நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் புதிதாக நுழைக்கப் பட்டவைகளையே பித்அத் என்று ஹதீஸ்கள் எமக்கு அடையாளப் படுத்துகின்றன.
இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம், அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ மாற்றங்கள் செய்வதற்கோ எந்த ஒரு தேவையுமில்லை. அப்படி மார்க்கத்தில் கூட்ட குறைக்க மாற்ற முற்படுபவன் நபி அவர்கள் தனது தூதுத்துவ பணியில் குறைவிட்டார்கள் என்று வாதிடுகிறான் என்று இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு சொல்கிறார்:
"எவன் இஸ்லாத்தில் ஒரு பித்'அத்தை உருவாக்கி அதை நன்மையாக கருதுகிறானோ, அவன் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டதாக தான் வாதிடுகின்றான். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களது மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன் (குர்'ஆன் 5:3)" [அல் இஃதிஸாம்]
பித்அத்களை குறித்து நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த சமூகத்திற்கு நிறையவே எச்சரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு சில ஹதீஸ்களை பார்ப்போம்.
*விபச்சாரம், மது, சூது, திருட்டு போன்றவற்றை நபி அவர்கள் பாவம் என்ற பட்டியலில் தான் எமக்கு கற்று தந்திருக்கிறார்கள், ஆனால் பித்அத்தை அதற்கும் மேலாக அது வழிகேடு என்று கூறியுள்ளார்கள்*
"நான் உங்களுக்கு (மார்க்கத்தின் பெயரால் தோற்றுவிக்கப்படும்) புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்'அத்தாகும், ஒவ்வொரு பித்'அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடுகளும் நரகத்திற்கு இட்டுச் செல்லும்" என நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் [அபூ தாவூத், திர்மிதி]
நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி சொன்னார்கள்: ".... செய்திகளிலே சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும், வழிகாட்டல்களில் சிறந்தது முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும், காரியங்களிலே மிக கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட (பித்'அத்) ஆகும், ஒவ்வொரு பித்'அத்தும் வழிகேடாகும்." [முஸ்லிம்]
இப்னு உமர் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: அனைத்து பித்அத்களும் வழிகேடு மனிதர்கள் அதனை நல்லதாக கருதினாலும் சரியே. [ஷர்ஹ் உசூலுல் இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅ]
இப்னு உமர் அவர்களுடைய இந்த கூற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்; ஒவ்வொரு பித்அத்களும் வழிகேடு என்ற கூற்றும் பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) என்று வாதிடுபவர்களுக்கும் நல்லதை தானே செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் இதுவொரு சிறந்த பதிலாகும்.
*பித்அத்வாதிகள் மறுமையில் ஹவ்லுல் கவ்சர் நீர் தடாகத்தில் இருந்து மலக்குமார்களால் தடுக்கப்பட்டு நபி அவர்களால் கேடு உண்டாகட்டும் என்று சபிக்கபடுவார்கள்*
"நாளை மறுமையில் நபியவர்கள் ஹவ்லிலிருந்து தனது திருக்கரத்தால் தண்ணீரை புகட்டிக் கொண்டிருப்பார்கள், "அங்கு அந்த தண்ணீரை அருந்தியவருக்கு தாகமே ஏற்படாது" ஆனால் அங்கு வரும் சிலர் வானவர்களால் தடுக்கபடுவர், அப்பொழுது நபி அவர்கள், அவர்களை விடுங்கள், அவர்கள் எனது சமூகத்தினர் என கூறுவார். உங்களுக்கு பின் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று மலக்குகள் கூறுவர், எனக்கு பின் மார்க்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களுக்கு கேடு உண்டாகட்டும் கேடு உண்டாகட்டும் என்று நபியவர்கள் கூறுவார்கள். [புஹாரி]
நாளை மறுமையில் இந்த மிகப்பெரும் பாக்கியத்தை இழக்க போகின்றவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக கிரிகைகளை உருவாக்குபவர்களே!, எனவே இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
*பித்அத்தான அமல்கள் அல்லாஹ்வால் ஏற்று கொள்ளபட மாட்டாது.*
"யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்ராரோ அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுகொள்ளபட மாட்டாது" என நபி (ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் [புஹாரி, முஸ்லிம்]
*பித்அத்களை உருவாக்கியவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபமும் இறங்குகின்றது.*
யாரெல்லாம் பித்அத்களை புகுத்துகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வும் மலக்குகளும் மற்றும் அனைத்து மனிதர்களது சாபமும் இறங்குகின்றது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். [புஹாரி, முஸ்லிம்]
*ஷைத்தானுக்கு பாவங்களை விடவும் பித்அத்களே மிகவும் விருபத்துக்குரியது:* சுfபியான் அத்தவ்றி (ரஹீமஹுல்லாஹ்) கூறினார்கள்: ஷைதானானவான் மனிதர்கள் புரியும் பாவங்களை காட்டிலும் மார்க்கத்தில் பித்அத்கள் ஏற்படுவதை அதிகம் விரும்புகிறான். ஏனினில், மனிதர்கள் தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்பை கோரி கொள்கின்றார்கள், ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பித்அத்களுக்கு (நல்ல அமல் என்று கருதியதால்) பாவமன்னிப்பு கோருவதில்லை. [ஷர்ஹ்-உஸ் ஸுன்னாஹ்]
எமது முஸ்லிம் சமூகம் பித்அதில் மூழ்கி கிடக்கின்றது, நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் கூட அஷ்'அறியா, முஃதஸிலா, கதரியா, இன்னும் பெயர்கள் இல்லாமல் மூட நம்பிக்கைகளும் மூட பழக்கவழக்கங்களும் நிறைந்துகிடக்கின்றது. நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட பித்அத் தான் மிகவும் பாரதூரமானது.
இபாதத்களில் நிறைய பித்அத்கள் இருக்கின்றன, சுபஹ் குனூத், ஐந்து நேர தொழுகைக்கு பிறகு கூட்டு துஅ, அதானுக்கு முன் சலவாத், குர்ஆன் ஹதீஸில் இல்லாத எத்தனையோ திக்ர்கள் என்று ஏராளமான பித்அத்கள் மலிந்து காணப்படுகின்றன.
குர்ஆன் ஸுன்னாஹ்வில் சிறப்பிக்காத நாற்கள் என்று எடுத்தால் மீலாதுன் நபி, ஷ'பான்-15 பராத், ரஜப் 27, என்று ஏராளமான அந்நிய கலாச்சாரங்களின் ஒரு பிரதியாக எமது சமூகத்தில் நிறைய பித்அத்கள் இருந்து வருகின்றன.
நாம் நம்பிக்கை கொள்வதும் ஒவ்வொரு நன்மையான காரியத்தையும் செய்வதும் நாளை மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்பதற்கே, ஆனால் அந்த செயல்களும் நம்பிக்கையும் குர்'ஆன் ஸுன்னாஹ்வின் நிழலில் இருக்கவில்லை என்றால் தோல்வியை தான் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.
நாம் இந்த பித்அத்தை விடுவது மட்டும் இல்லாம் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டும், அப்படி செய்வது ஈமானின் ஒரு அம்சம் என்பதை பின்வரும் ஹதீஸில் புரிந்துகொள்ள முடிகிறது.
"எனக்கு முந்தைய சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய ஒவ்வொரு இறைதூதருக்கும் அவருடைய சமுதாயத்திலையே சிறப்பு தொண்டர்களும் தோழர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அந்த இறைதூதரின் வழிமுறையை கடைபிடிப்பார்கள், அவரது உத்தரவை பின்பற்றி நடப்பார்கள். அவர்களுக்கு பிறகு சிலர் வருவார்கள், அவர்கள் தாம் செய்யாதவற்றை சொல்வார்கள், தமக்கு கட்டளை இடப்படாதவற்றை (பித்அத்களை) செய்வார்கள், அத்தகையவர்களுடன் தமது கரத்தால் போராடுபவர் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது நாவால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது உள்ளதால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கு அப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் [முஸ்லிம்]
வெட்கம் ஈமானின் ஒரு அம்சம் என்று கேள்வி பட்டிருக்கிறோம், அதே போல் பித்அத்களை எதிர்ப்பதும் ஈமானின் ஒரு அம்சம். யார் குறைந்த பட்சம் மனதால் வெறுத்து ஒதுங்குவதை கூட செய்யவில்லையோ அவர்களுடைய ஈமான் மிகவும் பின்னடைந்த நிலையில் இருக்கின்றது என்பதை இந்த ஹதீஸ் எமக்கு தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது
இத்தகைய வழிகேடுகளில் இருந்து எம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
- Hamdhan Hyrullah, Paragahadeniya