அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் யார்?


அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் ஓர் அறிமுகம்: 

நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு சூட்டப்பட்ட பெயர்தான் "அஹ்லுஸ்ஸுன்னா" என்பது.   நம்பிக்கை, அமல்கள் மற்றும் பண்புகள் என அனைத்து விஷயத்திலும் நபித்தோழர்களும், அவர்களின் அடிச்சுவடை பின்பற்றிய தாபியீன்களும், தபஉ தாபியீன்களும் அடங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் சிறந்த முன்னோர்கள் குர்ஆனையும், ஸுன்னாவையும் பற்றிப் பிடித்து கருத்து வேறுபாடில்லாமல் மார்க்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.   அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ என்பது. அவர்களை السلف الصالح சிறந்த முன்னோர்கள், الفر قة الناجية வெற்றி பெற்ற கூட்டம்,  الطائفة المنصورة அல்லாஹ்வின் உதவியைப் பெறும்கூட்டம் என்று அழைப்பதுண்டு. பிற்காலத்தில் பித்அத்கள் தோன்றிய போது அதற்கு எதிராக ஸுன்னாவை பின்பற்றுபவர்கள் என்று அடையாளம் காட்டுவதற்காக அஹ்லுஸ்ஸுன்னா என்றும், கருத்து வேறுபாட்டை தவிர்ந்து கொள்வதால் "அல்ஜமாஆ" என்றும் அழைக்கப்பட்டார்கள். 

இமாம் ஹசனல் பர்பஹாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

உண்மையான மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து வந்ததும், நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தும் ஆகும். அல்ஜமாஅத் என்பது நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) அவர்களின் கிலாஃபத்தின் போது எதன் மீது ஒன்றுபட்டார்களோ அதனையே குறிக்கும் என்று கூறினார்கள். (ஷரஹுஸ் ஸுன்னா - 1/99)  

இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நம்மிடம் ஸுன்னாவின் அடிப்படை என்பது நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் எதன் மீது இருந்தார்களோ அதனை பற்றிப் பிடிப்பதும், இன்னும் அவர்களை முன்மாதிரியாக கொள்வதும், பித்அத்களை தவிர்ந்து கொள்வதும் ஆகும். பித்அத்கள் அனைத்தும் வழிகேடே. (உஸூலுஸ் ஸுன்னா - 14)  

அஷ்ஷெய்க். ஸாலிஹல் உஸைமின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ யாரெனில், அவர்கள் தான் நபி(ஸல்) அவர்களுடைய ஸுன்னாவை பற்றிப் பிடித்து அதன் மீது ஒன்றுபட்டு இருப்பவர்கள். கொள்கை சார்ந்த கல்வியானாலும் சரி அரசாங்கம் சார்ந்த நடவடிக்கையானாலும் சரி, அதனை விட்டு விட்டு வேறு எதன் பக்கமும் அவர்கள் திரும்ப மாட்டார்கள். எனவே தான் அவர்களுக்கு அஹ்லுஸ்ஸுன்னா என்று பெயர் சூட்டப்பட்டது. ஏனெனில் அவர்கள் ஸுன்னாவை பற்றிப் பிடிப்பவர்கள். இன்னும் அதன் மீது ஒன்றுபட்டு இருப்பதன் காரணமாக அல்ஜமாஆ என்றும் அழைக்கப்பட்டார்கள். 

பித்அத்வாதிகளின் நிலையை குறித்து சிந்தித்து பார்த்தால் அவர்கள் கொள்கை விஷயத்திலும் சரி, அமல்கள் விஷயத்திலும் சரி முரண்பட்டவர்களாக இருப்பதை காணமுடியும். அவர்கள் உருவாக்கிய பித்அத்திற்கேற்ப அவர்கள் ஸுன்னாவை விட்டு தூரமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். (மஜ்மூஃஉல் ஃபதாவா வர்ரஸாயில் -  37/1) 


அஹ்லுஸ்ஸுன்னா என்று எப்போது பெயர் சூட்டப்பட்டது: 

 நபி(ஸல்) அவர்களின் காலம் தொட்டு சிறந்த நூற்றாண்டு என்று போற்றப்பட்ட காலத்தில் சத்தியத்தில் இருந்த மக்களை வழிகேடர்களை விட்டு வேறுபடுத்திக் காட்டுவதற்கு அஹ்லுஸ்ஸுன்னா என்று பெயர் சூட்டப்பட்டது. இப்பெயரை நபித்தோழர்கள் தான் முதன் முதலாக பயன்படுத்தினார்கள். 

 يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ   فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ 

 அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் : 3:106) 

இந்த வசனத்தில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும் என்பதற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர்கள் மற்றும் கல்வியுடையவர்கள் என்று கூறினார்கள். 

முகம் கருத்தவர்கள் என்பதற்கு வழிகேடுகளையும் பித்அத்துகளையும் கடைப்பிடிக்கும் மக்கள் என்றும் கூறினார்கள். 

இதனை இமாம் லால்காயி (ரஹ்) அவர்கள் தமது "ஷரஹு உஸூலி இஃதிகாதி அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ" என்ற நூலில் சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்துள்ளார். 

இச்சொல் நபித்தோழர்களின் காலத்திலிருந்து பரவலாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டன. நபித்தோழர்களுக்கு பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் நேர்வழியை பின்பற்றிய இந்த சமுதாயத்தின் சிறந்த முன்னோர்கள் தங்களை அஹ்லுஸ்ஸுன்னா என்றே அடையாளப்படுத்தினார்கள். 

இமாம் அய்யூப் அஸ்ஸஹ்தியானி (ரஹ்) அவர்கள் (பிறப்பு ஹிஜ்ரி 68 மரணம் 131 ஹிஜ்ரி) கூறினார்கள். 

அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்த ஒருவர் மரணித்துவிட்டார் என்று எனக்கு அறிவிக்கப்படும் போது நான் என் உடலில் ஒரு பகுதியை இழந்ததைப் போன்று உணருகிறேன்.(நூல்:  இமாம் லால்காயி (ரஹ்) அவர்களின் ஷரஹு உஸூலி இஃதிகாதி அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ) 

இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்) மரணம் 161 ஹிஜ்ரி அவர்கள் கூறினார்கள்: 

அஹ்லுஸ்ஸுன்னாவினர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள், அவர்கள் தான் நபி (ஸல்) அவர்கள் கூறிய குரபாக்கள். 

இமாம் ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

முர்ஜியாக்கள் ஈமான் என்பது வெறும் சொல் மட்டும்தான் அதில் செயல் அடங்காது என்றும், ஜஹ்மியாக்கள் ஈமான் என்பது சொல்லும் அல்ல செயலுமல்ல, அறிவது மட்டும் தான் என்று கூறினார்கள். 

அஹ்லுஸ்ஸுன்னாவினர்களின், ஈமான் என்பது அறிவது, சொல்வது, அமல் செய்வது என அனைத்தையும் உள்ளடக்கியது என்று கூறுகிறார்கள். 
(இமாம் தப்ரி (ரஹ்) அவர்களின் தஹ்தீபுல் ஆஸார் -979) 

இதன் அடிப்படையில் அஹ்லுஸ்ஸுன்னாவினர் என்ற பெயர் நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள் மற்றும் இமாம்கள் என நேர்வழியில் இருந்த மக்களுக்கு சூட்டப்பட்ட பெயராகும் என்பதை அறியலாம். அவர்கள் கொள்கை சார்ந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொள்ளாமலும் இன்னும் புதிது புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்களையும் புறக்கணித்து வாழ்ந்தார்கள். ஹவாரிஜ், ஷியா, முஃதஸிலா, ஜஹ்மியா, கத்ரியா, முர்ஜியா, அஷாயிரா, மாதுரிதியா போன்ற வழிகெட்ட கொள்கையினர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவின் வழிமுறைக்கு மாற்றமாக தோன்றியவர்கள் ஆவார்கள். 


 உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
أحدث أقدم