ) கை வெட்டப்பட்டால் வளராது.
சுலைமான் (رحمه الله ) கூறினார்கள் : முதல் தலை முறையினர் (உலமாக்கள்) நிலைத்து நிற்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்து நிற்பார்கள் பின்னர் வரும் இளம் தலைமுறையினர் முதல் தலைமுறையினரிடமிருந்து கல்வி கற்பார்கள். இளம் தலைமுறையினர் கல்வி கற்பதற்கு முன்னால் முதல் தலை முறையினர் (உலமாக்கள்) மரணித்து விட்டால் மக்கள் அழிந்து விடுவார்கள்.
நூல் : ஸுனனுத் தாரமி 255
மக்களின் அழிவிற்கான அடையாளம் என்னவென்று ஸஈத் இப்னு ஜுபைர் (رحمه الله ) அவர்களிடம் கேட்கப்பட்டது உலமாக்களின் மரணம் என்று அவர்கள் அவர்கள் கூறினார்கள்.
ஸியர் அஃலாமுன் நுபலா 3/326
முதிர்ந்த உலமாக்கள் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் இருப்பார்கள். அஹ்லுஸ் ஸுன்னாவின் உலமாக்களை அல்லாஹ் அவனது அருளைக் கொண்டு பாதுகாப்பானாக! மரணித்தவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! அவர்களின் நன்மையின் தராசை கனமாக்கி சுவனத்தில் உயர்ந்த பதவியை வழங்குவானாக! உயிரோடு இருக்கும் அஹ்லுஸ் ஸுன்னாவின் உலமாக்களிடமிருந்து அக்கீதாவையும் ,மன்ஹஜையும், ஷரீஅத்தையும் , ஃபிக்ஹையும் கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கியருள்வானாக!
தொகுப்பு : அபூ அப்பாத்