-இஸ்மாயில் ஸலபி
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜூம் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இஸ்ரா:
“அஸ்ரா” என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது.
“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்’ பார்ப்பவன்.” (17:1)
மிஃராஜ்:
மிஃராஜ் என்றால் உயர ஏறிச் செல்வதைக் குறிக்கும். நபி(ச) அவர்கள் பைத்துல் முகத்திஸில் இருந்து ஏழு வானங்களையும் தாண்டி ஸித்ரதுல் முன்தஹா வரை விண்வெளிப் பயணம் செய்தார்கள். இதுவே மிஃராஜ் என்று கூறப்படுகின்றது.
இரண்டும் அல்குர்ஆனின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலர், இஸ்ரா பற்றி குர்ஆன் பேசியுள்ளது. ஆனால், மிஃராஜ் பற்றி குர்ஆன் பேசவில்லை. மாறாக ஹதீஸ்கள்தான் பேசுகின்றன என்று கூறுகின்றனர். இஸ்ராவைப் போன்றே மிஃராஜ் பற்றியும் குர்ஆன் பேசியுள்ளது.
“ஸித்ரத்துல் முன்தஹா” எனும் இடத்தில் இவர் மீண்டும் ஒரு தடவை (ஜிப்ரீல் ஆகிய) அவரைக் கண்டார்.”
“அங்குதான் ‘ஜன்னத்துல் மஃவா’ (எனும் சுவர்க்கம்) இருக்கிறது.” (53:13-15)
நபி(ச) அவர்கள் ஸித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில் வைத்து ஜிப்ரீல்(ர) அவர்களைப் பார்த்தது தொடர்பில் இந்த வசனம் பேசுகின்றது. எனவே, இந்த வசனம் நபி(ச) அவர்கள் மிஃராஜ் சென்றதை உறுதிப்படுத்துகின்றது.
எனவே, இஸ்ரா-மிஃராஜ் இரண்டுமே குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட அற்புத நிகழ்வுகளாதலால் இதில் எதை மறுத்தாலும் அது ஈமானுக்குப் பாதிப்பாக அமையும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
பின்னணி:
இந்த அற்புத நிகழ்வு நடந்த வருடம், மாதம், நாள் அனைத்திலும் கருத்து வேறுபாடு உள்ளது. நபி(ச) அவர்கள் தமது வாழ்வில் மிகப்பெரும் சோதனைகளைச் சந்தித்து சோர்ந்து போன சந்தர்ப்பத்தில் இது நிகழ்ந்துள்ளது.
நபி(ச) அவர்களையும் அவர்களது தோழர்கள் மற்றும் உதவியாளர்களை ஊரை விட்டும் மக்கா மக்கள் ஒதுக்கி வைத்தனர். இதனால் மிகப்பெரும் சோதனையை இஸ்லாமிய உம்மத் அனுபவித்தது. அதன் முடிவில் நபி(ச) அவர்களது அன்பு மனைவி கதீஜா(Ë) அவர்கள், அவரை வளர்த்து அவருக்கு பக்க பலமாக இருந்த அபூதாலிப் ஆகியோரின் மரணம் நபி(ச) அவர்களை வெகுவாகப் பாதித்திருந்தது. இதன் பின் குறைஷிகளின் தொல்லை அதிகரித்தது. அந்த ஆண்டு ‘ஆமுல் ஹுஸ்ன்” துக்க ஆண்டு என அழைக்கப்படத்தக்க அளவுக்கு அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டனர்.
இதன் பின்னர் தஃவாவுக்கான புதிய தளத்தைத் தயார் செய்யும் எண்ணத்தில் நபி(ச) அவர்கள் தாயிப் சென்று மிகக் கடுமையான அளவுக்கு கவலையையும், புறக்கணிப்பையும் சந்தித்தார்கள். இவ்வாறு தஃவாக் களத்தில் துயரங்கள் துரத்திய நிலையில்தான் இந்த இஸ்ரா-மிஃராஜ் நடந்தது.
நோக்கங்கள்:
இஸ்ராவின் அடிப்படை நோக்கங்களாக பின்வருவனவற்றை சுருக்கமாகக் கூறலாம்.
அத்தாட்சிகளைக் காட்டுவதற்காக:
நபி(ச) அவர்கள்’ ‘அல்லாஹ் மலக்குகள், முன்னைய நபிமார்கள், சுவனம்-நரகம் என பல விடயங்கள் பற்றி போதிக்கின்றார்கள். அவர்கள் போதிக்கும் விடயங்களை அவர்களுக்குக் காட்ட அல்லாஹ் விரும்பினான். இது அவருக்கு ஈடு இணையற்ற உறுதியையும், தஃவாக் களத்தில் உற்சாகத்தையும் அளிக்க வல்லதாகும்.
