நாற்பதாம் நாள், குழந்தைக்கா? தாய்க்கா?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்

ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்க அழகான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

குழந்தை பிறந்து ஏழாம் நாள் பெயர் வைக்க வேண்டும், தலை முடியிறக்க வேண்டும், கத்னா (சுன்னத்) செய்ய வேண்டும், தஹ்னீக் செய்ய வேண்டும் (தேன் அல்லது பேரீத்தம் பழத்தை குழந்தையின் வாயில் சுவைக்க கொடுக்க வேண்டும்) அகீகா கொடுக்க வேண்டும். இவைகளை நபியவர்கள் நமக்கு மார்க்கமாக வழிக் காட்டியுள்ளார்கள்.

ஆனால் குழந்தை பிறந்து நாற்பதாவது நாள் என்று சாப்பாடு போட்டு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். “பெயர் சூட்டும் விழா” என்று பத்திரிகை அடித்து பந்தல் போட்டு, (மண்டபங்களிலும்) கொண்டாடக் கூடிய நிலையை பார்க்கிறோம். இந்த நாற்பதுக்கும் அந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? என்று தேடிப் பார்த்தால் குழந்தைக்கும் நாற்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால் தாயிக்கும், நாட்பதுக்கும் சம்பந்தம் உள்ளது.

குழந்தைக்கு ஏழு அன்று செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விடுகிறார்கள் பிறகு ஏன் ஒரு நாற்பது என்று சிந்தித்தால் குழந்தைக்கு நாற்பது இல்லை, தாயிக்கு தான் நாற்பதாகும். குழந்தையை பெற்றெடுத்த பின் தாயிக்கு தொடரான உதிரப் போக்கு நாற்பது நாட்கள் இருக்கும். நாற்பதாவது நாள் குளித்து விட்டு சுத்தமாகி தொழுகை போன்ற மார்க்க விடயங்களில் ஈடுபடலாம் என்ற அடிப்படையில் தான் இந்த நாற்பதை ஏற்பாடாக்கியுள்ளார்கள்.

தனது மனைவிக்கு இரத்தம் நின்றதற்காக போடும் சாப்பாடு தான் இந்த நாற்பது சாப்பாடாகும். எனது மனைவிக்கு இரத்தம் நின்று விட்டது அதற்காக சாப்பாடு போடுறேன் வாங்க என்று அழைத்தால் என்னடா இதற்கு ஒரு சாப்பாடா என்று மக்கள் எண்ணிக் கொள்வார்கள், அதனால் குழந்தையின் பெயரை பயன்படுத்தி தாயிக்காக சாப்பாடு பரிமாறப்படுகிறது. இனி மேல் நாற்பது சாப்பாட்டிக்கு என்று யாராவது அழைத்தால் இது தான் விசயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதோடு, அது தவறான வழிமுறை என்பதை அழகான முறையில் எடுத்துக் காட்டுங்கள்.

நபியவர்கள் காட்டித் தராத ஒரு செயல்பாட்டை மார்க்கம் என்ற பெயரில் வெகு விமர்சையாக மவ்லவியின் தலைமையில் கொண்டாடப்படுகிறது

மார்க்கத்தைப் படித்த மவ்லவிகள் உண்மையை பேச முடியாமல் மௌனிகளாக காலத்தை கழிக்க கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம். அல்லாஹ்விற்காக பணியாற்ற வேண்டியவர்கள் மக்களுக்காக மார்க்கத்தை மாற்றி மக்களுக்கு தவறான வழியை காட்டிக் காண்டிருக்கிறார்கள்.

பாவத்தை கண்டால் கையால் தடுங்கள் அல்லது வாயால் தடுங்கள் அல்லது ஒதுங்குங்கள் என்று நபியவர்கள் தெளிவாக கூறியிருக்க, மக்களோடு மக்களாக படித்த மவ்லவியும் கூட்டு சேர்ந்து பாவத்தை செய்து விட்டு வருகிறார் என்றால் இவர்களை என்ன என்று சொல்வது?

தவறை கண்டால் தடுக்க கூடிய மவ்லவிமார்களே இப்படி என்றால் மக்கள் எப்படி சரியான மார்க்கத்தை விளங்க போகிறார்கள். இந்த நாற்பது என்பது அன்னிய கலாசாரமாகும்.”யார் பிறருடைய கலாசாரத்தை நடைமுறைப் படுத்துகிறாரோ இவரும் அவரை சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னியர்கள் தான் தனது குழந்தைக்காக பெயர் சூட்டும் விழா என்று பத்திரிகை அடித்து, பந்தல் போட்டு, பாட்டு, கூத்து, கச்சேரி, என்று அமோகமாக கொண்டாடுவார்கள். அதை அப்படியே காப்பி அடித்து நமது மவ்லவிமார்கள் மார்க்கமாக நடைமுறைப் படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட மவ்லவிமார்கள் எப்படி உங்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லித்தர போகிறார்கள்.

வேலியே பயிரை மேய்கின்ற கதையாக தான் இன்று மார்க்கத்தின் நிலை போய் கொண்டிருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கதான் செய்வார்கள்.

(குறிப்பு -தாய் உதிரப் போக்கிலிருந்து எப்போது சுத்தம் அடைகின்றாலோ அப்போதிருந்து தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம். சிலருக்கு பத்து நாட்கள் தொடர் உதிரப் போக்கு வரலாம், இன்னும் சிலருக்கு இருபது நாட்கள் வரலாம் எப்படியோ எத்தனையாவது நாளில் உதிரப் போக்கு நிற்கிறதோ அப்போதிலிருந்து அந்த தாய் சுத்தமடைகின்றாள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்)
أحدث أقدم