சமாதானத்தை நிலை நாட்டுவோம்.

அடிப்படையில் ஒரு முஸ்லிம் சமாதானத்தை விரும்பக் கூடியவராக இருப்பார். அதற்கு மாற்றமான ஏதேனும் ஒன்று காணப்படாத வரையில், மார்க்கத்தின் நுட்பமான விஷயங்களில் பாமரர்களான முஸ்லிம்களை சோதனையில் ஆழ்த்த கூடாது. குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இஜ்மாவின் மூலமும் உறுதியான விஷயங்களைத்தான் பொது சமூகத்திடம் சேர்க்க வேண்டும். 
                                                
 எல்லா நிலையிலும் முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பூமியில் குழப்பத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் பண்பாக இருக்க முடியாது. குழப்பத்தை ஏற்படுத்துவதை அல்லாஹ் விரும்புவதில்லை. 
                                                
 وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ 

 அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. 

 (அல்குர்ஆன் : 2:205) 
                                                
 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۙ الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۙ فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۙ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۙ 

 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 

 (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், 

 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. 

 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) 

 மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) 

 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். 

 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். 

 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். 

 (அல்குர்ஆன் : 89:6-13) 
                                                
 பூமியில் வரம்புமீறிக் குழப்பம் செய்த பல்வேறு சமுதாயத்தை அல்லாஹ் தண்டித்தான் என்பதாக கூறுகிறான். 
                                                
 அமைதிக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய நேரத்தில் அத்தகைய அநியாயக்காரர்களை எதிர்த்து குரல் கொடுப்பதும், அவர்களுடன் போர் புரிவதும் முஸ்லிம்களின் கடமையாகும். 
                                                
 وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ‌ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ 

 ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. 

 (அல்குர்ஆன் : 2:193) 
                                                
 அறிஞர்களுக்கு மத்தியில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை பொது மக்களுக்கு முன்னால் விவாதிக்கக் கூடாது. அது குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். கருத்து வேறுபாடில்லாமல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட இம்மை, மறுமைக்கு பலன் தருகின்ற விஷயத்தைதான் பொது மக்களுக்கு முன்னால் எடுத்துரைக்க வேண்டும். 
                                                
 'மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொய்யர்களென கருதப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?' என்று அலீ(ரலி) கூறினார். 

 நூல்: ஸஹீஹுல் புகாரி : 127. 
                                                
 இன்று முஸ்லிம் சமுதாயம் இது போன்ற தராதரம் அறியாததன் காரணமாக, விவாதத்திற்குரிய விஷயங்களை பொதுமக்களுக்கு முன் விவாதிக்கிறார்கள். அதனால் மக்கள் அமல் செய்வதை விட்டு விட்டு வீண் தர்க்கங்களிலும், விவாதங்களிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதன்மூலம் மார்க்கத்தில் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாக பல நன்மையான செயல்களை செய்யாமல் விட்டு விடுகிறார்கள். எனவேதான் மக்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகிறது. 
                                                
 அல்லாஹ் கூறுகிறான்: 

 وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌  وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْبِطُوْنَهٗ مِنْهُمْ‌ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا 

 மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள். 

 (அல்குர்ஆன் : 4:83) 
                                                
 இவ்வசனத்தில் அல்லாஹ் பிரச்சனைகளை, அதனை ஆய்வு செய்வோர்களிடத்தில் கொண்டுச் சேர்க்க வேண்டுமென்று கட்டளையிடுகிறான். ஆய்வாளர்கள் தான் ஆய்வு ரீதியான விஷயங்களை கையாளுவதற்கு பொருத்தமானவர்கள் என்பதையும் தெரிவிக்கிறான் இத்தகைய வழிகாட்டுதலை சமுதாயம் பின்பற்றினால் குழப்பங்களை தவிர்க்கலாம். 
                                                
 அறியாதவற்றை அறிந்தோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அல்லாஹ் கூறி காட்டுகிறான். 
                                                
  فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ 

 ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக). 

 (அல்குர்ஆன் : 21:7, 16:43) 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
أحدث أقدم