ஜஹ்மியாக்கள் யார்?

இஸ்லாமிய மார்க்கத்துடன் இணைத்துப் பேசப்படுகின்ற  தர்க்கவியல் கொள்கையை கொண்ட வழிதவறிய கூட்டம் தான் ஜஹ்மியா என்பது. 

ஈமானைக் குறித்தும், அல்லாஹ்வின் பண்புகள் குறித்தும் ஆபத்தான பல கருத்துக்கள் இவர்களிடமுள்ளன. ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் என்பவன் தான் இக்கொள்கையை உருவாக்கினான்.  இவன் ஹிஜ்ரி 102 தோன்றினான். அதிகமாக  தர்க்கிக்கக் கூடியவனாக, விவாதம் செய்யக்கூடியவனாக  இருந்தான். ஆனாலும் ஹதீஸ் கலையில் இவனுக்கு எவ்வித ஞானமும் இருக்கவில்லை. 

ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் என்பவன் ஜஅத் பின் திர்ஹம் என்பவனின் மாணவன் ஆவான். இவன் நாத்திக கொள்கையைப் பேசிய முர்தத் ஆவான். இவன் தான் முதல் முதலாவதாக குர் ஆன் படைக்கப்பட்டது என்ற நூதன கொள்கையை சொன்னவன். இன்னும் அல்லாஹ்வின் பண்புகளையும் மறுத்தான். 

இமாம் பர்பஹாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அறிந்து கொள்ளுங்கள் ஜஹ்மியாக்களின் அழிவுக்கு காரணம் அவர்கள் படைத்தவனைப் பற்றி சிந்தித்தார்கள். அதில் ஏன், எப்படி என்று கேள்வி எழுப்பி ஆதாரத்தை கைவிட்டு கியாஸை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்னும் மார்க்கத்தை அவர்களின் அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். எனவே அவர்கள்  ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான குஃப்ரை கொண்டு வந்தார்கள்.  இன்னும் அவர்கள் படைப்புக்களை காஃபிர்கள் ஆக்கினார்கள். இவ்விஷயம்  அவர்களை அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பதற்கு நிர்பந்தித்தது.  (பார்க்க: ஷரஹுஸ்ஸுன்னா 1/96) 


ஜஹ்மியாக்களின் கொள்கை சுருக்கம்: 

 1. இவர்கள் தவ்ஹீதுல் உலூஹியாவை அலட்சியம் செய்தார்கள். 

 2. அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை மறுத்தார்கள். 

 3. மறுமையில் அல்லாஹ்வைப் பார்ப்பதை மறுத்தார்கள். 

 4. அடியார்கள் அனைவரும் அமல் செய்ய நிர்பந்திக்கப்பட்டவர்கள். ஒரு செயலை மனிதனுடன் இணைத்துப் பேசுவது என்பது உண்மைப் பொருளில் அல்ல. 

 5. ஈமான் என்பது உள்ளத்தால் அறிவது மட்டும்தான். அது கூடவோ, குறையவோ செய்யாது. பெரும் பாவம் செய்பவன் முழுமையான ஈமான் உடையவன். இன்னும் குஃப்ர் என்பது அறியாமை மட்டும்தான். 

 6. சொர்கமும், நரகமும் அழிந்துவிடும். 

 (பார்க்க:  அல் ஃபர்கு பைனல் ஃபிரகு - 1/201) 


- அஷ்ஷெய்க்  M. பஷீர் ஃபிர்தவ்ஸி
Previous Post Next Post