17 ஆம் அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எங்கள் அத்தாட்சிகளை அவருக்குக் காட்டுவதற்காக இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படுகின்றது.
சோதனை:
மிஃராஜ் நிகழ்வின் போது முஃமின்களின் ஈமான் சோதிக்கப்பட்டது. மிஃராஜ் நிகழ்வின் பின்னர் ஹிஜ்ரத்தும் அதன் பல போராட்டங்களும் நடைபெற வேண்டியுள்ளது. இந்த நிலையில் கொள்கையில் உறுதியில்லாத தடுமாற்றங்கள் கொண்டவர்களை வைத்து சமாளிக்க முடியாது. எனவே, அல்லாஹ்வை யும் அவனது தூதரையும் உண்மையாகவும் உறுதியாகவும் நம்புபவர்கள் யார் என இந்நிகழ்வு மூலம் பரீட்சிக்கப்பட்டது. உண்மையில் ஈமானில் உறுதியற்றவர்களால் ஒரே இரவில் பைத்துல் முகத்திஸ் வரை செல்வதோ விண்ணுலகப் பயணம் சென்றதாக நபியவர்கள் கூறுவதையோ உண்மைப்படுத்த முடியாது. அல்லாஹ்வின் ஆற்றலை முழுமையாக நம்பியவர்களால் மாத்திரமே இந்தச் செய்திகளை நம்ப முடியும்.
‘நாம் உமக்குக் காட்டிய காட்சியை மக்களுக்கு ஒரு சோதனைக்காகவேயன்றி காட்டவில்லை” (17:60) என அல்லாஹ் கூறுகின்றான்.
உள்ளம் உறுதி பெற:
நபி(ச) அவர்கள் சோதனைகளைச் சந்திக்கும் போது முன்னைய நபிமார்களின் சம்பவங்களைக் கூறி நபி(ச) அவர்களுக்கு அல்லாஹ் உறுதியளித்து வந்தான். இந்த அடிப்படையில் இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வு நபி(ச) அவர்களின் உள்ளத்திற்கு உறுதியையும் ஆறுதலையும் அளிப்பதற்கான அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.
இஸ்ராவும் பைத்துல் முகத்திஸும்:
இஸ்ரா-மிஃராஜ் பற்றியும் சிந்திக்கும் போதெல்லாம் பலஸ்தீன் பற்றியும் பைத்துல் முகத்திஸ் பற்றியும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை மக்காவில் மஸ்ஜிதுல் ஹரமில் இருந்தே மேலே எடுத்திருக்கலாம். அதற்கு மாற்றமாக பலஸ்தீனத்தின் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு எடுத்து அங்கிருந்து அவரை விண்ணுலகிற்கு எடுத்துள்ளான். அந்தப் பள்ளியைச் சூழவுள்ள பகுதியை நாம் பரக்கத் – அருள் வளம் மிக்கதாக ஆக்கியுள்ளோம் என்று கூறியுள்ளான்.
எனவே, இஸ்ரா-மிஃராஜூடன் பலஸ்தீனமும் பைத்துல் முகத்திஸ§ம் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முஸ்லிம் உலகின் பார்வை அவசியம் என்பது உணர்த்தப்படுகின்றது. பலஸ்தீனத்தையும் பைத்துல் முகத்திஸையும் மீட்பது முஸ்லிம் உலகின் தலையாய கடமையாகும்.
ஈமானுக்கு சோதனை:
நபி(ச) அவர்கள் உடலுடன் மிஃராஜ் சென்றார்கள் என்பதை சந்தேகிக்கக் கூடிய சிலர் அவரது ரூஹ் மிஃராஜ் சென்றது என்றும், மற்றும் சிலர் இந்த நிகழ்ச்சி கனவில் நடந்தது என்றும் கூறுகின்றனர். நபி(ச) அவர்கள் உடம்புடன்தான் மிஃராஜ் சென்றார்கள். இது உண்மையில் நடந்த நிகழ்வுதான். கனவில் நடந்ததாகக் கூறியிருந்தால் மக்கத்துக் காபிர்கள் அதை மறுத்திருக்கமாட்டார்கள். அல்லாஹுதஆலா எமது அடியாரை அழைத்துச் சென்றோம் என்கின்றான். தனது அடியார் என்பதில் அவரது உயிர், உடல் இரண்டுமே அடங்கக் கூடியதுதான் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வு இன்றுவரை ஈமானுக்கு ஒரு சோதனைதான். நபி(ச) அவர்கள் இஸ்ரா-மிஃராஜ் பற்றிக் கூறிய போது உண்மையான முஃமின்கள் உடனே நம்பினார்கள். சந்தேகத்தில் இருந்த சிலர் தடம் புரண்டனர். காபிர்கள் இதை வைத்து இஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் நோக்கில் பரீட்சித்துப் பார்த்தார்கள்.
நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளில் பலஸ்தீனம் சென்றதில்லை. எனவே, பைத்துல் முகத்திஸ் பற்றி யெல்லாம் கேள்வி கேட்டார்கள். நபி(ச) அவர்களுக்கு பைத்துல் முகத்திஸ் பள்ளி எடுத்துக் காட்டப்பட்டு அதைப் பார்த்து பதில் கூறினார்கள்.
‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: (இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) ‘ஹிஜ்ர்” எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன்” என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (வ) அறிவித்தார்.
இன்னும் பல செய்திகளைக் கூறினார்கள். இருந்தும் அவர்கள் நம்பவில்லை. நபி(ச) அவர்கள் எதையாவது கூறினால் சோதித்துப் பார்த்துத்தான் நம்ப வேண்டும் என்று கூறுபவர்கள் அன்றைய குறைஷிக் காபிர்களின் மனநிலையில் இருப்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
நபி(ச) அவர்கள் சொன்னால் எமது அறிவுக்கும் நடைமுறைக்கும் மாற்றமாக இருந்தாலும் உண்மைப்படுத்துவதுதான் உண்மையான ஈமான் என்பதை இச்சம்பவத்தின் மூலம் அறியலாம்.
தொழுகையின் முக்கியத்துவம்:
மிஃராஜ் நிகழ்வின் போதுதான் நபி(ச) அவர்களுக்கு தொழுகை வழங்கப்பட்டது. இதன் மூலம் தொழுகையின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது. தொழாதவனுக்கு இஸ்லாத்தில் பங்கில்லை என இஸ்லாம் உறுதியாகக் கூறுகின்றது.
தஃவாவின் அணுகுமுறை:
இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வு பற்றிக் கூறினால் மக்கள் மறுப்பார்கள். நம்பமாட்டார்கள் என்று தெரிந்தும் நபி(ச) அவர்கள் அது பற்றி எடுத்துச் சொன்னார்கள். சொன்னால் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று காரணம் கூறி சத்தியத்தை உலமாக்கள் மறைக்கக் கூடாது என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
“எனவே, (நபியே!) நீர் உபதேசம் செய்வீராக! நீர் உபதேசம் செய்யக் கூடியவரே!” (88:21)
“இன்னும், நீர் உபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக அவ்வுபதேசம் நம்பிக் கையாளர்களுக்குப் பயனளிக்கும்.” (51:55)
எனவே, சத்தியத்தைச் சொல்ல வேண்டும். ஈமான் உள்ளவர்களுக்கு அது பயனளிக்கும் என்ற அடிப்படையில் உலமாக்கள் செயற்பட்டால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
அனுபவ அறிவை ஏற்றல்:
மிஃராஜ் நிகழ்வில் 50 நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டது. மூஸா(ர) அவர்கள் உமது உம்மத்தினால் இதைச் செய்ய முடியாது’ அல்லாஹ்விடம் குறைத்துக் கேளுங்கள் என்று கூறினார்கள். இதன் அடிப்படையில் நபி(ச) அவர்கள் செயற்பட்டு 50 நேரத்தை ஐந்து நேரத் தொழுகையாக மாற்றப்பட்டது.
நபி(ச) அவர்கள் மூஸா நபியின் அனுபவ அறிவையும் ஆலோசனையையும் ஏற்றார்கள். எனது உம்மத் உங்களது உம்மத்தைப் போன்றதல்ல என்று மறுக்கவில்லை. இந்த அடிப்படையில் முதியவர்கள் அனுபவசாலிகளின் வழிகாட்டலில் சமூகம் வழிநடாத்தப்பட்டால் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
இவ்வாறு இந்த இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வுகள் பல படிப்பினைகளைத் தருகின்றன. மிஃராஜில் நபி(ச) அவர்கள் கண்ட காட்சிகளும் பல படிப்பினைகளைத் தருகின்றன. விரிவஞ்சி அவை இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன என்பது கவனத்திற்குரியதாகும். இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வின் மூலம் சரியான படிப்பினைகளைப் பெற்றுப் பயணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!